சிலம்பின் கதை/கானல் வரி
(கானல் வரி)
யாழ் எடுத்து இசை கூட்டி அவன் பாடுகிறான். முதலில் அவன் பாடியவை ஆற்றுவரிப் பாடல்கள்; இவை நாட்டு வாழ்த்தாக அமைகின்றன. அடுத்தது கானல் வரிப் பாடல்கள். இவற்றில் புகார் நகரத்து நெய்தல் நிலத்து மக்கள் வாழ்வுச் சிறப்புக் கூறப்படுகின்றது; மற்றும் இவை அகப் பொருள் துறையமைந்தவை ஆகின்றன.
காவிரி நோக்கிப்பாடுதல்
“திங்கள் குடை உடைய சோழன் செங்கோல் ஆட்சி கங்கைவரை பரவியுள்ளது; அவன் கங்கையை அடைந்து அவளோடு உறவு கொண்டாலும் நீ வெறுப்பதில்லை; அது பெண்களின் கற்புக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்” என்று பாடுகிறான். இதே கருத்தில் அடுத்து “அவன் குமரியை அடைந்தாலும் காவிரி பிணக்குக் கொள்வது இல்லை” என்று குமரியாற்றைக் குறிப்பிட்டுப் பாடுகின்றான்.
“சோழ நாட்டில் உழவர்கள் ஓசை இருபுறமும் ஒலிக்கக் காவிரி பெருமிதமாக நடக்கிறாள். அதற்குக் காரணம் சோழ நாட்டின் வளம்தான்” என்று கூறுகிறான்.
மகளிர் ஆண்களின் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது அவர்கள், கடமை என்ற கருத்தும் இவற்றில் அமைந்து விடுகிறது.
மாதவி பாடியது
இவற்றிற்கு நிகராக மாதவி பாடும் பாடல்கள் அவற்றை மறுத்துக் கூறுவனபோல் அமைகின்றன.
“காவிரியின் பெருமித நடைக்குச் சோழன் செங் கோன்மைதான் காரணம்” என்கிறது அவள் பாடல்.
அடுத்து, “அவன் வெற்றிச் சிறப்பே அதன் பெருமைக்குக் காரணம்” என்கிறாள். “காவிரி நீர் உழவர்க்கு உதவுகிறது. அது தாயாக இருந்து பால் ஊட்டுவது போல மக்களுக்கு நல்வாழ்வு தருகிறது. இதற்குக் காரணம் சோழன் மக்கள்பால் கொண்டுள்ள நேயமும், அவன் காட்டும் அருளும்தான்” என்று கூறுகின்றாள்.
இங்கே முரண்பட்ட கருத்துகள் அமைந்து விடுகின்றன; பெண்கள் பெருமைக்கு ஆண்களின் செயல்களே துணை செய்வன என்பது அவள் வற்புறுத்தும் கருத்தாக அமைகிறது.
அவன் செங்கோன்மை, வெற்றிச் சிறப்புகள், அருள் தன்மை இவை காரணம் என்கிறாள். எனவே ஆண்கள் செம்மையாகவும், மகளிர்பால் நேயம் மிக்கவராகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்கிறாள். இவை குறிப்பாக உணர்த்தப்படும் கருத்துகள் ஆகின்றன.
ஆண்கள் தவறு செய்தாலும் பெண்கள் பொறுப்பது தான் தக்கது என்பது கோவலனின் வாதம் ஆகிறது.
கானல்வரிப் பாடல்கள் (கோவலன்)
ஆற்று வரியைத் தொடர்ந்து அவன் கானல் வரிப் பாடல்கள் பாடினான்; அவற்றிலும் இத்தகைய முரண் பாடுகள் அமைந்துவிடுகின்றன.
தலைவன் களவு ஒழுக்கத்தில் அவளைச் சந்தித்துத் தன் காதலைத் தெரிவிக்கிறான். அச்செய்திகளைத் தோழி விவரிக்கின்றாள்.
“தலைவியின் முன் கடல் தெய்வத்தைச் சான்றாகக் காட்டித் தலைவன் தன் உறுதியை உரைத்தான். அவன் பின் அவளைத் தொடர்ந்து மணம் செய்து கொள்ள வில்லை” அதைச் சுட்டிக் காட்டுகிறாள் தோழி. “காதலராகிக் கடற்கரைச் சோலையில் கையுறை தந்து எம்பின்னால் வந்தவர் இன்று யாரோ போல் நடந்து கொள்கிறார்” என்பதும் தோழியின் அறிவிப்பு.
“நாங்கள் வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பி விடுபவர்கள் மற்றும் மறுத்துக் கூறும் ஆற்றலும் எங்களுக்கு இல்லை” என்கிறாள் தோழி.
இம்மூன்றும் தலைவன் தலைவியரின் காதல் அறிமுகச் செய்திகள் ஆகின்றன; இவை தோழியின் கூற்றில் அறிவிக்கப்படுகின்றன; பின்பு நடந்தது யாது?
தலைவியின் பெருமையைத் தலைவன் விரித்துரைப்பன பின் வரும் பாடல்கள். இவை தலைவன் கூற்றுகள்:
“கண் செய்த நோய் அவள் அணைப்புதான் தீர்க்கும்; நோய்க்கு அவள் காரணம்; அது தீர்க்கும் மருந்து அவள் முயக்கே ஆகும்”
“கடற்கரைக் கானலில் அவளைப் பெண் எனக் கொண்டேன்; இல்லை; அவள் வருத்தும் தெய்வம் என்பதை இப்பொழுது அறிகின்றேன்”
“அவள் பெண் அல்ல; உயிர் உண்ணும் கூற்றுவன் ஆகின்றாள்”
“அவள் வடிவைக் கூறுவது என்றால் அவள் முகம் திங்கள்; அது வானத்து அரவு அஞ்சி இங்கு ஒளித்தது; அது தெரியாமல் பெண் என்று மயங்கிவிட்டேன்”
“அவள் கண்கள் அவை கொடுமை மிக்கவை, அருள் செய்யவில்லை; அதனால் அவை கடுங்கூற்றம் ஆகின்றன””
“கூந்தல் அழகு உடைய அவள் பெண் அல்லள்; கண்டவரை வருத்தும் அணங்கு ஆகிய தெய்வம் ஆவாள்” “என்னை வருத்தியவை அவள் பேரழகு அவள் மொழி; வனமுலை; முகம்; புருவம்; மின்னல் இடை; இவை எல்லாம் சேர்ந்து என்னை வருத்திவிட்டன”
“அவளைக் கடற்கரையில் கண்டேன்; அந்தச் சூழ்நிலை என்னை வருத்தியது; அவள் விரிந்த குழல்; மதி போன்ற முகம், கயல்போன்ற விழிகள் எல்லாம் சேர்ந்து என்னை வருத்துகின்றன.”
“அவள் இளநகை, மதிமுகம், இளையவள் இணை முலைகள் என்னை இடர் செய்துவிட்டன”
“கடல் புகுந்து உயிர் வவ்வுவார் அவள் தலைவர்கள்; அவள் என் உடல் புகுந்து உயிர் வவ்வுகின்றாள்; அவள் விரும்பத்தக்க முலைகள் அவளுக்குச் சுமை; இடை அது சுமக்கிறது; இடர் உறுகிறது”
“வலையால் உயிர் கொள்வர் அவர் தலைவர்கள்; அவள் கண்ணாகிய வலையில் என் உயிரைக் கொள்கிறாள்; மின்னல் போன்றது அவள் இடை, அது முலை சுமக்காது; இற்று விடும்”
“ஓடும் படகு கொண்டு அவள் தலைவர்கள் உயிர்களைச் சாடுவர். அவள் இடை உழந்து வருந்துகிறது; சுமை தாங்காது”
“பவள உலக்கையைக் கையால் பற்றி வெண் முத்தம் குறுவாள்; அவள் கண்கள் குவளையல்ல; கொடியவை”
“புன்னை நிழல் புலவுத் திரைவாய் அன்னம் நடக்க அவள் நடக்கின்றாள்; அவள் கண்கள் கூற்றம் ஆகும்”
“நீல மலரைக் கையில் ஏந்திப் பறவைகளைக் கடிவாள்; அவள் கண்கள் வேலினும் கொடிய வாட்டும் தன்மைய” “அன்னமே நீ அவள் அருகில் செல்லாதே! அவள் நடைக்கு நீ ஒவ்வாய், அதனால் நீ சென்று உறவு கொள்ளாதே”
அவள் கொடுமையை எடுத்துக் கூறுகிறான் தலைவன்; இச்செய்தியைக் கோவலன் பொதுப்படையாகவே வைத்து இப்பாடல்களைப் பாடினான்.
மாதவி பாடியது
அவன் பாடிய பாடல்களில் உள்கருத்து உள்ளது என்று மாதவி தவறாகக் கொள்கிறாள். கலவியில் மகிழ்ந்தவள் போல் காட்டிக் கொள்ளுகிறாள். அதனைத் தொடர்ந்து அவன்பால் புலவி கொண்டவள் போல யாழைக் கையில் வாங்கி அவளும் பாடத் தொடங்கினாள். அவள் அப்பாடல்களுக்கு விடை தருவன போல் அமைத்துத் தருகிறாள்.
அவள் பாடலைக் கேட்டு நிலத்தெய்வம் வியப்பு எய்தியது; நீள் நிலத்தோர் மகிழ்வு எய்தினர்; யாழிசையோடு இரண்டறக் கலந்த தன் இனிய குரலில் அவள் பாடினாள்.
அவன் பாடிய ஆற்று வரிப் பாடல்களுக்கு இவள் விடை தந்தாள். “ஆண்கள் சீரோடு இருந்தால்தான் பெண்களுக்கு மதிப்பு உண்டு” என்று தெரிவித்தாள்.
அதே போலக் கானல் வரிப்பாடல்களையும் இவளும் தொடர்ந்து பாடுகிறாள்; அவன் பாடிய பாடல்கள் அனைத்தும் பெண் கொடியவள் என்ற கருத்தை வற்புறுத்திக் கூறுவன போல அமைந்தன. அதற்கு இவள் மறுப்புரையாக “ஆண்கள் தாம் இரக்கமற்றவர்கள்; பெண்களின் நுண்ணுணர்வையும், துன்பத்தையும் அறியாத வர்கள்” என்று சாடுகிறாள். அப்பாடல்கள் கருத்துகள் பின்வருமாறு;
"முத்துகள் தந்து எங்களைத் தலைவன் மயக்க விரும்புகிறான்; அவை அவள் பல்லுக்கு நிகராகா, கடல் அலைகள் கரை சேர்க்கும் முத்துகளே எங்களுக்குப் போதுமானவை; அவன் கையுறை தேவை இல்லை” என்று தோழி கூறி மறுத்துவிடுகின்றாள். இது தோழியின் கூற்றாக அமைகிறது.
“களவில் வந்து கலந்தான்; அவன் பிரிந்ததால் தலைவி மெலிந்தாள். அவள் கைவளையல்கள் கழன்று விழுந்து விடுகின்றன”.
“கள் உண்டால் மயக்கம் வரும் என்று எங்களுக்குத் தெரியும்; காமம் கொண்டால் அதுவும் நோய் தரும் என்பதை இப்பொழுதுதான் அறிகிறோம்” என்கிறாள் தோழி. இவை இரண்டும் தோழியின் கூற்றுகள் ஆகின்றன.
இனிப் பாடுவன தலைவியின் கூற்றுகள்:
“நண்டும் அதன் பெண்டும் மகிழ்ந்து உறவாடும் காட்சியைத் தலைவன் காண்கிறான்; பிறகு அவன் என்னை யும் பார்க்கிறான். அவன் மனக்குறிப்பு யாது? எனக்கு விளங்கவில்லை”
“தம்முடைய தண்ணளி; தாம்; அவர் குதிரை பூட்டிய தேர் இவை எல்லாம் இப்பொழுது என்ன ஆயிற்று? எம்மை அவர் மறந்துவிட்டார்; அவர் எம்மைவிட்டு அகலலாம்; யாம் மட்டும் அவரை மறக்கவே மாட்டோம்; நம்மை மறந்தவரை நாம் மறக்க மாட்டோம்”
“நெய்தல் பூவே உன் கனவினில் அவர் வந்தால் என்னைப் பற்றி ஒரு சொல் உரைக்க மாட்டாயா?” “கடல் அலையே அவன் கடந்த வழியின் சுவடுகளை எல்லாம் நீ அழித்து விட்டாய், நீயும் அவனைப் போல் கொடியை, இரக்கமே இல்லாமல் போய்விட்டது உனக்கு”
“வழியின் சுவடுகளை அழிக்கும் கடலே; சோலையே! அன்னப்பறவையே! தண்துறையே! அவரைப் பார்த்து இது தகாது என்று கூறமாட்டீரா?”
“கடல் அலையே! அவர் சென்ற தேரின் சுவடுகளை ஏன் அழித்தாய்? அவரைப் பற்றிய நினைவுகளை அழிப்பதால் உனக்கு என்ன நன்மை? நீ எனக்குப் பகையாகின்றாய்; உன்னோடு இனி எனக்கு உறவே தேவை இல்லை”
இனிக் கூறுவன தோழியின் கூற்றுகள்: “கடல் சேர்ப்பனே! இவள் நெஞ்சு மன்மதன் அம்புகளால் துளைக்கப்பட்டுவிட்டது. இந்தப் புண் அதனை அவள் அன்னை அறிந்தால் அவளுக்கு யாது கூறுவது?”
“மாரிக் காலத்துப் பீர்க்கம்பூ போல் பூத்தது பசலை; தெய்வத்திடம் முறையிட்டு இந்நோய் தீர வழிபடுவாள் அன்னை. யார் இக்கொடுமை செய்தது என்று கேட்டால் என்ன பதில் கூறுவது?”
“தனிமையில் தலைவி துன்பம் அடைந்து தளர்வாள்; இதனை அவள் வாய்விட்டுக் கூறமுடியாமல் தவிப்பாள், அன்னைக்கு இதனை எப்படி எடுத்துக் கூற முடியும்?”
இக்கூற்றுகள் தோழி கூற்றாக அமைந்துள்ளன. மாலைப் பொழுது தலைவியை வாட்டுகிறது; இதே நிலை தலைவனுக்கு உளதாகுமோ என்று இனித் தலைவி கேட்கிறாள்.
“மெல்ல இருள் பரந்தது; சூரியன் மறைந்துவிடக் கண்கள் நீர் உகுக்கின்றன; தோழி! இதே மயக்கம் தரும் மாலைப்பொழுது பிரிந்தவர் உறையும் நாட்டில் உள்ளதோ”
“கதிரவன் மறைந்தான்; காரிருள் பரந்தது; என் கண்கள் துன்பக் கண்ணிர் உகுக்கின்றன; இதே போன்ற மருள்மாலை அவர் நாட்டிலும் உள்ளதோ கூறுவாயாக”
“பறவைகள் பாட்டொலி அடங்கிவிட்டது; பகலைச் செய்யும் சூரியன் மறைந்து விட்டான்; என் கண்கள் நீர் உகுக்கின்றன. இதே மாலைப்பொழுது பிரிந்த அவர் நாட்டிலும் உள்ளதோ”
பிரிந்த நிலையில் அவள்தான் அடையும் துன்பத்தை எடுத்துக் கூறுகிறாள்: “அவர் எம்மை மறக்கலாம்; ஆனால் அவரை யாம் மறக்க முடியாது” என்ற கருத்தை வற்புறுத்திக் கூறுகிறாள்.
“தாழை வேலி உடைய உப்பங்கழிக்கு வந்தவர் எம்மைப் பொய்தல் விளையாட்டில் சந்தித்துப் பழகி அழைத்துச் சென்றார். அவர் நம் மனம் விட்டு அகலமாட்டார்”
“நீ நல்குக என்று நின்றவர் அவர். மான்போன்ற மருண்ட நோக்கத்தை மறக்கமாட்டார்”.
“அன்னம் தம் துணையோடு ஆட அதனைக் கண்டவர் என்னையும் நோக்கினார்; என்னை வருந்தச் செய்து அகலமாட்டார்”
“நாரையே, நீ என் தலைவனுக்கு என் துன்ப நோயை எடுத்து உரைக்க மறுக்கிறாய்; எனக்கு நீ உதவவில்லை; நீ இங்கே வந்து என்னை அடையாது விலகுக, விலகிச் செல்க” இவை தலைவி தன் துயரத்தை எடுத்து உரைப்பனவாகும்; கானல் வரிப்பாடல்கள் மாதவி பாடி முடித்தாள்.
வேறு ஒரு புதிய பண்ணில் தொடர்ந்து சில பாடல்களைப் பாடினாள். கைக்கிளை சேர்ந்த செவ்வழிப் பாலைப் பண்ணைப் பாடிமுடித்த பின்னர் மாலைப் பொழுது கண்டு மயங்கித் தலைவி தெரிவிக்கும் செய்தி களை அவள் தொடர்ந்து பாடினாள்.
“பிரிந்தவர் பரிவுடன் உரைத்த சொற்களை நம்பி உயிர் பெற்று வாழ்கின்றோம்; எங்கள் உயிரை நீ போக்க முற்படுகிறாய். மாலைப்பொழுதே! நீ எங்கள் உயிரைக் கொள்வாயா! நீ வாழ்க”
“பிரிவுத் துயரால் உயிர் வாழ முடியாமல் தவிக்கின்றோம்; மேலும் எங்களை நீ வதைக்கிறாய்; இந்த உலகம் வாழும் இடமாக இல்லை; மாலைப்பொழுதே! நீ தரும் துன்பம் மிகப் பெரிது; நீ வாழ்க”
“தீயைக் கக்கிக்கொண்டு வருகிறது. இந்த மயக்கம் தரும் மாலைப் பொழுது: மாக்கடல் தெய்வமே! உன்னை முன்னிறுத்தி விரைவில் வருவதாகச் சொல்லிப் பிரிந்தார்; அவர் பொய்ச் சூளாகிய சொற்களை அவர் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது; நாங்கள் பொறுத்துக் கொள் கிறோம். தெய்வமே நீ அவரை மன்னித்துவிடு; உன் மலர் அடியை வணங்குகிறேன்” - இது தலைவியின் வேண்டுகோள் ஆகிறது.
உறவு முறிதல்
தலைவன் கொடுமை செய்துவிட்டான் என்ற கருத்தமைந்த பாடல்கள் கோவலனை வருத்தமுறச் செய்தன; “கானல் வரிப்பாடலை யான் பாடினேன்; அதில் யான் எந்தக் குறிப்பையும் புகுத்தவில்லை; அவள் இவற்றை மாறாகக் கருதிக் குறிப்புத் தோன்றப் பாடிவிட்டாள்; பொய் பல கூட்டி உரைத்தாள் இவள்” என்று அவன் கருதினான்; அவளை வெறுத்தான். உறவை முறித்தான்.
இது என்ன அவ்வளவு பெரிய தவறா? இதற்காகவா இவன் அவளை வெறுப்பது? பிரிவது? உறவை அறுப்பது? என்ற வினா எழலாம். யாழிசை ஒரு பற்றுக் கோடாக வைத்து ஊழ்வினை அவள் வாழ்வினைப் பாழ்படுத்தியது என்றுதான் கூறமுடியும்.
பூரண நிலவு பொழியும் அவள் அழகிய முகம்; இனி அதை அவன் காணப் போவதில்லை; திங்கள் முகத்தாள்; அவளைக் கை நெகிழ்ந்து அகன்று விட்டான். அணைப்பு நீங்கியது; பிணைப்பு முறிந்தது.
“பொழுது ஆகிறது புறப்படுவோம்” என்று கூறி அவளை அழைக்க வேண்டியவன் அவ்வாறு கூறாமல் அவளைத் தனியேவிட்டு இவன் மட்டும் ஏவலாளர்கள் உடன்வர அவளைவிட்டு நீங்கினான்.
தோழியர் பேச வாய் எடுத்தனர். அவர்களைப் பேசாமல் தடுத்தாள். ஓசைபடாமல் எழுந்து பழையபடி வண்டியுள் புகுந்து வீடு வந்து சேர்ந்தாள். காதலனுடன் சென்றவள் திரும்பிய போது கையற்ற நெஞ்சோடு தனியளாய் வந்து சேர்ந்தாள். மற்றவர்களுக்கு அது ஏமாற்றத்தை அளித்தது.