சுயம்வரம்/அத்தியாயம் 18

புனிதம் மிக்க ‘ராமாயணம்’ புண்ணியவான்களுக்கு
மட்டுமல்ல, பாவிகளுக்குமல்லவா உதவித்
தொலைக்கிறது!…

18

மாடிப் பூங்காவின் ஒரு மூலைக்குப் போய் உட்கார்ந்ததும் உட்காராததுமாக இருக்கும்போதே ‘சர்வ’ரிடம் ஆனந்தனைச் சுட்டிக் காட்டி, “முதலில் இவருக்கு இரண்டு ஐஸ் வாட்டர்” என்றாள் அருணா.

“போதாது; நான்கு!” என்றான் அவன்.

“அத்தனை உதையா வாங்கினர்கள்?” என்றாள் அருணா, வேண்டுமென்றே. ‘அந்த அவமானத்துக்குரிய விஷய’த்தை அவனுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி, அவனுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காக.

“இதோ பார், அருணா! திரும்பத் திரும்ப நீ அதையே சொல்லிக்கொண்டிருந்தால் எனக்கு ரொம்பக் கோபம் வரும், ஆமாம்!” என்றான் அவன்.

“வரட்டும்; நன்றாக வரட்டும்!” என்றாள் அவள்.

“வந்து என்ன செய்ய? என்னால் நிச்சயமாக அவனைத் திருப்பி உதைக்க முடியாது!” என்றான் அவன், அத்துடனாவது அவள் தன்னை விட்டுத் தொலைக்கட்டும் என்ற நோக்கத்துடன்.

“அது எனக்கும் தெரியும்”! என்று சொல்லிவிட்டு, “அதனால் என்ன, ராமனை உதைத்துவிட்டா ராவணன் சீதையைத் துக்கிக்கொண்டு போனான்?” என்றாள் அவள். வேறு ஏதாவது ஒரு வகையில் அவனை மேலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணி.

இதைக் கேட்டவுடன் அவனுக்கும் அதுவரை புலப்படாத ஏதோ ஒரு வழி புலப்பட்டதுபோல் இருந்தது. அவன் சொன்னான்:

"உண்மைதான்; ராவணனுக்கு மாரீசன் துணையாயிருந்தது போல் எனக்கும் யாராவது துணையாயிருந்தால்..."

"என்ன செய்வீர்கள், மதனாவைத் தூக்கிக்கொண்டு போய்விடுவீர்களா?"

"நிச்சயமாக!"

"தூக்கிக்கொண்டு போய் என்ன செய்வீர்கள், அசோக மரத்தடியில் சிறை வைப்பீர்களா?"

"அவளை நான் ஏன் சிறை வைக்க வேண்டும். அவன் அவளைத் தேடிக்கொண்டு வந்து மறுபடியும் என்னை உதைப்பதற்கா?"

"வேறு என்ன செய்வீர்கள், அவளைக் கொன்று விடுவீர்களா?"

"அவளை நான் ஏன் கொல்லவேண்டும்? செய்வதைச் செய்தால் அவளே தன்னைக் கொன்றுகொண்டு விடுகிறாள்!"

"ஆஹா! அந்த ஒரு காரியத்தை மட்டும் எனக்காக நீங்கள் செய்துவிட்டால்..."

அவள் முடிக்கவில்லை; "என்ன தருவாய்?" என்று அவள் முகத்துக்கு நேராகத் தன் முகத்தை நீட்டினான் அவன்.

தன்னுடைய தளிர்க் கரத்தால் அவன் முகத்தைச் சற்றே நகர்த்தி, "அதை இப்போது சொல்ல மாட்டேன்!" என்றாள் அவள், அதுவரை இல்லாத வெட்கத்தைத் திடீரென்று எங்கிருந்தோவரவழைத்துக்கொண்டு.

அதுதான் சமயமென்று அவனும் சட்டென்று அவள் கரத்தைப் பற்றி, "நீ சொல்லாவிட்டால் என்ன, நானே சொல்லட்டுமா?" என்றான் கொஞ்சம் குழைந்து.

"சொல்லுங்கள்!" என்றாள் அவளும் சற்றே நெளிந்து.

"என் நீண்ட நாள் ஆசையை ஒரே ஒரு நாளைக்காவது நிறைவேற்றி வைப்பாயா?" என்றான் அவன்.

"அவசியம் நிறைவேற்றி வைப்பேன். ஆனால் ஒரு நிபந்தனை; அது மாதவனுக்குத் தெரியக்கூடாது!" என்றாள் அவள். தான் சொல்வது பொய்யாயிருந்தாலும் அதை அவன் மெய் என்று நம்ப வேண்டுமே என்பதற்காக.

"அவன் முகத்தில் இனி யார் விழிக்கப் போகிறார்கள்?" என்று வீராப்புடன் சொன்ன அவன், தன் சட்டைப் பையிலிருந்த ஒரு 'விசிட்டிங் கார்'டை உடனே எடுத்து அவளிடம் கொடுத்து, "இந்தா, இதை வைத்துக்கொள்! இனி எனக்கும் உனக்கும் இடையே எந்த ரகசியமும் இருக்க வேண்டாம்!" என்றான் தன்னை மீறிய வேகத்தில்.

"இது எதற்கு?" என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

"இதில் உள்ள விலாசத்துக்கு நீ என்றாவது ஒரு நாள் அந்த மதனாவை இரவு நேரத்தில் அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டால்போதும், பொழுது விடிவதற்குள் அவள் தன்னைத்தானே கொன்றுகொண்டு விடுவாள்!"

அவன் இப்படிச் சொன்னதும் அவள் அந்தக் 'கார்'டை வியப்புடன் பார்த்தாள்; அதில் ஒரு முன்னாள் நீதிபதியின் வீட்டு முகவரியைத் தவிர வேறொன்றும் இல்லை.

"இது ஒரு மாஜி நீதிபதியின் மாளிகையல்லவா?" என்றாள் அவள்.

"ஆமாம், இப்பொழுதுகூட அந்த வீட்டைப் போலீசார் பார்த்தால் போதும்; அவர் வீட்டில் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி, சட்டென்று இடது காலைத் தூக்கி வலது காலோடு 'டப்'பென்று ஓர் அடி அடித்து, 'சல்யூட்' வைக்காமல் போக மாட்டார்கள்" என்றான் அவன்.

"அவ்வளவு மரியாதைக்குரியவர் வீட்டில் அவள் சாவதற்கு என்ன இருக்கிறது?"

"எல்லாம் இருக்கிறது! பகலில் அது போலீசாரின் மரியாதைக்குரிய வீடாயிருந்தாலும், இரவில் அது அவர்களில் சிலருக்குப் பிடிக்காத வீடாயிருக்கும்!"

"கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களே?"

"சொல்கிறேன்: வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அனுபவிக்க விரும்பும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு அது ஒரு சொர்க்கம்; சுருக்கமாகச் சொல்லப் போனால் ஏ ஒன் நைட் கிளப்!"

"நைட் கிளப்பா?"

"ஆமாம், பம்பாய் போன்ற நகரங்களில் அது பகிரங்கமாகவே நடைபெறுகிறது; சென்னையைப் போன்ற துரதிர்ஷ்டம் பிடித்த நகரங்களில்தான் அது கொஞ்சம் இலைமறை காயாக இயங்கவேண்டியிருக்கிறது!"

"ஏன்?"

"இங்குள்ள சட்டதிட்டங்கள் அப்படி! எதையும் பகிரங்கமாகச் செய்ய இங்குள்ளவர்கள் எங்களைப் போன்றவர்களை அனுமதிப்பதில்லை; 'அழகிகள் வேண்டுமா? அக்கம் பக்கம் பார்த்துப் பிடி! ஆண் - பெண் உறவைப் பற்றிய படங்களா? ஆபத்தில்லாத நண்பர்களுடன் சேர்ந்து பார்!' என்கிறார்கள்!"

"அப்படியாவது ஒழுக்கத்தைக் காப்பாற்ற முடியுமா என்று இங்குள்ளவர்கள் பார்க்கிறார்கள்; அதில் என்ன தவறு?"

"ஒன்றா, இரண்டா? ஓராயிரம் தவறுகள்! அவற்றைப் பற்றியெல்லாம் இங்கே விரிவாகச் சொல்லிக்கொண்டிருக்க இப்போது எனக்கு நேரம் இல்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், இயற்கையே மனிதனை ஒரு குறிப்பிட்ட வயதுவரைதான் இஷ்டம்போல் வாழ அனுமதிக்கிறது; அதற்குப் பின் அதுவே அவனை அப்படியெல்லாம் வாழ விடாமல் தடுத்து விடுகிறது. அதாவது, ஒழுக்கத்தைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லாமல் செய்துவிடுகிறது. இந்த லட்சணத்தில் அதையெல்லாம் தடுக்கச் சட்டங்கள் ஏன், சாஸ்திரங்கள் ஏன் என்பதுதான் என் கேள்வி!"

"சரி, அந்தக் கிளப்பின் தலைவர் யார் என்றாவது நான் தெரிந்துகொள்ளலாமா?"

"பேஷாய்த் தெரிந்து கொள்ளலாம். மாஜி நீதிபதி சத்தியநாதன்தான் அதன் தலைவர்; அவருடைய காரியதரிசி நான்!"

"உங்கள் தலைவருக்கு இப்போது என்ன வயதிருக்கும்?"

"கிட்டத்தட்ட அறுபது இருக்கும். அதனால் என்ன, அவருடைய ஆசைக்கு இன்னும் அவ்வளவு வயது ஆகிவிடவில்லை. அத்துடன்..."

"என்ன?"

"இந்தப் பணம் இருக்கிறதே, பணம் - அது அங்கே குவிவதுபோல வேறு எங்குமே குவிவதில்லை!"

"அதனால்தான் உங்களுடைய இஷ்டத்துக்கு நீங்கள் விளையாடிக்கொண்டிருக்கிறீர்களா?"

"இல்லாவிட்டால் எனக்குக் கிடைக்கும் சுண்டைக்காய் சம்பளத்தில் என்ன செய்ய முடியும், நான்? சிகரெட் செலவுக்குக்கூடக் காணாதே அது!"

"அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் அந்த வேலையை இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்?"

அவன் சிரித்தான்; "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றாள் அவள்.

"என்னை யாராவது 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டால் 'ஆனந்தன்' என்று சொல்லிவிடுவேன். 'தொழில் என்ன?' என்று கேட்டால் 'காரியதரிசி, சத்தியநாதன்; நைட் கிளப்' என்று சொல்ல முடியுமா? இந்த நாட்டில் ஒருவனுக்கு ஒரு துண்டு நிலம் இருந்தால் அவன் தன்னை 'லேண்ட் லார்ட்' என்று சொல்லிக்கொள்ளலாம்; ஒரு ஐந்து ரூபா பாங்க்கில் இருந்தால் 'பாங்கர்' என்று சொல்லிக்கொள்ளலாம். என்னிடமோ இரண்டும் கிடையாது. இந்த லட்சணத்தில் சட்டத்தின் கண்களுக்கு நானும் ஒரு 'கௌரவமான பிரஜை'யாக எப்படிக் காட்சி அளிப்பது? அதற்காகத்தான் அந்த வேலையைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்!" என்றான் அவன்.

அவள் ஒரு கணம் மௌனமாக இருந்தாள்; மறுகணம், "எனக்குத் தோன்றவில்லை, சட்டத்துக்குக் கண்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவேயில்லை. உண்மையைச் சொல்லப் போனால் அது ஒரு குருடு. ஏனெனில், யாராவது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தால்தான் அது வரவேண்டிய இடத்துக்கு வருகிறது; இல்லாவிட்டால் இருக்கிற இடத்திலேயே இருந்து விடுகிறது!" என்றாள் அவள், ஒரு நீண்ட பெருமூச்சுடன்.

"அதற்காக நீ அதன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு எங்கள் கிளப்புக்கு - சாரி, 'நம் கிளப்'புக்கு வந்து விடாதே; முதலில் மதனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வா!" என்றான் அவன், கடைசி மடக்குக் காபியையும் எடுத்துக் குடித்துவிட்டு.

அவள் எழுந்தாள்; அவளைத் தொடர்ந்து அவனும் எழுந்தான்.

இருவரும் கீழே வந்தார்கள்; "முடிந்தால் இன்றிரவே அழைத்துக்கொண்டு வந்துவிடட்டுமா?" என்றாள் அருணா.

"செய்; ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்த இடத்தை மாதவனுக்கு மட்டும் காட்டிக் கொடுத்து விடாதே!" என்று அவளிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றான் ஆனந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_18&oldid=1673101" இலிருந்து மீள்விக்கப்பட்டது