சிலம்பின் கதை/இளங்கோவடிகள் - ஒரு மதிப்பீடு

6. இளங்கோவடிகள் - ஒரு மதிப்பீடு
“சிந்தை செல்லாச் சேண்நெடுந்துரத்து
அந்தமில் இன்பத்து அரசாள் வேந்து”

என்று பெருமிதத்தோடு இளங்கோவடிகள் தம்மைப் புலப்படுத்திக் கொள்கிறார். இவர் ஒரு துறவி, கலைஞர், கவிஞர் அறிஞர்; புலவர்; இவற்றோடு அறப்பிரச்சாரகரும் ஆவார்.

“மூன்று நாடுகளுக்கும் உரிய கதை, அதைச் சொல் வதற்கு அவர்க்குத்தான் தகுதி உள்ளது” என்று சாத்தனார் கூறுகின்றார். அரசு பற்றிய செய்திகள் இக்காவியத்தில் பெரும்பங்கு இடம் பெறுகின்றன. அவற்றை அறிந்தவர் ஒரு பேரரசராக இருக்க வேண்டும். அவர்களைப் பாரபட்ச் மில்லாமல் விமரிசிக்கும் துணிவு தேவைப்படுகிறது. அந்தத் தனித்தன்மை துறவு உள்ளம் இவரிடம் காணப்படுகிறது.

செங்குட்டுவன் வரம்பு மீறிச் செயல்படுகின்றான். தோற்றவர்களைச் சிறைப்படுத்திக் கல் சுமக்க வைக்கிறான். அவர்களைத் தமிழகத்தின் மற்றைய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறான். விளம்பரப் பிரியனாகச் செயல்படுகிறான். அவன் செய்வது தவறு என்று துணிந்து காட்டும் திறனைக் காண முடிகிறது. மாடலனைக் கொண்டு இக்கருத்தைப் பேச வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

அவர் ஒரு துறவி, கவுந்தியடிகள் என்ற பாத்திரத்தில் 'துறவு' நிலையை நன்கு காட்டுகிறார். துறவிகளும் தவறும் இடமும் உண்டு; இதை வள்ளுவர் காட்டி இருக்கின்றார்.

“குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது”

என்பர்.

பரத்தனும் பரத்தையும் தரத்தை மீறிப் பேசியபோது, “நரியாகுக” என்று கவுந்தி அடிகள் சபித்து விடுகிறார்.

“நெறியில் நீங்கியோர் நீர் அல கூறினும்
அறியாமை என்று அறிதல் வேண்டும்”

என்று அவருக்கு அறிவு கூறும் நிலை ஏற்படுகிறது.

கோவலன் கண்ணகியோடு அருங்கான் அடைந்து தனித்துயர் உழல்வதை எடுத்துக் கூறுகிறார். அப்பொழுது அவனுக்கு ஆறுதல் கூறுகிறார் கவுந்தி அடிகள்.

துறவு வாழ்க்கையின் உயர்வை எடுத்துக் கூறி அதுவே உயர்ந்தது என்று நியாயங்கள் கூறக் காண்கிறோம். மனை வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது; துறவு வாழ்க்கை நிலைத்த இன்பம் தருவது என்று வற்புறுத்திக் கூறுகிறார்; துறவின் உயர்வைக் கூறுவதற்கு அவனுக்கு விடை கூறுவதை ஒரு வாய்ப்பாகக் கொள்வதைப் பார்க்க முடிகிறது.

தமிழ் கற்ற புலவர் மட்டும் அல்லர் இசை அறிந்த அறிஞரும் ஆவார். இவர் இசை, நாட்டியம் இவற்றின் நுட்பங்கள் நன்கு அறிந்தவராக விளங்குவதைக் காண முடிகிறது. அரங்கேற்று காதை அது மாதவியின் அரங்கு ஏற்றம் மட்டும் கூறவில்லை. இசைக் கலையின் நுட்பங் களை விவரிக்கும் இசைநூல் என்பதைக் காட்டி விடுகிறது. நாட்டிய ஆசான், குழலோன், யாழோன், தமிழ்க் கவிஞன், தண்ணுமையோன் இவர்கள் செயல்களையும், புலமை யையும், திறனையும் விளக்கும் வகையில் அவர் நுண்மாண் கலை அறிவை நன்கு வெளிப்படுத்தித் தாம் ஒரு கலைஞர்; கலை ரசிகர் என்பதைக் காட்டி விடுகிறார். பாணர்கள் கூத்துகள் ஆடவும், பாடவும் வரும் இடங்களில் அக்கலை நுட்பங்களை எல்லாம் விடாமல் கூறுவதைக் காண முடிகிறது. இசைப்புலமை அவர் பெருஞ் சிறப்பு. அதுவே காவியத்தை உயர்த்திக் காட்டுகிறது. காவியத்தின் பெருமைக்கு இது துணை செய்கிறது.

அவர் கவிஞர் என்பது அவர் எடுத்தாளும் உவமைகள், அணிநலன்களின் தனித்தன்மை காட்டு கின்றன. மரபுகளைக் கூறினாலும் அவற்றைக் கற்பனை நயத்தோடு கூறுவது அவர் தனித்தன்மை ஆகிறது; கோவலன் கண்ணகியைப் புகழும் பாராட்டுரை இதற்குத் தக்க சான்றாக அமைகிறது. தற்குறிப்பேற்ற அணி தக்க இடத்தில் ஆளுகிறார். எதையும் முரண் நயம் தோன்றக் கூறுவதையும் காண முடிகிறது. சொல்லாட்சிகள் மறக்க முடியாதவை, 'மண் தேய்த்த புகழினான்' 'பண் தேய்த்த மொழியினார்' போன்ற ஆட்சிகள் கவர்ச்சி மிக்கவையாக உள்ளன.

அறிஞர் என்று யாரைக் கூறுவது? அது புலமை யையும் கடந்த ஒன்று; எல்லாம் அறிந்தவரைத்தான் அறிஞர் என்று கூறமுடியும். நாடுகளை நன்கு அறிந்தவர்; காடுகளைக் கண்டவர்; செடி, கொடிகள், பூக்கள், நிலத்தின் இயல்பு, காலத்தின் பாகுபாடுகள், மக்கள் வாழ்வியல், களவுக்கலை, அணிகலன்கள் பற்றிய முழு அறிவு, அங்காடிகள், வாணிகம், சிற்பம் எல்லாம் அறிந்தவராக அவர் காணப்படுவதைப் பார்க்கமுடிகிறது. எல்லாத் துறைகளையும் நன்கு அறிந்து கூறுபவராக விளங்குகிறார்; மாதவி கால் முதல் தலை வரை அணியும் அணிகலன் களைக் கூறுவது வியப்பைத் தருகிறது. மதுரை அங்காடித் தெருவில் வைரக் கற்களின் குறைகள், சிறப்புகள், தரங்கள் இவற்றைக் காட்டுவது அவர் பேரறிவைக் காட்டுகிறது. அவருக்குத் தெரியாத துறையே இல்லை என்று கூற முடியும். எல்லாத் துறைகளைப் பற்றிய செய்திகள் இடம் பெறுவதால் காவியம் செறிவுமிக்கதாக விளங்குகிறது. நிறைவு உடையதாகவும் அமைந்துள்ளது.

அவர் தமிழ்ப் புலமை அவர் சொற்களை எடுத்தாள்வதில் விளங்குகிறது. ஒரு செய்தியைக் கூற எவ்வளவு சொற்கள் தேவையோ அவ்வளவும் கூறுவதில் அவர் புலமை காணப்படுகிறது.

நயம் மிக்க தொடர்கள் ஆங்காங்கே எடுத்தாளப் படுகின்றன. மாதவி எழுதிய காதற் கடிதம் அப்புலமைக்குத் தக்க சான்று ஆகும்.

“பவளவாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள்நகை கோவலன் இழப்ப"

என்ற தொடர், அதில் அவர் எடுத்தாளும் சொற்கள் அழகு ஊட்டுவன ஆகும்.

“மண் தேய்த்த புகழினான், பண் தேய்த்த மொழியினார் இங்குச் சொற்கள் சிறப்பாக ஆளப் பட்டுள்ளன.

கடுமையை உணர்த்தக் கண்ணகி வாயிற் காவல னிடம் உரைக்கும் சொற்கள் அவர் புலமைக்குத் தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

“அறிவு அறை போகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!

என்ற தொடர் வெறுப்பில் வந்த வெகுளிச் சொற்கள். அவை றகர எழுத்துத் தொடர்ந்து பெற்று ஒசை நயம் உண்டாக்குவதைக் காண முடிகிறது.

எந்தப் படைப்பும் செய்திகளால் மட்டும் நிறைவு பெறுவதில்லை. அது உணர்த்தும் அறவுரைகளைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது: அக்காவியம் நிலைபேறு பெறுகிறது.

கண்ணகி காவியம் என்று இதற்குப் பெயர் வைத்திருக்கலாம். அது ஒரு கருத்தை மட்டும் கூறியதாக முடியும். இதில் மூன்று கருத்துகள் இடம் பெறுகின்றன. பத்தினியை உயர்ந்தோர் புகழ்வது என்பது ஒன்று மட்டும் தான் காவியச் செய்தி ஏனைய இரண்டும் அறவுரைகள் கூறும் பகுதிகள் என்று கூறலாம்.

'ஆட்சி' அது வழி தவறினால் நீதி கெட்டால், செங்கோன்மை கெட்டால் நாடு சீரழியும் என்பது அவர் உணர்த்தும் அடிப்படையான கருத்து. நாட்டு அரசியல் ஒட்டித்தான் மக்கள் நல்வாழ்வு அமைகிறது. பாண்டிய நாட்டுச் சீர்குலைவு. ஆட்சியில் ஏற்பட்ட தவறு ஒன்றினால் என்பது வற்புறுத்தப்படுகிறது. மக்கள் கொதித்து எழுவார்கள், ஆட்சியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது அவர் அறிவுரை.

மற்றொன்று ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது. இது காவியச் செய்தியே அன்று கவிஞர் சொல்ல வந்த செய்தி. இங்கேதான் கவிஞர் தம்மைக் காட்டிக் கொள்கிறார். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்தது நடைமுறைச் செய்தி, அதற்குக் கூட விதி தான் காரணம் என்கிறார். வீட்டை விட்டு வெளியேறியது; பொற்கொல்லன் கோவலனைச் சந்தித்துக் கொலை உண்டது எல்லாம் ஊழ்வினையின் செயல்கள் என்று வற்புறுத்துகிறார். இந்திய நூல்கள் பெரும்பாலும் சமய அடிப்படையில் தோன்றியவையேயாம். சமயக் கோட்பாடுகள் இல்லாமல் எந்த நூலும் இயங்குவது இல்லை.

இளங்கோவடிகள் அருக சமயத்தவர் என்பதை இந்த அறப்பிரச்சாரத்தால் காட்டி விடுகிறார்.

கவுந்தி அடிகளைக் கொண்டு சமணக் கோட்பாடு களை ஆங்காங்குக் கூறக் காண்கிறோம். மாங்காட்டு மறையவனிடம் பேசும் பேச்சுரைகள் சமயச் சார்பு கொண்டவை. சமண சமயக் கோட்பாடுகள் இந்நூலில் தலைமை பெறுகின்றன.

எனினும் மக்கள் கொள்ளும் சமய நம்பிக்கைகளுக்கு மதிப்புத் தருவதைக் காண முடிகிறது. வேட்டுவ வரியில் அவர்கள் கொற்றவையை வழிபடுகின்றனர். ஆயர் சேரியில் குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். கண்ணனைப் பற்றிப் பரவிப் பாடுகின்றனர். அங்குக் கண்ணனுக்கு மதிப்புத் தருகின்றனர்.

குன்றக் குறவர்கள் வேலனைப் புகழ்கின்றனர். தெய்வக் கதைகளை மாதவி ஆடலில் இடம் பெற வைக்கின்றார்.

மாங்காட்டு மறையோன் திருமால் தலங்கள் ஆகிய வேங்கடத்தையும் திருவரங்கத்தையும் காணச் செல்கிறான். “உன் தெய்வங்களை வழிபட நீ போ; நாங்கள் எம் வழிப் படர்வோம்” என்று கவுந்தி அடிகள் கூறுகின்றார்.

இதுவே இளங்கோவடிகள் சமய நோக்கு எனத் தெரிகிறது. எந்தச் சமயமும் அவரவர் விருப்பப்படி மேற்கொள்ளும் உரிமையை மதிக்கிறார். தம் கொள்கை யையும் வற்புறுத்திக் கூறுகிறார்.

செங்குட்டுவன் திருமாலையும், சிவனையும் வழிபடுவதைக் கூறுகின்றார். மாசாத்துவான் புத்த மதத்தைச் சார்கிறான்; மாதவி பெளத்த மதத் துறவியாகி றாள். சமயப் பொது நோக்கு உடையவர் என்பதைக் காட்டிக் கொள்கிறார்; எனினும் காவியத்தின் நோக்கம் வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கருத்தை நூல் முழுதும் அமைப்பது. இது அவர் கோட்பாடு; ஆசிரியர் இதில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்று கூறலாம்.

இறுதியில் சமய எல்லைகளைக் கடந்து மாந்தர் போற்றத்தக்க அறங்களைத் தொகுத்துக் கூறுவதைக் காண்கிறோம். சமய எல்லையைக் கடந்து பொது அறங்களைக் கூறக் காண்கிறோம். இவ்வகையில் இவர் வள்ளுவரைப் பின்பற்றிக் கூறுவதைக் காண முடிகிறது.

அவர் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் சமயச் சார்பு அடிப்படையாகிறது. அவற்றில் நாம் கருத்து வேறுபாடு கொள்ள இடம் உண்டு; பிறப்பு, மறுபிறப்பு இந்த நம்பிக்கைகளை எல்லாம் அவர் நூல் வற்புறுத்துகிறது. கீதையைப் போல் இதுவும் கருமம், என்ற கோட்பாட்டை மிகுதியாக வற்புறுத்துகிறது. அது அவர் தனிப் போக்கு; இந்த நாட்டின் பின்னணி இதில் எந்தச் சமயமும் விதி விலக்கு அன்று.

மற்றொன்று சாதிப் பாகுபாடுகளுக்கு இந்நூல் மிகுதியும் இடம் தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கோவலன் கண்ணகியை விளிக்கும் போதே, “பெருங்குடி வணிகன் பெருமட மகளே” என்று கூறுகிறான். அதில் பெருமையும் கொள்கிறான்.

ஊரை விட்டுப் பூதங்கள் வெளியேறுகின்றன. அவற்றையும் சாதி அடிப்படையில் பிரித்துக் காட்டக் காண்கிறோம். கண்ணகி, கோவலன் இவர்கள் வணிகர் மக்கள் என்பதே கதை; உழவர்கள், ஆயர்கள், குறவர்கள், பரதவர், வேடுவர் என்ற நிலத்துக் கேற்பச் சாதிகளைக் குறிப்பிடுகின்றனர். இவை அக்காலத்து நிலை; உள்ளதை உள்ளபடி கூறியிருக்கிறார் என்றே கொள்ள வேண்டும். அவர் சாதிப் பிரிவுகளை வற்புறுத்தவில்லை. அது இந்த நாட்டின் சமூக அமைப்பு எனினும் கதைகளில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மேம்படுத்திக் கூறி இருப்பது இதன் தனித்தன்மை ஆகும். மாங்காட்டு மறையவன், கோசிகன், மாடலன், தேவந்தி, உள்ளே வரும் கதைகள், பராசரன், வார்த்திகன், கீரந்தை எல்லாம் ஒரு இனத்தைச் சார்ந்தவர்கள். வடநாடு செல்லும் போது முனிவர்கள் சேரனைச் சந்திக்கின்றனர். அங்கேயும் அங்குள்ள அந்தணர்களைப் போற்றுக என்று அறிவுரை கூறப்படுகிறது. இறுதியில் மாடல மறையோன் உரையின்படி வேள்வியில் கதையை முடிப்பது சமயச் சார்பின் தாக்கம். அக்காலப் போக்கும் என்று கூற வேண்டியுள்ளது. மாடலனுக்குத் துலாபாரம் புகுந்து செங்குட்டுவன் பொன்தானம் தருகிறான்.

இளங்கோவடிகள் சாதனை என்று கூறக் கூடியது தமிழ் உணர்வுக்குத் தலைமை தந்தது; மூன்று நாடுகளை இணைத்துக் காட்டியது. தமிழ் மன்னரை இகழ்ந்தவர்களை எதிர்த்து அவர்களை அடிமைப்படுத்தியது. தமிழகத்தை அவர் நேசித்து இருக்கிறார். வடவேங்கடம், தென்குமரி இடைப்பட்ட தமிழகம், அதில் அவர் கொண்டிருந்த காதல், காவிரி, வைகை, பொருநை இவற்றில் வைத்திருந்த மதிப்பு, நாட்டு வாழ்க்கையை நூல் முழுதும் புகுத்தும் திறன் அனைத்தும் அவரை ஒரு தேசியக் கவிஞர், நாட்டுப் பற்றுடைய கவிஞர் என்று உயர்த்திக் காட்டுகின்றன. மொழிப்பற்று, நாட்டுப்பற்று இவற்றை ஊட்டுவதில் இக்காவியம் தலை சிறந்து விளங்குகிறது.