சுயம்வரம்/அத்தியாயம் 10

உல்லாச உலகம், உனக்கே சொந்தம்;
அனுபவி ராஜா அனுபவி!…

10

“என்ன, மிஸ்டர் மாதவன்! என்ன சொல்லிவிட்டுப் போகிறாள், அந்த அருணா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஆனந்தன்.

“ஒன்றுமில்லை; மிஸ்டர் ஆனந்தன் என்னைக் காதலிக்கிறார்; அவரை நான் கலியாணம் செய்து கொள்ளட்டுமா, வேண்டாமா?” என்று கேட்டாள். ‘பேஷாய்ச் செய்து கொள்ளலாம்’ என்றேன்; போய்விட்டாள்” என்றான் மாதவன், தன்னுடைய கவலை அவனுக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவன் தோளில் செயற்கைச் சிரிப்புடன் ஒரு தட்டுத் தட்டி.

“உன்னைப்போல் என்னையும் மடையன் என்று நினைத்துக் கொண்டாயா, என்ன?” என்றான் ஆனந்தன், ஒரு தட்டுக்கு இரண்டு தட்டுக்களாக அவன் தோள்களில் தட்டி.

“எனக்குத் தெரியாதே, பிரதர்! எப்பொழுதிலிருந்து நீ இப்படிப் புத்திசாலியானாய்? ”

“போடா, மக்கு! பிறந்ததிலிருந்தே நான் புத்திசாலியாகத்தான் இருக்கிறேனாம். ஒரு உதாரணம் வேண்டுமானால் சொல்லட்டுமா?” "சொல்லு, உதாரணம் இல்லாமல்தான் உன்னால் எதையும் சொல்ல முடியாதே!"

"நான் குழந்தையாயிருந்தபோது ஒரு நாள் அடுத்த வீட்டுக் குழந்தையைக் கிள்ளிவிட்டு, அது அழுவதற்கு முன்னால் நான் அழுதேனாம்!"

"அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்றால், அந்த புத்திசாலித்தனம் எனக்கு வேண்டவே வேண்டாம், சுவாமி" என்று கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.

"போடா, மடையா! கலியாணம் யார் செய்து கொள்கிறார்கள், தெரியுமா? முட்டாள்கள்தான் செய்து கொள்கிறார்கள்!" என்றான் அவன்.

"இதுவும் உன் சொந்தக் கருத்து அல்ல, இரவல்; அப்புறம்?"

“இந்த உலகத்தில் யாருக்கு எதுதான்டா, இரவல் இல்லை? எல்லாம் இரவல்தான்! 'ஆடை நமக்கிரவல், அணிந்ததெல்லாம் இரவல்' என்று ராத்திரியானால் பாடிக் கொண்டு வருகிறானே ஆண்டிப் பண்டாரம், அதுகூடவா உன் காதில் விழவில்லை?"

"அவனும் அதையெல்லாம் அணிந்து கொண்டு தானேடா பாடி வருகிறான்?"

"அதிலிருந்து என்ன தெரிகிறது? இரவலாயிருந்தாலும் அதை எடுத்து அணிந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்று தெரியவில்லையா? அதே மாதிரிதான் கருத்தும்; இரவலாயிருந்தாலும் வேண்டும் போது அதை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே?"

"சரி, சொல்லு! நான் கலியாணம் செய்து கொண்ட முட்டாள்; நீ?"

“கலியாணம் செய்துகொள்ளாத முட்டாள் அல்ல; புத்திசாலி! ஏன் தெரியுமா? எனக்கு இந்தக் கட்டுப்பாடே பிடிக்காது. அரிசிக்கும் சர்க்கரைக்கும்தான் கட்டுப்பாடு; அதனால் அவற்றுக்குக் கட்டுப்பாடு. இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன தட்டுப்பாடு? தட்டுப்பாடு இல்லாத அவர்களுக்கும் அவர்களுடைய காதலுக்கும் ஏன் இந்தக் கட்டுப்பாடு?”

“காதலுக்குக் கட்டுப்பாடா! அது என்னப்பா, அது?”

“அட, கலியாணத்தையும் சேர்த்துத்தான்டா சொல்கிறேன் அதற்குப் பின் அவளும் சரி, அவனும் சரி, வேறு யாரையும் அவ்வளவு சுதந்திரமாக் காதலிக்க முடிவதில்லையல்லவா?”

“ஐ ஸீ, அதற்காகத்தான் நீ கலியாணம் செய்து கொள்ளாமலே இருக்கிறாயா?”

“வேறு எதற்காக, பிரதர்? அரிசிக்கும் சர்க்கரைக்கும் உள்ள கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால் அவை கிடைப்பதும் தண்ணீர் பட்ட பாடாயிருக்கும், அவற்றின் விலையும் தண்ணீர் பட்ட பாடாயிருக்கும் என்று நம் வணிகப் பெருமக்களில் சிலர் சொல்லவில்லையா? அந்தப் பெருமக்களைப் பின்பற்றி இந்தப் பெருமகனும் சொல்கிறேன் - கலியாணத்தை நீக்கிப் பார்க்கட்டும்; ‘காதலினால் அது உண்டாம், இது உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே!’ என்று எந்தக் கவிஞனும் பாடாமலேயே இந்த நாட்டில் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறதா இல்லையா, பார்!”

“இப்போது மட்டும் என்ன, அது குறைந்தா போய் விட்டது? உன்னைப் போன்ற புண்ணியவான்கள் இருக்கும் வரை காதல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதோ இல்லையோ, கண்ணீர் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது?”

"எந்தக் கண்ணீர் வெள்ளத்தைச் சொல்கிறாய், நீ?"

"உன்னால் காதலிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பெண்களின் கண்ணீர் வெள்ளத்தைச் சொல்கிறேன்!"

'ஹஹ்ஹஹ்ஹா!' என்று ஆனந்தன் சிரித்தான்; "என்ன ஹஹ்ஹஹ்ஹா?" என்று மாதவன் கேட்டான்.

"பெண்கள்! ஹஹ்ஹஹ்ஹா, பெண்கள்!" என்று அவன் மேலும் சிரித்துவிட்டு, “என்னதான் சொன்னாலும் இந்தப் பெண்களுக்கு ஒரு உண்மை மட்டும் புலப்படவே மாட்டேன் என்கிறது! அவர்கள் காதலிக்கத்தான் பிறந்தவர்களே தவிர, கண்ணீர் விடப் பிறந்தவர்களே அல்ல, பிரதர்! என்னால் காதலிக்கப்பட்ட ஒருத்தி கண்ணீர் விடுகிறாள் என்பதற்காக அவளை நான் காலம் முழுவதும் காதலித்துக் கொண்டிருக்க முடியுமா? அப்படிக் காதலித்தால் அதற்குக் 'காதல்' என்றா பேர்? இல்லை. 'தண்டனை' என்று பேர் பிரதர், 'தண்டனை' என்று பேர்!"

"படு புத்திசாலிடா, நீ! நீ கைவிடாவிட்டால் அவள் ஏன் கண்ணீர் விடுகிறாள்?"

"யோசித்துப் பார், நான் மட்டுமா அவளைக் கைவிடுகிறேன்? அவளை நான் கைவிடும்போது அவளும் அதே சமயத்தில் தன்னையறியாமல் என்னைக் கைவிட்டு விடுகிறாள்!"

"அடி, சக்கை! மனு நீதிச் சோழன்டா, நீ! நீதி சாஸ்திரம் எழுதிய மனுகூட உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும். அது கிடக்கட்டும், நீ அவளைக் கைவிட்டால் இன்னொருவளைத் தேடிக் கொள்ள முடியும்; அவள் இன்னொருவனைத் தேடிக் கொள்ள முடியுமா?"

"ஏன் முடியாது? நானும் என்னுடைய 'பாலிசி'யும் அப்படியொன்றும் அனாதைகளாக இருக்கவில்லை, மாதவன்! என்னையும் என்னுடைய லட்சியத்தையும் பின்பற்றுபவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகத்தில் உண்டு. அவர்களில் ஒருவன் கூடவா கிடைக்காமற்போய் விடுவான் அவளுக்கு? தாராளமாகக் கிடைப்பான். ஜஸ்ட் ஃபார் அன் எக்சேஞ்ஜுக்குத்தானே?"

"நல்ல எக்சேஞ்ஜுடா, உன் எக்சேஞ்ஜ்! அப்படியே கிடைத்தாலும் அவனுக்காக அவள் தன் கற்பைக் கைவிட முடியுமா? விட்டால் சமூகம் அவளை ஏற்றுக் கொள்ளுமா?"

"என்னைக் கேட்டால் 'சமூகம்' என்று ஒன்று இல்லவே இல்லை என்பேன்! இல்லாத ஒன்றைக் கற்பித்துக்கொண்டு எடுத்ததற்கெல்லாம் அதற்குப் பயந்து கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? அப்ஸல்யூட்லி ராங்! 'கற்பு, கற்பு' என்று கதைப்பதெல்லாம் நம்மவர்களிடம்தான் இருக்கிறதே தவிர, மற்றவர்களிடம் அது இருப்பதாகத் தெரியவில்லை."

"கற்பு வேண்டுமானால் கதையாக இருந்துவிட்டுப் போகட்டும்; ஒழுக்கம்கூடவா கதை?"

"அது உண்மையாகத்தான் இருக்கட்டுமே! அதனால் என்ன, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகக் குளித்து விட்டால் போச்சு!"

"குளித்தால் உடம்பில் படிந்த அழுக்கு வேண்டுமானால் போகலாம்; உள்ளத்தில் படிந்த அழுக்கு போகாது."

"அதற்காக நான் ஆறிப்போன இட்லியைத்தான் ஆயுள் பூராவும் தின்று கொண்டிருக்க வேண்டும் என்பது என்ன நீதி? ஐ வாண்ட் ஹாட் இட்லி!"

"பெண் இட்லி அல்ல, பிரதர்..."

"தோசையாயிருக்கட்டும்!"

"தோசையும் அல்ல, அவள்..."

"பூரியாயிருக்கட்டும்!"

"பூரி என்றும் சொல்ல முடியாது, அவளை..."

"வேறு என்னவென்று வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போ! ஐ டோண்ட் மைன்ட் முடிந்தால், வசதி இருந்தால் ஒவ்வொரு நாளும் அவள் எனக்குப் புதுசாயிருக்க வேண்டும்; அவ்வளவுதான்!"

"மற்றவர்களுக்கு அவள் பழசாயிருந்தால் பாதகம் இல்லை , அப்படித்தானே?"

"ஏன் பழசாயிருக்கிறாள்? என்னை நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லை, பிரதர்! அதான் சொன்னேனே, அது ஒரு 'எக்ஸ்சேஞ்ஜ் பிசினஸ்' மாதிரி நடக்க வேண்டும். நேற்று எனக்குப் புதுசாயிருந்தவள், இன்று உனக்குப் புதுசு; எனக்குப் பழசு. அதே மாதிரி, இன்று உனக்குப் புதுசாயிருப்பவள், நாளை எனக்குப் புதுசு; உனக்குப் பழசு. ஆஹா! இந்த 'ஆனந்தன் வழி'யை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்! பிள்ளை , குட்டி, படிப்பு, உத்தியோகம், கலியாணம், வீடு, வாசல் என்று ஒரு பிக்கல் இருக்குமா? ஒரு பிடுங்கல் இருக்குமா?"

"இருக்காது அப்பனே, இருக்காது."

"உதாரணத்துக்காக உன்னைத்தான் எடுத்துக் கொள்ளேன்! நீ மதனாவைக் காதலித்தாய்; அதோடு நின்றாயா? அவளைக் கலியாணமும் செய்து கொண்டாய். பிடித்தது சனியன்! இனி அவள் உனக்குத்தான் சொந்தம் என்று நீ உரிமை கொண்டாடுவாய்; இனி நீ தனக்குத்தான் சொந்தம் என்று அவள் உரிமை கொண்டாடுவாள். இந்த சொந்தத்திலிருந்து பந்தம் முளைக்கும்; பாசம் முளைக்கும், அப்புறம் பிள்ளை , குட்டி எல்லாம் முளைக்கும். பிடுங்கல், பிடுங்கல், ஒரே பிடுங்கல்! அதோ, போகிறார்கள் பார். இரண்டு பெண்கள், அவர்களும் என் 'பாலிசி'யைப் பின்பற்றுகிறவர்கள்தான். ஏதாவது ஒரு டாக்சியைக் கொண்டு போய் அவர்களுக்கு அருகே நிறுத்தி, 'கம் ஆன், கெட் இன்' என்றால் போதும்; 'தாங்க் யூ!' என்று இனிய குரலில் இனிக்க இனிக்கச் சொல்லிக்கொண்டே ஏறிக் கொள்வார்கள். ஏதாவது ஒரு ஓட்டல் அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 'இரவு முழுவதும் நீங்கள் எங்களுடன் தங்க வேண்டும்' என்றால் போதும்; அப்படியே தங்குவார்கள். பொழுது விடிந்ததும் இருபத்தைந்தோ, ஐம்பதோ கையில் கொடுத்தால் போதும்; அழகான புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள். அதற்குப் பின் நமக்கும் அவர்களுக்கும் எந்த விதமான உறவும் கிடையாது; உபத்திரவமும் கிடையாது. அந்த மாதிரி வாழ்க்கையை நீயும் அனுபவி ராஜா அனுபவி!"

மாதவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

"எனக்கு வேண்டாம் ராஜா அந்த வாழ்க்கை, நீயே அனுபவி!"

"எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா? நீ எங்கே இன்பத்தை அனுபவிக்கப் போகிறாய்? துன்பத்தைத் தான் அனுபவிக்கப் போகிறாய். அதிலும், ஒருத்தியா காதலிக்கிறாள் உன்னை? மதனா காதலிக்கிறாள்; அருணா காதலிக்கிறாள்; நீலா காதலிக்கிறாள். மதனாவின் காதல் கலியாணத்தில் முடிந்து, இப்போது கண்ணீரில் நிற்கிறது. மற்ற இருவரின் காதல்களும் எதில் முடிந்து, எப்படி நிற்கப் போகின்றனவோ? போ, மதனா உனக்காக அங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாள்; போ பிரதர், போ! போய், நீயும் அவளுடன் சேர்ந்து அழு! அதற்குத்தான்டா நீ லாயக்கு!" என்று அவன் மாதவனைப் பிடித்துத் தள்ள, "எங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாள்?" என்றான் அவன், ஒன்றும் புரியாமல்.

“வேறு எங்கே நின்று அழப் போகிறாள்? நீ அனுப்பி வைத்தாயே பெண்கள் விடுதிக்கு, அந்த விடுதிக்கு வெளியே நின்றுதான் அழுதுகொண்டிருக்கிறாள்!” என்றான் ஆனந்தன்.

“உண்மையாகவா?”

“போயும் போயும் ஆண்களிடம் பொய் சொல்லி எனக்கென்னடா, ஆகப் போகிறது? ஏன். அருணா உன்னிடம் வேறு விதமாக ஏதாவது சொன்னாளா?” என்றான் ஆனந்தன் மீண்டும்.

“இல்லை, அவள் வேறு விதமாக என்னிடம் எதுவும் சொல்லவில்லை” என்று சொல்லிக்கொண்டே மாதவன் ஏதோ யோசித்தபடி, தலை முடியைக் கோதி விட்டுக் கொண்டே திரும்பினான்.

“டொய்ங், டொய்ங், டொய்ங்ங்ங்...” என்று வாயினால் படு உல்லாசமாக சோக கீதம் இசைத்துக்கொண்டே, “நான் வரேன், பிரதர்!” என்று அவன் முதுகில் ஒரு தட்டுத் தட்டி விட்டு, அங்கிருந்து நழுவினான் ஆனந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_10&oldid=1673079" இலிருந்து மீள்விக்கப்பட்டது