சீர்மிகு சிவகங்கைச் சீமை/விருபாட்சியில் வேலு நாச்சியார்

5. விருபாட்சியில்
வேலுநாச்சியார்

திண்டுக்கல் கோட்டைக்கு வடகிழக்கே பதினெட்டுக் கல் தொலைவில் அமைந்து இருக்கிறது விருபாட்சி என்ற சிற்றுார். திண்டுக்கல் சீமையின் பிரதானமான இருபது பாளையங்களில் இந்த பாளையமும் ஒன்று. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர பேரரசர்களாக இருந்த, 'விருபாட்ச' என்ற சிறப்பு பெற்ற மன்னர்களது நினைவாக எழுந்த ஊர். விஜய நகரப் பிரதிநிதியாக மகாமண்டலேசுவரராக, திருச்சிராப்பள்ளியில் ஆட்சி செய்த மல்லிகார்ஜுனர், மதுரைப் படையெடுப்பில் அவருக்குத் துணை புரிந்த தொட்டிய நாயக்கரைப் பெருமைப்படுத்த அவரால் தோற்று விக்கப்பட்டது என்றும், இன்னொரு செய்திப்படி விசுநாத நாயக்கரால் வழங்கப்பட்டது இந்தப் பாளையம் எனவும் மதுரை கெஜட்டிரில் வரையப்பட்டுள்ளது.[1] பி.எஸ். வார்டு என்பவரது "மதுரை திண்டுக்கல் நினைவுகள்" என்ற நூலில் இந்தப் பாளையம் சின்னப்ப நாயக்கர் என்ற கம்பளத்தாரரால் நிறுவப்பட்டது என்றும், இவர்தமது தீரச்செயல்களால் மதுரை நாயக்க மன்னருக்கு பல போர்களில் அரிய உதவி செய்த காரணத்தினால் 'திருமலை' என்ற விருது வழங்கப்பட்டது என்றும் வரைந்துள்ளார். அத்துடன் மதுரைக் கோட்டையின் எழுபத்து இரண்டு கொத்தளங்களில் திருமஞ்சன வாசல் என்ற கொத்தளத்தின் பாதுகாப்பு பொறுப்பு இந்த பாளையக்காரரிடம் இருந்தது எனத் தெரிய வருகிறது. இந்தப் பாளையம் மைசூர் மன்னரது மேலாண்மைக்கு உட்பட்ட பிறகு, அவரது பாளையத்தின் கப்பத்தினை உயர்த்திய ஹைதர் அலியின் ஆணையை எதிர்த்து தள்ளுபடி தொகையைப் பெற்றார்.[2] அப்பொழுது (கி.பி.1754) இருந்தவர் திருமலை கோதர சின்னப்ப நாயக்கர் என்ற தீரர். குடமுருட்டி ஆற்றின் கரையில் ஒரு சிறிய மண்கோட்டை வளமான விளைநிலங்கள்: தமிழக மறவர்களைப் போல குடிப் பெருமையும் மான உணர்வும் மிக்க கம்பளத்து நாயக்கர்களான குடி மக்களையும் அவர்களது தலைவரையும் கொண்டது. இந்த சிறிய ஊரை ராணிவேலு நாச்சியாரும், அவரது குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற பொருத்தமான ஊராக பிரதானி தாண்டவராய பிள்ளை தேர்வு செய்தார்.

காளையார் கோவில் போரைப் பற்றிக் கேள்வியுற்ற அந்த ஊர் பாளையக்காரர் மிகுந்த அனுதாபத்துடன் சிவகங்கை ராணிக்கும் பிரதானிக்கும் தக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், திண்டுக்கல் கோட்டைத் தளபதியும், மைசூர் ஐதர் அலியின் மைத்துனருமான சையத் சாகிபுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மறவர் சீமைகளில் இருந்து ஆற்காட்டு நவாப்பை துரத்தியடிப்பதற்கு படை உதவி கோரிய ராணியாரின் வேண்டுதலையும், சுல்தான் ஐதர் அலிக்கு பரிந்துரையுடன் அனுப்பி வைக்குமாறும் செய்தார்.

சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளை ராணிவேலு நாச்சியாருக்காக

சுல்தான் ஐதர்அலி பகதூர் அவர்களுக்கு 08.12.1772 தேதியிட்டு அனுப்பிய கடிதம்,[3]

".... ஆற்காட்டு நவாப், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரு :தன்னரசுகளையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்தி வருகிறார். :அங்கிருந்து தப்பி வந்த நான் கள்ளர் தலைவர்களுடன் காடுகளில் :தங்கி கிளர்ச்சியை தொடர்ந்து வருகிறேன். இந்த முயற்சியில் :எனக்கு யார் உதவி செய்தாலும் இன்னும் சிறந்த சாதனைகளை :இயற்றமுடியும். ஆகையால், தாங்கள் ஐயாயிரம் குதிரை :வீரர்களையும். ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால் :அவர்களது படிச் செலவை நான் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் :இணைந்து இந்த இரு சமஸ்தானங்களையும் மீண்டும் கைப்பற்ற :இயலும், அத்துடன் மதுரைக்கும் படைகளை அனுப்பி வைத்து :அந்த சீமை முழுவதும் எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கி :வைக்கவும் இயலும். அங்குள்ள பாளையக்காரர்களும் நமக்கு :ஒத்துழைப்பு நல்குவார்கள்.
தங்களுக்கு செலுத்த வேண்டிய நஜர் பற்றி பின்னர் முடிவு :எடுத்துக் கொள்ளலாம்.

- தாண்டவராயப்பிள்ளை,

சிவகங்கை சமஸ்தான பிரதானி.

(Upload an image to replace this placeholder.)


மன்னர் முத்து வடுகநாதர் செப்பேடு (திருவாரூர் செப்பேடு)

இந்தக் கடிதம் அனுப்பியபொழுது, பிரதானி, தொண்டமான் நாட்டில், சிவகங்கைச் சீமையை ஒட்டிய பாய்க்குடி என்ற கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்றில் தங்கி இருந்தார். சிவகங்கைச் சீமை நடப்புகளை விருபாட்சியில் உள்ள ராணி வேலுநாச்சியாருக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருந்தார். அத்துடன் சிவகங்கைச் சீமை நாட்டார்களுக்கும் ஒலைகள் அனுப்பி வைத்து தொடர்பு கொண்டு இருந்தார். சிவகங்கையை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பையும் உதவிகளையும் திரட்டுவதில் ஈடுபட்டு இருந்தார்.

"... தஞ்சாவூராரும் தொண்டமானும் இணைந்து நமக்கு படையும் பொருளும் வழங்க சம்மதித்து உள்ளனர். மைசூர் மன்னர் ஐதர் அலிகானின் படையும் இங்கு வரவிருக்கின்றது. ஆதலால், உங்களால் இயன்ற அளவு போர் வீரர்களையும் படைக்கலங்களையும் சேகரித்துக் கொண்டு நம்மிடம் வாருங்கள். நாம் எல்லோரும் இணைந்து இராமநாதபுரத்தையும், சிவகங்கையையும் திரும்ப கைப்பற்றி விடலாம்..."

என்று மறவர் சீமை முழுவதையும் மீட்பதற்கு திட்டமிட்டு இருப்பதைத் தெரிவிக்கும் செய்தியைக் கொண்ட அவரது ஒலை ஒன்று நவாப்பின் பணியாளரான தொண்டி அமில்தார் கையில் சிக்கியது.

மறவர் சீமையை மீட்பதற்கு பிரதானி தாண்டவராயபிள்ளை மறைமுகமான முறையில் இயங்கி வருகிறார் என்பதை அப்பொழுதுதான் கம்பெனியார் உணர்ந்தனர். நவாப்பின் மகன் உம்தத்துல் உம்ராவுக்கு இந்த தகவல் கிடைத்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டார். இரவு பகல் என்று பாராது பிரதானியார் முயற்சியை தோல்வியுறச் செய்ய முயன்றார். தளபதி நஜீர்கான், தளபதி பௌஷேர் ஆகியோரது துணை கொண்டு கிளர்ச்சிக்காரர்களை தேடிப்பிடிப்பதிலும், கோட்டைகளை வலுப்படுத்துவதிலும் ஈடுபட்டார்.

மனித வாழ்க்கையின் இறுதிப்பகுதி இயலாத்தன்மை கொண்ட முதுமை. ஒடும் பாம்பையும், துரத்திச் சென்று நசுக்கிக் கொல்ல முயன்ற அதே கால்கள்தான் இப்பொழுது நடமாடுவதற்குக் கூட தளர்நடை போடுகிறது. மிகுதியான பிரயாசை அனைத்தையும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்ற ஆசை தாங்க முடியாத சுமை!

பிரதானி தாண்டவராயபிள்ளை உடல் நலிவுற்றது. கண்களும் இதயக் கதவுகளும் இறுக்கமாக மூடிக்கொண்டன. மண்ணின் மீதும் மன்னர் மீதும் மாறாத அன்பு கொண்டு தளராது உழைத்த தியாகி மறைந்து விட்டார்.[4]

பிரதானி தாண்டவராய பிள்ளை மன்னர் சசிவர்ண பெரியஉடையாத் தேவர் ஆட்சியின் இறுதியில் கி.பி.1747-ல் சிவகங்கைப் பிரதானியாகப் பணியேற்றார். அப்பொழுது அவர் சுமார் நாற்பது வயது உடையவராக இருந்திருக்க வேண்டும். இவரது அருங்குணங்களையும், ஆற்றலையும் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமினாதையர் அவர்கள்,

"... தாண்டவராயபிள்ளை வீரமும், கணக்கில் நுட்பமும், தெளிந்த அறிவும், இன்னாரை இன்னபடி நடத்த வேண்டும் என்ற தகுதியுணர்ச்சியும் சமஸ்த்தானத்தின் வளங்களை மிக்கும் வழிகளையறிந்து முயலும் முயற்சியும் தைரியமும் உடையவர். தம்மை அடுத்தவரைப் போல் ஆதரிப்பவர். சொன்ன மொழி தவறாத வாய்மை உடையவர். துட்டரை அடக்கி அஞ்சச் செய்யும் பராக்கிரமம் பொருந்தியவர். தமிழ்ப் புலவர்களை ஆதரிக்குந் தன்மையினர்."

என புகழ்ந்து வரைந்துள்ளார்.[5]

இத்தகைய ஏற்றமிகு தமிழ்ப் பெருமகனைப் போற்றி புகழ்வது இயல்பு. "எடுக்கும், இருநிதியும் நெல்லாயிரம் கலமுந் தந்தே, நாடு கவிதை கொண்டு புகழுற்றோன்" என்று பாடியதுடன் அல்லாமல், இவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு "மான்விடு தூது" என்ற சிறந்த செந்தமிழ் இலக்கியத்தையே படைத்துள்ளார் குழந்தைக் கவிராயர், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயரது பேரர். இந்த இலக்கியத்தில் இருந்து பிரதானி தாண்டவராய பிள்ளை சிவகங்கைச் சீமையில் எத்தகைய அறப்பணிகளை நிறைவேற்றி வைத்தார் என்பதையும் அறிந்து கொள்வதற்கு கவிராயரது கவிதை வரிகள் பயன்படுகின்றன.

“கோலமிகு குன்றக்குடியிலே நீடுழி
காலமெல்லாம் நிற்கவே கற்கட்டிக் குளத்தில்
தன்னுற்றுக் காணத் தடாகப் பிரதிட்டை செய்து
செந்நூல் துறையால் சினகரமும் - பொன்னால்
படித்துறையு பூந்தருவும் மைந்தருவும் வேதம்
படித்துறையு மண்டபமும் பாங்காய் - முடித்து வைத்தே
போற்றிய வையாபுரியுயென்று பேருமிட்டு
நாற்றிசையோர் போற்றுவள்ளி நாதருக்கே - தோற்றுதினக்
கட்டளையுந்த துவாதசி க்கட்டளையுந் தைப்பூச
கட்டளையுமே நடத்துங் கங்கைகுலன் - மட்டுவிரி
சீதளியார் புத்துர்த் திருத்தளியார் கொன்றைவன

நாதனார் வயிரவநாதருக்கும் - சீதமலர் நல்லமங்கை பாகருக்கு நம்பும் வயிரவர்க்கும் வல்ல திருக்கோட்டி மாதவருக்கும் - கல்லியன்முன் மண்டபம் நெய்விளக்கு மாமதிலும் வாகனமும் தண்டலையு வில்லத் தளமலர்கள் - கொண்டதோர் நித்திய நைமித்தியம் நேயமாய்தானடக்க பத்தியுடனே யமைத்த பண்பினான்..."

என்று பிரதானியின் பணிகளை அடுக்கிச் சொல்கிறார் கவிராயர்.[6]

மற்றும், பாகனேரிக்கு அடுத்து முத்து வடுகநாத சத்திரம் என்ற குடியிருப்பு, சோழபுரத்திற்கு மேற்கே திரியம்பகப் பொய்கை, பரம்பைக் குடியில் மடம், சத்திரம், கொடிகட்டி அன்னம் கொடுத்தோன் எனப் புகழ்ந்துரைத்துள்ளார்.

பிரதானி தாண்டவராயபிள்ளையின் மரணம், தமக்கும் சிவகங்கைச் சீமைக்கும் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு என்பதை ராணி வேலுநாச்சியார் உணர்ந்தார். வேதனையால் துடித்தார். கணவரது வீரமரணத்திற்கு பிறகு அவரையும் அவரது குழந்தையையும், காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த இலக்கினை கொண்டிருந்தவர் அல்லவா அவர்? அவரை நம்பித்தானே இந்த அந்நிய மண்ணாகிய விருப்பாச்சி சீமையில் வாழ்ந்து வருவது? விருப்பாச்சி வாழ்க்கைக்கு மைசூர் மன்னரது அனுதாபமும் ஆதரவும் பின்னணியாக இருந்த போதிலும், விரைவில் தாயகம் திரும்பி விடலாம் என்ற வலுவான நம்பிக்கையை வளர்த்து ஊக்குவித்து வந்ததும் இந்த பிரதானி தானே? ஆற்காட்டு நவாப்புக்கு எதிராக சிவகங்கை மக்களைத் திரட்டும் கடுமையான முயற்சியில் காலமெல்லாம் ஈடுபட்டு இருந்தபோதும், வாரம் தவறாமல் விருப்பாட்சிக்கு வந்து, சிவகங்கைச் சீமையின் நடப்புகளை ராணியாருக்கு தெரிவிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அவர் விட்டு சென்ற முயற்சிகளை, அவர் வரைந்துள்ள திட்டத்தை எவ்விதம் நிறைவு பெறச் செய்வது, எத்தகைய வழி முறைகளைக் கையாளுவது?

இரவு பகலும் இதே சிந்தனையில் ராணிவேலு நாச்சியார் லயித்து இருந்தார். மிகுந்த உள்ளத்துணிவுடன் உணர்வு பூர்வமாக மறவர் சீமையின் மண்ணுக்கும் மரபுக்கும் உகந்த வகையில் ஒரு முடிவினைக் காண முயன்று வந்தார். வீரத்தின் பரிசாக உருவான சிவகங்கைச் சீமையை, மீண்டும் சுதந்திர நாடாக மாற்றாவிட்டால் அங்குள்ள மக்களின் எதிர்காலம் என்னவாகும்? இதற்கு விடை அரசியலில் ராணியார் நேரடியாக ஈடுபடுவதுதான்? ஆம். அப்படித்தான், ராணிவேலு

நாச்சியாரும் முடிவு செய்தார். பிரதானி தாண்டவராய பிள்ளை விட்டுச் சென்ற பணிகளை, குறிப்பாக சிவகங்கை சீமையின் நாட்டார்கள், சேர்வைக்காரர்களுடன் ஓலைத் தொடர்புகளைத் தொடர்ந்து வந்தார். தமது கணவருக்கு விசுவாசத்துடன் பணிகள் ஆற்றி வந்த அந்தரங்கப் பணியாளர்களான மருது சேர்வைக்காரர்களையும் ராணியார் தமது புதிய அரசியல் பணியில் ஈடுபடுத்தினார்.

விருபாட்சியிலிருந்து சிவகங்கைச் சீமை நாட்டுத் தலைவர்களுக்கு அனுப்பிய ஓலைகளுக்கு தக்க பலன் கிடைத்தது. பிறந்த பொன்னாட்டின் விடுதலைக்கு தங்களை ஆகுதியாக வழங்க வேண்டும் என்ற வேட்கையில் சிவகங்கைச் சீமை குடிமக்கள் பலர், சிறுசிறு குழுக்களாகத் தங்களது ஆயுதங்களுடன் விருபாட்சி போய்ச் சேர்ந்தனர். ராணியாரைச் சந்தித்து தங்களது விசுவாசத்தை தெரிவித்ததுடன், அங்கேயே தங்கத் தொடங்கினர். தியாகி முத்து வடுக நாதர் சிந்திய இரத்தத்திற்குப் பழி வாங்க வேண்டும், காளையார் கோவில் போர்க்களத்தில் பெற்ற களங்கத்தை அழித்து புதிய வரலாறு படைக்க வேண்டும் என்பதே அவர்களது வேட்கையாக இருந்தது. விருபாட்சி பாளையத்தில் சிவகங்கை மறவர்களது நடமாட்டம் அதிகரித்தது. ராணி வேலு நாச்சியாரது நம்பிக்கையும் வலுத்தது. சிவகங்கைச் சீமையை மீட்டி விடலாம் என்ற உறுதி அவரது மனதில் நிலைத்தது.

கலித்தொகையும் புறப்பாட்டும் நினைவூட்டும் காட்சியாக ராணி நாச்சியார் காணப்பட்டார். நாள்தோறும் காலை நேரத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் சீருடை அணிந்து, போர்ப்படை தாங்கி விருபாட்சி கிராம மந்தைவெளியில், சிவகங்கை மறவர்கள் பொருதும் வீர விளையாட்டுக்களை பார்வையிட்டார். தமது இளமைப் பருவத்தில், சக்கந்தியிலும், அரண்மனை சிறுவயலிலும் தமது பாட்டானர்களிடம் பெற்ற போர்ப் பயிற்சி, களஅணி வகுப்பு, பொருதும் பொழுது கையாளும் போர் உத்திகள் - ஆகியவைகளை, அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தை முறையாக மேற்கொண்டிருந்தார். சிவகங்கைச் சீமையில் இருந்து வந்த மறவர்களுக்கு ராணியாரது ஊக்கமும் உணர்வும் நாட்டுப்பற்றையும் ராஜவிசுவாசத்தையும் தூண்டும் அகல் விளக்காக அமைந்தது.

நாட்கள், மாதங்கள் வருடங்கள் என ஏழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. ராணி வேலுநாச்சியாரது முயற்சிகள் முழுமை பெறுவதற்கான வாய்ப்பும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் பரங்கிகளையும், ஆர்காட்டு நவாப்பையும், ஒரே நேரத்தில் அழித்து ஒழிக்கும் திட்டம் ஒன்றினை மேல் நடத்துவதற்கு மைசூர் மன்னர் ஹைதர் அலி ஆயத்தமானார். அப்பொழுது சிவகங்கை சீமையை, ஆற்காட்டு நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுவதற்கு உதவும் படைகளையும் திண்டுக்கல் கோட்டையில் இருந்து, பெற்றுக் கொள்ளுமாறு மைசூர் மன்னர்,

சிவகங்கை ராணிக்கு தெரிவித்தார்.[7] இந்த இனிப்பான செய்தியை பெறுவதற்குத் தானே இத்தனை காலமும் காத்திருந்தது!

விருப்பாட்சியில் இருந்து சிவகங்கை புறப்படுவதை திண்டுக்கல் கோட்டை கிலேதார் சையது சாகிபுக்கு ராணியார் தகவல் கொடுத்தார். குறிப்பிட்ட தேதியன்று குதிரைப்படை அணிகளை ஆயத்தம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார். சிவகங்கை மறவர் அணிகள் திரண்டு புறப்பட்டன. ராணி வேலுநாச்சியாரது மெய்க்காப்பாளரான மருது சேர்வைக்காரர் தலைமையில்,

"எழுந்தது சேனை, சுழலும்
  திரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானும் மலையும்
  வெறுந்தரை ஆன நதிகள்"

ஆம்! அந்தப் படையின் சுமை பொறுக்க முடியாமல் நிலத்தின் முதுகு முறிந்தது. படைகளின் வேகத்தில் காடுகளும் மலைகளும் நிலை குலைந்தன என்று பரணி[8]பாடுவது போல இந்த விடுதலைப் படை இரை வேட்ட பெரும் புலி போல சின்ன மறவர் சீமை நோக்கி நடை போட்டது.

வேதனையும் சோதனையும் நிறைந்த எட்டு ஆண்டு வாழ்க்கை ஓடான விருபாட்சி, தம்மை மன்னர் மனைவி என்ற நிலையிலிருந்து மக்கள் தலைவியாக்கிய மகோன்னத தலம், வீடணனனுக்கு அடைக்கலம் அளித்த இராமேசுவரம் போன்ற அந்த விருபாட்சியை நீர் தளும்பிய கண்களுடன் சில நொடிகள் நோக்கினார் ராணி வேலு நாச்சியார், குதிரை மேலிருந்தவாறு!

அடுத்து பஞ்ச கல்யாணி போன்ற அந்தக் குதிரை தெற்கே, திண்டுக்கல் நோக்கி பறந்தது.


  1. Francies Gazettcer of Madura [1909). P: 310
  2. Ward B.S. - Memoir of Madura and Dindigal (1895) Vol. 3. P: 68
  3. Millitary Country Correspondence Vol. 21. P: 281-282
  4. கமால் Dr. S.M. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1989) P: 162
  5. குழந்தைக் கவிராயர் - மான் விடு தூது (டாக்டர் உ.வே.சா. பதிப்பு) 1954 பக்: 12
  6. குழந்தைக் கவிராயர் மான் விடு தூது (டாக்டர் உ.வே.சா. பதிப்பு)
  7. Correspondance on Permanent Settlement - 1799 to 1803, P. 33.
  8. கலிங்கத்துப் பரணி பாடல், எண் 359.