சிலம்பின் கதை/மனை அறம் படுத்த காதை

2. இல்லற வாழ்க்கை
(மனையறம்படுத்த காதை)

கண்ணகியும் கோவலனும்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

என்பார் வள்ளுவர். அவர்கள் அன்பு வாழ்க்கை இன்பத்தில் தொடங்கியது. காதலில் களித்துக் கவிதைபாடி அவன் சிறந்த காதலன் என்பதை வெளிப் படுத்தினான். முன்பின் பழகாதவர்கள்; காதலித்து மணம் செய்து கொண்டவர்கள் அல்லர், மணம் செய்து கொண்டு காதலித்தவர்கள்.

அவர்களை இன்ப இரவுகள் இணைத்தன. அவன் “முதல் இரவு” என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றுதான் கூற முடியும். இன்பத்தின் எல்லையை முதற் சந்திப்பிலேயே கண்டான். கண்ணகியை நேசித்தான்.

செல்வக் குடும்பத்தில் பிறந்தவன்; அதனால் எழு நிலை மாடத்தில் அவன் முதல் இரவு தொடங்கியது. இடைநிலை மாடத்தில் இருவரும் இருந்தனர்; அமர்ந்த காட்சி அதில் இன்பவாழ்வு தொடங்கினர்; நெருங்கினர்; கிளர்ச்சிகள் பின்பு அவர்களைத் தொடர்ந்தன.

தென்றல் காற்றுச் சாளரம் வழியாக உள்ளே நுழைந்தது. அது பல்வகை மலர்களின் வாசத்தை அள்ளிக் கொணர்ந்தது. வாசமும் குளிர்ச்சியும் மிக்க தென்றல் அவர்களைத் தூண்டியது; காதல் உணர்வைப் பெருக்கியது.

தென்றலின் சுகம் அவர்களை நிலா வெளிச்சத்தைத் தேடத் தூண்டியது. நிலவு ஒளியில் அவர்கள் கலவி இன்பத்தைக் காண விழைவு கொண்டனர். நிலாமுற்றம் ஏழாவது மாடத்தில் இருந்தது. அதனைத் தேடி அங்குப் பூக்கள் பரப்பிய படுக்கையில் அவர்கள் இன்பக் கேளிக்கைகளைத் தொடுத்தனர்.

அவள் மார்பிலும், தோளிலும் வண்ண ஓவியங்கள் தீட்டினான். 'கரும்பும் வல்லியும்' காம இச்சையைத் தூண்டும் சித்திரங்கள்; அவற்றைச் செம்பஞ்சுக் குழம்பில் தீட்டி அவள் மேனியைத் தொட்டான்; அவள் அழகினைக் கண்டான்; இன்பக் களிப்பின் ஆரம்ப அகராதி அது.

சுட்டும் விழிகள் சூரிய சந்திரரோ என்று பாடினான் பாரதி; அவள் வட்டக் கரு விழிகள் வானக் கருமுகிலோ என்றான். இங்கே அவர்கள் இருவரும் சூரிய சந்திரகளாக ஒரே இடத்தில் அமர்ந்து புத்தொளி ஊட்டினர். சூடும் குளிர்ச்சியும் அவர்களிடத்தில் இடம் பெற்றன. விலகி இருக்கும்போது வெப்பத்தையும், அருகில் வரும்போது குளிர்ச்சியையும் தந்தாள். அவர்கள் இருவரும் தழுவிக் கொண்டனர். இதயம் இடம் மாறின என்பர் கம்பர். அது காதல்; கலவி இன்பம் அதைக் கூறும்போது ஒருவர் மற்றவர் ஆயினர் என்று கூறுவதே சிறப்பாகும். "அவன் தாங்கிய செங்கழுநீர்த் தாரும் அவள் அணிந்திருந்த முல்லை மாலையும் தழுவிக் கலந்தன" என்று கூறினால் அது சிறப்பாக அமையும்.

தாரும் மாலையும் மயங்க அவன் தன் வசம் இழந்தான்; தன்னை இழந்தான்; அவள் பேரழகை வியந்து பாராட்டினான்.

நலம் பாராட்டல்

நெற்றியின் அழகு அவனுக்குப் பிறைச் சந்திரனை நினைவுக்குக் கொண்டு வந்தது; "சிவன் தன் சடைமுடியில் தரித்திருந்த பிறையை அவளுக்குத் திருநுதல் ஆகுக என்று கொடுத்து விட்டான்" என்று பாராட்டினான்.

அவள் புருவங்களின் வளைவு அவனை வளைத்தது. காமன்வில் அதுபோலக் கணைகளைப் பொழிவது அவள் புருவங்கள்; மன்மதனின் வில் என முடிவு செய்தான். தன் கரும்பு வில்லினை அவளுக்குப் புருவமாகப் படைத்து அந்த மன்மதன்தான் தந்துவிட்டானோ" என்று வியந்தான்.

அவள் இடை மெலிந்திருந்தது; அது முறியாமல் உறுதியாக இருந்தது: "அது இந்திரன் தந்த வச்சிரப்படை" என்றான்.

அவள் கண்கள் வேல்கள் எனப் பாய்ந்தன. அவனுக்கு வேதனை தந்தன. அவை அவனைப் புண்படுத்தின. அதனால் தாக்கப் பெற்றான். “அவை கண்கள் அல்ல; வேல்கள்” என்றான். “முருகன் தன் வேலினை இரண்டாக உடைத்து அவற்றைக் கண்கள் இரண்டாக அமைத்து விட்டான்” என்று பேசினான்.

அவன் கற்பனைகள் எங்கெங்கோ செல்கின்றன. அவள் சாயல் மயிலை நினைப்பூட்டியது; நடை அன்னத்தைக் காட்டியது; இனிய மொழி கிளியை அழைத்தது.

“அவள் சாயல் கண்டு அதற்குத் தோற்று மயில் காடுகளை அடைந்துவிட்டது; அவள் நடைக்கு அன்னம் தோற்று நன்னீர்ப் பொய்கையை அடைந்துவிட்டது. அமிழ்தும் யாழும் குழைத்த அவள் இனியதொரு கிளவி கேட்டுக் கிளி வருந்துகிறது. முழுமையாகக் கற்றுக்கொள்ள அவளை விட்டு நீங்காமல் உடன் உறைகிறது”என்று பாராட்டினான்.

“தோழியர் அவர்களுக்குக் கோலம் செய்தவர்கள் மாபெரும் தவறு செய்து விட்டார்கள்” என்று பேசுகிறான். “மங்கலத்தாலி அது ஒன்று போதும். பிங்கல நிகண்டுபோல் அவர்கள் பிற அணிகள் அணிவித்தது ஏன்?” என்று கேட்கிறான்; “முலைத் தடத்திடை அவர்கள் அலைத் திடல் என எழுதிய தொய்யில் போதுமே” என்றான். “முத்து ஆரம் ஏன் அணிவித்தனர்” என்று கேட்கிறான். “நகை அது மிகை” என்று கூறி அவன், “அழகுக்கு அழகு செய்வது வீண்” என்கிறான்.

பின் அவளைத் தொடர்ந்து மேனி அழகைக் காண்கிறான்; “பொன்னே” என்கிறான். தொட்டுப் பார்க்கிறான்; “வலம்புரி முத்து” என்கிறான். நுகர்வில் கண்ட இன்பம் அதனால் அவளை “நறு விரை” என்கிறான். இதழ்ச் சுவையால் “கரும்பு” என்கிறான். மொழிச் சுவையால் “தேன்” என்கிறான்.

“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே தேனே” என்று அடுக்கிக் கொண்டே போகிறான். உலவாக் கட்டுரை பலவற்றைக் கூறுகிறான்.

கிடைத்தல் அருமைபற்றி “அருந்திறல் பாவாய்” என்கிறான். அவன் வாழ்வுக்கு அவள் இன்றியமையாதவள் என்பதால் “ஆருயிர் மருந்து” என்கிறான். “அலையிடைப் பிறவா அமுது”, “மலையிடைப் பிறவா மணி”, “யாழிடைப் பிறவா இசை” என்று அவள் அருமைகளைக் கூறுகிறான். அவள் வணிக மகள் என்பதில் பெருமை கொள்கிறான். 'குலமகள்' என்பதை அறிந்து அவளுக்கு அதனால் தனி மதிப்புத் தருகிறான். “பெருங்குடி வாணிகன் பெருமட மகளே” என்று அழைக்கிறான். செல்வக் குடியில் பிறந்த சிறப்பினைச் செப்புவதாக அக் கூற்று அமைகிறது. அவள் கூந்தலைத் தடவிக் கொடுக்கிறான். “தாழிருங் கூந்தல் தையால்” என்று விளிக்கிறான். தாழிருங் கூந்தல் விரிந்த கூந்தலாக மாறும் என்பதை அவன் எப்படி முன் கூட்டி உணர முடியும்!

அறவாழ்க்கை

தருக்குமிக்க வாழ்க்கை இன்பச் செருக்கோடு திகழ்கிறது. இவ்இன்ப வாழ்க்கை அவர்கள் அன்பினை மலரச் செய்யத் துணை செய்கிறது. அன்பும் அறனும் சேரும் போதே வாழ்க்கை பயன்மிக்கதாக மாறுகிறது; மலர்கிறது.

கோவலனின் தாய் ஆகிய அவ்வீட்டுப் பேரியல் கிழத்தி அவளைத் தனியே குடி வைத்து உரிமையுடன் வாழ வழி வகுத்தாள். அன்போடு அமைந்த அவ்வாழ்வு அறத்தோடு இயைந்து பண்பும் பயனும் கொண்டதாக முழுமை பெற்றது. சுற்றமும், அறவோர்களும், விருந்தினர்களும் அவள் வீடு தேடி வந்தனர். சுற்றம் சூழ இருந்து  நற்றவம் மிக்க இல் வாழ்க்கையை நடத்தினாள். இவ் இன்ப வாழ்க்கை சில ஆண்டுகளே நீடித்தது.

அவர்கள் அடைந்த இன்பத்துக்கு எதனை உவமையாகக் கூறுவது? காமத்தில் கலந்து மகிழும் பாம்புகளைத் தான் உவமை கூற முடியும்; இவர்கள் நிலையாமையைக் கண்டு அது பயன்படக்கழிய வேண்டும் என்ற கொள்கை உடையவர் போல் வாழ்க்கையை நேசித்தனர். இடையறாத மகிழ்வு கண்டனர்.