சுயம்வரம்/அத்தியாயம் 11

போதாது, பால் உணர்ச்சியைப் போதிக்கத் தெருவில்
திரியும் நாய்களும், வீட்டுக்கு வீடு காணும்
சிட்டுக் குருவிகளும் போதவே போதாது!

11


ந்த அருணா என்னை ஏன் இப்படி ஆட்டிப் படைக்கிறாள்? கலியாணத்துக்கு முன்னால்தான் அவள் தொல்லை யென்றால் பின்னாலுமல்லவா அது தன்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!

வீட்டில், அலுவலகத்தில், வெளியில் - எங்கே இருந்தாலும் அவள் எனக்கு எதிரே வந்து நின்றுவிடுகிறாளே!

இதனால் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவதைத் தவிர அவள் வேறு என்னத்தைக் கண்டாள்?

அதைப் பற்றியும் அவள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை; 'உங்களை நான் காதலிப்பது உண்மை; அதனால் அவர்கள் சொல்வதும் உண்மை' என்று சொல்லி விட்டுச் சிரிக்க வேறு செய்கிறாளே!

சிரிப்பா அது? எனக்கு நெருப்பாகவல்லவா இருக்கிறது!

அந்தக் காலத்தில் பெண்கள்தான் ஆண்களைக் கண்டால் நெருப்பைப்போல் இருக்க வேண்டுமென்று சொல்வார்கள்; இந்தக் காலத்தில் பெண்களைக் கண்டால் ஆண்களல்லவா நெருப்பைப்போல் இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது!

என்னிடம் இருப்பது போல் அவள் எல்லாரிடமும் நீராயிருக்கிறாள் என்றும் சொல்லிவிடுவதற்கில்லை - சிலரிடம் தொட்டவுடன் சுட்டுவிடும் நெருப்பாயிருக்கிறாள்; இன்னும் சிலரிடமோ தொட்டாலும் சுடாத நெருப்பாயிருக்கிறாள்!

இந்த ஆனந்தன், எல்லாரையும் சுற்றிச் சுற்றி வருவது போல அவளையும்தான் சுற்றிச் சுற்றி வருகிறான்; அவனை ஏன் நெருங்க விடவில்லை அவள்?

கிட்டுபவனைக் கண்டால் எட்டி நிற்கிறாள்; கிட்டாதவனைக் கண்டால் ஒட்டி நிற்கிறாள். ஏன் இந்த சுபாவம் அவளுக்கு?

அவனுக்கேற்றாற் போலத்தான் இந்தக் காலத்துப் பத்திரிகைகள். அவற்றில் வரும் கதைகள், கட்டுரைகள், நாவல்கள், ஆடல் பாடல்கள், சினிமாக் காட்சிகள் எல்லாம் இருக்கின்றன!

ஏதாவது ஒரு கோணத்தில் ஆண் - பெண் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதுதானே அவற்றின் இப்போதைய நோக்கமாயிருக்கிறது?

போதாக் குறைக்குக் கல்லூரிகளில் வேறு பால் உணர்ச்சியைப் பற்றிய போதனையை ஆரம்பிக்கப் போகிறார்களாம். யாருக்கு யார் போதனை செய்வார்களோ? பேராசிரியர்களும் பேராசிரியைகளும், மாணவ மாணவி களுக்குப் போதனை செய்வார்களோ, மாணவர்களும் மாணவிகளும், பேராசிரியர்களுக்கும் பேராசிரியைகளுக்கும் போதனை செய்வார்களோ? - தெரியவில்லை!

தப்பித் தவறி அந்த இழவைப் போதிக்கத் தொடங்கிவிட்டால், மேநாட்டுக் கல்லூரிகள் சிலவற்றில் படிக்கிறார்களாமே - மாணவ மாணவிகள் தங்களுடைய காதலி, காதலன், குழந்தைகளுடன் - அந்த மாதிரி இங்கேயும் படிக்கத் தொடங்கிவிடுவார்களோ?

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு, நாகரிக வளர்ச்சிக்கு அதுதான் அடையாளம் என்றால் அந்த அடையாளம் இந்த நாட்டுக்கும் அவசியம்தானா, தேவைதானா?

அந்த நாகரிகத்தையும் முன்னேற்றத்தையும் நோக்கித் தான் ஆனந்தனைப் போன்றவர்களும், அவர்களை உருவாக்கி வரும் நவீன கலைகளும் போய்க்கொண்டிருக்கின்றனவா?

இவர்கள் போகிற போக்கைப் பார்த்தால் மனிதவர்க்கம் வரை முறையின்றி வாழ்ந்து வந்ததாமே, ஒரு காலத்தில் - அந்தக் காலத்துக்கே போய்விடுவார்களோ?

அதைத்தானா இவர்கள் முன்னேற்றம் என்கிறார்கள்? அதைத்தானா இவர்கள் நாகரிகத்தின் வளர்ச்சி என்கிறார்கள்?

ஒன்றும் புரியவில்லையே!

கடமை வேண்டாமாம் இவர்களுக்கு; கண்ணியம் வேண்டாமாம் இவர்களுக்கு; கட்டுப்பாடும் வேண்டாமாம் இவர்களுக்கு. ஆனால் காதல் மட்டும் வேண்டுமாம், காதல்!

கடமை இல்லாமல், கண்ணியம் இல்லாமல், கட்டுப் பாடும் இல்லாமல் காதல் மட்டும் எப்படி வளரும், வாழும் என்று தெரியவில்லையே?....

அந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஆனந்தனைவிட அருணா எவ்வளவோ மேல்!

'நிறைவேறும் காதலில் மட்டுமல்ல, நிறைவேறாத காதலிலும் என்னால் இன்பத்தைக் காண முடியும்' என்று சொல்லும்போது அவள்தான் இந்தக் காதல் உலகத்தில் எவ்வளவு உயர்ந்து நிற்கிறாள்!

துரதிர்ஷ்ட வசமாகக் கலியாணத்துக்குப் பிறகும் என்னைத் தெரிந்து காதலிக்கும் அருணாவும் சரி, தெரியாமல் காதலிக்கும் நீலாவும் சரி, என்னதான் தவறு செய்தாலும் இன்றுவரை என்னுடைய அனுபதாபத்தைப் பெறக் கூடியவர்களாய்த்தான் இருக்கிறார்களே தவிர, ஆத்திரத்தைக் காட்டக் கூடியவர்களாக இல்லையே? இது என்ன தர்ம சங்கடம் எனக்கு!

என்மேல் கொண்ட மோகத்தில் இந்த அருணாதான் எத்தனை பொய்கள் சொல்லியிருக்கிறாள்!

உண்மை வெளிப்படும்போது, அதற்காக அவள் கொஞ்சம் வெட்கப்படவாவது செய்கிறாளா? அதுவும் இல்லை; அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்து வைக்கிறாள்!

இப்படிச் சிரித்துச் சிரித்தே அவள் என்னைக் கொன்று விடுவாளோ?

அதிலும், சிறிது நேரத்துக்கு முன்னால் அவள் வந்து சொல்லிவிட்டுப் போன அந்தப் பொய்?....

என்னைக் கொல்லாமல் கொல்லும் பொய்யல்லவா? அதை எவ்வளவு துணிவோடு வந்து அவள் என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்? அவளுக்குப் பின்னால் வந்த ஆனந்தன் மட்டும் அதை மறுக்காமல் இருந்திருந்தால் என் கதி இந்நேரம் என்ன ஆகியிருக்கும்?

இதுபோன்ற பொய்கள் அவள் என்மேல் கொண்டுள்ள காதலை வளர்க்கவா செய்யும்? - பைத்தியக்காரி!

அவளைப் பொறுத்தவரை இது வேடிக்கையாகச் சொல்லக்கூடியதும் அல்ல; உண்மையாகவே சொல்லக் கூடியது.

அந்தப் 'பைத்தியக்காரி'யிடமிருந்து மதனாவை உடனே விடுதலை செய்ய வேண்டும், அவளை வேறு எங்கே கொண்டு போய் வைப்பது?...

அதுதான் மாதவனுடைய பிரச்சினைகளிலேயே பெரும் பிரச்சினையாயிருந்தது.

மாமாவும் மாமியும் இந்த யுகத்தில் இங்கிருந்து கிளம்ப மாட்டார்கள்.

இவர்களுக்கும் தெரிந்தே அவளைக் கொண்டு வந்து இங்கே வைத்துக் கொள்ளலாமென்றாலும், அதற்கு வேண்டிய துணிவும் எனக்கு ஏனோ வரவே மாட்டேன் என்கிறது. அந்தத் துணிவு இருந்திருந்தால்தான் முதல் நாள் இரவே அவளை நான் இவர்களுக்குத் தெரியாமல் அங்கே கொண்டு போய் ஒளித்து வைத்திருக்க வேண்டாமே!

மதனாவுக்காக மாமாவையும் மாமியையும் கண்டு அஞ்சவில்லை நான். ஆனால் இந்த நீலா? - ஏதும் அறியாத அவள் சுபாவம்; இனம் தெரியாமல் அவள் என்மேல் கொண்டுள்ள அன்பு - இவற்றுக்கு முன்னால் என்னையும் அறியாமலல்லவா அவளுக்கு நான் அஞ்ச வேண்டியிருக்கிறது?...

மாதவன் இப்படியெல்லாம் எண்ணி மேலே என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தபோது, "இன்று நாங்கள் ஊருக்குப் போகலாம் என்று இருக்கிறோம்" என்றார் மாமா, அவனிடம் வந்து.

இதைக் கேட்டதும் உண்டான ஆனந்தத்தில் அவரை அப்படியே கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றிற்று அவனுக்கு. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "என்ன அவ்வளவு அவசரம்?" என்றான் ஒரு பேச்சுக்கு.

"கேட்க வேண்டிய கச்சேரியெல்லாம் கேட்டாகி விட்டது; பார்க்க வேண்டிய காட்சியெல்லாம் பார்த்தாகி விட்டது. இனி இங்கே என்ன வேலை எங்களுக்கு? உன் அப்பாவும் அம்மாவும் வேறு ஊரில் இல்லை; அதனால் நாங்கள் வரும்போது நினைத்துக்கொண்டு வந்த இன்னொரு விசேஷமும் தடைப்படுகிறது..."

"அது என்ன விசேஷம்?"

"வேறு என்ன விசேஷம், உன்னுடைய கலியாண விசேஷம்தான்?"

இதற்கு என்ன சொல்வான் மாதவன்? "ஓகோ" என்று சொல்லி வைத்தான்.

"அது சம்பந்தமாக உனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இருக்காதென்று நினைக்கிறேன்!"

இதைக் கேட்டதும், 'இருப்பதற்கு இனிமேல் என்ன இருக்கிறது?' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது அவனுக்கு; ஆனால் சொல்லவில்லை. 'மௌனம் சர்வார்த்த சாதகம்' என்று பேசாமல் இருந்தான்.

"உன்னுடைய மௌனத்திலிருந்தே உனக்கு அதில் பூரண சம்மதம் என்று தெரிகிறது. அப்பாவையும் அம்மாவையும் உடனே பார்த்துப் பேசி, இந்த வருஷமே கலியாணத்தைச் செய்து வைத்து விடலாமென்று நினைக்கிறேன். அதற்காக நாங்கள் இப்போது எங்களுடைய ஊருக்குக்கூடப் போவதாக இல்லை; நேரே அவர்கள் இருக்கும் ஊருக்குத்தான் போகப் போகிறோம்."

இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு; "போய் வாருங்கள்" என்றான், 'மங்களம் உண்டாகட்டும்' என்று மட்டும் சொல்லாமல்!

அத்துடன், அங்கே போனால் விஷயம் எப்படியும் வெட்ட வெளிச்சமாகிவிடும்; அதற்குப் பிறகாவது இவர்கள் தன்னை விட்டுத் தொலைக்கலாமல்லவா?...

இப்படி நினைத்த மாதவனுக்கு அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகவே தோன்றிற்று. தான் கலியாணம் செய்து கொண்ட விஷயத்தைத் தானே இவர்களிடம் சொல்வதை விட, தன்னுடைய பெற்றோர் சொல்லிவிடுவது மேல்தானே?

பாவம், இந்த நீலா! அவள் மனம்தான் அதைக் கேட்டதும் உடைந்து போகும். அதற்காக இன்னும் எத்தனை நாட்கள் அவளுக்குத் தெரியாமல் அந்த விஷயத்தை மறைத்துக் கொண்டிருக்க முடியும்? இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அது அவளுக்குத் தெரியவேண்டியது தானே? இப்போதே தெரிந்துவிட்டுப் போகிறது!

அதனால் எனக்கும் ஒருவிதத்தில் நிம்மதி; அவளுக்கும் இன்னொரு விதத்தில் நிம்மதி.

ஒருவேளை அந்த அசட்டுப் பெண் அதையும் கேட்டுவிட்டு, 'அத்தான் அந்தக் கலியாணத்தைக்கூட வேடிக்கைக்காகத்தான் செய்து கொண்டிருப்பார், இல்லேம்மா?" என்று தன் அம்மாவிடம் வழக்கம்போல் கேட்டுவிட்டுக் கைகொட்டிச் சிரிப்பாளோ?...

மாதவன் இப்படியெல்லாம் எண்ணிப் பொருமிக் கொண்டிருந்தபோது, "டிபன் கொண்டு வரட்டுமா, அத்தான்?" என்று அவனை மேலும் சோதிப்பது போல் கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் நீலா.

ஆழ்ந்த பெருமூச்சுடன் அவளை ஏறிட்டு நோக்கி விட்டு, "தேவலையே, இன்று உன் அம்மா உன்னைப் பிடித்துத் தள்ளாமலேயே நீயாக வந்து எனக்கு முன்னால் நின்றுவிட்டாயே!" என்றான்.

அதற்குள் அங்கே வந்த அவள் அம்மா, "என்றைக்கும் அப்படியே இருந்துவிடுவாளா? இன்று கொஞ்சம் முன்னேறியிருக்கிறாள்!" என்றாள் புன்னகையுடன்.

"ம், முன்னேறட்டும், முன்னேறட்டும்!" என்று சொல்லிக்கொண்டே, நீலா கொண்டுவந்து வைத்த 'டிப'னில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுப் பார்த்தான் அவன்.

"எப்படியிருக்கிறது, அத்தான்?" என்றாள் அவள்.

"உன்னைப்போல் இல்லை" என்றான் அவன்.

"அப்படியென்றால்...?"

"நன்றாயிருக்கிறது என்று அர்த்தம்டி!" என்றாள் அம்மா 'சமய சஞ்சீவி' போல் வந்து குறுக்கிட்டு.

"ஏன், நான் நன்றாயில்லையா?" என்றாள் அவள், முகம் சிவக்க.

"யார் சொன்னது? வேடிக்கைதான்! ஒரு பெண்ணை 'நன்றாயில்லை' என்று அவளிடமே சொல்ல இந்த உலகத்தில் எந்த ஆணுக்கும் தைரியம் கிடையாதே" என்றான் அவன்.

"உங்களையும் சேர்த்துத்தானே சொல்கிறீர்கள்?" என்றாள் மாமி, மீண்டும் தன் மகளுக்குப் பதிலாக.

மாதவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

“இப்படி எல்லாவற்றுக்கும் நீங்களே வந்துகொண்டிருக்க முடியுமா, என்ன?”

“அவள் குழந்தை, அவளுக்கு என்ன தெரியும்?”

“நான் குழந்தையில்லையே” என்று அங்கிருந்து நழுவினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_11&oldid=1673081" இலிருந்து மீள்விக்கப்பட்டது