சீர்மிகு சிவகங்கைச் சீமை/சிவகங்கை வரலாற்றை சீரழித்த நூல்கள்

13. சிவகங்கை வரலாற்றை சீரழித்த நூல்கள்




1. சிவகங்கை அம்மானை

தமிழ்நாடு அரசு பதிப்பு (1954), சென்னை.

நாடோடி இலக்கியம் என்ற வகையில் சிவகங்கை அம்மானையில் வரலாற்றுக்கு தொடர்பு இல்லாத எத்தனயோ செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அவைகளை எல்லாம் இலக்கியத்தின் கதைப் போக்கிற்காக இணைக்கப்பட்டுள்ளவை எனப் புறக்கணித்து விட்டாலும் சில முக்கியமான பகுதிகள் வரலாற்றிற்கு முரணாக மட்டுமல்லாமல் இந்த நூலின் வரலாற்று நாயகர்களான ராணி வேலுநாச்சியாருக்கும் அவரது பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களுக்கும் தீராத பழி ஏற்படுத்தும் பாங்கில் அமைந்திருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

அ. மருது சகோதரர்கள் மன்னர் முத்துவடுகநாதரது ஆட்சியின் பொழுது, (கி.பி. 1750-72) சிவகங்கை அரண்மனைப் பணியில் அமர்ந்தவர்கள். கி.பி.1780-ல் ராணிவேலுநாச்சியார் சிவகங்கையை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து மீட்டு அவர் ஆட்சியைத் தொடங்கியபொழுது அவர்கள் இருவரையும் பிரதானிகளாக நியமனம் செய்தார் என்பது வரலாறு.
கி.பி.1772-ல் நவாப்பும் கும்பெனியாரது படைகளும் இணைந்து சிவகங்கைச் சீமை மேல் படை எடுத்து வந்தனர்.காளையார் கோவில் கோட்டைப் போரின் பொழுது 25.6.1772-ல் குண்டடி பட்டு மன்னர் முத்துவடுகநாதர் தியாகி ஆனார் என்பது வரலாறு. (பார்க்க:

தமிழ்நாடு ஆவணக்காப்பக ஆவணம்:)

ஆனால் சிவகங்கை அம்மானையில் (பக்கம் 127)

"மாதுதனைக் கைப்பிடித்து வாவெளியே என்றழைத்து
வரவே உள்மண்டபத்து வாச வெளி மூலை தன்னில
உரமாய் வரும்பொழுது உபாயமுள்ள கம்பெனியார்
........கலீரெனவே சுட்டானே பூரிதுரை
கப்பித்தான் சுட்டகுண்டு கன்னியர்க்கும் மன்னருக்கும்
ஒப்பிலையாய்ப்பட்டு ஊடுருவிப் பாய்ந்ததுவே"

போரிலே வீரமரணம் அடைந்து பொன்றாப் புகழ்பெற்ற முத்து வடுகநாத மன்னரது தியாகத்தைச் சிறுமைப்படுத்தும் வரிகள் இவை.

ஆ. மருது சகோதரர்கள் மன்னர் முத்து வடுகநாதரது அரண்மனைப் பணியாளராகத்தான் இருந்து வந்தனர்.

சிவகங்கை அம்மானை (பக்கம் 122)

"மன்னவனார் முத்து வடுக துரை தம்மிடமும்
தன்னவர்களாயிருக்கும் தளவாய் மருதிடமும்..."

"தளவாய் மருதிருவர் தான் கதிரோன் வந்த பின்னர்..." (பக்கம் 123)

என்று தளவாய் (படையணிகளின் தளகர்த்தர்) பதவியில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்மானை பாயிரத்தில் மருது சகோதரர்களை மேலும் உயர்த்தி

"சிவகங்கை நகராள் மன்னன். தெம்புள மருது தன்னை" "சிவகங்கை புவிக்கொண்ட மன்னவன் மருது தன்னை"

என்று புகழ்ச்சியின் உச்சியிலே வைத்து பொய்யுரைக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்கள் காலத்தில் சிவகங்கை மன்னர்களாக மூவர் இருந்துள்ளனர் என்பது வரலாறு. முதலாவது மன்னர் முத்து வடுகநாதர் (கி.பி.1750-1772), ராணிவேலு நாச்சியார்(கி.பி.1780.1789) வேங்கன் பெரிய உடையாத் தேவர் (கி.பி.1790-1801) இவர்களையெல்லாம் மறந்து விட்டு புனைந்துரைக்கிறது அம்மானை.

இ. ராணி வேலு நாச்சியாரின் ஆட்சிக் காலத்தில், ராணி வேலு நாச்சியாருக்கு அவரது பிரதானிகளான மருது சேர்வைக்காரர்களுக்குமிடையில் பலமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் காரணமாக மருது சேர்வைக்காரர்கள் மே 1789-ல் சிவகங்கை அரண்மனையை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகையில் இருந்து ராணியைக் காப்பாற்ற நவாப்பின் பரிந்துரையின் பேரில் கும்பெனியாரது தளபதி ஸ்டுவர்ட் தலைமையிலான படைகள் சிவகங்கை வந்து, கொல்லங்குடி, காளையார்கோவில் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் மருது சேர்வைக்காரர்களை தோற்கடித்தன. திண்டுக்கல் சீமைக்கு ஒடிச்சென்ற அவர்கள், 1789-ல் திருப்புத்துர் கோட்டையை மீண்டு கைப்பற்றினர். மேலும் ரத்தக்களரியைத் தடுத்து சிவகங்கைச் சீமையில் அமைதியை நிலைநாட்ட ஆற்காட்டு நவாப்பும், கும்பெனித் தலைமையும் பிரதானிகளுடன் பேசி சமரச உடன்பாட்டினை எட்டுகின்றனர்.

இதன்வழி, ராணி வேலுநாச்சியார், அரசி தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதென்றும், சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை மன்னராக பதவி ஏற்பதெனவும் முடிவாயிற்று. கி.பி.1790 முதல் கி.பி.1801 வரை அவர்தான் சிவகங்கைத் தன்னரசின் மன்னராக இருந்தார். (பார்க்க தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பக தொகுதிகள்:)

சிவகங்கை சீமை அம்மானையோ இந்த முக்கியமான நிகழ்ச்சியை மிகவும் இயல்பாக, உண்மைக்கு மாற்றமாக,

"மங்கையந்தராணி மகாராணி வேலுலகு
தங்க கனமருது துரை வேந்தை தானழைத்து
மிக்க புகழ் விளம்புகிறேன் இப்போது
சக்கந்தி மாநகரந் தன்னில் குடி வளரும்
வெங்கணப் பெரிவுடையார் வேந்தனுக்கு வாந்தகமாய்
தங்கமுடி மகுடம் தரிக்க என்றாள் அப்பொழுது....
வைத்தார் முடியெடுத்து மங்கையருமே கொடுக்க" (பக்கம் 164)

என்று ராணி வேலுநாச்சியார் வேங்கன் பெரிய உடையாத் தேவருக்கு முடிசூட்டியதாக வரலாற்றிற்கு முரணான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் படைமாத்துர் கெளரி வல்லப ஒய்யாத் தேவர் கும்பெனியாருக்கு வரைந்த முறையீட்டில், அவருக்கு காளையார் கோவிலில் ஏற்கனவே சிவகங்கை மன்னராக முடிசூட்டப்பட்டதை தெரிவித்துள்ளார். (பார்க்க சென்னை தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகம்: Military consultantions Vol.285. (A) 28.6.1801 - Page 5039)

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான, ஆனால் மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய பகுதி, ராணி வேலுநாச்சியாருக்கும் மருது சகோதரர்களுக்கும் இருந்த தொடர்பைக் குறிப்பிடும் பகுதியாகும். அம்மானையில் பல இடங்களில் ராணியாரை மருதிருவர் விளித்துச் சொல்வதாக வருமிடங்களில்

“எந்தாயே இவ்விடத்தில் இனி இருக்கப் போகாது" (பக்கம் 130)

“வருந்தாமல் மாதாவே மறைபாதம் நோகாமல்...” (பக்கம் 132)

“தன்னை. தனியிருத்தி தாயே போய் வாரோமென்று...” (பக்கம் 139)

“அருகே சிவிகை தன்னை அடுத்து இருவர் எந்தாயே....” (பக்கம் 156)


“தேவியுடைச் சேவகராய்ச் சென்று இருந்து நாங்களுமே
வந்தோம் பழையபடி மாநிலத்தை ஆளவைத்து
எந்தாய் வளந்தேறி இருக்க வென்று...” (பக்கம் 157)

மருது சகோதரரர்கள், ராணி வேலுநாச்சியாரை, தாயாகவே மதித்துப் பணிந்து சொல்வதாகப் பாடும் நூலாசிரியர், ராணியாரும் மருது சகோதரர்களும் சிவகங்கையை விட்டு, திண்டுக்கல் சீமையில் சீப்பாலக் கோட்டையில் ஒராண்டு தங்கியிருந்ததைக் குறிப்பிடும் பொழுது,


"நாட்டியர்மனையும் நலமாகவே அமைத்து
வீற்றிருந்தார் மன்னர் மெய்மகிழ்ந்து ராணியுடன்...” (பக்கம் 139)

என்று குறிப்பிட்டுள்ளார். "மெய்மகிழ்ந்து வாழ்ந்தனர் என்ற குறிப்பை அம்மானை ஆசிரியர் எத்தகைய உள்ளக் குறிப்புடன் பயன்படுத்தினார் என்று இப்பொழுது நம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், பிந்தைய கால நூலாசிரியர்கள் இந்த தொடருக்குப் பொருத்தமான பொருளைக் கொள்ளவில்லை என்பது அவர்கள் எழுத்துக்களில் இருந்து தெரிய வருகிறது.

இந்த அம்மானை, சிவகங்கை பற்றிய நூல்களில் மிகவும் பழமையானதால் (கி.பி.1840), பின்னர் சிவகங்கை பற்றி எழுதிய நூலாசிரியர்களும், இந்தத் தொடரினால் பாதிக்கப்பட்டவர்களாக, மருதிருவருக்கும் வேலுநாச்சியாருக்குமிடையில் உள்ள தொடர்புக்கு மாசு கற்பிக்கும் நிலைக்குச் சென்றுவிட்டனர் என்பதை அவர்களது எழுத்துக்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நூலாசிரியர் ஒருவர் கூட மிகவும் துணிச்சலாக பெரிய மருதுவை விதவை ராணி வேலு நாச்சியார் “மறுமணம்” செய்து கொண்டதாக எழுதி இருக்கிறார். இதற்குச் சான்றாக அவர் சொல்லக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இருக்கிறதா அல்லது இருப்பதைக் குறிப்பிட்டு இருக்கிறாரா என்றால், அவரது சொல்விளக்கத்தை தவிர வேறு இல்லை.

இவையெல்லாம். ஆணுக்குப் பெண் சமம். ஆண்களைப் போன்று பெண்களுக்கும் வாய்ப்புகள், சொத்துரிமை, என்பன போன்ற உரிமைக்குரல் ஒலிக்கப்படுகின்ற இந்த இருபதாவது நூற்றாண்டின் இறுதியில் கூட, பெண்களை குறிப்பாக மேலிடத்து மகளிரை

எளிதாக இழிவுப்படுத்தும் ஆண் ஆதிக்க உணர்வு விஞ்சி இருப்பதையே இவை சுட்டினாலும், அது வரலாற்றிற்கு மிகப்பெரிய தீங்கினை விளைவித்துள்ளது.

2.6.1772-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த நவாப் கும்பெனிப் படைகள் சிவகங்கை சீமையில் காளையார் கோவில் கோட்டையைப் பிடிக்க 25.6.1772-ல் போர் நடத்தினர் என்பதுதான் வரலாறு. ஆனால் இந்தப் போருக்கு முன்னதாக மறவ மங்கலத்தில் மருதிருவர் நவாப் படைகளுடன் வீரப்போர்புரிந்ததாக (பக்கங்கள்123-127) புகழ்ந்து பாடல் பாடப்பட்டுள்ளது. இடைச் செருகல் இலக்கியங்களில்தான் உண்டு. வரலாற்றிலும் 'இடைச்செருகல்" உண்டு என்பதற்கு சிவகங்கை அம்மானை ஒரு எடுத்துக் காட்டாக உள்ளது. இது ஒன்று மட்டும் அல்ல. சிவகங்கையை விட்டு விருபாட்சியில் தங்குவதற்கு முன்னர் ராணி வேலு நாச்சியாரும் மருதிருவரும் ஓராண்டு திண்டுக்கல் கோட்டையில் தங்கியது, திப்பு சுல்தானைச் சந்தித்தது. (அப்பொழுது மைசூர் சுல்தானாக இருந்தவர் ஹைதர்அலி). வத்தலக்குண்டில் யானை வேட்டை, மேலுர் வழி திண்டுக்கல் சென்றவர்கள், சோழவந்தான், மதுரை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில் வழியில் திரும்பியது என்பன போன்ற பல நிகழ்ச்சிகள் இடைச்செருகள் ஆகும்.

மறைக்கப்பட்ட நிகழ்ச்சிகள்

1. மருது சகோதரரர்கள் சிவகங்கை மன்னரிடம் அடப்பப் பணியில் இருந்தனர் என்பதை 'அடப்ப வெள்ளைக்காலுடையாரீன்ற மருது இருவர்" (பக்கம்....) எந்தப் பணியில் இருந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

2. கிழக்கே இருந்து கும்பெனி படைகளும் மேற்கே இருந்து திருப்புவனம் கோட்டையைப் பிடித்து தளபதி பெளஷேர் சிவகங்கை வருவதையும் நன்கு அறிந்த மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் கோட்டையில் அவர்களைச் சந்தித்துப்போர் செய்ய ஆயத்தம் செய்தார் என்பதும், முன்னே வந்து விட்ட தளபதி, ஜோஸப் சுமித்துடன் பிரதானி தாண்டவராய பிள்ளை 21.6.1772-ல் சமரசப் பேச்சு பேசினார் என்பது வரலாறு. (பார்க்க பேராசிரியர் ராஜையனது History of Madura (1974) Ltdisub 261)

3. 25.6.1772-ல் நடைபெற்ற போரில் மன்னர் முத்து வடுகநாதர் பிரதானி தாண்டவராய பிள்ளை ராணியையும் அவரது பெண் குழந்தையையும் பத்திரமாக காப்பாற்றுவதற்கு விருப்பாட்சிக்கு அழைத்துச் சென்றார். பிறகுதான் மருதிருவர் விருபாட்சி போய்ச் சேர்ந்தார்கள். (பார்க்க பேராசிரியது அதே நூலின் அதே பக்கம்) 4. ராணி வேலு நாச்சியாருக்கும் சின்ன மருது சேர்வைக்காரருக்கும் கருத்து வேறுபாடுகள் மிகுந்து, ராணியையும் அவரது குடும்பத்தாரும் உள்ள சிவகங்கை அரண்மனையை அவர்களது படைகள் முற்றுகையிட்டதும், பின்னர் 8.5.1789-ல் வந்த கும்பெனித் தளபதி ஸ்டுவர்ட் கொல்லங்குடி, காளையார் கோவில், பிரான்மலைப் போர்களில் மருது இருவரைத் தோற்கடித்து திண்டுக்கல் சீமைக்குள் பின் வாங்குமாறு செய்தது.

5. கி.பி.1792-ல் சிவகங்கை இளவரசி வெள்ளச்சி இறந்ததும், அவரது கணவரும் சிவகங்கை மன்னருமான வேங்கண் பெரிய உடையாத் தேவருக்கு பெரிய மருது தமது மகளைத் திருமணம் செய்து வைத்தது. இவையனைத்தும் அம்மானையில் இடம் பெறவில்லை.

2. சிவகங்கைச் சரித்திரக் கும்மி

தமிழ்நாடு அரசு பதிப்பு (1954), சென்னை.

சிவகங்கை அம்மானை இயற்றப்பட்டு நாற்பத்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் (கி.பி.1832-ல்) சாலைக் கிராமம் முத்துசாமி என்பவரால் இயற்றப்பட்டது. ஏறத்தாழ அம்மானையை ஒட்டியே இந்தக் கும்மியும் பாடப்பெற்று இருந்தாலும், வரலாற்றிற்கு முரணான செய்திகள் இந்த நூலிலும் மிகுதியாக காணப்படுகின்றன. அவைகளில் முக்கியமான இரண்டு மட்டும் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அரளிக்கோட்டைச் செப்பேட்டின்படி, முல்லையூர் தாண்டவராய பிள்ளை கி.பி.1747-ல் மன்னர் சசிவர்ணத் தேவர் உயிருடன் இருந்த பொழுதே, பிரதானிப் பணியை ஏற்றார் என்பது தெரிகிறது. அடுத்து, மன்னர் முத்து வடுகநாதரது ஆட்சி முழுவதிலும் பிரதானி பதவியை வகித்ததுடன், காளையார் கோவில் கோட்டைப் போரில் மன்னர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, பிரதானி கி.பி.1772-ல் இறுதியில் இறந்தார் என்பது உண்மை வரலாறு.

அ. ஆனால் சிவகங்கைக் கும்மி கூறுவது,

"கட்டழகன் பிரதானி தாண்டவராயன்
எட்டியே வயது சென்றதினால்
அடப்பப்பிடி வெள்ளைக் காலுடையாரீன்ற
அண்ணன் தம்பி யிருமருதும்
திடத்துடன் சுத்தவீரன் பெரியமருது
தீரன் சின்ன மருது புத்திசாலியுமாய்
சீமைய யதிகாரம் செலுத்தி வந்தார்..." (பக்கம் 10-11)

என்பன சிவகங்கைக் கும்மி கூறும் இருபெரும் பொய்யான செய்திகளாகும். தாண்டவராய பிள்ளை மூப்பு காரணமாக பதவி விலகினார் என்பதும் மருது சகோதரர்கள் பிரதானிகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர் என்பதும் அந்தச் செய்தி.

ஆ. காளையார் கோவில் கோட்டைப் போரில் 25.6.1772-ல் மன்னர் முத்து வடுகநாதர் தியாகியானார் என்ற வரலாற்று உண்மைக்கு முரணாக,

'துங்கின துரையும் ராணியுந்தான்
இப்ப வெடிச்சத்தம் ஏதெனவே
இருபெரும் கைகோர்த்து வெளியில் வந்தார்
கண்ட சிப்பாயும் சுட்டிடவே
கர்த்தனாம் ராணியும் பட்டிடவே...'

என்று மன்னர் முத்து வடுகநாதரது தியாகத்தை மறைத்து அவரது பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கும்மித் தொடர் அமைக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கையை மீட்டபிறகு, ராணி வேலு நாச்சியார் மருதிருவரை பிரதானி தளகர்த்தராக நியமனம் செய்தார். அவர்கள் இருவரும் கி.பி.1780 முதல் அந்தப்பணியில் இருந்து வந்தனர். தமக்கு ஆண்டுதோறும் பேஷ்குஷ் தொகையை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், புதிய அரசை நவாப் அங்கீகரித்து இருந்தார். அந்தத் தொகை செலுத்தப்படாததால் 4.81783-ல் தளபதி புல்லர்ட்டன் தலைமையில் கும்பெனியாரது படைகள் சிவகங்கை வந்தது. பிரதானிகளான மருதிருவரிடமிருந்து நாற்பதினாயிரம் பொன்னும், பாக்கிக்கு பொறுப்பும் எழுதி வாங்கிய பிறகு அந்தப் படையணிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. (பார்க்க தளபதி புல்லர்ட்டனது அறிக்கை)

ஆனால் சிவகங்கை கும்மி, மருதிருவரும் சென்னை சென்று கவர்னரைப் பேட்டி கண்டதாகவும், அவர் அவர்களை சிவகங்கைச் சீமைக்கு பேஷ்குஷ் தொகை செலுத்த வேண்டாமென்று தெரிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றது. மருதிருவர் சென்னை சென்றதாக எந்த செய்தியும் இல்லை. இப்பொழுது சிவகங்கைக் கும்மி வரிகளைப் பார்ப்போம்.

“......மருதிருவர்
தெளிந்து முகமலர்ந்து தீர்வை
பகுதிக்குத் தரவு என்ன என்றும்
கும்பினிக்கு நீங்கள் பிள்ளையென்று
குறிப்பிட்டு நாங்கள் எண்ணினதால்
அன்புடன் நீங்கள் நமக்கு மட்டும்
ஆன பகுதி தர வேண்டா மென்றார்....
சீராய் நடந்து புவிசெல்லு மென்றார்.”

3. சிவகங்கைச் சீமை (1976)

ஆசிரியர்: துர்க்காதாஸ் சாமி

பதிப்பு : அருணாபதிப்பகம், சென்னை-17.

இது ஒரு சிறிய கையடக்கப் புத்தகம். சிவகங்கைச் சரித்திரக் கும்மி, அம்மானை நூலினைப் பெரும்பாலும் தழுவியும் வேறு சில ஆவணங்களின் அடிப்படையில் வரையப்பட்ட நூல். அதனால் உண்மையான வரலாற்றிற்கு முரணான பல செய்திகள் இந்த நூலிலும் காணப்படுகின்றன. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

(அ) பக்கம்: 23

'சந்தா சாகிபுவின் சொந்தக்காரரான ஆலம்கான் என்பவன், இராமநாதபுரம் சிவகங்கை ஆகிய பகுதிகளில் கிடைத்த கப்பத்தொகையை ஆற்காட்டு நவாப்பிற்கு சேராத வண்ணம் ஏப்பம் விட்டுக் கொண்டு இருந்தான்."

மறவர் சீமையின் மன்னர் என்ற முறையில் சேதுபதி மன்னரோ அல்லது சிவகங்கைச் சீமை பிரிந்த பிறகு சிவகங்கைச் சீமை, இராமநாதபுரம் சீமை ஆகிய இரு தன்னரசு மன்னர்களும் யாருக்கும் எப்பொழுதும் கப்பம் செலுத்தியது இல்லை என்பதுதான் வரலாறு.

(ஆ) பக்கம்:50

'முத்து வடுகநாதருக்கு அமைச்சர்களாக தாண்டவராயபிள்ளை, தாமோதரம் பிள்ளை என்ற இரு அமைச்சர்கள் இருந்தனர். சகோதரர்களான அவர்கள் மறவர் நாட்டின் ஒற்றுமைக்குப் பாடுபட்டனர்.'

சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர்காலம் முதல் சிவகங்கைச்சீமைக்கு ஒரே ஒரு அமைச்சர் தான் இருந்து வந்தார். இரு அமைச்சர்கள் இருந்தது இல்லை. மேலும் தாண்டவராய பிள்ளையும் தாமோதரம் பிள்ளையும் சகோதரர்கள் அல்லர். தாண்டவராய பிள்ளை அரளிக் கோட்டையை அடுத்த முல்லையூர்க்காரர். தாமோதரம் பிள்ளை இராமநாதபுரத்தை அடுத்த தீயனுார்க்காரர் என்பன உண்மை வரலாறு.

(இ) பக்கம் 97

'சிவகங்கைச் சீமையைக் கைவசப்படுத்திக் கொண்ட நவாப் கி.பி.1773-ல் அதை ஜப்தி செய்து ஏலத்துக்கு விட்டார். அதை மாத்துார் நவாப் எடுத்துக் கொண்டார்.'

தமிழ் நாட்டில் நவாப் பட்டத்துடன் அப்பொழுது இருந்த ஒரே நபர்,கர்நாடக நவாப் வாலாஜா முகம்மது அலி ஒருவர்தான். மாத்துார் நவாப் என்று யாரும் இருந்தது கிடையாது. 25.6.1772-ல் சிவகங்கையைக் கைப்பற்றிய நவாப், தொடர்ந்து அதனை எட்டு ஆண்டுகள் அவரது நேரடி நிர்வாகத்தில் வைத்து இருந்தார். கி.பி.1780-ல் ராணி வேலு நாச்சியார் தலைமையில் மருது சகோதரரர்கள் சீமையை மீட்கும் வரை. இதற்கு முரணாக உள்ளது மேலே கண்டவைகள்.

(ஈ) பக்கம் 99

"...அப்போது கி.பி.1780 கர்ப்பவதியாக இருந்த வேலு நாச்சிக்குப் பிறக்கவிருந்த சிவகங்கை வாரிசு ஆணா அல்லது பெண்ணா என்பது தெரியாமல் இருந்ததால்... அவள் பட்டத்து ராணியாக்கப்பட்டாள்.'

இராணி வேலுநாச்சியாரது கணவர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் கோட்டைப் போரில் 25.6.1772-ல் இறந்த பிறகு பிரதானி தாண்டவராயபிள்ளை வேலுநாச்சியாரையும் அவரது மகள் வெள்ளச்சியையும் அழைத்துக்கொண்டு விருப்பாச்சி சென்றார் என்பது வரலாறு. (சிவகங்கைச் சீமை நூலில் பக்கம் 96-ல் இதே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்) ஆனால் கணவனை இழந்த வேலு நாச்சியார் கி.பி.1780-ல் சிவகங்கை வந்த பொழுது 'கர்ப்பவதியாக இருந்தார் என்பது ஆதாரமற்றது. சிவகங்கை ராணியாருக்கு இழுக்கை ஏற்படுத்துவது.

ராணி உண்மையில் கர்ப்பவதியாக இருந்தார் என்றால் அவர் என்ன குழந்தையை எப்பொழுது பிரசவித்தார் என்பதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கி.பி.1801 வரை சிவகங்கை வரலாற்றை விவரித்துள்ள அவர், ராணியாரது வாரிசை ஏன் குறிப்பிடவில்லை. வேண்டுமென்றே கைம்மை நிலையில் எட்டு ஆண்டுகளைக் கழித்த ராணி வேலு நாச்சியாருக்கு களங்கம் கற்பிப்பதற்காகவே ஆசிரியர் இதனை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.

தொடர்ந்து இந்த நூலின் ஆசிரியர், அவரது நூலின் பக்கம் 106-ல் 'முத்து வடுகநாதரின் முதல் மனைவி வேலு நாச்சியாருக்கும் வெள்ளை மருதுவுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது' என எவ்வித ஆதாரமும் இல்லாமல் பகிரங்கமாகக் குறிப்பிட்டு இருப்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது. வாய்புளித்ததோ, காய் புளித்ததோ என்ற பாணியில் பொறுப்பற்ற முறையிலான எழுத்து, இந்த ஆசிரியருடையது.

4. வீராங்கனை வேலு நாச்சியார் (1983)

ஆசிரியர்: சிரஞ்சீவி

பதிப்பு : அபிராமி பப்ளிகேஷன்ஸ், சென்னை-1.

தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் வரையப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று. பதினெட்டாம் நூற்றாண்டு சிவகங்கைச் சீமை வரலாற்றை தக்க ஆதாரமில்லாமல் வரையப்பட்டுள்ள இதிலும் ஆங்காங்கு சிவகங்கைச் சீமை அரசியலுக்கு முரணான பகுதிகள் சில பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

பக்கம் 66

'இனி வெள்ளைக்காரனின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது என்ற தீர்மானத்தில்தான் தளபதி வெள்ளயைன் சேர்வை சிவகங்கை மன்னரான செல்லத்தேவரோடு கலந்து ஆலோசித்து டச்சுக்காரர்களை நண்பனாக ஆக்கிக் கொண்டார்.'

“சேதுபதியின் சீமைத் தளபதி வெள்ளையன் சேர்வை காலத்தில் சிவகங்கை மன்னராக இருந்தவர் முத்து வடுகனாத தேவர். சிவகங்கையில் செல்லமுத்துத் தேவர் என்ற மன்னரும் இருந்தது இல்லை. குறிப்பிட்ட நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.”

பக்கம் 75

"சேது நாட்டில் ராணி முத்துத் தளவாய் நாச்சியாரையும். ஒன்பதே வயது நிரம்பிய முத்துராமலிங்க சேதுபதியையும் திருச்சிக் கோட்டையில் சிறை வைத்தான். இந்நிகழ்ச்சியால் பேரதிர்ச்சியுள்ள சிவகங்கை அரசி வேலு நாச்சியார், தனது செல்வாக்கினால் நவாப்பின் கொடுங்கோன்மையை மறைமுகமாக மக்களிடம் எடுத்துக் கூறுவதில் தீவிரமாக முனைந்தார்."

ஆதாரமற்ற செய்தி. சேதுபதி ராணியும் சேதுபதி இளவரசரும் கைதான இருபது நாட்களில், ராணி வேலுநாச்சியார், கணவரை இழந்து விருபாட்சியில் தஞ்சமடைந்து விட்டார் என்பது வரலாறு. பக்கம் 88

"...மறவர் குல மக்கள், ஈட்டுத் தொகையாக ரூ. 1,50,000 கொடுத்தால் ராணி நாச்சியாரையும் சேதுபதி இளவரசரையும் விடுதலை செய்வதாக நவாப் அறிவித்தார். எனவே வீராங்கனை வேலுநாச்சியார் தாம் சேகரித்து வைத்திருந்த தொகையின் ஒரு பகுதியை அனுப்பி வைத்தார். இளவரசரும் ராணியும் விடுவிக்கப்பட்டு சேதுநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.'

புதிய வரலாறு. ஆசிரியரது அருமையான கற்பனை சரியான செய்திக்கு பார்க்க இந்த நூல் ஆசிரியரது “விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்" (1987)

பக்கம் 92

'... நாட்டைவிட்டு திண்டுக்கல்லில் தங்கி இருக்கும் ராணி வேலு நாச்சியாரிடம் நாட்டை ஒப்படைக்க முடிவு செய்தான் (நவாப்). வீராங்கனை வேலு நாச்சியாரை வரவழைத்து சிவகங்கைச் சீமையை
அவரிடம் ஒப்படைத்தனர்.'

“ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு கட்டினார். மருதிருவரை அழைத்து வரச்செய்தார். வாளை பெரிய மருதுவிடமும், முத்திரை மோதிரத்தை சின்ன மருதுவிடமும் ஒப்படைத்தாள். அரசியல் வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.” (வேலு நாச்சியார்)

மிக அருமையான புதிய கண்டுபிடிப்பு. ஆசிரியருக்கு இந்தச் செய்திகள் எங்கிருந்து கிடைத்ததோ! நல்ல பகல் நேரத்து உறக்கத்தில் உதயமாகி இருக்க வேண்டும்.

பக்கம் 127

“... சசிவர்ணத் தேவர் வழிவந்தவரே மருது பாண்டியர் என்பதற்கும் அவர்கள் சீமையை ஆளும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி (கலெக்டர்) கட்டாயப்படுத்தினான்."

இதற்கான ஆதார ஆவணம் எதுவும் இல்லை.

பக்கம் 147

'... வேலுநாச்சியாருக்கு நேரிடையான வாரிசுகளில் யாரையேனும் ஒருவரை மருது சகோதரர்கள் தேர்ந்தெடுத்து இருக்கலாமல்லவா?"

வேலு நாச்சியாரது மகள் வெள்ளச்சியை மணந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவரைப் பற்றி ஆசிரியர் அறிந்து இருக்கவில்லை எனத் தெரிகிறது!

5. சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் (1986)

ஆசிரியர்: கோவி.மணிசேகரன்

வெளியீடு: வானதி பதிப்பகம், சென்னை-17.

ஒரு காட்சி

‘மறக்குலத்துப் பெண் ஒருத்தி அதிலும் அரச மரபைச் சேர்ந்தவள். குதிரைச் சவ்வாரி செய்யும்பொழுது அவளது குதிரை மிரண்டு காட்டுக்குள் ஓடுகிறது. இதனை எதிர்பார்த்து இருந்தவனைப் போன்ற ஒரு முரட்டு இளைஞன் ஒருவன் வழியில் இருந்த ஒரு மரத்தின் மேலிருந்தவாறு அவளை பற்றி தூக்கி காப்பாற்றுகிறான். இருவரும் காதல் கொள்கின்றனர்.’
‘அவனை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்று தனி அறையில் தங்குமாறு செய்கிறாள். அவனிடம் வாய் பயிற்சியும் வளரிப் பயிற்சியும் பெறுவதற்காக அழகுமிக்க அந்த அறையில் விரிக்கப்பட்ட இரத்தின’
கம்பளத்திற்கு மேல் உள்ள பெரிய கட்டில் அதில் தடித்த பஞ்சு மெத்தைகள், இருக்கைகள் - இவைகளை கூர்ந்து கவனிக்கும் அவனைப் பார்த்து. "எதற்கும் அவசரம் கூடாது” என்று சொல்லி பொறுமையாக இருக்குமாறு அவள் புத்திமதி சொல்கிறாள்.
கொய்யாத பழமான அவளை விரும்புவதாக அவன் சொன்னதற்கு அவள் "எதற்கும் ஒரு காலம் இருக்கிறது” என்று சொல்லி காத்திருக்கப் பணிக்கிறாள். காத்திருக்கலாம் என்பதற்கு என்ன அத்தாட்சி என அவன் கேட்கிறான். தனது ஒற்றைக் கல் மோதிரத்தை அவனது விரலில் அணிந்து அதனை அத்தாட்சியாக கொள்ளுமாறு சொல்கிறாள் அவள்.

இன்னுமொரு காட்சி

சிவகங்கை அரண்மனையில் ஒரு இரவு கூத்து நடக்கிறது. அதனைப் பார்த்து பொறுமை இழந்த அந்தக் கன்னிகை இடையில் எழுந்து அவளது அரண்மனையில் மாடியிலுள்ள தனியறைக்கு செல்லுகிறாள்.
தனது ஆபரணங்களை கழற்றி ஒரு பேழையில் வைத்துவிட்டு பொன் வேய்ந்த இரவிக்கையை களைந்தாள். உள்ளே இறுக்கமாக இருந்த கச்சினை கழற்றியெறிந்துவிட்டு இடுப்பில் பாவாடை போன்ற சுற்றி இருந்த துணியை தளர்த்திவிட்டாள். அதுவும் கூட அவளுக்கு பளுவாகவும் சங்கடமாகவும் இருந்தது போலும். அதனையும் அவிழ்த்துப் போட்டாள். ஆடைதாங்கியில் இருந்த மெல்லிய சேலையை எடுக்கப் போனாள். அப்பொழுது அவளது கட்டிலின் கீழ் ஒளிந்து இருந்த வெள்ளை மருது வெளியில் வந்தான். நிர்வாணமாக இருந்த தன்னுடைய கட்டுக்கோப்பான உடலை மெல்லிய துணி கொண்டு மறைக்க படாதபாடுபட்டாள். அலங்கோலமாக வாரிச் சுருட்டிப் போர்த்தி உடலை மறைக்க முனைந்தாள்.
"ஏன் இந்த சிரமம் நான்தானே இருக்கிறேன். வேறு யார் இருக்கிறார்கள்?” அந்த இளைஞனது கேள்வி. அரண்டு மிரண்டு போன வேலுநாச்சியின் உடலோடு ஒட்டியிருக்கும் சேலை நழுவி விழுந்ததை எடுத்து தனது கரத்தால் அவள் மீது போட்டோன். அப்போது அவனது முரட்டு விரல்கள், அவளது கவர்ச்சியான அங்கங்கள் மீது பட்டு மின்னல் உணர்வை தூண்டி ஒரு கணம் சிலிர்க்க வைத்தது. அவள் நாணத்தால் தலைகுனிந்த வண்ணம் “இது மாளிகை கீழே காவல் வீரர்கள் காத்து இருக்கிறார்கள், மெதுவாகப் பேசுங்கள்” என்றாள்.

மற்றும் ஒரு காட்சி

இரவு அந்தகாரத்தில் ஆழ்ந்து கிடந்தது. குகையில் இரண்டு தீப்பந்தங்கள் செவ்விய ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தன. எழுந்து
சென்ற அந்த மனிதன் வான்வெளியை அண்ணாந்து நோக்கினான். இன்றும் நிலவு உதயமாகவில்லை.
அந்த பெண்மணி உறங்கிக் கொண்டிருந்த குகையை நாடிச் சென்றான். அவள் கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்த பலாவாகக் காட்சி அளித்தாள். அதனை சுவைத்தால் என்னயென்று எண்ணம் அவனுக்கு தோன்றியது.
மேலாடை விலகியிருந்தது. கணுக்காலுக்குக் கீழே ஆடையில்லை. அயர்ந்த தூக்கம். பூந்தனங்கள் கொழிப்புடன் கோபுரக் கலசம் போல காட்சி அளித்தன. அன்றோரு நாள் இரவு அவன் கண்ட அவளது பிறந்த மேனிக் காட்சி நினைவுக்கு வந்தது. நாவில் இப்போது நீர் ஊறியது. ஒருவித வேகச் சுழிப்புடன் உள்ளே நுழைந்து அவளது திரண்ட தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.
திருதிருவென்று விழித்த அவளுக்கு உண்மை புரிந்து விட்டது. "இப்பொழுது உங்களுக்கு என்ன தேவை?” - அவள்.
'நீ - அவன்.
'இப்போதே தேவையா?" - அவள்.
"ஆம்" - அவன்.
"சுதந்திர ஒளி - தமிழ் ஒளி இந்த நாட்டில் படரட்டும்- படரவிட முயற்சி செய்யுங்கள். அப்போது நான் உங்கள் மடியில் தலை வைத்து துங்குவேன்” - அவளுடைய பதில்.

இங்கே சுட்டப் பெற்ற இந்த மூன்று காட்சிகளையும் படித்துப் பார்த்த வாசகர்கள், இதனை ஏதோ ஹாலிவுட் திரைப்படத் தொகுப்பாகத்தான் கருதுவார்கள். ஆனால் இது ஒரு சிறந்த தமிழ்ப் புதினப் படைப்பாளர் ஒருவரது படைப்பில் இருந்து தொகுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆம். திரு. கோவி. மணிசேகரன் என்பவரால் எழுதப்பெற்று சென்னை வானதி பதிப்பகத்தினரால் 1986-ல் வெளியிடப் பெற்ற சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் (ராணி வேலு நாச்சியார்) என்ற நூல்தான் அந்தப் புதினம்.

இன்னும் ஒரு முக்கியமான செய்தி மறந்துவிடக் கூடாத செய்தி, மேலே கண்ட காட்சிகளிலும் நாம் காண்கின்ற கதாபாத்திரங்கள் - இளைஞன் வெள்ளை மருது என்ற பெரிய மருது சேர்வைகாரர், ராணி வேலுநாச்சியார். ஆம். சந்தேகமே இல்லை. சிவகங்கை சீமையில் சுதந்திர முழக்கமிட்ட சிம்மங்கள். ஏன்? இந்திய விடுதலை இயக்கத்தின் இணையற்ற தியாகிகள்; வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெடிமருந்து பேராண்மை வெடித்து சிதறி சின்னாபின்னமாகும்படி மக்களின் அசுர பலத்தை திரட்டி நாடெங்கும் புரட்சித் தீயைப் புடம் போட்டுக் கொளுத்தியவர்கள். இத்தகைய இணையற்ற உத்தமர்களின் ஓவியத்தை இதைவிட தமிழில் சித்தரிக்க முடியாது. தாய் நாட்டுப் பற்றும் வரலாற்று உணர்வும் தேங்கியுள்ள இதயங்கள் இந்தக் காட்சிகளை எளிதில் ஜீரணிப்பது என்பது இயலாத ஒன்று.

இவைகளை இரசித்துப் படித்த சில அப்பாவி உள்ளங்கள் இந்த நூல் வரலாற்று நூல் அல்ல, புதினந்தானே என் வாயடைக்க முயலுகின்றனர். இது புதினம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் இதில் புகுத்தப்பட்டவர்கள் சிவகங்கை சீமையின் வரலாற்று நாயகர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்தப் பேரண்மைமிக்க பெருமக்களது வரலாற்றை படித்து அறிந்தவர்கள், இந்த நூலைப் படித்து இந்தக் காட்சிகளைக் காணும்பொழுது அவர்களது கற்பனைகளில் அற்புத மனிதர்களாக, சமுதாய விடிவெள்ளிகளாக வாழ்ந்து வருகிறவர்களை இவ்வளவு இழிந்த உள்ளத்தினரா என்று எண்ணி நெகிழ மாட்டார்களா? சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரது ராணி வேலு நாச்சியாருக்கும், பெரிய மருது சேர்வைக்காரருக்கும் இப்படியொரு கள்ளத் தொடர்பு இருந்ததை எந்த வரலாற்று ஆவணத்திலும் குறிக்கப்பட்டு இருக்கிறதா? என்று வரலாற்று ஆவணங்களைத் தேடி அலுத்துப் போய் ஆறுதலடைபவர்கள் எத்தனை பேர்? இறுதியில் இவை அனைத்தும் இந்தப் புதின ஆசிரியரது நொந்து அழுகிய ஆபாச கற்பனைகளே என ஓர்ந்து உள்ளம் அமைதி கொள்பவர் எத்தனை பேர்?

இன்னொரு கோணத்திலும் இந்தப் புதினக் காட்சிகளைப் பார்ப்போம். இந்தக் கதாபாத்திரங்கள் வரலாற்று நாயகர்கள் என்பதை மறந்துவிட்டு சாதாரண புதினப் பாத்திரங்களாக எடுத்துக் கொள்வோம். அப்பொழுதும்கூட இந்த இரு கதாபாத்திரங்களும் சமுதாயத்தினின்றும் பெரிதும் வித்தியாசமானவர்களாக தமிழக பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர்களாக காட்சியளிக்கின்றனர்.

வேலுநாச்சியாரிடம் காதல் வசப்பட்ட பின்னர் பெரிய மருது சேர்வைக்காரர் கவுண்டன் கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த இள மங்கையையும் அடுத்து முக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த ராக்காத்தாள் என்ற பெண்ணையும் மணம் செய்து கொள்கிறார். அப்படி இருந்தும் இந்தப் பெரிய மனிதரது ஆசைக்கு அளவில்லாமல் போய்விட்டது. வேரில் பழுத்த பலாவாக விளங்கிய வேலுநாச்சியார் மீதான 'காதல்" மீக்கூர அவளது தோள்களைப் பற்றி தனது இன்ப நினைப்பை எடுத்துச் சொல்கிறார். அதற்கு வேலுநாச்சியாரும் மறுப்புச் சொல்லாமல் தவணை சொல்கிறாள். அரச குலத்தைச் சேர்ந்த, பிற பெண்களுக்கு வழிகாட்டியான வேலுநாச்சியாரின் பதில் விபரீதமாக இருக்கிறது? 'பெண்ணின் பெருந்தக்கயாவுள' என வினவிய வள்ளுவர் வரைந்துள்ள இல்லக் கழத்தியா இந்தப் பெண் என எண்ணத் தோன்றுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் பண்பினை, உள்ளப் பாங்கினை சங்க காலத்தில் இருந்து உயிர் மூச்சாகக் கொண்டுள்ள தமிழ் குலத்தின் பிரதிநிதிகளா இந்த இருவரும் நிச்சயமாக இருக்க முடியாது. ஆம். அப்படித்தான் இந்தப் புதின நூலாசிரியரது எழுத்துக்கள் இந்தப் பத்திரங்களின் உள்ளக் கிடக்கையாக இந்தப் புதினத்தில் உருப்பெற்றுள்ளன. தமிழ் மக்களுக்கும், தமிழரது பண்பாட்டிற்கும் தீராத களங்கத்தை ஏற்படுத்தியதுடன் சிவகங்கை வரலாற்றையும் தடம் புரளச் செய்துள்ளன, இந்த இழிவு சேர்த்த எழுத்துக்கள்.

வரலாற்றுக்கு முரணான இன்னும் சில எழுத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கம் 66

'சிவகங்கையின் அரசர் முத்து வடுகநாத உடையாத் தேவர். மனைவியின் பிரிவாற்றாமையால் மனங்கலங்கி காணப்படுகிறார்.'

பக்கம் 69

'அதற்காக நான் கிழவரையா மணப்பது?' - வேலுநாச்சியாரது வினா!

பக்கம் 74

"இளமை கொழிக்கும் வேலுநாச்சி, முதுமையின் தளர்ச்சிக் கதவங்களைத் தட்டிக் கொண்டிருக்கும் முத்து வடுகநாதரை மணக்க ஒப்புக் கொண்டது...'

மன்னர் முத்து வடுகநாதரது முதல் மனைவியின் பெயரை குறிப்பிடவில்லை. அவர் எப்பொழுது இறந்தார் என்பதோ அப்பொழுது மன்னருக்கு வயது என்ன என்பதும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற ஆவணம் ஒன்றின்படி மன்னர் 1736-ல் பிறந்தார், 25.6.1772-ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில் தியாகியானார். மொத்தம் அவரது வாழ்நாள் 36 ஆண்டுகள். அவருக்கு ஒரே மனைவி ராணிவேலுநாச்சியார். இவருக்கு முன்னாள் எந்த நாச்சியாரை மணந்தார். எப்பொழுது அந்தப் பெண்மணி மரணமுற்றார் என்ற செய்திகளை எங்கிருந்து பெற்றார் என்பது தெரியவில்லை.

பக்கம் 70

"...இராமநாதபுரத்து இளவரசர் கோழையா?' (வேலுநாச்சியார்)
'கோழையல்ல கயமை நிரம்பியவன். அவன் பேடியைவிடக் கேவலமானவன்...' (வீரத்தேவர்)

இங்கு குறிப்பிடப்பெறும் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்துச் சேதுபதி, கி.பி.1749-62 வரை ஆட்சி செய்தவர். இவரைப் பற்றி இவ்வளவு மோசமாக இந்த நூலாசிரியர் ஏன் எழுதினார் என்பது தெரியவில்லை. அறியாமையை ஆயுதமாகக் கொண்டு, எதைப் பற்றியும் எப்படியும் எழுதுவது என்பது நல்ல எழுத்தாளனது பண்பாகாது.

இந்த மன்னரது சாதனைகளாக வரலாற்றில் பல நிகழ்ச்சிகள் உள்ளன.

6.17.1891-ல் வெளியிடப்பெற்ற “Manual of Ramnad Samasthanam” என்ற நூலின் பக்கங்கள் 241/43 பார்த்தால் இந்த மன்னர் மிகப்பெரிய வெற்றி வீரன், தஞ்சை மராத்தியப் படைகளையும், மைசூர் தளபதியையும், டச்சுக்காரரது கப்பற்படை மிரட்டலையும், சிறப்பாக சமாளித்தவர் என்பதும் பல அறக்கொடைகளுக்கும் நாயகர் என்பதையும் அறியலாம்.

பக்கம் 100

“கான் சாகிப் கேட்டனுப்பிய கப்பத்தைத் தாங்கள் கட்டியாய் விட்டதா?' 'சென்ற வாரம்தான் அனுப்பி வைத்தேன்”

சேதுபதி மன்னர்கள் யாருக்கும் கப்பம் செலுத்தாதவர்கள் என்பதுதான் சென்னையில் உள்ள ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியரது ஆய்வுக்குழுவின் முடிவு. அத்துடன் சேதுபதி சீமை உள்ளிட்ட மதுரைச் சீமை கி.பி.1801 வரை ஆற்காட்டு நவாபுக்கு கட்டுப்பட்டு இருந்தது. மதுரை ஆளுநராக இருந்த கம்மாந்தன் கான் சாகிபு செல்லமுத்துத் தேவருடன் நல்ல உறவுகளைக் கொண்டு இருந்தார். செல்லமுத்து சேதுபதி மதுரைக் கான்சாகிபுக்கு கப்பம் செலுத்தினார் என்று குறிப்பிட்டு இருப்பது வரலாற்றுக்கு முரணான பொய்ச் செய்தி.

(பார்க்க; Yousuff Khan, the Rebel Commandant by S.C.Hill (1932). History of Pudukottai P.241)

பக்கம் 349

“அமைச்சரே இக்கணம் முதல் நமது பெரிய மருதுவை மகா சேனாதிபதியாக நியமிக்கிறேன்."

வெள்ளை மருதுவும் அவரது சகோதரரும் மன்னர் முத்து வடுகநாதர் ஆட்சிக் காலம் வரை அவரியம் அடைப்பம் பணியில்தான் இருந்து வந்தனர் (25.6.1772 வரை) கி.பி.1780-ல் ராணி வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டிய பொழுதுதான் இந்த சகோதரர்களை சிவகங்கை பிரதானிகளாக நியமித்தார் என்பது வரலாறு.

(பார்க்க: மாவீரர் மருதுபாண்டியர் (1989)

பக்கம்: 362-364

"சேது நாட்டை அடைந்தன
தஞ்சைப் படைகள்......."
“காளையார் கோயிலிலிருந்து மறவர்
படைகள் புறப்பட்டன......”
“அருகே சேது நாட்டில் தாமோதரப்
பிள்ளை, படை கொண்டு எதிர்க்கச் செய்தார்....."
“தஞ்சை வேந்தனைச் சிதறியடித்து
ஓட ஓட விரட்டின."

இந்த நிகழ்ச்சியை இது தொடர்புடைய செய்திகளைப் பார்க்கும்பொழுது, நூலாசிரியர் கி.பி. 1751-ல் அனுமந்தக்குடி மீதான தஞ்சைத் தளபதியின் படையெடுப்புடன் கி.பி.1771-ல் இராமநாதபுரம் மீது தஞ்சை மன்னர் தொகுத்த படை எடுப்புடன் குழப்பிக் கொண்டுள்ளார் என்பது தெளிவாக தெரிய வருகிறது.

இந்தப் போரில், இராமநாதபுரம் கோட்டை மீதான முற்றுகை நாற்பது நாட்களுக்கு மேலாக நடைபெற்றாலும் தஞ்சைக்கு வெற்றி கிட்டவில்லை. ஆதலால் இராமநாதபுரம் ராணியுடன் உடன்பாடு கண்டு திரும்பினார் என்பது வரலாறு.

(பார்க்க: Dr. K.Rajayyan - History of Madura) ஆதலால் இங்கு நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல தஞ்சை மன்னர் புறமுதுகிட்டு ஓடவில்லை. அவரது உடலிலும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் அவர் சிவகங்கை மீது படையெடுத்தபோது, ஆற்காட்டு நவாப்பினால் தஞ்சைக்கு அபாயம் ஏற்பட்டதால், திட்டத்தை கைவிட்டு தஞ்சை திரும்பினார். இதுதான் வரலாறு.

பக்கம்: 405-408

"1772 ஆம் ஆண்டு மே மாதம்......'
'12, 18 பவுண்டு எடையுள்ள குண்டுகள் தேவைப்பட்டன. அந்த இராமநாதபுரத்துச் சிறு கோட்டையைத் தாக்க!! அதன்பின் கோட்டை தகர்ந்தது. இப்படியாகச் சில நாள் முற்றுகை...'
'பெரியசாமி. அமைச்சர் தாமோதரம் பிள்ளையைக் காணச் சென்றான்...'
'சற்றும் எதிர்பாராத வகையில் துரோகி பெரியசாமி, கட்டாரியுடன் தாமோதரப் பிள்ளையின் மீது பாய்ந்து கொலை செய்து விட்டான்."
"......இளவரசன் இராமலிங்க சேதுபதி,
... கட்டாரியை எடுத்துக் குறி பார்த்து எறிந்தான்... புழுவாய் துடித்துத் தரையில் சாய்ந்தான் துரோகி பெரியசாமி.”

இந்த நிகழ்ச்சி முழுமையும் கற்பனையானது. இராமநாதபுரம் அமைச்சர் தாமோதரம்பிள்ளை கி.பி.1772-ல் ஆற்காடு - கும்பெனி படையெடுப்பின்போது உயிருடன் இல்லை. அதற்கு முன்னரே இறந்துவிட்டார். இந்தப் படையெடுப்பின்பொழுது ராணி முத்து திருவாபி நாச்சியாருடன் இருந்த சமரசப் பேச்சில் கலந்து கொண்ட அமைச்சர் பிச்சைபிள்ளை, பேச்சுக்கள் தோல்வியுற்ற பிறகு தான் பரங்கியரின் இராமநாதபுரம் மீதான கோட்டைத் தாக்குதல் 1.6.1772, 2.6.1772 இரு நாட்கள் மட்டும் (பார்க்க: Major Vibart - History of Madras Engineers and Pioneers.) பக்கம் 414

'ஓ வேலுநாச்சி. சிம்ம சொப்பனமாக உச்சரித்தனர் ராணி வேலுநாச்சியின் வீரப் போர்க் காட்சி, கண்டோர் நெஞ்சில் கனலைப் பரப்பியது!”
“மறுநாள் மீண்டும் போர் தொடங்கியது. இப்படியாகச் சில தினங்கள் வரை போர் முடிவற்று நடந்து கொண்டே இருந்தது”

நூலாசிரியரது சிறந்த கற்பனைக்கு இந்த எழுத்துக்களும் நல்ல எடுத்துக்காட்டு இந்தக் காளையார் கோயில் கோட்டைப் போர் பற்றிய கும்பெனியாரது ஆவணங்கள் முழுமையாகவும், தெளிவாகவும் உள்ளன. சென்னை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில், 25.6.1772 நடைபெற்ற காளையார் கோயில் போர் ஒரு நாளில் முடிவடைந்தது. மன்னர் முத்து வடுகநாதருடைய தியாகத்துடன் இந்தப் போரில் ராணி வேலு நாச்சியாருக்கு எந்தப் பங்கும் இல்லை. அண்மைக் கால வரலாற்றை தமது இஷ்டம் போல கற்பனைக் காட்சியாகத் திரித்து மறைத்து எழுதுவது மன்னிக்க முடியாத குற்றம். (பார்க்க: தமிழ்நாடு ஆவணக் காப்பக ஆவணங்கள் - Military Consultations Vol. 42/26.6.1772/pp 414-607)

பக்கம்: 423-426

'காளையார் கோயிலுக்கு மேற்கே மூன்று கல் தொலைவிலிருக்கும். 'சுப்புணி சவுக்கு என்று அந்நாளையில் விளங்கிய சவுக்குத் தோப்பை அடைந்தனர்...'
'மறுநாள் அவர்கள் அனைவரும் மதுரையை அடைந்தனர். ஏறத்தாழ மூன்று மாத காலம் இப்படியாகக் கழிந்தது'
"எப்படியோ இரண்டாண்டு காலமாக அவர்கள் தலைமறைவாக வாழ்ந்தனர்."

நூலாசிரியர் அளித்துள்ள இந்தப் புதுமையான நிகழ்ச்சிகளும் எந்த வரலாற்று ஆவணங்களிலும் காணப்படாதவை. நூலாசிரியருக்கு வளமான கற்பனைகளை சுகமான எழுத்துக்களில் சுதந்திரமாக வடித்துள்ளார்.

காளையார் கோவில் போர் முடிவிற்குப் பின்னர், அமைச்சர் தாண்டவராயபிள்ளை, ராணியாரையும் அவரது குழந்தையையும், காப்பாற்றும் பொருட்டு மைசூர் மன்னர் ஹைதர்அலிக்குச் சொந்தமான திண்டுக்கல் சீமையில் விருபாச்சியில் பத்திரமாக இருக்கச் செய்துவிட்டு சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பிற்கு எதிராக மக்களைக் கிளர்ச்சிகளுக்கு ஊக்குவித்து வந்தார் என்பதும், கி.பி.1772-ல் அவரது மறைவிற்குப் பின்னர் ராணி வேலுநாச்சியார் இந்தப் பொறுப்பை மேற்சொன்னவாறு எட்டு ஆண்டுகள் கழித்து மைசூர் மன்னர் ஹைதர் அலியின் இராணுவ உதவி பெற்று கி.பி.1780-ல் சிவகங்கைச் சீமையில் ஆற்காடு நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டார் என்பதுதான் உண்மையான வரலாறு.

இவ்வித உண்மையான வரலாற்றை கற்பனை நயங்கள், உத்திகள் வழி, மக்களுக்குத் தெளிவாக வழங்கும் புதினத்தை படைப்பதற்குப் பதில் எடுத்துக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிகளை திரித்து புரட்டி, புனைந்து வரையும் வழக்கத்தை சில நூலாசிரியர்கள் செய்து வருகின்றனர். சுயநலத்திற்காக பணம் புரட்ட, எளிதில் பேரும் புகழும் பெற அதற்கு பாலியல் என்ற நஞ்சை படிப்பாளிகள் இதயங்களில் பக்குவமாக பறிமாறும் கைவந்த கலையும் அவர்கள் கற்று வளர்த்து வந்து இருப்பதும் பிரதான காரணமாகும்.

இதன்வழி, தமிழ் புதின இலக்கியங்கள் ஏனைய இந்திய மொழிகளின் புதினங்களைப் போல அனைத்து இந்திய அளவில் குறிப்பாக மலையாளம், வங்கம், அஸ்ஸாம் மொழிகளின் படைப்புகளைப் போல படிப்பாவிகளது உள்ளங்களை கவர முடியாத முடங்களாகி வருகின்றன. அமரர் அகிலனுக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர் யாரும் “ஞானபீட” பரிசினைப் பெற இயலாததற்கும் இதுவே காரணமாகும்.

எதிர்காலத்தில் வழிகாட்டியான உண்மை வரலாற்றை சமுதாய உணர்வுடன் பொறுப்பாக புதினத்தின் வழி மக்களிடம் புகுத்தும் பணியை இந்த நூலாசிரியர் மேற்கொள்ளத் தவறிவிட்டார் என்பது இவரது எழுத்துக்களில் இருந்து காணக்கூடியதாக உள்ளது. ஆனைக்கு அடி சறுக்குவது இயல்புதானே!

6. மருது பாண்டிய மன்னர்கள் (1994)

ஆசிரியர்: திரு. மீ.மனோகரன்
வெளியீடு: அன்னம் பதிப்பகம், சிவகங்கை

நூல் தலைப்பைப் படித்தவுடன் இப்படியும் மன்னர்கள் சிவகங்கைச் சீமையில் இருந்தனரா என்ற வினாவை எழுப்பும் வகையில் நூலின் தலைப்பு மட்டும் அமைக்கப்படவில்லை. நூல் முழுவதும் மருதிருவர் சிவகங்கைச் சீமை மன்னர்களாக இருந்தனர் என்பதை நிலை நாட்டுவதற்காகவே, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. சிவகங்கை அம்மானையும் சிவகங்கைச் சீமைக் கும்மியும், மருது பாண்டியர்களுக்கு இலக்கிய வழக்காக துரை, வேந்தர், மன்னர், ராஜன் என்று சிறப்பு அடைகளைப் பயன்படுத்தி இருப்பதை உண்மையென உரைக்க முற்படும் இந்த நூல் அந்த இரண்டு நாடோடி இலக்கியங்களையே பெரிதும் சார்ந்து வரையப்பெற்று இருப்பதுடன் நாடோடி இலக்கியம் என்ற வகையில் அவைகளில் மிகைப்படுத்தி இட்டுக்கட்டி சொல்லப்பட்ட செய்திகளை, உண்மை வரலாறாக வரைந்துள்ள இந்த நூலின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்.

இந்த நூலின் தொடக்கத்தில் சிவகங்கைச் சிம்மாசனம் என ஒரு ஒளிப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அதன் கீழே "இந்த சிம்மாசனத்தை அடையத்தான் கெளரி வல்லவர் ஆங்கிலேயர் அணியில் சேர்ந்தார்' என்று வரையப்பட்டுள்ளது.

வாசகப் பெருமக்கள் அந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் உண்மையிலேயே இந்த சிம்மாசனம் சிவகங்கைத் தன்னரசு மன்னர்களுடையது தானா என்பது விளங்கும். இப்பொழுது பாருங்கள். சிம்மாசனத்தின் உச்சியில் ஒரு கிரீடத்தின் உருவம் காணப்படுகிறது. இது நமது நாட்டு மன்னர்கள் சூடிக் கொள்ளும் முடி போன்றது இல்லையல்லவா?

அடுத்து, அந்தச் சிம்மாசனத்தின் மேல்பகுதியின் இரு பக்கங்களிலும் முறையே சிங்கம், குதிரை ஆகியவைகள் அமர்ந்த நிலையில் இதுவும் நமது நாட்டு பாணி இல்லை தானே.

அடுத்து, மன்னரது இருக்கையின் பின்புறம் மேல் பகுதியில் பூ வேலைப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு கேடயம் போன்ற உருவம் இதைப் பற்றியவாறு இருபுறமும் மீண்டும் சிங்கமும் குதிரையும் அமர்ந்த நிலையில் கேடயம் போன்ற நடுப்பகுதி உருவத்தில் ஒரு சிலுவை உருவம், அந்தக் கேடயத்தின் மீது ஒரு சிங்க உருவம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய சிம்மாசனத்தின் மீது அமர்ந்தா சிவகங்கை மன்னர்கள் ஆட்சி செலுத்தினர். இல்லவே இல்லை. இந்த சிம்மாசனத்தில் அமைப்பு, கிரீடம், சிங்க, குதிரை உருவங்கள் கேடயத்தில் காணப்படும் கிறித்தவரது சிலுவை உருவம் இவையனைத்தும் இங்கிலாந்து மன்னர்களது அரசு இலச்சினையாகும். கி.பி.1921-ல் இந்தியாவிற்கு வருகை தந்த இங்கிலாந்து நாட்டு வேல்ஸ் இளவரசருக்கு சென்னை மெமோரியல் ஹாலில் சென்னை நகரப் பெருமக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கும் பொருட்டு இளவரசருக்காக புதிதாக அமைக்கப்பட்டது. இந்த போலி சிம்மாசனம். விழா முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட சாமான்களை ஏலத்துக்கு விட்டு விற்ற பொழுது, இந்தப் போலி சிம்மாசனத்தை அப்பொழுது சென்னையில் இருந்த சிவகங்கை ஜமீன்தார் திரு. துரைசிங்கத் தேவர் அவர்கள் வாங்கி வந்து அரண்மனையில் வைத்து இருந்தார். அதனை 1978-ல் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் திரு. நாராயணன்.ஐ.ஏ.எஸ். பெற்று, இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் சேர்த்தார்.

இவ்விதம் நூலின் தொடக்கமே, உண்மைக்கு மாறாகத் தடம் புரண்டது போல இந்த நூலின் பல நிகழ்ச்சிகளும் வரலாற்றுக்கு முரணான பார்வையில் வழி மாறி இருப்பதைப் பார்க்கலாம்.

பொதுவாக வரலாற்றுச் சான்றுகள், நேர்முகத் தடயங்கள் இல்லாத நிலையில், கோயில் ஒழுகு தல புராணம், இலக்கியங்கள் ஆகியவற்றில் குறிக்கப் பெற்றுள்ள செய்திகளை அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆய்ந்துணர்ந்த பிறகு அவைகளை வரலாற்றின் கூறுகளாக நம்பத் தக்கதாகக் கொள்ளலாம் என்பதே வரலாற்று வல்லுனர்களது முடிவு. பேராசிரியர் திரு. நா.வானமாமலை அவர்கள் இந்த பொருள் பற்றி கொடுத்துள்ள எச்சரிக்கையை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும்.

"... இந்தப் பாடல்களைக் கொண்டு மட்டும் சரித்திர நிகழ்ச்சிகளை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. இவற்றை ஒதுக்கித் தள்ளி விட்டும் உண்மையான நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளவும் இயலாது. கிடைக்கும் சரித்திர சான்றுகளையும், நாட்டுப் பாடல்களையும், உற்று நோக்கி உண்மைகளைச் சரி பார்த்து முடிவுக்கு வர வேண்டும்."

தமிழகத்தின் தொன்மைக் கால, பிற்கால வரலாற்றினை தெரிந்து கொள்ள இலக்கியங்கள், கல்வெட்டுப் பதிவுகள், செப்பேடுகள், ஒலை முறிகள், கோயில் ஒழுகுகள், வெளிநாட்டுப் பயணிகளது பயணக் குறிப்புகள் ஆகியன துணை புரிகின்றன. ஆனால் அண்மைக் காலமாகிய பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டு நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கான நம்மவர்களது ஆவணங்கள் மிகக் குறைவு. இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தான ஆவணங்கள், மதுரை மிஷன் ஆவணங்கள், சிங்கம்பட்டி, எட்டையாபுரம் ஜமீன் ஆவணங்கள், துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள், சுவார்ட்ஸ் பாதிரியார் குறிப்புகள், ஆற்காட்டு நவாப் ஆவணங்கள், புதுக்கோட்டை தர்பார் ஆவணங்கள், ஆகியவைகளில் ஆற்காட்டு நவாப் ஆவணங்கள் (பார்சி மொழியில் அமைந்தவை) ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதும் இந்த ஆவணங்களை, இதுவரை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ மொழியாக்கம் செய்யப்படவில்லை. தொகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுதிச் சுருக்கமும் பட்டியலும் தயார் செய்யப்படவில்லை. புதுக்கோட்டை மன்னரது தர்பார் ஆவணங்களும், இதுவரை வரலாற்று ஆய்வாளர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றன. மற்றும், இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தான ஆவணங்களைப் பொறுத்த வரையில், சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இவற்றில் மிகப் பெரும்பாலான பயனுள்ள ஆவணங்கள் அழிந்து விட்டன. அல்லது அழிக்கப்பட்டு விட்டன. ஏனைய ஆவணங்களில் கிடைக்கக் கூடிய செய்திகள் வரலாற்றுக்குப் பயன்படுவது மிகவும் குறைவு. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆங்கில கிழக்கிந்திய கும்பெனியாரது ஆவணங்கள் மட்டுமே அண்மைக் காலத் தமிழக வரலாற்றுக்குக் கை கொடுத்து உதவக் கூடியதாக உள்ளன. இதனை அரிச்சந்திரனின் வாக்கு என ஏற்றுக் கொள்ளலாமா என இந்த நூல் ஆசிரியர் இடித்துரைப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகவே தெரிகிறது. காரணம் நூலாசிரியருக்குத் தமிழக அரசின் ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களில் ஒரு பகுதியைக் கூடப் படித்துத் தெளிவு பெறுவதற்கான வாய்ப்பும், வசதியும் கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

பேராசிரியர் கே.இராஜையன் போன்றவர்கள் ஆங்கில ஆதிக்கக் காலத் தமிழகத்தைப் பற்றிப் பல நூல்கள் வரைந்து, தமிழக வரலாற்றிற்குப் பெருமை சேர்த்து இருக்கிறார்கள் என்றால், அவரது எழுத்துக்களுக்கு முழுவதும் ஆதாரமாக அமைந்துள்ளவை சென்னை ஆவணக் காப்பக ஆவணங்களும், ஆவணக் காப்பக நூலக நூல்களும்தான் அவற்றிலும் கிழக்கிந்தியக் கும்பெனியின் அலுவலர்களாக இருந்த மெக்கன்சி போன்றவர்கள், தங்களது பணியின் பொழுது சென்ற ஊர்களில் கண்டவைகளையும் கேட்டவைகளையும், பிறரைக் கொண்டு வரையச் சொல்லி சேகரித்து வைத்துள்ள எழுத்துச் சுவடிகளும் மேஜர் விபார்ட், கர்னல் வெல்ஷ், ராபர்ட் ஊர்மே, ஆகிய கும்பெனியாரது ராணுவத் தளபதிகள் அவர்கள் போர்ப் பணிகளை மேற்கொண்ட பொழுது, அப்பொழுதைக்கு அப்பொழுது வரைந்து அனுப்பிய விவரமான அறிக்கைகள், தளபதி பானர்மேன், தளபதி புல்லர்டன், தளபதி ரீட், தளபதி வில்சன் ஆகியோரது நீண்ட அறிக்கைகள், மற்றும் கும்பெனி கலெக்டராகப் பணியாற்றிய மக்ளாயிட், லூவிங்டன், ஹுர்திஸ், மன்றோ ஆகியவர்கள் கும்பெனித் தலைமைக்கு அனுப்பிய கடிதங்கள் ஆகியவை பதினெட்டாவது நூற்றாண்டு தமிழக வரலாற்றை வரைவதற்கு, இன்றியமையாத, தவிர்க்க முடியாத வரலாற்றுத் தடயங்களாகும்.

இவை தவிர, சென்னைக் கோட்டையில் கும்பெனி கவர்னராகப் பணியாற்றிய மக்கர்ட்னி போன்றோர் கடிதங்களும் தமிழக வரலாற்றிற்குத் துணை புரியும் ஆவணங்களாகும். இந்த ஆவணங்களில் கண்ட வரலாற்றுச் செய்திகளை ஏற்க மறுப்பதும், இந்த ஆவணங்களை ஆக்கிரமிப்பார்களது புனைந்துரையாகக் கொண்டு தீண்டத் தகாதவையாக ஒதுக்கி விட்டு வரலாறு எழுத முனைவதும் அரங்கின்றி வட்டாடிய விந்தைச் செயலாகத்தான் அமையும். அத்துடன் இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுடன் மற்றவர்களையும் ஏமாற்ற முயல்வதும் ஆகும். இந்த ஆவணங்கள் இல்லையென்றால் நமது நாட்டில் பதினெட்டாவது நூற்றாண்டில் புயல்முகம் கொண்ட மக்கள் கிளர்ச்சிகளையும் அவைகளைத் தலைமை ஏற்று நடத்திய சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர், மீனங்குடி கனகசபாபதித்தேவர், முத்துக் கருப்பத்தேவர், கொளத்துர்நாகராஜ மணியக்காரர், காடல்குடி கீர்த்தி வீர குஞ்சு நாயக்கர், ராஜசிங்கமங்கலம் குமாரத் தேவர், ஜகந்நாத ஐயன், கமுதி சிங்கன் செட்டி, பாஞ்சை கட்ட பொம்மு நாயக்கர், ஊமைத்துரை, இராமநாதபுரம் முத்து இராமலிங்க சேதுபதி, இன்னும் ஊர் பேர் தெரியாத தியாகிகளான எத்தனையோ ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னோடிகளை இனம் கண்டு இருக்க முடியாது. நாட்டுப்பற்றுடன் தியாகிகளான அந்த வீரத் தலைவர்களது நினைவிற்கு அஞ்சலி செலுத்த இயலாத, நன்றி உணர்வு இல்லாத மக்கள் என்று அல்லவா நம்மை எதிர்கால வரலாறு வசைமொழியும் நிலை ஏற்பட்டு இருக்கும்.

இப்பொழுது இந்த நூலாசிரியரது வரலாற்றுக்கு முரணான வரை வினைப் பார்ப்போம்.

பக்கம் 88

"மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். பெரிய ராணி (வேலுநாச்சியார்) கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்கச் செய்து, மன்னரையும் இளைய ராணியையும் காளையார் கோவில் அனுப்பி வைத்தனர்."

பக்கம் 116

'திண்டுக்கல், விருபாட்சி செல்லும் பொழுது வெள்ளச்சி பிறக்கவே இல்லை'

சிவகங்கை கும்மி அம்மானைச் செய்திகளைப் பயன்படுத்தி இந்த நூலினை எழுதி உள்ள ஆசிரியர், இந்த நூலினுள்ளும் சொல்லாத செய்திகளை இப்படி திரித்துவிட்டு இருக்கிறாரே? அது எப்படி? ஒரு வேளை துர்க்காதாஸ் எஸ்.கே.சாமியின் கண்டுபிடிப்புகளை ஆதாரமாக கொண்டதாகவும் அடிக்குறிப்பு இல்லையே!

'கொல்லங்குடி தன்னில் பெரிய ராணி
குணமுடனே அங்கு இருந்து கொண்டாள்"

(பக்கம் 117)

என்று மட்டும்தான் அம்மானை குறிப்பிடுகிறது. அவர் கர்ப்பிணியாக இருந்த விவரம் அம்மானையில் எங்கும் இல்லை. அதைப் போல வெள்ளச்சி பற்றிய குறிப்பும் அந்த இலக்கியங்களில் காணப்படவில்லை. "ராணியார் விருப்பாட்சி செல்லும் பொழுது (கி.பி.1772)ல் கர்ப்பிணியாக இருந்தார். வெள்ளச்சி அப்பொழுது பிறக்கவில்லை என்ற பேருண்மை எந்த அடிப்படையில் எழுந்தது என்று இந்த ஆசிரியர் குறிப்பிடப்படவில்லை.

இன்னொரு நகைப்புக்குரிய விஷயம். 3.6.1772-ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த கும்பெனியார் நவாப்பினது படைகள், சிவகங்கை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த மன்னர் முத்து வடுகநாதர் அவர்களது படையெடுப்பைச் சமாளிப்பதற்கு காளையார் கோவில் காட்டரண்தான் பொருத்தமானது என முடிவு செய்து 20.6.1772-க்கு முன்னதாக அவர் எதிர்த்தாக்குதல் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். 21.6.1772-ம் தேதியன்று சிவகங்கையை பிடித்தப் பிறகு கும்பெனியார் இரு அணிகளாக கொல்லங்குடி வழியாகவும், சோழபுரம் வழியாகவும் கிழக்கே காளையார் கோவில் நோக்கி புறப்பட்டனர் என்பது தான் வரலாறு. ஆனால், மன்னர் காளையார் கோவில் காட்டில் வேட்டைக்காக சென்றதாகவும் அப்பொழுது திடீரென கும்பெனிப் படைகள் அங்கு மங்கலம் வழியாக வந்தது என்று அம்மானைப் பாடுகிறது எவ்வளவு முரண்பாடு?

மன்னர் முத்து வடுகநாதர் இந்தப் போரில் சிந்திய செங்குருதியால் சிவந்த மண்ணின் மாண்பை மன்னரது தியாகத்தை, மக்களது மனத்தினின்றும் அகற்றுவதற்காகத் திட்டமிட்டு தொடுக்கப்பட்ட புரட்டு அம்மானையின் வரிகள் என்பதைத்தான் உணர முடிகிறது. அதனை இந்த நூலாசிரியரும் வழிமொழிந்துள்ளார்.

பக்கம் 92-93

“கர்ப்பிணியான வேலு நாச்சியாரைக் காப்பாற்றுவதே மருதிருவரின் தலையாய கடமையாயிற்று.
அத்துடன் மன்னர் முத்து வடுகநாதருக்கு ஆண் வாரிசு இல்லாததால். அவரால் வளர்க்கப்பட்டு வந்த வெங்கண் உடையனனையும் கண் போல காக்க வேண்டிய கடமை வேறு. விருபாட்சி பாளையக்காரர் ஆங்கில ஆதிக்க எதிர்ப்பாளர். எனவே மருது பாண்டியர்கள் அரசியை அங்கு அழைத்துச் செல்வது சிறந்து எனக் கருதி அங்கு கொண்டு சேர்ந்தனர்.”

கர்ப்பிணியான வேலு நாச்சியார் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் குறிப்பிட்டது போல இங்கும் இரு செய்திகள் எவ்வித ஆதாரமில்லாது குறிப்பிடப்படுகின்றன. சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும், மருதிருவர் ராணி வேலுநாச்சியாரை மேலுர் வழியாக திண்டுக்கல் விருபாட்சிக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது ஒன்று. ஜூன் 25 தேதி நடைபெற்ற போரில் மன்னர் முத்து வடுகநாதரும் ஏராளமான ஆதரவாளர்களும் போரில் மடிந்தனர். மன்னரது விதவை ராணியும் மகளும் விருபாட்சிக்கு பிரதானி தாண்டவராய பிள்ளையினால் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மன்னரது பணியாட்களான மருதிருவரும் அங்கு போய்ச் சேர்ந்தனர் என்பது மற்றொன்று. கும்பெனியாரது ஆவணங்கள் ஆதாரத்தில் மதுரை வரலாறு வரைந்த பேராசிரியர் கே.ராஜையன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது ராணியார் விருபாட்சி போய்ச் சேர்ந்தது பற்றி ஜூலை 1772-ல் சென்னைக் கோட்டையில் நடைபெற்ற கும்பெனி ஆளுநரது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட இந்தச் செய்திகளைக் கொண்ட ஆவணத்தை ஏற்றுக் கொள்வதா? அல்லது இந்த நிகழ்ச்சி நடைபெற்று ஆறுபத்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு (கி.பி.1840) பாடப் பெற்ற சிவகங்கை அம்மானை, மற்றும் அதற்குப் பிறகு நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் (கி.பி.1882)-ல் பாடப்பெற்ற கும்மியின் வரிகளை உண்மையெனக் கொள்வதா? நூலாசிரியர் அம்மானையும் கும்மியையும்தான் அரிச்சந்திர வாக்காக கொண்டிருப்பது எப்படி பொருந்தும்?

மேலும் கும்மியும் அம்மானையும் ஓரிடத்தில் கூட விருபாட்சி செல்லும் பொழுது கர்ப்பிணியாக இருந்தார் என்றோ அல்லது விருபாட்சியில் இருந்த பொழுது பெண் மகவினை (வெள்ளச்சியை) பிரசவித்தார் என்றோ குறிப்பிடாதிருக்கும்பொழுது, நூலாசிரியரது புதுமுகக் காண்டத்தில் இந்த புதுமைக் கற்பனை இடம் பெறச் செய்யப்பட்டியிருப்பதின் நோக்கம் என்னவோ? இது சம்பந்தமாக சிவகங்கைச் சீமை நூலாசிரியருக்கு குழப்பம் என்று குறிப்பிடும். இந்த நூலாசிரியரது எழுத்துக்களிலும் தெளிவு காணப்படவில்லை. இவருக்குத்தான் குழப்பம் குவிந்துள்ளது.

பக்கம் 137-138

தளபதி புல்லர்ட்டின் அறிக்கையில், "மருதிருவருடன் இளைய ராஜாவும் காளையார் கோவில் காட்டிற்கு ஓடினர் என்ற செய்திக்கு விளக்கம் செய்துள்ள நூலாசிரியர், புல்லர்ட்டன் குறிப்பிடுகின்ற இளையராஜா, நாலுகோட்டை குடும்பத்தைச் சேர்ந்த வெங்கண் பெரிய உடையாத் தேவர் என்றும், விருபாட்சிக்கு செல்லும் பொழுது, இந்தச் சிறுவனுக்கு பெண் வேடமிட்டு அழைத்துச் சென்று கண் போல் காத்து வந்தனர் என்றும் வரைந்துள்ளார்.

இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. அப்படியானால் இந்தச் செய்தியும் அரிச்சந்திரனது வாக்காகிய சிவகங்கை அம்மானை. கும்மியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா? இல்லையே வேறு பேராசிரியர் கதிர்வேலு? பேராசிரியர் கே.ராஜையன் குறிப்பிட்டு இருக்கின்றனரா? இல்லையே. இந்த நூலாசிரியரது அடிக்குறிப்பு ஒன்றும் இல்லையே. அப்படியானால் இதுவும் நூலாசிரியரது கண்டுபிடிப்பா? அல்லது கற்பனையா? நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்றாலும் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களைப் பார்ப்போம். நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது கொடி வழி (இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது) எப்படி வேங்கன் பெரிய உடையாத் தேவர் நாலுகோட்டை வழியினர் அல்ல. அடுத்த ஆவணம் அறந்தாங்கிக் காட்டில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த படைமாத்துார் கெளரி வல்லப உடையாத் தேவர் புதுக்கோட்டை ரெசிடெண்ட் பிளாக்பர்னுக்கு, ரெளத்திரி ஆண்டு, வைகாசி மாதம் 27-ம் தேதி ஒப்பமிட்ட கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை இப்பொழுது பார்ப்போம்.

"..... சிவகங்கை மன்னருக்கு நெருங்கிய உறவினர் என்ற முறையில் மன்னர் முத்துவடுகநாதர், தமது பெண்ணை எனக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்து, என்னை அவரது வாரிசாகவும் நியமனம் செய்தார். காளையார் கோவில் போரில் முத்து வடுகநாதர் மடிந்தவுடன் பெரிய ராணியுடன் நானும் ஓடிப்போய் ஹைதர் அலியின் சீமையில் தஞ்சம் புகுந்தோம். பின்னர் என்னை அவர்கள் (பிரதானிகள்) வரவழைத்து, காளையார் கோவிலில், முக்கியமான குடிமக்கள் மற்றும் பிரதான நாட்டு தலைவர்கள் (சேர்வைக்காரர்கள்) முன்னிலையில், ஏனைய பார்வையாளர்கள் மத்தியில் என்னை சிம்மாசனத்தில் அமரச் செய்து எனது அதிகாரத்தை அங்கீகரிக்கும் முறையாக கூப்பிய கரங்களுடன் என் முன்னர் தெண்டனிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நான்கு மாதங்கள் கழித்த பின்னர் எனக்கும் மருதிருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. திடீரென்று அவர்கள் என்னையும் எனது நண்பர்களையும் கைது செய்து சிறையிலிட்டனர். எனக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு இருந்த பெண்ணை (சிவகங்கை இளவரசியை) எந்த வகையிலும் எங்களுக்குச் சொந்தமில்லாத, தகுதியில்லாத சக்கந்தி மறவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சிறிது காலத்தில் அந்தப் பெண் இறந்தவுடன், அவர்கள் முறையே தங்களது பெண்களில் ஒருவரை அவருக்கு மணம் புரிந்தது அவரது அதிகாரத்தை ஓரளவு மதித்தவர்களாக, அவர்களே முன்னைப் போல்ஆட்சி செய்தனர். பிறகு அவர்கள் என்னைக் கொன்று விடுவதற்கு முடிவு செய்தார்கள். அதிர்ஷ்டவசமாக அங்கியிருந்து தப்பி ஓடிவந்து கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக அறந்தாங்கியில் வாழ்ந்து வருகிறேன்."

இந்த மடலின் வாசகத்திலிருந்து சின்ன ராஜா, வேங்கண் பெரிய உடையாத்தேவர் அல்ல. அவர் படைமாத்துர் கெளரி வல்லப ஒய்யாத் தேவர் என்பதும் வேங்கண் விருபாட்சி சென்றது பற்றி ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவரது சொந்த கற்பனை என்பதும் புலனாகிறது.

பக்கம் 102

"....முல்லையூரில் பிறந்து. ராணி அகிலாண்டேசுவரி நாச்சியாருடன் இராமநாதபுரம் விட்டு சிவகங்கைக்கு அமைச்சராக வந்து, வாழ்நாளெல்லாம் சிவகங்கையின் வளர்ச்சிக்குத் தொல்லைகள் ஏற்ற அவர். விருபாட்சியில் மறைந்தார்.'

அகிலாண்டேசுவரி நாச்சியாரைத் திருமணம் செய்த சசிவர்ண பெரிய உடையாத் தேவர், நாலுகோட்டை திரும்பும் பொழுது, அவருக்கு உதவியாக இருப்பதற்கு சேதுபதி மன்னர்தாண்டவராய பிள்ளையையும் அனுப்பி வைத்தார் என்ற சிவகங்கை அம்மானையின் செய்தியை அரிச்சந்திர வாக்காகக் கருதி நூலாசிரியர் மேலே கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பிரதானி தாண்டவராயபிள்ளை இராமநாதபுரம் சேதுபதி மன்னரது பணியில் இருந்து அகிலாண்டேசுவரி நாச்சியாருடன் சிவகங்கை வந்தது உண்மைதானா என்பதைப் பார்ப்போம்.

பிரதானி தாண்டவராயபிள்ளை மீது குழந்தைக் கவிராயர் என்பவர் மான்விடு தூது என்ற சிற்றிலக்கியமொன்றைப் பாடியுள்ளார். (டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பு. 1954) இதில் பாட்டுடைத் தலைவனைப் போற்றப்படும் தசாங்கத்தில்

".... விரிந்த மணிக்
கூடமும் மேல்வீடும் கோபுரமும் மாமறுகும்
மாடமும் சேர் தென்முல்லை நகரான்.” (கன்னி.88)

என தாண்டவராய பிள்ளையின் ஊரைக் கவிராயர் குறிப்பிடுகிறார். மேலும் இந்த நூலின் பதிப்புரையில் டாக்டர் உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள் "இன்றைக்கு 230 வருடர்களுக்கு முன்னர் (கி.பி.1725-ல்) கார் காத்த வேளாளர் குலத்தில் காத்தவராய பிள்ளை என்பவருக்குப் புதல்வராகப் பிறந்தார். (தாண்டவராயபிள்ளை) இவருடைய ஊர் முல்லையூர் என்பது. இவருடைய பரம்பரையினர் கணக்கெழுதும் உத்தியோகமுடையவர்கள்' என்றும் குறிப்பிடுகிறார்.

வருவாய்த்துறை ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில் முல்லையூர் என்பது சிவகங்கை வட்டம் அரளிக் கோட்டைப் பகுதியில் உள்ள முல்லைக் குளம் என்ற இனாம் கிராமம் என்பது தெரிய வருகிறது. கள ஆய்வின் பொழுது அரளிக் கோட்டையில் இன்னும் பிரதானி தாண்டவராய பிள்ளையின் வழியினர் இருந்து வருவதும் தெரிய வந்தது. அத்துடன், அவர்களில் ஒருவரான திரு. இராமச்சந்திர பிள்ளை என்பவர் (தற்பொழுது சென்னையில் இருப்பவர்) வசம் ஒரு செப்பேடும் இருப்பது தெரிய வந்தது. இந்த செப்பேட்டின்படி (இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.) இதில் கண்டுள்ள வாசகத்தின்படி பிரதானி தாண்டவராய பிள்ளையின் தகப்பனார் காத்தவராயபிள்ளை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது பணியில் இருந்தவர் என்பதும், அவரது பணியின் தொடர்பாக அரசு நிலையிட்ட சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் தாண்டவராய பிள்ளையை கி.பி.1747-ல் தமது அரசுப் பணியில் நியமனம் செய்தார் என்பதும் அந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது.

இத்தகைய உண்மைச் செய்தியும் ஆவணமும் இலக்கியச் சான்றும் முல்லையூர் தாண்டவராய பிள்ளையைப் பற்றிய செய்திகளைத் தரும்பொழுது அம்மானை ஆசிரியரது பாடல் வரிகள் உண்மைக்கு புறம்பான கற்பனை என்பதும் அதனை மருது பாண்டிய மன்னர் நூலாசிரியர் வேலிக்கு ஒணான் சாட்சி என வழிமொழிந்து வரைந்து இருப்பது சரித்திரப் புரட்டு என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அத்துடன் இந்த பொய்யான செய்தி பாண்டியன் தன் மகனைச் சோழனுக்கு திருமணம் செய்து தனது அவைப் புலவர் புகழேந்தியையும் சோழநாட்டிற்கு அனுப்பி வைத்தார் என்ற பாட்டி கதையையும் நினைவூட்டுவதாக உள்ளது.

பக்கம் 138

'...தனக்கு கிட்டவேண்டிய ஆட்சியைக் கூட நாட்டு நலன் கருதி மருது பாண்டியர்களுக்கு விட்டுக் கொடுத்தார். (வேங்கண் பெரிய உடையார்)

நூலாசிரியர் இவ்விதம் குறிப்பிட்டிருப்பது அவர் நூலில் முன்னே குறிப்பிட்டிருப்பதற்கு முரணாக இந்த வாசகம் அமைந்துள்ளது. 1780 ஜூலை மாதத்தில் சிவகங்கையை மீட்ட சில நாட்களில் ராணி வேலுநாச்சியார் அவர்கள் தமது ஆட்சியை, சிவகங்கைச் சீமையை மருதிருவரிடம் ஒப்படைத்து விட்டார் என்று வரைந்துள்ளார். (பார்க்க: மருது பாண்டியர் மன்னர், பக்கம் 120/293) அடுத்து, பக்கம் 286-ல் "புல்லர்டன் தன் படையெடுப்பின் பொழுது அவர்கள் ராஜாக்களாக விளங்கியதைக் கண்டு எழுதியதை குறிப்பிட்டு இருக்கிறார். (ஒரு நாட்டிற்கு ராஜா என்று ஒருவர்தானே ஒரு சமயத்தில் இருக்க முடியும் என்று வாசகர்கள் கேட்டு விடாதீர்கள்.)

மற்றும், பெரிய மருது சேர்வைக்காரர் ராணி வேலு நாச்சியாரை மறுமணம் செய்து கொண்டதன் மூலம் (பார்க்க: மருது பாண்டியர் மன்னர் பக்கம்: 116-120) சிவகங்கைத் தன்னரசின் மகுடம் சூடிய மன்னர் ஆகி விட்ட்னர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாம் நிகழ்ந்தது கி.பி.1780-ல். இவ்விதம் இறையாண்மை பெற்ற 'அந்த மன்னர்களுக்கு" வேங்கன் பெரிய உடையாத் தேவர் கி.பி.1783-ல் ராணி வேலுநாச்சியாரது மகள் வெள்ளச்சியை மணந்தவருக்கு, ஆட்சியுரிமை எப்படி ஏற்பட்டது? அவர் எப்படி அதனை ஏன்விட்டுக் கொடுத்தார்? முரண்பாடாக அல்லவா ஆசிரியர் கூற்று அமைந்துள்ளது. ஏன் இந்த குழப்பம்?

முழுப் பூசுணிக்காயை ஒரு தட்டுச்சோற்றில் அமுக்கி மறைப்பது என்றால் இயலாத காரியம்தான். அப்பொழுது குழப்பமும் மயக்கமும் ஏற்படுவது இயல்பு. கி.பி.1780 ஜூலை மாதம் முதல் கி.பி.1789 நவம்பர் வரை ராணி வேலு நாச்சியார் சிவகங்கையின் ராணியாகவும் கி.பி.1789 டிசம்பர் முதல் கி.பி.1801 செப்டம்பர் வரை சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை மன்னராகவும் இருந்தனர் என்பதற்கான ஆவணங்கள் சிவகங்கை தேவஸ்தானத்திலும், சென்னை தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்திலும் ஏராளமாக இருக்கும் பொழுது, இவைகளையெல்லாம் மறைத்து ஒரு புதிய சரித்திரப் புரட்டை நிலை நிறுத்துவது எளிதான செயல் அல்லவே!

இவ்விதம் சக்கந்தி உடையாத் தேவரவர்கள் சிவகங்கையின் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை மணந்து கி.பி.1790-1801 வரை சிவகங்கை மன்னராக இருந்த பாவத்திற்காகத்தானே அவரை, கும்பெனியார் விட்டு வைக்கவில்லை. மலேஷியத் தீபகற்பத்தில் உள்ள பினாங் தீவிற்கு நாடு கடத்தி அங்கேயே 19.9.1802-ல் மரணமடையும் துர்பாக்கிய நிலையை அவருக்கு ஏற்படுத்தினர். மேலும் வேங்கண் பெரிய உடையாத் தேவர் சிவகங்கை மன்னராக இருந்த காரணத்தினால் தானே, வெள்ளச்சி நாச்சியார் கி.பி. 1793-ல் இறந்த பிறகு பிரதானி பெரிய மருது சேர்வைக்காரர் தமது மகளை வேங்கன் பெரிய உடையாத் தேவருக்கு இரண்டாவது தாரமாக மணம் செய்து வைத்தார். இந்தச் செய்தி இந்த நூலில் குறிப்பிடப் படாமல் விடுபட்டு இருப்பது இத்தகையதொரு உள்நோக்கம் கொண்டது போலும்.

பக்கம் 151

'... வேங்கன் பெரிய உடையாத் தேவரை அரசராக்குவதென்றும், மூன்று லட்சம் ரூபாய் பேஷ்குஷ் தொகையென்றும். மருதிருவர் அமைச்சர்களாக இருப்பர் என்றும் அந்த சமரச உடன்பாடு கூறுகிறது. செயல்படாமல் நின்று போன உடன்பாடு இது. மருது பாண்டியர்கள் தொடர்ந்து மன்னர்களாக இருந்தனர்.'

நூலாசிரியரது ஆசைப்படி "மருது பாண்டியர்கள் தொடர்ந்து மன்னர்களாக இருந்தனர். (அதாவது ஜூலை 1780 முதல் 1801 வரை மருது சகோதரர்கள் இருவரும் சிவகங்கைச் சீமை மன்னர்கள்) என்பதை இங்கு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டு அந்த வாதத்தின் மறுபக்கத்தைச் சற்று உற்று நோக்குவோம்.

பொதுவாக மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், தங்களது சாதனைகள் - அறப்பணிகள், அறக்கொடைகள், திருப்பணிகளை, கல்லிலும் செம்பிலும் வெட்டி வைப்பது மரபு. சிவகங்கை மன்னர்களும் அவ்விதமே கல்வெட்டுக்களில் செப்பேடுகளில் பதிவு செய்து உள்ளனர். இத்தகைய சிவகங்கை ஆவணங்கள் கி.பி.1733 முதல் அதாவது மன்னர் அரசு நிலையிட்ட சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் காலம் முதல், மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவர், ஏன் கி.பி.1780 முதல் 1789 வரை ராணியாக இருந்த அரசி வேலு நாச்சியார், அவரை அடுத்து கி.பி.1790 முதல் கி.பி.1801 வரை சிவகங்கை மன்னராக இருந்த முத்து விசைய பெரிய உடையாத் தேவர் (சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர்) ஆகியோர் தங்களது பெயரில் 'குளந்தை நகராதிபன்' 'தொண்டியந்துறைக் காவலன்' 'அரசு நிலையிட்ட" என்ற விருதுப் பெயர்களுடன் பல அறக்கொடைகளை வழங்கியுள்ளனர். அவற்றில் சிலவற்றை இந்த நூலின் வேறு பக்கங்களில் குறிப்பிட்டுள்ளோம். மருது பாண்டியர்கள் மன்னர்களாக இருந்ததாகக் கொள்ளப்படும் கி.பி.1780-1801 வரையான கால கட்டத்தில் கூட ராணி வேலு நாச்சியாரும், மன்னர் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரும் வழங்கிய அறக்கொடைகள் உள்ளன. (அவைகளில் சில செப்பேடுகளின் நகல்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறக் கொடைகள் ஆட்சியில் இல்லாத மன்னர்களால் (நூலாசிரியரது கருத்துப்படி) எப்படி வழங்கி இருக்க முடியும்? இந்த அடிப்படைச் சான்றுகளையும் ஒதுக்கி வைத்து விடுவோம். கி.பி.1780 ஜூலை முதல் தொடர்ந்து சிவகங்கை மன்னர்களாக இருந்த மருதிருவர் அறக்கொடைகளுக்கான ஆவணங்களை வழங்கியிருக்கின்றார்களா என்பதை பரிசீலிப்போம். இதோ மூன்று செப்புப் பட்டயங்கள் உள்ளனவே! மன்னர்கள் மருது பாண்டியர் அளித்தவை. 'தேசிய ஆவணங்களான - தொல்லியல் சான்றுகள் என்று மருது பாண்டிய மன்னர் நூலின் பக்கம் 678-688-லில் நூலாசிரியர் கொடுத்து இருக்கின்றார் அல்லவா? சரி அவைகளையும் பரிசீலிப்போம்.

ஒலைச்சாசனங்கள்

1. தஞ்சாக்கூர் ஒலைச்சாசனம் கி.பி.1784-ல் வரையப்பட்டது. 'அரசு நிலையிட்ட விசய ரெகுநாத பெரிய உடையாத் தேவரவர்களுக்குப் புண்ணியமாக 'ராயமானிய பெரிய மருது சேர்வைக்காரர் அவர்களும்' (வரிகள் 3-4) என்று மட்டும்தான் வரையப்பட்டுள்ளது.

2. குன்றக்குடி ஒலைச்சாசனம் மூன்றும் கி.பி.1790-ம் வரையப்பெற்றன. அவைகளில் 'சிவகங்கைச் சீமை ஆதீன கர்த்தா பெரிய மருது சேர்வைக்காரர்' என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்பேடுகள்

1. சூடியூர் சத்திர செப்பேடு கி.பி.1795-ல் வழங்கப்பட்டது (ம.பா.ம. பக்கம் 680-681-ல்) இந்தப்பட்டயத்தின் வரிகள்.19-21ல் 'பூர்மது அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் பிரிதிவி ராச்சியம் பரிபாலனம் பண்ணி அருளா நின்ற சாலிவாகன சாகத்தம் 1716....'
"சேது மார்க்கத்தில் பிரதானி மருது சேர்வைக்காரர் சூடியூர் சத்திரம் அன்னதானத்திற்கு....' வரையப்பட்டுள்ளது.

சிறு வயல் செப்பேடு

இந்த செப்பேட்டை இந்த நூலாசிரியர் 1991-ல் நடைபெற்ற தொல்லியல் துறை அஞ்சல் வழிக் கருத்தரங்கிற்கு தமது நீண்ட விளக்கத்துடன் அனுப்பி வைத்தார். அந்தக் கருத்தரங்க தலைமைப் பொறுப்பில் அப்பொழுது இருந்த நான் வரைந்த அதே தலைமை உரையை (ஏற்கனவே அச்சில் வந்ததை) இப்பொழுது இங்கு கொடுத்து இருக்கிறேன். இந்தச் செப்பேடு போலியானது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

கல்போல் எழுத்து என்ற பழைய வழக்கை ஒட்டி கல்லிலும் செப்பிலும் வெட்டி வித்தனர். 'அரசு ஆணைகள், அறக்கொடைகள், மறச்செயல்கள் பற்றிய செய்திகளை 'சந்திர ஆதித்த காவலர் வரை சாட்சி பகர்வதற்காக செப்பேடுகளில் அமைத்தனர். பொதுவாக, கல்வெட்டுக்களை போன்று செப்பேடுகளும், மங்கலச் சொல்லுடன் துவங்கி, ஆண்டு, திங்கள், நாள், வழங்கப்படுவதின் நோக்கம், பட்டயத்தை வரைந்தவர், காப்புநிலை என்ற பகுதிகளுடன் பொறிக்கப்படுவது வழக்கம்.[1] ஆனால் இந்த செப்பேட்டில் அந்த பகுப்புகள் காணப்படவில்லை. அவைகளுக்கு மாறாக 'சாலிவாகன சகாப்தம் 125க்கு மேல் நிலையான கானப்பேர் என்கிற" தொடருடன் துவங்கி அந்த ஊரின் பழமையை அறுதியிட்டு சொல்கிறது. அந்த ஊர் பற்றிய இத்தகு தொன்மைக்கு உறுதியான காலவரம்பு எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது என்பது புரியவில்லை. புறப்பாடல் ஒன்றில் இந்த ஊர் குறிப்பிடப்படுவதால் சங்க காலத்துக்கு முன்னர்கூட இந்த ஊர்நிலைத்து இருந்திருக்கலாம். செப்பேட்டின் 20வது வரியில் '1800 வருஷம்' என்ற சொற்றொடர் இருப்பதினால் இந்த செப்பேடு கி.பி.1800க்கு பின்னர் வரையப்பட்டிருக்க வேண்டும் என்ற உண்மை உறுதிபடுத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் வெள்ளை மருது சேர்வைக்காரர் உத்தரவின்படி (வரி 26) 'தளவாய் நைனப்பன்[2] சேர்வைக்காரரால் செப்பேடு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த செப்பேட்டில் கண்ட சிறப்பினைப் பெறுபவர் வெள்ளை மருது சேர்வைக்காரரின் மைத்துனர் மகனாக இருக்கும்பொழுது இதனை ஏன் வெள்ளை மருது சேர்வைக்காரரே வழங்கவில்லை என்ற வினாவும் எழுகிறது. மேலும் மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமையில் பிரதானிகளாகத்தான் பணிபுரிந்து வந்தனரே ஒழிய ஆட்சியாளர்களாக (அரசராக) அல்ல, பிரதானி பதவி என்பது அன்றைய நாளில் அமைச்சர், தளவாய் என்ற இருபெரும் பொறுப்புக்களை இருபெரும் பொறுப்புக்களை கொண்டதாகும். மருதுபாண்டியர்கள் கி.பி.1789 வரை சிவகங்கை அரசி வேலுநாச்சியாரது பணியிலும், பின்னர் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையார் தேவரது பணியிலும் தளவாயாக இருக்கும்பொழுது அவருக்கு மற்றுமொரு தளவாய் நைனப்பன்சேர்வை எப்படி அமர்த்தப்பட்டார் என்பதும் புரியவில்லை. அரசு ஆணைப்பதிவுகளில் தளவாய் நைனப்பன் சேர்வை பெயர் காணப்படவில்லை. அதாவது காளையார் கோவில் போரின்பொழுதும் அல்லது போருக்குப் பின்னர் பிடிக்கப்பட்டவர்கள், தூக்கிலிடப்பட்டவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் என்ற இனங்கள் எதிலும் அவர் பெயர் காணப்படவில்லை.

இந்த செப்பேடு இன்னும் சில ஐயப்பாடுகளையும் எழுப்புகின்றது. வரி 11/12-ல் 'சிறுவயல் ஜமீன்தார் வெள்ளைமருது சேர்வைக்காரர்' என குறிப்பிடுகிறது. சிறுவயலில் சின்ன மருதுவும், அவரது குடும்பத்தினரும் குடியிருந்தவரே ஒழிய ஜமீன்தாராக அன்று அவர்கள் வாழவில்லை. ஜமீன்தார் என்ற சொல் சிவகங்கை சீமை வரலாற்றுக்கு புதியது. சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையார் தேவருக்கு எதிராக படைமாத்துர் ஒய்யாத்தேவரை பரங்கிகள் சோழபுரத்தில் வைத்து சிவகங்கை ஜமீன்தார் என முதல்முறையாக சிவகங்கை சீமை முழுவதற்குமே நியமனம் செய்து அறிவிப்பு செய்தனர்.[3]ஆதலால் அந்த நிகழ்ச்சி முன்னரும் பின்னரும் கும்பெனியாரால் அங்கீகரிக்கப்பட்டு சிறுவயல் ஜமீன் இருந்தது கிடையாது.

வரி 18-ல் 'மதுரை ஜில்லா என்ற சொல் காணப்படுகிறது. சீமை என்ற சொல்தான் அப்போது வழக்கில் இருந்தது. அத்துடன் விருபாட்சி, திண்டுக்கல் கலெக்டரது அதிகாரத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் சீமையில்தான் இருந்தது. மதுரை ஜில்லாவில் அல்ல. 'தோப்பாபணம் 1500 கட்டி குடுத்து அபிமானிச்சு' என வரி 27-ல் குறிக்கப்பட்டுள்ளது. தோப்பாபனம் என்பது நாணய வகை அல்ல. வடுகபாளையக்காரர்கள் அவர்கள் செலுத்தி வந்த கப்பத் தொகையை பெரும்பாலும் தோப்பாபணாம் என்றே வழங்கி வந்தனர். ஆதலால் வெள்ளை மருது சேர்வைக்காரர்.தமது மைத்துனர் மகன் வீரபாண்டியனுக்கு அன்பளிப்பாக வழங்கி சிறப்பு செய்திருந்தால், அந்தப் பணம் அப்பொழுது சிவகங்கை சீமையில் செலாவணியில் இருந்த ஸ்டார் பக்கோடா அல்லது குளிச்சக்கரம் அல்லது போட்டோ நோவோ பக்கோடா - இவைகளில் ஏதாவது ஒரு வகை நாணயத்தில் தான் கொடுத்திருக்க வேண்டும்.[4] அதற்கு மாறாக தோப்பா பணத்தை கொடுத்து அபிமானிச்சதாக குறிப்பிட்டு இருப்பது பொருத்தமற்றதாக உள்ளது.

விருபாச்சி பாளையக்காரராக கி.பி.1762 முதல் 181 வரை இருந்தவர் திருமலை குப்பல் சின்னப்ப நாயக்கர். (19வது பட்டத்துக்காரர்) என்பதை பாளையபட்டு வமிசாவழி குறிப்பிடுகிறது[5] கும்பினியாரின் ஆவணங்களும் இந்த பாளையக்காரரை கோபால நாயக்கர் என குறித்துள்ளன. ஆனால் இந்த செப்பேடு, அந்த பாளையக்காரரை 'கஜபூதி’ என (வரி 19) குறிப்பிட்டிருப்பது வரலாற்றுக்கு முரணாக உள்ளது.

மேலும், வரிகள் 20-24ல் 1800-ம் வருவும் கம்பளத்தார் நாயக்கன் வசம் பொன்னையம்மா, வெள்ளையம்மா நாமாச்சியம்மாள், வேலைக்கா ஆகியவர்கள் 'கனம் பொருந்திய கும்பினியான் துரை கைது செய்து கடாட்சம் வரும்படி சொன்னதின் பேரில் - மேற்படியாளர்களை மீட்டு வந்ததற்காக" என்ற வாசகம் காணப்படுகிறது. இதில் அடங்கிய செய்தி அந்த நான்கு பெண்களையும் கும்பெனியார் விருப்பப்படி விருபாட்சியில் இருந்து கைப்பற்றி வரப்பெற்றது என்பதுதான். ஆனால் திருமனோகரன் 'மீட்டு' என்ற வார்த்தையினைக் கொண்டு கும்பினியாரினால் விருபாட்சி அரண்மனையில் இருந்த அந்த பெண்மக்களை, வீரபாண்டிய சேர்வைக்காரர் மீட்டு வந்து உரியவர்களிடம் சேர்ப்பித்தார் என வரைந்துள்ளது பொருத்தமானதாக இல்லை. இந்த நான்கு பெண்களது பெயர்களும் விருபாட்சி கைபீதியில் குறிப்பிடப்பட்டு இருப்பதுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் பரங்கியர் பாதுகாப்பில் இருந்து வந்தனர் என்றும் நாமாச்சியம்மாள் தவிர ஏனைய பெண்கள் கும்பினியார் தயவினாலே கைவிட்டு அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் நாமாச்சியம்மாளும் இன்னும் ஐவரும் கி.பி. 1815 செப்டம்பர் வரை கைதுலே இருந்து' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் அவர்களை மீட்டு வந்ததற்கான ஆதாரமும் மருதுபாண்டியர் பற்றிய ஆவணங்களில் இல்லை. மற்றும் செப்பேடு வரி 22-ல் 'கனம் பொருந்திய கும்பினியான் துரை' என கண்டிருப்பது ஓலை முறியில் இருந்து பட்டயத்தை பெயர்த்து எழுதியவரது தவறு போல திரு. மனோகரன் வரைந்துள்ளார். அவரது கூற்றுப்படியே அந்தப் பெண்கள் கொண்டுவரப்பெற்றதை ஏற்றுக்கொண்டாலும், 'கனம் பொருந்திய கும்பினியான் துரை' என்ற தொடருக்கு என்ன பொருள் கொள்வது? ஆங்கிலேயரை எதிர்த்த மருதுபாண்டியரது பட்டயத்தில் ஆங்கிலேயரை இவ்விதம் மிகுந்த மரியாதையுடன் குறித்து இருப்பது புதுமையானது அல்ல.

ஆதலால் மருதுபாண்டியர்களை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தல் பட்டயத்தை மட்டும் அல்லாமல் அதனுடைய பின்னணியையும் புரிந்து கொள்வதற்கு உதவும். அதற்கு மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயரை எப்பொழுது, எந்தச் சூழ்நிலையில் எதிர்த்தனர் என்பதை புரிந்து கொண்டால் பயனுடையதாக இருக்கும் என நினைக்கின்றேன். மருதுபாண்டியர்கள் கி.பி.1780 முதல் 1801 வரை சிவகங்கை சீமையின் பிரதானிகளாக இருந்து வந்தனர். அப்பொழுது அவர்களும் தென்னாட்டில் இருந்த ஏனைய பாளையக்காரர்களைப் போன்று குறிப்பாக மணியாச்சி, மேலமாந்தை சொக்கன்பட்டி, எட்டயபுரம். புதுக்கோட்டை போன்ற பாளையக்காரர்களை போன்று - கும்பினியாரது விசுவாசமிக்க பாளையக்காரர்களாகவே இருந்து வந்தனர் என்பதை அவர்கள் 8.7.1794, 4.2.1801, 13.6.1801, 31.7.1801ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களிலிருந்து தெரிய வருகிறது. 16.6.1801-ம் தேதி அன்றுதான் பரங்கியருக்கு எதிராக வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகுதான் அவர்கள் கும்பினியாரது பகிரங்க எதிரிகளாக இருந்தனர் என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. ஆதலால் இந்தச் செப்பேடும் ஜூன் 1801க்கு முன்னதாக வரையப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு.

மற்றும் விருபாட்சி பாளையத்தைப் பற்றிய ஒருசில விவரங்களையும் இங்கு தெரிவிக்க விழைகிறேன். 25.6.1772 அன்று சிவகங்கை மன்னர் காளையார் கோவில் போரில் இறந்துபட்டவுடன் அவரது பிரதானி தாண்டவராயபிள்ளை ராணி வேலுநாச்சியாரையும், அவரது பெண் குழந்தையையும் சிவகங்கை சீமைக்கு வடமேற்கே உள்ள விருபாட்சிக்கு அழைத்துச் சென்று [6] அரசியல் புகலிடம் பெற்றார். அப்பொழுது விருபாட்சி மைசூர் சீமையின் ஏனைய பாளையங்களை போன்று, அமைதியாக இருந்தது. கி.பி.1792 மைசூர் மன்னர் திப்புசுல்தானது மங்களுர் உடன்படிக்கையின்படி விருபாட்சியைக் கொண்ட திண்டுக்கல் சீமையை ஆங்கிலேயர் தங்களது சொத்தாக மாற்றினார். அதனை அடுத்து அங்குள்ள பாளையக்காரர்தலைமையில் கி.பி.1794-க்கு பிறந்தான். அங்கு வெள்ளையர் எதிர்ப்பு கிளர்ச்சிகள் துவங்கின. முன்னால் மைசூர் தளபதியும் கிளர்ச்சித் தலைவருமான துான்தியாநாக் என்பவர் விருபாட்சிக்கு அனைத்து உதவிகளையும் அளித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போருக்கு ஆயத்தப்படுத்தினார். தென்னாட்டு கிளர்ச்சி தலைவர்கள் திண்டுக்கல்லில் கூடியபொழுது மராட்டிய மாநில கோல்காபூரில் இருந்து தமிழ்நாட்டு நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) வரைக்கும் கிளர்ச்சிகளை தொடர்வது என்றும் அதன் துவக்கமாக கோவையில் 3.6.1800-ல் கும்பினியார் பாசறையை தாக்கி அழிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது[7] கோவை நகருக்கு 10 மைல் தொலைவில் 500க்கும் அதிகமான குதிரை வீரர்களதாக்குதல் தொடுப்பதற்கு கூடியிருந்த தகவல் கும்பெனி தளபதி மக்காலிஷ்டருக்கு எட்டியது. அவன் தம்மிடமிருந்த ஐரோப்பிய, ராஜபுத்திர படை அணிகளைக் கொண்டு கிளர்ச்சிக்காரர்களை வளைத்து பிடித்து கிளர்ச்சியை நசுக்கினான். இந்த கிளர்ச்சியில் பங்குகொண்டவர்கள் பெரும்பாலும் முன்னாள் மைசூர் ராணுவ குதிரை வீரர்கள் ஆகும்.[8] தூக்கிலே தொங்கி தியாகிகள் ஆகிய 42 பேரில் 13 பேர் மைசூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.[9] இந்தக் கிளர்ச்சியில் விருபாட்சி நாயக்கர் கலந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவர் திண்டுக்கல் சீமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

மற்றும் மேலே கண்ட முரண்பாடுகளை தவிர செப்பேட்டின் சொற்றொடர் அமைப்பும் சரியாக இல்லை குறிப்பாக வரி 12-ல் 'வெள்ளை மருது சேர்வைக்காரர் இந்த செப்புப்பட்டயத்தை' என்று தொடங்கிய தொடர் "........ வீரபாண்டிய சேர்வைக்காரர் சேவைக்கும்" (வரி 15 முடிவு) "...... காவல் காத்து வருவதற்கும் (வரிகள் 17, 18) ....மீட்டு வந்ததற்காக (வரிகள் 24, 25) என எச்சமாக நின்றுவிட்டு, பின்னர், 'தளவாய் நைனப்பசேர்வைக்காரரால் ......கட்டி, குடுத்து, அபிமானிச்சு தெரியப்படுத்துகிறது (வரிகள் 26, 28) என முடிகிறது. மாறாக வெள்ளை மருது சேர்வைக்காரர் உத்தரவின்படி தளவாய் நைனப்பன் சேர்வைக்காரரால் (வரி 26) என்ற தொடர், வரி 12-ஐ தொடர்ந்து வந்து ஏனைய தொடர்களுடன் முடிந்திருந்தால் பட்டயத்தின் செய்தி இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.

இதுவரை கிடைத்துள்ள மடப்புரம் காவேரி அய்யனார் கோவில் பட்டயம்[10] தொண்டி கைக்கோளன் ஊரணி கல்வேட்டு[11] ஆகியவைகளின் சொற்றொடர் அமைப்புகளிலிருந்து இந்தப்பட்டயம் வேறுபடுவதால் போலிப்பட்டயமாக கருதப்படுகிறது. கல்வெட்டுக்கள்

1. தொண்டி கல்வெட்டு: கி.பி.1795-ல் பதிவு செய்யப்பட்டது. இதன் வரி- 5; 6-ல் “ராசமானியரான மருது பாண்டியன் உபயம்” என்ற தொடர் மட்டும் தான் காணப்படுகிறது.

2. சிங்கம்புனரி கல்வெட்டு: கி.பி.1801-ல் பதிவு செய்யப்பட்ட இந்தக் கல்வெட்டின் வரிகள் 5, 9-ல்

“ராச ஸ்ரீ அரசு நிலையிட்ட இசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர்கள் காரியத்துக்கு கர்த்தரான ராச ஸ்ரீ மருது பாண்டியர்கள்” என்று மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மேலே கண்ட நூலாசிரியர் தமக்கு ஆதரவாகக் குறிப்பிட்டுள்ள இந்த "தேசிய ஆவணங்கள்” மருதிருவரை ஓரிடத்தில் கூட மன்னர் என்று குறிப்பிடாதிருக்கும் பொழுது, ஏன் மருதிருவர்களே தங்களைச் சிவகங்கை மன்னர்களாக பிரசித்தம் செய்து கொள்ளாத பொழுது, இந்த நூலாசிரியர் மட்டும் அவர்களை மன்னர்களாகப் பெருமைப்படுத்தி எழுதியுள்ளார். அது அவருக்கு இந்தியக் குடியுரிமை சாசனம் அளித்துள்ள ஆதார உரிமைகளின்படி ஏற்பட்டது. என்றாலும், அவர் தமது இந்தக் கருத்தை இந்த நூலின் வழி மக்களிடத்து திணிக்க முயற்சித்து இருப்பது வரலாற்றிற்கு முரணான சரித்திரப் புரட்டாகத் தான் வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் கருதுவர் என்பது உறுதி.

பக்கம் 260-261

"கீழிறக்கிக் காட்ட கிடைக்குமா ஆதாரம்?” என்ற தலைப்பில் "இருபத்து ஒரு ஆண்டுகள் மருது பாண்டியர்கள் மன்னர்களாக விளங்கியதை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஆங்கிலேயர் அவர்களை அந்தஸ்த்தில் குறைந்தவர்களாகத் தங்களது ஆவணங்களில் கீழிறக்கி காட்டி வரைந்துள்ளனர்” அடைப்பக்காரர் என்பதற்காவது ஆதாரம் காட்ட முடிந்து இருக்கிறதா? என்று நூலாசிரியர் கேட்கிறார்.

தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆங்கிலேயரின் ஆவணங்களைக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகப் படித்துப் பார்த்து பரிசீலித்து வரும் வரலாற்று ஆய்வாளன் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.

அன்றைய சூழ்நிலையில் இந்த நாட்டு அரசியலைத் தங்களது சொந்த நலன்களுக்கு உகந்த முறையில், கைப்பற்றுவதற்கு ஏற்ற சூழ்ச்சி, ராஜ தந்திரம், வன்முறை ஆகிய வகையில் ஈடுபட்ட பரங்கியர் என்ற கும்பெனியார் வெற்றியும் கண்டனர். ஆதிக்கவாதிகளான அவர்களது நோக்கில் சூழ்நிலைகளைப் புரிந்து பதிவு செய்துள்ளவை அவர்களது அறிக்கைகள், கடிதங்கள், பதிவேடுகள். இவைகளில் அவர்களது நலன்களுக்கு எதிரான இந்த நாட்டு மன்னர்கள், மக்கள் தலைவர்கள், அவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள், எத்தகைய எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களது மனப்பண்புகளும், செயல்முறைகளும் எப்படி இருந்தன என்பதையும் தவறாமல் பதிவு செய்து உள்ளனர். இந்த ஆவணங்களும் இன்று நமக்கு கிடைத்திராவிட்டால் தமிழகத்தின் பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டு வரலாற்றை வரையறை செய்து வரைவதே இயலாததாகி இருக்கும்.

இந்நிலையில் கும்பெனியாரது ஆவணங்களைத் தங்களது கருத்துக் கோர்வைக்கு இயைந்ததாக இல்லையென்பதற்காக அவைகளை முற்றிலும் ஒதுக்கி விடமுடியுமா? எட்டாக் கனியென்றால் அது புளிக்குமா? துஷ்டன் மருது என்று வரைந்துள்ள தளபதி வெல்ஷ் தான், அரண்மனை சிறுவயல் காட்டு சாலையமைப்பு பணியில் மருது சேர்வைக்காரர்களது சிவகங்கைச் சீமைத் தியாகிகள் எத்தகைய நாட்டுப் பற்றுடனும் வீராவேசத்துடனும் போராடி கும்பெனியாரது திட்டத்தை நிறைவேற்ற விடாமல் சீர்குலைத்து வீராதி வீரரான தளபதி அக்கினியூவை சோழபுரத்திற்குப் பின்வாங்குமாறு செய்த மகத்தான நிகழ்ச்சியைத் தெளிவாக வரைந்து வைத்துள்ளார். சிவகங்கை கும்மியும், அம்மானையிலும் இந்தச் செய்தி விவரித்து இருக்கிறதா? இல்லையே சிவகங்கையின் இறுதி மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவர் சீமை நிர்வாகத்தை தமது பிரதானிகளான மருதிருவர் நடத்துமாறு அனுமதித்து விட்டு பெயரளவில் மன்னராக இருந்த குற்றத்திற்கு நாடு கடத்தப்பட்டு, அவரும் மற்றும் சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலிச் சீமைகளைச் சேர்ந்த வீரத் தலைவர்கள் எழுபத்து இரண்டு பேர் 11.2.1802-ம் தேதி துத்துக்குடியில் இருந்து நாடு கடத்தப்பட்டு எண்பது நாட்கள் கடற்பயணத்திலும், பின்னர் பினாங் தீவிலும் அவர்கள் பட்ட துயரங்களின் கண்ணீர்க் கதையை சிவகங்கைச் சரித்திரக்கும்மியும், அம்மானையுமா சொல்லுகிறது? தெரிவிக்கிறது? நமது நூல்களில் இந்தச் சிறப்பான செய்திகளைப் பார்க்க முடிகிறதா?

கி.பி.1783-ல் சிவகங்கைக்கு பேஷ்குஷ் தொகை வசூலுக்கு வந்த தளபதி புல்லர்டன், மதுரை திருநெல்வேலி, திண்டுக்கல், சீமையில் கும்பெனியாரது குத்தகைகாரர்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து இழிவான முறையில் எப்படி கும்பெனியாருக்காக வசூல் செய்கின்றனர் என்பதைத் தெளிவாக மேலிடத்திற்கு நீண்ட அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த மக்கள் படும் கஷ்டங்களை நமது நாடோடி இலக்கியங்கள் பாடி இருக்கின்றனவா? இவைகளையெல்லாம் கும்பெனியாரது ஆவணங்களைத் தவிர வேறு இந்த ஆவணத்திலும் கிடைக்காத வரலாற்றுத் தொகுப்பு ஆகும். இவைகளை விடுத்து, தமிழக வரலாற்றை எவ்விதம் எழுத முடியும்? அரண்டவனுக்குத்தான் இருண்டதெல்லாம் அச்சமூட்டும். சமன் செய்து சீர் தாக்கி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்பவர்களுக்கு இந்த ஆவணங்கள் புறக்கணிக்க முடியாத வரலாற்றுப் புதையலாக அமையும்.

அடுத்து, மருது சகோதரர்கள் மன்னர்களாக இருந்தனர் என்பதைக் குறிக்க ஆசிரியர் வரலாற்று ஆவணம் எதையாவது சுட்டியிருக்கின்றனரா என்றால் இல்லை. கி.பி.1780-1801 வரை மருது இருவர் தொடர்ந்து மன்னராக இருந்தபொழுது, அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர் கும்பெனியார். இவர்களது ஆவணங்களை ஒதுக்கி விடுவோம். அடுத்து இவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் புதுக்கோட்டை தொண்டமான, இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆகியவர்கள் மட்டுமே. அவர்களது ஆவணங்களில், அந்தச் சீமை வரலாற்று நூல்களில், இவர்கள் சிவகங்கைச் சீமை மன்னராக இருந்தனர் என்பதற்குரிய குறிப்புகள் இருக்கிறதா என்றால் இல்லையே பிறகு எந்த ஆதாரத்தைக் கொண்டு அவர்களை உயர்த்திக் காட்டுவது?

பக்கம் 261

"மருதிருவரின் தந்தை சேதுநாட்டில் சேதுபதியிடம் ஒருபடைத் தலைவராக இருந்து வந்ததற்கு தொல்லியல் சாசன ஆதாரம் உள்ளது' என்ற கூற்றுக்கு நண்பர், வேதாசலம் அவர்கள் 'கல்வெட்டு' இதழ் எண்.18-ல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனுமந்தக்குடி ஒலைச்சாசனம் சுட்டப்பட்டுள்ளது. இந்த ஒலைச் சாசனத்தில் சாட்சிக் கையொப்பம் இட்டு இருப்பவர்கள் ஒருவர் வணங்காமுடி பளநியப்ப சேர்வைக்காரர். இன்னொருவர் மேற்படி அணியாபதி அய்யன அம்பலம்.

இந்தப் பெயரில் இருந்து அதாவது, 'வணங்காமுடி பளநியப்ப சேருவைக்காரன்' என்ற சொற்றொடரைக் கொண்டு கட்டுரை ஆசிரியர், 'மருது சகோதர்களின் தந்தையார் உடையார் சேர்வை என்ற மொக்கப் பளனியப்ப சேர்வைக்காரர் தான் அவர் என்றும் அவர் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது படையில் பணியாற்றியிருக்க வேண்டும். அவரே இந்த ஓலையிலும் சாட்சிக் கையெழுத்து இட்டு இருக்க வேண்டும் என்ற அவரது ஊகத்தை அடுக்கியவாறு வெளியிட்டுள்ளார். இதை ஒரு தொல்லியல் சாசனமாக எப்படி ஏற்றுக் கொள்வது? சேதுநாட்டில் பளனியப்பன் சேர்வை என்று அப்பொழுது அந்த ஒருவர் மட்டும்தான் இருந்தாரா? அவரும் மருது சேர்வைக்காரரது தந்தைதானா? பொதுவாக சாட்சிக் கையெழுத்துப் போடுபவர் தனது ஊரையும் குறிப்பிட்டு கையெழுத்து இடுவது அன்றைய மரபு. வனங்காடி என்பது அந்தப் பளனியப்ப சேர்வைக்காரரின் ஊராக ஏன் இருக்கக் கூடாது? பரமக்குடி வட்டத்தில் வணங்கான் அல்லது வணங்கான் ஏந்தல் என்று ஒரு ஊர் உள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. அத்துடன் அந்த ஒலைச்சாசனத்தில் கையெழுத்து போட்டுள்ள மற்றொருவர் அணியாபதி அய்யன அம்பலம் என்பவர். அனியாபதி, அனுமந்தக்குடிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் உள்ள ஊர் என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டயத்தின் வரியில் பிரதானி முத்திருளப் பிள்ளை என்று பணியின் பெயர் குறிப்பிட்டு இருப்பது போல தளபதி வணங்காமுடி பள்ளியப்ப சேருவைக்காரன் என்ற குறிப்பும் இல்லை. இராமநாதபுரம் சம்ஸ்த்தான வரலாறான மானுவலில், சேதுபதி மன்னர்களது. பிரதானி, தளபதிகள் யார் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. (பக்கம் 274) மன்னர் முத்து இராமலிங்க சேதுபதி ஆட்சியில் பணியாற்றிய பிரதானிகள் எழுவர் பெயர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தளபதி பளனியப்ப சேருவைக்காரன் என்ற பெயர் அந்தப் பட்டியலில் காணப்படவில்லை!

ஆதலால் வணங்காமுடி பளனியப்ப சேர்வை, என இந்த ஓலைச்சாசன சாட்சி, நூலாசிரியரது கற்பனையான மருது சகோதரர்கள் தந்தை என்பது தெளிவு.

பக்கம்: 53 - 54

'சசிவர்ணத் தேவர் கி.பி.1749-ல் உயிருடன் இல்லை. பூதக்காள் நாச்சியார் கி.பி.1742-லோ அதற்கு பின்னரோ அரசியாராக இருந்து இருக்கலாம்...'

இந்த தொடரின்படி மன்னர், கி.பி.1749 வரை இருந்திருக்கும் பொழுது மூத்தராணியும் அவர் மக்களும் இருக்கும் பொழுது இளையராணி கி.பி.1742-ல் எப்படி ஆட்சிக்கு வந்திருக்கமுடியும்? இதனைப்பற்றி ஆசிரியர் சிந்தித்ததாகத் தெரியவில்லை. நீதிமன்ற ஆதாரங்களைக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டால் நீதி மன்றத்தின் தீர்ப்புரையைத்தான் ஆதாரமாகக் கொள்ளலாமே.தவிர, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மறுப்புரை ஆகியவைகளை ஆதாரங்களாகக் கொள்வது மரபு இல்லை. ஆசிரியர் புதுமையாக பல இடங்களில் இவைகளையே நீதிமன்ற ஆவணங்களாகச் சுட்டி உள்ளார்.

நாலுகோட்டை, படைமாத்தூர், சிவகங்கை குடும்ப கொடி வழியொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது) இதன்படி பூதக்காள் நாச்சியார் கி.பி.1746-ல் இறந்துவிட்டார் என்பதும் அவருக்கு முத்து வடுகநாதர் கி.பி.1736-ல் பிறந்தார் என்றும் தெரிகிறது.

மற்றும் மன்னர் சசிவர்ணத் தேவர் வழங்கிய செப்பேடுகள் கி.பி.1748 வரை கிடைத்துள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கணவர் கி.பி.1748 வரை மன்னராக இருந்தபொழுது கி.பி.1742 முதல் இரண்டாவது மனைவி எப்படி ஆட்சிக்கு வந்திருக்க முடியும்? பக்கம்: 147, 148

"...காளையார் கோயிலில் மருது பாண்டியர்கள் நிகழ்த்திய முதல் போர் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை ஆங்கிலத் தளபதிகள் சுமித், பான்ஜோஜர் களத்தில் கி.பி.1772-ல் நிகழ்ந்தது. அதே காளையார் கோவிலில் இரண்டாவது போரை மருது பாண்டியர்கள் சந்தித்தனர்.

காளையார் கோவிலில் 25.6.1772-ல் நடந்த போரில் மன்னர் முத்து வடுகநாதரது தலைமையில் நின்று போராடிய சிவகங்கை சீமை மறவர்களது செங்குருதியினால் காளையார் கோவில் மண் சிவப்பேறியது. மன்னரும் வீர மரணம் அடைந்தார். இது காலத்தால் அழிக்க இயலாத வரலாற்று ஏடு.

சாதாரண மனிதர்களும் இந்தச் சிறப்பான நிகழ்ச்சியையும் சிவகங்கை மன்னரது தியாகத்தையும் எந்த வகையிலும் சிறுமைப்படுத்திவிட முடியாது. அது சூரிய வெளிச்சத்திற்கு எதிரேஒளிரும் மின்மினிப்பூச்சியின் முயற்சியாகத்தான் இருக்க முடியும். ஆனால், அரிச்சந்திர வாக்காக அம்மானை பாடியுள்ளவரோ, காளையார் கோவிலில் இரத்தக்களரி எதுவுமே நடக்காதது போல, பாடியிருப்பதைப் படியுங்கள்.

"... கும்பெனியார்
அடர்ந்தார்கள் காளையார் ஆலயத்தைச் சுற்றிவந்து
படர்ந்தார் திசையனைத்தும் படர்ந்து வருமுன்னேதான்
அங்கேதான் காளையார் ஆலயத்தின் னுள்ளேதான்
மூங்கையுடன் முத்து வடுகநாத துரை
பந்தயமாயத்தாமிருவர் பஞ்சணை மெத்தையின் மேல்
சந்தோசமாயிருந்து சதுரங்கம் பார்ப்பளவில்

"..... கோட்டைனைப்
பிடித்தார் மயிலேறி பெரியகொடிக் செண்டாக்கள்
அடித்தார். பீரங்கிகளில் அனேகமெனக் குண்டு விட்டு
எழுப்பினார் சத்தம்....
"நாடுபுகழ் வடுகராசனுமே மீது சத்தம்
எனவே எண்ணி எழுந்து திடுக்கிட்டவனும்
மாதுதனை கைப்பிடித்து வர வெளியே
வரவே உள்மண்டபத்து வாசல்வெளி மூலைதன்னில்
உரமாய் வரும் போது உபாயமுள்ள கம்பெனியார்
மதிலேறி நின்று மாட்டியனும் பூரியும்தான்
........கலீரெனவே சுட்டானே பூரிதுரை
(சிவகங்கை அம்மானை பக்கம் 126-127)

அந்தக் குண்டு பட்டு மன்னர் முத்து வடுகநாதர் இறந்தார் என்று வரைந்துள்ளார். இவரைப் பற்றி மருது பாண்டியர் மன்னர் ஆசிரியர். “அம்மானை ஆசிரியர் மருது பாண்டியர்ஆட்சிக் காலத்தில் இளைஞராய் இருந்து விடுதலைப் போரினைப் பார்த்த பேறு பெற்றவர்” (மருது பாண்டிய மன்னர் பக்கம் எண்.13) என்று நற்சான்று வழங்கியுள்ளார். இந்த ஆசிரியர் எந்தப் போரைப் பார்த்தாரோ தெரியவில்லை!

ஏனெனில் காளையார் கோவில் முதல்போரினை 25.6.1772-ல் நடைபெற்றதை காதால் கேட்டு அறிந்தவராகக் கூட தெரியவில்லை. ஆதலால் வரலாற்றுப் புகழ் பெற்ற அந்தப் போரைப் பாடாதது மட்டுமல்ல, சிவகங்கை மன்னர் தற்செயலாக குண்டுபட்டு இறந்தார் என்று மன்னரது தியாகத்தை மறைத்து, சிறுமைப்படுத்தும் தொண்டினை அல்லவா செய்துள்ளார்.

சிவகங்கை கும்மி ஆசிரியரோ,

“காளையார் கோவில் சென்றேகிக்
கல்மதிலேறியே ஏணி வைத்து
துப்பாக்கி வார் பண்ணிச் சுட்டிடவே
தூங்கிய துரையும் ராணியும்தான்
இப்ப வெடிச் சத்தம் ஏதனவே
இருபெருங் கை கோர்த்து வெளியில் வந்தார்
கண்டந்த சிப்பாயி சுட்டிடவே
காந்தனும் ராணியும் பட்டிடவே...”

(சிவகங்கை கும்மி பக்கம் 19)

என்று உறங்கி வெளிவந்த மன்னர் முத்து வடுகநாதர் குண்டுபட்டு உயிர் துறந்தார் என்று பாடியுள்ளார்.அம்மானையாரை அடியொற்றி.

அப்பொழுது மருது இருவரும் முறையே மங்கலத்திலும், சிவகங்கையிலும் இருந்தனர் என்பதையும் மன்னர் இறந்தபிறகு தான் காளையார் கோவில் வந்தனர் என்றும் அவர்கள் வரைந்துள்ளனர். இதற்குப் பிறகு 'மருது வீரர்கள் போரில் இறங்கினர். சிவகங்கைக்கு ஏற்பட்டு வரும் பெரும் சேதத்தை எண்ணி போரை அன்று மாலையே முடிவுக்கு கொண்டு வந்தனர் (ம.பா.ம.பக்கம் 92-93) எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு ஆதார அடிக்குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள மேஜர் விபார்ட்டின்' எழுத்தில்,

மன்னர் கொல்லப்பட்ட பிறகு மருது வீரர் போரை அன்று மாலை வரை நீடித்தனர் என்ற செய்தியே இல்லை!

அம்மானை, கும்மி ஆசிரியர்களும் மன்னர் இறந்தபிறகு, மருது வீரர்கள் காளையார்கோவில் வந்து அன்று மாலை வரை சண்டையிட்டதாகச் சொல்லவில்லையே!

"ஆனாலும் பொறாதும் அகற்றுவோம் நமது துரை
சாமி போனாலும் தளம் போய் விசனமில்லை
உலோகமாதாவை நொடிக்குள் தப்ப வைத்து
சாகாமல் காத்தல் தருமமே யாகுமதல்...'

(சிவகங்கை அம்மானை பக்கம் 129)

"தாட்டிக ரிருவரும் செத்தா ரென்று
தளவாய் இருவரும் தாமறிந்து
கையில் வளரியைத் தானெறிந்து
கன்னத்தில் அறைந்து அழுதலறி
வையத்திலினிச் சண்டையென்ன
வந்த படையெல்லாம் போங்களென்று
அண்ணனும் தம்பியும் யிருபேரும்...'

(சிவகங்கை கும்மி பக்கம் 19)

அப்புறம், மருது வீரர் போர் தொடர்ந்து பற்றிய செய்திகளை மருது பாண்டிய மன்னர், நூலாசிரியர் எங்கிருந்து பெற்றார்? என்ன ஆதாரம்? அவருக்கு மட்டும் தெரிந்து இருந்ததால் தானே தெளிவாக வரைந்துள்ளர் நிச்சயமாக இது அவரது கற்பனையில் கண்ட போராகத் தானிருக்க வேண்டும்.

பக்கம்: 157 - 158

" ... சேதுபதி இளைஞர் அவரிடம் வேலு நாச்சியாரது புதல்வி வெள்ளச்சி பற்றிய ஆசைக் கனவுகளை நாளுக்கு நாள், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திடச் செய்தார் கெளரிவல்லவர்."
".. பாரம்பரிய பெருமை மிக்க சேதுபதி எப்படி அவ்வளவு எளிதாக கெளரிவல்லவரின் சூழ்ச்சியில் விழுந்தார் என்பது விந்தையே, என்றாலும் நடந்து முடிந்து விட்ட வரலாற்று நிகழ்ச்சியை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்."

இவ்விதம் 'சூர்ப்பனகை சூழ்ச்சிப்படலம்' என்ற தலைப்பில் எழுதியுள்ளார். படிப்பதற்கு இலக்கியம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வரலாற்றை, கற்பனையும் ஒப்பனையும் மிக்கதாகத் திரித்து விடமுடியாதே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயத்தின் பிரதிநிதியாகச் சித்தரிக்கப்பட்ட, "அரக்கர் செய்த பாவமும் அல்லவை செய்த அறமும் 'ஆன சூர்ப்பனகை, இராவணன் ஆகியோருடன் படமாத்துார் கெளரி வல்லவரையும் சேதுபதி மன்னரையும் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது அருவருக்கத் தக்கதாக இல்லையா? கெளரி வல்லபர்காளையார் கோவில் சிறையில் இருந்து உயிர்தப்பி வந்த பொழுது தான் (கி.பி.1792-ம் ஆண்டின் இறுதியில்) இராமநாதபுரம் கோட்டையில் சேதுபதி மன்னரைச் சந்தித்தார். தமக்கு இழைக்கப்பட்ட தீங்குகளைத் தெரிவிப்பதற்காக. அப்பொழுது சேதுபதி மன்னர் மூன்று மனைவிகளுக்குக் கணவனாக இருந்தார் அவருக்கு வயது 34. ஆனால் மருது பாண்டியர் மன்னர் நூலாசிரியர்அப்பொழுது சேதுபதி மன்னருக்கு வயது இருபது ("ம.பா.ம.பக்கம் 157) என்று எவ்வித ஆதாரமில்லாமல் வரைந்துள்ளார். அத்துடன் தமக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்ளுமாறு வேறு ஒருவரிடம் சென்று யாராவது நிர்ப்பந்திப்பார்களா? இதுவும் இலக்கியத்தில்தான் நடக்க முடியும். தான் காதலித்த இளவரசி தமயந்தியை, சுயம்வரத்தின் பொழுது இந்திரனுக்கு மாலை சூட்ட வற்புறுத்துவதற்கு, அதே தமயந்தியிடம் நளன் தாது சென்றதாக நளவெண்பா, நைடதம் ஆகிய இலக்கியங்களில்தான் காணமுடிகிறது.

ஆனால் சேதுபதி மன்னருக்கும் சிவகங்கைப் பிரதானிகளுக்கும் இடையில் எழுந்த சகோதர யுத்தங்களுக்கு காரணம் இது அல்ல வேறு உள.

முதலாவதாக சேதுபதி மன்னர் திருச்சிக் கோட்டை சிறையில் இருந்த பொழுது நவாப்பினது ஆட்சியில் சேதுபதி சீமையின் வடக்குப் பகுதி முழுவதையும் மன்னரது தாய்மாமனாரான ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைச் சாமித் தேவர், ஐதர்அலியின் படை உதவி பெற்று அவரது ஆக்கிரமிப்பில் வைத்து இருந்தார். கி.பி.1780-ல் சிவகங்கை மீட்சி பெற்ற பொழுது சிவகங்கைப் பிரதானிகளும் சேதுபதி நாட்டின் சில பகுதிகளைத் தங்களது கைவசம் வைத்திருந்தனர். கி.பி.1781 ஏப்ரலில் ஆற்காடு நவாப் அவரை விடுதலை செய்து மறவர் சீமையின் மன்னராக அங்கீகரித்து மீண்டும் இராமநாதபுரத்தில் அமர்ந்த பொழுது, மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மாப்பிள்ளைத் தேவன், மருது இருவர், ஆகியவர்களது ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டார். கி.பி.1795-ல் மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட பொழுது மன்னர் கம்பெனி கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மருதிருவர் மீது குரோதம் கொள்வதற்கான முதற்காரணம் இது.

அடுத்து, சிவகங்கைச் சொந்தமான தொண்டி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் தொண்டிக்கு மேற்கே பத்துக்கல் தொலைவில் உள்ள இராமநாதபுரம் சீமையான திருவாடானையில் உள்ள சுங்கச்சாவடியில் உரிய சுங்கம் செலுத்திய பிறகுதான் வெளியே அனுமதிக்கப்படும். தஞ்சையில் இருந்து சிவகங்கைக்கு தொண்டி வழியாக எடுத்துச்சென்ற நெல் மூட்டைகளுக்கு சிவகங்கை அரசு செலுத்த வேண்டிய சுங்கவரி பாக்கி ரூபாய் பதினாயிரத்தை செலுத்தாமல் சிவகங்கை பிரதானிகள் இழுத்தடித்தனர். இதனால் கோபமுற்ற சேதுபதி மன்னர் சேதுநாட்டின் வழியாகத் தொண்டி செல்லும் வாணிகச் சாத்துக்களின் வழியை மாற்றியமைத்து சிவகங்கைக்கு பட்டநல்லூர் (தற்பொழுதைய பார்த்திபனூர்) சுங்கச் சாவடி மூலமாக கிடைத்த வருவாயை இழக்குமாறு செய்தது. இதற்கு பதிலடியாக சிவகங்கைப் பிரதானிகள் சிவகங்சை சீமையைக் கடந்து சேதுபதி சீமைக்குள் செல்லும் ஆற்றுக்கால்களை அடைத்து சேதுபதி சீமையின் வேளாண்மைக்கு ஆற்றுநீர் கிடைக்காமல் செய்தது.

இன்னும் இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைகளின் எல்லைகளில் நடைபெற்ற கால்நடை திருட்டு, தானியக் கதிர்கள் திருட்டு என்ற பல தொல்லைகள் இரு நாடுகளது அரசியல் உறவுகளுக்கு குந்தகம் விளைவித்தன என்பதுதான் வரலாறு வழங்கும் உண்மையாக உள்ளது. சூர்ப்பனகை நாடக சூழ்ச்சி அல்ல.

பக்கம்: 220

'... சாசனத்தின் ஆண்டு கி.பி.1783 எனக் குறிப்பிட்டு இருப்பதால், கி.பி. 1772-ல் காலமான முத்து வடுக நாதரால் வழங்கப்பட்டிருக்க முடியாதென்பதும். கி.பி.1780 - 1801 வரை ஆட்சி பொறுப்பில் இருந்த மருதுபாண்டியர்களாலேயே வழங்கப்பட்டதென்பதும் உறுதியாகிறது."

பக்கம் 289

'கி.பி.1794 சூடியூர் சத்திரத்திற்கு அதன் அக்தார் வெங்கடேசுவர அவதானிக்கு கிராமங்கள் அளித்து முத்து வடுகநாத பெரிய உடையாத் தேவர் வழங்கியதாகக் குறிப்பிடும் செப்புச்சாசனம்.'

மருது இருவர் மன்னரே என்று நூலாசிரியது நிலையை உறுதிப்படுத்த குறிப்பிடப்பட்டுள்ள பதினோரு தொல்லியல் சாசனங்களில் இரண்டைப்பற்றித்தான், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சாசனங்களும் இவை அவரது கருத்துக்கு நேர்மாறான, வலுவான, சான்றுகள் ஆகும் என்பதை அவர் அறியவில்லை. காரணம் அவருக்கு கல்வெட்டு, செப்பு சாசனம் ஆகியவைகளைப் படித்தறியும் வாய்ப்பு இல்லை போலும்!

இந்த சாசனங்கள் முறையே கி.பி.1783-லும், 1794-லும் வழங்கப்பட்டவை. வழங்கியவர் சிவகங்கை மன்னர் விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் என்று இந்தச் செப்பு பட்டயங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. (பக்கம் 133 பார்க்க) அப்படியிருந்ததும் “கி.பி.1772-ல் காலமான முத்து வடுகநாதத் தேவரால் வழங்கப்பட்டிருக்க முடியாது என்றும், இந்த அறக்கொடைகள் மருது பாண்டியர்களால் வழங்கப்பட்டது” என்றும் நாலாசிரியர் முடிவு செய்துள்ளார். வரலாற்றுச் சான்றுகளை எவ்விதம் ஆய்வு செய்து எத்தகைய முடிவு மேற்கொண்டுள்ளார்பார்த்தீர்களா? கி.பி.1772-ல் முத்து வடுக நாதர் காலமாகிவிட்டார். உண்மை, முக்காலும் உண்மை. கி.பி. 1782-லும் கி.பி.1794-லும் அல்லவா அவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளில் சிவகங்கையில் மன்னர்கள் இல்லையா? ஆமாம். இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது கி.பி.1780 முதல் 1801 வரை சிவகங்கையில் மருது இருவர் ஆட்சி நடந்தது என்பதை நிலை நாட்டத்தானே ஆசிரியர் இந்த நூலை எழுதியிருக்கிறார். அப்படி மருதிருவருக்கு விசைய ரெகுநாத பெரிய உடையாத் தேவர் என்ற சிறப்பு பெயர்கள் இருந்ததா...? இல்லையே! ஆமாம் என்று எழுதிவிட்டால் பிரச்சனையே இல்லாது போய் இருக்கும் மருது இருவர் வழங்கிய பட்டயங்கள் என்று யாரும் எளிதில் சொல்லிவிடுவார்களே!

களவுத் தொழில் ஈடுபட எண்ணியவன் முதலில் தலையாரி வீட்டில் கைவரிசை காட்டினான், என்பது மறவர் சீமையில் வழங்கும் பொது மொழி. கி.பி.1780 முதல் கி.பி.1801 வரை தொடர்ந்து இருபத்து ஒரு ஆண்டுகள் மருதிருவர் சிவகங்கை மன்னராக இருந்தனர் என்று தொல்லியல் சாசனங்களைத் துணைக்கு எடுக்கப்போய், தென்னைமரத்திலே ஏறியவனுக்கு தேள் கொட்டிய கதையாக நூலாசிரியர் சொல்லக்கூடிய அந்த இருபத்து ஒரு ஆண்டுகால கட்டத்தில் வேறு ஒருவர், மருது பாண்டியர் அல்லாதவர், சிவகங்கை மன்னராக இருந்தார் என்ற உண்மை, பொய்யையும் சரித்திரப்புரட்டையும் புழுதியிலே புரட்டிவிட்டு பூதாகரமாக எழுந்து நிற்கிறது. அந்த மன்னர் யார் தெரிகிறதா? அவர் தான் சிவகங்கை இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை மணந்த சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர், அவரது அரசு பெயர்தான் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் ஆவார். 'அரசு நிலையிட்ட, 'விசைய ரகுநாத" என்ற பொதுவான சிவகங்கை மன்னர்களது விருதுகளுடன் அவரது இயற் பெயரான பெரிய உடையாத் தேவர் என்பதும் சேர்ந்ததுதான் இந்த அரசுப் பெயர். நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள இரண்டு செப்பு பட்டயங்களில் மட்டுமல்ல. இந்த மன்னர் ஏராளமான அறக்கொடைகளை 'அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர்' என்ற பெயரில், கி.பி.1800-ம் ஆண்டுவரை வழங்கி உள்ளார். அவர் வழங்கியுள்ள செப்பேடுகளில் சிலவற்றின் உண்மை நகல்களும் இந்த நூலில் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

பக்கம்: 303

"பதினைந்து வயதான துரைச்சாமி கடைசியாகப் பிடிபட்டு நாடு கடத்தப்பட்டார். அவரை பற்றிய கடைசிச் செய்தியைத் தருவது பேராசிரியர் ராக்கப்பனின் அறிக்கை. அதன்படி துரைச்சாமி எந்த வாரிசுதாரையும் விட்டுச் செல்லவில்லை. எனவே கி.பி.1821-ல்
பினாங்கில் இருந்து திரும்பி துரைச்சாமி உறுதிக்கோட்டை வரவில்லை. மதுரை வந்து அங்கு தங்கிவிட்டதுரைச்சாமி மணம்செய்து கொண்டோ அல்லது மணம் செய்து கொள்ளாமலோ வாரிசின்றி அங்கே காலமானார் எனத் தெரிகிறது.”

மேலே குறிப்பிட்டிருப்பதில் துரைச்சாமி மதுரையில் காலமானார் என்பது மட்டும்தான் உண்மை. தளபதி வெல்ஷா குறிப்பிட்டிருப்பது போல, துரைச்சாமி கைது செய்யப்பட்டு பினாங்கிற்கு அனுப்பப்பட்ட பொழுது அவருக்கு வயது 15 அல்ல இருபதிற்கு மேல். திருமணமாகி மகனும் இருந்தான். அந்தச் சிறுவனது பெயரும் மருது தான். அவர்கள் மீது பரிவு கொண்ட ஜமீன்தார் கெளரி வல்லப உடையாத் தேவர், பகைவரது குடும்பம் என்று கருதாமல் அவர்களுக்கு மாதந்தோறும் இருநூறு சுழி சக்கரம் பணம் (ரூ.253.9.11) வீதம் கி.பி.1805 வரை கொடுத்து உதவி வந்தார். பிறகு இராமநாதபுரம் ஜமீன்தார் அவரது ஆட்சிக் காலம் வரை (கி.பி.1812) அந்தக் குடும்பத்திற்கு மாதந்தோறும் படி கொடுத்து பராமரித்து வந்தார். பின்னர் அவர்கள் வறுமையில்தான் வாழ்ந்தனர். (பார்க்க தமிழ்நாடு ஆவணக் காப்பக மதுரை மாவட்ட தொகுதி 1669 பக்கம் 99)

பினாங்கில் இருந்து திரும்பியதுரைச்சாமி, மதுரை வந்து மாலபட காவல் துறை கண்காணிப்பாளரைச் சந்தித்து தாம் மதுரையில் தங்கி வாழ விரும்பவுதாகவும் அதற்கான உதவிகள் கோரி மனுக் கொடுத்தார். ஆனால் திடீரென்று அவரது உடல் நலம் மோசமாகி மரணமடைந்தார். (வைகாசி 11) அவரது சடலம் காளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜமீன்தார் கெளரி வல்லப உடையாத் தேவரது பொருட் செலவில் அவரது அடக்கம், அந்திமக் கிரிகையை நடத்தப்பட்டன.

இந்த விவரங்கள் அனைத்தும் துரைச்சாமியின் மகள் மருது சேர்வைக்காரர்கள் கி.பி.1821 மே மாதம் இராமநாதபுரம் கலைக்டருக்கு கொடுத்த மனுவில் காணப்படுகின்றன. (பார்க்க மதுரை மாவட்ட பதிவேடு தொகுதி 4669/பக்கம் 101-102)

இன்று காளையார் கோவில் ஆலயத்திற்கு எதிரில் உள்ள சந்தில் காணப்படும் சமாதியும் அங்குள்ள தனியான சிலையும் துரைச்சாமியாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

பக்கம்: 487

'போராளி இயக்கத்திற்குத் தன்னை அர்ப்பணிப்பதற்காக முத்துக் கருப்பத் தேவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இன்று இராமநாதபுரத்தில் உள்ள அவரது வழியினர் (அவருக்குத் திருமணம் ஆகாததால்) நேரடி வாரிசுகள் அல்ல. அண்ணன் தம்பி வழியினர்."

பக்கம் 488

'மருதிருவருடன் அவரும் 24-10-1801 தேதி அன்று திருப்புத்துரில் தூக்கில் போடப்பட்டார்."

மீளங்குடி முத்துக் கருப்பத் தேவர் பற்றி மருது பாண்டியர் மன்னர் நூலாசிரியர் வரைந்துள்ளவை பச்சை பொய் என்பதை கும்பெனியாரது ஆவணங்கள் உறுதியளிக்கின்றன. மீனங்குடி முத்துக் கருப்பத் தேவர் திருமணமானவர். அவருக்கு ஒரே தம்பி மட்டும் இருந்தார். பெயர் கனக சபாபதித் தேவர். கி.பி.1799-ம் ஆண்டு கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டதற்காக 16.11.1801-ம் தேதியன்று அவர் அபிராமத்தில் கும்பெனியரால் தூக்கிலிடப்பட்டார். (பார்க்க மாவீரர் மருது பாண்டியர் பக்கம் 160) காளையார் கோவில் போர் முழுத் தோல்வியில் முடிந்தவுடன், மருதிருவர் அணியில் கும்பெனியாரது பிடியில் சிக்காமல் தப்பித்தவர்கள் மாவீரன் மயிலப்பன் சேர்வையும், மீனங்குடி முத்துக் கருப்பத் தேவரும் தான். காரணம், காளையர் கோவில் போரின் பொழுது அவர்கள் இருவரும் இராமநாதபுரம் சீமையில் கும்பெனியாரது இலக்குகளை அழிப்பதில் ஈடுபட்டு இருந்தனர். பின்னர் முத்துக் கருப்பத் தேவரை, அவர் போட்டி அரசு அமைத்து இருந்த இராமநாதபுரம் சீமையின் குத்தகை நாட்டில் (அனுமந்தக்குடி, ஒரூர்பகுதி) கி.பி.1803-ல் கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் கோட்டையில் தளபதி மார்டின் கண்காணிப்பில் காவலில் வைக்கப்பட்டார்.

(பார்க்க Madura Collectorate Records Vol. 1146/23-9-1803/பக்கம்.39)

காவலில் வைக்கப்பட்ட அவரது குடும்பத்தினர்.
1 முத்துக் கருப்பத் தேவர் 1
2 அவரது தாயார் 1
3 மனைவிகள் 2
4 அவரது குழந்தைகள் 4
5 முத்துக் கருப்பத் தேவரது தங்கை 1
6 முத்துக் கருப்பத் தேவரது தங்கை கணவர் 1
ஷயாரின் குழந்தைகள் 3
6 தியாகியான தம்பி கனகசபைத் தேவரது மனைவி 1
7 ஷையாரது கைக்குழந்தை 1
8 பணியாட்கள், ஆடவர், மகளிர் 10
---
மொத்தம் 26
---


(பார்க்க: மாவீரர் மருது பாண்டியர் பக்கம் 160 தமிழ்நாடு ஆவணக் காப்பக பதிவேடு, எம்.டி.ஆர். தொகுதி எண் 1146/1803, 24.10.1803/ பக்கம் 9) இதனையடுத்து படிச் செலவு வழங்கிய உத்திரவோ அல்லது முத்துக் கருப்பத் தேவரை, விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்கிய விவரம் அல்லது அவரது தலைக்கு விளம்பரப்படுத்தப்பட்ட ஓராயிரம் சக்கரம் பணம் பரிசு வழங்கப்பட்டது போன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இவருடன் இணைந்து செயலாற்றிய சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக் காரரைக் கைது செய்தவுடன் அவர்மீது பாளையங்கோட்டை சிறையில் பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அபிராமத்தில் 15.7.1803-ல் தூக்கில் தொங்கவிடப்பட்டார். ஆனால் முத்துக்கருப்பத்தேவரைப் பற்றிய கி.பி.1816-ல் வருட ஆவணம் உள்ளது. அப்பொழுது கலைக்டர் அவரது மனு ஒன்றினை 15.8.1816 தீயன்று மேலிடத்திற்கு பரிந்துரைத்தது அது.

ஆதலால் முத்துக் கருப்பத் தேவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது.

பக்கம்: 482, 83

"இக்கிளர்ச்சியில் மக்களது ஆவேசம் மோசமான அடக்குமுறையினாலும், சிவகங்கைச் சீமை சேர்வைக்காரர் துரோகத்தினாலும் ஒடுக்கப்பட்டு ஓய்ந்தது' (விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் பக்கம் 121-22) மேலே கண்ட எனது எழுத்துக்களை மருது பாண்டியர் மன்னர் நூலாசிரியர் இந்தப் பக்கத்தில் அப்படியே எடுத்துக் கொடுத்துவிட்டு 'வாழ்நாளெல்லாம் ஆங்கிலேயரை எதிர்ப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்க சின்னப் பாண்டியரின் ஒரே ஒரு செயலை மட்டும் வைத்துக் கொண்டு சிவகங்கைச் சீமை சேர்வைக்காரரின் துரோகம் என்று கூறிவிடுவதா? ஒரே ஒரு நிகழ்ச்சியை வைத்து ஒருவரை எடை போட்டு விடலாமா?' என்று கேட்டு விட்டு மீண்டும். 'இந்தப் பிரச்சினையில் குற்றம் சாட்டுகிறவர். தீர விசாரணை செய்தாரா? இல்லை ஆங்கிலேயரால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ள அதாவது ஒரு தரப்பு ஆவணத்தை வைத்துக் கொண்டு முடிவுக்கு வந்துள்ளார். மருது பாண்டியர் தரப்பு ஆவணங்களைத் தேடியதாகக் குறிப்பு இல்லை. உண்மை அறிய வரலாற்றில் புகுந்து விசாரணையாவது மேற்கொண்டாரா?”

இந்த வினாவையும் அந்த நூலாசிரியர் எழுப்பி உள்ளார். ஆதலால் இந்தப் பக்கங்களில் அந்த வினாவிற்கான விளக்கத்தையும் கொடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன். பொதுவாக சிவகங்கைச் சீமை பற்றிய வரலாறு நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், எனது இந்த நூல் வரையுமாறு கேட்டுக் கொண்ட பல அன்பர்களது வேண்டுகோளுக்கு இணங்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். சிவகங்கைச் சீமையின் மாவீரர்களான மருது பாண்டியரது விடுதலை இயக்கத்திலும், அதிலே தங்களை இணைத்துக் கொண்ட அவர்களது தியாகத்திலும் நான் மிகவும் ஈடுபாடு கொண்டு, 1989-ல் 'மாவீரர் மருது பாண்டியர் என்ற நூலை வரைந்தேன். எனது நான்காண்டு கால உழைப்பினால் உருவான அந்த நூலை 'சிறந்த வரலாற்று நூலாக தேர்வு செய்து 16.1.1991-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முதல்வர்.அவர்களால் எனக்கு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் மக்களது மாபெரும் தலைவர்களைப் புகழ்ந்து பல்லாண்டு பாடுவதிலும் எனக்கு உடன்பாடுதான். அதேநேரத்தில், அண்மை நூற்றாண்டில் இருந்து மறைந்த அந்த வரலாற்று நாயகர்களை, வரலாற்றுக்கு முரணான முறையில், வரலாற்றுச் சான்றுகளுக்கும் தடையங்களுக்கும் சம்பந்தமில்லாத வகையில், சுயகற்பனை அடிப்படையில் சித்தரிப்பது என்பதை யாவரும் சரித்திரப் புரட்டாகத்தான் கொள்வர். ஆகையால் அந்த நூலாசிரியரது எழுத்துக்களுக்கு இங்கே வரலாற்று ஆதாரங்களுடன் மறுப்பு கொடுத்து இருக்கிறேன். இந்தப் பகுதியில் எனது இரண்டாவது நூலான 'விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (இதுவும் தமிழ்நாடு அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான முதற் பரிசும், பாராட்டும் 15.1.1989-ல் பெற்றது) நூலில் கண்ட ஒரு பகுதிக்கு விளக்கம் தர வேண்டிய நிலையில் இதனை எழுதுகிறேன். மருது பாண்டியர்களைப் பற்றி "கீழிறக்கிகாட்ட வேண்டும் என்பது எனது இலக்கு அல்ல. இந்த நூலின் நோக்கும் அது அல்ல.

வரலாற்று நாயகர்கள் மனிதர்கள்தான் என்பதை மறந்து விடுதல் கூடாது, தங்களது அவசர முடிவுகளால், சந்தர்ப்ப நிர்ப்பந்தம் போன்ற சூழ்நிலையில் தவறுகளைச் செய்துள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் பக்கத்து பாளையங்களில் கொள்ளையிட்டார் அல்லது அவரது பிரதானி சிவசுப்பிரமணிய பிள்ளையின் கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. ஆங்கிலேயரது மூச்சைக்கூட பொறுக்காத எதிர்ப்பு அணியில், சிவகிரி போன்ற நெல்லைப் பாளையக்காரர்களையெல்லாம் திரட்டிய பொழுது, பக்கத்தில் உள்ள சிவகங்கைச் சீமை ஆட்சியாளர்களை தனது அணிக்கு கொண்டு வர தவறிவிட்டார் என்பது மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் மீதான குற்றச்சாட்டு. மற்றும் திவான் பூர்ணையா போன்ற பழமைவாதிகள் தனது தீவிரக் கொள்கைகளுக்கு இணக்கமாக இல்லையென்பதை நன்கு அறிந்து இருந்தும் தீரர் திப்பு சுல்தான் அவர்களையே இறுதிவரை நம்பி நின்றது அவரது வீழ்ச்சிக்கு காரணமாயிற்று என்பது திப்பு சுல்தான் மீதான குற்றச்சாட்டு.

பக்கம்: 490

'சிவகங்கையின் ஆதி மன்னர் சசிவர்ண தேவரின் வாரிசுதான் மருது

பாண்டியர் என உறுதி செய்யும் ஆவணத்தைக் காட்டுமாறு பாண்டியர்களைக் கேட்டான். அதற்கு இவர்கள் ".... இந்தக் கலெக்டர் லூவிங்டன் இங்கு ஏற்படுகிற கலகங்களுக்கெல்லாம் காரணம் இவரை நீக்கிவிட்டு) இவர் இடத்தில் ஒரு திறமையான கலெக்டரைப் போடவும் (கால்டுவெல் பாதிரியாரது திருநெல்வேலி சீமைச் சரித்திரம்) என்று சென்னையில் உள்ள கும்பெனி அரசுக்கே மருது பாண்டியர் கடிதம் எழுதினாராம். எந்த அளவுக்கு மேல் மட்டம் வரை ஆங்கிலேயரை முட்டாளாக்கி வைத்து இருந்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறதல்லவா?"

மேலே கண்டவாறு மருது இருவர் கும்பெனியாருக்கு எழுதிய எந்தக் கடிதமும் தமிழ் நாடு ஆவணக் காப்பகத் தொகுப்புகளில் காணப்படவில்லை. ஆனால் கலெக்டர் லூவிங்டன் 1.2.1801-ம் தேதிய கடிதத்தில் இறந்து போன ராணியாரது வம்சாவளி விவரங்களுடன் வந்து சந்திக்குமாறு கோரியிருந்ததற்கு சின்ன மருது சேர்வைக்காரது 4.2.1801-ம் தேதியிட்ட கடிதம் அங்கு உள்ளது. இதோ அந்த கடிதத்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட பகுதி.

'முதல் தேதியிட்ட கலெக்டரது தாக்கீதை பெற்றுக் கொண்டதை அதில் கோரப்பட்டுள்ளதற்கான விவரமும் கீழ்வருமாறு.

எனக்கு அனுப்பப்பட்ட உத்தரவிற்கு இணக்கமாக, தங்களது பணியாளர் மூலமாக இறந்து போன சிவகங்கை ராணியின் வம்சாவளி அட்டவணையை அனுப்பியிருக்கிறேன். கடிதத்தில் கோரியிருந்தவாறு தாமதம் இல்லாமல் தங்களைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால் எனது கால்களில் ஏற்பட்ட புண்ணும், பயங்கரமான தலைவலியினால் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது, நேரில் வரமுடியாமல் தடுத்து விட்டது. விருப்பப்பட்டால், எனது மருமகன் சங்கிலி சேர்வைக்காரரையும், சின்ன ராஜாவையும் அனுப்பி வைக்கிறேன். எனது இதய பூர்வமாக, எப்பொழுதும் எனக்கு வழங்கப்படும் உத்திரவுகளுக்கு இணங்க நடந்து கொள்வேன். மயிரிழையில் கூட எனக்கு அளிக்கப்படும் உத்தரவிற்குப் புறம்பாக நடந்து கொள்ளமாட்டேன். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும்..."

மருது சேர்வைக்காரர் கும்பெனி மேலிடத்துக்கு கலெக்டர்

லூவிங்டனைப் பற்றி எழுதிய புகார் கடிதத்திலும், ".... எனது எஜமானரது (சிறிய தகப்பனாரது மகன்) மக்களுடனும், வம்சாவளி அட்டவணைகளுடன் தன்னைச் சந்திக்குமாறு கலெக்டர் உத்திரவிட்டிருந்தார். இதனை ஒரளவு நிறைவேற்றினேன். ஆனால் எனது உடல் நலிவு காரணமாக, என்னால் அவரிடம் செல்ல இயலவில்லை. எனது எஜமானரது இளைய தம்பியுடன் விளக்கம் சொல்லத்தக்க அலுவரை அனுப்பி வைப்பதாக அறிவித்து இருந்தேன். இதன் தொடர்பாக, இத்துடன் இணைத்துள்ள கடிதத்தை திருப்பி அனுப்பி பதிலளிக்குமாறு எழுதியுள்ளார்.'

இவைகளில் இருந்து கும்பெனி கலெக்டர் மருது பாண்டியர் சசிவர்ணத் தேவரது வாரிசு என்பதற்கான வம்சாவளி பட்டியலைக் கோரவில்லை என்பது தெளிவு. மேலும் கலெக்டர் லூவிங்டனுக்குப் பதிலாக திறமையுள்ள வேறொரு கலெக்டரை நியமனம் செய்யவும் கோரவில்லை. மாறாக, தமது 30.7.1801 தேதியிட்ட நீண்ட கடிதத்தில் கும்பெனி நலன்களுக்கும் மக்களது சுபிட்சத்திற்கும் முரணான வகையில் கலெக்டர் செயல்படுவதாகவும், பகிரங்க விசாரணை ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால், அதற்கான சான்றுகளை ஆஜர்படுத்த சித்தமாக இருப்பதாகத்தான் பிரதானி மருது சேர்வைக்காரர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயரை யாரும் முட்டாளாக்க முயலவில்லை. ஆனால் பதினெட்டாவது நூற்றாண்டில் அவர்கள்தான் நம்மவர்களை முட்டாளாக்கிய நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன.

ஆதாரம் இல்லாத ஆசிரியரது கற்பனைகள்

பக்கம்: 48

"மன்னர் சசிவர்ணத் தேவர் காலத்திற்கு முன்னரே சிவகங்கை சிறு ஊராக இருந்தது.'

பக்கம்: 52

"சசிவர்ணத் தேவருக்கு அகிலாண்டேசுவரி நாச்சியார் மணம் முடிக்கப்பட்டது. இவர் மூலம் மகப்பேறு இல்லையென்பதால் இரண்டாவது மனைவி மனம் முடிக்கப் பெற்று இருக்கலாம்.'

பக்கம்: 82

"..எனவே பழம் பெருமை வாய்ந்த சிறுவயல் என்னும் ஊரை பெரிய மருது பாண்டியர்களுக்கே அளித்து அவரை அதன் தலைவராக்கினார்.'

பக்கம்: 130

".... கர்ப்பிணியாக இருந்தும் களம் நோக்கிச் செல்ல இருந்தார். உரிய நேரத்தில் மருது பாண்டியர்கள் வந்து தடுத்ததால் கர்ப்பிணியான அவரைக் காப்பாற்ற முடிந்தது.'

பக்கம்: 137

"கெளரவம் பாராது மருது பாண்டியர் நாட்டு நிர்வாகத்தை ஒட்ட

தனியாரிடம் கூட தயங்காது கடன் வாங்கினார்.'

பக்கம்: 162

"படமாத்துார் பழம் பெருமை உள்ள ஊர்தான். இருப்பினும், அவ்வூர்ப் பாளையக்காரர் நாலுகோட்டை அரச குடும்பத்தினருக்கு உறவினர் அல்லர்."

பக்கம்: 642

"அக்டோபர் 24 சனிக்கிழமை விடிந்தது. சனிப்பிணம் தனி போகாது என்னும் பழமொழி அக்கினியூக்கு தெரிந்து இருக்குமோ என்னவோ! போராளிகள் பல நூறு பேரை ஒரே நாளில் தூக்கில் போட்டார்."

பக்கம்: 458

"... தமது சமூகத்தவர் அல்லாதவர்களால் அகமுடைய சமூகத்தவர் ஒருவரை ஏன் மரபுக்கு மாறாக அறிவிக்க வேண்டும். சிவகங்கையை அதற்கு முன் ஆட்சி புரிந்த சமூகத்தினை மருது பாண்டியர் சேர்ந்தவரல்லர் என்பதற்காக, தான் தொல்லை கொடுத்ததை எண்ணி வருந்தி. அதற்குக் கழுவாய் தேட மயிலப்பன் மூலம் அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தார்."

பக்கம்: 495

'... முத்துராமலிங்க சேதுபதிக்கு ஆதரவாக கிளர்ச்சி நடத்தி வந்த போராளித் தலைவர் மயிலப்பன் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்பி அவர் அடைக்கலம் தேடிச் சென்றது எங்கு தெரியுமா? சிவகங்கைக்குத்தான்.'

பக்கம்: 589

ராஜ சூரிய சேதுபதிக்கு சந்ததி இல்லாமையால் சந்திரப்ப சேர்வைக்காரர் சமஸ்தானத்தை நடத்தி வந்தார். கிழவன் சேதுபதி தேர்வாகி கி.பி.1674-ல் அவர் முடி சூடும்வரை சந்திரப்ப சேர்வைக்காரரே, முடிசூடா மன்னராக சேதுநாட்டின் ஆட்சியை நடத்தி வந்தார்.'

பக்கம்: 592

"...புதுக்கோட்டைச் சீமையில் தொண்டமான்கள் பிரபலம் அடையுமுன்பே, பல்லவராயர்கள் என்னும் சேர்வை அரச பரம்பரையினர். சீரும் சிறப்புமாக நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்ததும் வரலாற்றில் பதிவாகி உள்ள செய்திகள்.'

பக்கம்: 626

“... களத்தில் எதிரிகள் இல்லாமல், வெற்றுக்கோட்டையைப் பிடித்துவிட்டு, அக்னியூ வெற்றி வெற்றி என்று வீராப்புக் கொண்டது வீண் பெருமையாகக் கருதப்பட்டது.'
... ஒரு சுடுகுஞ்சுகூட காளையார் கோவிலில் இல்லாமல் ஊரைவிட்டே முன்பு சென்று விட்டனர். 70,000-க்கு குறையாத படை வீரர்களைக் கொண்ட மருதிருவரிடம் எவ்வளவு பீரங்கிகளும் பிற ஆயுதங்களும் இருந்திருக்கும்?"

பக்கம்: 643

'துரைச்சாமி தவிர அவரது குடும்பத்தின் ஆடவர்கள் தூக்கிலிடப்பட்டனர்."
'இராமநாதபுரம் புரட்சி அரசின் சேதுபதியாக்கப்பட்ட முத்துக் கருப்பத் தேவர் உட்பட."
'24.10.1801 தேதி தூக்கிலிடப்பட்ட மருதிருவரின் உடல்கள் மூன்று நாட்கள் கழித்து 27.10.1801-ம் தேதி அன்று காளையார் கோவிலில் அடக்கம் செய்ய நேர்ந்தது எனத் தீர்மானிக்க முடிகிறது.'

பக்கம் 432

'கிழவன்.சேதுபதி நிறுவிய இராமநாதபுரம் சூரங்கோட்டை இராணுவப் பயிற்சி சாலையில் பயின்று வெளிவந்த மருது பாண்டியர் அவர் நினைவாக, கிழவன் சேதுபதி சிலையை காளையார் கோவிலில் ஆலயத்தில் நிறுவினார்."

பக்கம்: 648

"வேங்கன் பெரிய உடையாத் தேவர் மட்டும் பெங்கோலோன என்னுமிடத்திற்கு நாடு கடத்தப்பட்டார்.'

பக்கம்: 594

"கெளரி வல்லபரின் ஆட்கள் அங்கு அப்படியொரு பிரச்சாரத்தை பரப்பியிருந்தனர். பாஞ்சாலங்குறிச்சிப் போராளிகள் இங்கு வந்ததால் இனி இங்கு உணவு கிடைப்பது சிரமமாகிவிடும் என்று திண்ணைப் பிரச்சாரம் நடத்தினார்கள்."

பக்கம்: 485 - 86

"கி.பி.1799 ஏப்ரலில், மே திங்களில் முதுகுளத்துர் பகுதியில் நடைபெற்ற கிளர்ச்சிகளின் காரணமாக மயிலப்பன் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் சிறையில் இருந்து தப்பி சிவகங்கைக்கு வந்து அடைக்கலமாகிறார்."

பக்கம்: 486

"அதன்பின் மயிலப்பன் தனிமைச் சிறையில் உள்ள சேதுபதியைச் சென்று சந்தித்துப் பேசுகிறார். தன்னைப் பிடிக்க சின்னப்பாண்டியரை ஆங்கிலேயர் பிடிக்க கோரியும் பிடித்துக் கொடுக்கிறது. ஆகியவற்றை மயிலப்பன் சேதுபதியிடம் தெரிவிக்க, தாம் மருது பாண்டியர்களை தவறாகப் புரிந்து கொண்டதை எண்ணி சேதுபதி வருந்தினார்."

  1. Subramaniyam & Venkatraman - Tamil Epigraphy a survey (1980) P: 18
  2. Rajayyan.Dr.K. - History of Madura (1974) P: 277
  3. Revenue Consultations. Vol.30, P: 247
  4. Military Consultations Vol.285(A) / 11.6.1801 Page: 5051-52
  5. பாளையப்பட்டு வமிசாவழி (தொகுதி II) பக்: 24, 26, 28, 54, 102, 182
  6. Rajayyan. Dr. K. – History of Madura (1974) P: 261 Military Country Correspondence Vol.2:1. 16.12.1772. P: 202
  7. Rajayyan. Dr.K. Selections from the History of Tamil Nadu (1978) P: 278
  8. Political consultations. Vol. 1(A) 11.6.1800. P: 17-20
  9. Ibid. Vol. 2(A) 21.9.1800, P: 562
  10. மறவர் சீமை ஒலைச் சாசனங்கள் (கல்வெட்டு இதழ் எண்:18) - திரு. வெ.வேதாசலம்
  11. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. செ.ராசு 1985-ல் படியெடுத்தது