சீர்மிகு சிவகங்கைச் சீமை/அணிந்துரை
அணிந்துரை
முனைவர் கோ. விசயவேணுகோபால், எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.,
(முன்னாள்) பேராசிரியர் & தலைவர், கலை வரலாற்றுத்துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
"சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல்" டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்கள் இப்போது "சீர்மிகு சிவகங்கைச் சீமை" எனும் வரலாற்று நூலை எழுதி வெளியிட்டிருக்கின்றார். பெரிய மறவர் சீமையின் வரலாற்றில் நாட்டஞ்செலுத்தி வந்தவர், இப்போது சின்னமறவர் சீமை வரலாற்றில் நாட்டஞ்செலுத்தி நல்லதொரு நூலை நமக்கு அளித்துள்ளார். மொத்தம் பதின்மூன்று இயல்கள் கொண்ட இந்நூலின் முதல் பதினொரு இயல்களில் சங்க காலந்தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையிலான சிவகங்கைச் சீமையின் தோற்ற வளர்ச்சிகள் குறித்த வரலாறு தக்க முதன்மை, துணைமைச் சான்றாதாரங்களோடு விளக்கப்பட்டுள்ளது. 12 ஆவது இயல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிவகங்கைச் சீமையின் பங்கு பற்றி விளக்குகிறது. 13 ஆவது இயல் சிவகங்கை வரலாறு குறித்து முன்னர் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிய விமர்சனமும் விளக்கமுமாக அமைந்துள்ளது.
சிவகங்கைச் சீமை பற்றிய அனைத்துச் செய்திகளையும் உள்ளடக்கியதாகவும், நடுநிலையோடு எழுதப்பட்டதாகவும் இந்நூல் அமைந்துள்ளது. ஆசிரியர் தொகுத்துத் தந்துள்ள முதன்மை, துணைமை ஆதாரங்கள் அவர்தம் உழைப்பினை நமக்குப் புலப்படுத்துகின்றன. முதன்முதலாக ஆசிரியர் அரிதின் முயன்று தொகுத்தளித்துள்ள செப்பேடுகள் வரலாற்றாய்வாளர்கட்கும், சமூகவியல் ஆய்வாளர்கட்கும் கிடைத்த ஒரு புதையல் என்றே சொல்லலாம். ஆசிரியர் ஏற்கனவே சேதுபதிகளின் செப்பேடுகளை வெளியிட்டுப் புகழ்பெற்றவர். இப்போது சிவகங்கைச் செப்பேடுகளை வெளியிட்ட முதல் வரலாற்று ஆசிரியராகவும் சிறப்புப் பெறுகிறார்.
ஆசிரியர் 11 ஆவது இயலில் எடுத்துக்காட்டியுள்ள தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பற்றிய செய்திகள் சிவகங்கை மன்னர்களின் தமிழ்த்தொண்டு பற்றி விளக்குவதோடு, தமிழ் இலக்கிய ஆய்வாளர்கட்குப் பல புதிய செய்திகளையும் தருகின்றன. வீரமாமுனிவர் எழுதிய "பரமார்த்த குருக்கள் கதை'யே தமிழில் முதல் உரைநடைநூல் எனக் கருதப்பட்டு வருவதை மாற்றும் வகையில் முத்துக்குட்டிப் புலவர் எழுதிய "வசன சம்பிரதாயக் கதை" வீரமாமுனிவருக்கு முன்னரே எழுதிச் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டுள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இந்நூலை விரைவில் மீண்டும் அச்சேற்ற நூலாசிரியரே ஆவன செய்ய வேண்டும்.
ஆசிரியர் இறுதியில் கொடுத்துள்ள இணைப்புகள் இலக்கிய, சமூக, கோயில் வரலாற்று ஆய்வாளர்கட்கும் பெரிதும் துணை செய்யும் தகவல்கள். ஆசிரியருக்கு நம் பாராட்டுக்கள்.
ஆசிரியர் எழுதியுள்ள இருநூல்கள் ஏற்கனவே பரிசுகள் பெற்றுள்ளன. இந்நூலும் அவ்வாறே பரிசு பெறும் என நாம் நம்புகிறோம்.
ஆசிரியர் இன்னும் பலப்பல நூல்கள் இதுபோல எழுதி வழங்க வேண்டுமென விழைகின்றேன். ஆசிரியருக்கு என் நல்வாழ்த்துக்கள்.
அன்பன்,
கோ.விசயவேணுகோபால்
மதுரை. 16.12.96