சீர்மிகு சிவகங்கைச் சீமை/இந்த நூலைப் பற்றி

இந்த நூலைப்பற்றி...




நாடு விடுதலையடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. பழமை ஒளியும் புதுமை உயிர்ப்பும் ஊடாடிய புதிய சிந்தனை, புதிய பார்வையுடன் படைப்புகள் பல வெளி வந்து இருக்க வேண்டும். அவைகளில் சிறப்பாக தாயகத்தின் உண்மை வரலாறும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் மன நிறைவு தரும் வரலாற்று நூல்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் வரையப்பட்டுள்ளன. பதினைந்தாவது நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாறு இன்னும் சரியாகத் தொகுக்கப்படவில்லை.

விஜயநகரப் பேரரசின் பிடிப்பு, திருநெல்வேலி தென்காசிப் பாண்டியர்கள், மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர் அரசுகள், தஞ்சை மராத்திய அரசு, மறவர் சீமை சேதுபதிகள், சிவகங்கை மன்னர்கள், திருநெல்வேலிச் சீமைப் பாளையக்காரர்கள், முதுகுளத்தூர், சிவகங்கை மறவர்கள் கிளர்ச்சி, வேலூர் சிப்பாய்களின் புரட்சி என்பன போன்ற வரலாற்றுப் பிரிவுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வு நூல்கள் வரையப்படாதது வேதனைக்குரியது. இந்த நிகழ்வுகளின் அடிநாதமாக அமைந்துள்ள நாட்டுப்பற்று, அன்னிய எதிர்ப்பு உணர்வு, சமூக நல்லிணக்கம், மனிதநேயம் ஆகிய மனிதக் கூறுகளைப் புரிந்து கொள்ளாத நிலையில், புலர்ந்து வரும் இருபத்து ஒன்றாவது நூற்றாண்டின் புதிய இலக்குகளை திட்டமிடுவது இயலாத ஒன்று.

இந்தக் குறைபாட்டினை நன்கு உணர்ந்த சிவகங்கை ராணி மேதகு இராஜ லெட்சுமி நாச்சியார் அவர்கள் தனது முன்னோர்களான சிவகங்கைச் சீமை மன்னர்களின் வரலாற்றுப் பகுதியினையாவது விரிவாக வரைவது என்ற அவர்களது பெருவிருப்பினை அண்மையில் என்னிடம் தெரிவித்தார்கள். தமிழக வரலாற்றிற்கு தகைமை சேர்க்கும் இந்த சீரிய முயற்சியினைப் பாராட்டி அவர்களது விழைவினை நிறைவு செய்யும் வகையில் இந்த நூலினைத் தொகுத்துள்ளேன்.

சிவகங்கைச் சீமையின் வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தான் தொடங்குகிறது என்றாலும் இந்த வரலாற்றிற்கு உதவும் ஆவணங்கள் மிக மிகக் குறைவு. கி.பி.1728 முதல் தொடங்கிய இந்தத் தன்னரசு பற்றி தொன்மையான சான்றாவணங்கள் எதுவும் கிடைக்காத நிலை. எனினும் மிகவும் முயன்று சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ஆவணங்களில் சிவகங்கை அரச வழியினரான திரு. பாப்பாத்துரை என்ற திரு. ஸ்ரீரங்கராஜன் அவர்கள், நாலுகோட்டைப் பாளையக்காரர் வழியினரான செல்வ ரகுநாதன் கோட்டை, முத்தமிழ்ப் புலவர் டாக்டர் புரட்சிதாசன் ஆகியோரிடம் உள்ள ஆவணங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆவணங்கள் காப்பகத்தில் ஆவணத் தொகுதிகள் மற்றும் படமாத்துர், நாலுகோட்டை, சக்கந்தி, அரண்மனை சிறுவயல், காளையார்கோவில், அரளிக்கோட்டை, விருபாட்சி ஆகிய ஊர்களில் கள ஆய்வுகளில் கிடைத்த செப்பேடுகள் மற்றும் குறிப்புகளை கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மன்னர்களது நாட்டுப்பற்று, சமுதாயப் பணிகள், தமிழ்த் தொண்டு, சமயப்பொறை ஆகிய அருஞ்செயல்களுடன் சிவகங்கைச்சீமை மண்ணின் மாண்பு, தொன்மை, மக்களது மொழிப்பற்று, விடுதலை உணர்வு ஆகிய பல நிலைகளையும் சுருங்கிய வடிவில் குறுகிய கால வரம்பில் தொகுக்கப்பட்டுள்ளது. எனினும் எல்லாவகையிலும் நிறைவு பெற்ற நூலாக அல்லாமல் சிவகங்கைச் சீமை வரலாறு பற்றிய முதல் நூல் என்ற வகையில் வரலாற்று வாசகர்களும் ஆய்வாளர்களும் இந்த நூலுக்கு வரவேற்பு வழங்கி இன்னும் பல வழி நூல்கள் வெளிவருவதற்கு உதவ வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

மேலும், ஏற்கனவே பல சமுதாயப் பணிகளில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டு தொண்டு புரிந்து வருகின்ற சிவகங்கை ராணி மேதகு இராஜலட்சுமி நாச்சியாரவர்கள் சிறந்த வரலாற்று உணர்வுடன் இந்த வரலாற்று நூல் வெளிவருவதற்கு ஆக்கமும் ஆதரவும் அளித்தமைக்கு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைப் புலப்படுத்திக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் பெருமுயற்சிக்குப் பின்னணியாக விளங்கிய எனது அருமைச் சகோதரரும் சிவநேயத் திருத்தொண்டருமான பாப்பாத்துரை என்ற ஸ்ரீரங்கராஜன் அவர்களுக்கும் இந்த நூலினை அழகிய வரலாற்றுப் பெட்டகமாக அமைத்துக் கொடுத்த சென்னை மாஸ் டைப்போ கிராபிக்ஸ் நிறுவன உரிமையாளர் திரு. வி.எஸ்.சுரேஷ் பி.இ. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இராமநாதபுரம்,

எஸ்.எம்.கமால்

25 டிசம்பர் 1996

நூலாசிரியர்