சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/10.நாடுகாண் காதை
10.நாடுகாண் காதை
தொகு- (நிலைமண்டில ஆசிரியப்பா)
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஏழகத் தகரும் எகினக் கவரியும் 5
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து, 10
பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து 15
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் 20
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு, 25
மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் 30
இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, 35
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க 40
மதுரை மூதுர் யாதுஎன வினவ,
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும், 45
உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான் 50
மதுரை மூதுர் வரைபொருள் வேட்கையேன்.
பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர் 55
மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற 60
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ: 65
வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் 70
கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும். 75
கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் 80
கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும், 85
குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் 90
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை 95
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப் 100
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக் 105
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும் 110
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும் 115
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய 120
கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமருங் கூடி 125
ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர் 130
வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும், 135
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு 140
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து 145
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும், 150
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்: 155
ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160
இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர் 165
வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்: 170
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் 175
அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன் 180
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் 185
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது 190
போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா, 195
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன் 200
பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது 205
இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப் 210
பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி 215
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர் 220
காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர் 225
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, 230
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு 235
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன, 240
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின் 245
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.
- (கட்டுரை)
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் 5
ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் 10
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும் 15
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று. 20
- (வெண்பா)
காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.
- (புகார்க் காண்டம் முற்றிற்று.)
- பார்க்க