சிலப்பதிகாரக் காட்சிகள்/மதுரை மாநகரம்

7. மதுரை மாநகரம்

மதுரைத் தென்றல்

மதுரை மாநகர்க்குச் சிறிது தூரத்திலேயே ‘மதுரைத் தென்றல்’ வீசியதைக் கோவலன் முதலிய மூவரும் அநுபவித்தனர். அஃது அகில் சாந்தம், குங்குமச் சாந்தம், சந்தனச் சாந்தம், கஸ்தூரிச் சாந்தம் முதலிய சேற்றில் படிந்து சேர்ந்த கழுநீர் மலர், சண்பக மலர் என்னும் இவற்றால் ஆகிய மாலையோடு குருக்கத்தி மல்லிகை, முல்லை என்னும் மலர்களில் பொருந்தி வீசியது; சமையல் அறைகளில் தாளிப்பு முதலிய புகை, அகன்ற கடை வீதியிடத்து அப்ப வாணிகர் இடைவிடாது சுட்ட அப்ப அகிற் புகையும், மைந் தரும் மகளிரும் மயிர்க்கும் ஆடைககும் மாலைக் கும எடுத்த அகிற் புகையும், யாகசாலை தோறும் ஆகுதி செய்ததால் எழுந்த புகையும் ஆகிய பல வேறுபட்ட புகையைத் தழுவி வீசியது. அத் தென்றல், சங்கப் புலவரது செந்நாவினால் புகழப்பட்ட இச்சிறப்புகளைப் பெற்றிருந்ததால் பொதியில் தென்றல்’ என்பதை விடச் சிறந்து விளங்கியது.

பலவகை ஓசைகள்

இறைவன் திருக்கோவிலிலும் மன்னவன் மணிக்கோவிலிலும் காலை முரசம் முழங்கினதால் உண்டான ஓசை மதுரை மாநகர்க்கு வெளியில் கேட்டது; அந்தணர் நான்மறை ஒதும் ஒசையும், மாதவர் விடியற்காலையில் மந்திரம் ஓதுதலால் எழுந்த ஒசையும், வீரர் தத்தம் வீரத்திற்கு எடுத்த வரிசையையுடைய முரசம் முதலிய நாள் அணி ஓசையும், போர்க் களிறுகளின் முழக்கம், புதியனவாகக் காடுகளிலிலிருந்து பிடித்துக்கொண்டு வந்த யானைகளின் முழக்கமும், பந்திதோறும் நிறை குதிரைகள் போர் நினைந்து ஆலித்த ஒசையும் உழவர் மருத நிலந்தோறும் காலையில் கொட்டியகிணைப்பறை ஒசையும் பிறவகை ஓசைகளும் ஒன்று சேர்ந்து கடல் ஒலிபோல ஒலித்தன.

வையை யாறு

மதுரை மாநகர்க்குத் தன் நன்னீரால் உண்ணிர் உதவும் தாய் போன்றவள் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, அவளுக்கு இரண்டு கரைகளிலும் இருந்த குரவம், கோங்கு வேங்கை, வெண் கடம்பு, சுரபுன்னை, மஞ்சாடி, மருதம், சண்பகம், பாதரி முதலிய மரங்களின் மலர்கள் பூந்துகில்'ஆக விளங்கியது; கரைகளின் உட்பக்கமாக முளைத்திருந்த குருக்கத்தி, செம்முல்லை,முசுட்டை, மோசி மல்லிகை, குட்டிப்பிடவம், இருவாட்சி முதலிய மலர்களும் பூங்கொடிகளும் மேகலை"யாக விளக்க முற்றன; கரைகளில் இருந்து உகுத்த முருக்க மலர்கள் சிவந்த வாயாகக் காட்சி அளித்தது; அருவி நீரோடு ஒயாது வந்த முல்லை அரும்புகள் பற்களாகக் காணப்பட்டன; குறுக்கே மறிந்தும் நெடுக ஒடியும் திரிந்த கயல்மீன்கள் கண்களாக விளங்கின. இரண்டு பக்கங்களிலும் அலைகள் அரித்த கருமணல் கூந்தாலகத் தெரிந்தது. இத்தகைய சிறப் பினையுடைய வையை என்னும் மடமங்கை நாட்டு: மக்களைப் பாதுகாத்ததற்குப் பல பொருள்களையும் விளைத்துத் தரும் ஒழுக்கத்தினை உடையவள்; புலவரால் புகழப்பட்டவள்; தன்னைச் சேர்ந்தவர்க்கு எல்லை இன்றி இன்பம் அளித்தலில் திருமகளை ஒத்தவள்; பருவமழை பொய்யாததாலும் வேற்று வேந்தர் பாண்டிய நாட்டைக் கவராமையாலும் ‘தென்னர் குலக்கொடி’ எனப் பெயர் பெற்றவள்.

பல கோவில்கள்

மதுரை மாநகரம் பழைய காலத்திலிருந்தே, சமயத்திற்கும் வரலாற்றுக்கும் பெயர் பெற்ற, இடமாகும். அங்குப் பல கோயில்கள் நீண்ட கால மாக இருந்தன. நெற்றிக் கண்ணையுடைய சிவ பிரான் கோயில், கருடக் கொடியை உயர்த்திய, திருமால் கோயில், கலப்பையைக் கொடியில் எழுதப்பெற்ற பலராமன் கோயில், சேவல் கொடி உடைய செவ்வேள் கோயில், மன்னவன. கோயில் அறவோர் பள்ளி முதலியன இருந்தன.

மாநகரம்

மதுரை மாநகரம் ஒருகோட்டை மதிலுக்குள் இருந்தது. அதனைச் சூழ ஆழமான அகழி ஒன்று. இருந்தது. அதற்கு அப்பால் காவற்காடு இருந்தது. கோட்டை வாயிலை யவனர் வாளேந்திக் காத்து. தந்தனர். பாண்டி நாட்டுத் துறைமுக நகரமான தொண்டியில் இறக்குமதியான அகிலும் பட்டும் சந்தனமும் கர்ப்பூரமும் பிறவும் மதுரையில் விற்கப்பட்டன. அங்கங்கு நாடக அரங்குகள் இருந்தன; இசை அரங்குகள் இயங்கின; நடன சாலைகள் காட்சி அளித்தன. சங்கப் புலவர் இனி திருந்து தமிழ் ஆராய்ந்து வந்த மண்டபம் வானுற ஓங்கி வளம்பெற இருந்தது. அரசனது கோவில் நகரத்தின் நடுவிடத்தில் நடுநாயகமாக விளங்கியது. அதனைச்சூழ அமைச்சர், சேனைத்தலைவர் முதலிய அரசியல் அலுவலாளர் தெருக்கள் இருந்தன. மணத்தைமகிழ்விக்கும் மணமிகு பூஞ்சோலைகள் அங்கங்குக் காட்சி அளித்தன. அச்சோலைகளில் மாலை நேரங்களில் மாநகரத்து ஆடவரும் பெண்டிரும் அன்புடன் அமர்ந்து நற்காற்று நுகர்ந்தனர்.

கடைத்தெரு

மதுரை மாநகரத்துக் கடைத்தெரு மிக்க சிறப்புடையதாகும். அங்கு பலவகை வண்டிகள் செய்து விற்கப்பட்டன. போர் வீரர் அணியத்தக்க கவசங்கள் விற்கப்பட்டன; சீனம் முதலிய வெளிநாடு களிலிருந்து கப்பல்களில் வந்த பட்டுவகைகளும் நவமணிவகைகளும் விற்கப்பட்டன; குந்தம், வேல், வாள் முதலிய பலவகைப் போர்க்கருவிகள் விற்கப்பட்டன; அகில், சந்தனம், குங்குமம், கஸ்தூரி முதலிய வாசனைப் பொருள்களை விற்கக் கடைகள் இருந்தன. பலவகைப் பூக்களைக் கொண்டும் ஒரே வகை மலர்களைக் கொண்டும் பலவகை மாலைகளைக் கட்டி விற்ற கடைகள் காட்சி அளித் தன நெல், தினை, சாமை, தோரை, சோளம், கேழ்வரகு முதலிய கூலவகைகளை விற்ற கடைகள் பல இருந்தன. எள், நெய், தேங்காய், நெய், முத்துக்கொட்டை நெய், பசு நெய் முதலியன விற்கும் நெய்க்கடைகள் பல இருந்தன. பொன்னைக் கொண்டு பலவகை நகைகளைச் செயது விற்ற கடைகள் பலவாகும்; வெள்ளிப் பாத்திரக் கடைகள் பலவாகும்; வெள்ளி நகைக் கடைகள் பல என்னலாம், செம்பு, பித்தளை, ஈயம் முதலிய உலோகங்களால் பலவகைப் பாத்திரங்களைச் செய்து விற்ற கடைகள் ஒரு பால் இருந்தன. இரும்புச் சாமான்களை விற்ற கடைகள் ஒருபக்கம் இருந்தன. எழுதுவதற்கு என்று தயாரிக்கப்பட்ட பனை ஓலைக் கட்டுகளும் எழுத்தாணிகளும். விற்கப்பட்ட கடைகள் மற்றொருபக்கம் இருந்தன. கொற்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட முத்து. வகைகளை விற்ற கடைகள் பலவாகும். கொடிப் பவளம், பவள மாலைகள் இவற்றை விலை கூறிய கடைகள் பலவாகும்.

இங்ஙனம் பல வளங்களாலும் பொலிவுற்றுத் திகழ்ந்த பீடு மிக்க மாட மதுரையைக் கோவலன் கசன்று கண்டான்.