சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/27.நீர்ப்படைக் காதை

சிலப்பதிகாரம்

தொகு

மூன்றாவது வஞ்சிக்காண்டம்

தொகு

நீர்ப்படைக் காதை

தொகு

வடபே ரிமயத்து வான்றரு சிறப்பிற்

கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்

சினவேன் முன்பிற் செருவெங் கோலத்துக்

கனகவிசயர்தங் கதிர்முடி யேற்றிச்

செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்

அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்

செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக

உயிர்த்தொகை யுண்ட வென்பதிற் றிரட்டியென்று

யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்

ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள 10


வருபெருந் தானை மறக்கள மருங்கின்

ஒருபக லெல்லை உயிர்த்தொகை யுண்ட

செங்குட்டுவன்றன் சினவேற் றானையொடு

கங்கைப் பேரியாற்றுக் கரையகம் புகுந்து

பாற்படு மரபி்ற் பத்தினிக் கடவுளை

நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து

மன்பெருங் கோயிலும் மணிமண் டபங்களும்

பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும்

உரிமைப் பள்ளியும் விரிபூஞ் சோலையும்

திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் 20


பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்

ஆரிய மன்னர் அழகுற அமைத்த

தெள்ளூநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்

வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு

நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து

வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்

உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித்

தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர்

நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து

வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் 30


குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து

வழிமருங் கேத்த வாளொடு முடிந்தோர்

கிளைக டம்மொடு கிளர்பூ ணாகத்து

வளையோர் மடிய மடிந்தோர் மைந்தர்

மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத்

தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர்

திண்டேர்க் கொடுஞ்சியொடு தேரோர் வீழப்

புண்டோய் குருதியிற் பொலிந்த மைந்தர்

மாற்றருஞ் சிறப்பின் மணிமுடிக் கருந்தலைக்

கூற்றுக்கண் ணோட அரிந்துகளங் கொண்டோர் 40


நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து

புறம்பெற வந்த போர்வாண் மறவர்

வருக தாமென வாகைப் பொலந்தோடு

பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத்

தோடார் போந்தை தும்பையொடு முடித்துப்

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்

ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின்

மாடல மறையோன் வந்து தோன்றி

வாழ்க வெங்கோ மாதவி மடந்தை

கானற் பாணி கனக விசயர்தம் 50


முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம்

அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப்

பகைப்புலத் தரசர் பலரீங் கறியா

நகைத்திறங் கூறினை நான்மறை யாள

யாதுநீ கூறிய வுரைப்பொரு ளீங்கென

மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்

கானலந் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள்

மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு

ஊடற் காலத் தூழ்வினை யுருத்தெழக்

கூடாது பிரிந்த குலக்கொடி தன்னுடன் 60


மாட மூதூர் மதுரை புக்காங்கு

இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்தக்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

குடவர் கோவே நின்னாடு புகுந்து

வடதிசை மன்னர் மணிமுடி யேறினள்

இன்னுங் கேட்டருள் இகல்வேற் றடக்கை

மன்னர் கோவே யான்வருங் காரண்ம்

மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு

குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்

ஊழ்வினைப் பயன்கொல் உரைசால் சிறப்பின் 70


வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன்

வலம்படு தானை மன்னவன் றன்னைச்

சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும்

தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து

கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான்

அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்

குடையும் கோலும் பிழைத்த வோவென

இடையிரு ளியாமத் தெரியகம் புக்கதும்

தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்

நிவந்தோங்கு செங்கோல் நீணில வேந்தன் 80


போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி

என்னோ டிவர்வினை யுருத்த தோவென

உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்

பொற்றேர்ச் செழியன் மதுரை மாநகர்க்கு

உற்றது மெல்லாம் ஒழிவின் றுணர்ந்தாங்கு

என்பதிப் பெயர்ந்தேன் என்துயர் போற்றிச்

செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க

மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும்

செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்

கோவலன் தாதை கொடுந்துய ரெய்தி 90


மாபெருந் தானமா வான்பொரு ளீத்தாங்கு

இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு

அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்

பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று

துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்

துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள்

இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும்

கண்ணகி தாதை கடவுளர் கோலத்து

அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்

புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் 100


தானம் புரிந்ததோன் றன்மனைக் கிழத்தி

நாள்விடூஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும்

மற்றது கேட்டு மாதவி மடந்தை

நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன்

மணிமே கலையை வான்துயர் உறுக்குங்

கணிகையர் கோலங் காணா தொழிகெனக்

கோதைத் தாமம் குழலொடு களைந்து

போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்

என்வாய்க் கேட்டோர் இறந்தோ ருண்மையின்

நன்னீர்க் கங்கை யாடப் போந்தேன் 110


மன்னர் கோவே வாழ்க ஈங்கெனத்

தோடார் போந்தை தும்பையொடு முடித்த

வாடா வஞ்சி வானவர் பெருந்தகை

மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின்

தென்னவன் நாடு செய்ததீங் குரையென

நீடு வாழியரோ நீணில வேந்தன்

மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின்

மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா

ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்

இளவரசு பொறாஅர் ஏவல் கேளார் 120


வளநா டழிக்கும் மாண்பின ராதலின்

ஒன்பது குடையும் ஒருபக லொழித்தவன்

பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்

பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு

வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்

போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்

கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன்

பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞூற்றுவர்

ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு

ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி 130


உரைசெல வெறுத்த மதுரை மூதூர்

அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைத்

தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்

மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலின்

நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட

ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்

காலைச் செங்கதிர்க் கடவுளே றினனென

மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்

ஊழிதொ றூழி யுலகங் காத்து

வாழ்க எங்கோ வாழிய பெரிதென 140


மறையோன் கூறிய மாற்ற மெல்லாம்

இறையோன் கேட்டாங் கிருந்த எல்லையுள்

அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப்

பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச்

செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க

அந்திச் செக்கர் வெண்பிறை தோன்றப்

பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க

இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன்

எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது

மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த 150


நெடுங்காழ்க் கண்டம் நிரல்பட நிரைத்த

கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் வீதியுள்

குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன

உறையுள் முடுக்கர் ஒருதிறம் போகி

வித்தகர் கைவினை விளங்கிய கொள்கைச்

சித்திர விதானத்துச் செம்பொற் பீடிகைக்

கோயி லிருக்கைக் கோமகன் ஏறி

வாயி லாளரின் மாடலற் கூஉய்

இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்

வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு 160


செங்கோற் றன்மை தீதின் றோவென

எங்கோ வேந்தே வாழ்கென் றேத்தி

மங்கல மறையோன் மாடலன் உரைக்கும்

வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப

எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்

குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர

எறிதரு பருந்தின் இடும்பை நீங்க

அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்

திரிந்துவே றாகுங் காலமு முண்டோ

தீதோ இல்லைச் செல்லற் காலையும் 170


காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கென்று

அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே

பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு

ஆடகப் பெருநிறை யையைந் திரட்டித்

தோடார் போந்தை வேலோன் றன்னிறை

மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு

ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச்

சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்

தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த

மாபெருந் தானை மன்ன குமரர் 180


சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்

அரிபரந் தொழுகிய செழுங்கயல் நெடுங்கண்

விரிவெண் தோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்

சூடக வரிவளை ஆடமைப் பணைத்தோள்

வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப்

பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு

எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்

கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவர்

அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்

தெரியாது மலைந்த கனக விசயரை 190


இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்

திருந்துதுயில் கொள்ளா அளவை யாங்கணும்

பரம்புநீர்க் கங்கைப் பழனப் பாசடைப்

பயிலிளந் தாமரைப் பல்வண் டியாழ்செய

வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக்

குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக்

குடதிசை யாளுங் கொற்ற வேந்தன்

வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத்

தென்றிசைப் பெயர்ந்து வென்றித் தானையொடு

நிதிதுஞ்சு வியன்நகர் நீடுநிலை நிவந்து 200


கதிர்செல வொழித்த கனக மாளிகை

முத்துநிரைக் கொடித்தொடர் முழுவதும் வளைஇய

சித்திர விதானத்துச் செய்பூங் கைவினை

இலங்கொளி மணிநிரை யிடையிடை வகுத்த

விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய

மடையமை செறுவின் வான்பொற் கட்டில்

புடைதிரள் தமனியப் பொற்கா லமளிமிசை

இணைபுண ரெகினத் திளமயிர் செறித்த

துணையணைப் பள்ளித் துயிலாற்றுப் படுத்தாங்கு

எறிந்துகளங் கொண்ட இயறேர்க் கொற்றம் 210


அறிந்துரை பயின்ற ஆயச் செவிலியர்

தோட்டுணை துறந்த துயரீங் கொழிகெனப்

பாட்டொடு தொடுத்துப் பல்யாண்டு வாழ்த்தச்

சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று

பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான்

நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென

அமைவிளை தேறல் மாந்திய கானவன்

கவண்விடு புடையூஉக் காவல் கைவிட

வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த

ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த 220

வாகை தும்பை வடதிசைச் சூடிய

வேக யானையின் வழியோ நீங்கெனத்

திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்

குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்

வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்

கவடி வித்திய கழுதையே ருழவன்

குடவர் கோமான் வந்தான் நாளைப்

படுநுகம் பூணாய் பகடே மன்னர்

அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்

தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும் 230

தண்ணான் பொருநை யாடுந ரிட்ட

வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து

விண்ணுறை விற்போல் விளங்கிய பெருந்துறை

வண்டுண மலர்ந்த மணி்த்தோட்டுக் குவளை

முண்டகக் கோதையொடு முடித்த குஞ்சியின்

முருகவிர் தாமரை முழுமலர் தோயக்

வில்லவன் வந்தான் வியன்பே ரிமயத்துப்

பல்லான் நிரையொடு படர்குவிர் நீரெனக்

காவலன் ஆனிரை நீர்த்துறை படீஇக் 240

கோவலர் ஊதுங் குழலின் பாணியும்

வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக்

குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை

வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம்

கழங்காடு மகளி ரோதை யாயத்து

வழங்குதொடி முன்கை மலர ஏந்தி

வானவன் வந்தான் வளரிள வனமுலை

தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு

வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும்

அஞ்சொற் கிளவியர் அந்தீம் பாணியும் 250

ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி

வால்வளை செறிய வலம்புரி வலனெழ

மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்

வேக யானையின் மீமிசைப் பொலிந்து

குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள

வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.


நீர்ப்படைக்கதை முற்றும்.
வஞ்சிக் காண்டம்