சிவஞான போதம்- அவையடக்கம்

மெய்கண்டார் அருளிச்செய்த

தொகு

சிவஞானபோதம்- அவையடக்கம்

தொகு

மாபாடிய உரை

தொகு

அருளியவர்: மாதவச் சிவஞானயோகிகள்

தொகு

அவை அடக்கம்

தொகு

மங்கல வாழ்த்துக் கூறுமுகத்தான் ஈண்டைக்கு இறைவன்ஆவான் இவன் என்பது உணர்த்தி, இனி அவையடக்கம் கூறுமுகத்தான் அவ்விறைவனால் இயம்பப்படும் நூல் உணர்ந்தாரது உயர்வும், ஏனைச் சமயநூல் உணர்ந்தாரது இழிவும் உணர்த்துகின்றார்:-

தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்

- எனவரும்.

உணர்ந்து எனவே குருமுகத்தாற் கேட்கப்படும் சிவாகம நூல்பற்றி என்பது வருவித்து உரைத்துக் கொள்ளப்படும். தமையுடைதல் எனவே, தாம் தலைவனுக்கு உடைப் பொருள் என்பதூஉம், எம்மையுடைமை எனவே, யாம் தமக்கு உடைப்பொருள் என்பதூஉம் பெறப்பட்டன. உடைப்பொருள் அடிமையும் உடைமையும் என இருவகைப்படும். அவற்றுள், உயிர்வருக்கம் எல்லாம் இறைவனுக்கு அடிமை எனவும், மாயை கன்மங்களும் அவற்றின் காரியங்களும் உடைமை எனவும் உணர்ந்துகொள்க.

தன்னுணர்வார் என்புழி இரண்டன் உருபு விகாரத்தால் தொக்கது. உடைமையின் என ஏதுப்பொருட்கண் வரும் இன்னுருபும், புணராமையான் என்னும் ஆன் உருபும் தொக்கு நின்றன.

எமையிகழார் என்பது எம்மைக் [1]“குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவார்” அன்றி இகழ்தல் செய்யார் என்க. எனவே, எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எனவே, தம்மை உணர்ந்தது அன்றித் தலைவனை உணர்தல் கூடாது என்பது பெற்றாம்.

அற்றேல், [2]“தன்னாலே தனையறிந்தால் - தன்னையும் தானே காணும்” எனவும், [3]“அதிலறிவு அடங்கி - மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும்” எனவும், தலைவனை உணர்ந்தன்றித் தம்மை உணர்தல் கூடாது என்னும் சார்புநூல் இதனோடு முரணும் பிறவெனின், - முரணாது; அஃது ஆண்டுச் சிவரூபத்தான் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறு கூறிற்று எனவும், இஃது ஆன்மா சுத்திப்பின் சிவப்பேறு ஆமாறு உணர்த்துகின்றது எனவும், தெரிந்துகொள்ளப்படும் ஆகலின். [4]“அரன் - தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார்” என்பதனோடு முரணாமையும் இவ்வாறே உணர்ந்து கொள்க.

இதனானே, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வாராவார் ஆன்மலாபப் பேறுடையார் என்பது பெற்றாம். அவர் சிவமேயாகலின் எம்மையுடைமை என்றார். உடைமை - உடையராந்தன்மை. எம்மையுடைமை என இரண்டாவது குறிப்புப்பெயர் கோடல் அமையும்என்பது, [5]“இரண்டாகுவதே” என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் “புகழையுடைமை” என உதாரணம் காட்டி யாப்புறுத்தமையானும் அறிக.

தம்மையுணரார் எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம்ஒரு பொருள்உண்டு என்பதை உணராத உலகாயதரும், தம்மைக் குணிப்பொருள் என்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு அடிமையென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருள் எனக் கொள்ளினும், அவருள் பாஞ்சராத்திரிகள் உடைப்பொருளாகிய தமக்கு அணுபரிமாணங் கோடலானும், உடையான் அல்லாதானை உடையான் என மயங்கிக் கோடலானும், உடையானுக்குப் பரிணாமங் கூறுதலானும், சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமங் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மையுணரார் எனக் கொள்க.

‘தம்மை உணர்ந்தார் தன்னுணர்வார்’ எனவே, தம்மை உணரார் தன்னுணரார் என்பது தானே போதரும் என்பதுபற்றி உணரார்உணரார் என்று ஒழிந்தார். முன்னின்ற உணரார் எதிர்மறை வினைப்பெயர்.

அவர் உடங்கியைந்து தம்மிற் புணராமையாவது, பிறவிக் குருடர் பலர் குழீஇக்கொண்டு வேழங்காண்டல் விருப்பான் அது நின்றுழிச் சென்று கையினால் ஒவ்வோர் உறுப்பினைத் தைவந்து, வேழமாவது முறம்போல்வது என்றும், உரல்போல்வது என்றும், உலக்கை போல்வது என்றும், மலை போல்வது என்றும் தம்முள் மாறுகொண்டு ஒருவரை ஒருவர் மறுத்துக் கலாம் விளைத்தல்போலச், சித்தாந்த சைவநெறி நின்று ஆசான் திருவருள் பெறாதார், தத்தம் உணர்விற்கு ஏற்பச் சமய நூல்களில் ஒவ்வொன்றினை ஆராய்ந்து அவற்றிற் கூறும் ஏகதேசப் பொருள்களேபற்றிக் கூறி, ஒருவரை ஒருவர் மறுத்துத் தம்முள் மாறுகொண்டு கலாம் விளைத்தல். அங்ஙனம் கலாய்க்கின்றுழிக் கண்ணுடையான் ஒருவன் நோக்கி, இவர் செவி முதலிய ஒரோர் உறுப்புக்களே பற்றிக் கூறிக் கலாம் விளைக்கின்றார் எனவும், வேழத்தின் இயல்பு வேறு எனவும் தெரிந்துணர்ந்து அவர்க்கு அதனை உணர்த்துதலின், [6]“கொடிறும் பேதையும்” போலத் தாம் கொண்டதேபற்றி, அவனையும் தம்முள் ஒருவனாக வைத்து இழித்துக்கூறி, மாறுகோடலேயன்றிப் பொருளெனக் கொள்ளமாட்டார். அதுபற்றி அவன் வெகுளாது இவரதுஇயல்பு இதுவென நகையாடி ஒழிந்துவிடும். அதுபோல, ஒவ்வொரு சமயநூல் பற்றி அங்ஙனம் பிணங்குவாரை அவையெல்லாம் ஒவ்வோர் ஏகதேச இயைபுபற்றிக் கூறினவாகலான், அவைபற்றிப் பிணங்கற்க எனவும், பொருட்டன்மை வேறுஎனவும், யாம் இந்நூலால் உணர்த்தப்புகின், அவர் அதனைக் கொள்ளமாட்டாது பயிற்சிவயத்தால் தாம் கொண்டதேபற்றி எம்மையும் தம்முள் ஒருவராக வைத்து இகழ்ந்துரைப்பார் ஆகலின்; அவ்வழி அவர் வெள்ளறிவு இதுவென்று ஒழிவதேயன்றி அதனைக் கொள்ளாம் என்பார் கேளாம் புறன் என்றார். கேட்டல்-பொருளாகக் கோடல். அது “ஊறுகேளாது” என்பதனானும், [7]“கேளாரும் வேட்ப மொழிவதாம்” என்பதனானும் அறிக.

புறன் - புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும், புறங்கூற்றுமொழியும் என்பது இரட்டுற மொழிதலாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது, புறச் சமயிகள் அல்லாத பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழி.

நால்வகைச் சமயங்கள்:

தொகு

இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச் சமயமும், புறச் சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்கு வகைப்படும். அவற்றுள் புறப்புறச் சமயம் உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் என அறுவகைப்படும். புறச்சமயம் தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என அறுவகைப்படும். அகப்புறச்சமயம் பாசுபதம் மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். [8]அகச்சமயம், பாடாணவாத சைவம் முதல் சிவாத்துவிதசைவம் ஈறாக அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்து உணர்க.

இவ்வாறு இரண்டாய் அடக்கியும், அவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி நான்காக வகுத்துக் கூறுதலும் அமையும் என்பது, தொல்காப்பியத்தில் அகம் புறம் என்று இரண்டாய் அடக்கிக் கூறிய பொருளைத் தம்முள் வேறுபாடு நோக்கிப் பன்னிருபடலத்தில் அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்து ஓதியவற்றானும் உணர்க. இஃது அறியாதார், தொல்காப்பியமும் பன்னிருபடலமும் தம்முள் முரணுவனவாகக் கருதி, அவற்றுள் ஒரு நூலையே பற்றி மற்றொன்றனை இகழ்வர்.

புறப்புறச் சமயம்
தொகு

ஈண்டுக் கூறிய சமயத்தாருள், உலகாயதர் முதல் ஆருகதர் ஈறாகிய அறுவரும், வேதம் சிவாகமம் இரண்டனையும் நிந்திக்கும் நாத்திகர் ஆயினும், ஒரு நூல் என்றும் பிரமாணம் என்றும் கொண்டு ஒருநெறிக்கண்ணே நிற்றலான், அவர் சமயம் புறப்புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.

புறச்சமயம்
தொகு

தார்க்கிகர் முதல் பஞ்சராத்திரிகள் ஈறாகிய அறுவரும், வேதம் பிரமாணம் எனப் பொதுவகையாற் கொள்ளினும், அவருள் தார்க்கிகர், [9]தன்னால் பிரமாணியம் கொள்ளாமையானும், வேதப் பொருளோடு முரணிப் பொருட்டன்மை கோடலானும், மீமாஞ்சகர் கரும காண்டமாகிய வேத மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு, ஞானகாண்டம் ஆகிய உபநிடதங்களை இகழ்தலானும், ஏகான்மவாதிகள் ஞானகாண்டம் மாத்திரைக்கே பிரமாணம்கொண்டு கருமகாண்டத்தை இகழ்தலானும், ஏனை மூவரும் வேதவாக்கியங்களில் தத்தம் மதத்திற்குப் பொருந்துவன மாத்திரையே எடுத்துக்கொண்டு ஏனையவற்றிற்குப் பிரமாணம் கொள்ளாமையானும், வேதப் புறமாகிய நூல்களைப் பிரமாணம் எனக் கோடலானும், இவ்வறுவரும் சிவாகம நிந்தகர் ஆகலானும் இவர் சமயம் புறச்சமயம் என வேறு வைத்து எண்ணப்பட்டன.

அகப்புறச்சமயம்
தொகு

பாசுபதர் முதலிய ஐவரும், வேதம் சிவாகமம் இரண்டற்கும் பொதுவகையாற் பிரமாணம் கொள்ளினும், அவ்விரண்டற்கும் புறமாகிய பாசுபதம் முதலிய நூல்கட்குச் சிறப்புவகையாற் பிரமாணம் கோடலானும், வேதம் சிவாகமம் இரண்டினும் ஆகா என விலக்கப்பட்டனவற்றை ஆதரித்தலானும், ஐக்கியவாதசைவர் வேதம் சிவாகமம் இரண்டற்கும் சிறப்புவகையாற் பிரமாணம்கொண்டு, அவற்றில் விலக்கியன ஒழித்து விதித்தவழி ஒழுகுவார் ஆயினும், எல்லாப் பெருங்கேட்டிற்கும் மூலகாரணமாகிய ஆணவமலத்துண்மை கொள்ளாமையானும், அதன் உண்மை சாதிக்கும் சிவாகம வாக்கியங்களை இகழ்தலானும், அவ்வறுவகைச் சமயமும் அகப்புறச் சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.

அகச்சமயம்
தொகு

ஏனைப் பாடாணவாத சைவர் முதலிய அறுவரும் பொருளுண்மையெல்லாம் சித்தாந்த சைவரோடு ஒப்பக் கொள்ளும் அந்தரங்க உரிமை உடையராயினும், அவ்வப் பொருள்கட்குக் கூறும் தன்னியல்பு, பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலான் அவர்சமயம் அகச்சமயம் என வேறுவைத்து எண்ணப்பட்டன.

இவ்வாறு நால்வகைச் சமயங்கட்கும் சித்தாந்த சைவத்தோடு உளதாகிய வேற்றுமைத் தாரம்மியம் கண்டுகொள்க.

சிவாத்துவித சைவம்

தொகு

அகச்சமயம் ஆறனுள் சிவாத்துவித சைவமாவது நிமித்தகாரணத்துக்குப் பரிணாமங் கூறுவதாகலின், அது நிமித்தகாரண பரிணாமவாதம் எனவும் கூறப்படும். அங்ஙனங் கொண்ட சிவாத்துவிதசைவர் கருத்துணராதார், சிவாத்துவிதசைவமாவது யாதோ எனவும், [10]“நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவா” என்றமையின், இறுதிக்கண் எடுத்து ஓதப்படும் சுத்தசைவம் போலும் எனவும் மயங்குவர். சுத்தசைவம் நுட்பப் பொருள் உணராமை மாத்திரையேபற்றி வேறு வைக்கப்பட்டதன்றிக் கருத்துவகையாற் சித்தாந்த சைவத்தின் வேறு அன்மையிற், சுத்தசைவம் சித்தாந்த சைவத்துள் அடங்கும் என்று உணர்க. அற்றாகலினன்றே, [11]“நிலவுலகாய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக் - குலவினர் அளவளாவாக் கொள்கைய தாகி” என ஏனைச் சமயங்களை எடுத்தோதி விலக்கிச் சுத்தசைவத்தை அங்ஙனம் விலக்காது ஒழிந்ததூஉம் என்க.

இனி, இவ்வாறன்றிப் பாடாணவாதத்திற்கும் பேதவாதத்திற்கும் தம்முள் வேறுபாடு சிறிதாகலின், அவ்விரண்டனையும் ஒன்றாகவைத்தெண்ணிச் சுத்தசைவத்தையும் உடன்கூட்டி, அகச்சமயம் ஆறு எனக் கோடலும் ஒன்று. இங்ஙனமாகலான், [12]“மெய்தரு சைவ மாதி யிருமூன்றும்” என்றதூஉம் பாடாணவாதம் முதலிய அறுவகைச் சமயங்களையும் எனக் காண்க. பாசுபதர் முதலியோர், கலைக்கு மேலுள்ள தத்துவங்களை உணராமையின், அவர் [13]“வித்தையாதி- எய்துதத் துவங்கள் ஏய்வர்” எனக் கோடல் பொருந்தாமை அறிக. ஐக்கியவாத சைவர் கலைக்கு மேலுள்ள தத்துவங்கள் உண்டெனக் கொண்டாராயினும், மூலமலம் உண்டு என்பது அறியாமையின், மூலமல நீங்கிய முத்தர்க்கன்றிச் சுத்ததத்துவ புவனங்களில் எய்துதல் கூடாமையின், அவர்க்கு முத்தித்தானம் மோகினிக்குமேல் சுத்த வித்தைக்குக் கீழ் விஞ்ஞானகலர்க்குரிய தானமேயாம் ஆகலின், ஏனைப் பாடாணவாத சைவர் முதலியோரே, [14]“வித்தையாதி. . . . தத்துவங்களேய்வர்” என்று அறிக. [15]“புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்” என்புழியும் அகச்சமயம் என்றது, [16]“ஏகம் அனேகன் இருள்கரும மாயை யிரண்டு” என்னும் ஆறுபொருளும் கொண்ட பாடாணவாத முதலிய அறுவகைச் சைவங்களையேயாம் எனவும், புறச்சமயம் என்றது, அங்ஙனம் பொருளுண்மை கொள்ளாத ஏனை மூவகைப் புறச்சமயங்களையும் எனவும் உணர்ந்து கொள்க.



நால்வகைச் சமய விரி

தொகு

புறப்புறச் சமயம்

தொகு

1. உலகாயதம்

புறப்புறச் சமயம் ஆறனுள் உலகாயதமாவது:- காண்டல் அளவை ஒன்றே பிரமாணம்; காணப்படும் நிலம் நீர் தீ வளி என நான்கே தத்துவங்கள்; இவை நித்தப் பொருள்கள்; இவற்றின் கூட்டமே உடம்பு; பாகடையும் சுண்ணாம்பும் கூடியவழி செவ்வண்ணம் பிறக்குமாறுபோல இவற்றின் கூட்டரவின் ஓர் உணர்வு உண்டாம்; அவ்வுணர்வு உடம்பு வளர வளரும் தேயத் தேயும் ஆகலின், உடம்பிற்கு வேறே உயிர் என்பதும் பொய்; உடம்பிற்கு இன்பத்துன்பங்கள் இயல்பாய் உள்ளன; இவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய்; மயிலைச் சித்திரித்தாரையும், குயிலைக் கூவுவித்தாரையும் காணாமையின் கடவுள் உண்டு என்பதும் பொய்; இம்மையின் மங்கைப் பருவத்து மகளிரோடு மணந்து உண்டுடுத்து வாழ்வதே துறக்கவின்பம்; அது பெறாது, பகைவரால் நோயால் வறுமையால் நூல்களாற் பிறவாற்றால் வருந்துவதே நிரயத் துன்பம்; வேறே துறக்கம் நிரயம் உள என்பதும் பொய்; நான்குபூதக் கூட்டரவிற் பிராணவாயு நீங்கில் உணர்விழந்து உடம்பு நாசமாம்; அதுவே வீடுபேறு; வேறே வீடுபேறு உண்டென்பதும் பொய்; இவ்வுண்மை உணராத மடவோர் மறுமை உண்டெனக் கொண்டு தவங்கள் பட்டினி முதலியவற்றான் வருந்துவர்; கற்பு முதலிய சங்கேத நூல்கள் மதுகையின்றி மதியுடையோராற் செய்யப்பட்டன; பொன் நிலம் உணவு முதலிய தானங்களை உயர்த்துக்கூறும் நூல்கள் பசியான் வருந்தி நல்கூர்ந்தோராற் செய்யப்பட்டன; தேவகுலம் தண்ணீர்ப்பந்தர் கூவல் பொய்கை சோலை முதலியன செய்தலை உயர்த்துக்கூறும் நூல்கள் வழிச்செல்வோராற் கூறப்பட்டன; ஆகலான் இவற்றைக் கைவிட்டு உழவு பசுக்காவல் வாணிகம் செங்கோன்முறைமை முதலியனவாக ஆன்றோர் காட்டிய நெறியினின்று இம்மையின்பங்களை நுகர்ந்து வாழ்தல் உறுதிப்பயன் என்பதாம்.

இவ்வுலகாயதநூல் செய்தோன் பிருகற்பதி என்று உணர்க. இவ்வுலகாயதர் தேகான்ம வாதிகளும், இந்திரியான்ம வாதிகளும், பிராணான்ம வாதிகளும், அந்தக்கரணான்ம வாதிகளும் எனப் பலதிறப்படுவர்.

பௌத்தம்

இனிப், பௌத்தமாவது:- உலகத்துப் பிறந்து இறந்து உழன்று சீல முதலியவற்றான் நல்லுணர்வு தோன்றி முழுதுணர்ந்து முத்திபெற்றுத் தன்னைப்போற் பிறரும் உணர்ந்து உய்தற்பொருட்டுக் கருணையினாற் பிடகநூல் செய்தவன் புத்தக்கடவுள்; அந்நூலிற் கூறும் பொருள்களாவன ஞானமே ஆன்மா எனப்படும்; அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந்தோறும் தோன்றி அழியும்; அங்ஙனம் தோன்றி அழியுங்கால் மான்மத நாற்றம்போல முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்தின் தோன்றிய வாசனை, பிற்கணத்தில் தோன்றும் ஞானத்திற் பற்றுதலான் அறிவு முதலாயின நிகழும்; மற்றும் உள்பொருள் எனப்பட்டவை எல்லாம் கணந்தோறும் தோன்றி அழியும்; இந்த ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே முத்தி என்பதாம். ஞானங்கூடக் கெடுதல் முத்தி என்பாரும் உளர்.

இப்பௌத்த மதத்தர் மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திராந்திகர், வைபாடிகர் என நால்வகைப்படுவர். இந்நால்வரும் முறையே எல்லாப்பொருளும் சூனியம் எனவும், முப்பொருள் சூனியம் எனவும், புறப்பொருள்உண்மை வழியளவையான் அறியப்படும் எனவும், புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் கூறுப. இந்நால்வரும் ஆதிபுத்தனுடைய மாணாக்கர்.

2. மாத்தியமிகர்

இவருள், மாத்தியமிகராவார்:- உலகத்துப் பொருள்கள் உள்பொருளாயின் அழியா; இல்பொருளாயின் தோன்றா; உள்ளவும் இல்லவும் ஆம் எனின் முரணும்; இரண்டும் அல்லவெனின் உணர்ச்சி கூடா; ஆகலின் இந்நான்கு பகுதியும் இன்மையான் எல்லாப் பொருளும் சூனியமே; மயக்கத்தாற் காட்சிப் பொருள்போலப் புலப்படுகின்றனவென ஆசிரியன் பிடகநூல் பொருள் உணர்த்தியவழி அதனை உண்மையாகக் கொண்டு மேல் வினாவாதார்.

ஆசிரியன் மொழிந்தது பொருள் எனக் கோடலிற் தலைமாணாக்கர், அதற்குமேல் வினாநிகழ்த்தாமையிற் கடைமாணாக்கர் என இரண்டும் ஒருங்குற்று நின்றமையின் மத்தியம மாணாக்கராய் மாத்தியமிகர் எனப் பெயர்பெற்றார் என்பது.

3. யோகசாரர்

இனி, யோகசாரர்ஆவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் பாழ் என்பதனை உடம்பட்டு ஞானமும் அவ்வாறு சூனியமாயின் வழங்கற்பாடு கூடாதன்றே? என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! ஞானமாத்திரம் உள்ளது; அந்த ஞானம் சாகாரம் நிராகாரம் என்று இருவகைப்படும்; அவற்றுள் வட்டம் சதுரம் கறுப்பு சிவப்பு முதலிய வடிவிற்றாய் அகத்தே தோன்றும் ஞானம் சாகாரம் எனவும், பந்தம் நீங்கியவழி அங்ஙனம் வேறுபாடின்றித் தொடர்ச்சியாய் எழுவதாகிய ஞானம் நிராகாரம் எனவும் கூறப்படும். இத்தன்மைத்தாகிய ஞானமேயன்றிப் பொருள் என வேறில்லை; கனவின்கட் புறப்பொருளை அவாவாது கேவலஞானத்தானே வழங்கக் காண்டலான் நனவின்கண் வழங்குவதும் அவ்வாறேயாம்; அவ்வுணர்வு அகத்தின் நிகழ்வதேயாயினும் அநாதி வாதனைவயத்தாற் புறத்தே காணப்படுவதுபோலத் தோன்றாநின்றதெனக் கொள்க என ஆசிரியன் உணர்த்தினான். அங்ஙனம் உணர்த்தப்பட்டோர், ஆசிரியன் மொழிந்ததனை உடம்பட்டு அதற்குமேல் வினாயினார் ஆகலின் யோகசாரர் என்று ஆயினார் என்பது.

பௌத்த மதத்தில் ஆசிரியன்மொழி உடம்படுதலை ஆசாரம் எனவும், அதற்குமேல் வினாவுதலை யோகம் எனவும் குறியிட்டு வழங்குபவாகலான், அவ்விரண்டானும் பெற்றபெயர் என்று உணர்க.

4. சௌத்திராந்திகர்

இனிச், சௌத்திராந்திகராவார்:- அங்ஙனம் ஆசிரியன் உணர்த்தியவழிப் புறப்பொருள் முழுவதும் சூனியம் என்பது என்னை? யான் இது கண்டேன் என்று உணர்வுழி, யான் என்னும் ஞானம் அகத்துப்பொருளும் இது என்று சுட்டியறியப்படுவது புறத்துப்பொருளும் ஆகலான் அவற்றிற்கு வேறுபாடு தெற்றென விளங்குதலானும், இரண்டும் ஒருங்குணர்தலேபற்றி ஒன்றென்றல் பொருந்தாமையானும், இரண்டும் ஒருங்குணர்தல் எனவே, வேறுபாடு உண்மை தானே பெறப்படுதலானும், ஞானமே குடம் படம் முதலியனவாகத் தோன்றாநின்றது எனக் கோடல் பொருத்தமன்று என வினாயினார்க்கு, நன்றே வினாயினீர்! புறத்துத் தோன்றுவனவும் உள்பொருளேயாம்; அவை காட்சிப்பொருள் அல்ல; குடவடிவிற்றாகிய ஞானம் உணர்ந்த பின்னன்றிக் குடம் உணர்தல் கூடாமையின் கணத்தில் தோன்றியழியும் குடம் முதலாயின அங்ஙனம் உணருங்காறும் நிலைபெறுதல் இன்மையாற் குடம் முதலாயின தத்தம் வடிவினை ஞானத்தின் வைத்திட்டு அழிந்த பின்னை, ஞானத்துட்பற்றிய வடிவானே அங்ஙனம் இறந்துபோய குடம் முதலாயின வழியளவையின் வைத்து உணரப்படும். இவற்றிற்குக் காரணம் என்னையெனின், புறம் அகம் என்னும் இருவகைச் சமுதாயமாம் அவற்றுள் புறச்சமுதாயம் நிலம் முதலாயின. அவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். அவை, நிலவணு, நீரணு, தீயணு, வளியணு என நால்வகைப்படும். அவை ஒருங்குபல தொக்கவழிப் புறச்சமுதாயம் தோன்றும். இனி, அகச் சமுதாயம் சித்தமும் சித்தப்பகுதியும் ஆம். அவற்றிற்குக் காரணம் ஐவகைப்படும் கந்தங்கள்; அவை, உருவம், வேதனை, ஞானம், குறி, வாசனை என்பனவாம். கந்தம் என்பது சமூகம் எனும் பொருட்டு. அவற்றுள் சித்தத்தாற் சிந்திக்கப்படும் சத்த முதலாயின உருவக்கந்தம். இவை புறத்து உள்ளனவாயினும் அகத்திற் சித்தத்தாற் சிந்திக்கப்படுதலின், அகச்சமுதாயத்துள் வைத்து எண்ணப்பட்டன. இனி, அகச் சமுதாயத்துட்பட்ட உடல் பொறி முதலியவற்றை உருவக்கந்தம் என்றலும் ஒன்று. அவ்வுருவக்கந்தத்தை உணரும் உணர்வு ஞானக்கந்தம்; அது சாகாரம் நிராகாரம் என்னும் வேறுபாட்டாற் பிரவிருத்தி விஞ்ஞானம் என்றும், ஆலய விஞ்ஞானம் என்றும் இருவகைப்படும். சாகாரம் சவிகற்பமாம். நிராகாரம் நிருவிகற்பமாம். இனி, இவ்வுணர்வால் தோன்றும் இன்பத்துன்ப நொதுமல்கள் வேதனைக்கந்தம். சாத்தன் கொற்றன் முதலிய பெயர்கள் குறிக்கந்தம். அப்பெயர்களாற் பகுத்துணரும் சவிகற்ப உணர்வு குறிக்கந்தம் எனவும், நிருவிகற்பம் ஒன்றே ஞானக்கந்தம் எனவும் கோடலும் ஒன்று. அவற்றின் வாசனை வாசனைக்கந்தம் ஆம். வாசனையெனினும், செய்கைஎனினும் ஒக்கும். குறியெனினும் சஞ்ஞை எனினும் ஒக்கும். இவ்வைந்தும் ஒருங்கே தொகுதலான் அகச்சமுதாயம் தோன்றும். இவற்றுள் உருவக்கந்தம் புறச்சமுதாயத்துள் வைக்கப்படும். ஏனை நான்குமே சித்தமும் சித்தப்பகுதியும் ஆகிய அகச்சமுதாயம் என்பாரும் உளர். சகமுழுதும் இவ்விருவகைச் சமுதாயத்துள் அடங்கும் என்று ஆசிரியன் உணர்த்தினான். அதுகேட்ட மாணாக்கர், இங்ஙனம் மாணாக்கர் வினாவிய கடாவிற்கேற்ப அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவின் முடிவுபெறும் எனக் கடாயினார். அவ்வழி ஆசிரியன் சூத்திராந்தம் கடாவிய நீர் சௌத்திராந்திகர் எனப் பெயர்பெறுக என்றமையின், அவர்க்கு அது பெயராயிற்று.

5. வைபாடிகர்

இனி, வைபாடிகராவார்:- ஆசிரியன் அங்ஙனம் உணர்த்தியவழி அதுகேட்ட மாணாக்கர், புறப்பொருள் ஞானத்தால் அநுமித்தறியற்பாற்றென்றது என்னை? ஞானமே தனக்குக் காட்சிப்பொருள் ஆகலானும், காட்சிப்பொருள் ஒன்றும் இன்றாயின், வியாத்தி உணர்தற்கு இடமின்மையான் வழியளவை நிகழாதாகலானும் இது மாறுகோளுரை போலும் எனக் கடாயினார் ஆகலின், அவர் வைபாடிகர் எனப்பட்டார். மாறுகோளுரை எனினும் விபாடை எனினும் ஒக்கும். அவர்க்குப் புறப்பொருள் காட்சிப்பொருளாம் எனவும் ஆசிரியன் உணர்த்தினான்.

இங்ஙனம் வினாயினார் கருத்துக்கேற்ப நால்வகைப்படுத்துச் செவியறிவுறுப்பினும், கணபங்கமுதலியவற்றை உடம்பட்டுக் கோடலான் எல்லாரும் முறையானே முழுதும் சூனியம் என்று கோடற்குரியர் என்பது ஆசிரியன் கருத்து. அங்ஙனமாயினும் வினாயினார் கருத்துக்கேற்ப ஆசிரியன் விடைப்பொருளை உறுதியாகக் கோடலின், மதம் வேறுபட்டு நால்வராயினார். இங்ஙனம் பௌத்தமதம் நான்கும் கண்டுகொள்க.

6. ஆருகதம்

இனி, ஆருகதமாவது:- சீவனும் அசீவனும் ஆச்சிரவமும் சமுவரமும் நிர்ச்சரமும் பந்தமும் வீடும் எனப் பதார்த்தங்கள் ஏழு உள. இவற்றுள் சீவன் அநாதிசித்தனும் முத்தனும் பெத்தனும் என மூவகைப்படும். இவற்றுள் அநாதிசித்தன் அருகக்கடவுள். முத்தன் மோகம் முதலிய பந்தத்தின் நீங்கினவன். பெத்தன் அவற்றுட் கட்டுண்டவன். இச்சீவன் எடுத்த உடம்பளவின் வியாபகமாய் உடம்புதோறும் வெவ்வேறாம்.

இனி அசீவன், புற்கலமும் ஆகாயமும் தன்மமும் அதன்மமும் என நான்குவகைப்படும். அவற்றுள் உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதமும், மரம் புல்லு முதலிய நிலையியற்பொருளும், பை முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற்பொருளும் எனப் புற்கலம் அறுவகைப்படும். இவற்றிற்குக் காரணம் பரமாணுக்கள். உலக ஆகாயமும், உலகம் கடந்த ஆகாயமும் என ஆகாயம் இருவகைப்படும். உலகங்களுக்கு உட்படும் ஆகாயம் உலக ஆகாயம் எனவும், உலகங்கட்குப் புறத்தே எல்லையின்றி உள்ளது உலகம் கடந்த ஆகாயம் எனவும் உணர்க. தன்மம் புற்கலத்தின் வேறாய் நன்மையைப் பயப்பது. அதன்மம் தீமையைப் பயப்பது. அசீவபதார்த்தவகை நான்கும் இங்ஙனம் கண்டுகொள்க. இவையெல்லாம் அத்திகாயம் என்னும் வாய்பாடு கூட்டி வழங்கப்படும்.

இனி ஆச்சிரவம் ஆவது, பொறிவழிச்சேறல்; கன்மத்தொடர்ச்சி என்பாரும் உளர்.

சமுவரம் ஆவது, அங்ஙனம் செல்லாமல் தடுத்து முத்திக்குக் காரணமாவது. அது நிலத்தின் எறும்பு முதலியன சாவாது வழிநோக்கி மெல்லமெல்ல இயங்குதலும், இனியவை கூறுதலும், நியம உணவும் முதலாயினவாம்.

நிர்ச்சரம் ஆவது, சுடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல் முதலிய தவம்.

பந்தம் ஆவது, இருப்புக்குடம்பை தன்னகப்பட்ட சுரைப்பழத்தை நீர்நிலையிற் கீழ்ச்செலுத்துமாறுபோலச் சீவனுடைய சுதந்திரத்தை அடக்கிப் பிறவியிற் சுழல்விக்கும் மோகம் முதலிய எண்குணங்களாம்.

வீடு ஆவது, இருப்புக்குடம்பை தகர்ந்தவழிச் சுரைப்பழம் மேலெழுமாறு போலச் சீவன் மோகம் முதலியவற்றின் நீங்கிச் சுதந்திரம் பெற்று உலகம் கடந்து எல்லையின்றி உளதாகிய ஆகாயத்தின் மேல்நோக்கியே சேறல். மேலெல்லைக்கண் இருத்தல் முத்தி என்பாரும் உளர்.

இவ்வெழுவகைப் பதார்த்தங்களும், அநேகாந்த வாதத்தாற் கூறப்படும். அஃதாவது, உடம்பு எடுத்தற்கு முன் சீவன் உண்டோ இல்லையோ என்ற வினாயவழி, உண்டாம், இல்லையாம், உண்டும்இல்லையுமாம், சொல்லொணாததாம், உண்டுமாம் சொல்லொணாதமும்ஆம், இல்லையுமாம் சொல்லொணாதும்ஆம், உண்டும் இல்லையுமாம் சொல்லொணாததுமாம் என எழுவகையான் இறுத்தல். வினாயவை எல்லாம் இவ்வாறே இறுக்கப்படும். ஆம் என்பது ஈண்டுச் சற்றென்னும் பொருட்டாயதோர் இடைச்சொல். சொல்லொணாதது என்பது உளதும்இலதும்அல்லாதது என்னும் பொருட்டு என்பது. எனவே, உள்ளதும் இல்லதும் உளதிலதும் இரண்டுமல்லதும் என நான்கு பக்கமாய், இரண்டும்அல்லது என்னும் பொருட்டாகிய சொல்லொணாதது என்பதனோடு உள்ளதும் இல்லதும் உளதிலதும் என்னும் மூன்றுங்கூட்ட ஏழுபக்கமாயின எனக் காண்க.

பொருளியல்பு இவ்வெழுவகையுள் ஒன்றாகச் சொல்லவும்படும் சொல்லவும்படாது என்பது கருத்தாகலின், முரணாமையும் அறிக. இவ்வெழுவகையுள் ஒவ்வொன்றேபற்றிக் கூறும் ஏனைச்சமயத்தார் கோட்பாடெல்லாம் உள்ளடக்கி நிற்றலின், இங்ஙனம் அநேகாந்தவாதம் கூறும் சமயமே மேற்பட்ட சமயம் என்பது அவர் கருத்து. ஆருகதம் முடிந்தது.

இவருள், உலகாயதன் காட்சிவாதி எனவும், பௌத்தன் கணபங்கவாதி எனவும், ஆருகதன் அநேகாந்தவாதி எனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனியவாதி எனவும், யோகசாரன் விஞ்ஞானவாதி எனவும், ஏனை இருவரும் சமுதாயவாதிகள் எனவும் உணர்க. இவ்வாறு புறப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க.


{{dhr|5em}

புறச் சமயம்

தொகு

1. தருக்கம்

இனிப் புறச்சமயம் ஆறனுள் தருக்கம் ஆவது:- வேசேடிகமும், நையாயிகமும் என இருவகைப்படும். அவற்றுள் வைசேடிக நூலிற் கூறும் பொருளாவன, திரவியம் குணம் தொழில் சாதி விசேடம் சமவாயம் இன்மை எனப் பதார்த்தம் எழுவகைப்படும்.

அவற்றுள் திரவியம், நிலம் நீர் தீ வளி ஆகாயம் காலம் திசை ஆன்மா மனம் என ஒன்பது வகைப்படும். அவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள். அவற்றின் காரணங்களாகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயம் முதலிய ஐந்தும் நித்தப்பொருள்கள். அவற்றுள், ஆகாயம் காலம் திசை மூன்றும் ஒரோவொன்றேயாய் வியாபகமாய் உள்ளன. ஆன்மாக்கள் வியாபகமாய் எண்ணிறந்தவனவாம். மனம் அணுவளவிற்றாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறாய் இருக்கும். ஆன்மா பரமான்மா சீவான்மா என இருவகைப்படும். பரமான்மா முற்றுணர்வுடையவன்; எல்லாம் வல்லவன்; அவனிச்சை வயத்தானே உலகம் தோன்றி ஒடுங்கும்; அவனாற் செய்யப்பட்டது வேதம். இனிச் சீவான்மாக்கள், சிற்றறிவினவாய் வினைக்கீடாகப் பிறந்திறந்து இன்பத்துன்பங்களை நுகர்வனவாம். ஆன்மாக்களுக்கு மனத்தோடு கூடாதவழி அறிவில்லை. இங்ஙனம் திரவியம் ஒன்பதும் கண்டுகொள்க.

இனிக் குணங்களாவன, திரவியம் பற்றுக்கோடாக நிகழ்வன. அவை, உருவம் சுவை நாற்றம் ஊறு முதலியனவாக இருபத்து நான்கு வகைப்படும். அவற்றுள், புத்தி இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி அறம் பாவம் என்னும் எட்டுக்குணமும், பாவனை என்னும் வாதனையும் சீவான்மாக்களுக்குச் சிறப்புக் குணங்கள். இவற்றுள் புத்தி விருப்பு முயற்சி மூன்று பரமான்மாவுக்குச் சிறப்புக்குணங்கள். பரமான்மாவின் குணங்களாகிய புத்தி முதலிய மூன்றும் நித்தியம். சீவான்மாக்களின் புத்தி முதலிய மூன்றும் அநித்தியம். ஏனையவும் ஓர்ந்து கொள்க.

தொழிலாவன, எழும்பல் வீழ்தல் வளைதல் நிமிர்தல் நடத்தல் என ஐவகைப்படும்.

சாதியாவது, பலபொருட்குப் பொதுவாகிய தன்மை. அது பரம் அபரம் என இருவகைப்படும்.

விசேடமாவது, ஒவ்வொரு பொருட்கே உரிய தன்மை. அவை, நிலவணு முதலிய பரமாணுக்களும் ஆகாய முதலிய ஐந்துமாகிய நித்தப் பொருள்களின் வேறுபாடுணர நிற்பனவாய்ப் பலவாம்.

சமவாயமாவது, அவயவம் முதலியவற்றிற்கு அவயவி முதலியவற்றோடு நீக்கமின்றி உளதாகிய இயைபு. அஃது ஒன்றேயாம்.

இன்மையாவது, முன்னின்மையும் அழிவுபாட்டின்மையும் என்றுமின்மையும் ஒன்றினொன்றின்மையும் என நான்கு வகைப்படும்.

ஆக இங்ஙனங்கூறும் எழுவகைப் பொருள்களின் சிறப்பியல்பு பொதுவியல்பு வேற்றியல்புகளை உணரவே உடம்பு முதலியவற்றின் வேறாகிய ஆன்மாவினியல்பு விளங்கும்; விளங்கவே, உடம்பு முதலியவற்றை நான் என்று எண்ணிய மித்தையுணர்வு கழியும்; அது கழியவே, முயற்சியின்மையின், அறம்பாவங்கள் இல்லையாய்ப் பிறவி ஒழியும்; ஒழியவே, வரக்கடவனவாகிய துன்பங்களின்மையின், உடம்பு முகந்துகொண்ட வினைப்பயன் நுகர்ச்சியாற் கழிவுழி இறுதித் துன்பங்கெட்டு மனத்தோடு கூடுதற்கு ஏதுவின்மையின், அறிவின்றிப் பாடாணம்போற் கிடப்பதே முத்தியென்பதாம். வைசேடிக நூல் செய்தவன் கணாத முனிவன்.

இனி நையாயிகமாவது:- வைசேடிக நூலிற் கூறியவற்றைச் சிறுபான்மை வேறுபடுத்துப் பிரமாணம் பிரமேயம் முதலாகப் பதினாறு வகையான் விருத்துக் கூறுவதாம். நையாயிக நூல் செய்தவன் அக்கபாத முனிவன்.

இங்ஙனம் இருவேறு வகைப்படும் தருக்கநூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கோடலின் அத்தவைநாசிகர் எனவும், புத்தநூலார் எல்லாப் பொருட்கும் கணபங்கம் கோடலின் முழுவைநாசிகர் எனவும் உணர்க. தருக்க நூலார் சிலவற்றிற்குக் கணபங்கம் கூறுமாறாவது, உண்டவுணவின் சாரமே அவயவங்களாய்ப் பரிணமித்துக் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வேறுபடுதலின், அவயவியாகிய உடம்பும் வளர்ந்தும் தேய்ந்தும் கணந்தோறும் பிறிதுபிறிதாம்; அங்ஙனம் கணந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வருதல் காணப்படாதாயினும், மழைத்தாரையால் நிறையும் பொய்கைநீரும் இறைப்பக் குறையும் கூவல்நீரும் போல முடிவின்கண் காணப்படுதலின், கணந்தோறும் வளர்தலும் தேய்தலும் உடைமை பெற்றாம். இவ்வாறே மண்தொடுதல், பூரித்தல் முதலியவற்றால் நிலமும், யாற்றுநீர்ப் பெருக்கும் முதலியவற்றால் கடலும், கணந்தோறும் நிறைவு குறைவுடைமையால் இன்னோரன்னவையெல்லாம் கணபங்கமாய்ப் பிறிதுபிறிது தோன்றும் எனக் கொள்வர்.

சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் தார்க்கிகரும் பரமாணுகாரணவாதிகள் ஆயினும், அவருள் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் சமணரும் பரமாணுக்கள் ஒருங்கு பல தொக்குக் காரியமாம் என்பர்; தார்க்கிகர் இறைவன் இச்சைவயத்தாற் பரமாணுக்களிற் கிரியை தோன்றி, இவ்விரண்டு பரமாணுக்கள் தம்மிற்சேர்ந்து இரட்டையணுவாய், அவை மும்மூன்று தம்முள்சேர்ந்து மும்மையணுவாய், அவை நந்நான்கு தம்முட்சேர்ந்து நான்மையணுவாய், இவ்வாறே ஒன்றற்கொன்று சினையும்முதலுமாய் முறையே தோன்றிக் காரியப்படும் என்றும், ஒடுங்குங்காலும் இறைவன் இச்சைவயத்தான் அம்முறையே ஒடுங்கும் என்றும் கொள்வர்.

தார்க்கிகரும் சௌத்திராந்திகரும் வைபாடிகரும் நிலமணு நீரணு தீயணு வளியணு எனப் பரமாணுக்கள் நால்வகைப்படும் எனக் கொள்வர். சமணர் அவ்வாறு கொள்ளாது பரமாணுக்கள் எல்லாம் ஒருதன்மையனவே என்பர். இவை தம்முள் வேற்றுமை.

இங்ஙனமாயினும் தார்க்கிகர், வேதநெறியின் ஒழுகி வேதத்திற்குப் பிரமாணம் கோடலின், புறப்புறச் சமயிகளாகிய நாத்திகரோடு சேராது வைதிகருள் வைத்து எண்ணப்பட்டார் என்க. தார்க்கிக மதம் முடிந்தது.


மீமாஞ்சை

இனி மீமாஞ்சை யாவது:- வேதத்திற் கருமகாண்ட ஆராய்ச்சி செய்தற்கு எழுந்தது ஆகலின், அதுவும் வேதம் எனப்படும். அது, பன்னிரண்டு அத்தியாயமாகச் சைமினி முனிவனால் செய்யப்பட்டது.

அந்நூலுள் கூறும் பொருளாவது:- வேதம் ஒருவராற் செய்யப்பட்டதன்றி அநாதியே சுயம்புவாயுள்ளது; அங்ஙனமாகலின் வேதம் பிரமாணம் எனப்படும்.

வேதத்துள்ளும் “நீராடுக,” “வேள்வி செய்க,” “வழிபடுக,” என்றாற்போலத் தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்களே பிரமாணமாம். உலகத்துச் சொற்பொருள் உணரும் அவாவினராகிய இளையோர், “ஆவினை யாக்க,” “மேதியை விடுக்க,” என ஏவும் முதியோன் கூறும் மொழிகேட்டும், அதுபற்றி இயற்றும் முதியோன் செய்யும் தொழிலினைக் கண்டும், பின்பு “மேதியை யாக்க” “ஆவினை விடுக்க” என மாறிமாறிக் கூறியவழி அங்ஙனம் செய்யும் தொழிலினைக் கண்டும், இச்சொற்கு இதுபொருள் இச்சொற்கு இதுபொருள் எனவும், இங்ஙனம் சொற்பொருள் எல்லாம் தொழிற்படுத்தும் சொல்லானே உணர்தற்பாலன எனவும் உணர்ந்துகொள்வார் ஆகலின், வேதத்தினும் அவ்வாறு தொழிற்படுத்தும் சொற்களே பொருள்விளக்கிப் பிரமாணமாம் என்பது தெளியப்படும்.

அங்ஙனமன்றி, “உலகந் தோன்றி யொடுங்கும்” என்றும், “தோற்றியொடுக்குதற்கு ஓர் இறைவன் உண்டு” என்றும், “இந்திரன் முதலிய கடவுளர் உளர்” என்றும், “அவர் இவ்வியல்பினர்” என்றும் பொருளியல்பு கூறும் வாக்கியங்கள் பிரமாணம் ஆகாவாயினும், அவை தொழிற்படுத்துவனவாகிய சோதகவாக்கியங்கட்குப் புனைந்துரை வகையான் உபகாரம் ஆதல்பற்றிப் பிரமாணம் எனக் கொள்ளப்படும்.

“இந்திராயசுவாகா”, “வருணாயசுவாகா” என்றாற் போலும் வேதமந்திரங்களும் பொருளுடைய அல்லவாயினும் விதிவாக்கியங்கட்கு உபகாரமாதல் பற்றிப் பிரமாணம் எனப்படும்.

“சோதிட்டோமம்” “பரிமேதம்” என்றாற்போலும் வேள்விப்பெயர்களும், வேள்விகளின் வேறுபாடு முதலியன உணர நிற்றலிற் பிரமாணமாம்.

இங்ஙனம் வேதத்தின் விதிவாக்கியம் அல்லாதனவும் ஒருவாற்றான் விதிக்கு உபகாரப்படுதல் பற்றிப் பிரமாணம் என்று உபசரித்துக் கொள்ளப்படும்.

வேதமெல்லாம் இங்ஙனம் விதியும் புனைந்துரையும் மந்திரமுங் குறியீடும் என நான்குவகைப்படும். இவற்றுள், விதி அங்கியும் ஏனைமூன்றும் விதிக்கு அங்கமுமாம். விதிவாக்கியம் விதித்தலும் விலக்குதலும் என இருவகைப்படும். அவைபற்றிச் செய்யும் வினையும் அறமும் பாவமும் என இருவகைத்து.

“ஆன்மாவை அறிக” என விதித்தலின் ஆன்மாக்கள் பலவாய் நித்தமாய் வியாபகமாய்ப் பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்ந்துவரும்.

வினைசெய்தவர்க்கு வினையே துறக்கம் முதலிய பயன்களை உதவும். காமியப்பயன்களைக் குறித்து வினைசெய்யின் அவ்வினை அவ்வப் பயன்களை உதவும். காமியம் வேண்டாது, விலக்கியனவும் ஒழித்து, வேள்விசெய்யின் அவ்வினை முத்தியை உதவும்.

இவ்வான்மாக்களுக்கு வேறாய்ப் பரமான்மா ஒருவன் உண்டு என்பதூஉம், உலகந் தோன்றி அழியும் என்பதூஉம் பொய்; உலகம் என்றும் இவ்வாறே நிலைபெறும் என்பதாம்.

இங்ஙனம் செய்யப்பட்ட சைமினிசூத்திரங்கட்குப் பாடியம் செய்தான் சபரமுனிவன். சூத்திரத்திற்கும் பாடியத்திற்கும் சிறுபான்மை வேறுபாடுகொண்டு பட்டாசாரியன் சூத்திரமதம்பற்றி வழிநூல் செய்தான். பட்டன் மாணாக்கனாகிய பிரபாகரன் பாடியமதம் பற்றி வழிநூல்செய்தான். இங்ஙனமாகலின் மீமாஞ்சை மதம் இருவகைப்பட்டது.

பட்டாசாரியன், கன்மமே பயன்கொடுக்கும் என்றும், முத்தியில் நையாயிகர்போல ஆனந்தமுண்டு என்றும் கொள்வன். பிரபாகரன், கன்மநாசத்தில் அபூர்வம்என ஒன்று தோன்றிநின்று பயன்கொடுக்கும் என்றும், வைசேடிகர்போலப் பாடாணம் போற் கிடப்பதே முத்தியென்றும் கூறுவன்; பொருட்டன்மைகளினும் சிறுபான்மை பாட்டாசாரியனில் வேறுபடக் கூறுவன். பிரபாகரமதம் எனினும் குருமதம் எனினும் ஒக்கும்.

மீமாஞ்சைநூல் பன்னிரண்டு அத்தியாயத்துள் முதல் அத்தியாயம், முதற்பாதத்திற் கருமங்களுக்கு நேரே பிரமாணமான விதிவாக்கியங்கட்குப் பிரமாணம் இல்லையென வாதிகள் கூறும் சங்கைகளை மறுத்து வேதம் சுயம்புவாகலிற் பிரமாணம் ஆம் என்றும், இரண்டாம் பாதத்திற் புனைந்துரை வாக்கியங்களும் மந்திரங்களுமாகிய இரண்டும் விதிக்கு வேண்டப்படும் திரவியங்களும் துதிகளும் முதலியவற்றைத் தெரிவித்தலின் பிரமாணம் ஆம் என்றும், மூன்றாம் பாதத்தில் வேதத்தோடு முரணாது மனு முதலிய ஆன்றோராற் செய்யப்பட்ட மிருதி முதலியவற்றிற்கு மூலவேதம் உண்டென்று வழியளவையான் உணரப்படுதலின் அவை பிரமாணம் ஆம் என்றும், நாலாம் பாதத்தில் விதிவாக்கியத்தில் அகப்பட்ட வேள்விப்பெயர்கள் கருமவேறுபாடும், மாட்டேற்றும் அநுவாதமும் முதலியன உணரநிற்றலானும் கருமத்திற்குப் பெயராகலானும் பிரமாணமாம் என்றும் இவ்வாறு பிரமாணம் ஆமாறு உணர்த்துதலின், “பிரமாணவியல்” என்னும் பெயர்த்து.

இரண்டாம் அத்தியாயம், அங்ஙனம் பிரமாணமாகிய வேதத்திற் கூறப்பட்ட கருமங்கள், வேதவாக்கியங்களிற் கூறும் பகுதி வினைவேறுபடுதலும், ஒருவினை பலகாற்கூறுதலும், தொகைகூறுதலும், வெவ்வேறு குறியிடுதலும், குணவேறுபாடு கூறுதலும், வேறு பிரகரணத்திற் கூறுதலுமாகிய இவற்றான் ஒன்றற்கொன்று வேறுபாடு உடைமை தெரிவித்தலின், “கருமபேதவியல்” என்னும் பெயர்த்து.

மூன்றாம் அத்தியாயம், அங்ஙனம் பல வேறுவகைப்பட்ட கருமங்கட்குச் சுருதி இலிங்கம் வாக்கியம் பிரகரணம் தானம் குறியீடு என்னும் இவற்றானே இதற்கு இஃது அங்கம்எனவும், இஃது அங்கியெனவும், அங்கமும் அங்கியும்ஆம் முறைமை கூறுதலின், “அங்காங்கியியல்” என்னும் பெயர்த்து. தலைமைப் பொருள் அங்கியும், தலைமையில்பொருள் அங்கமும் ஆம் எனக் கொள்க.

சுருதி முதலியவற்றுள் சுருதியாவது, வேறுஒன்றனை அவாவாது தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது. அது விதிக்கும் சொல்லும், குறியீட்டுச் சொல்லும் விவகரிக்கும் சொல்லும் என மூவகைப்படும்.

இலிங்கமாவது, ஆற்றலாற் பொருளை உணர்த்துவது. அது சொல்லாற்றலும், பொருளாற்றலும் என இருவகைப்படும். ஒருமந்திரத்தின் வரும் தொழில்பற்றி அத்தொழில் நிகழும் கருமத்திற்கு அம்மந்திரம் அங்கம் என்பது சொல்லாற்றலாற் பெறப்படும். அவியினைக் கருவியாற் சுருவத்தாற் கையால் வாங்குக எனப் பொதுப்படக் கூறியவழி, கருவி இறைச்சிக்கும், சுருவம் நெகிழ்ந்த பொருட்கும் கை புரோடாசம் முதலியவற்றிற்கும் அங்கம் என்பது பொருளாற்றலாற் பெறப்படும்.

வாக்கியம் ஆவது, இங்ஙனம் சுருதியும் இலிங்கமும் அன்றிச் சொற்றொடர்பு பற்றி உணரவருவது.

பிரகரணமாவது, “சோதிட்டோமம் வேட்க” என்றாற் போலும் விதிவாக்கியங்களாற் பொதுப்பட உணர்ந்து, சிறப்பான் அறியப்படாத கன்மங்களான் அவாவப்பட்டு இவ்வாறு செய்யற்பாற்று என வகுத்துக்கூறுவது. அது பெரும்பிரகரணம் என்றும், இடைக்கட்பட்ட பிரகரணம் என்றும் இருவகைப்படும்.

தானமாவது, நிரினிறையிடமும், அண்மையிடமும் என இருவகைப்படும். அவற்றுள் அண்மை சொல்லின் அன்மையும், அநுட்டானத்தின் அன்மையும் என இருவகைத்து.

குறியீடாவது, காரணத்தான் வரும் பெயர். அது வேதமரபு பற்றிய பெயரும் உலகமரபுபற்றிய பெயரும் என இருவகைப்படும்.

இவ்வாறு சுருதி முதலியவற்றின் இயல்பு உணர்ந்து கொள்க.

நாலாம் அத்தியாயம், இங்ஙனம் அங்கமும் அங்கியும் ஆகிய கன்மங்களை அநுட்டிப்பிக்கும் பிரயோகம் ஆமாறு கூறுதலின், “பிரயோகவியல்” என்னும் பெயர்த்து. அங்கம் பிழைத்தவழி அங்கியின் பொருட்டு வேறங்கம் வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படும்; அங்கி பிழைத்தவழி அங்கத்தின் பொருட்டு வேறங்கி வேண்டப்படுவதின்று. அங்கம் பிழைத்தவழி அதற்கு அங்கி பலவுளவாயின், யாதொன்றற்கு அங்கமாயே மற்றொன்றற்கு அங்கியாம் அதன் பொருட்டே வேறங்கம் வேண்டப்படும்; மற்றொன்றன் பொருட்டு வேண்டப்படுவதின்று என்றாற்போலத் தெரிவிப்பது பிரயோகமுறைமை என்க.

அஞ்சாம் அத்தியாயம், ஒரு பிரயோகத்துட்பட்ட அங்காங்கிகளை அநுட்டிக்கும் முற்பிற்பாட்டு முறைமையைச், சுருதிமுறைமை, பொருண்முறைமை, பாடமுறைமை முதலியனபற்றித் தெரிவித்தலின், “முறைமைப்பாட்டியல்” என்னும் பெயர்த்து.

இங்ஙனம் இரண்டாவதின், உற்பத்திவிதியான் அறியப்படும் கருமபேதமும், மூன்றாவதின், உபகரிக்கும் விதியான் அறியப்படும் அங்காங்கி இயல்பும், நான்கினும் ஐந்தினும் பிரயோகிக்கப் படுவனவற்றின் விதியான் அறியப்படும் பிரயோகமும் முறைமைப்பாடுந் தெரித்துணர்த்தியபின், ஆறாம் அத்தியாயம், பயன் கூறுமுகத்தான் அதிகாரிகளாவாரைத் தெரிவித்தலின், “பயனியல்” என்னும் பெயர்த்து; அதிகாரவியல் எனினும் ஆம்.

இங்ஙனம் நால்வகைப்படும் எடுத்தோத்து விதிகளை ஆராயுமாறு ஆறாம் அத்தியாயத்துள் உணர்த்தி, மேல் ஏழாவது முதற் பத்தாவதிறுவாய் நான்கு அத்தியாயங்களான் மாட்டேற்றுவிதி ஆராயுமாறு உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்யற்பாற்று என எடுத்தோதுவது எடுத்தோத்துவிதி யெனவும், அதுபோலச் செய்க என மாட்டெறிவதி மாட்டேற்றுவிதியெனவும் உணர்க.

அவற்றுள் ஏழாம் அத்தியாயம், “அதுபோலச் செய்க” என்னும் வசனத்தானும், அங்ஙனம் வசனம் இல்லனவற்றிற்குப் பெயர் ஒருமையானும், அதுவும் இல்லனவற்றிற்கு இதுசெய்க என விதித்தலான் அது செய்யுமாறு யாதானும் ஒன்றனொடு மாட்டெறியும் வசனம் உண்டென வழியளவையான் உணரப்படும் விதியானும் மாட்டெறியுமாறு உணர்த்தி, எட்டாம் அத்தியாயம், அங்ஙனம் பொதுப்பட வழியளவையான் உணரப்படுவனவற்றுள் எதுபோல் எது செய்யப்படும் என்று அவாயவழிச் சொல்லொப்புமை பொருளொப்புமைபற்றி இன்னதுபோல் இன்னது செய்யப்படும் எனத் தெரிந்தெடுத்துணர்த்துதலின், ஏழாவதும் எட்டாவதும் “மாட்டேற்றியல்” என்னும் பெயரினவாம்.

ஒன்பதாம் அத்தியாயம், அங்ஙனம் மாட்டெறிந்தமைபற்றிப் பகுதிப்பொருளிற் செய்யும்காரியம் விகுதிப்பொருளிற் செய்வுழிப் பகுதியிற்கூறும் மந்திரமும் சாமமும் தொழிலும் விகுதிப்பொருளுக்கேற்ப வேறுபடக் கொள்ளுந்திறம் நியாயம் பற்றி ஊகிக்குமாறு உணர்த்துதலின், “ஊகவியல்” என்னும் பெயர்த்து.

பத்தாம் அத்தியாயம், அங்ஙனம் ஊகித்தபின்னர் மாட்டெறிந்தவற்றுள் ஆண்டைக்கு உரியன ஆகாதவற்றை நியாயம்பற்றி விலக்குமாறு உணர்த்துதலின், “விலக்கியல்” என்னும் பெயர்த்து.

இங்ஙனம் பத்து அத்தியாயத்தினும் எடுத்தோத்து விதியினும் மாட்டேற்று விதியினும் தெரித்துணர்த்த வேண்டியவற்றைத் தெரித்து உணர்த்திய பின்னர், ஏனை இரண்டு அத்தியாயத்தினும் இவ்விருவகைக்கும் பொதுவாகிய தந்திரமும் பிரசங்கமும் ஆமாறு உணர்த்துதலின், பதினொராம் அத்தியாயம் “தந்திரவியல்” என்னும் பெயர்த்து; பன்னிரண்டாம் அத்தியாயம் “பிரசங்கவியல்” என்னும் பெயர்த்து.

தந்திரமாவது, கருமஞ்செய்யுங்கால் தலைமைவினை பலவுளவாய் ஒருதேசமும் ஒரு காலமும் ஒருகருத்தாவுமாயவழி, அவ்வவற்றிற்கெல்லாம் பொதுப்பட அங்கவநுட்டானம் ஒருகாற் செய்யவமையும் என்றாற் போல்வது. அங்ஙனமன்றி மறித்துஞ் செய்யற்பாலதாதலை அவாபம் என்பர். பிரசங்கமாவது முதற்கண் வந்த ஆசிரியன் அமுதுசெய்தற்கு அட்ட அறுசுவை அடிசில் ஆசிரியனை அன்றியும் ஒருதலையான் அங்ஙனம் அட்டிடுதற்கு உரியனாய்ப் பின்புவந்த மருகனுக்கும் உபகாரம் ஆதல்போல, ஒன்றன்பொருட்டுச் செய்தவினை மற்றொன்றற்கும் உபகாரமாதல். ஆசிரியனுக்கு அட்ட அடிசில் ஆசிரியனுடன் வந்தவர்க்கும் உபகாரமாதல் பிரசங்கம்அன்று என்பது.

மீமாஞ்சை நூலில் பன்னிரண்டு அத்தியாயமும் நுதலிய பொருள் இங்ஙனம் தொகுத்து உணர்த்தப்பட்டது. இவற்றிற்கு உதாரணம் விரிப்பிற் பெருகும். நையாயிக நூலில் கூறும் தருக்கமும், மீமாஞ்சைநூலிற் கூறும் நியாயங்களும் எல்லா நூல்கட்கும் உபகாரமாம் எனக் கொள்க. மீமாஞ்சை மதம் முடிந்தது.


ஏகான்மவாதம்

ஏகான்ம வாதமாவது:- மாயா வாதமும், பாற்கரிய வாதமும், கிரீடாப் பிரமவாதமும், சத்தப் பிரமவாதமும் என நான்கு வகைப்படும்.


மாயாவாதம்

அவற்றுள், மாயாவாதமாவது;- சச்சிதானந்தமாய் நித்தமாய் வியாபகமாய் நிற்பது பிரமம்; பரமார்த்தத்ததில் அஃதொன்றே மெய்ப்பொருள்; ஏனையவெல்லாம் பிரமத்தின் விவர்த்தனமாய் இப்பியில் வெள்ளிபோல அவிச்சையினாற் காணப்படுபவனவாகலிற் பொய். இங்ஙனந் தோன்றும் உலகத்திற்கு முதற்காரணமாகிய மாயை பிரமம் போலச் சத்தும் அன்றி, முயற்கோடு போல அசத்தும் அன்றி அநிருவசனமாய் இருக்கும். அநிருவசனம் என்பது சொல்லொணாதது என்னும் பொருட்டு. இம்மாயைக்கு வேறாகிய பிரமரூபமே யான் என வேதாந்த ஞானத்தால் அறிவதே முத்தியென்பதாம்.

பாற்கரிய வாதம்

பாற்கரியவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே சடமும் சித்துமாகிய உலகங்களாய்ப் பரிணமித்தது. அங்ஙனம் பரிணமித்து விகாரப்பட்டமையை அறியாமையினாற் பந்தமாயிற்று. பரமார்த்தத்தில் ஒரு பொருளே. வேதாந்த ஞானத்தான் உடம்பிற்கு வேறாகிய ஆன்மரூபம் விளங்கும். அதுவே பரப்பிரமம் என்று அறிந்து அதன்கண் இலயித்தலே முத்தியென்பதாம்.

கிரீடாப்பிரம வாதம்

கிரீடாப்பிரமவாதமாவது:- முன்கூறப்பட்ட பிரமமே நான். யான் ஒருபடித்தன்றிப் பல்வேறு வகைப்பட்ட விகாரப்பொருள்களோடு கூடிப் பலவாற்றான் விளையாடுகின்றேன் என்று இவ்வாறு அறிவதே முத்தியென்பதாம்.

சத்தப்பிரம வாதம்

சத்தப்பிரமவாதமாவது:- காரணமாகிய பரப்பிரமம் இறுதிக்காலத்திற் சத்தவடிவிற்றாய் இருக்கும். அஃது அவிச்சையினாற் சடமும் சித்துமாய உலகங்களாய் விரியும். முடிவின்கண் சத்தமாத்திரையே உள்ளது என்று இங்ஙனம் அறிவதே முத்தி|௬௨|என்பதாம். இங்ஙனம் நால்வேறு வகைப்பட்ட ஏகான்மவாத நூல் செய்தவன் வியாதமுனிவன்.


சாங்கியமதம்

இனிச், சாங்கியமதமாவது:- மூலப்பகுதி நித்தியமாய், வியாபகமாய்ச் சடமாய் எல்லாப் பொருட்கும் காரணமாய் முக்குணங்களும் ஒப்பநின்ற அவதரமாய் அருவாய் உள்ளது. இஃது இருபத்துநாலாந் தத்துவம். இதன்கண் தோன்றும் காரியம் புத்திமுதல் நிலம் ஈறாக இருபத்துமூன்று தத்துவம் உள. இத்தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய் நித்தமாய் வியாபகமாய் அருவாய்ப் பலவாய் அறிவதும் செய்வதும் இன்றி அறிவுமாத்திரமாய் ஒன்றற்குக் காரணம் ஆதலும் காரியம் ஆதலும் இன்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத்து ஐந்தாம் தத்துவம் எனப்படும். இவ்விருபத்து ஐந்தாம் தத்துவமாகிய புருடன் முத்தியினும் பெத்தத்தினும் ஒரு தன்மையனேயாம். புருடனுக்கு மலினம் என்பதில்லை. தாமரையிலை நீர் போல் ஒட்டற்று நிற்பன். அநாதியே புத்தியைச் சார்ந்த அவிச்சை வயத்தாற் பெத்தன் எனப்பட்டு இன்பத்துன்ப உணர்வு தோன்றாநின்றது. புத்தியாவது மூலப்பகுதியின் பரிணாமம்; அதுவே மான் என்றும், அந்தக்கரணம் என்றும் கூறப்படும். அது பொறிவழியான் ஞானமாய்ப் பரிணமித்து விடயத்திற் செல்லும். புருடன் செய்வான் என்பதும், புத்தி அறியும் என்பதும் வேற்றுமை உணராமையான் என்பது. மூலப்பகுதியையும் புருடனையும் பகுத்து உணரவே அவிச்சை நீங்கும்; அதுவே முத்தி எனப்படும். ஆன்மாக்களுக்கு வேறாய் இறைவன் ஒருவன் உண்டு என்பது பொய் என்பதாம். இந்நூல் செய்தவன் கபிலமுனிவன். இதனுட் கூறும் சற்காரிய வாதம் சைவ முதலிய சற்காரியவாத நூல்கட்கு எல்லாம் உபகாரமாம். இதனுள் கூறும் அத்தியாச வாதம் மாயா வாதத்துக்கு உபகாரமாம். சாங்கிய மதம் முடிந்தது.


யோக மதம்

யோகமதமாவது:- நிலம் முதல்புருடன் ஈறாகிய இருபத்தைந்து தத்துவமும் பெத்தமுத்திகளும் நிரீச்சுர சாங்கியர் கூறியவாறேயாம். மூலப் பகுதியையும் புருடனையும் பகுத்து உணரும் விவேக உணர்வுபோல, எண்வகை உறுப்பிற்றாகிய யோகமும் முத்திக்கு ஏதுவாம். இருபத்தாறாந் தத்துவம் இறைவன் ஒருவன் உளன்; அவன், முற்றுணர்வு உடையனாய்ச் சாத்|௬௩|திரங்களை அருளிச்செய்து புருடருக்கு ஞானத்தை அறிவுறுப்பன் ஆகலின், இவ்வான்மாக்களுக்கு வேறு என்று உணரப்படும் என்பதாம். இந்நூல் செய்தவன் பதஞ்சலி முனிவன். யோகமதம் முடிந்தது.


பாஞ்சராத்திர மதம்

இனிப், பாஞ்சராத்திரமதமாவது:-இருபத்துநாலாம் தத்துவமாகிய குணதத்துவத்தின்மேல் இருபத்தைந்தாம் தத்துவம் வாசுதேவன் என்று ஒருவன் உளன். அவனே பரம்பொருள். அவனிடத்தினின்றும் கண்ணனும், அநிருத்தனும், மகரத்துவசனும், இரௌகிணேயனும் என நால்வர் உலகங்களைப் படைத்தற்பொருட்டுத் தோன்றினர். இந்த நால்வகை வியூகங்களாற் சடமும் சித்துமாகிய எல்லா உலகமும் படைக்கப்பட்டனவாகலான், எல்லாம் வாசுதேவன் பரிணாமமேயாம். இங்ஙனம் கூறும் பாஞ்சராத்திரத்தின் அன்றி வேதங்களின் உறுதிப்பயன் உண்டாகாது; ஆதலாற் பாஞ்சராத்திர முறையே தீக்கைபெற்று வாசுதேவனை வழிபட்டு வாசுதேவன் உருவில் இலயமாதலே முத்தி என்பதாம். இந்நூல் செய்தவன் வாசுதேவன் என்க. பாஞ்சராத்திர மதம் முடிந்தது. இவ்வாறு புறச்சமயம் ஆறும் கண்டுகொள்க.


அகப்புறச் சமயம்

தொகு

பாசுபதம்

இனி, அகப்புறச் சமயம் ஆறனுள் பாசுபதமாவது:- ஆன்மாக்கள், பலவாய் நித்தமாய் வியாபகமாய்க் காரியகாரணக் கூட்டரவால் தோன்றும் ஞானத்தால் தனித்தனி வேறாய் உள்ளன. இவ்வான்மாக்களுக்கு ஆணவமலம் என்பது ஒன்றில்லை. மாயை கன்மம் என்று இரண்டால் பந்தமுற்று இன்பத் துன்பங்களை அநுபவிக்கும். இவற்றின் உவர்ப்புத்தோன்றிச் சாத்திர முறையானே தீக்கை பெற்றவன்பால் ஈசனுடைய ஞானம் போய்ப் பற்றும். அப்போது, குடும்பத்தின்பாரம் புத்திரர்பால் வைத்தொழித்துத் துறவறத்திற் செல்வார்போல, ஈசனும் தன்னுடைய குணங்களை அவன்பாற் பற்றுவித்துத் தான் அதிகாரத்தின் ஒழிவுபெற்றிருப்பன் என்பதாம்.

மாவிரதம்

மாவிரதமாவது:- மேற்கூறிப் போந்த இயல்பையுடைய ஆன்மாக்கள் அவ்வாறே பந்தமுற்றுச் சுகதுக்கங்களை அநுப|௬௩|விக்கும். சாத்திரத்திற்கூறும் முறையே தீக்கைபெற்று எலும்பு மலையணிதல் முதலிய சரியைகளின் வழுவாது ஒழுகினவர் முத்தராவார். முத்தருக்குச் சிவனொடு சமமாக எல்லாக் குணங்களும் உற்பத்தியாம் என்பதாம்.

காபாலம்

காபாலமாவது:- ஆன்மாக்கள் இயல்பும் பந்த இயல்பும் மாவிரதர் கொண்டவாறேயாம். சாத்திரமுறையே தீக்கைபெற்றுப் பச்சைக்கொடியொன்று கைக்கொண்டு நாள்தோறும் மனிதர் தலையோட்டில் ஐயமேற்று உண்பவர் முத்தராய்ச், சிவன் ஆவேசித்தலால் எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமமாவர் என்பதாம்.

இம்மூவரும் முறையே சங்கிராந்த சமவாதியெனவும், உற்பத்தி சமவாதி எனவும், ஆவேச சமவாதி எனவும் உணர்க. இம்மூன்று மதமும் செய்தார் முறையே மாயை வித்தை காலம் என்னும் தத்துவங்களின் வைகும் உருத்திரர் மூவர் எனக் கொள்க.

வாமம்

இனி, வாமமாவது:- பாற்கரியன் கூறியவாறே சடமும் சித்துமாகிய அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே. வாமநூலில் விதித்த முறையே ஒழுகிச் சத்தியில் இலயித்தலே முத்தி என்பதாம். இந்நூல் செய்தார் சித்தபுருடர். சத்தி தத்துவத்தின் வைகும் ஓர்ஆன்மாவாற் செய்யப்பட்டது சுத்த சாத்தம் என்று அறிக.

வைரவம்

இனி, வைரவமாவது:- பெரும்பாலும் வாமமதத்தோடு ஒத்துச் சிறுபான்மை ஆசாரங்களான் வேறுபட்டு வயிரவனே பரம்பொருள் எனக்கொண்டு வைரவபதத்திற் சேர்வதே முத்தி என்பதாம்.

ஐக்கியவாத சைவம்

இனி, ஐக்கியவாத சைவமாவது:-

“இன்மைமல மாயை கன்மம் என்றிரண்டே யிறைதான் இலங்குபல உயிர்களு முன்புரிந்தவிரு வினையின்-
தன்மைகளால் எவர்க்கும் தனுகரண புவன தந்திடுமிங்(கு) இதனாலே யிருபயனும் சார்ந்து-
கன்மமெலா நேராக நேராதன் மருவக் கடவுளருளா லெவையும் கழித்திடுவன் அதனாற்-
பின்மலமா னவையணுகா பெருகொளிமுன் புளதே பெற்றிடும்”

என்பதாம்.

இவ்வாறு அகப்புறச் சமயம் ஆறும் கண்டுகொள்க. காளாமுகம் சாம்பவம் முதலியனவும் இவற்றின் பகுதியாய் அடங்கும்.

இனிப், பாடாணவாத முதலிய அகச்சமயங்கள் ஆறன் கருத்துச் சங்கற்ப நிராகரணத்தில் விரித்து ஓதியவாற்றான் அறிக; ஈண்டும் வந்துழி வந்துழிக் காட்டுதும். ஈண்டுக் கூறாத சமயங்களும், கூறியவற்றின் பகுதியவாய் இவற்றுள்ளே அடங்கும். அஃதறிந்து அடக்கிக் கொள்க.

அவையடக்கம் முடிந்தது

திருச்சிற்றம்பலம்




<ref></

ref>

பார்க்க:

தொகு

சிவஞான பாடியம் /* அவை அடக்கம் */


சிவஞான பாடியம்

சிவஞான போதம்- சிறப்புப்பாயிரம்

சிவஞான போதம்- மங்கலவாழ்த்து

[[]]

  1. 1. திருவாசகம், திருவம்மானை, 20.
  2. 2.சிவப்பிரகாசம், உண்மை-22.
  3. 3.சிவப்பிரகாசம், உண்மை-28.
  4. 4.இந்நூல்சூத்.9, அதி.1 நாடியோ.
  5. 5.தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமையியல், 10-ஆம் சூத்திரம்.
  6. 6. திருவாசகம், போற்றித் திருவகவல், 63. கொடிறு என்பதை இக்காலத்தார் குறடு என வழங்குப.
  7. 7.திருக்குறள், அதி. 65. சொல்வன்மை, குறள்:3.
  8. 8.அகச்சமயம் ஆறாவன: பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பன.
  9. 9. இதனைத் தருக்கசங்கிரக உரையிற் சத்தப்பிரமாணம் கூறும்வழிக் காண்க.
  10. 10.சிவப்பிரகாசம், உண்மை:49.
  11. 11.சிவப்பிரகாசம், உண்மை: 49.
  12. 12.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.
  13. 13.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.
  14. 14.சிவஞான சித்தி, இரண்டாம் சூத்திரம், 73.
  15. 15.சிவப்பிரகாசம், பாயிரம்:7.
  16. 16.திருவருட்பயன், அறியுநெறி: 2.