சுயம்வரம்/அத்தியாயம் 19

இந்தக் ‘கவர்ச்சி யுக’த்தில் இப்படியும்ஒரு
நீலாவா?–என்ன ஆச்சரியம்!…

19

ன்றிரவு மாதவன் வீடு திரும்பியபோது அவன் மாமா மகாலிங்கத்தின் குரல் உச்சக்கட்டத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஒரு பிள்ளையை அடக்கி வளர்க்கத் தெரியாத நீரும் ஒரு ஆண் பிள்ளையா? அவன் இஷ்டத்திற்கு எவளையோ காதலித்தானாம்; அவளை இவருக்குத் தெரியாமல் அவன் கலியாணமும் செய்துகொண்டானாம். அவனை இவர் இப்போது மன்னிப்பதைத் தவிர வேறு வழியில்லையாம். என்ன, கதையா விடுகிறீர், கதை?”

“இல்லை அப்பா, அத்தனையும் உண்மை. நானே அவளை அவருடன் பார்த்தேன். பார்த்த பிறகு... பார்த்த பிறகு... ”

நீலா முடிக்கவில்லை; “என்ன, சொல்லித் தொலையேன்!” என்றார் அவள் அப்பா.

“என்னைவிட அவள்தான் அவருக்குப் பொருத்தமானவள் என்று எனக்கே தோன்றிற்று, அப்பா!”

அவ்வளவுதான்; “அப்புறம் உனக்கும் எனக்கும் இங்கே என்ன வேலை? வா, போவோம்; வாடி, போவோம். இனி மேல் இந்த வீட்டுக்கும் நமக்கும் ஸ்நானப் பிராப்தம்கூட வேண்டாம்!” என்று கத்திக்கொண்டே மாமா வெளியே வர, அவரைத் தொடர்ந்து பெட்டியும் படுக்கையுமாக மாமியும் நீலாவும் வர, அவர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட வெட்கித் தலை குனிந்து நின்றான் மாதவன்.

அவனைக் கண்டதும் நீலா அவன் அருகே சென்று, “நான் வரேன், அத்தான்! நானும் என்னை அறியாமல் உங்கள் நிம்மதியை ஓரிரு நாட்கள் குலைத்திருக்கிறேன் என்று இன்று தான் எனக்குத் தெரிந்தது; அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்!" என்றாள்.

"நீயாவது என் நிம்மதியை ஓரிரு நாட்கள் குலைத்ததோடு நின்றாய்; நான் உன்னுடைய ஆசையையே அல்லவா நிராசையாக்கி விட்டேன்!" என்றான் அவன், தன் கண்கள் பனிக்க.

"எனக்காக நீங்கள் ஏன் அழ வேண்டும், அத்தான்? உங்களுக்காக நான்தான் அழவேண்டும்!" என்றாள் அவள், தன் கண்களில் பெருகி வந்த நீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டே.

அதற்குள், "அவனுக்காக அழுததெல்லாம் போதாதா, இன்னுமா அழ வேண்டும்? வாவா, வண்டிக்கு நேரமாச்சு!" என்று அவள் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார் மாமா.

"நான் அன்றைக்கே சொன்னேன் - 'பட்டணத்துப் பிள்ளையாண்டானுக்கும் நமக்கும் ஒத்து வராது, ஊரோடு இருக்கும் என் அண்ணன் மகனுக்கே உன்னைக் கொடுத்து விடலாம்' என்று; இவர் கேட்டாரா?" என்றாள் மாமி, தன் கையை நீட்டி மாமாவின் கன்னத்தில் ஓர் இடி இடிக்காத குறையாக.

"இப்படி வந்து அவமானப்பட வேண்டுமென்று என் தலையில் எழுதி வைத்திருக்கிறதே, அது என்னை விடுமா?" என்றார் மாமா வேதனையுடன்.

இதைக் கேட்டதும் மாதவன் சட்டென்று குனிந்து அவருடைய கால்களைத் தன் இரு கைகளாலும் பற்றி, "என்னை மன்னித்துவிடுங்கள், மாமா" என்றான்.

"சரிதான், போடா!" என்று அவன் பிடியிலிருந்து தன் கால்களை விடுவித்துக்கொண்ட அவர், அந்தச் சமயம் பார்த்து அங்கே காலியாக வந்த ஒரு டாக்சியை நிறுத்தி, "ம், ஏறுங்கள்!" என்று தன் மகளையும் மனைவியையும் பின் சீட்டில் ஏற்றிவிட்டு, தான் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு, "போ, எழும்பூருக்கு!" என்றார்.

டாக்சி பறந்தது. நீர் மல்கும் கண்களுடன் அதையே பார்த்துக்கொண்டு நின்ற மாதவனுக்கு பின்னால் வந்து நின்ற அவன் அப்பா, "எதையும் செய்வதற்கு முன்னால் யோசிக்காமல் செய்த பின்னால் யோசித்து என்ன பிரயோசனம்? ஆனது ஆச்சு, போனது போச்சு; மாமாவுக்குப் பயந்து அந்த மதனாவைக் கொண்டுபோய் எங்கே வைத்திருக்கிறாயோ என்னவோ, இப்போதே போய் அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடு!" என்றார்.

"ஆமாம், பெண் பாவம் பொல்லாதது. அந்தப் பாவத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டுமா, என்ன? போய், அவளை இப்போதே அழைத்துக் கொண்டு வந்து விடு!" என்றாள் அம்மாவும் அவருடன் சேர்ந்து.

மாதவன் மௌனமாகத் திரும்பி, அவர்கள் இருவருடைய பாதங்களையும் தொட்டு வணங்கிவிட்டு நடந்தான்.

அங்கே....

அருணாவையும் மதனாவையும் ஏற்றிக்கொண்டு அப்போதுதான் ஒரு டாக்சி கிளம்பிக் கொண்டிருந்தது.

'இந்த நேரத்தில் இவர்கள் எங்கே போகிறார்கள்?'...

அதற்கு மேல் யோசிக்கவில்லை அவன்; "மதனா! மதனா!" என்று கூவி அவளை அழைத்தபடி, "ஓல்டான், ஓல்டான்" என்றான் கையைத் தட்டு தட்டென்று தட்டி,

மதனாவின் காதில் அவன் குரல் விழவில்லையோ என்னவோ, அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை; அருணாதான் திரும்பிப் பார்த்தாள்.

அதைக் கவனித்த மாதவன், "அருணா! ஓ, அருணா" என்று அவளையும் சேர்த்து அழைத்தபடி, "ஓல்டான், ஓல்டான்!" என்றான்.

பலன்? - வண்டி நிற்கவில்லை . மாறாக, அதன் வேகம்தான் வர வர அதிகரித்தது!

'இந்த அருணா ஏன் இப்படி நடந்துகொள்கிறாள்? மதனாவை இவள் எங்கே அழைத்துச் செல்கிறாள்?'...

ஒன்றும் புரியவில்லை மாதவனுக்கு; நின்ற இடத்தையே ஒரு கணம் சுற்றிச் சுற்றி வந்தான். மறு கணம் சாலையோரத்தில் இருந்த தெரு விளக்கு ஒன்று 'இதோ பார்!' என்பது போல் தனக்குக் கீழே கிடந்த ஒரு 'விசிட்டிங் கார்'டை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது; குனிந்து அதை எடுத்தான்.

ஒரு பக்கத்தில் முன்னாள் நீதிபதி சத்தியநாதனின் வீட்டு முகவரி; இன்னொரு பக்கத்தில் ஆனந்தனின் கையெழுத்து...

'அப்படியும் இருக்குமா?'...

அதைப் பார்த்ததும் இப்படி ஒரு கேள்வி அவன் உள்ளத்தில் எழுந்தது.

அதற்கு மேல் அவன் தயங்கவில்லை; தாமதிக்க வில்லை. அவனும் ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு தனக்கு முன்னால் செல்லும் டாக்சியை விரட்டி மடக்கி நிறுத்தச் சொன்னான். ஆனால் அந்த டாக்சியை விரட்டிப் பிடிப்பது அவ்வளவு சுலபமாயில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_19&oldid=1673104" இலிருந்து மீள்விக்கப்பட்டது