சிலம்பின் கதை/வேடுவ வரி
(வேட்டுவ வரி)
கடுமையான வெய்யிலில் நடந்ததால் கண்ணகி மிக்க துன்பத்தை அடைந்தாள்; மூச்சு வாங்க உயிர்த்தாள்; ஐயை கோட்டத்து ஒரு பக்கம் நடந்த களைப்புத் தீர மூவரும் இருந்தனர்.
அக்கோயிலின் மறுபக்கத்தில் சாலினி என்னும் தேவராட்டி ஒருத்தி தெய்வமுற்று ஊர் நடுவே இருந்த மன்றத்தில் அடிபெயர்த்து ஆடினாள் “மக்கள் வாழும் நகரங்களில் பசுக் கூட்டங்கள் மிக்கு உள்ளன; வில்லேந்தும் வேடுவர் மன்றுகள் வெறிச்சிட்டுக் கிடக்கின்றன. இவர்கள் அறக்குடியினர் போல் அடங்கிக் கிடக்கின்றனர். கொற்றவைக்கு உற்ற பலி தராவிட்டால் அவர்கள் வெற்றிபெற இயலாது; கள் பெற்று மகிழும் வாழ்க்கை வேண்டும் என்றால் கொற்றவைக்குப் பலி இட்டு மேற் செல்லவும்” என்று அறிவித்தாள். அவர்களைச் செயல்படத் துண்டினாள்.
வீர மரபினராகிய அவ்வேடுவர் பலி இட்டுத் தம் தலையை எண்ணுவரேயல்லாமல் நோயில் பட்டு இறத்தலை அவர்கள் விரும்பியது இல்லை. அத்தகைய வீர மரபினர் தம் குடிப் பிறந்த குமரிப் பெண் ஒருத்தியைக் கோலம் செய்து கொற்றவை ஆக்கினர். கொற்றவை வேடம் பூட்டினர். அவள் சுருண்ட கூந்தலை அரவின் குட்டி போலக் காட்சி பெறுமாறு கட்டி முடித்தனர்; தோட்டத்துள் மேய்ந்த பன்றியைக் கொன்று அதன் வளைந்த கொம்பினைப் பிடுங்கிப் பிறைச்சந்திரன் எனச் சூட்டினர்; புலிப்பல்லைக் கோத்துத் தாலி என அணிவித்தனர். புலித்தோலை மேகலையாக உடுத்திக் கரிய நிறத்து வில் ஒன்றினை அவள் கையில் தந்து கலைமான் மீது அமர்வித்தனர். பறவையும், கிளியும், காட்டுக் கோழியும், நீல நிறமயிலும், பந்தும், கழங்கும் தந்து ஏத்தித் துதித்தனர். சுண்ணப் பொடியும், குளிர் சந்தனமும், அவரையும், துவரையும், எள்ளுருண்டையும், கொழுப்புக் கலந்த சோறும், பூவும், புகையும் மற்றும் மணப் பொருள்களும் ஏவல் செய்யும் வேட்டுவப் பெண்கள் ஏந்தி வரச் செய்தனர். வழிப்பறி செய்யுங்கால் கொட்டும் பறையும், சூறையாடும் போது ஊதி ஒலிக்கும் சின்னமும், கொம்பும், குழலும், பெருமை மிக்க மணியும் அனைத்தும் இயைய ஒலிக்கச் செய்தனர். அக்கொற்றவை வடிவில் குமரிப் பெண்ணை முன்னால் நிறுத்தி வைத்து பலிப் பீடிகை முன் நின்று மானை ஊர்தியாகக் கொண்ட கோயில் தெய்வமாகிய கொற்றவையை வணங்கிக் கைதொழுது ஏத்தினர்.
அப்பொழுது காலடி நோவக் கணவனோடு இருந்த மணம் மிக்க கூந்தலை உடைய கண்ணகியை நோக்கிச் சாலினியாகிய முதுமகள் தொடர்ந்து தெய்வம் உற்றுப் பாராட்டிப் பேசினாள். “இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி, தென் தமிழ்ப் பாவை பெற்ற தவச் செல்வி: உலகுக்கே ஒளிதரும் ஒப்பற்ற மணிவிளக்கு ஆவாள்” என்று தெய்வமுற்று உரைத்தாள்.
“இம்மூதாட்டி பேதைமை பேசினாள்” என்று கூறியவளாய்க் கணவனின் முதுகுபுறத்தில் ஒதுங்கி நின்றாள். அரும்பிய முரலில் புதுமையைத் தந்தாள். குமரிக் கோலத்தில் இருந்த கொற்றவையை அவ்வேடுவர்கள் பல பெயர்களைச் சொல்லித் துதித்தனர். பிறை சூடிய பெருமாட்டி என்றும், நெற்றிக் கண் படைத்த தெய்வம் என்றும், பவளவாயினை உடையவள் என்றும், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள் என்றும், சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள் என்றும், காலில் சிலம்பும் வீரக்கழலும் அணிந்தவள் என்றும், கொற்றம் தரும் வில்லை ஏந்தியவள் என்றும், மகிடாசுரனை வென்று அவனை அடக்கி அவன் முடிமீது அடிவைத்து ஆடியவள் என்றும், அவ்வாட்டத்தில் அவன் தலைவேறு உடல் வேறு என இருவகைக் கூறுபட்டது என்றும், இன்னும் அமரி குமரி எனப் பல்வேறு பெயர்களில் அழைத்தனர். அந்தக் குமரிப்பெண் கொற்றவை கோலத்தில் இருந்து அவர்களுக்கு அருள் செய்தனள். இனி வரிப் பாடல்கள் பாடலாம் என்று அவள் ஆணையிட்டனள்; அதனைத் தொடர்ந்து அவர்கள் பாடத் தொடங்கினர்.
ஐயை கோயில் முற்றத்தைப்பற்றி முதற்கண் பாடினர். “ஆங்கு நாகம், நரந்தம், ஆச்சா, சந்தனம், சே, மா இம்மரங்கள் செறிவு பெற்றன”.
“வேங்கை, இலவம், புன்குமரம் இவை பூக்களைச் சொரிந்து அழகுபடுத்தின”.
“மரவம், பாதிரி, புன்னை, குரவம், கோங்கம் இவை மலர்ந்தன; இவற்றின் கொம்புகளில் வண்டுகள் ஆர்த்தன; அவை யாழ்போல் ஒலி செய்தன” என்று பாடினர்.
அடுத்து அவர்கள் வேடுவர் தம் குலத்தைச் சிறப் பித்துப் பாடினர்.
“கொற்றவை கோலம் கொண்ட இப்பொற்றொடி மாது மிக்க தவம் செய்தவள்; அவள் பிறந்த குலம் அவளால் பெருமை பெற்றது.”
அடுத்துக் கொற்றவையைச் சிறப்பித்துப் பாடத் தொடங்கினர். “யானைத் தோலையும், புலித்தோலையும் போர்த்தி எருமைத் தலையின் மேல் ஏறி நின்றவள் நீ! நீ மறைகளையும் கடந்த பொருளாக விளங்குகிறாய். வானவர்கள் உன்னை வணங்குகின்றனர். ஞானக் கொழுந்தாய் நீ விளங்குகின்றாய். அத்தகைய சிறப்பை நீ படைத்துள்ளாய்.”
“கையில் வாள் ஏந்தி மகிடனை அழித்துக் கலைமான் மீது நிற்கின்றாய். அரி, அரன், அயன் இம்மூவர் உள்ளத்தும் நிறைந்தவள். நீ சோதி விளக்காக அவர்கள் உள்ளத்தில் சுடர் விடுகின்றாய்”.
“சங்கும் சக்கரமும் உன் திருக்கையில் தாங்கி நிற்கிறாய். சிங்க ஏற்றில் அமர்ந்து இருக்கின்றாய். கங்கையை முடியில் அணிந்த சிவனின் இடப்பாகத்து உறைகின்றாய். வேதங்கள் உன்னை ஏத்திப் புகழ்கின்றன”.
“மற்றும் கொன்றையும் துளவமும் சேரத் தொடுத்த மலர்ப்பிணையலைத் தோள் மேல் இட்டு அசுரர் வாட அமரர் வாழக் குமரிக் கோலத்தில் மரக்கால் கூத்து ஆடிக்காட்டினாய்”.
“நீ மரக்காலில் நின்று ஆடும் போது உன் காற்சிலம்பு ஒலித்தது; சூடகமும், மேகலையும் மாறி மாறி ஒலித்தன. அவுணர்கள் வீழ்ந்தனர். நீ மரக் காலில் ஆடும்போது உன் காயாம் பூ போன்ற மேனியை வாழ்த்தி வானோர் மலர் தூற்றுவர். அது மழை போலப் பொழியும்”.
வெற்றிச் சிறப்புகள் விளம்புதல்
“அச்சம் தரும் சீறூர் அதனில் வீரன் ஒருவன் ஆநிரை கவரச் செல்வான் என்றால் வாள் ஏந்திய கொற்றவை அதனை விரும்புவாள் என்பது உறுதி. அவள் அருள் செய்தால் பகைவர் ஊரைச் சார்ந்த காட்டில் கரிக்குருவி தன் கடிய குரலை இசைத்துக் காட்டும்; இது உறுதி.”
“கள் விலை பகர்வோர் கடன் கொடுக்க மறுக்கின்றனர். அதைப் பொறுக்காத மறவன் கையில் வில் ஏந்துகிறான். அவனோடு பறவைகள் அவனைத் தொடர்கின்றன. பகைவர் பசுநிரை கருதி அவன் போகும் காலத்தில் அவன் வில்லின் முன் கொற்றவையும் கொடி எடுத்து அவனுக்கு வெற்றியைத் தர முன் செல்வாள்; இது உறுதி”.
“மாமை நிறம் உடைய இளநங்கையே! வேட்டுவர் மகளே! இதனைக் கேட்டு நீ மகிழ்வாய். இவை நின் ஐயன்மார் முதல் நாள் வேட்டையில் கொண்டு வந்து நிறுத்திய பசுநிரைகள்; அவற்றை வேல் வடித்துத் தந்த கொல்லனுக்கும், போரில் துடிகொட்டிய துடியனுக்கும், யாழ்ப்பாணருக்கும் ஆக இவர்களுக்குத் தந்துள்ளார். அவை அவர்கள் முற்றத்தில் நிற்கின்றன. இவை உன் ஐயன்மார் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்கள்; வெற்றி விருதுகள்; பரிசுகள்; நீ பெருமை கொள்வாயாக!”.
“முருந்தின் முகை போன்ற முறுவல் உனக்கு அழகு செய்கிறது; நீ இங்கே பார்; உன் தலைவர்கள் கரந்தையராகிய பகையாளிகள் அலறக் கவர்ந்த பசு நிரைகள் இவை, கள்விலையாட்டி, ஒற்று அறிந்து வந்து கூறிய கானவன், புள்நிமித்தம் பொருந்தச் சொன்ன கணியன் இவர்கள் முற்றங்களில் நிறைந்துள்ளன. இது உனக்குப் பெருமை சேர்க்கும்”.
“தாமரை போன்ற அழகிய கண்களை உடைய இளநங்கையே! நின் ஐயன்மார் அயலுார் சென்று ஆநிரைகள் கவர்ந்து வந்துள்ளனர். நரைமுது தாடியை உடையவர்கள்; கடு மொழி பேசியே பழகியவர்கள் நம் வேட்டுவமக்கள்; இந்த எயினர் எயிற்றியர் முன்றில்களில் இந்தப் பசுக்கள் நிறைந்துள்ளன. இச்செல்வம் கண்டு நீ பெருமை கொள்வாய்!”.
பலிக்கொடை படைத்தல்
இவ்வாறு இவர்கள் தம் வெற்றிச்சிறப்பை விளம்பிப் பாடுகின்றனர். அடுத்து அவர்கள் தம்மையே பலியாகத் தந்து கொற்றவைக்குச் சிறப்புச் சேர்க்கின்றனர். அவர்கள் ஆண்மையும், துணிவும், வீரமும் இதனால் புலப்பட்டன; “கொற்றவையே நீ பலி ஏற்றுக் கொள்” என்று வேண்டினர்.
“முனிவர்க்கும் தேவர்க்கும் அருள் செய்யும் தெய்வமே உன் இணையடி தொழுகின்றோம். அடல் வலி எயினர் நின்னை வணங்கித் தரும் பலிக்கடன் இது, நீ தந்த வெற்றிக்கு விலையாக அவர்கள் தம் மிடறு உகு குருதியைத் தருகிறார்கள்; பெற்றுக் கொள்வாயாக”.
“நிணத்தில் இருந்து உகுகின்ற குருதி அதனை ஏற்றுக்கொள்: இது நீ தந்த வெற்றிக்கு ஈடு செய்வதாகும்”
“அடுபுலி அன்ன வேடுவர்கள் துடியும் பறையும் கொட்ட நின் அடிக்குச் செலுத்தும் கடன் இது பலிமுகத்தில் இடும் குருதி இதுவே எம் காணிக்கையாகும். இதனை ஏற்றுக் கொள்வாய்”,
“வழிஇடை வருவோர் மிகுதி யாகட்டும்; அவர்களிடம் பறித்துத் திரட்டும் கொள்ளைகள் பெருகுவது ஆகட்டும். இந்த வேட்டுவர் படைக்கும் மடைப்பலி ஏற்று அருளுக”.
“துடியொடு பகைவர் ஊரில் அடிவைத்து எறிவதற்கு அருள் செய்க; அதற்காக நீ பலிக்கடன் ஏற்பாயாக. அமுதுண்டு தேவர்கள் மடிகின்றனர்; நஞ்சுண்டு நீ வாழ்கிறாய். இது வியப்பாக உள்ளது; உன்னைப் போற்றி மகிழ்கிறோம்; பலி ஏற்று அருளுக”.
“அருள் என்பதை நெஞ்சகத்திலிருந்து அகற்றியவர்கள் நாங்கள். பொருள் கொண்டு அதற்காக மற்றவர்களைப் புண் செய்வதே எம் பண்பட்ட தொழில், நாங்கள் மறவர்கள், நாங்கள் இடும் பலிக் கடனை உண்பாய்! நீ மருதிடைத் தவழ்ந்தாய்; உன் மாமன் வஞ்சகம் செய்து சகடத்தை அனுப்பினான். அதனை விகடம் ஆக்கி நீ வெற்றி கொண்டாய்: வீரம் மிக்க செயல் அது” என்று பாடினர்.
நாட்டு வாழ்த்து
இறுதியில் அவர்கள் வேட்டுவ வரிப்பாடல் நாட்டு அரசன் வாழ்த்தில் முடிகிறது.
“மறைமுது முதல்வன் ஆகிய சிவபெருமான் அவன் தன் ஆணை கேட்டு அகத்தியன் பொதிகை மலையில் தங்கினான்; அப்பொதிகை மலைக்குத் தலைவனாகிய பாண்டியனின் பகைவர்கள் நாட்டில் போர்க்களமும், கரந்தைப் போரும் சிறப்பதாக. பகைவர்கள் அழிவு பெறுக! பாண்டியன் வெட்சிப் போரில் வெற்றி பெறுவானாக!” என்று அவர்கள் வரிப்பாடல் முடிவு பெறுகிறது.