சிலம்பின் கதை/வேனில் காதை

8. மாதவி எழுதிய முடங்கல்
(வேனிற் காதை)

இளவேனில் பருவம்

இளவேனில் பருவம் தொடர்ந்தது. தமிழகம் எங்கும் ஆட்சி செய்யும் காமவேள் ஆகிய மாரன் அவனுக்குத் துணையாக இனிய இளவேனில் பருவம் வந்தது. தென்றலும் வீசத் தொடங்கியது; குயில் கூவியது; மகளிரின் மனக் கிளர்ச்சியை இப்பருவம் எழுப்பியது.

மாதவிபால் கோவலன் கொண்ட ஊடல் அவளைப் பெரிதும் தாக்கியது; அவள் தனிமை அவளை வாட்டியது. தன் மனையகத்தில் அவள் வேனிற் பள்ளியாகிய நிலா முற்றத்திற்குச் சென்று அங்குத் தனிமையில் யாழ் வாசிக்கத் தொடங்கினாள். வாய்விட்டும் பாடினாள்; அவளால் அந்த இசையில் ஈடுபட முடியவில்லை; இசையில் அவள் மனம் நாடவில்லை.

மாதவி முடங்கல்

கோவலனின் நினைவு அவளை வாட்டத் தொடங் கியது. அவள் தன் கையகத்து இருந்த பூ மாலையை எடுத்தாள். அதில் பல்வகை மலர்கள் இருந்தன. அவற்றுள் தாழை மடலைத் தனித்து எடுத்தாள். பித்திகை முகையை எழுத்தாணியாகக் கொண்டாள். செம்பஞ்சுக் குழம்பு அதனை மையாகக் கொண்டாள்.

“இளவேனில் பருவம் ஆகிய இளவரசன் உயிர்களுக்கு மகிழ்வு ஊட்டுபவன்; அதோடு மாலைப்பொழுதில் தோன்றும் வானத்துத் திங்கள் கொடியது; தம் தலைவரைப் பிரிந்த மகளிரை வாட்டுவது மன்மதன் செயலாகும். இதனை யான் உணர்த்தத் தேவை இல்லை; இதனை அறிந்து அருள்வீராக” என்று வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு வடித்து எழுதினாள். காதல் வயப்பட்ட அவள் மழலைச் சொல் போல் வார்த்தைகளை விட்டுவிட்டுக் கூறி எழுதி முடித்தாள். பசந்த மேனியை உடைய தன் தோழியாகிய வசந்த மாலையை வருக என்று அழைத்து அதனைத் தந்து அனுப்பினாள். இந்த முடங்கலில் சொல்லிய செய்திகளைக் கோவலனுக்கு அறிவித்து அவனை இருந்து அழைத்து வருக எனச் சொல்லி அனுப்பினாள்.

வசந்தமாலை அதனை எடுத்துச் சென்று கோவலனைக் கூல மறுகு ஆகிய கடைத்தெருவில் சந்தித்துத் தந்தாள்; அவன் அதை வாங்க மறுத்தான். மாதவியைப் பற்றிய பழைய நினைவுகள் அவன் மனக்கண் முன் வந்து மோதின.

கோவலன் மறுப்பு

அவள் செயல்கள் ஒவ்வொன்றும் நடிப்பே என்று கூறினான். அவளுக்கு வாழ்க்கையே நாட்டியக் கலையின் கூறுகள் என்று சுட்டிக் காட்டினான். தன்னோடு காதல் உரைகள் பேசியது ‘கண் கூடுவரி’ என்றான். அவள் செய்து கொண்ட ஒப்பனைகள் எல்லாம், ‘காண்வரிக் கோலம்’ என்றான். ஊடல் கொண்ட போது அடங்கியவளாய் ஏவல் மகளைப் போல் அடக்க ஒடுக்கமாகப் பணிந்து பேசியது ‘உள்வரியாடல்’ என்றான். தன்னைத் தணிவித்த பொழுது முதுகு புறம் வந்து அணைத்தது 'புன் புறவரி' என்றான். மற்றும் அவன் ஊடல் செய்கைகள் அனைத்தும் 'கிளர் வரிக்கோலம்' என்றான்; மேலும் ‘தேர்ச்சிவரி’ ‘காட்சிவரி’, ‘எடுத்துக் கோள்வரி’ என்று பெயர்கள் தந்து அவள் செயல்களை எல்லாம் நடிப்பு என்று கடிந்து கூறினான்.

அவள் ஆடல் மகள் ஆதலின் இவை எல்லாம் அவளுக்குக் கூடிவந்த கலைகள் என்று கூறிச் சாடினான். அதே போல இந்த முடங்கலும், அதன் செய்திகளும் போலிகள் என்று கூறி மறுத்தான்.

வசந்த மாலை அவள் என்ன செய்யமுடியும்? வாடிய உள்ளத்துடன் சென்றாள். மாதவியால் வந்து செய்தியை அறிவித்தாள். “இன்று மாலை வராவிட்டாலும் அவரை நாளைக் காலையில் காண்போம்” என்று நம்பிக்கையுடன் அன்று மாதவி துயிலின்றிக் கழித்தாள்.