சிலம்பின் கதை/ஊர் சூழ்வரி

ஊரை எரிக்கும்” என்று ஒரு தெய்வக்குரல் எதிர் ஒலித்தது. அது அவளுக்கு ஊக்கத்தைத் தந்தது; செயல்படுத்தியது.


19. ஊரை ஒருங்குதிரட்டுதல்
(ஊர் சூழ்வரி)

அந்தக் குரல் சூரியன் தந்த விடை எனக் கொண்டாள். அவ்வளவுதான் அங்கு அவள் நிற்கவில்லை. ஆயர் சேரியை விட்டு நீங்கி ஊருக்குள் புகுந்தாள். கையில் மற்றைய சிலம்பை ஏந்தினாள் “முறை தவறிய அரசன் ஊரில் வாழ்வீர் நான் நவில்கிறேன்; கேட்பீராக” என்று குரல் கொடுத்தாள்.

“யாரும் படாத துயரம் உற்றேன்; இத்தகைய துயரத்துக்குக் காரணமான செய்தியைக் கூறுகின்றேன். கேளுங்கள்; என் கணவன் கள்வன் அல்லன் என் சிலம்பைக் கொள்ளவே இக் கொலை செய்தனர்; அதுதான் நடந்தது”

“மற்றும் அந்த உண்மையை முதலில் என் கணவன் வாய் சொல்லக் கேட்பேன்; அவனைச் சென்று பார்ப்பதே தக்கது; அந்தத் தீதுஅற்ற நல்லுரையைக் கேட்பேன்; இது அடுத்த செய்தி”.

“அவனைச் சந்தித்துப் பழியற்றவன் என்பதை அறிவேன்; அவ்வாறு அறியாவிட்டால் நான் உங்களை வீணாக அலைக்கழித்தேன் என்று கருதுங்கள்; இவள் பொய்யள் என்று சொல்லி என்னை இகழுங்கள். இது உறுதி” என்று கூறி அவலத்தை அறிவித்தாள்.

அது ஊரவர் நெஞ்சைத் தொட்டது; மதுரைமாநகர் மக்கள் கலக்கம் அடைந்தனர். “இவள் துன்பத்தை யார் எப்படித் தீர்க்க முடியும்? களையாத துன்பம் இக்காரிகைக்கு ஏற்பட்டது; வளையாத செங்கோல் வளைந்து விட்டது; தென்னவன் ஆட்சி சீர்குலைந்து விட்டது; இது என்ன அநீதி மண்குளிரச் செய்யும் அவன் வெண்குடை இன்று வெம்மை உற்றது ஏன்? அனல் கக்கியது என்?”

“சிலம்பு ஒன்று ஏந்தியவள் அவள் மானிடப்பெண் அல்லள் புதிய தெய்வம்; இவள் தெய்வம் உற்றவள் போல் துடித்துப் பேசுகின்றாள்” என்று பேசத் தொடங்கினர். மன்னன் ஆட்சி வீழ்ச்சியுற்றதற்கு வருந்தினர்; அஞ்சினர்; பெண் ஒருத்தி விடும் கண்ணிர் அவர்களைக் கலங்க வைத்தது.

ஊரவர் ஒன்று திரண்டனர்; அவர்கள் அவளுக்கு அவள் கணவன் விழுந்து கிடக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டினர். பொற்கொடி போன்ற அந்தப் பூவையாள் அவனைக் கண்டாள்; அவன் அவளைக் காணவில்லை. கதிரவனும் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டான். மாலைநேரம், பூங்கொடியாள் பூசல் இட்டாள். அவள் தனித்த குரல் கனத்து ஒலித்தது. ஊர் எங்கும் அந்த அவலக் குரல் எதிர் ஒலித்தது.

காலையில் அவன் முடியில் அணிந்திருந்த பூவினை அவள் தன் கூந்தலில் சூடிக் கொண்டாள்; மாலையில் அப்பூவினை இழக்கும் அவலநிலைக்கு ஆளாயினாள். காலையில் அவன் அவளைத் தழுவினான்; மாலையில் அவன் குருதிபடிந்த மார்பைத் தழுவினாள். மாலை இருந்த மார்பு அது; இரத்தம் படிந்து மாலையாகக் காட்சி அளித்தது. தன்னை அவன் காணாத நிலை; அது அவளுக்குக் கடுந்துயரத்தைத் தந்தது.

“மன்னவன் தவறு இழைத்தான்; பொன்னுறு நறுமேனி துகள் படிந்து மண்ணில் கிடக்கிறது; என் துயரத்தை யார் களைவது? இதற்குக் காரணம் யாது? விதி என்று கூறக்கூட ஆள் இல்லை. ஆறுதல் கூறக் கூட ஆள் இல்லாமல் இந்தத் தனிமையில் உழல்கின்றேன்!”

“இந்த அநீதியை எடுத்துக் கூற வேண்டிய அறம் அழிந்து விட்டதா? மக்கள் மயங்கி விட்டனரா? கொழுநர் குறை தாங்கும் பெண்கள் என் அழுகையைக் கேட்டு ஆறுதல் தரமாட்டாரா? திக்கற்றவரை அடுத்து ஆதரிக்கும் காப்புமிக்க சான்றோர் இதைச் செவியில் கேட்டுச் செம்மை யுறச் செயல்பட மாட்டார்களா? ஈன்ற குழவியின் அழு குரல் கேட்டால் எடுத்து வளர்க்கும் சால்பு உடையவர்கள் இன்று அலறும் குரல் கேட்டு அமைதியுற்றது ஏன்? தெய்வங்கள் கோயில்களில் நிறுவி இருக்கிறார்கள். அவர்கள் கல்லாகி விட்டாாகளா? என் சொல் கேட்டு நீதி வழங்காமல் இருப்பது ஏன்? தெய்வம் நின்று கொல்லும் என்பார்களே! ஏன் எந்தச் சொல்லும் சொல்லாமல் மவுனம் சாதிக்கின்றது? அநீதியைக் கேட்க இந்த நகரில் ஆள் இல்லாமல் போனது ஏன்?” என்று அலறித் துடித்து அழுது முறையிட்டாள்.

மண்மீது கிடந்த மணாளன் அவன் பொன்துஞ்சம் மார்புமீது விழுந்து புரண்டு அழுதாள்; அவனைத் தழுவிக் கொண்டாள். அவன் உயிர் பெற்று எழுந்தான். “கன்றியது உன் முகம்” என்று கனிவுடன் பேசினான். அவள் கண்ணிரைத் தன் கையால் துடைத்தான்.

அவள் தன் கணவன் திருவடிகள் இரண்டையும் தன் கையால் பற்றிக் கொண்டு வணங்கினாள். அவன் உயிர் உடலைவிட்டு நீங்கியது; உயிர் வடிவில் வான் நோக்கி எழுந்தான்; வானவர் எதிர்கொண்டு அழைத்தனர். “நீ இருக்க” என்று அவளுக்கு இறுதிச் செய்தியாகச் சொல்லி அவன் மறைந்து நீங்கினான்.

அவனைக் கண்டது; தன் அவலம் துடைக்க அவன் தன்னைத் தொட்டது; இருக்க என்று அவன் இயம்பியது இவை எல்லாம் அவளுக்கு மாயச்செய்கைகளாக இருந்தன. “திடீர் என்று தோன்றி மறைந்துவிட்டான். மாயம் அல்ல என்றால் அதன் தன்மை யாது? தெய்வம்தான் வந்து என்னை மருட்டியதோ? அவனை எங்குச் சென்று அடைவது? இருக்க என்றான்; பொறுக்க என்னல் இயலாது; என் சினம் தணிந்தால் அன்றி அவனைப் போய்ச் சேரேன்”

“தீமை செய்த அரசனைத் திறம்கேட்பேன்; வழக்கு ஆடுவேன்; அவனை வழிக்குக் கொணர்வேன்; அழிப் பேன்; இந்நகரை ஒழிப்பேன்” என்று கூறி உறுதி கொண்டவளாய் அகன்றாள்.

எழுந்தவள் பழைய கனவினை நினைத்துப் பார்க்கிறாள். தீய கனவு அது இன்று பலித்து விட்டது; நின்றாள்; நிலை குலைந்தாள்; நெடுங்கண்நீர் சோரச் சற்று அயர்ந்தாள்; எண்ணிப்பார்த்தாள், கண்களில் பெருகிய நீரைத் துடைத்துக் கொண்டாள்; அவலத்தை அகற்றினாள். ஆவேசம் கொண்டவளாய் அரசன் கோயிலை அடைந் தாள்; அவன் வாயில் முன் சினத்துடன் நின்றாள்.