சிலப்பதிகாரம்/உரைபெறு கட்டுரை
சிலப்பதிகாரம்
தொகுஉரைபெறு கட்டுரை
தொகு01. அன்றுதொட்டுப் பாண்டியனாடு மழை வறங்கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்ல ராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமு நீங்கியது.
02. அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று.
03. அதுகேட்டுக் கடல்சூழிலங்கைக் கயவாகு வென்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறத்தாங்கு அரந்தை கெடு்த்து வரந்தரு மிவளென ஆடித் திங்க ளகவையி னாங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று.
04. அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.
- உரைபெறு கட்டுரை முற்றும்.
--------
- அருஞ்சொற்பொருள்
01. வறங்கூர்ந்து= மழைஇல்லாது வறட்சி மிக்கு
கூர்தல்= மிகுதல்
வெப்பு= தொழுநோய் என்பர் அடியார்க்கு நல்லார்.
குரு= கொப்புளம்
நங்கை= பத்தினி தேவி/ கண்ணகி
02. கொங்கு= கொங்கு மண்டிலம்
இளங்கோசர்= இளவரசர்களாகிய கோசர்
03. கோட்டம்= கோயில்
அரந்தை= துன்பம்
அகவை= ஏழாம்வேற்றுமை உருபு இடப்பொருள் உணர்த்தியது. (ஆடித்திங்கள அகவையின்= ஆடிமாதத்தில்)
பாடி= நகர்
04. கோழி= உறையூர்
உரைபெறு கட்டுரை= உரைத்துப் போதுகின்ற கட்டுரை என்று கூறுவர் அரும்பத உரையாசிரியர்.
:1.மங்கல வாழ்த்துப் பாடல்