சிலம்போ சிலம்பு/வாணிகம்

13. வாணிகம்

உள்ளுருக்குள்ளேயோ வெளியூருக்குள்ளேயோ - உள் நாட்டுடனேயோ வெளிநாட்டுடனேயோ வாணிகம் இன்றி மக்களினம் வாழ முடியாது. எல்லாராலும் எல்லாப் பொருள்களும் உண்டாக்க வியலாது. ஒவ்வொருவரும் உண்டாக்கிய பொருள்களை ஒருவர்க் கொருவர் 'பண்ட மாற்று' செய்து கொண்டனர் பழங்காலத்தில்.

பின்னர்ப் பண்ட மாற்று படிப்படியாகப் பல உருவம் பெற்றுவர, இறுதியில் இன்றுள்ள வணிக முறை தோன்ற லாயிற்று. சங்க காலத்திலும் அதைச் சார்ந்த காலத்திலும், உள்நாட்டில் காலால் நடந்து எடுத்து வந்தும் வண்டிகளில் ஏற்றி வந்தும் பொருள்கள் பண்டமாற்று செய்யப்பட்ட தல்லாமல், பிறநாடுகளிலிருந்து நீர் வழியாகக் கப்பல்கள் வாயிலாகவும் பொருள்கள் கொண்டு வந்து தரப்பெற்று மாற்றாக வேறு பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

மனையறம் படுத்த காதை

பண்டைக் காலத்தில் சோழர்களின் தலை நகராகிய புகார் ஒரு பெரிய வாணிகக் களமாக (சந்தையாக) விளங்கிற்று. புதிய புதிய நாடுகளிலிருந்து பல்வேறு பண்டங்கள் கால் வழியாகவும், கப்பல் வழியாகவும் கொண்டுவரப் பெற்றுப் புகாரில் ஒருங்கு குவிக்கப் பட்டிருந்தனவாம். இது சிலம்பு - மனையறம் படுத்த காதையில்,

"அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவன ரீட்ட.."
(5-7)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விருந்தின் தேஎம் புதிய நாடுகள். ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு பொருள் மிகுதியாக உண்டாக்கப் படலாம். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பொருளுக்குப் பெயர் பெற்றதா யிருக்கலாம். இத்தகைய பன்னாட்டுப் பண்டங்களும் புகாரில் ஒருங்கு குவிந்திருப்பதால், பல நாடுகளும் ஓரிடத்தில் - ஒன்று சேர்ந்த காணப்படுவது போன்ற தோற்றம் புகாரில் காணப்பட்டதாம்.

அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை

நால் திசைப் பொருள்கள்:

அந்தி மாலையில் நிலா முற்றத்தில் கோவலனும் மாதவியும், மற்ற மக்களும் இன்பப் பொழுது போக்கினர். அது காலை, மேற்குத் திசையிலிருந்து வந்த கண்டு சருக்கரையையும் கிழக்குத் திசையிலிருந்து வந்த கரிய அகிலையும் புகைக்காமல், வடதிசையிலிருந்து வந்த வட்டக் கல்லில் தென்திசையிலிருந்து வந்த சந்தனக் கட்டைகளை அரைத்துக் குழம்பாக்கிப் பூசிக்கொண்டனராம்:

"குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு
குணதிசை மருங்கின் காரகில் துறந்து,
வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத்
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக..."

(35-38)

என்பது பாடல் பகுதி.

குளிர் காலத்தில் அயிரும் (கண்டு சருக்கரையும்) அகிலும் புகைக்கப் படும். இந்தப் புகை திட்டமான வெப்பத்தோடு மணமும் தரும். வேனில் (வெயில்) காலத்தில் வட்டக் கல்லில் சந்தனம் அரைத்துப் பூசிக்கொள்ளப் பெறும். வீடுகளில் சந்தனக் கட்டையைத் தேய்த்து அரைக்கும் வட்டக் கல் இருக்கும் என்பதை, எங்கள் வீட்டில் உள்ள கல்லைக் கொண்டே யானறிவேன். குளித்து விட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, நடுவில் சந்தனச் சாந்துப் பொட்டு இட்டு, அதன் நடுவில் சிறிய அளவில் குங்குமப் பொட்டு வைப்பது இளமைக்காலச் செயல். இப்போது வீடுகளில் வட்டக்கல் அருகியுள்ளது.

ஈண்டு நெடுநல் வாடை என்னும் நூலில் உள்ள

"இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப" (56)
"வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கின் சாந்தொடு துறப்ப" (51, 52)

என்னும் பகுதிகள் ஒப்பு நோக்கற் பாலன. சொல்லிச் செய்தாற்போல, இரு நூல்களிலும் இவை ஒத்துள்ளமை வியப்பு அளிக்கிறது.

மேலுள்ள பாடல் பகுதியால், மேற்கே யிருந்து அயிரும், கிழக்கேயிருந்து அகிலும், வடக்கிலிருந்து வட்டக் கல்லும், தெற்கிலிருந்து சந்தனக் கட்டைகளும் வரவும் விற்கவுமான வாணிகம் நடைபெற்றது என்பதை அறியலாம்.

புகார், கடற்கரையில்தானே இருந்தது. அதன் கிழக்கே கடலாயிற்றே - கிழக்கிலிருந்து அகில் எப்படி வரும்? - என்னும் ஐயம் எழலாம். உள்நாட்டில் அகில் விளையும் இடத்திலிருந்து கிழக்கேயுள்ள கடல் வழியாகக் கப்பல்கள் கொண்டு வரலாம் அல்லவா? மற்றும் கடல் தாண்டிக் கிழக்கேயுள்ள - வங்கக் கடலின் கீழ்பாலுள்ள நாடுகளி லிருந்தும் வரலாம் அன்றோ? மற்ற மூன்று திக்குகளி லிருந்து கடல் வழியாகக் கப்பல் வாயிலாக வரவேண்டும் என்ப தில்லை - தரை வழியாகவே வரலாம். .

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

மருவூர்ப் பாக்கம்:

புகார் நகரில் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் என்னும் இரு பகுதிகள் இருந்தன. புதுச்சேரியிலும், பிரெஞ்சுக்காரரின் ஆட்சியின்போது, வெள்ளைக்காரர் பகுதி, தமிழர் பகுதி என இரண்டு உண்டு. கடற்கரை ஒரமாக வெள்ளையர் பகுதியும் அதன் மேற்கே தமிழர் பகுதியும் இருக்கும். இப்போதும் அதற்குரிய அடையாளங்கள் உண்டு. இரண்டு பகுதிகளையும் இடையே ஒரு வாய்க்கால் பிரிக்கின்றது. வெள்ளைக்காரர் போன பிறகும், அவர் இருந்த பகுதி தூய்மையாக இருக்கிறது. தமிழர் பகுதி அவ்வளவு தூய்மையுடன் இருப்பதாகச் சொல்ல முடியாது. 'அண்மையிலிருந்து சேய்மைக்குச் செல்லுதல்', நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குச் செல்லுதல், எளிமையிலிருந்து அருமைக்குச் செல்லுதல், 'தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்' என்னும் உளவியல் (Psychology) முறைப்படி புதுச்சேரியிலிருந்து புகாருக்குச் செல்லலாம்.

புதுச்சேரியின் கடற்கரையில் வெள்ளையர் பகுதி இருப்பது போலவே, புகாரில் பன்னாட்டார் தங்கியிருந்த மருவூர்ப்பாக்கம் என்னும் பகுதி இருந்தது. அதன் மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. பாக்கம் என்பது ஊரைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. பட்டினம் என்பது நகரைக் குறிக்கும். பட்டினப்பாக்கம் என்பது, பட்டணமாக உள்ள பெரிய ஊர் என்பதைக் குறிக்கும்.

இனி மருவூர்ப் பாக்கம் என்பது பற்றிக் காணலாம். மருவு + ஊர் = மருவூர். மருவுதல் = சேர்தல் - கலத்தல். 'மருவுக மாசற்றார் கேண்மை' என்னும் திருக்குறளிலும் (800) இந்தச் சொல் இந்தப் பொருளில் ஆளப்பட்டிருப்பதை அறியலாம். வெளிநாட்டினர் பலரும் வந்து மருவிய - சேர்ந்த கலந்த ஊர்ப் பகுதி மருவூர்ப் பாக்கம் எனப் பட்டது. திருமணம் நிகழ்ந்ததும் மணமகன் மணமகள் வீட்டிற்கோ - மணமகள் மணமகன் வீட்டிற்கோ முதல் முதலாகச் சென்று கலந்து உண்ணுதற்கு 'மருவுண்ணுதல்' என்னும் வழக்கு தென்னார்க்காடு மாவட்டப் பகுதியில் உண்டு. இரு விட்டாரையும் 'சம்பந்திகள்' எனக் கூறுவது உண்டு. சம்பந்திகள் என்னும் வடமொழிப் பெயருக்குப் பதிலாக, 'மருவினோர் - மருவினவர்' என்னும் தமிழ்ச் சொல்லால் குறிப்பிடுவது சால அழகுடைத்து.

மருவூர்ப்பாக்கத்தில் இருந்தவை

காண்போரைப் போக விடாமல் தடுக்கும் அழகிய பயன் நிறைந்த யவனர் இருக்கை - பல நாடுகளிலிருந்து கப்பலில் பல்வேறு பண்டங்களை ஏற்றி வந்தவர்கள் தங்கும் இருப்பிடம் - வண்ணக் குழம்பும் சுண்ணமும் சாந்தமும் (சந்தனமும்) பூவும் புகைக்கும் பொருள்களும் நறுமணப் பொருள்களும் ஆகியவற்றைப் பலர் கூவித் திரிந்து விற்கும் தெருக்கள் - அளவிட முடியாத உடை வகைகள், மணி வகைகள், கூல (தானிய) வகைகள், உண்ணும் பொருள்கள் - மீன், இறைச்சி, உப்பு, வெற்றிலை, இன்னும் பல்வேறு பொருள்கள் விற்கப்படும் பகுதிகள், பல்வேறு தொழில் வல்லுநர்கள் இருக்கும் இடங்கள் முதலியன மருவூர்ப் பாக்கத்தில் இருந்தன. பாடல்:

"கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்,
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்ணருஞ் சாங்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர விதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்

மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்கொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுகர் செறிந்த ஊன்மலி இருக்கையும்......" (9-27)

(காழியர் = பிட்டு வாணிகர். கூவியர் = அப்பம் சுடு வோர். பாசவர் = வெற்றிலை விற்பவர். ஒசுநர் = எண்ணெய் விற்பவர்.) என இன்னும் நீளமாக இளங்கோ பாடிச் சென்றுள்ளார். சீனம், அரபு நாடுகள், கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளி நாட்டார்கள் யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடப்படுவர்.

மேற் காட்டியுள்ள பாடல் பகுதியைக் கொண்டு, புகார் நகரில் நடைபெற்ற வணிக வளத்தைத் தெளியலாம்.

விற்பனைக் கொடி

பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்களின் வாயிலாகப் பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்த வணிகர்கள், கடல் கரையில் உள்ள வெண் மணல் பகுதியில் பொருள் களைப் பரப்பி விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு பொருளையும் அறிவிக்கும் - அறிவிப்புக் கொடிகளை அவ்வப் பொருள்கள் குவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் நட்டு விற்பனை செய்யப்படுகிறதாம்.

"கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கிெடியெடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்கு......" (130-133)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்தில் வணிகர்கள் சிலர், அகல - நீள வாட்டமுள்ள துணியில் எழுதி விளம்பரப் படுத்தி விற்பனை செய்கின்றனர். துணியின் வாயிலாக விளம்பரப்படுத்தும் வழக்கு அந்த நாளிலும் இருந்ததாகத் தெரிகிறது. இப்பகுதியில் உள்ள மாலைச் சேரி என்பது நோக்கற்பாலது. மாலை = ஒழுங்கு. சேரி என்பது, ஒவ்வொரு பொருளும் விற்கும் ஒவ்வொரு பகுதியையும் குறிக்கும்.

இவ்வளவு சிறப்புடன் திகழ்ந்த காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டது வேதனைக்கு உரியது. இதுகாறும் சோழரின் புகார் நகர வணிக வளம் இடம் பெற்றது. அடுத்து, பாண்டியரின் மதுரை நகரின் வணிக வளம் காணலாம.

ஊர் காண் காதை

மதுரை மாநகரின் புறஞ்சேரியிலே (புறநகர்ப் பகுதியில்) கண்ணகியைக் காக்குமாறு கவுந்தியிடம் ஒப்படைத்துவிட்டுக் கோவலன் மதுரையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். அவன் கண்ட வணிகப் பகுதிகள் இவண் வருமாறு:ஒன்பான் மணிகள் (நவரத்தினங்கள்) விற்கும் கடைத்தெருகொடி கட்டி விளம்பரம் செய்து பொன் விற்கப்படும் பகுதி - பருத்தி நூலாலும் பட்டு நூலாலும் பல் வகை மயிர்களாலும் நெய்யப்பட்ட பல்வேறு வகை ஆடைகள் விற்கும் பகுதி - மிளகுப் பொதியுடனும் நிறுக்கும் துலாக் கோலுடனும் ஒரிடத்தில் நில்லாது நேரம் பாராது கூலங்களைச் (தானிய வகைகளைச்) சுமந்து திரிந்து விற்கும் பகுதிகள் - இன்ன பிற வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகள் ஆகியவற்றையும் மற்றுமுள்ள நகர்ப் பகுதிகளை யும் கோவலன் சுற்றிப் பார்த்தான்:


"வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்,
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்குஅஞர் ஒழித்தாங்கு
இலங்குகொடி எடுக்கும் கலங்கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்,
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர்
அம்பண அளவையர் எங்கனும் திரிதரக்
காலம் அன்றியும் கருங்கறி முடையொடு
கூலம் குவித்த கூல வீதியும்.."
(199-211)

என்பது பாடல் பகுதி. ஒன்பது மணிகளின் இயல்பை ஆராய்ந்து அறிபவர் இருக்கும் கடைத் தெருவில் பகைவர் வருவார் என்ற அச்சமே இல்லையாம். அவ்வளவு காவல் உள்ள பகுதி அது.

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என்னும் நால்வகையான பொன் கட்டிகளை விற்பவர், கொடி கட்டி விளம்பரம் செய்து விற்பராம்.

இந்தக் காதையில், ஒன்பது மணிகளின் இயல்புகளும் அவற்றை ஆராய்ந்து காணுவோரின் பொருளறிவும் விளக்கப்பட்டுள்ளன. மதுரை பற்றிய தலைப்பில் வாணிகம் பற்றி இன்னும் விரிவாகக் காணலாம்.

பண்டைக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற வாணிக வளத்தை நோக்கின் பெரு வியப்பு தோன்றுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சிலம்போ_சிலம்பு/வாணிகம்&oldid=1658003" இலிருந்து மீள்விக்கப்பட்டது