சுயம்வரம்/அத்தியாயம் 20

வாழ்க்கையை ஒட்டி சினிமா இருக்க
வேண்டுமாம், சினிமா! ஏன், சினிமாவை
ஒட்டிவாழ்க்கை இருந்தால் என்னவாம்?…

20

சிறிது நேரம் சினிமாவில் ‘கார் சேஸிங்’ நடப்பது போல ‘டாக்சி சேஸிங்’ நடந்த பிறகு, புற நகர்ப் பகுதி ஒன்றில் இருந்த ஒரு பெரிய பங்களாவுக்குள்ளே அருணாவும் மதனாவும் சென்ற டாக்சி நுழைந்தது; அதைத் தொடர்ந்து மாதவனும் செல்வதற்குள் அந்த டாக்சியும் அதில் ஏறி வந்தவர்களும் மாயமாய் மறைந்தார்கள்!

சாலைக்கும் வாசம் செய்யும் இடத்துக்கும் நடுவே நீண்ட இடைவெளி விட்டுக் கட்டப்பட்டுள்ள எத்தனையோ வீடுகளை மாதவன் அதற்கு முன்னால் பார்த்திருக்கிறான்; அவை அமைதியின் இருப்பிடங்களாக இருக்கும் என்றும் அவன் நினைத்திருக்கிறான். ஆனால் அதே முறையில் கட்டப்பட்டு, அவன் கண்டெடுத்த ‘விசிட்டிங் கார்’டால் அவனை அழைக்காமல் அழைத்திருந்த அந்த வீடு...

அமைதியின் இருப்பிடமாக இல்லை; ஆசாபாசத்தின் இருப்பிடமாக, ஆபாசத்தின் இருப்பிடமாக இருந்தது!

பல நாட்டு வாத்தியங்களின் வெறியூட்டும் இசை நயத்தோடு சில அறைகளில் குடி; சில அறைகளில் சீட்டாட்டம்; இன்னும் சில அறைகளில் பிறந்த மேனியாக ஒருத்தி நின்று ஆடிக்கொண்டிருக்க, அவள் அழகையும் ஆட்டத்தையும் பார்த்து ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டிருந்தார்கள் அறுபது வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்த ஆடம்பரதாரிகள் சிலர்!

அவர்கள் இந்த நாட்டின் சராசரி மனிதர்களாகவும் இருக்கவில்லை; சமூகத்திலேயே அந்தஸ்து மிக்க அதிகாரிகளாக, அதிபர்களாக, படித்தவர்களாக, பண்பின் பாதுகாவலர்களாக இருந்தார்கள்!

அவர்களில் சிலர் வெளியே அறம் வளர்ப்பவர்கள்; ஆலயத் திருப்பணி செய்பவர்கள்; 'அன்பர் பணி செய்யவெனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே!' என்று பாடும் வாய் தேனூறப் பராபரத்தை வேண்டுபவர்கள்!

'உண்மையான உலகம் எங்கே இருக்கிறது? அது வெளிச்சத்தில் இல்லை; இருட்டில்தான் இருக்கிறது!' என்பதை மாதவன் அன்றுதான் முதன்முறையாகக் கண்டான். கண்டதும், "இம்மாதிரி இடங்களைப் பற்றித்தான் 'இருட்டறையில் உள்ளதடா உலகம்' என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினாரோ?” என்று நினைத்தான்.

அந்த இருட்டுலகில் அவன் கண்கள் மதனாவைத் தேடி அலைந்தபோது, யாரோ ஒருவன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கத் தன்னிடம் வசமாக வந்து அகப்பட்டுக் கொண்டுவிட்ட ஒரு பெண்ணைப் பலவந்தப்படுத்துவது போலவும், அவள் "விடுடா நாயே, என்னை விடுடா!" என்று அவன் பிடியிலிருந்து திமிறிக் கைக்குக் கிடைத்ததை எடுத்து அவனை மொத்துவது போலவுமான ஒலிகள் அவன் காதில் விழுந்தன; அந்த ஒலிகளை நெஞ்சம் பதற, நினைவு தடுமாற அவன் உற்றுக் கேட்டான். சந்தேகமேயில்லை; அது மதனாவின் குரல்தான்! அவளைப் பலவந்தப்படுத்துபவன் யாராயிருக்கும்? - ஒருவேளை ஆனந்தனாயிருக்குமோ?...

இருக்காது; அவனுக்கு ஏது அவ்வளவு தைரியம்?

அந்த ஒலிகளுக்கிடையே யாரோ ஒருத்தி சிரிக்கும் ஒலிகூடக் கேட்கிறதே, அது யாருடைய சிரிப்பொலியாயிருக்கும்? - அருணாவின் சிரிப்பொலியாயிருக்குமோ?...

தேடி சிவாங்கத் தன் பெண்ன அதையும் உற்றுக் கேட்டான் அவன் - ஆம், அது அவளுடைய சிரிப்பொலியேதான்!

என்னதான் ஒருவருக்கொருவர் பிடிக்காமற் போகட்டும்; என்னதான் ஆசாபாசங்களுக்கு உள்ள கட்டும். மனிதர்கள் இப்படியும் மிருகங்களாக மாறுவதுண்டா?...

இது புதிய அனுபவமாயிருந்தது அவனுக்கு.

கோழையையும் கொதித்தெழச் செய்யும் அந்த ஒலிகளைக் கேட்டபின் அவனால் சும்மா இருக்க முடியுமா? தன்னை யார் கவனிக்கிறார்கள், யார் கவனிக்கவில்லை என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவன் அங்குமிங்கும் ஓடினான்; அவர்கள் இருந்த அறையைத் தேடினான். பல அறைகள் கொண்ட அந்த பங்களாவில் அவர்கள் இருந்த அறையைக் கண்டு பிடிப்பது அவ்வளவு எளிதாயில்லை!

எங்கே சென்றாலும், எங்கே நின்றாலும் அந்த ஒலிகள் அவனுக்கு அருகிலேயே ஒலிப்பனபோல் ஒலித்தனவே தவிர, அவற்றுக்குரிய அறையை அவனால் என்ன முயன்றும் கண்டுபிடிக்கவே முடியவில்லை!

'இப்படியும் ஒரு வீடா, இப்படியும் தனக்கு ஓர் அனுபவமா? இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால் தனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போல் இருக்கிறதே!' என்று நினைத்துக்கொண்டே அவன் சுற்றுமுற்றும் பார்த்த போது, சற்றுத் தூரத்தில் ஒரு 'டீபா'யின் மேல் வைக்கப் பட்டிருந்த 'போன்' அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் அவன் என்ன நினைத்தானோ என்னவோ, ஒரே தாவில் அந்த இடத்தைத் தாவி அவன் முதல் காரியமாகப் போலீஸ் உதவிக்குப் போன் செய்தான். அதே சமயத்தில் அவனுக்கு எதிர்த்தாற் போலிருந்த ஓர் அறையின் கதவைத் திறந்து கொண்டு ஆனந்தன் அருணாவுடன் வெளியே வந்து நின்று விழிக்க, அவர்களைத் தொடர்ந்து வந்த மதனா, ஓடோடிச் சென்று மாதவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, "வந்து விட்டீர்களா? இந்தக் கடைசி நிமிஷத்திலாவது என்னைக் காப்பாற்ற வந்து விட்டீர்களா?" என்று படபடத்தாள்!

அவளை ஓர் உதறு உதறித் தள்ளிவிட்டு, "உன்னை யார் இந்த அருணாவுடன் இந்த நேரத்தில் இங்கே வரச் சொன்னது?" என்று உறுமினான் மாதவன்.

"அருணா இங்கே வரப்போவதாக எங்கே சொன்னாள்? எங்கேயோ, யாருக்கோ நடந்த கலியாணத்திற்கு ரிசப்ஷன் இங்கே என்று சொல்லியல்லவா அவள் என்னை இந்த 'நரக'த்துக்கு அழைத்துக்கொண்டு வந்தாள்?" என்றாள் மதனா.

மாதவன் நகைத்தான்; நகைத்துவிட்டுச் சொன்னான்:

"என்னை அடைய முடியாவிட்டாலும் என் நினைவிலேயே காலமெல்லாம் வாழ்ந்துவிட முடிவு செய்திருந்தவளல்லவா அருணா! அவளால் இதைத் தவிர வேறு என்ன செய்திருக்க முடியும்?"

அருணா திகைத்தாள்; திகைத்துவிட்டுச் சொன்னாள்:

"என்னை மன்னியுங்கள்; இதைக்கூட நான் உங்களை அடைவதற்காகத்தான் செய்தேன்!"

இப்படிச் சொன்னவள் சொன்னதோடு நிற்கவில்லை; ஓடி வந்து அவன் கால்கள் இரண்டையும் தன் கைகளால் பற்றிக் கண்ணீரால் அவற்றை நனைத்தாள்.

"விடு காலை, இனி என் முகத்தில் கூட விழிக்காதே!" என்று அவள் பிடியிலிருந்து தன் கால்களை விடுவித்துக் கொண்ட மாதவன், மதனாவை அழைத்துக்கொண்டு தடதடவென்று மாடிப் படிகளில் இறங்கினான்.

அப்போது, "எல்லாம் உன்னால் வந்த வினை! நீ மட்டும் அந்த 'விசிட்டிங் கார்'டை அங்கே தவறவிடாமல் இருந்திருந்தால் அந்தப் பயல் இங்கே வந்திருக்க முடியுமா? அந்த மதனாதான் என்னிடமிருந்து தப்பியிருக்க முடியுமா?" என்று ஆனந்தன் அருணாவிடம் சொல்வது அவன் காதில் விழுந்தது!

அதற்குள் 'திபு திபு'வென்று அந்த 'சொர்க்கபுரிக்'குள் நுழைந்த போலீசார், "யார் எங்களுக்குப் போன் செய்தது?" என்று தங்களுக்கு எதிரே வந்த மாதவனைக் கேட்க, "நான் தான் ஒரு காலத்தில் நீதிக்கு அதிபதியாயிருந்தவர் வீட்டில் இன்று நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை நீங்களே போய்ப் பாருங்கள்!" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான் அவன்.

வழியில், "இனி அருணாவும் ஆனந்தனும் என்ன ஆவார்கள்?" என்று மாதவனைக் கேட்டாள் மதனா.

"அவர்கள் என்ன ஆவார்களோ என்னவோ, 'நாம் என்ன ஆனோம்?' என்று தெரியாமல் இந்நேரம் என் அம்மாவும் அப்பாவும் வேதனையால் துடித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் நமக்கு நாமே செய்து கொண்ட சுயம்வரத்தால் வந்த வினை!" என்றான் மாதவன் அலுப்புடன்.

"அதனால்தான் அந்த நாளில் சுயம்வரம் கூடப் பெற்றோருக்குத் தெரிந்தே நடந்துவந்தது போலிருக்கிறது!" என்ற மதனா, "அது சரி, நம்மை ஏற்றுக்கொள்வதாக உங்கள் பெற்றோர் சொல்லிவிட்டார்களா?" என்றாள் அந்த நிலையிலும் ஆர்வத்துடன் அவனுடைய தோள்களைப் பற்றி.

“அதற்கும் காரணமாயிருந்தவர்கள் அருணாவும் ஆனந்தனும் தான். அவர்கள் நம்மைப் பிரித்து வைப்பதற்காக என் அப்பாவுக்குக் கொடுத்த ஒரு பொய்த் தந்தி, நம்மை சேர்த்து வைப்பதற்கு உதவியிருக்கிறது!” என்றான் அவன்.

“பாவம், இனி அந்த அருணாவும், நீலாவும்...”

மதனா முடிக்கவில்லை; “அவர்கள் இருவருமே நம் அனுதாபத்துக்கு உரியவர்கள்தான். ஆனால் வாழும் முறையால், அருணா பேயாகியிருக்கிறாள்; நீலாவோ தெய்வமாகியிருக்கிறாள். நம்மால் அவர்கள் இருவரைப் போல ஆக முடியவில்லை; அதனால் சாதாரண மனிதர்களுக்கு உரிய சகல பலவீனங்களுடனும் நாம் இன்று நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் போகிறோம்!” என்றான் மாதவன்.


முற்றும்

விந்தன் நூல்கள்

1. விந்தன் குட்டிக் கதைகள் 28.00
2. மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் 65.00
3. கண் திறக்குமா? 65.00
4. பாலும் பாவையும் 65.00
5. காதலும் கல்யாணமும் 80.00
6. மனிதன் மாறவில்லை 40.00
7. எம்.கே.டி பாகவதர் கதை 45.00

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_20&oldid=1673107" இலிருந்து மீள்விக்கப்பட்டது