சிலம்போ சிலம்பு/காப்பியத்தில் கானல் வரியின் இடம்

17. காப்பியத்தில் கானல் வரியின் இடம்

திருப்பு முனை

சிலப்பதிகாரக் காப்பியத்தில் காணல் வரி என்னும் காதை ஒரு திருப்பு முனையாகும். கண்ணகிக்குச் சிலை செய்வதற்கு உரிய கருங்கல்லைச் சுமக்கச் செய்து வடபுலத்துக் கனக விசய மன்னர்களின் முடித்தலையை நெரித்தது இந்தக் கானல் வரிப்பாட்டு தான் என மாடல மறையோன் சேரன் செங்குட்டுவனிடமே கூறினான். இந்த வரிப்பாட்டு இல்லையெனில், மதுரைக் காண்டத்திற்கும் வஞ்சிக் காண்டத்திற்கும் இடம் இருந்திருக்காது.

கானல் = கடற்கரைச் சோலை வரி=ஒருவகைப் பாடல் கோவலனும் கண்ணகியும் கானலில் அமர்ந்து பாடிய பாட்டுகள் கானல் வரியாகும்.

புகாரிலே இந்திர விழா நடைபெற்றது. அவ்விழாவில் வழக்கம்போல் மாதவி ஆரவாரமாக ஆடல் பாடல் நிகழ்த்தினாள். பலரும் கண்டு களித்தனர். கோவலனால் இதைப் பொறுக்க முடியவில்லை. தனக்கென்று மாதவி உரிமையாய் விட்டபிறகு, பலரும் களிக்க ஆடலாமா என எண்ணி வெறுப்புற்றான். இது சில ஆடவர்க்கு உரிய ஓர் இயல்பு. தான் எவளை வேண்டுமானாலும் விரும்பலாம் - ஆனால், தன் மனைவி மட்டும் வேறு எவனையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்கலாகாது. ஒரு மாப்பிள்ளைக்குப் பெற்றோர்கள் பெண் பார்த்துவிட்டு வந்தார்கள். இந்த மாப்பிள்ளை, இதற்கு முன் வேறு மாப்பிள்ளை எவனாவது வந்து அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுப் போனானா?.

அப்படியிருந்தால் அந்தப் பெண் எனக்கு வேண்டாம் - என்று சொன்னானாம். இந்த மாப்பிள்ளைக்கு அண்ணனாய் இருப்பான் போல் தெரிகிறான் கோவலன். மாதவியோ கணிகை குலத்தவளாயினும் கற்புடையவள்.

தன்மேல் கோவலன் வெறுப்புற்றிருக்கிறான் என்பதை அறிந்த மாதவி திறமையாக அவனைக் குளிரச் செய்தாள். பெண்களுக்கா சொல்லித் தரவேண்டும்! முழு நிலாப் பருவம் (Full Moon) வந்தது. ஊரார் கடலாடச் சென்றனர். அப்போது மாதவியும் கோவலனும் கூடக் கடற்கரை ஏகினர். இவர்கள் சென்றதிலேயே பிரிவு இயற்கையாக ஏற்பட்டு விட்டது. குதிரை போன்ற கோவேறு கழுதையின் மேல் கோவலன் சென்றான்; ஒரு வண்டியில் மாதவி சென்றாள்.

கடற்கரைக் கானல் சோலையில் ஒரு புன்னை மர நிழலில் புதுமணல் பரப்பில் ஒர் அறைபோல் சுற்றித் திரைகட்டி மறைவிடமாக்கி உள்ளே கட்டில் இட்டு அதன் மேல் மாதவியும் கோவலனும் அமர்ந்தனர்.

மாதவி வயந்த மாலை கையில் இருந்த யாழை வாங்கினாள். பத்தர், கோடு, ஆணி, நரம்பு இவற்றில் குற்றம் இல்லாத யாழை, பண்ணல், பரிவட்டணை முதலிய எண் வகையாலும் இசையெழுப்பி ஆய்வு செய்தாள் (சோதித்தாள்). விரல்கள் நரம்புகளின் மேல் படர, வளர்தல், வடித்தல் முதலிய இசைக்கரணங்கள் எட்டும் சரிவரப் பொருந்தியுள்ளனவா எனச் செவியால் கேட்டுணர்ந்தாள். கோவலனை வாசிக்கும்படி ஏவவில்லை - வாசிக்க வேண்டிய தாளத்தைத் தொடங்கித் தருவீர் என்று கேட்பவள் போல் கோவலன் கையில் யாழைத் தந்தாள்.

கோவலன் இயற்கையாகக் கானல்வரி வாசித்தான். ஆனால், அதில், ஒரு பெண்மேல் குறிப்புவைத்து வாசித்தாற் போன்ற அறிகுறியுடன் பாடல்கள் அமைந்திருந்தன. குறும்புக்காகக்கூட - விளையாட்டிற்காகக்கூட இவ்வாறு ஒரு குறிப்பு வைத்திருக்கலாம். பாடல்களின் கருத்துகள் சுருக்கமாக வருமாறு:

1. ஆற்று வரி - வாழி காவேரி

காவிரியே! சோழன் கங்கையைப் புணர்ந்தாலும் நீ புலவாய் - அது கற்பு - வாழி. சோழன் குமரியொடு கூடினும் நீ புலவாய் - அது கற்பு வாழி, புதுப்புனலுடனும் பேரொலியுடனும் நீ செல்வது சோழனுக்கு வளமேயாகும் - வாழி காவேரி - என்று முதலில் பாடினான். இந்த மூன்று கருத்துகட்கும் உரிய மூன்றுபாடல்களை மட்டும் இங்கே காண்பாம்.!

“திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயல் கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பு
என்றறிந்தேன் வாழி காவேரி"(2)

“மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயல் கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பு

என்றறிந்தேன் வாழி காவேரி"(3)

“உழவர் ஓதை மதகோதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்றன்
வளனே வாழி காவேரி”
(4)

காவிரியாற்றிற்கு உரிய சோழன் கங்கையாற்றையோ குமரி(கன்னி) யாற்றையோ சேர்ந்தாலும் கயலாகிய கண்ணையுடைய காவேரி சோழனுடன் ஊடல் கொள்ள மாட்டாள். அவ்வாறு ஊடல் கொள்ளாதிருப்பது தான் கற்புடைமையாகும். காவிரியே நீ வாழி - என்பதில் உள்பொருள் உள்ளது. விளையாட்டாகப் பாடிய இது மாதவியின் நெஞ்சில் வினையை விதைக்கத் தொடங்கியது. இனி அடுத்த கருத்துகட்குச் செல்லலாம்.

2. சார்த்து வரி - புகாரே எம்மூர்

முன்பு சூளைப் பொய்த்தவர் இவர் என்பதை எப்படி அறிவோம்? சங்கையும் முத்துகளையும் கண்டு, திங்களும் விண்மீன்களும் என எண்ணி -- அல்லி மலரும் புகாரே எம்மூர். (5).

பெண்கள் வீசிய குவளை மலர்களைக் கண்களே எனச் சிலர் மருண்டு நோக்கும் புகாரே எம்மூர் (6).

அன்று கையுறை ஏந்திவந்தவரை இன்று யாம் வேண்டி நிற்போம் என்பதை முன்கூட்டி அறியோம். கண்ணுக்கும் மலருக்கும் வேறுபாடு தெரியாமல் வண்டு மயங்கும் புகாரே எம்மூர் (7).

இந்தக் கருத்துகள் கொண்ட மூன்று பாடல்களும் தலைவன்மேல் குறைகூறிக் குற்றம் சுமத்தும் பாடல்கள்,  கோவலன் தன்மேல் மாதவியோ தோழிமாரோ குற்றம் சுமத்துவதாக எண்ணும் குறிப்பு உள்ளது.

3. அறிவேனேல் அடையேன்

மணலில் வலம்புரிச் சங்கு உழுத சுவடு மறையும்படிப் புன்னை மலர்த்தாது உதிரும் காணலிலே, இவளது கயல்கண் உண்டாக்கிய புண்ணுக்கு முலைகளே மருந்து போலும்! (8)

புலால் தின்னும் பறவை ஓட்டும் சாக்கில் கன்னி ஞாழலைக் கையால் ஓச்சும் இந்த அணங்கு இருப்பதை அறியேன்; அறிந்தால் வந்திரேன். (9)

மீன் விற்கும் உருவத்தில் கூற்றம் இருப்பதை அறியேன் அறிந்தால் வந்திரேன். (10)

யரோ ஒரு பெண்ணை எண்ணிக் கோவலன் கூறுவது போல் பாடல்கள் உள்ளன.

4. சிற்றுாரில் வாழ்கிறது

பிறரை வருத்தும் காமனுக்குத் துணையான முகம் திங்களாகும். அது சிற்றுாரில் வாழ்கிறது. (11)

மகளாய்க் கூற்றம் ஒன்று சிற்றுாரில் வாழ்கிறது. (12)

பறவை ஓட்டும் பெண் வடிவம் கொண்ட தெய்வம் ஒன்று வாழ்கிறது. (13)

5. இடர் செய்பவை

இடையும், (14): இணை விழிகளும் (15), இணை முலைகளும் (16) இடர் செய்கின்றன.

6. உயிர் கொல்வை

உன் குடும்பத்தினர் கடலில் புகுந்து உயிர் கொல்வர்; நீ என் உடலில் புக்கு உயிர் கொல்கிறாய். (17) உன் தந்தையர் கண்கள் (துளைகள்) பொருந்திய வலையால் உயிர் கொல்வர். நீ நின் கண்ணாகிய வலையால் உயிர் கொல்கிறாய். (18)

உன் குடும்பத்தார் படகால் உயிர் கொல்வர்; நீ நின் புருவத்தால் உயிர் கொல்கிறாய். (19)

7. கொடிய-வெய்ய

பவள உலக்கையால் முத்தம் குற்றுபவளின் கண்கள் குவளை மலர்கள் அல்ல; கொடிய - கொடிய (20)

அன்னம் தன் நடையைப் பார்த்து நடக்கும்படி நடப்பவளின் கண்கள் கூற்றம் - கூற்றம் (21)

நீல மலர்களைக் கொண்டு மீன் உணங்கலைத் தின்ன வரும் பறவைகளை ஒட்டுபவளுடைய கண்கள், வேல்கள் அல்ல - அவ்வேலினும் வெய்ய வெய்ய (22)

8. சேரல் மட அன்னம்

மட அன்னமே! அவள் நடையை நீ ஒவ்வாய். அவள் பின் செல்லாதே - தோற்றுவிடுவாய் - பாடல்.

சேரல்மட அன்னம் சேரல் கடைஒவ்வாய்
சேரல்மட அன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல்மட அன்னம் சேரல் நடைஒவ்வாய்
(23)

இவ்வாறு கோவலன் வேறு பெண்ணொருத்தி மீது மனம் நாடியவன் போன்ற குறிப்பமைத்துச் செயற்கை யாகப் பாடினான். இதைக் கேட்ட மாதவி தானும் செயற்கையாக வேறொருவன் மேல் குறிப்பமைத்து யாழ் இசையும் தன் குரல் இசையும் ஒன்றப் பாடலானாள். (24)

வண்டு ஒலிக்க, பூ ஆடை போர்த்து, கயற் கண்ணால் விழித்து அசைந்து நடந்தாய் காவேரியே. நீ இவ்வாறு நடந்தது நின் கணவன் செங்கோல் வளையாமையாலே யாம். (25)

சோலையில் மயில் ஆடவும் குயில் பாடவும் மாலை அசையவும் நடந்தாய் காவேரி, நீ இவ்வாறு நடந்தது நின் கணவனது வேலின் கொற்றத்தினாலேயாம். (26)

அவன் நாட்டை மகவாய் எண்ணி வளர்க்கும் தாயாக நீ உள்ளாய். ஊழிக்காலம் வரையும் இந்த உதவியை நீக்க மாட்டாய். இது அவன் அருளாலேயே வாழி காவேரி (27) இந்த மூன்றுக்கு மட்டும் உரிய பாடல்களைப் பார்க்கலாம். இவை மிகவும் புகழ்பெற்ற சுவைப் பாடல் களாகும்:-

ஆற்றுவரி

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூ ஆடைஅது போர்த்துக்
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங்கயல் கண் விழித்தொல்கி
நடந்த வெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி (25)

"பூவார் சோலை மயிலாலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறங்கண்டே

அறிந்தேன் வாழி காவேரி" (26)


“வாழி அவன்றன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி”
(27)

காவேரியைப் பெண்ணாக்கி அப்பெண்ணுக்கு ஒரு கணவனைப் படைத்து ஏதேதோ சொல்கிறாள். தனக்கு வேறு கணவன் ஒருவன் இருப்பது போல் தொடர்ந்து சொல்கிறாள்.

தலைவா முத்து பெறு என்கிறாய். முத்து வேண்டா. முத்தைக் கரையில் கொணர்ந்து பூக்களைத் தான் கொண்டு செல்லும் அலை கடலையுடைய புகாரே எம்மூர் (28)

தலைவா வளையல் கழன்று அலர் தூற்றுவது யாங்ஙனம் அறிவோம்? அன்னத்தையும் புன்னை மலரையும் மதியமும் விண்மீனும் என எண்ணி வண்டுகள் ஆம்பல் மலரை ஊதும் புகாரே எம்மூர். (29)

மாதர்க்குப் பிரிவு தருவாய் என்பதை யாங்கனம் அறிவோம்? சிற்றில் சிதைத்த கடலைச் சிறுமியர் தூர்க்கும் புகாரே எம்மூர். (30)

பிரிவைப் பொறுக்காத தலைவியின் மெலிவு, பெற்றோர்க்கு உண்மையை உணர்த்தி விடும்.

தோழியே! துணை புணரும் வண்டையும் என்னையும் நோக்கித் தன்னை மறந்தவன் வண்ணம் உணரேன். (31)

அடும்புகாள்! அன்னங்காள்! எம்மை நினையாது விட்டார் விட்டகல்க. நம்மை மறத்தாரை நாம் மறக்க மாட்டேம். (32) மாலைப் பொழுதே! நெய்தலே! என் கண்கள் போல் துயிலுவது இல்லையா? துயிலின், கனவில் அவர்வரின் கூறுவாய்! (33)

கடலே! அவர் சென்ற தேர்ச் சுவட்டை அழித்தாய். அவர் போலவே நீயும் என்னை மறந்தாயோ! (34)

தேர்ச் சுவட்டை அலைகள் அழிக்கின்றன. அன்னமே இது தகாது. (35)

அலையே! நீ தேர்ச் சுவட்டை அழித்தாய். நீ உறவு போல் இருந்து உறவு அல்லா யானாய். (36)

(தோழி சொல்வதுபோல்) தலைவா! மன்மதனது அம்புப் புண்ணைத்தலைவி மறைக்கிறாள். அன்னை அறியின் என் செய்கோ (37)

தலைவா! தலைவி உன்னால் பீர்க்கின் நிறம் கொள்கிறாள். அன்னை கடவுளைத் தொழுது காரணம் அறியின் என் செய்கோ (38)

தலைவா தலைவி தனியே துன்புறுகிறாள். அவளது உண்மையான நோயை அன்னை அறியின் என் செய்கோ (39)

(தலைவி சொல்வது போல்) தோழியே! ஞாயிறு போய் இருள் வந்தது. மயக்கும் இம் மாலை நம்மை மறந்தவர் இருக்கும் நாட்டிலும் உள்ளதோ (40)

இருளில் கண்கள் நீரைச் சொரிந்தனவே. மயக்கும் இம் மாலை அவர் நாட்டிலும் உளதோ (41)

பறவைகளின் ஒலிகள் அடங்கின. மயக்கும் மாலை அவர் இருக்கும் இடத்திலும் உளதோ (42)

ஒருவர் வந்து எம் விளையாட்டை மறப்பித்தார். அவர் நம் மனம்விட்டு நீங்கார். (43) ஒருவர் வந்து அருள் புரிவாய் என்றார். அவர் நம் மான் போலும் நோக்கை மறவார். (44)

நேற்று ஒருவர் வந்து, அன்னம் துணையுடனே ஆடியதையே நோக்கி நின்றார். அவர் நம்மைப் பிரியார். (45)

குருகே! எம் கானலை வந்து அடையாதே. ஏனெனில், நீ எம் தலைவனுக்குப் பிரிவு நோயை உணர்த்துவதில்லை; அதனால் நீ இங்கு வந்து அடையாதே! (46)

மாலைப் பொழுதே! வலையர் நெய்தல் யாழ் வாசிக்க நீ வந்தாய். என் உயிர் கொள்வாய். நீ வாழி! (48)

பிரிந்தவரின் உயிரை முற்றுகையிட்டாய். முற்றுகை இட்ட மதில்புற வேந்தனுக்கு நீ என்ன உறவு? (மதில்புறத்து நிற்கும் தலைவனைக் குறிப்பிட்டுச் சொன்னது இது) (49)

மாலையே! உலகெங்கும் கண்ணை மூட இருளைக் கொண்டு நீ வந்திருக்கிறாய். அவர் மணந்து பிரிந்ததால் உலகமே வறியதாய்த் தோன்றுகிறது. (50)

கடல் சூழ் தெய்வமே மாலைப் பொழுதை எண்ணாமல் பொய்ச்குள் உரைத்தவரின் குற்றத்தைப் பொறுத்தருளும்படி நின் மலரடி வணங்குகிறோம். (51)

இவ்வாறாக, கோவலன் வேறொருத்திமேல் தொடர்பு உள்ளதுபோல் குறிப்பு வைத்துப் பாட, பதிலுக்கு மாதவியும் வேறொருவன் மேல் தொடர்பு உள்ளது போல் குறிப்பு வைத்துப் பாடினாள். ஊழ்வினை வந்து உந்தியதால், கோவலன் மாதவிமேல் சினமும் வெறுப்பும் கொண்டு, பொழுது கழிந்ததால் மாதவியை விட்டுப் பிரிந்து ஏவலருடன் சென்றுவிட்டான். மாதவி உள்ளம் வருந்தி, காதலன் போய்விட்டதால் தனியளாய்த் தன்வீடு சேர்ந்தாள். (52) உலக இலக்கியங்களுள் ஏதாவது ஒன்றில் இவ்வளவு சுவையான பகுதி இருக்குமா என்று ஐயுறும் அளவில் இந்தக் கானல் வரி உள்ளது. இளங்கோ அடிகள் இத்தகைய கற்பனையை எங்கு யாரிடம் கற்றாரோ? நம் தமிழ்க் கழக இலக்கியங்களிலிருந்து பிழிந்து எடுத்த சாறாக இருக்குமோ இது! தமிழுக்கே உரியது அகப்பொருள் இலக்கணம் - என்று சொல்கிறார்களே - அதுதானோ இது. எவர் பெயரையும் குறிப்பிடாமல் நிகழ்ச்சியைச் சொல்வது அகப்பொருள்.

"மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்" (57)

என்பது தொல்காப்பியம் - அகத்திணையியல் நூற்பா. இதில் குறிப்பிட்ட எவர் பெயரையும் கூறாமையால், இதனை முழுக்க முழுக்க நூற்றுக்கு நூறு அகத்திணைப் பகுதி எனலாம். சிலப்பதிகாரம் புறப்பொருளேயாயினும் கானல் வரி மட்டும் அகப்பொருள் அமைந்தது.

கானல் வரியில் பல அகத்துறைகள் உள்ளன. அவை:தோழி தலைமகனிடம் வரைவு கடாயது. கையுறை மறுத்தல். குறியிடத்துப் போன பாங்கன் தலைமகளின் மிக்க காதலைக் குறிப்பால் அறிந்து உரைத்தது. கழறியதற்கு எதிர் மறுப்பு. தனியாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியது. பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல். புணர்ச்சி நீடிக்க இடந்தலைப் பாட்டில் புணர்தலுறுவான் கூறியது. குறியிடத்துக் கண்ட பாங்கன் சொல்லியது. காமம் சாலா இளமையோள் வயின் ஏமம் சாலா இடும்பை எய்தியோன் சொல்லியது. தோழியிற் கூட்டம் கூடிப் பின்பு வந்து வரைவேன் என்றாற்குத் தோழி கூறியது. குறை நயப்பித்தது. காமம் மிக்க கழிபடர் கிளவியாகத் தலைவி கூறியது. அலர் அறிவுறுத்தி வரைவு கடாவியது. பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைவி தோழிக்கு உரைத்தது. ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற்பழிக்கத் தலைமகள் இயற்பட மொழிந்தது. மாலைப் பொழுது கண்டு தலைவி கூறியது. வரைவு நீட்டித்த இடத்துத் தலைகன் சிறைப்புறத்தா னாகக் கூறியது,

இவ்வாறு பலதுறைகள் அமைத்துச் சுவையுறப் பாடப் பெற்றது கானல் வரி.

வரிப்பாட்டின் இலக்கணம் தொடர்பாக உள்ளவற்றில் சுவையான ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடலாம். அது, ஒரே அடி. இருமுறை மடக்கி வருதலாகும். அதாவது, இரண்டாம் அடி மூன்றாம் அடி.யாக மடங்கி வரும். அவை:


“கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
கங்கை தன்ளைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல்”
(2)

“கள்னிதன்லனப் புணர்ந்தாலும் புலவாய்வாழி காவேரி
கள்ளி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல்”
(3)

“விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்தார்ப்பு நடந்த வெல்லாம்”
(4)

“தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்”
(20)

“அள்ளம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்”
(21)

“புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்”
(22)

“கருங் கயற்கண் விழித்தொல்கி
நடந்தாய் வாழி காவேரி
கருங் கயற்கண் விழித்தொல்கி
நடந்த வெல்லாம்”
(25)

“காமர் மாலை அருககைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகசைய நடந்த வெல்லாம்”
(26)

"ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல்" (27)

"தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற் றென்செய்கோ
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய் மற்று" (34)

"ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய் வாழி கடலோதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய் மற்று" (36)

"பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்" (43)

"நீகல் கென்றே நின்றார் ஒருவர்
நீகல் கென்றே நின்றார் அவர்நம்" (44)

"நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்" (45)

"அடையல் குருகே அடையல் எங்கானல்
அடையல் குருகே அடையல் எங்கானல்" (46)

மேற்காட்டிய பாடல் பகுதியில் இறுதியில் தந்துள்ள 'அடையல் குருகே' என்று தொடங்கும் அடி பாடலின் முதல் அடியாகும். இதுவே இரண்டாம் அடியாகவும் மடங்கி வந்துள்ளது. மற்றைய பாடல் பகுதிகளிலெல்லாம் இரண்டாம் அடிகளே மூன்றாம் அடிகளாக மடங்கி வந்துள்ளன.

கானல் வரியைப் பற்றி இதுபோல் எழுதியதைப் படித்தால் முழுச் சுவையும் பெற முடியாது. சிலப்பதிகார நூலை எடுத்து வைத்துக் கொண்டு கானல் வரிப் பகுதியை ஏடு தள்ளி எடுத்துப் பாடல்களை உரக்க இசைத்துப் படித்தாலேயே முழுச் சுவையையும் பெற முடியும். யான் (சு. ச.) இந்தத் தலைப்பில் எழுதியுள்ள விளக்கம், நூலை எடுத்து நேராகப் பாடலைப் படித்துச் சுவைக்கவேண்டும் என்னும் ஆர்வத்தையும் முயற்சியையும் தூண்டும் பரிந்துரையேயாகும்.

நிற்க, - இந்தக் கால நிலைக்கு ஏற்ற கருத்து ஒன்றை இங்கே விதந்து கட்டாமல் விடுவதற்கில்லை. மாதவி வாயிலாக இளங்கோவடிகள்,

“வாழி அவள்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாயாகி
ஊழி உய்க்கும் பேருதவி
ஒழியாய் வாழி காவேரி”

என்று பாடியுள்ள பகுதி, நாட்டு மக்களாகிய குழந்தை கட்குத் தாயாக இருந்து எத்தனை ஊழிக் காலமாயினும் நீர் உதவிக் காக்குமாம் காவிரி. இங்கே புறநானூற்றில் உள்ள

“புனிறுதீர் குழவிக்கு இலிற்று முலைபோலச்
சுரந்த காவிரி மரங்கொள் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்”
(68:8-10)

என்னும் பாடல் பகுதியும் அம்பிகாபதி காப்பியம் - நாடு நகர் நலங்கூறு காதையில் உள்ள

“வீட்டு மக்களை விரும்பும் தாய்போல்
நாட்டு மக்களை நலமுடன் பேணி......
இயங்கும் காவிரி”
(98, 99)

என்னும் பாடல் பகுதியும் இன்ன பலவும் ஒப்புநோக்கத் தக்கன.

ஆனால், பொய்க்காது பேருதவி உய்க்கும் காவிரி, இன்று தமிழ் நாட்டுக்கு அவ்வாறு உதவ முடிகிறதா? காவிரியின் தொடக்க முதல் முடிவு வரை உள்ள பகுதிகள் சமமாக நீர் பெறும் உரிமை உடையவை என்னும் அறநெறி ஏற்கப்படின், புலவர்களின் உரைகள் பொய்யாக மாட்டா. வாழ்க காவிரி,