சிலப்பதிகாரக் காட்சிகள்/கோவலனும் மாதவியும்

5. கோவலனும் மாதவியும்

கோவலன் மனமாற்றம்

அரங்கேற்றம் நடந்த அன்று மாலை கோவலன் கடைத்தெருவில் தன் நண்பர்களுடன் மாதவியின் நடனச் சிறப்பைப் பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அங்குச் சித்திராபதி அனுப்பிய தோழி ஒருத்தி வந்தாள். அவள் கையிற் சோழ அரசன் மாதவிக்குப் பரிசளித்த மாலை இருந்தது. அவள் “இதனை ஆயிரத்தெண்கழஞ்சு பொன் தந்து விலையாகப் பெறுபவர் மாதவிக்குக் கணவராகத் தகுவர்” என்றாள். ஊழ்வினை வசத்தால் கோவலன் ஆயிரத்து எண் கழஞ்சு பொன்னைத் தந்து அந்த மாலையை வாங்கிக் கொண்டான்; அத்தோழியுடன் மாதவியின் மாளிகையை அடைந்தான்; தான் வாங்கிய மாலையை அவள் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்தான்; அன்றுமுதல் மாதவியுடன் உறைவான் ஆயினன்.

கணவனைப் பிரிந்த கண்ணகி

தன் உயிர் அனைய காதலன் மாதவி என்னும் நாடக மகளுடன் நட்புக் கொண்டதைக் கண்ணகி அறிந்தாள். அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கு.? அவள் காதலன் பிரிந்த நாள் முதல் கால்களில் சிலம்பை அணிவதில்லை; மேகலாபரணத்தைக் கழற்றிவிட்டாள். அவள் காதுகள் குழைகளைத் துறந்தன; செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறந்தது; ஒளி பொருந்திய நெற்றி திலகப் பொட்டை இழந்தது; நீண்ட கருங்கூந்தல் எண் ணெயையும் பூவினையும் மறந்தது; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன; அவளது புன்னகையைக் கோவலன் இழந்தான். கண்ணகி சிறந்த கற்புடைய மங்கை ஆதலின், கணவன் இல்லாவிடினும் இல்லற நெறி வழுவாமல் இருந்து வந்தாள்; விருந்தினரை உபசரித்தாள்; தன்னை அவ்வப்பொழுது காணவரும் தன் மாமன், மாமி இவர் தம் மனம்வருந்தும் என்று அஞ்சித் தன் வருத்தத்தை மறைத்து வந்தாள். அதனைக் குறிப்பாக உணர்ந்த கோவலனுடைய பெற்றோர் சொல்லொணாத் துயர் உற்று வருந்தினர்.

கற்புக்கரசி

தம் மருமகன் நாடகக் கணிகையின் சேர்க்கையில் ஈடுபட்டு இருந்ததைக் கண்ணகியின் பெற்றோர் அறிந்தனர்; அறிந்து என் செய்வது? அவர்கள் அடிக்கடி வந்து தம்செல்வ மகளைக் கண்டு போயினர். உத்தமபத்தினியாகிய கண்ணகி தன் பெற்றோரிடமும் தன் மனவருத்தத்தைக் காட்டாது மலர் முகத்துடன் நடந்துகொண்டாள். அப்பெரு மகளது சிறந்த ஒழுக்கத்தைக் கண்ட உற்றாரும் உறவினரும் அவளைக் கற்புக்கரசி’ என்று பாராட்டினர்.

இந்திரா விழா

இவ்வாறு கண்ணகி கணவனைப்பிரிந்து துயர் உறும் பொழுது, அவளது நினைப்பே கடுகளவும் இல்லாமல் கோவலன் மாதவியின் மாளிகையில் காலம் கழித்து வந்தான். இங்ங்ணம் வாழ்ந்து வருகையில், சித்திரை மாதத்தில் ஆண்டுதோறும் இந்திர விழாத் தொடக்கம் ஆயிற்று.

முசுகுந்தன் என்ற சோழ அரசன் கால முதல் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது. அவ்விழா இருபத் தெட்டு நாட்கள் நடைபெற்றது. அந்த நாட்களில் தமிழ் நாட்டுப் பல பகுதிகளிலிருந்து மக்கள் பூம்புகார்க்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர். பல சமய வாதிகளும் புகார் நகரத்திற் கூடிச் சமயப் பிரசாரம் செய்தனர். நகரம் முழுவதும் கண் கொள்ளாக் காட்சியைத் தந்தது. விழாவின் கடை நாளில் நகரமாந்தர் அனைவரும் தத்தம் பரிவாரங்களுடன் கடலில் நீராடிச் சென்றனர்.

கடற்கரையில் பாட்டு

கோவலனும் மாதவியுடன் கடலாடச் சென்றான். இருவரும் நீராடித் தனி இடம் ஒன்றில் தங்கினர். அப்பொழுது கோவலன் யாழை எடுத்து இன்பப் பாடல் ஒன்றைப் பாடினான். அப்பாடல் காவிரியாற்றைப் பற்றியப்பாடல். காவிரி என்ற உன்னை மணந்த சோழன் கங்கை என்னும் வேறொருத்தியை மணந்தாலும், நீ அதற்காக அவனைக் கோபிப்பதில்லை. உனது கற்பின் சிறப்பே உன் மன அமைதிக்குக் காரணமாகும்” என்னும் பொருள் கொண்டது.அப்பாடல். மாதவி, ஊழ்வினை வசத்தால், இதனைத் தவறாகக் கருதினாள்; கோவலன் வேறொரு பெண்மீது அன்பு, கொண்டான் என்று எண்ணினாள். அதனால் அவள் யாழை வாங்கித் தான் ஒரு பாட்டுப் பாடினாள், காவிரி” என்னும் பெண்ணாகிய நீ சிறந்தவளாக இருப்பதற்குக் காரணம், உன் கணவனாகிய சோழனது சிறந்த ஒழுக்கமே காரணம். ஆதலின், உன் கணவனை வாழ்த்துகிறேன்.” என்னும் பொருள் கொண்டது அப்பாடல்.

கோவலன் மாதவியைத் துறத்தல்

மாதவி பாடிய பாடலைக் கேட்டு கோவலன் சினங்கொண்டான், ‘இவள் வேறு ஆடவனிடம் விருப்பம் கொண்டிருக்கிறாள் போலும்’ என்று தவறாக எண்ணி விட்டான்; உடனே அவன் முகம் சிவந்தது; உதடுகன் துடிதுடித்தன; விழிகள் சிவத்தன; ஆசனத்தை விட்டு எழுந்தான். கோவலன் படபடப்பைக் கண்ட மாதவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் அவனை அச்சத்தோடு நோக்கினாள். சினத்தில் தன்னை மறந்த கோவலன் மாதவியை நோக்கி, “வஞ்சக எண்ணம் கொண்டவர் நாடக மகளிர் என்று சான்றோர் கூறியது உண்மை என்பதை இப்பொழுது உணர்ந்தேன். நீ என்னை உண்மையாகக் காதலிக்கின்றாய் என்று. எண்ணினேன்; அதனால் என் ஆருயிர்த் துணைவியாகிய கண்ணகியை மறந்தேன்; அவளைக் கண் கலங்கவிட்டு உன்னுடன் நாளைப் போக்கினேன். அம்மட்டோ! எனது முன்னோர் தேடி வைத்த குன்றம் அனைய செல்வத்தையும் உனக்குத் தோற்றேன். நீ என்னிடம் பொய்வேடம் கொண்டு நடித்தனை என்பதை உன் பாட்டுப் பலப்படுத்திவிட்டது. போதும் உனது நட்பு. நான் செல். கிறேன் இனி உனது முகத்தில் விழிப்பதில்லை,” என்று சினந்து கூறி அகன்றான்.

கோவலன் வேறுப்பு

மாதவி அவன் சீநீற்றவுரை கேட்டு, இடியோசை கேட்ட நாகம்போல்’ ஆனாள். அவள் விதியை. நொந்தவண்ணம் தன் மாளிகை சென்றாள்; அன்று மாலை, கோவலன் பிரிவாற்றாமையால் அவனுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்தாள்; தாழை, மடலில் எழுதி, வசந்தமாலை என்ற தோழியிடம் அதனைக் கொடுத்து அனுப்பினாள். அவள் கடைத் தெருவில் இருந்த கோவலனைச் சந்தித்து, மாதவியின் துன்ப நிலையைக் கூறிக் கடிதத்தை நீட்டினாள். கோவலன் அக்கடிதத்தை வாங்காமல் ‘ஆடல் மகள் பொய்யை மெய்போல நடிப்பதில் வல்லவள்,” என்று கூறி அகன்றான். அவன் கூற்றை வசந்த மாலை கூறக் கேட்ட மாதவி மனம் வருந்திக் கட்டிலிற் சாய்நதான்.