சீர்மிகு சிவகங்கைச் சீமை/பதிப்புரை

பதிப்புரை


மிகப் பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்று என்பது உலகு ஒப்புக் கொண்ட உண்மை. ஆனால் வரலாற்று உணர்வு சிறிதும் இல்லாத சமுதாயம் தமிழ் சமுதாயமே என்றால் அது மிகையாகாது.

மிகப் பழமையான நாகரீகமான கிரேக்க நாகரீகத்தின் வரலாற்றை குறித்து வைக்க தூசிடைஸ் (Thucidides) கிடைத்தது போல் நமக்கு ஒருவர் கிடைக்கவில்லை. பெரும்பாலும் வழி வழிச் செய்திகளை நம்பியே தமது வரலாறுகள் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். கல்வெட்டுகள், செப்பேடுகள், ஒலை முறிகள் போன்ற வரலாற்றுப் பொக்கிஷங்களை பேணி காக்கத் தவறி விட்டோம்.

கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை பெயர்த்தும் தகர்த்தும் பூசியும் பெரும்பாலும் சிதைத்து அழித்து வருகிறோம். செப்பேடுகள் போற்றப்படாமல் மாறி வரும் சமுதாய அமைப்பில் 'பேரீச்சம்பழ வண்டி'களை நாடி அடைக்கலம் புகும் நிலையும் உருவாகி விட்டது.

கல்விக் கூடங்களில் வரலாற்றை விரும்பிப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அருகிக் கொண்டே வருவது கண்கூடு. விஞ்ஞானப் பாடங்களுக்கு உள்ள மரியாதை சரித்திரப் பாடங்களுக்கு இல்லாமற் போய்விட்டது.

வரலாற்று ஆய்வாளர்கள் என்று களத்தில் இறங்கியவர்கள் அடிக்குறிப்புகளையும், செவி வழி செய்திகளையும், நாடோடிப் பாடல்களையும் மட்டும் வைத்து நாட்டின் வரலாறு இதுதான் என்று மனம்போன போக்கில் எழுத துணிந்து விட்டார்கள். பெரும்பாலும் அப்படிப்பட்டவர்களின் நோக்கமெல்லாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு வரலாற்றை தன் பக்கம் திருப்பும் முயற்சியாகவே முடிந்து விட்டது.

சிவகங்கை சீமையின் வரலாறு என்பது இன்றைய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தின் வரலாறே ஆகும். இந்தப் புதிய மாவட்டத்தின் வரலாறு முறையாக தொகுக்கப்பட வேண்டும் என்பது எங்கள் மையத்தின் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றி வைப்பது யார்? இதை தீர்மானிப்பதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. அத்தகைய எண்ணம் எழுந்ததும் எங்கள் நினைவிற்கு வந்தவர் டாக்டர் எஸ்.எம்.கமால். இந்த மாவட்டம் பிரிக்கப்படாமல் இராமநாதபுரமாக இருந்தபோது அதன் தொடர்புடைய வரலாற்று நூல்களை எழுதி அரசாலும் ஆய்வாளர்களாலும் பாராட்டப்பட்டவர்.

உடல் நலிவுற்ற நிலையிலும், உளச் சோர்வின்றி இந்த அருமையான நூலை எழுதி முடித்த அவருக்கு தமிழ் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது என்றால், மிகையாகாது.

இந்தப் பணியில் எங்கள் மையம் இறங்க உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ஆதரவு நல்கிய கல்விக்காவலர் சண்முக மாமன்னர் ஈன்றெடுத்த பொற்புடை பெருமாட்டி மேதகு சிவகங்கை ராணி ராஜலக்ஷ்மி நாச்சியார் அவர்களுக்கு எங்கள் ஆய்வு மையத்தின் சார்பில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

சிவகங்கையில் உள்ள மகாத்மா காந்தி நினைவுப் பூங்கா அறக்கட்டளையினர் இந்த நல்ல பணியில் தங்கள் பங்கு சிறக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம்) கொடுத்து உதவிய பெருந்தகைமைக்கு அதன் அறங்காவலர்களான,

மேதகு ராணி ராஜலக்ஷ்மி நாச்சியார் (தலைவர்)

மேதகு ரகுராஜ துரை (பொருளாளர்)

திரு ஏ.மா.சுதர்சன நாச்சியப்பன் (துணைத்தலைவர்)

தியாகி திரு அரு.சதாசிவம் (செயலர்)

தியாகி திரு. கே.இராமசாமி

திரு ஜனாப் எம்.எஸ்.அப்பாஸ்

ஆகியோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

வே.ஸ்ரீரங்கராஜன்
(தலைவர்)
பசும்பொன் மாவட்ட
கலை-இலக்கிய வரலாற்று ஆய்வு மையம்

சிவகங்கை 10.12.1996