சீர்மிகு சிவகங்கைச் சீமை/மீண்டும் தன்னரசு நிலை

6. மீண்டும் தன்னரசு நிலை

ராணி வேலு நாச்சியார் தமது படைகளுடன் மைசூர் மன்னரது உதவிப் படைகளுடனும் சிவகங்கை வருகின்ற செய்தியைக் கேட்ட மக்களது உள்ளங்களில் ஆர்வம் நிறைந்தது. ஆவேசம் மிகுந்தது. சிவகங்கை நகரின் மேற்கே மேலுர் சாலையில் அவர்கள் திரளாகக் கூடத் தொடங்கினர். சிவகெங்கை அரண்மனையிலும் பேட்டையிலும் பணியில் இருந்த நவாப்பின் சேவகர்களுக்கு இந்த செய்தி கிடைத்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். ஒருவாறு தங்களை ஆயத்தம் செய்து கொண்டு ராணியாரது படைகளை எதிர்பார்த்து கோட்டை வாசலில் குழுமி இருந்தனர். திரளான மக்கள் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு உத்திரவு இட்டனர். ஆனால் மக்கள் அவர்களது ஆணைக்குச் செவி சாய்க்காமல், மேற்கே காணப்படும் சிறிய புழுதிக் கூட்டம் பெரிதாகி வருவதையே ஆவலுடன் நோக்கிக் கொண்டு இருந்தனர்.

இரண்டு நாழிகை நேரத்தில் பெரும் ஆரவாரத்துடன் ராணி வேலுநாச்சியார், குதிரை அணிகள் புடை சூழ சிவகெங்கை நகர் எல்லையை அடைந்தார். கட்டுக்கடங்காமல் பாய்ந்துவரும் காட்டாறு போல மக்களது மகிழ்ச்சி உச்ச நிலையை அடைந்தது. நவாப்பின் சிப்பாய்கள் மீது ராணியாரது அணிகள் பாய்ந்தன. ராணியாரது குதிரைப்படையும் அவர்களைத் தாக்க முனைந்தது. சிப்பாய்கள் அங்கும் மிங்கும் மிரண்டு ஓடினர். அரசியாரும், இளவரசியாரும் மக்களது வாழ்த்தொலிகளுக்கிடையில் சிவகெங்கை கோட்டைக்கு வந்துசேர்ந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அரண்மனைக்குள் நுழைந்த ராணி வேலுநாச்சியார் உணர்ச்சிவசப்பட்டு ஒருசில நொடிகள் அப்படியே நின்றார். தமது அன்புக்கணவருடன் ஆண்டு பலவற்றைக் கழித்த இடமல்லவா அது!

இந்த அழுத்தமான நினைவுத் திரட்டுகளினால் தானோ என்னவோ ராணி வேலுநாச்சியார், சிவகங்கை அரண்மனையில் தொடர்ந்து வாழாமல், அரண்மனை சிறுவயலில் உள்ள தமது மூதாதையரது மாளிகையில் பெரும்பாலும் வாழ்ந்து வந்தார் எனத் தெரிய வருகிறது.

ஆயுத பலத்தின் மூலம் மக்களை அடக்கி ஆளமுடியும் என்ற நவாப்பினது அரசியல் கொள்கைக்கு கிடைத்த மரண அடி இது. சிவகங்கைச் சீமையை ராணி வேலுநாச்சியார் மீட்டிய பொழுது மைசூர் மன்னர் ஹைதர் அலி, நவாப்பையும் பரங்கியரையும் அழித்து ஒழிக்கும் திட்டத்தை அமல்படுத்தும் நிலையில் இருந்ததால் சிவகங்கை அரசை வேறு வழியில்லாமல் அங்கீகாரம் செய்தார். வீரத்தியாகி முத்துவடுகநாதர் நினைவுகள் அவரது நெஞ்சத்தை அழுத்தின. என்றாலும் மக்களது ஆரவாரம் சிவகெங்கை சீமைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை அவருக்கு நினைவூட்டியது. மிகவும் எளிமையான விழாவில் தனது மகள் இளவரசி வெள்ளைச்சியை சிவகங்கை அரசின் அரியணையில் அமரச் செய்து, முடிசூட்டியதுடன் பிரதானி தாண்டவராய பிள்ளையின் மறைவுக்கு பின்னர் அரசியாரையும், இளவரசியையும் அக்கரையுடன் காத்து உதவி வந்த பணியாளர்களான மருது சகோதரர்களை சீமையின் பிரதானிகளாக நியமனம் செய்து அறிவிப்பு செய்தார்.[1] ஸ்ரீரங்க பட்டினத்திற்கும், திண்டுக்கல்லுக்கும் ஓலைகள் அனுப்பி வைத்தார். காலத்தால் செய்த நன்றிக்கு காலமெல்லாம் சிவகங்கைச் சீமை மக்களும் மைசூர் ஐதர்அலிக்கு நன்றிக்கடப்பாடு உடையவராக இருப்பர் என்பதை அதில் தெரிவித்து இருந்தார். பக்கத்து நாட்டு தொண்டமான் பகைமையுடன் நடந்து கொள்ளும் பொழுது, பல நூறு மைல் தொலைவில் உள்ள கன்னட நாட்டு மன்னர் ஐதர் அலி எவ்வளவு பெரிய உதவியை செய்துள்ளார் எண்ணிப் பார்க்கவே அவரால் இயலவில்லை!

நாட்கள் மெதுவாக நழுவிக் கொண்டிருந்தன. சிவகங்கை சீமையில் மீண்டும் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டது. மக்கள் அச்சமும் தயக்கமும் இன்றி தங்களது தொழில்களைத் தொடர்ந்தனர். திருநெல்வேலிச் சீமையில் இருந்து துணிமணிகளும் மதுரையில் இருந்து தட்டு முட்டு சாமான்களும், தஞ்சையில் இருந்து நெல் முதலான தானியங்களும் கொண்டு வரப்பட்டு சிவகங்கை பேட்டையில் நிறைந்து இருந்தன. காளைநாதர் கோயிலிலும், திருக்கோலக்குடியிலும் நிகழ்ந்த வசந்த விழாக்களில் மக்கள் பெரும் திரளாக கூடினர். சிராவயலிலும், அரளிப் பாறையிலும் மஞ்சு விரட்டு விழாக்களில் காளைகளை அடக்க இளைஞர்கள் கூட்டம் முனைப்புடன் முன் வந்தனர். சீதளியிலும் சேவல் பட்டியிலும் நடைபெற்ற பூச்சொரிதல் விழாக்களில் பூவையர் பூத்தட்டுகளை தாங்கி பொலிவுடன் சென்றனர்.

இளவரசி வெள்ளைச்சியின் பிரதிநிதியாக ராணி வேலுநாச்சியார் ஆட்சியாளராக அமைந்து இருந்த பொழுதிலும், சீமையின் நிர்வாக இயக்கத்திற்கு பிரதானிகள் உதவி வந்தனர். இளவரசி வெள்ளைச்சி திருமணம் ஆகாத கன்னிகையாகவும், ராணி வேலு நாச்சியார் கணவரை இழந்த கைம்பெண்ணாகவும் இருந்த காரணத்தினால் அவர்கள் இருவரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துப் பணிகளிலும் நேரடியாக ஈடுபட இயலாத நிலை. அத்துடன் அன்றைய சமுதாய அமைப்பில், இத்தகைய உயர்குலப் பெண்கள். தங்களது தனிமை நிலையைத் தவிர்த்து பொது வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுவது விரும்பத் தகாததாகவும் இருந்தது. பெண் உரிமை என்ற விழிப்புணர்வுடன் பாரம்பரியமாக வந்த மரபுகள் மீறுவதையும் ஏற்று சகித்துக் கொள்ளாத சமூக நிலை. இத்தகைய இறுக்கமான அகச்சூழலில் அரசியலை பிரதானிகள் மூலமாக அரசியார் சிறப்பாக நடத்தி வந்து இருப்பது அருமையிலும் அருமை.

இயல்பான சிந்தனைகளுக்கு எதிரான புரட்சிகரமான செயல்பாடுகளையும் போக்கினையும் சின்னமருது சேர்வைக்காரர் கொண்டிருந்தார். மக்களது பாராட்டுதலுக்கு உரிய செயல்பாடுகள் அனைத்தையுமே, ராணிவேலுநாச்சியார் ஒப்புதல் வழங்க வேண்டுமென அவர் எதிர்பார்த்தார். குறிப்பாக பக்கத்து நாடுகளான புதுக்கோட்டை தொண்டமான், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆகியோரது அரசியல் தொடர்பை பாதிக்கும் எல்லை தகராறுகளை ராணியார் விரும்பவில்லை. சின்ன மருது சேர்வைக்காரரோ அவைகளை மானப் பிரச்சனையாக மனதில் கொண்டு, நான்கு வகையான உபாயங்களில் இறுதியான தண்டத்தை பயன்படுத்த முயன்றார். இந்த கொள்கை வேறுபாடுகளினால் நிர்வாக இயக்கத்தில் ராணியாருக்கும் பிரதானிக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

விரைவில் அது வளர்ந்து ஒன்றுபட்டு பரம்பரை ராஜ விசுவாசம், பகட்டான செயல் திறன் இவைகளை பற்றி நிற்கும் மக்கள் அனைவருக்கும், ராணியாரது விசுவாசமும், பிரதானிகள் சேவையும் வேண்டும். ஆனால் மக்களது மன நிலை மாற்றம் பெறாமல் இருந்தால் தானே! நாளடைவில் அவர்கள் இரு பகுதிகளாகப் பிரிந்து, ஒரு பிரிவினர் ராணியாரையும் இன்னொரு பிரிவினர் பிரதானியாரையும் சார்ந்து இருந்தனர். இத்தகைய நிலையில் தான், மருது சகோதரர்களை மட்டும் குறுகிய வட்டத்தில் நின்று போற்றுகின்ற பிரிவினர், கற்பனைச் சரடு ஒன்றினைத் திரித்து உலாவ விட்டனர். விதவை ராணி வேலு நாச்சியாரும், பிரதானி பெரிய மருதுவும் திருமணம் செய்து கொண்டனர் என்பது. ராணி வேலு நாச்சியாரின் திருமணம் மூலம் சிவகங்கை சீமை மருது சேர்வைக்காரர்களது சொந்த சொத்தாகி விட்டது என்பதுபோல, தெரிவித்துக்கொள்ள இந்த கற்பனை புனையப்பட்டது. அத்துடன்

ராணியாரது ஒப்புதல் இல்லாமல் பிரதானிகள் செய்தவை அனைத்தையும் நியாயப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அந்தக் கட்டுக்கதையில் ஒட்டி இருந்தது. நாட்டுத் தலைவர்கள் நல்ல காரியங்களைச் செய்தார்கள் என்று கூறுவது, அந்தத் தலைவர்களுக்கு பெருமையும், புகழையும் சேர்ப்பது ஆகும். இழிந்த செயல்களை இயற்றினார்கள் என்றால் பழியும் பாதகமும்தான் அவர்களுக்கு ஏற்படும். இந்த உண்மைகளை உணராமல் இந்தக் கற்பனைத் திருமணம் எத்தகைய இழிவானது என்பதை சரித்திர புரட்டர்கள் சிந்திக்கவே இல்லை.

அன்று மட்டுமல்ல. இன்றும் ஒரு நூலாசிரியர், நூலாசிரியர்களுக்கு உள்ள பொறுப்புக்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தமது அழுகிய கற்பனையில் கண்ட கனவுக் காட்சியாக, மொட்டைத் தலையுடன் முழங்காலை முடிச்சிடும் பணியைச் செய்துள்ளார். கைம்மை நிலையில் அந்தபுரத்திற்குள் இருந்த கற்புக்கரசி வேலு நாச்சியாருக்கும், ஐந்து மனைவிகளும் எட்டுக் குழந்தைகளும் கொண்ட குடும்பத் தலைவரும், அரிய ராஜ விசுவாசம் கொண்டவருமான பெரிய மருது சேர்வைக்காரருக்கும், புதுமையான திருமணம் ஒன்றைச் செய்து வைத்து அல்ல - எழுதிப் பார்த்து மகிழ்ச்சியுற்று இருக்கிறார், எவ்வித ஆதாரமும் இன்றி.[2]

இந்த திருமணம் உடல் இன்பத்துக்கான திருமணம் அல்லவென்றும் அற்புத ராஜதந்திரத்துடன் கூடிய அரசியல் திருமணம் என்றும் அவர் குறிப்பிட்டு இருப்பது நகைப்புக்குரியது. இந்தப் பெரும் பழியை நேரடியாகச் சுமத்துவதற்குப் பயந்து அந்த ஆசிரியர் மதுரைச் சீமை வரலாற்று ஆசிரியரது 'பூடகமான ஆங்கிலச் சொல்லையும், அந்தச் சொல்லுக்கு, அவருடைய கற்பனைக்கு ஏற்ற பொருள் விரித்து ஆங்கில அகராதிகளையும் துணைக்கு கொண்டிருப்பது பரிதாபத்துக்குரியதாக உள்ளது.

ராணி வேலுநாச்சியாரது கவலை

காளையார் கோவில் போரின் முடிவில் தந்தையை இழந்து தாயார் வேலு நாச்சியாருடன் விருபாட்சி கோட்டைக்குச் சிறுமியாகச் சென்ற வெள்ளச்சி அழகும் பருவமும் ஒருங்கே திரண்ட இளவரசியாக சிவகங்கை வந்தாள். தியாகியான மன்னர் முத்து வடுகநாதத் தேவரது சிவகங்கை சீமை அரியணையில் அமர்த்தப்பட்டு அவளுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது அல்லவா? இந்த அரிய காட்சியைக் கண்டுகளித்த அவளது தாயார் ராணி வேலுநாச்சியாரது இதயம் மகிழ்ச்சியால் பூரித்தது.

அதே நேரத்தில் தனது பெண்ணுக்கு ஏற்ற கணவனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலையும் அவரைப் பற்றிக் கொண்டது.

நாட்கள் நழுவிச் சென்றன. இளவரசியின் பிரதிநிதியாக சீமை நிர்வாகத்தை ராணி வேலு நாச்சியார் கவனித்து வந்தார். இந்த அரசியல் பாரத்தைவிட அவருக்கு தனது பெண்ணின் திருமணம் பற்றிய கவலையே மிகுதியான அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தது. பெண்ணைப் பெற்ற எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும் இயல்பான கவலைதான். ஆனால் ராணிநாச்சியாருக்கு தனது மகளின் திருமணத்தை தாயும் தந்தையுமாகவல்லவா இருந்து நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

எங்கே மாப்பிள்ளை தேடுவது? பக்கத்தில் உள்ள மாப்பிள்ளை படைமாத்தூர் கெளரிவல்லபர். பையன் நல்ல மாதிரி. ஆனால் படைமாத்தாரில் அவருக்கு சொத்துக்கள் குறைவு. உறவினர்களில் விசேஷமான பெரியவர்களும் இல்லை. மன்னர் முத்து வடுகநாதர் கூட ஒருமுறை - காளையார் கோவில் போருக்கு முன்னர் படை மாத்தூரில் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்தார். அதுமுதல் சிறுவனாக இருந்த கெளரி வல்லபன், சிவகங்கை அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தான். காரணம் பாட்டனார் நாலு கோட்டை பெரிய உடையாத் தேவர் கிளையில் சரியான பையன்கள் வேறு யாரும் இல்லை. அதே போல் அவரது சிறிய தாயார் உடைகுளம் பூதக்காள்கிளையிலும் சம்பந்தத்திற்கு தகுதியானவர்கள் இல்லை. தாயார் இராமநாதபுரம் அகிலாண்ட ஈசுவரி வழியில் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிதான் உள்ளார். ஏற்கனவே விட்டுப்போன பெரிய மறவர் மூலம் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் தான்! ஆனால் அவருக்கு அண்மையில் திருமணமாகிவிட்டது. நமது செம்பி நாட்டுக் கிளை மறவர்கள் பலதாரமணம் செய்து கொள்வதில் சமூகத்தடைகள் இல்லைதான். சிவகங்கை - இராமநாதபுரம் இரு அரசுகளின் சம்பந்தமும் பொருத்தமாக இருக்கும். என்றாலும். தமக்கு இருப்பது கருவேப்பிலைக் கன்று போல ஒரே பெண் பிள்ளை. அவளை எப்படி இரண்டாம் தாரமாக இராமநாதபுரம் மன்னருக்கு திருமணம் செய்து வைப்பது? அது சரியாக இருக்குமா? தனது மகள் மன்னரது மனைவி - மகாராணி - ஆனால்...?

இப்படி குழப்பமான சிந்தனைகளில் வேலுநாச்சியாரது பொழுது கழிந்து கொண்டிருந்தது. இறுதியாக ராணியார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு முடிவிற்கு வந்தார். இளவரசி வெள்ளச்சியை படைமாத்துர் கெளரிவல்லபத் தேவருக்கு திருமணம் செய்து கொடுப்பது. அதற்கு முன்னால் சிவகங்கை மக்களும் அரண்மனை உறவினர்களும் சிவகங்கை மன்னரது வாரிசு கெளரிவல்லபத் தேவர் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் அவரை அரசு விழா ஒன்றில் அறிமுகப்படுத்தி வைப்பது

என்பது ராணியார் முடிவு. அதனையொட்டி காளையார் கோவிலில் படைமாத்தார் கெளரிவல்லப ஒய்யாத் தேவருக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது. அனேகமாக நாட்டுத் தலைவர்கள் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். சிறப்பான வழிபாடுகள் முடிந்தவுடன் கோயில் மண்டபத்தில் இடப்பட்டிருந்த இருக்கையில் இளவரசர் கெளரி வல்லபரை இருக்கச் செய்து பிரதானிகளும் நாட்டுத் தலைவர்களும் மரியாதை செலுத்தி இளவரசரை வணங்கினர்.[3]

சில மாதங்கள் சென்றன. சிவகங்கைப் பிரதானிகளுக்கு இளவரசர் கெளரி வல்லபரை பிடிக்கவில்லை. இதற்கான காரணங்களைத் தெரிவிக்கும் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. கள ஆய்வின்பொழுது கிடைத்த ஒரே செய்தி, பிரதானி மருது சேர்வைக்காரர்களது மக்கள் படைமாத்துார் கெளரி வல்லபத் தேவரது அனுமதி இல்லாமலும், அவரை அழைத்துச் செல்லாமலும் படைமாத்துர் காட்டில் அவர்கள் வேட்டையாடியதையொட்டி எழுந்த விரோத மனப்பான்மையே அவர்களது விரோதப் போக்கிற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது. பிந்தைய நிகழ்வுகளுக்கு இதுவே சரியான காரணமாக அமைதல் வேண்டும்.

ஆனால், செல்வ ரகுநாதன் கோட்டை ஆவணங்கள் வேறு விதமான செய்திகளைச் சொல்லுகின்றன.[4] நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது மூன்றாவது மனைவி கோவானுர் நாச்சியார் மூலம் பிறந்த பூவுலகுத் தேவர் அரண்மனை யானை ஒன்றின் மீது அமர்ந்து சிவகங்கையில் இருந்து நாலு கோட்டைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார். ஏற்கனவே பூவுலகுத் தேவர் மீது பொறாமையும் குரோதமும் கொண்டிருந்த சிவகங்கை அரண்மனைப் பணியாளர் அடைப்பம் வெள்ளைக்காலுடையார், இந்தக் காட்சியைக் காணச் சகிக்காதவராக ஆத்திரமடைந்து, நாட்டுத் துப்பாக்கியால் குறிபார்த்து பூவுலகுத் தேவரைச்சுட்டுக் கொன்று விட்டார். அப்பொழுது சிவகங்கை மன்னரும் பூவுலகுத் தேவரது ஒன்றுவிட்ட தமையனாருமான சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர், உடல் நலிவுற்று இருந்தார். தம்பி பூவுலகுத் தேவரின் படுகொலை பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதில் தாமதமாகி விட்டது.

நாலுகோட்டைப் பாளையக்காரரது பங்காளியும், படைமாத்துர் பாளையக்காரருமான ஒய்யத் தேவர், நாலுகோட்டைப் பாளையத்தின் முதல் பாளையக்காரர் பெரிய உடையாத்தேவரது சகோதரர் மதியார் அழகத் தேவர். படை மாத்தூர் பாளையத்தின் தலைவர். இவரது மகன் ஒய்யாத் தேவர் பூவுலகுத் தேவரது படுகொலையைச் சகித்துக் கொள்ள

இயலாதவராக, நாலுகோட்டை பாளையக்காரர் குடும்பத்துக்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாகக் கருதி, துடிதுடித்தார். உடனடியாகத் தமது ஏவலர்களை அனுப்பி அடைப்பம் வெள்ளைக்காலுடையாரைப் பிடித்து வருமாறு செய்தார். அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்றார். பெரும்பாலும் இந்த நிகழ்வுகள் சசிவர்ணத் தேவரது ஆட்சிக் காலத்தின் இறுதியில் நிகழ்ந்து இருக்க வேண்டும். வெள்ளைக்காலுடையாரது மக்கள்தான் மருது சகோதரர்கள் என்பதை,

“அடப்ப பிடி வெள்ளைக்காலுடையாரீன்ற
அண்ணன் தம்பி யிருமருதும்..."

என்ற “சிவகங்கைச் சீமை கும்மி” தொடர்கள் (பக்கம் 10) உறுதி செய்கின்றன. படைமாத்தூர் ஒய்யத் தேவரது இரண்டாவது மகன் கெளரி வல்லபத் தேவரின் பிரதானி மருது சேர்வைக்காரர்களுக்கும் கெளரி வல்லபத் தேவருக்கும் இடையில் பகைமை நிலவியதற்கு இந்தப் பாரம்பரிய பழிவாங்கும் பகைமை உணர்வு ஒன்றே போதுமான காரணம் தான்.

நாளடைவில் ராணி வேலுநாச்சியார் தமது மகளை படைமாத்துார் கெளரி வல்லபருக்கு திருமணம் செய்து கொடுப்பது பற்றி பிரதானிகளுடன் ஆலோசனைகலந்த பொழுது, பிரதானிகள் இருவரும் இந்த சம்பந்தத்தை ஆட்சேபித்தனர். சிவகங்கைச் சீமை மன்னரது மருமகனாவதற்கு முற்றிலும் தகுதி இல்லாதவர். முரட்டுத்தனமும், அரசகுடும்பத்திற்குரிய மனோபாவமும் அற்றவர் கெளரி வல்லபர் என்பது பிரதானிகளது முடிவு. மறுப்பு. தமது மகளது திருமணத்திற்கு இப்படியொரு ஆட்சேபணை வரக்கூடும் என்பதை ராணி வேலுநாச்சியார் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. பிரதானிகளது ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திருமணத்தை எப்படி முடிப்பது...? மிகுந்த மன வேதனையால் ராணி தத்தளித்தார்.

சில மாதங்கள் சென்றன. ஒரு நாள் கெளரி வல்லப தேவர் பிரதானிகளால் காளையார் கோவிலில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி ராணியாருக்கு கிடைத்தது. இது பற்றி பிரதானிகளிடம் கேட்டபொழுது, கெளரி வல்லபர் சிறையில் வைக்கப்படவில்லை என்றும், சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றி மீண்டும் சிவகங்கை இராமநாதபுரம் கொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட, சேது நாட்டை அமைக்க முயலும் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னருடன் கெளரி வல்லபர் ஓலைத் தொடர்பு கொண்டு இருப்பதாகவும், இது சம்பந்தமான விசாரணைக்காக அவரை காளையார் கோவிலில் தனிமைப்படுத்தி வைத்து இருப்பதாக தெரிவித்து ராணியாரது குற்றச்சாட்டை மழுப்பி விட்டனர். கெளரி வல்லபர் பிரதானிகளுக்கிடையில் ஏற்பட்ட இந்தப் பகைமைக்குரிய காரணம் என்ன என்பது அறியத் தக்கதான ஆவணம் எதுவும் கிடைக்கவில்லை.

வெள்ளச்சி நாச்சியாரது திருமணம் பற்றி மீண்டும் ராணியார் பிரதானிகளிடம் குறிப்பிட்ட பொழுது, தக்க மாப்பிள்ளை ஒருவரை அவர்கள் தேடி வருவதாகவும் விரைவில் ராணியாருக்கு முடிவான தகவல் அளிப்பதாகவும் தெரிவித்தனர். ராணியார் மேலும் கவலைப்பட்டார். ஆனால், அவரால் பிரதானிகளை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, சிவகங்கைச் சீமையின் நிலக்கிழார்களில் ஒருவரான சக்கந்தி தேவரது மகன் வேங்கன் பெரிய உடையாத் தேவர். இளவரசிக்கு ஏற்ற மாப்பிள்ளையென்றும், படை மாத்துார் போன்று நாலு கோட்டைக் குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர் இல்லையென்றாலும், செம்பிநாட்டுக் கிளையைச் சேர்ந்த மறவர் என்பதையும் தெரிவித்தனர். மேலும் தாமதப்படுத்துவதினால் எந்த மாற்றமும் ஏற்படும் சூழ்நிலை இல்லை என்பதை அரசியார் உணர்ந்தார். சக்கந்தி சம்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். அவருக்கு மிகப் பெரிய கவலையளித்து வந்த இளவரசியார் திருமணம் சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவருடன் நிகழ்த்தப்பட்டது.[5]

திருமணம் என்று குறிப்பிட்டாலே இரு தரப்பில் யாராவது ஒரு தரப்பினருக்கு உள்ளக் குமுறல்கள் இருப்பது இயல்பு. இந்தத் திருமணம் ராணி வேலு நாச்சியாரது மனக் கவலையின் ஒரு பகுதிக்கு தீர்வாக அமைந்தாலும், அவர் விரும்பியபடி படை மாத்துாராருடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள இயலவில்லை! இது போல இன்னும் அவரது எண்ணங்களுக்கு எதிராக என்னவெல்லாம் நடக்குமோ என்பது ராணியாருக்கு ஏற்பட்டகவலை. அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் அதனை உறுதிப்படுத்தின.


  1. Correspondence on the permanent settlement of Southern pottams and Ramnad and Sivagangai Zamindaris. P: 28
  2. கி. மருது பாண்டிய மன்னர்கள் (1994) பக்; 124-125
  3. Military Consultations - Vol. 285/28.6.1801, P: 38-39
  4. செல்வரகுநாதன் கோட்டை ஆவணங்கள், சென்னை.
  5. கமால் Dr. S.M. மாவீரன் மருதுபாண்டியர் (1989) பக்: 12