சிலம்பின் கதை/காடு காண் காதை

2. மதுரைக் காண்டம்

11. காடுகளைக் கடத்தல்
(காடுகாண் காதை)

மூன்று குடைகளை அடுக்கி வைத்தது போன்ற முக்குடைக் கீழ் அதன் குளிர் நிழலில் உறையும் தேவன் ஆகிய அருகன்; அவன் ஞாயிறு போன்ற ஒளி படைத்தவன்; அசோக மரத்து நிழலில் அமர்ந்தவன்; அவன் திருவடி வணங்கினர். பின்பு வழிபாடு முடித்து அவ்ஊரில் நிக்கந்தன் பள்ளி என்ற அறப்பள்ளியை அடைந்தனர். அங்கே சமணத் துறவிகள் சிலர் தங்கி இருந்தனர். ஆற்றிடைக் குறையாகிய திருவரங்கத்தில் சாரணர் பெரு மகன்பால் கேட்டு அறிந்த அறமொழிகளைக் கவுந்தி அடிகள் அவர்க்குச் செப்பினார். அத்துறவிகள் தங்கியிருந்த மடத்திலேயே அம்மூவரும் ஒர் இரவு தங்கினர்.

மறுநாள் காலையில் உறையூரைவிட்டுத் தென்திசை நோக்கிச் செல்லப் புறப்பட்டு வைகறை யாமத்தில் உறை யூர் எல்லையைக் கடந்து வழியில் ஒரு சோலையகத்துத் தங்கினர்.

மாங்காட்டு மறையவன்

அப்பொழுது பாண்டியன் புகழைப் பறை சாற்றி யவனாய் ஒரு மாமறையாளன் அவர்கள் முன் வந்து சேர்ந்தான். அவனை நோக்கி “நும் ஊர் யாது? இங்கு வருவதன் காரணம் என்ன?” என்று கோவலன் வினவினான்.

அவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தவன் என்பதை அவன் கூற்று நிறுவியது. பாண்டியர் தம் பண்டைப் பெருமைகளை அடுக்கிக் கூறினான். கடல் அலைகள் கரைகளில் மோத அவற்றில் கால் வைத்து அதனை அடக்கினான் ஒரு பாண்டியன்; அவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் எனப்பட்டான். அவன் அதனை வற்றச் செய்வதற்குத் தன் கைவேலைக் கடலில் எறிய அது பொறுக்காது கடல்கோள் எழுந்து பஃறுளி யாற்றையும் குமரிக் கோடு என்னும் மலையையும் அழித்துவிட்டது. எல்லை சுருங்கிய காரணத்தால் அவன் அதனைப் பெருக்க வடநாடு படையெடுத்துச் சென்று கங்கையையும், இமயத்தையும் தன் அடிப்படுத்தினான். இது ஒரு வரலாறு.

மற்றொரு பாண்டியன் இந்திரனால் பாராட்டப்பட்டான். அவன் தந்த பொன்னாரத்தைத் தன் கழுத்தில் பூண்டான். 'ஆரம் பூண்ட பாண்டியன்' என அவன் பாராட்டப் பெற்றான்.

மற்றொரு பாண்டியன் இந்திரனை எதிர்த்து அவன் தலைமுடியைத் தன் கைச் செண்டால் அடித்துச் சிதறச் செய்தான். அதனால் இந்திரன் வெகுண்டு எழுந்து எழில் மிக்க மேகங்களை மழை பொழியாமல் தடுத்தான்; அவற்றைச் சிறைப்பிடித்து இழுத்து வந்து நிறைமழை பொழியுமாறு பாண்டியன் கட்டளை இட்டான். ‘மேகத்தைக் கால் தளையிட்டுப் பணிவித்த பாண்டியன் இவன்’ என்று பாராட்டப்பட்டான், இச்செயலைச் செய்தவன் உக்கிரப் பெருவழுதி என்பான் ஆவான். இம் மூவரையும் வாழ்க என்று வாழ்த்துக் கூறியவனாய் அம்மறையவன் வந்தான். பாண்டியனின் புகழ் மொழிகளை அடுக்கிக் கூறிய பின் அவன் தன் பயணத்தைப் பற்றி ஒரு விரிவுரையையே நிகழ்த்தினான்.

“திருவரங்கத்தில் திருமால் துயிலும் வண்ணத்தையும், திருவேங்கடத்தில் அத்தெய்வம் நிற்கும் அழகினையும் காணப் புறப்பட்டேன். யான் குடமலை மாங்காட்டில் வசித்து வருபவன், தென்னவன் நாட்டின் தீது தீர் சிறப்பை நேரில் கண்டு வருகிறேன்; அதனால்தான் அவனை வாழ்த்திக் கொண்டு வருகிறேன்; இதுவே என் வருகை” என்று அவ் அந்தணன் உரைத்தான். தேசங்கள் பல கண்ட அவனிடம் கோவலன் நேசம் பாராட்டினான்.

“மாமறை முதல்வனே! மதுரைக்குச் செல்லும் நெறியாது? அதனைக் கூறுக” என்று கோவலன் கேட்க அவன் வழித்திறத்தைத் தன் நாவன்மை தோன்றக் கூறினான்.

மூன்று வழிகள்

“நீங்கள் இந்தக் கடும் வெய்யிலில் காரிகை இவளுடன் புறப்பட்டு வந்துளளீர் குறிஞ்சியும் முல்லையும் தம் நல்லியல்பு திரிந்து பாலை என்று இந்நிலப் பகுதிகள் வடிவம் கொண்டுள்ளன. இந்த நெடுவழியைக் கடந்து சென்றால் கொடும்பாளூர் என்னும் ஊரில் நெடுங்குளம் ஒன்று வரும்; அங்குச் சிவன் ஏந்தி நிற்கும் சூலத்தைப் போல அதன் கரையில் மூன்று வழிகள் கிளைக்கின்றன.

வலது புறம்

இதன் வலப் பக்கம் சென்றால் மராம், ஒமை, உழிஞ்சில், மூங்கில், காய்ந்து கிடக்கும் மரம் முதலியன உள்ள காடு உள்ளது. நீர் வேட்கையால் மான்கள் கூவி விளிக்கும் காட்டையும், எயினர் குடியிருப்பையும் கடந்தால் ஐவனம் என்னும் நெல்லும், கரும்பும், தினையும், வரகும், வெள்ளுப்பும், மஞ்சளும், கவலைக் கொடியும், வாழை, கமுகு, தெங்கு, மா, பலாவும் சூழ்ந்த தென்னவன் சிறுமலை தோன்றும். அம்மலையை வலமாகக் கொண்டு சென்றால் மதுரையம்பதியை அடையலாம்” என்றான். இடப் புறம்

“அவ்வழி செல்லாமல் இடப்பக்கம் சென்றால் வயல் களும் சோலைகளும் உடைய வழியைக் கடந்தால் திருமால் குன்றத்தை அடைவீர். அங்கே மயக்கம் கெடுக்கும் பில வழி ஒன்று உண்டு. இப் பில வழியில் சென்றால் புண்ணிய சரவணம், பவகாரணி இட்டசித்தி என்ற பெயர் பெற்ற மூன்று பொய்கைகளைக் காண முடியும்”.

“அவற்றுள் புண்ணிய சரவணம் ஆகிய பொய்கையில் நீராடினால் இந்திரன் எழுதிய ஐந்திரம் என்னும் இலக்கணத்தை அறிந்தவர் ஆவீர்”.

“பவகாரணி என்னும் பொய்கையில் நீராடினால் இந்தப் பிறவிக்குக் காரணமாக இருக்கும் பழம் பிறப்பைப் பற்றி அறிவீர்”.

“இட்டசித்தியில் நீராடினால் நீங்கள் கருதும் பொருள் அனைத்தும் பெறுவீர். எனவே இப்பிலத்துள் சென்று ஏதோனும் ஒன்றில் முழுக வேண்டும் என்று கருதினால் திருமால் குன்றத்தில் அங்கு விற்றிருக்கும் திருமாலை முதலில் வணங்குவீராக. அத்திருமாலைத் துதித்து விட்டு அம்மலையை மும்முறை வலம் வந்தால் அங்கே சிலம்பாற்றங் கரையில் மலர் பூத்தவேங்கை மரத்து நிழலில் ஒரு பெண் தெய்வம் வந்து தோன்றும். அத்தெய்வம் மூன்று வினாக்களைத் தொடுக்கும். இம்மைக்கு இன்பம் தருவது யாது? மறுமைக்கு இன்பம் தருவது யாது? இவ்விரண்டும் அல்லாமல் எப்பொழுதும் நிலைத்து நிற்கும் இன்பம் யாது? என்ற வினாக்களை எழுப்பும்; இவற்றிற்குத் தக்க விடை தந்தால் பிலத்துக்குள்ளே செல்லும் தகுதி உண்டு என்று அத்தெய்வம் உறுதி செய்யும். அவர்களுக்கு உள்ளே செல்ல வழி காட்டும்; அவள் அம்மலையில் நிலைத்து வாழ்பவள்; மலைச் செல்வி என்று அவளைக் கூறுவர்.

அவள் தகுதி உடையவர்க்கே கதவினைத் திறந்து விடுவாள். அந்நெடிய வழியே சென்றால் பல கதவுகள் இடையிடும். இறுதியில் ‘ஒட்டுக் கதவு’ ஒன்று தோன்றும். அதாவது இரண்டு கதவுகள் ஒட்டிய கதவு அது ஆகும். அதன் உள்ளே சென்றால் சித்திரம் போன்ற சீர்மை உடைய அழகி ஒருத்தி தோன்றுவாள். “அழிவு இல்லாத பேரின்பம் எது? என்பதற்கு விடை தந்தால் உதவுவேன்” என்று கூறுவாள். தக்கவிடை தராவிட்டாலும் அவர்களுக்கு எத்தகைய துன்பமும் விளைவிக்கமாட்டாள். நெடு வழிமட்டும் காட்டுவாள்; விடை தருவாரை அந்த மூன்று பொய்கைகளையும் காட்டி அங்கே அவர்களைக் கொண்டு விடுவாள். அவள் திரும்பிவிடுவாள். பஞ்சாட்சர மந்திரத்தையும், அஷ்டாட்சர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு விரும்பிய பொய்கையில் முழுகினால் விரும்பிய பேறுகள் கிடைக்கும். கண் கூடாகக் கண்ட அனுபவம் இது; நம்பிச் செல்லலாம்” என்றான்.

“இவற்றின் பயனைக் கருதாமலும் செல்லலாம்; திருமாலை நினைத்து வழிபட்டால் அவன் கருடக் கொடியுடைய தூண் தோன்றும். அதை வழிபட்டு இத்திருமால் திருஅருள் பெற்று அதன் பின் எளிதில் மதுரை அடையலாம்” என்றான். “இது பில வழி” என்று கூறி விளக்கினான்.

இடைப் பட்ட வழி

“அந்நெறி படர விருப்பம் இல்லை என்றால் இடையது செம்மையான நெறியாகும். சோலைகள் மிக்க ஊர்கள் இடையிட்டு வரும் காடுகள் பல கடந்தால் அரிய வழி ஒன்று அகப்படும். அங்கே வருத்தும் தெய்வம் ஒன்று குறுக்கிட்டுத் தடுக்கும். அச்சம் தராத விரும்பத்தக்க வடிவத்துடன் வந்து காட்சி தரும்; செல்வோரைத் தடுத்து நிறுத்தும். இது ஒரு இடையூறு, அவ்வளவுதான்; அதை மீறிச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடையலாம்; பின் நேரே மதுரை சென்று சேரலாம்” என்று மூன்று வழிகளைப் பற்றியும் விளக்கமாகக் கூறினான்.

இச்செய்திகள் அனைத்தும் கேட்டு அவற்றிற்கு மறுப்பு உரைத்தார் கவுந்தி அடிகள். “பிலம் புகுந்து நலம் பெறத் தேவை இல்லை; அங்கே பொய்கைகளில் முழுகிப் புண்ணியம் தேடத் தேவை இல்லை” என்று புகன்றார். “புண்ணிய தீர்த்தம் முழுகி ஐந்திரம் என்னும் நூலைப் பெறத் தேவை இல்லை. அருகன் அருளிய மெய்ந் நூல் தம்மிடம் உள்ளது” என்று அறிவித்தார். “பவகாரணியில் முழுகிப் பிறப்பு அறியத் தேவை இல்லை. சென்ற பிறப்பின் செய்திகள் எல்லாம் இந்தப் பிறப்பைக் கொண்டு அறிய முடியும்” என்றார். “இட்டசித்தி முழுகி விரும்பியதைப் பெறத் தேவை இல்லை; உண்மைவழி நின்று உயிர்களுக்கு உதவினால் உயர்வு அடைய முடியும்” என்று தெரிவித்தார்; அவ் அந்தணன் அறிவித்த அறிவுரைகளை மறுத்துக் கூறி அவன் கூறிய இடை வழியே செல்லத் தக்கது என்று தேர்ந்து எடுத்தார்.

மறையவனுக்குத் தம் கோட்பாடுகளை அறிவித்து அவனுக்கு விடை தந்து அனுப்பி விட்டுக் கோவலன் கண்ணகியுடன் அன்று அந்த ஊரில் தங்கினார். மறுநாள் மூவரும் புறப்பட்டுக் காட்டு வழியே தொடர்ந்து நடந்தனர்.

கவுந்தி அடிகளும் கண்ணகியும் அயர்ந்து மெய்வருந்தி ஒரு புறம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டனர். இந்த இடைவெளியில் வழியே ஒரு பக்க வழியில் திரும்பிக் குடிக்க நீர் கொணர ஒரு பொய்கைக் கரையைக் கோவலன் அடைந்தான். அதன் துறையில் நின்றபோது தெய்வம் ஒன்று அவனைச் சந்தித்தது; மாதவிபால் அவன் நேயம் கொண்டவன். அவன் விரும்பும் வண்ணம் வயந்த மாலை வடிவில் அவன் முன் சென்றது. கொடி நடுக்குற்றது போல் அவன் அடியில் விழுந்து ஆங்குக் கண்ணீர் உகுத்தாள். சோகக் கதையைச் சொகுசாகக் கூறினாள். “மாதவி எழுதிய வாசகம் தவறாக உன்னிடம் யான் திரித்து உணர்த்திவிட்டேன். அதனால்தான் நீ கொடுமை செய்து விட்டாய் என்று கூறிக் கடிந்து என்னை மாதவி அனுப்பிவிட்டாள்; அவளும் கணிகை வாழ்க்கையைக் கைவிட்டு என்னையும் வெளியேற்றி விட்டாள். அதனால் மதுரை செல்லும் வணிகக் கூட்டத்தோடு வழி அறிந்து உன்னை வந்து அடைந்தேன்” என்று கூறி நீலிக் கண்ணீர் வடித்தாள்.

அவள் கூற்றை அவன் நம்பவில்லை; மாங்காட்டு மறையவன், “மயக்கும் தெய்வம் வழியில் தடுக்கும்” என்று கூறியது நினைவுக்கு வந்தது; உடனே பாய் கலைப்பாவை மந்திரம் சொல்லி அவளை அச்சுறுத்தினான்.

அவன் தெய்வ மந்திரத்துக்கு அஞ்சி அவள் உய்யும் வழி நாடி, “வனசாரணி யான்; உன்னை மயக்கம் செய்தேன்; இச்செய்தியைப் புனமயில் சாயலாள் கண்ணகிக்கும், புண்ணிய முதல்வியாகிய கவுந்தி அடிகட்கும் உரையாமல் ஏகுக” என்று வேண்டிக் கொண்டாள். அத்தெய்வம் அவனை விட்டு அகன்றது.

அவன் தாமரை இலையில் தண்ணீர் ஏந்தி அயர்வுறு மடந்தை கண்ணகியின் அருந்துயர் தீர்த்தான்.

அந்தக் கடும் வெய்யிலில் பகற்பொழுது செல்வது அரிது என்று கருதி அங்குப் பல்வகை மரங்கள் செறிந்த ஐயை கோட்டத்தில் ஒரு புறம் அடைந்தனர். வழிப்பறிக் கொள்ளை செய்து வளம் கொழித்து வாழும் வேடுவர்கள் அங்கு அக் கொற்றவை கோயிலுக்கு வழிபாடு செய்தனர்; பலிக் கொடையும் ஈந்தனர்.