சிலம்பின் கதை/மங்கல வாழ்த்துப் பாடல்

1. புகார்க் காண்டம்
1. திருமண வாழ்த்து
(மங்கல வாழ்த்துப் பாடல்)

புகார் நகர்

சோழநாடு காவிரி பாயும் வளமிக்க நாடு; அதன் தலைநகரம் உறந்தை எனப்படுவது; அதன் துறைமுகம் புகார் நகர் ஆகும். இதனைப் பூம்புகார் என்றனர். இது வணிகச் சிறப்புக் கொண்ட வளமான நகராக விளங்கியது.

இச் சோழநாட்டை ஆண்ட மன்னர்கள் வீரமும், கொடையும், நீதி வழுவா ஆட்சியும் கொண்டவராகத் திகழ்ந்தனர். திங்களைப் போன்று குளிர்ச்சியும், ஞாயிறு போன்று ஆட்சியும், மழையைப் போன்று கொடைச் சிறப்பும் உடையவராகத் திகழ்ந்தனர்.

இந்தப் பூம்புகார் இமயத்தையும், பொதிகையையும் போல் நிலைத்து நின்றது; எந்த அதிர்ச்சியையும் கண்டது இல்லை; இன்பக் களிப்பு மிக்க நகர் அது; அவ்வகையில் அது நாகர் நாட்டையும், தேவர் உலகத்தையும் ஒத்து விளங்கியது. மக்கள் எந்தக் குறையுமின்றி அங்கு வாழ்ந்தனர். குடி பெயர்ந்து வாழப் பிற இடங்களைத் தேடியது இல்லை.


மாநாய்கன்

இப்பூம்புகார் நகரில் செல்வச் சிறப்பும், கொடைச் சிறப்பும் உடைய வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான். மாநாய்கன் என்பான் அச் செல்வன்; வறியவர்க்கு ஈந்து வான்புகழ் நாட்டினான்.

அவன் ஒரே செல்வமகள் கண்ணகி என்பாள்: அவளுக்கு வயது பன்னிரண்டு ஆகியது. அவள் கண்கவரும் பேரழகு உடையவள்; அதனால் அவளை, “ஈகைவான் கொடி யன்னாள்” என்று சிறப்பித்துப் பேசினர். “வானத்து மின்னல்” என அவள் புகழப்பட்டாள்.

மற்றும் அவள் பேரழகு காண்பவரைக் கவர்ந்தது. திருமகள் வடிவு இவள் வடிவு என்று பேசினர்; இவள் கற்பின் திறம் பாராட்டப்பட்டது. வடமீன் ஆகிய அருந்ததி அனையவள் என்று அவ் ஊர் மகளிர் அவளைப் பாராட்டினர்.

மாசாத்துவான்

அதே ஊரில் செல்வச் சிறப்பும், உயர்மதிப்பும் பெற்ற வணிகன் மற்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் மாசாத்துவான் என்பது ஆகும். அவன் அரசனும் மதிக்கத்தக்க குடிமகன் என்று பாராட்டப்பட்டான். மாநாய்கனைப் போலவே வறியவர்க்கு வழங்குவதில் மிக்க புகழ் பெற்றிருந்தான். அவனுக்கும் ஒரே மகன் கோவலன் என்பான்; வயது பதினாறு ஆகியது. அவன் நற்குணத்தை அனைவரும் பாராட்டிப் பேசினர். அவன் அழகில் முருகன் என்று நங்கையர் மதித்துப் பாராட்டினர். அவனை “மண்தேய்த்த புகழினான்” என்று இளங்கோ அறிமுகம் செய்கின்றார். உலகு எங்கும் அவன் புகழ் பேசப்பட்டது.

மண நிகழ்ச்சி

இரு குடியினரும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்; வணிகப் பெருமக்கள். இவர்கள் தம் மக்களுக்கு மணம் முடிக்கக் கருதினர். கண்ணகிக்கும் கோவலனுக்கும் திருமணம் செய்விப்பதில் ஆர்வம் கொண்டனர். நாள் குறித்துச் செய்தியை நகரத்துக்கு அறிவித்தனர். அவர்கள் செல்வ நிலைக்கேற்ப மிகவும் ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்தினர்.

ஊரவர்க்குச் செய்தி அறிவிப்பதிலேயே அவர்கள் செல்வச் சிறப்பு வெளிப்பட்டது. யானையின் பிடரியில் அழகிய மகளிரை அமர்வித்து வெண் கொற்றக் குடைகள் புடை சூழச் சங்கும் முழவும் அதிர ஊர்வலமாகச் செல்ல வைத்தனர். அந்த ஊர்வலத்தில் மங்கலத்தாலியும் வைக்கப்பட்டது. 'மாநகர்க்கு ஈந்தார் மணம்” என்று கூறுவர் கவிஞர்.

நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து மணம் நடத்துவது அக்கால வழக்கமாக இருந்தது. புரோகிதரை வைத்தே திருமணம் நடத்தினர். சித்திரை மாதம் சந்திரன் உரோகிணியை அடையும் நாள் நன்முகூர்த்தமாக நிச்சயிக்கப்பட்டது. பந்தலிட்டு மண மேடையை அலங்கரித்தனர். வைரத் தூண்கள் பந்தலைத் தாங்கின. நீலப் பட்டாடை விதானமாக அமைந்தது. பூக்களையும், முத்து மாலைகளையும் சரங்களாகத் தொங்கவிட்டனர். பூ இட்ட பந்தலில் முத்துகள் பதிக்கப் பெற்று இருந்தன.

மேடையில் கண்ணகியோடு கோவலன் அமர்ந்தான்; முன்னர் வேள்வித் தீ எழுப்பினர். மணமகன் மணமகளைக் கைப்பிடித்துத் தீயை வலம் வந்தான். அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டு வலமாக வந்த காட்சி அங்கிருந்தவர் மனத்தை மகிழ்வித்தது. வியத்தகு காட்சியாகக் கொண்டனர்.

வாழ்த்துரை

அம் மண மண்டபத்தில் மங்கையர்கள் கலகலப்பாகச் செயல்பட்டனர். பூ அணிந்த மகளிர் பொலிவு ஊட்டினர். இளைய நங்கையர் அங்கு வளையச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் மேனிஅழகு கண்ணைக் கவர்ந்தது. ஒசிந்த நோக்கு அவர்கள் கசிந்த ஆர்வத்தைக் காட்டியது. நறுமணம் பூசி அவர்கள் கவர்ச்சியோடு விளங்கினர். பாட்டும் உரையும் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தன.

தட்டுகளில் பூக்களையும், சுண்ணத்தையும், அணி வகைகளையும் தாங்கிச் சென்றனர். பூரண பொற்குடம் ஏந்தினர். ஒளிவிளக்கு ஏந்தினர். வண்ணம் ஏந்தினர். சுண்ணம் ஏந்தினர். பாலிகைக் குடம் தாங்கினர். எங்கும் மங்கலக் காட்சியைத் தங்க வைத்தனர்.

கூந்தலில் பூக்கள் சூடிய மங்கல மடந்தையர் ஆசி கூறினர். “இருவரும் இணை பிரியாமல் வாழ்க” என்று வாழ்த்துக் கூறி அவர்கள் மீது மலர்களைத் தூவி நல்லமளியில் சேர்த்தனர்.

"அரசன் வாழ்க! அவன் ஆட்சி சிறக்க!” என்று வாழ்த்துக் கூறி அம் மணவிழா நிகழ்வினை முடித்தனர்.