சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/30. வரந்தரு காதை

சிலப்பதிகாரம் தொகு

வஞ்சிக் காண்டம் தொகு

வரந்தரு காதை தொகு

வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை

கடவுட் கோலம் கட்புலம் புக்கபின்

தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி

வாயெடுத் தரற்றிய மணிமே கலையார்

யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக்

கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி

நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி

அணிமே கலையா ராயத் தோங்கிய

மணிமே கலைதன் வான்றுற வுரைக்கும்

மையீ ரோதி வகைபெறு வனப்பின் (10)


ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது

செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்

அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள்

ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த

நித்தில விளநகை நிரம்பா வளவின

புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது

தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது

குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ

நிறங்கிளர் சீறடி நெய்தோய் தளிரின

தலைக்கோ லாசான் பின்னுள னாகக் 20


குலத்தலை மாக்கள் கொள்கையிற் கொள்ளார்

யாது நின்கருத் தென்செய் கோவென

மாதவி நற்றாய் மாதவிக் குரைப்ப

வருகவென் மடமகள் பணிமே கலையென்

றுருவி லாள னொருபெருஞ் சிலையொடு

விரைமலர் வாளி வெறுநலத் தெறியக்

கோதைத் தாமங் குழலொடு களைந்து

போதித் தானம் புரிந்தறம் படுத்தனன்

ஆங்கது கேட்ட அரசனும் நகரமும்

ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் 30


தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச்

செம்மொழி மாதவர் சேயிழை நங்கை

தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே

அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர்

பருவ மன்றியும் பைந்தொடி நங்கை

திருவிழை கோலம் நீங்கின ளாதலின்

அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின்

குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழத்

துடித்தனள் புருவந் துவரிதழ்ச் செவ்வாய்

மடித்தெயி றரும்பினள் வருமொழி மயங்கினள் 40


திருமுகம் வியர்த்தனள் செங்கண் சிவந்தனள்

கைவிட் டோச்சினள் கால்பெயர்த் தெழுந்தனள்

பலரறி வாராத் தெருட்சியள் மருட்சியள்

உலறிய நாவினள் உயர்மொழி கூறித்

தெய்வமுற் றெழுந்த தேவந் திகைதான்

கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் றன்முன்

கடவுண் மங்கலங் காணிய வந்த

மடமொழி நல்லார் மாணிழை யோருள்

அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற

இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் 50


ஆடக மாடத் தரவணைக் கிடந்தோள்

சேடக் குடும்பியின் சிறுமகள் ஈங்குளள்

மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்

செங்கோட் டுயர்வரைச் சேணுயர் சிலம்பிற்

பிணிமுக நெடுங்கற் பிடர்த்தலை நிரம்பிய

அணிகயம் பலவுள ஆங்கவை யிடையது

கடிப்பகை நுண்கலுங் கவிரிதழ்க் குறுங்கலும்

இடிக்கலப் பன்ன இழைந்துகு நீரும்

உண்டோர் சுனையத னுள்புக் காடினர்

பண்டைப் பிறவிய ராகுவ ராதலின் 60


ஆங்கது கொணர்ந்தாங் காயிழை கோட்டத்

தோங்கிருங் கோட்டி யிருந்தோய் உன்கைக்

குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன்

உறித்தாழ் கரகமும் உன்கைய தன்றே

கதிரொழி காறுங் கடவுட் டன்மை

முதிரா தந்நீர் முத்திற மகளிரைத்

தெளித்தனை யாட்டினிச் சிறுகுறு மகளிர்

ஒளித்த பிறப்பின ராகுவர் காணாய்

பாசண் டன்யான் பார்ப்பனி தன்மேல்

மாடல மறையோய் வந்தே னென்றலும் 70


மன்னவன் விம்மித மெய்தியம் மாடலன்

தன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து

கேளிது மன்னா கெடுகநின் தீயது

மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப்

பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக்

கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி

ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்

பாசண்டன்பாற் பாடு கிடந்தாட்

காசி்ல் குழவி யதன்வடி வாகி

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச் 80


செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்

பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்

காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து

தேவந் திகையைத் தீவலஞ் செய்து

நாலீராண்டு நடந்ததற் பின்னர்

மூவா இளநலங் காட்டியென் கோட்டத்து

நீவா வென்றே நீங்கிய சாத்தன்

மங்கல மடந்தை கோட்டத் தாங்கண்

அங்குறை மறையோ னாகத் தோன்றி

உறித்தாழ் கரகமும் என்கைத் தந்து 90


குறிக்கோள் கூறிப் போயினன் வாரான்

ஆங்கது கொண்டு போந்தே னாதலின்

ஈங்கிம் மறையோ டன்மேற் றோன்றி

அந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன்

மன்னர் கோவே மடந்தையர் தம்மேல்

தெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப

ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின்

புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின்

இகழ்ந்ததற்கிரங்கும் என்னையும் நோக்காய்

ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக் 100


காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய்

யான்பெறு மகளே என்றுணைத் தோழீ

வான்றுயர் நீக்கும் மாதே வாராய்

என்னோ டிருந்த இலங்கிழை நங்கை

தன்னோ டிடையிருள் தனித்துய ருழந்து

போனதற் கிரங்கிப் புலம்புறு நெஞ்சம்

யானது பொறேஎன் என்மகன் வாராய்

வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தேன்

உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்

வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன் 110


எந்தாய் இளையாய் எங்கொளித் தாயோ

என்றாங் கரற்றி இனைந்தினைந் தேங்கிப்

பொன்றாழ் அகலத்துப் போர்வெய் யோன்முன்

குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர்

முதியோர் மொழியின் முன்றில் நின்றழத்

தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன்

மாடல மறையோன் றன்முக நோக்க

மன்னர் கோவே வாழ்கென் றேத்தி

முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன்

மறையோன் உற்ற வான்துயர் நீங்க 120


உறைகவுள் வேழக் கையகம் புக்கு

வானோர் வடிவம் பெற்றனன் பெற்ற

காதலி தன்மேற் காதல ராதலின்

மேனிலை யுலகத் தவருடன் போகும்

தாவா நல்லறஞ் செய்தில ரதனால்

அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்

வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்

பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்

அற்புளஞ் சிறந்தாங கரட்டன் செட்டி

மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின் 130


உடன்வயிற் றோராய் ஒருங்குட்ன் றோன்றினர்

ஆயர் முதுமக ளாயிழை தன்மேல்

போய பிறப்பிற் பொருந்திய காதலின்

ஆடிய குரவையின் அரவணைக் கிடந்தோன்

சேடக் குடும்பியின் சிறுமக ளாயினள்

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்

அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்

அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்

பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும்

புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை 140


ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி

மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்

செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும்

கையகத்தனபோற் கண்டனை யன்றே

ஊழிதோறூழி யுலகங் காத்து

நீடுவா ழியரோ நெடுந்தகை யென்று

மாடல மறையோன் றன்னொடு மகிழ்ந்து

பாடல்சால் சிறப்பிற் பாண்டிநன் னாட்டுக்

கலிகெழு கூடல் கதழெரி மண்ட

முலைமுகந் திருகிய மூவா மேனி 150


பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து

நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்

பூவும் புகையும் மேவிய விரையும்

தேவந் திகையைச் செய்கென் றருளி

வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி

உலக மன்னவ னின்றோன் முன்னர்

அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்

பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்

குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்

கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் 160


எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்

நன்னாட் செய்த நாளணி வேள்வியில்

வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்

தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்

ஆங்கது கேட்ட அரசனு மரசரும்

ஓங்கிருந் தானையும் முறையோ டேத்த

வீடுகண் டவர்போல் மெய்ந்நெறி விரும்பிய

மாடல மறையோன் றன்னொடுங் கூடித்

தாழ்கழன் மன்னர் தன்னடி போற்ற

வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின் 170


யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து

தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி

வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை

நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை

அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று

உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக்

கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்

செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப்

பகல்செல் வாயிற் படியோர் தம்முன்

அகலிடப் பாரம் அகல நீக்கிச் 180


சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத்து

அந்தமி லின்பத் தரசாள் வேந்தென்று

என்றிறம் உரைத்த இமையோ ரிளங்கொடி

தன்றிற முரைத்த தகைசால் நன்மொழி

தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்

பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்

ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின் 190


செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்

பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்

அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்

பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்

அறமனை காமின் அல்லவை கடிமின்

கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்

வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது (200)

செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.


வரந்தரு காதை முற்றும்


வஞ்சிக் காண்டம்