சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/28. நடுகற் காதை

சிலப்பதிகாரம்

தொகு

வஞ்சிக் காண்டம்

தொகு

நடுகல் காதை

தொகு

தண்மதி யன்ன தமனிய நெடுங்குடை

மண்ணக நிழற்செய மறவா லேந்திய

நிலந்தரு திருவின் நெடியோன் றனாது

வலம்படு சிறப்பின் வஞ்சி மூதூர்

ஒண்டொடித் தடக்கையின் ஒண்மலர்ப் பலிதூஉய்

வெண்திரி விளக்கம் ஏந்திய மகளிர்

உலக மன்னவன் வாழ்கென் றேத்திப்

பலர்தொழ வந்த மலரவிழ் மாலை

போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்

வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்தர் 10


யானை வெண்கோடு அழுத்திய மார்பும்

நீள்வேல் கிழித்த நெடும்பூண் ஆகமும்

எய்கணை கிழித்த பகட்டெழில் அககமும்

வைவாள் கிழித்த மணிப்பூண் மார்பமும்

மைம்மல ருண்கண் மடந்தைய ரடங்காக்

கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ

அகிலுண விரித்த அம்மென் கூந்தல்

முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ்

மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து

சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20


மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த

இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக்

கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில்

திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும்

மாந்தளிர் மேனி மடவோர் தம்மால்

ஏந்துபூண் மார்பின் இளையோர்க் களித்துக்

காசறைத் திலகக் கருங்கறை கிடந்த

மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட

குழலுங் கோதையுங் கோலமுங் காண்மார்

நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30


வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப்

புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க்

குரல்குர லாக வருமுறைப் பாலையில்

துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின்

அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின்

மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து

முடிபுறம் உரிஞ்சுங் கழற்காற் குட்டுவன்

குடிபுறந் தருங்கால் திருமுகம் போல

உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்

பலர்புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க 40


மைந்தரும் மகளிரும்வழிமொழி கேட்ப

ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த

வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ்சேக்கையும்

மண்ணீட்டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும்

வெண்கால் அமளியும் விதானவே திகைகளும்

தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப்

படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்

திடைநின் றோங்கிய நெடுநிலை மேருவிற்

கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய

தமனிய மாளிகைப்புனைமணி யரங்கின் 50


வதுவை வேண்மாள் மங்கல மடந்தை

மதியேர் வண்ணங் காணிய வருவழி

எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம்

பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார்

மண்கணை முழவும் வணர்கோட் டியாழும்

பண்கனி பாடலும் பரந்தன வொருசார்

மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும்

கூனுங் குறளுங் கொண்டன வொருசார்

வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும்

பெண்ணணிப்பேடியர் ஏந்தின ரொருசார் 60


பூவும் புகையும் மேவிய விரையும்

தூவியஞ் சேக்கை சூழ்ந்தன வொருசார்

ஆடியும் ஆடையும் அணிதரு கலன்களும்

சேடியின் செவ்வியின் ஏந்தின ரொருசார்

ஆங்கவ டன்னுடன் அணிமணி யரங்கம்

வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் ஏறித்

திருநிலைச் சேவடிச்சிலம்புவாய் புலம்பவும்

பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும்

செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும்

செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் 70


பாடகம் பதையாது சூடகந் துளங்காது

மேகலை ஒலியாது மென்முலை அசையாது

வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது

உமையவள் ஒருதிற னாக ஓங்கிய

இமையவன் ஆடிய கொடுகொட்டிச் சேதம்

பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்

கூத்தச் சாக்கைய னாடலின் மகிழ்ந்தவன்

ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்

வேத்தியன் மண்டபம் மேவிய பின்னர்

நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80


மாடல மறையோன் றன்னொடுந் தோன்றி

வாயிலாளரின் மன்னவற் கிசைத்தபின்

கோயின் மாக்களிற் கொற்றவற் றொழுது

தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே

செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு

வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய

சித்திர மண்டபத் திருக்க வேந்தன்

அமரகத் துடைந்த ஆரிய மன்னரொடு

தமரிற் சென்று தகையடி வணங்க

நீளம ரழுவத்து நெடும்பே ராண்மையொடு 90


வாளுங் குடையும் மறக்களத் தொழித்துக்

கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை

வெல்போர்க் கோடல் வெற்றம் அன்றெனத்

தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்

சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை

ஆங்குநின் றகன்றபின் அறக்கோல் வேந்தே

ஓங்குசீர் மதுரை மன்னவற் காண

ஆரிய மன்னர் அமர்க்களத் தெடுத்த

சீரியல் வெண்குடைக் காம்புநனி சிறந்த

சயந்தன் வடிவில் தலைக்கோ லாங்குக் 100


கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி

இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்

துமையொரு பாகத் தொருவனை வணங்கி

அமர்க்களம் அரசன தாகத் துறந்து

தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல்

கொதியழற் சீற்றங் கோண்டோன் கொற்றம்

புதவ தென்றனன் போர்வேற் செழியனென்

றேனை மன்னர் இருவருங் கூறிய

நீண்மொழி யெல்லாம் நீலன் கூறத்

தாமரைச் செங்கண் தழனிறங் கொள்ளக் 110


கோமகன் நகுதலும் குறையாக் கேள்வி

மாடலன் எழுந்து மன்னர் மன்னே

வாழ்கநின் கொற்றம் வாழ்கவென் றேத்திக்

கறிவளர் சிலம்பிற் றுஞ்சும் யானையின்

சிறுகுரல் நெய்தல் வியலூ ரெறிந்தபின்

ஆர்புனல் தெரியல் ஒன்பது மன்னரை

நேரி வாயில் நிலைச்செரு வென்று

நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற்புறத் திறுத்துக்

கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி

உடன்றுமேல் வந்த ஆரிய மன்னரைக் 120


கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்

நெடுந்தார் வேய்ந்த பெரும்படை வேந்தே

புரையோர் தம்மொடுபொருந்த வுணர்ந்த

அரைச ரேறே அமைகநின் சீற்றம்

மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்

தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க

அகழ்கடன் ஞாலம் ஆள்வோய் வாழி

இகழா தென்சொல் கேட்டல் வேண்டும்

வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு

ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும் 130


அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்

மறக்கள வேள்வி செய்வோ யாயினை

வேந்துவினை முடித்த ஏந்துவாள் வலத்துப்

போந்தைக் க்ணணிநின் னூங்கணோர் மருங்கில்

கடற்கடம் பெறிந்த காவல னாயினும்

விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்

நான்மறை யாளன் செய்யுட் கொண்டு

மேல்நிலை யுலகம் விடுத்தோ னாயினும்

போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்

கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும் 140


வன்சொல் யவனர் வளநா டாண்டு

பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்

மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி

அகப்பா எறிந்த அருந்திற லாயினும்

உருகெழு மரபின் அயிரை மண்ணி

இருகடல் நீரும் ஆடினோ னாயினும்

சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து

மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்

மீக்கூற் றாளர் யாவரு மின்மையின்

யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய் 150


மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்

செல்வம் நில்லா தென்பதை வெல்போர்த்

தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்

கண்டனை யல்லையோ காவல் வேந்தே

இளமை நில்லா தென்பதை எடுத்தீங்கு

உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா

திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே

நரைமுதி்ர் யாக்கை நீயுங் கண்டனை

விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்

மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும் 160


மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்

மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்

விலங்கின் யாக்கை விலங்கிய் இன்னுயிர்

கலங்கஞர் நரகரைக் காணினுங் காணும்

ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்

கூடிய கோலத் தொருங்குநின் றியலாது

செய்வினை வழித்தாய் உயிர்செலு மென்பது

பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்

எழுமுடி மார்பநீ யேந்திய திகிரி

வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே 170


அரும்பொருட் பரிசிலேன் அல்லே னியானும்

பெரும்பே ரியாக்கை பெற்ற நல்லுயிர்

மலர்தலை யுலகத் துயிர்போகு பொதுநெறி

புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்

வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்

நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்

அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய

பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும்

நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே

கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180


இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர்

முதுநீர் உலகில் முழுவது மில்லை

வேள்விக் கிழத்தி யிவளொடுங் கூடித்

தாழ்கழல் மன்னர் நின்னடி போற்ற

ஊழியோ டூழி யுலகங் காத்து

நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று

மறையோன் மறைநா வுழுது வான்பொருள்

இறையோன் செவிசெறு வாக வித்தலின்

வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்

துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன் 190


நான்மறை மரபின் நயந்தெரி நாவின்

கேள்வி முடித்த வேள்வி மாக்களை

மாடல மறையோன் சொல்லிய முறைமையின்

வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி

ஆரிய வரசரை அருஞ்சிறை நீக்கிப்

பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்

தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்

வேளா விக்கோ மாளிகை காட்டி

தன்பெரு வேள்வி முடித்தற் பின்னாள்

தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200


மன்னவர்க் கேற்பன செய்க நீயென

வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச்

சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்

கறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென

அழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை

முழங்குநீர் வேலி மூதூர் ஏவி

அருந்திற லரசர் முறைசெயி னல்லது

பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்

பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை

பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின் 210


ஆர்புனை சென்னி யரசற் களித்துச்

செங்கோல் வளையு உயிர்வா ழாமை

தென்புலங் காவல் மன்னவற் களித்து

வஞ்சினம் வாய்த்தபின் னல்லதை யாவதும்

வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை

வடதிசை மருங்கின் மன்னவ ரறியக்

குடதிசை வாழுங் கொற்றவற் களித்து

மதுரை மூதூர் மாநகர் கேடுறக்

கொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து

நந்நா டணைந்து நளிர்சினை வேங்கைப் 220


பொன்னணி புதுநிழற் பொருந்திய நங்கையை

அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி

சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று

மேலோர் விழையும் நூனெறி மாக்கள்

பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து

இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்

சிமயச் சென்னித் தெய்வம் பரசிக்

கைவினை முற்றிய தெய்வப் படிமத்து

வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து

முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் 230


பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி

வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்

கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்

வடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.


நடுகற் காதை முற்றும்


பார்க்க;

வஞ்சிக் காண்டம்