சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/25.காட்சிக் காதை

சிலப்பதிகாரம்

தொகு

வஞ்சிக் காண்டம்

தொகு

இருபத்தைந்தாவது காட்சிக்காதை

தொகு
மாநீர்வேலிக் கடம்புஎறிந்து இமயத்து
வானவர் மருள மலைவில் பூட்டிய
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை
விளங்குஇலவந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ வேண்மா ளுடன்இருந்தருளித் (5)
துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும்
மஞ்சுசூழ் சோலை மலைகாண் குவம்எனப்
பைந்தொடு ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன்
வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு (10)
விளையாட்டு விரும்பிய விறல்வேள் வானவன்
பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்குநீர்த்துருத்தியும் இளமரக்காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒருநூற்று நாற்பதி யோசனை விரிந்த (15)
பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று
கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை
நாகம் திலகம் நறுங்கா ழாரம்
உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து
மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட (20)
நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்பக்
குன்றக் குரவையொடு கொடிச்சியர் பாடலும்
வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்
தினைக்குறு வள்ளையும் புனத்தெழு விளியும்
நறவுக்கண் ணுடைத்த குறவர் ஓதையும்
பறையிசை அருவிப் பயங்கெழும் ஓதையும்
புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும்
கலிகெழு மீமிசைச் சேணோன் ஓதையும்
பயம்பில்வீழ் யானைப் பாகர் ஓதையும்
இயங்குபடை யரவமோ டியாங்கணு மொலிப்ப
அளந்துகடை யறியா வருங்கலம் சுமந்து
வளந்தலை மயங்கிய வஞ்சி முறறத்து
இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது
திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல
யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்
மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும்
சந்தனக் குறையுஞ் சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும் அணியரி தாரமும்
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியுங் குடாவடி உளியமும் (50)
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் மாசறு நகுலமும்
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும்
மலைமிசை மாக்கள் தலைமிசைக் கொண்டாங்கு
ஏழ்பிறப் படியேம் வாழ்கநின் கொற்றம்
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துய ரெய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள் (60)
எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
நின்னாட் டியாங்கள் நினைப்பினும் அறியேம்
பன்னூ றாயிரத் தாண்டுவா ழியரென
மன்களி நெடுவேல் மன்னவற் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த
தண்டமி ழாசான் சாத்தனிஃ துரைக்கும்
ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம்
திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய்
தீவினைச் சிலம்பு காரண மாக
ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும்
வலம்படு தானை மன்னன் முன்னர்ச்
சிலம்பொடு சென்ற சேயிழை வழக்கும்
செஞ்சிலம் பெறிந்து தேவி முன்னர்
வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி
அஞ்சி லோதி அறிகெனப் பெயர்ந்து
முதிரா முலைமுகத் தெழுந்த தீயின்
மதுரை மூதூர் மாநகர் சுட்டதும்
அரிமா னேந்திய அமளிமிசை இருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க் கோதை தன்றுயர் பொறாஅன் (80)
மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்
பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்
கொற்றவேந்தன் கொடுங்கோல் தன்மை
இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல்
தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள்
நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று (90)
ஒழிவின் றுரைத்தீண் டூழி யூழி
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத்
தென்னர் கொமான் தீத்திறங் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்
எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையின் இகந்தசொற் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம் (100)
பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்லெனத்
துன்னிய துன்பம் துணிந்துவந் துரைத்த
நன்னூற் புலவற்கு நன்கனம் உரைத்தாங்கு
உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோ ரியாரென
மன்னவன் உரைப்ப மாபெருந் தேவி
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நா டடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி
நூலறி புலவரை நோக்க ஆங்கவர்
ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக்
கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும்
கங்கைப்பே ரியாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப்
பொதியிற் குன்றத்துக் கற்காற் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்
மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்று
புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை
முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளரொடு பெருமலை யரசன்
மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக்
கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின்
வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்
முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை
மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும்
தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை
நின்றெதிரூன்றிய நீள்பெருங் காஞ்சியும்
நிலவுக்கதி ரளைந்த நீள்பெருஞ் சென்னி
அலர்மந் தாரமோ டாங்கயல் மலர்ந்த
வேங்கையொடு தொடுத்த விளங்குவிறல் மாலை
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கெனக் (140)
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும்
நெடுமா ராய நிலைஇய வஞ்சியும்
வென்றோர் விளங்கிய் வியன்பெரு வஞ்சியும்
பின்றாச் சிறப்பிற் பெருஞ்சோற்று வஞ்சியும்
குன்றச் சிறப்பிற் கொற்ற வள்ளையும்
வட்கர் போகிய வான்பனந் தோட்டுடன்
புட்கைச் சேனை பொலியச் சூட்டிப்
பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்தென்
வாய்வாள் மலைந்த வஞ்சிசூ டுதுமெனப்
பல்யாண்டு வாழ்கநி்ன் கொற்றம் ஈங்கென (150)
வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்
நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்
கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி
பகைபுறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை
திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன
கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
கங்கைப் பேரியாற்றுக் கடும்புனல் நீத்தம் (160)
எங்கோ மகளை ஆட்டிய வந்நாள்
ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
ஒருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் (170)
தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென
நாவலந் தண்பொழில் நண்ணார் ஒற்றுநம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா
வம்பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்குந் தகைமைய வன்றோ
அறைபறை யென்றே அழும்பில்வே ளுரைப்ப
நிறையருந் தானை வேந்தனும் நேர்ந்து
கூடார் வஞ்சிக் கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மாநகர் புக்கபின் (180)
வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழி யுலகங் காக்கென
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்தோர்
கற்கொண்டு பெயருமெங் காவலன் ஆதலின்
வடதிசை மருங்கின் மன்ன ரெல்லாம்
இடுதிறை கொடுவந் தெதிரீ ராயின்
கடற்கடம் பெறிந்த கடு்ம்போர் வார்த்தையும்
விடர்ச்சிலை பொறித்த வியன்பெரு வார்த்தையும்
கேட்டு வாழுமின் கேளீ ராயின்
தோட்டுணை துறக்கும் துறவொடு வாழுமின் (190)
தாழ்கழல் மன்னன் றன்றிரு மேனி
வாழ்க சேனா முகமென வாழ்த்தி
இறையிக லியானை யெருத்தத் தேற்றி
அறைபறை யெழுந்ததால் அணிநகர் மருங்கென்.

காட்சிக் காதை முற்றும்

தொகு