சிலம்போ சிலம்பு/இயல் இசை நாடகப்பொருள் தொடர் நிலைச் செய்யுள்

2. இயல் இசை நாடகப் பொருள்
தொடர்நிலைச் செய்யுள்

சிலப்பதிகாரத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கூறுகளும் இருப்பதாலும், பொருள் (கதைப் பொருள்) தொடர்ந்து அமைந்திருப்பதாலும், இந்நூல் இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று சிறப்பிக்கப்படுகிறது.

நாடகம் என்றாலே கதைத் தொடர்புடையது என்பதும், அதிலே நடிப்போடு இயலும் இசையும் கலந்திருக்கும் என்பதும் பெறப்படும். தமிழை, இயல்-இசை-நாடகம் என்னும் கூறுகள் உடைமையால் முத்தமிழ் என்பர். நாடகத்தில் இந்த முக்கூறும் இருப்பதால் சுருக்கமாக நாடகம் ஒன்றையேகூட முத்தமிழ் எனலாம். ஆயினும், சிலப்பதிகாரத்தில் இந்த முக்கூறுகளும் இருக்கும் பகுதிகளை ஒவ்வொன்றாகக் காணலாம்:

இயல்

இயல் என்பது, இசையும் நடிப்பும் இல்லாமல் கருத்து சொல்லும் பகுதி. சிலம்பில் உள்ள ஆசிரியம்-கலி-வெண்பா ஆகியவை இயல் கூறுகள். மற்றும், கதையமைப்பு, கவுந்திசாரணர்-மாடலன் முதலியோர் கூறும் அறிவுரைகள் - அறவுரைகள், பல்வேறு சுவை நிலைகள், அரசநீதி, பத்தினி வழிபாடு, மூன்று உண்மைகளை நிலைநாட்டல், நீதி நிலை நாட்டல், பல புனைவுகள் (வருணனைகள்), நாடு-நகர்-அரசுச் செய்திகள், பல படிப்பினைகள் - முதலியன இயல் பகுதிகளாம். தொல்காப்பியர் கூறியுள்ள ‘உரையொடு புணர்ந்த பழமை’யாகிய தொன்மை என்பதற்கு நச்சினார்க்கினியர் சிலப்பதிகாரத்தை எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார்.

இசை

அரங்கேற்று காதையில், இசை யாசிரியன், தண்ணுமை குழல் யாழ் ஆசிரியர்கள் ஆகியோரின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன. வேனில் காதையில் நிலாமுற்றத்தில் மாதவி இசைத்தலும், கானல் வரிப் பாடல்களும், புறஞ்சேரி யிறுத்த காதையில் கோவலன் பாணர்களுடன் பாடியதும், புணர்ந்த மகளிரின் இசையும், வேட்டுவவரி ஆய்ச்சியர் குரவை குன்றக் குரவை ஆகிய இசைப் பாடல்களும், நடுகல் காதையில், படை மறவர்கட்குச் செங்குட்டுவன் இசை விருந்து அளித்ததும், வாழ்த்துக் காதையில், பெண்டிர் மூவர் முறையே சோழனைப் புகழ்ந்து அம்மானை வரியும் - பாண்டியனைப் புகழ்ந்து கந்துக வரியும் சேரனைப் புகழ்ந்து ஊசல் வரியும் - மூவேந்தர்களையும் சேர்த்துப் புகழ்ந்து வள்ளைப் பாட்டும் பாடியுள்ளமையும், இன்ன பிறவும் இசைப் பகுதிகளாகும்.

நாடகம்

இயலும் இசையும் அமைந்திருத்தலே நாடக உறுப்பு தானே.

இந்தக் காப்பியக் கதை தெருக் கூத்தாகவும், மேடை நாடகமாகவும், திரை ஓவிய நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.

அரங்கேற்று காதையில் அரங்க அமைப்பு விளக்கப்பெற்றுள்ளது. நாடகத்திற்கு வேண்டிய கதை மாந்தர்கள் பொருத்தமாக உள்ளனர். தலைவன் (Hero) கோவலன். தலைவி (Heroine) கண்ணகி. கண்ணகிக்குக் கெடுமகள் (வில்லி) மாதவி. கோவலனுக்குக் கெடுமகன் (வில்லன்) பொற்கொல்லன்.

திருமணம், காதல், பிரிவு, துயரம், மறம், துணிவு, உடன்போக்கு, பரத்தைமை, கவுந்தி துணை, மாதரி அடைக்கலம், பொய்க்குற்றம் சாட்டப்படல், கொலை, கண்ணகியின் மற எழுச்சி, மதுரை எரிதல், பாண்டியனும் தேவியும் இறத்தல், கண்ணகி வழிபாடு, சிலர் துறவு பூணுதல், சிலர் இறத்தல், சேரனின் போர் - இவையெல்லாம் நாடகத்திற்கு ஒத்துவரும் காட்சிக் கூறுகளாகும்.

மற்றும், பின் வருவதை முன்னரே அறிவிக்கும் முன்னோட்ட நிமித்தங்கள் இருப்பது நாடகச் சுவையாகும். இது இப்போது ‘Direction’ எனப் புகழப்படுகிறது.

கொலைகாரப் பாண்டியனது நேர்மையையும் ஆட்சிச் சிறப்பையும் முன்னாலே புகழ்ந்திருப்பது ஒரு நல்ல கட்டம்.

பல பகுதிகள் மாறி மாறி உரையாடும்படி அமைந்திருப்பது, சொன்ன அடியையே திரும்பத் திரும்பச் சொல்லுதல்,

இடையிடையே உரையிடையிட்ட பாட்டுகளும் கட்டுரைகளும் அமைந்திருத்தல் - ஆகியவை நாடகக் கூறுகள்.

கடலாடு காதையில், கொடு கொட்டி, பாண்டரங்கம், அல்லியத் தொகுதி, மல், துடி, குடை, குடம், பேடு, மரக்கால், பாவை, கடையம் என்னும் பதினோர் ஆடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேனில் காதையில், கண் கூடு வரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள் வரி என்னும் எட்டு நடிப்புக் கூறுகள் சொல்லப்பட்டுள்ளன.

ஐந்திணைக் கூறுகளுள் மருதக் கூறு இந்திர விழவூர் எடுத்த காதையிலும், நெய்தல் கூறு கானல்வரிக் காதையிலும், பாலைக்கூறு வேட்டுவவரிக் காதையிலும், முல்லைக்கூறு ஆய்ச்சியர் குரவைக் காதையிலும், குறிஞ்சிக் கூறு குன்றக் குரவைக் காதையிலும் இடம்பெற்றுள்ளன.

நாடகக் களம்

The Art of play Writing என்னும் ஆங்கில நூலை யான் நாற்பது ஆண்டுகட்கு முன்பு படித்தேன். படித்த போது, இதன் படியே சிலப்பதிகாரம் அமைந்திருக்கிறதே - ஒருவேளை, சிலப்பதிகாரத்தைப் பார்த்துத்தான் யாராவது இந்த இலக்கணத்தை வகுத்திருப்பார்களா? என்று ஐயப்படும்படியாகவும் இருந்தது. இது நிற்க-

சேக்சுபியரின் (Shakespeare) நாடகங்களில் ஐந்து களங்கள் (Acts) இருக்கும். அந்த வகையில் சிலப்பதிகாரத்தைப் பின் வருமாறு ஐந்து கட்டங்களாகப் பகுக்கலாம்.

1. தொடக்கம்: திருமணம் (மங்கல வாழ்த்துப் பாடல்) முதல் கானல் வரி வரையும் தொடக்கம் ஆகும்.

2. வளர்ச்சி: கானல் வரியிலிருந்து அடைக்கலக் காதைவரை வளர்ச்சியாகும். (வளர்ச்சியிலேயே ஒரு திருப்பம் என்றும் கூறலாம்).

3. உச்ச கட்டம் (climax); கொலைக்களக் காதை, இது 30 காதைகளுள் 16-ஆம் காதையாகும்.

4. திருப்பம்: கண்ணகியின் மாற்றமும் மதுரை அழிவும் தொடங்கிக் கண்ணகி சேரநாடு செல்லும் வரை திருப்பமாகும்.

5. முடிவு: தேவர்களும் கோவலனும் மேலேயிருந்து வந்து கண்ணகியை மேலுக்கு அழைத்துச் செல்லுதல் முதல் கண்ணகி வழிபாடு - வாழ்த்து - வரந்தரு காதை வரை முடிவாகும்.

இவற்றையே சுருக்கினால், (1) தொடக்கம் - புகார்க் காண்டம், (2) நடு - மதுரைக் காண்டம், (3) முடிவு - வஞ்சிக்காண்டம் என்னும் மூன்றுக்குள் அடக்கலாம்.

சுருங்கக்கூறின், காப்பியம் இன்பியலில் (comedy) தொடங்கித் துன்பியலில் (Tragedy) முடிந்தது எனலாம். துன்பியல் முடிவு வஞ்சிக் காண்டத்திற்குத் திறப்பு விழா செய்தது.

கூறியது கூறல்

சொன்னதையே திரும்பச் சொன்னால் ‘கூறியது கூறல்’ என்னும் குற்றமாகும் என்பர். “கூறியது கூறினும் குற்றம் இல்லை வேறொரு பொருளை விளைக்கு மாயின்” என்னும் நூற்பா கூறியது கூறலுக்கு மாற்றாகும். மன எழுச்சிகள் தோன்றும்போது அழுத்தம் திருத்தம் ஏற்படவும் கருத்தை வலியுறுத்தவும் கூறியதை மீண்டும் கூறுதல் ஒரு வகை நாடகக்கூறு என்னும் கருத்தை ‘The Art of Play Writing’ என்னும் நூலில் படித்த நினைவு இருக்கிறது. இந்தக் கூறு சிலப்பதிகாரத்தில் உள்ளது.

கானல் வரியில் இது இடம் பெற்றிருப்பது வேறொரு தலைப்பில் கூறப்பட்டுள்ளது. இனி, கண்ணகி இதைக் கையாண்டிருப்பதைக் காணலாம்.

கணவன் கொலையுண்டான் என்பதை யறிந்த கண்ணகி கூறியனவாக ஊர்சூழ்வரிக் கதையில் பின்வருமாறு உள்ளது.

“காதல் கணவணைக் காண்பனே ஈதொன்று
காதல் கணவணைக் கண்டால் அவன் வாயில்
தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று
தீதறு நல்லுரை கேளாது ஒழிவனெல்
நோதக்க செய்தனன் தென்னன் இதுவொன்று”

(19:10-14)


“பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறுஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுஉம்
சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல்”

(51 - 59)


“நின்றாள் கினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் கினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையா”

(73–74)

வழக்குரை காதையில், பாண்டியனது அரண்மனை வாயில் காவலனை நோக்கிக் கண்ணகி கூறியது:

“வாயிலோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள் என்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே” (20:24—29)
வாயில் காவலன் பாண்டியனிடம் சென்று கூறியது:

“பொற்றொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாளே

கணவனை இழந்தாள் கடையகத்தாளே, என”

(20: 42-44)

இவ்வாறு கூறியது கூறல் நாடகத்திற்கு ஒருவகை ஒலிநயச் சுவை பயக்கிறது. இவை யெல்லாம் நாடகக் கூறுகள் ஆகும். சொல்நயம் பொருள்நயம்போல ஒலி நயமும் நாடகத்திற்கு வேண்டும் அல்லவா? மற்றும், நாடகம் பார்ப்பவர்கள் நாடகக் கதைப் பகுதிகளை நடிகர்களின் வாயிலாகவே அறிந்துகொள்வது போல், இயற்கைக் காட்சிப் புனைவுகள் நீங்கலாக, மற்ற கதைப் பகுதிகள், சிலம்பில் பெரும்பாலும் கதை மாந்தர்களின் பேச்சைக் கொண்டே அறியும்படி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒன்று:- இந்தக் கால நாடகங்களில்-திரை ஓவியங்களில், முன்னால் நடந்த நிகழ்ச்சிகளுள் சில, நாடகத்தின் இடையிலோ - முடிவிலோ அறிவிக்கப்படுதல் போன்ற அமைப்பு சிலம்பிலும் உள்ளது. ஓர் எடுத்துக்காட்டு: கோவலன் இளமையில் ஆற்றிய கொடைச் செயல், இரக்கச் செயல், துணிவுச் செயல் முதலியன, பதினைந்தாவது காதையாகிய அடைக்கலக் காதையில் சாவதற்கு முன் மாடலன் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சிறந்த நாடகக் கூறுகளாகும்.

எனவே, இயல் இசை நாடகப் பொருள் தொடர் நிலைச் செய்யுள் காப்பியம் என்னும் மணி மகுடம் சிலப்பதிகாரத்திற்குச் சூட்டப்பட்டிருப்பது நனிசாலும்.