சிலம்பின் கதை/அந்திமாலைச் சிறப்புச் செய் காதை

4. கண்ணகியின் பிரிவுத் துயர்
(அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை)

அந்தி மாலை

மாதவி மகிழ்ந்தாள்; கண்ணகி துயர் உழந்தாள். மாலைக் காலம் கூடியவர்க்கு இன்பம் அளித்தது; பிரிந்து வாடியவர்க்குத் துன்பம் தந்தது.

இந்த மாலைப்பொழுது நில மடந்தைக்கு வான்துயர் தந்தது. கதிரவன் மறைகிறான். கணவனைக் காணாமல் வருந்துவது போல் இம்மாநில மடந்தை வருந்தியது. அதன் திசை முகங்கள் பசந்து காணப்பட்டன. திங்களின் வருகையை அது ஆவலோடு எதிர்நோக்கியது. கணவனை இழந்து கடுந்துயர் உழந்த நிலமடந்தை தன் ஆருயிர் மகன் ஆகிய திங்கள் எங்கே உள்ளான் என்று எதிர்நோக்கி இருந்தது.

பேரரசன் இல்லாத நேரத்தில் குறும்பர்கள் வந்து நாட்டு மக்களை அலைக்கழிப்பது போல் ஞாயிறு இல்லாத நேரத்தில் இந்த மாலைப்பொழுது வந்து மக்களை வாட்டியது. நில மடந்தையை வருத்தியது.

மகளிர் நிலை

இந்த மாலைக் காலத்தில் மகளிர் நிலை யாது? கணவனை விட்டுப் பிரியாதவர்கள் களிமகிழ்வு எய்தினர். பிரிந்தவர் துன்புற்று வருந்தினர். முல்லை முகைகளில் வண்டுகள் மொய்த்து அவற்றை மலர வைத்தன; கார் காலத்தில் இந்த முல்லை மலர்ச்சியைக் கண்டு “பிரிந்தவர் வந்திலர்” என்று மகளிர் வருந்தினர். ஆயர்கள் முல்லைப் பண்ணைத் தம் குழலிசையில் தோற்றுவித்தனர்; அவ் இசை அவர்களை வருத்தியது.

மகிழ்ச்சி பொங்கும் இல்லத்தினர் தத்தம் வீடுகளில் விளக்கேற்றி வைத்தனர். இணைந்து இருந்தவர் மகிழ்வு தருவது மாலை எனக் கருதினர் மயக்கத்தைத் தருவது இது என்று பிரிந்தவர் கருதினர்.

மாதவி மகிழ்ச்சி

நிலா ஒளி வீசியது; மாலைப்பொழுது மறைந்தது. மாலைப் பொழுதாகிய குறும்பர்களைத் திங்கள் ஆகிய பேரரசன் வந்து ஓட்டியது போல நிலவு வெளிப்பாடு இருந்தது. இந்த நிலவு ஒளியில் கோவலனோடு மாதவி குலவி மகிழ்ந்தாள். மஞ்சத்தில் அவன் அவள் கொஞ்சலில் திளைத்தான். ஒப்பனைமிக்கு விளங்கி அவனுக்கு ஊடலும், கூடலும் தந்து உவகையுறச் செய்தாள்.

இவளைப் போலவே ஏனைய மகளிரும், உயிர் அனைய தம் கொழுநருடன் அவர்கள் மார்பில் ஒடுங்கிக் களித்துயில் எய்தினர். அந்த இரவு அவர்களுக்கு இன்பத்தைத் தந்தது. அவர்கள் நறுமணம் கொண்டு தம்மை அழகுபடுத்திக் கொண்டனர். பூக்கள் அணிந்து பொலிவுடன் திகழ்ந்தனர்.

கண்ணகி கடுந்துயர்

கண்ணகி தனிமையில் வாடினாள்; அவளுக்கு வாழ்க்கை கசந்தது. அழகு ஊட்டும் அணிகள் அவளுக்குச் சுமையாயின. காலில் அணிந்திருந்த சிலம்பு அதைக் கழற்றி வைத்தாள். குங்குமம் அப்பிக் கொங்கைகளை அழகுபடுத்துவதை நிறுத்தி விட்டாள்; தாலி அது மங்கல அணியாதலின் அது மட்டும் தங்க இடம் தந்தாள். ஏனைய அணிகள் அவளை விட்டு நீங்கின. காதில் அணிந்திருந்த தோடும் அது கேடுற்றது.

அவள் நெற்றி அவன் கூடி இருந்தபோது வியர்த்து மகிழ்வைப் புலப்படுத்தியது. அந்த வியர்வை அவளை விட்டுப் பிரிந்தது.

அஞ்சனம் கண்களுக்குக் கருமை தந்தது. அதனைத் தீட்டுவதை விட்டாள்; திலகம் இட்டு நெற்றியை முன்பு அழகுபடுத்துவாள்; அது அவள் நெற்றியை விட்டு நீங்கிவிட்டது. அவள் சிரிப்பு கோவலனுக்கு மகிழ்ச்சியின் விரிப்பு; அதை அவன் இழந்துவிட்டான்.

கூந்தல் வாரி முடித்து மலர் இட்டு மகிழ்ந்திலள்; அது நெய்யணிதலும் இழந்து வறண்டு உலர்ந்து கிடந்தது. கையறு நெஞ்சோடு அவள் வருந்திச் செயல் இழந்தாள். அடி முதல் முடி வரை அவள் ஒப்பனைகள் வெறும் சொப்பனமாக மறைந்தன. சோகத்தின் உருவமாக அவள் சோர்ந்து கிடந்தாள்.

ஏனைய மகளிர்

அந்த இரவுப்பொழுது கண்ணகியை மட்டும் வருத்தவில்லை; பெண்ணணங்குகள் பலரையும் வருத்தியது. வேனிற்பள்ளி வேதனை தரும் என்பதால் அவர்கள் கூதிர்ப் பள்ளியைத் தேடிச் சென்றனர். அதன் சாளரங்களில் தென்றல் வீசியது; பிரிந்திருந்த அவர்களை அது சுட்டது; வெம்மைப்படுத்தியது; புழுக்கத்தைத் தந்தது. அதனால் காற்றும் புகாதபடி அவற்றின் கண்களை அடைத்தனர். மாலை முத்தும், சந்தனக் கொத்தும் அவர்களுக்குக் குளிர்ச்சி தருவன; அவை அவர்களுக்கு வேதனையைத் தந்தன. அதனால் அவற்றை அணிவதைத் தவிர்த்தனர். குவளையும், கழுநீர்ப் பூவும் குளிர்ச்சியை அளிப்பன. அவற்றைத் தூவிப் படுக்கையில் படுப்பது வழக்கம். பூவின் அடுக்கு அவர்களுக்கு இடுக்கண் தந்தது. மகிழ்வை வெறுத்தனர். வெம்மைமிக்க அன்னத் தூவி விரித்த விரிப்பில் தம் இரவைக் கழிக்க விரும்பினர். அங்கும் அவர்கள் கண்கள் துயில் மறுத்தன. துயிலின்றி வருந்தினர் வறண்ட வாழ்க்கை அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. அந்த இரவு அவர்களுக்குப் பகையாக விளங்கியது. ஊடல் காலத்தில் சினந்து சிவக்கும் அவர்கள் கண்கள் இந்த வாடல் காலத்தில் முத்துக்கள் என நீர் உகுத்துச் சிந்தின; தனிமை அவர்களை வாட்டியது.

புகார் நகர் மகளிர்

இப்படி ஒரு சிலர் வருந்தினர்; எனினும் பலருக்கு அது இன்ப இரவாகவே விளங்கியது. மன்மதனின் படைகள் மகளிர் கூட்டம் என்று கூறுவது மரபு; இந்த மக்ளிர் தம் செயலாற்றலால் ஆடவருக்கு இன்பம் அளித்தனர். மன்மதன் ஆட்சி அந்த நகரில் ஓங்கி விளங்கியது. யாமம் கழிந்தும் அவர்கள் காமம் அவிந்தவராய் அடங்கிக் கிடக்கவில்லை. இரவு நேரம் கலவிக்கு உரிய களனாக அமைந்தது; தம் துணைவர்க்குப் புலவியும் கலவியும் தந்து மகிழச் செய்தனர்.

பொழுது விடிதல்

இரவு கழிந்தது. பொழுது விடிந்தது. அன்னப் பறவைகள் பொய்கையைச் சார்ந்தன. ஆம்பல் குவிந்தது; தாமரை மலர்ந்தது; குவளைகள் கண்விழித்தன; பறவைகள் முரசம் போல் ஆர்த்தன; கோழிகள் சங்கு எனக் கூவின; வண்டுகள் இசைத்தன; இக்குரல்கள் அனைத்தும் சேர்ந்து ஊர் மக்களைத் துயில் எழச் செய்தன.

சோழன் வெண் கொற்றக்குடை நாட்டினர்க்கு நிழல் ஆகியது. பகைவர்க்கு நெருப்பு ஆகியது. அதுபோல இந்த இரவு கணவனுடன் இருந்தவர்களுக்கு மகிழ்வு தந்தது; பிரிந்தவர்களுக்கு வேதனை தந்தது.