சிலம்பின் கதை/வாழ்த்துக் காதை

29. தேவந்தியும் பிறரும் வருதல்
(வாழ்த்துக் காதை)

தேவந்தி வருகை

கண்ணகியின் விழாவில் அவள் தோழியாகிய தேவந்தி வந்து கலந்து கொண்டாள். அவளுடன் கண்ணகி யை வளர்த்த காவற் பெண்டும், அவள் மகளும் வந்திருந் தனர். மதுரையில் இருந்து இவர்களுடன் மாதரி மகள் ஐயையும் வந்து சேர்ந்தனள், அவரவர் தம் உறவினை உரைத்து அவர்கள் ஒவ்வொருவரும் செய்திகளை விளம்பினர்.

தேவந்தி சோழ நாட்டில் கண்ணகியின் தாயும், கோவலன் தாயும் உயிர் துறந்தமையைச் செப்பினாள். காவற் பெண்டு ஆகிய செவிலித்தாய் மாசாத்துவான் துறவைப் பற்றியும், மாநாய்கன் துறவைப்பற்றியும் உரைத் தாள். செவிலியின் மகள் ஆகிய அடித்தோழி மாதவியும் மணிமேகலையும் துறவிகள் ஆயினமையைச் செப்பினாள்.

மற்றும் தேவந்தி ஐயையைச் சுட்டிக் காட்டி அவள் மணம் பெற்றில்லாத அவலத்தைக் கூறினாள். கண்ணகி யின் வீழ்ச்சியால் மற்றவர்கள் அடைந்த தாழ்ச்சிகளை இவர்கள் எடுத்துச் சொல்லி ஆற்றினர்; தான் உடன் பழகிய இப்பண்டையோர் அங்கு வந்து மண்டியவராய்ச் சோகக் கதைகளைச் சொல்லி அழுதனர்; வாய்விட்டு அரற்றினர்.

தெய்வக் காட்சி

கண்ணகி தெய்வக் காட்சி நல்கி வானத்தில் இருந்து தோற்றம் அளித்தாள். பொன் ஒளிர் மேனியளாக மின்னல் போல் அவர்களுக்கு வானத்தில் காட்சி அளித்தாள். அதனைக் கண்டு சேரன் செங்குட்டுவன் பெருவியப்பு அடைந்தான். “என்னே இஃது, மின்னல் கொடிபோன்று ஒரு காட்சி தோற்றுகிறதே” என்று வியந்தான். பொற் சிலம்பும், மேகலையும், வளையல்களும், வயிரப் பொன் தோடும் அணிந்த பெண் உரு அவனுக்குக் காட்சி அளித்தது.

கடவுள் நிலை அடைந்த கண்ணகி புதிய வார்த்தைகள் பேசினாள். மானிட நிலையில் இருந்தவள் பாண்டியனைத் “தேரா மன்னன்” என்று சாடியவள் மனம் மாறி “அவன் தீதிலன்” என்றாள்; அதுமட்டுமன்று. “நான் அவன் தன் மகள்” என்று உறவும் கொண்டு அவனை மதித்துப் பேசினாள். மானிடப் பார்வை வேறு; கடவுள் நிலைவேறு என்பதைக் காட்டினாள். தவறுகளை மன்னிப்பதுதான் தெய்வநிலை என்பதை உணர்த்தினாள்.

“தென்னவன் தீதிலன்; தேவர் உலகில் அவன் வரவேற்கப்பட்டுள்ளான்; அவர்கட்கு நல்விருந்து ஆயினான்; யான் அவன் மகளாகிவிட்டேன். முருகனின் குன்று ஆகிய இந் நெடுவேள் குன்றில் வந்து விளை யாடுவேன்; இதனை விட்டு அகலமாட்டேன்; என்னோடு தோழியர்களே வந்து கலந்து கொள்ளுங்கள்; அனைவரும் வருக” என்று அழைத்தாள்.

வாழ்த்துரைகள்

வஞ்சி மகளிர் வந்து கூடினர்; “தென்னவனைச் செஞ்சிலம்பால் வென்ற சேயிழையை நாம் பாடுவோம்; அப் பைந்தொடிப் பாவையைப் பாடுவோம்; வருக என்று அழைத்தனர். பாண்டியன் மகளாகிவிட்ட கண்ணகியை நாம் பாடுவோம்.” என்று அழைத்தனர்.

“சேரன் மகள் என்று நாம் அவளைச் செப்பினோம்; ஆனால் அவள் தன்னைப் பாண்டியன் மகள் என்று பேசுகிறாள். அவள் பாண்டியனை வாழ்த்தட்டும். நாம் சேரனை வாழ்த்துவோம்” என்று இவ்வஞ்சி நாட்டு இளம் பெண்கள் வாழ்த்தத் தொடங்கினர்.

அவர்கள் சோழனையும், பாண்டியனையும், சேரனையும் அவர்கள் சிறப்புகளைக் கூறி வாழ்த்தினர். “பழிதுடைப்பதற்காக உயிரைத் தந்தான் பாண்டியன்; பத்தினித் தெய்வத்துக்குப் படிமம் சமைக்க வடநாடு சென்றான் சேர அரசன் கண்ணகி பிறந்த நகர் புகார் நகர், அதன் அரசனாகிய சோழன் அந்நாட்டுக்கு அரசன், அதனால் அவனை வாழ்த்துவோம்” என்று மூவர் தம் சிறப்புகளைச் செப்பி வாழ்த்துக் கூறினர்.

சேர நாட்டு இளம் பெண்கள் சேர்ந்து பாடிய பாடல்கள் அக்கோயில் முன் முழங்கின. அம்மானைப் பாட்டில் சோழர் தம் சிறப்பையும், கந்துக வரியில் பாண்டியனின் பெருமையையும், ஊசல் வரியில் சேரனின் வெற்றிகளையும் சிறப்பித்துப் பாடினர். வள்ளைப் பாட்டில் மூவர்தம் உயர்வுகளையும் வரிசைப் படுத்திக் கூறினர்.

அம்மானைப் பாட்டு என்பது வினா ஒன்று தொடுத்து அதற்கு விடை தருவது போல அமைந்த பாடல் ஆகும்.

“விண்ணவர்க்காக அசுரர்களை எதிர்த்து அவர்கள் எயில்கள் மூன்றனையும் அழித்தவன் சோழன் ஆவான். மற்றும் புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரைத் தந்தவனும் ஒரு சோழன் தான்; பசுவின் துயர் கண்டு தன் மகனைத் தேர்க்காலில் மடிவித்தவனும் ஒரு சோழன்தான்; இமயமலையில் புலிக் கொடியைப் பொறித்தவனும் மற்றொரு சோழன் ஆவான்” என்றனர்.

கந்துக வரியில், “தென்னவன் வாழ்க” என்று கூறிப் பந்தடித்து ஆடுவதாகப் பாடினர். ஊசல் வரிப் பாடியவர் கள் சேரனின் வெற்றிச் சிறப்புகளைப் பேசிப் பாராட்டினர். “கடம்பு எறிந்த காவலன் சேரனின் முன்னவன் ஒருவன்; அவன் வெற்றிச் சிறப்பைப் பாடினர். மற்றொரு சேரன் பாரதப் போரில் இருதிறத்தவர்க்கும் சோறு வடித்துக் கொட்டி அவர்கள் பசியைப் போக்கினான்; இவர்கள் செங்குட்டுவனின் முன்னோர் ஆவார்.”

“யவனர்தம் நாட்டைக் கொண்டதோடு இமயத்தில் வில்பொறித்தவனும் இவன் முன்னோன் ஆவான்; மற்றும் தென்குமரியையும் தம்குடைக் கீழ்க் கொண்டவனும் சேர அரசருள் ஒருவனாவான்; வில், கயல், புலி இவற்றிற்குப் பெருமை தேடித் தந்த தமிழ் மன்னன் சேரன் செங் குட்டுவன்; அவன் திறம் பாடுவோம்” என்று சிறப்பித்துக் கூறினர்.

வள்ளைப் பாட்டில் மூவர் திறமும் செப்பித் தமிழகம் ஒன்று என்ற எண்ணத்தை அறிவித்தனர். உலக்கை கொண்டு முத்துகளைக் குற்றுவாராயினர்; தீங்கரும்பை நல்லுலக் கையாகக் கொண்டு காஞ்சி மரத்தின் நிழலில் புகார் மகளிர் முத்துக் குற்றுவார் என்று கூறி சோழனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர். இவ்வாறே பவழ உலக்கை கொண்டு மதுரை மகளிர் குற்றுவார் என்று கூறிப் பாண்டியனின் மீன் கொடியைச் சிறப்பித்துப் பாடினர்; சந்தன உரலில் பெய்து யானை தந்தம் கொண்டு வஞ்சி மகளிர் முத்துக் குற்றுவார் என்று கூறிக் கடலில் எறிந்த சேரனின் வெற்றிச் சிறப்பினைப் பாடினர். மூவரையும் ஒரு சேரப் பாடித் தமிழகத்தின் மூவேந்தரைச் சிறப்பித்துப் பாடினர். நீள்நில மன்னர்கள் சேரனைத் தொழுது போற்றினர். இறுதியில் “செங்குட்டுவன் நீடுழி வாழ்க” என்று கண்ணகி வாழ்த்தினாள்.