சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/26.கால்கோட் காதை
சிலப்பதிகாரம்
தொகுவஞ்சிக்காண்டம்
தொகு26.கால்கோள் காதை
தொகு- அறைபறை யெழுந்தபின் அரிமா னேந்திய
- முறைமுதற் கட்டில் இறைமக னேற
- ஆசான் பெருங்கணி அருந்திற லமைச்சர்
- தானைத் தலைவர் தம்மொடு குழீஇ
- மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி
- முன்னிய திசையின் முறைமொழி கேட்ப
- வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்
- உயர்ந்தோங்கு வெண்குடை யுரவோன் கூறும்
- இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய
- அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
- நம்பா லொழிகுவ தாயி னாங்கஃது
- எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்
- வடதிசை மருங்கின் மன்னர்த முடித்தலைக்
- கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது
- வறிது மீளுமென் வாய்வா ளாகில்
- செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
- பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
- குடிநடுக் குறூஉங் கோலே னாகென
- ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும்
- சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால்
- அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின்
- வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ
- இமைய வரம்பநின் இகழ்ந்தோ ரல்லர்
- அமைகநின் சினமென ஆசான் கூற
- ஆறிரு மதியினுங் காருக வடிப்பயின்று
- ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
- வெந்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்
- இருநில் மருங்கின் மன்னரெல் லாம்நின்
- திருமலர்த் தாமரைச் சேவடி பணியும்
- முழுத்தம் ஈங்கிது முன்னிய திசைமேல்
- எழுச்சிப் பாலை யாகென் றேத்த
- மீளா வென்றி வேந்தன் கேட்டு
- வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்கென
- உரவுமண் சுமந்த அரவுதலைப் பனிப்பப்
- பொருந ரார்ப்பொடு முரசெழுந் தொலிப்ப
- இரவிடங் கெடுத்த நிரைமணி விளக்கின்
- விரவுக்கொடி யடு்க்கத்து நிரயத் தானையொடு
- ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
- வெம்பரி யானை வேந்தற் கோங்கிய
- கரும வினைஞருங் கணக்கியல் வினைஞரும்
- தரும வினைஞருந் தந்திர வினைஞரும்
- மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்
- பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
- மறமிகு வாளும் மாலைவெண் குடையும்
- புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்
- புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்
- அரைசுவிளங் கவையம் முறையிற் புகுதர
- அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த
- பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப்
- பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி
- வாய்வாள் நெடு்ந்தகை மணிமுடிக் கணிந்து
- ஞாலங் காவலர் நாட்டிறை பயிரும்
- காலை முரசம் கடைமுகத் தெழுதலும்
- நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
- உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி
- மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
- இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
- மறையோ ரேத்திய ஆவுதி நறும்புகை
- நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
- கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்
- குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென
- ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன்
- சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
- தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
- வ்ண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
- ஆவ்து வாங்கி அணிமணிப் புயத்துத்
- தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி
- நாடக மடந்தையர் ஆடரங் கியாங்கணும்
- கூடையிற் பொலிந்து கொற்ற வேந்தே
- வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தையொடு
- ஓடை யானையின் உயர்முகத் தோங்க
- வெண்குடை நீழலெம் வெள்வளை கவரும்
- கண்களி கொள்ளுங் காட்சியை யாகென
- மாகதப் புலவரும் வைதா ளிகரும்
- சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த
- யானை வீரரும் இவுளித் தலைவரும்
- வாய்வாண் மறவரும் வாள்வல னேத்தத்
- தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
- வானவன் போல வஞ்சி நீங்கித்
- தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும்
- வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத
- மலைமுதுகு நெளிய நிலைநா டதர்பட
- உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு
- ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு
- நீல கிரியின் நெடு்ம்புறத் திறுத்தாங்கு
- ஆடியல் யானையும் தேரும் மாவும்
- பிடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற்
- பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன்
- இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு
- அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப்
- பெரும்பே ரமளி ஏறிய பின்னர்
- இயங்குபடை அரவத் தீண்டொலி யிசைப்ப
- விசிம்பியங்கு முனிவர் வியன்நிலம் ஆளும்
- இந்திர திருவனைக் காண்குது மென்றே
- அந்தரத் திழிந்தாங் கரசுவிளங் கவையத்து
- மின்னொளி மயக்கும் மேனியொடு தோன்ற
- மன்னவன் எழுந்து வணங்கிநின் றோனைச்
- செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
- வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்
- மலயத் தேகுதலும் வான்பே ரிமய (100)
- நிலயத் தேகுதல் நின்கருத் தாகலின்
- அருமறை யந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
- பெருநில மன்ன பேணல்நின் கடனென்று
- ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர்
- வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக்
- கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும்
- தங்குலக் கோதிய தகைசால் அணியினர்
- இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி
- மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர்
- வடம்சுமந் தோங்கிய வளரிள வனமுலைக்
- கருங்கயல் செடுங்கட் காரிகை யாரோடு
- இருங்குயில் ஆல இனவண் டியாழ்செய
- அரும்பவிழ் வேனி்ல வந்தது வாரார்
- காதல ரென்னும் மேதகு சிறப்பின்
- மாதர்ப் பாணி வரியொடு தோன்றக்
- கோல்வளை மாதே கோலங் கொள்ளாய்
- காலங் காணாய் கடிதிடித் துரறி
- காரே வந்தது காதல ரேறிய
- தேரோ வந்தது செய்வினை முடித்தெனக்
- காஅர்க் குரவையொடு கருங்கயல் நெடுங்கட்
- கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத்
- தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
- வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
- ஊழி வாழியென் றோவர் தோன்றக்
- கூத்துள் படுவோன் காட்டிய முறைமையின்
- ஏத்தின ரறியா இருங்கலன் நல்கி
- வேத்தின நடுக்கும் வேலோன் இருந்துழி
- நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும்
- கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும்
- தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை
- நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பர்
- கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும்
- கடுங்களி யானை ஓரைஞ்ஞூறும்
- ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும்
- எய்யா வடவளத் திருபதி னாயிரம்
- கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
- சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
- கஞ்சுக முதலாத் தலைக்கீடு பெற்ற
- கஞ்சுக முதல்வர்ஈ ரைஞ்ஞூற் றுவரும்
- சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே
- வாயி லோரென வாயில்வந் திசைப்ப
- நாடக மகளிரும் நலத்தகு மாக்களும்
- கூடிசைக் குயிலுவக் கருவி யாளரும்
- சஞ்சயன் றன்னொடு வருக ஈங்கெனச்
- செங்கோல் வைந்தன் றிருவிளங் கவையத்துச்
- சஞ்சயன் புகுந்து தாழ்ந்துபல வேத்தி
- ஆணையிற் புகுந்த ஈரைம்பத் திருவரொடு
- மாண்வினை யாளரை வகைபெறக் காட்டி
- வேற்றுமை யின்றி நின்னொடு கலந்த
- நூற்றுவர் கன்னருங் கோற்றொழில் வேந்தே
- வடதிசை மருங்கின் வானவன் பெயர்வது (150)
- கடவு ளெழுதவோர் கற்கே யாயின்
- ஓங்கிய இமையத்துக் கற்கால் கொண்டு
- வீங்குநீர்க் கங்கை நீர்ப்படை செய்தாங்கு
- யாந்தரு மாற்றல மென்றன ரென்று
- வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் வாழ்கென
- அடல்வேன் மன்னர் ஆருயி ருண்ணும்
- கடலந் தானைக் காவல னுரைக்கும்
- பால குமரன் மக்கள் மற்றவர்
- காவா நாவிற் கனகனும் விசயனும்
- விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி (160)
- அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக்
- கூற்றங் கொண்டிச் சேனை செல்வது
- நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்
கங்கைப் பேரியாறு கடத்தற் காவன
வங்கப்பெருநிரை செய்க தாமெனச்
சஞ்சயன் போனபின் கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈரைஞ் ஞூற்றுவர்
சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்தும்
தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன் 170
மண்ணுடை முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு
ஆங்கவ ரேகிய பின்னர் மன்னிய
வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னாகிய
நாடாள் செல்வர் நலவல னேத்தப்
பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து
கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற
வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி
ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு
ஓங்குநீர் வேலி உத்தர மரீஇப்
பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த 180
தகைப்பருந் தானை மறவோன் றன்முன்
உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் றுனுத்தரன் சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்றமி ழாற்றல் காண்குதும் யாமெனக்
கலந்த கேண்மையிற் கனக விசயர்
நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர
இரைதேர் வேட்டத் தெழுந்த வரிமாக்
கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து
பாய்ந்த பண்பிற் பல்வேன் மன்னர்
காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப
வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர்
வடித்தோற் கொடும்பறை வால்வளை நெடுவயிர்
இடிக்குரல் முரசமொடு மாதிரம் அதிரச்
சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர்
கறைத்தோன் மறவர் கடுந்தே ரூருநர்
வெண்கோட் டியானையர் விரைபரிக் குதிரையர்
மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள் 200
களங்கொள் யானைக் கவிழ்மணி நாவும்
விளங்குகொடி நந்தின் வீங்கிசை நாவும்
நடுங்குதொழி லொழிந்தாங் கொடுங்கியுள் செறியத்
தாருந் தாருந் தாமிடை மயங்கத்
தோளுந் தலையுந் துணி்ந்துவே றாகிய
சிலைத்தோண் மறவர் உடற்பொறை யடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப்
பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில்
கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட 210
அடுந்தேர்த் தானை ஆரிய வரசர்
கடும்படை மாக்களைக் கொன்றுகளங் குவித்து
நெடுந்தேர்க் கொடுஞ்சியுங் கடுங்களிற் றெருத்தமும்
விடும்பரிக் குதிரையின் வெரிநும் பாழ்பட
எருமைக் கடும்பரி யூர்வோன் உயிர்த்தொகை
ஒருபக லெல்லையின் உண்ணு மென்பது
ஆரிய வரசர் அமர்க்களத் தறிய
நூழி லாட்டிய சூழ்கழல் வேந்தன்
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய 220
வாய்வா ளாண்மையின் வண்டமி ழிகழ்ந்த
காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு
செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும்
சடையின்ர் உடையினர் சாம்பற் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக்
கச்சை யானைக் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக
ஆளழி வாங்கி அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித்
தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி
முடியுடைக் கருந்தலை முந்துற வேந்திக்
கடல்வயிறு கலக்கிய ஞாட்புங் கடலகழ்
இலங்கையி லெழுந்த சமரமுங் கடல்வணன்
தேரூர் செருவும் பாடிப் பேரிசை
முன்றேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப் 240
பின்றேர்க் குரவைப் பேயாடு பறந்தலை
முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச்
சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து
அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென
மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன்
வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்
தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமினென 250
வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைபல ஏவிப்
பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.
- கால்கோட் காதை முற்றும்.
- பார்க்க