சிலப்பதிகாரம்/மதுரைக் காண்டம்/18.துன்ப மாலை
சிலப்பதிகாரம்
தொகுஇரண்டாவது மதுரைக்காண்டம்
தொகு18.துன்ப மாலை
தொகு- ஆங்கு,
- ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
- பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
- நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
- தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
- குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
- விரைவொடு வந்தாள் உளள்;
- அவள்தான்,
- சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
- சொல்லாடும் சொல்லாடுந் தான்; 10
- எல்லாவோ,
- காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்
- ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே
- ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின்
- ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; 15
- நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும்
- அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே
- அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின்
- மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ;
- தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் 20
- வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே
- வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின்
- எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ;
- சொன்னது:-
- அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் 25
- கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
- கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
- குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே
- எனக் கேட்டு,
- பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் 30
- திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச்
- செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை
- எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்;
- இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத்
- துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் 35
- மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப
- அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ;
- நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித்
- துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல்
- மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப 40
- அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ;
- தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக்
- கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல்
- செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப
- இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; 45
- காணிகா,
- வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும்
- ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின்
- ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க
- பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி 50
- காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்
- கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய்
- ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.
- துன்ப மாலை முற்றும்
- பார்க்க