சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/2.மனையறம்படுத்த காதை

இரண்டாவது காதை

2.மனையறம்படுத்த காதை

தொகு

(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பி் னரைசுவிழை திருவிற் உரை சால் சிறப்பின் அரைசு விழை திருவின்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்பரதர் மலிந்த பயம் கெழு மா நகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்த தாகி வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
யரும்பொரு டரூஉம் விருந்தின் றேஎ [5]அரு பொருள் தருஉம் விருந்தின் தேஎம்
மொருங்குதொக் கன்ன வுடைப்பெரும் பண்டங்| ஒருங்கு தொக்கு அன்ன உடைப் பெரும் பண்டம்
கலத்தினுங் காலினுந் தருவன ரீட்டக்| கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வ | குலத்திற் குன்றாக் கொழும் குடிச் செல்வர்
ரத்தகு திருவி னருந்தவ முடித்தோ | அத்தகு திருவின் அரு தவம் முடித்தோர்
ருத்தர குருவி னொப்பத் தோன்றிய (10)| உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய


கயமலர்க் கண்ணியுங் காதற் கொழுநனும்| கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கா லமளிமிசை| மயன் விதித்தன்ன மணிக் கால் அமளி மிசை
நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிக்| நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழிக்
கழுநீ ராம்பல் முழுநெறிக் குவளை| கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
யரும்புபொதி யவிழ்ந்த சுரும்பிமிர் தாமரை [15]| அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை


வயற்பூ வாச மளைஇ யயற்பூ
வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ
மேதகு தாழை விரியல்வெண் டோட்டுக்
மேதகு தாழை விரியல் வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்க்
கோதை மாதவி சண்பகம் பொதும்பர்த்
தாதுதேர்ந் துண்டு மாதர்வாண் முகத்துப்
தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்துப்
புரிகுழ லளகத்துப் புகலேக் கற்றுத்
புரி குழல் அளகத்துப் புகல் ஏக்கற்றுத் 20


திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
மாலைத் தாமத்து மணி நிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்க ணுழைந்து
கோலச் சாளரக் குறு கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றற்
வண்டொடு புக்க மணம் வாய்த் தென்றல்
கண்டு மகிழ்வெய்திக் காதலிற் சிறந்து 25
கண்டு மகிழ்வு எய்திக் காதலில் சிறந்து


விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரைநிலை மாடத் தரமிய மேறிச்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறிச்
சுரும்புணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்கடன் ஞால முழுவதும் விளக்கும்
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30


கதிரொருங் கிருந்த காட்சி போல
கதிர் ஒருங்கிருந்த காட்சி போல
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்டோட்டு மல்லிகை விரியன் மாலையொடு
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
கழுநீர்ப் பிணையல் முழு நெறி பிறழத்
தாரு மாலையு மயங்கிக் கையற்றுத் 35
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்


தீராக் காதலின் றிருமுக நோக்கிக்
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை
கோவலன் கூறும்வஓர் குறியாக் கட்டுரை
குழவித் திங்க ளிமையவ ரேத்த
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
வழகொடு முடித்த வருமைத் தாயினு
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
னுரிதி னின்னோ டுடன்பிறப் புண்மையிற்
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் 40


பெரியோன் றருக திருநுத லாகென
பெரியோன் தருக திரு நுதல் ஆக என
வடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப்
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படைவழங் குவதோர் பண்புண் டாகலி
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்
னுருவி லாள னொருபெருங் கருப்புவி
உருவிலாளன் ஒரு பெரு கருப்பு வில்
லிருகரும் புருவ மாக வீக்க
இருகரும் புருவ மாக ஈக்க, 45


மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலிற்
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
றேவர் கோமான் றெய்வக் காவற்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக் களிக்கவத னிடைநினக் கிடையென
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என
வறுமுக வொருவனோர் பெறுமுறை யின்றியு
அறுமுக ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும்
மிறுமுறை காணு மியல்பினி னன்றே
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50


யஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச்
அம் சுடர் நெடு வேல் ஒன்று நின் முகத்துச்
செங்கடை மழைக்கண் ணிரண்டா வீத்தது
செங்கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?
மாயிரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின்
சாயற் கிடைந்து தண்கா னடையவு
சாயற்கு இடைந்து தண் கான் அடையவும்
மன்ன னன்னுதல் மென்னடைக் கழிந்து
அன்னம் நல் நுதல் மெல் நடைக்கு அழிந்து 55


நன்னீர்ப் பண்ணை நளிமலர்ச் செறியவு
நல் நீர்ப் பண்ணை நளி மலர்ச் செறியவும்,
மளிய தாமே சிறுபசுங் கிளியே
அளிய தாமே சிறு பசுங்கிளியே
குழலும் யாழு மமிழ்துங் குழைத்தநின்
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியு
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையி னீங்கா
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது 60


துடனுறைவு மரீஇ யொருவா வாயின
உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின
நறுமலர்க் கோதைநின் னலம்பா ராட்டுநர்
நறு மலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர்
மறுவின் மங்கல வணியே யன்றியும்
மறு இல் மங்கல அணியே அன்றியும்
பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல்
பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல்?
பல்லிருங் கூந்தற் சின்மல ரன்றியு
பல் இருங் கூந்தல் சின் மலர் அன்றியும் 65


மெல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல்
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்?
நான நல்லகி னறும்புகை யன்றியு
நானம் நல் அகில் நறும் புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொற்
மான்மதம் சாந்தொடு வந்ததை எவன் கொல்?
றிருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியு
திரு முலைத் தடத்து இடைத் தொய்யில் அன்றியும்
மொருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொற் 70
ஒரு காழ்முத்தமொடு உற்றதை எவன் கொல்?


றிங்கண்முத் தரும்பவுஞ் சிறுகிடை வருந்தவு
திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்
மிங்கிவை யணிந்தன ரென்னுற் றனர்கொல்
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர் கொல்?
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
காசறு விரையே கரும்பே தேனே
யரும்பெறற் பாவா யாருயிர் மருந்தே
அரும்பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே 75


பெருங்குடி வாணிகன் பெருமட மகளே
பெருங் குடி வாணிகன் பெரு மட மகளே
மலையிடைப் பிறவா மணியே யென்கோ
மலையிடைப் பிறவா மணியே என்கோ
வலையிடைப் பிறவா வமிழ்தே யென்கோ
அலை இடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா விசையே யென்கோ
யாழ் இடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தற் றையா றின்னையென் 80
தாழ் இரு கூந்தல் தையால் நின்னை என்று


றுலவாக் கட்டுரை பலபா ராட்டித்
உலவாக் கட்டுரை பல பாராட்டித்
தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி
வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழிநாள்
வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி
வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும் 85
மறுப்பு அருங் கேண்மையோடு அறப் பரிசாரமும்


விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
விருந்து புறந்தருஉம் பெரு தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
வேறு படு திருவின் வீறு பெறக் காண
வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
உரிமைச் சுற்றமோடு ஒரு தனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன விற்பெருங் கிழைமயிற்
யாண்டு சில கழிந்தன இல் பெருங் கிழமையின்
காண்டகு சிறப்பின் கண்ணகி தனக்கென்
காண் தகு சிறப்பின் கண்ணகி தனக்கு என் 90

(வெண்பா)

தொகு
தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
தூமம் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
காமர் மனைவி எனக் கைகலந்து - நாமம்
தொலையாத வின்பமெலாந் துன்னினார் மண்மே
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல்
னிலையாமை கண்டவர்போ னின்று.
நிலையாமை கண்டவர் போல் நின்று.


மனையறம் படுத்த காதை முற்றியது


காதையின் மொத்த அடிகள்:
நிலைமண்டில ஆசிரியப்பா- 90 அடிகள்
நேரிசை வெண்பா- 4 அடிகள்
குறிப்பு:
பாடலில் வரும் எல்லா அடிகளும் 'நேரடி'யாய் (நான்குசீ்ர்) இருந்தால் அது 'நிலைமண்டில ஆசிரியப்பா' ஆகும்.


பார்க்க
பதிகம்
புகார்க் காண்டம்
மதுரைக் காண்டம்
வஞ்சிக் காண்டம்
3.அரங்கேற்று காதை
1.மங்கல வாழ்த்துப் பாடல்