சிலம்பின் கதை/அரங்கேற்று காதை
(அரங்கேற்று காதை)
மாதவி
ஆண்டுகள் சில கழிந்தன; அதற்குள் புதிய தொடர்பு எழச் சூழல்கள் உருவாயின.
நாட்டிய அழகி மாதவி ஆடல், பாடல், அழகு இம்மூன்றிலும் தேர்ந்தவள் ஆயினாள். அவள் ஊர்வசி மரபில் வந்தவள் என்று பேசப்பட்டது. அதற்கு ஒரு கதையும் கூறப்பட்டது.
இந்திரன் அவையில் சந்திரன் எனத் திகழ்ந்த சயந்தனைக் காதலித்த நடனமாது ஆகிய ஊர்வசி நாட்டியம் பிறழ்ந்தாள். அதனால் அவள் மண்ணுலகில் பிறக்கச் சாபம் பெற்றாள். அவள் சாபம் இங்கு இப்புகார் நகரில் இதே நாட்டிய அரங்கில் தீர்ந்தது; அகத்தியன் அருளால் சாபம் நீங்கியது. என்பர். அத்தகைய சிறப்பு மிக்க ஊர்வசி புகார் நகரில் பிறந்தாள். அவ்வழி வந்தவள் மாதவி என்று சிறப்பித்துப் பேசப்பட்டது.
கலைச் சிறப்பு
ஐந்தில் தொடங்கி ஏழாண்டுகள் அவள் நாட்டியக் கலை பயின்று தேர்ச்சி பெற்றாள். அவள் கலையை நாடறியச் செய்ய ஒரு வாய்ப்பு; அவள் நாட்டிய அரங்கு ஏறி, அரசனின் மதிப்பையும் பாராட்டையும் பெற விரும்பினாள். தன் கலைத் திறனை நன்கு மன்னனுக்குக் காட்ட வேண்டி அரங்கு ஏறினாள்.
அவள் ஆடல் கலைக்குத் துணை நின்றவர்கள் நாட்டிய ஆசான்; பாட்டியல் புலவன்; இசைப்புலவன்; தண்ணுமையாளன் (முழவு இயக்குபவன்); யாழ் வாசிப்பவன் குழலோன் இத்தகையவர் ஆவார்.
நாட்டிய மேடை
நாட்டிய அரங்கு சிற்ப சாத்திர முறைப்படி அமைக்கப்பட்ட ஒன்று. அதன் உயரம், நீளம், அகலம் குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டு விளங்கியது. தக்கோன் ஒருவன் கைவிரல் அளவு இருபத்து நான்கு கொண்டது ஒரு கோல் எனப்பட்டது.
தரையில் இருந்து மேடை ஒரு கோல் அளவினதாக இருந்தது; அதன் அகலம் ஏழு கோல் அளவு என்றும், நீளம் எட்டுக்கோல் அளவு என்றும், உயரம் நான்கு கோல் அளவு என்றும் கூறப்பட்டன. திரைச் சீலைகள் ஒரு முக எழினி, எதிர்முக எழினி, கரந்துவரல் எழினி என்று மூன்று வகை அமைக்கப்பட்டன. வழிகள் இரண்டு வைக்கப்பட்டு இருந்தன. மேடை மீது வருணப் பூதர் சித்திரங்கள் மாட்டி இருந்தனர். இந்த இசைக் கலைஞர்கள் அத்தெய்வங்களை வழிபட்டே நிகழ்ச்சிகளைத் தொடங்கினர். அதன் விளக்குகள் தூண்களின் நிழல்கள் தடுக்காதவாறு தக்க வகையில் அமைக்கப்பட்டன. தலைக்கோல் அதனை மேடையில் நிலைக்கோலாக வைத்துச் சிறப்புச் செய்தனர்.
ஆடல் நிகழ்ச்சி
மாதவி வலக் கால் எடுத்து வைத்து மிதித்து மேடை மீது ஏறி வலப் பக்கம் சார்ந்து நின்றாள். துதிபாடும் தோரிய மகளிர் இடப் பக்கம் ஏறி நின்றனர். நிகழ்ச்சிகள் தொடங்கின.
முதற்கண் தெய்வப் பாடல்கள் இரண்டு அத் தோரிய மகளிர் பாடினர். அவற்றிற்குப் பக்க இசையாகக் கருவி இசையாளர் தொடர்ந்து இசைத்தனர். அவர்கள் பாடி முடித்த பிறகு மாதவி ஆடியும், பாடியும் தன் கலைத் திறத்தை அவையோர் அறியச் செய்தாள். நாடக நூல் காட்டிய இலக்கணம் பிழையாது பல்வகை ஆடல்களையும் கூத்து வகைகளையும் ஆடிக் காட்டினாள்.
அரசன் பாராட்டு
அரசனின் பாராட்டை அவள் பெற்றாள். அதற்கு அடையாளமாகப் பச்சிலை மாலையைப் பரிசாகத் தந்தான். சிறப்புத் தொகையாக ஆயிரத்து எட்டுக்கழஞ்சுப் பொன் தந்து சிறப்பித்தான். தலைக்கோல் பட்டத்தையும் அவளுக்கு அரசன் தந்து பாராட்டினான்.
அவள் தலை அரங்கு ஏறினாள்; அரசனால் பாராட்டப் பெற்றாள்; 'ஆடற் செல்வி' என்று அங்கீகரிக்கப்பட்டாள்.
மாலை ஏற்றல்
கணிகையர் குலத்தில் பிறந்தவள் ஆயினும் ஒருவனோடு வாழ அவள் விரும்பினாள். கண்ணியம் மிக்க வாழ்வில் அவள் கருத்துச் செலுத்தினாள்; தக்கவனைத் தேடித் தரச் சித்திராபதி விரும்பினாள். பச்சிலை மாலைக்கு அரசன் நிச்சயித்த அந்தத் தொகையைக் கொடுத்து அம்மாலையை வாங்குவார்க்கு இவள் உரியவள் என்று அறிவிக்கக் கூனி ஒருத்தியை நகர நம்பியர் திரிதரு மன்றத்துக்கு அனுப்பி வைத்தாள்.
கோவலன் அம்மாலையை ஆவலுடன் வாங்கியவனாய்க் கூனி முன் செல்ல அவளைத் தொடர்ந்து மாதவியின் இல்லத்தை அடைந்தான். அவள் அணைப்பிலே அகில உலகத்தையும் மறந்தான்; விடுதல் அறியா விருப்பினன் ஆயினான். அவளைத் தொடுதலில் கண்ட இன்பம் அவனை ஈர்த்துப் பிடித்தது. வடு நீங்கிய சிறப்பினை உடைய தன் மனைவியையும், வீட்டையும் விடுதல் செய்தான்; மறந்தான்.
மாதவி இவ்வாறு நாட்டியக் கலையை நிலைபெறச் செய்தாள். அவள் கலை நிலைபெற்றது. அரங்கு ஏறி அவள் புகழ் மிக்கவள் ஆயினாள்.