சுயம்வரம்/அத்தியாயம் 3
காதலிலும் ‘ஒருமைப்பாடு’
கண்டால் என்னவாம்?...
3
“கண்ணே,
‘தோல் இருக்கச் சுளை விழுங்கிகள்’ சிலர் இந்த உலகத்தில் உண்டு. அவர்கள் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்று ‘மாய்மாலம்’ செய்து, தங்களுடைய அயோக்கியத் தனங்கள் அத்தனையையும் ‘70 எம்.எம். திரை’ போட்டு அப்படியே மறைத்துவிடுவார்கள். ஆத்மாவையே கொன்று விட்டு வாழும் அந்தப் பாவிகளுக்குள்ள துணிவு எனக்கு இல்லை. அதனாலேயே ஆனானப்பட்ட அப்பாவையும் அம்மாவையும் எதிர்த்து நின்ற நான், அற்ப மாமாவுக்கு அஞ்சி வெளியே நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்; நீ உள்ளே சிறைப்பட்டிருக்கின்றாய்!
இதற்கு முன் புரியாத ஒர் உண்மை இப்போது உனக்குப் புரிந்திருக்கும். ‘காதல் எந்த நிலையிலும் இன்ப மயமானது. கை கூடினாலும் அதில் இன்பம் உண்டு; கை கூடாவிட்டாலும் அதில் இன்பம் உண்டு. கை கூடினால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து இன்பம் காணலாம்; கூடாவிட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து, அதன் நினைவுகளிலேயே இன்பம் கண்டு மகிழலாம்’ என்பாயே நீ, அதன்படி இப்போது இன்பம் காண முடிகிறதா, உன்னால்? உன்னைக் கேட்கிறேனே, என்னால்தான் காண முடிகிறதா? இல்லை. துன்பம், துன்பம், துன்பம் - அதைத் தவிர வேறொன்றையும் நான் இப்போது காணேன்
கண்ணின் மணியே!
‘வெயிலில் அலைந்தவனுக்கு விடா தீர்க்க நீர் தேவை; ஒடிக் களைத்தவனுக்கு உட்கார நிழல் தேவை. அதே மாதிரி காதலுக்கும் கலியாணம் தேவை’ என்று நாம் நேற்று வரை எண்ணியிருந்தோம். இன்று?...
கலியாணத்துக்கு மேல் இன்னொரு கலியாணமும் தேவை என்பதை நாம் உணருகிறோம். அந்தக் கலியாணத்துக்கு...
ஆகா! நமது பெரியவர்கள் எவ்வளவு அழகாக, பொருள் பொதிந்ததாகப் பெயர் வைத்திருக்கிறார்கள், ‘சாந்திக் கலியாணம்’ என்று!
எங்கே சாந்தி?...
கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமானால், மனிதனுக்கு இரு வகை சாந்திகள் தேவைப்படுவதை நாம் உணரலாம்.
ஒன்று, வாலிபத்தில் தேவைப்படும் சாந்தி; இன்னொன்று, வயோதிகத்தில் தேவைப்படும் சாந்தி.
வயோதிகத்தில் தேவைப்படும் சாந்திக்குப் பெண் வேண்டாம்; அப்படியே தேவைப்பட்டாலும், அவள் வேளைக்கு வேளை வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போட்டுக் கொண்டு, ஓய்ந்த போதெல்லாம் தொணதொணத்துக் கொண்டிருந்தால் போதும். அப்படி ஒருத்தி இல்லா விட்டாலும் பரவாயில்லை; இருக்கவே இருக்கிறது ராமாயணம், மகாபாரதம், இத்தியாதி, இத்தியாதி...
வாலிபத்தில் தேவைப்படும் சாந்திக்கோ அவசியம் பெண் வேண்டும்; அவள் அழகே உருவாக இருக்க வேண்டும்; வாய்க்கு ருசியாக சமைத்துப் போடத் தெரியா விட்டாலும் வக்கணையாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். ‘பாடு!’ என்றால் பாட வேண்டும்; ‘ஆடு’ என்றால் ஆட வேண்டும். இரண்டும் தெரியாதென்றால், ‘ஏழு குழந்தைகளுக்குத் தந்தையான ஒருவன் எங்கே இருக்கிறான்?’ என்று தேடியலையும் என்றும் பதினாறாய் மின்னி அலுத்துப் போன ஏதாவது ஒரு சினிமா நட்சத்திரத்தின் ‘கிழக்கண் பார்வை’ அவனுக்குக் கிட்ட வேண்டும். அவள்தான் என்ன செய்வாள், பாவம்! உன் பாட்டை நாங்கள் கேட்க மாட்டோம்; உன்னுடைய ஆட்டத்தை நாங்கள் பார்க்க மாட்டோம்!’ என்று ரசிகர்கள் அத்தனை பேரும் அவளைக் கைவிடக்கூடிய நேரம் வந்த பிறகு, இவ்வளவு பெரிய உலகத்தில் அவள் பாடுவதைக் கேட்கவும், ஆடுவதைப் பார்க்கவும் ஒரே ஒரு ரசிகனாவது அவளுக்கு வேண்டாமா? அந்த ரசிகனும் தன் கை பிடித்த கணவனாக இருந்தால், அவனை அப்படி இப்படி நகர விடாமல் கட்டிப் போட்டுவிட்டாவது அவனுக்கு முன்னால் அவள் ஆசை தீரப் பாடவும் பாடலாம், ஆடவும் ஆடலாம், இல்லையா?
நல்ல வேளையாக உனக்கு அந்தக் குறையெல்லாம் இல்லை. அழகில் மிஸ் மெட்ராஸ், மிஸ் இண்டியா எல்லாம் உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும். சமைப்பதில் அந்த நாளிலேயே தமயந்தி கெட்டிக்காரியாக இல்லை; நளன்தான் கெட்டிக்காரனாக இருந்திருக்கிறான். அவனுக்கு நான் நேர் வாரிசு; ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொள்ளலாம். வக்கணையாகப் பேசுவதில் உன்னை மிஞ்ச இந்த உலகத்தில் வேறு ஆளே கிடையாது. இலங்கை வானொலிக்காரன் புண்ணியத்தால் ‘நான் ஒரு குழந்தை, நீ ஒரு குழந்தை, ஒருவர் மடியிலே ஒருவரடி’ என்று உனக்குப் பாடவும் தெரியும்; பாடிக் கொண்டே ஆடவும் தெரியும். ஒருவிதத்தில் நம் இருவரையும் ‘நிஜக் குழந்தை’களாகவே மாற்றிவிடக் கூடிய நம்முடைய ‘முதல் இர’வில் அந்த ஒரு பாடலும் ஆடலும் போதாதா, நாம் சாந்தி காண?
போதும். ஆனால்...
காதற் கிளியே!
‘கட்டுண்டோம். பொறுத்திருப்போம், காலம் மாறும்’ என்று பாடினான் பாரதி. அவனை விட்டால் எழுத்தாளர்களுக்கும் வேறு கதியில்லை; காதலர்களுக்கும் வேறு கதியில்லை. சமயத்தில் அவனைப் போல் வேறு யார் கைகொடுத்து உதவுகிறார்கள்? அவனுடைய வாக்கைப் போல் வேறு யாருடைய வாக்கு கைகொடுத்து உதவுகிறது? அந்த 'சஞ்சீவிக் கவிஞ'னின் சாகாத வாக்கைத்தான் இப்போது நாமும் பின்பற்ற வேண்டும்; வேறு வழியில்லை.
நீ உள்ளே தாழிட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா? நான் வெளியே ஒரு பூட்டையும் எடுத்துப் போட்டு வைத்திருக்கிறேன். யாருக்காக! பாழும் மாமாவுக்காகத்தான்! அந்த மனிதர் திடீரென்று வந்து கதவைத் தட்டி, 'யார் உள்ளே?' என்று கேட்டுவிடக் கூடாதல்லவா?
அப்படியும் 'ஏன் இந்த அறைக்கு மட்டும் பூட்டுப் போட்டிருக்கிறது?' என்று அந்த விடாக்கண்டர் கேட்டார். 'யாருக்குத் தெரியும், அப்பா எப்பொழுதுமே அந்த அறையை மட்டும் பூட்டுப் போட்டுத்தான் வைத்திருக்கிறார்!' என்று சொல்லிவிட்டேன்.
நல்ல வேளை, அப்பா என்மேல் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போகாமல் இருந்திருந்தால் நம் கதி என்ன ஆகியிருக்கும்? அவர் வாழ்க, அவருடைய கோபம் வாழ்க!
எது எப்படியிருந்தாலும் பொழுது விடியும் வரை நீ அந்த அறைக்குள்ளேதான் இருக்க வேண்டும்; உன் அப்பா, அம்மாவை மீறி என்னைக் கலியாணம் செய்துகொண்ட 'குற்ற'த்துக்காக நீ அந்தத் 'தண்டனை'யை அனுபவித்தே தீர வேண்டும். பொழுது விடிந்ததும்...
ஆமாம், பொழுது விடிந்ததும் நீ எங்கே போவாய்? உன்னுடைய வீட்டுக்கும் போக முடியாதே!...
என்னைப் பெற்ற புண்ணியாத்மாக்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; உன்னைப் பெற்ற புண்ணியாத்மாக்களாவது 'என்னடா, நமக்கு மாப்பிள்ளை தேடும் கஷ்டத்தை வைக்காமல் நம் பெண்ணே ஒரு பையனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து நிற்கிறாளே, அவனும் 'பெண் பார்க்க' வேண்டாம், 'பிசினஸ்' பேச வேண்டாம். 'எடு தாலியை, நீட்டு கழுத்தை!' என்று ஒற்றைக் காலில் நிற்கிறானே, கட்டட்டும், தாராளமாய்க் கட்டட்டும்!' என்று விட்டார்களா? அதுவும் இல்லை. எங்கே பார்த்தாலும். 'உரிமைப் போராட்டம்' நடக்கும் இந்தக் காலத்தில் அவர்களும் 'தாய், தந்தை' என்ற முறையில் தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக 'எங்கள் முகத்தில் விழிக்காதே, இனி இந்த வீட்டு வாசற்படியை மிதிக்காதோ என்று ஓர் 'ஊசிப்போன போராட்டத்தை நடத்தி முடித்து விட்டார்கள். நல்ல வேளையாக நம் காதல் பதினெட்டு வயதுக்குமேல் 2.தயமானதால், அதற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று. இப்போது சிலர் எண்ணிப் பதினாறு முடியுமுன்பே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்களே, அந்த மாதிரி நாமும் காதலிக்க ஆரம்பித்திருந்தால் நம் கதி என்ன ஆகியிருக்கும்? நம்முடைய காதலின் கதிதான் என்ன ஆகியிருக்கும்?...
போகட்டும், போ! எப்படியோ நாம் பிழைத்தோம்; நம்முடைய காதலும் பிழைத்தது!
ஒன்று செய்யேன், பொழுது விடிந்ததும் நீ நிஜமாகவே 'காதற் கிளி'யாக மாறி, எழும்பூரில் உள்ள 'பெண்கள் விடுதி'க்குச் சிறகடித்துப் பறந்துவிடேன்! அங்கேதான் உன் தோழி அருணா இருக்கிறாளே, அவள் உன்னைக் கவனித்துக் கொள்ள மாட்டாளா? நான் மாமாவுக்கு 'டிமிக்கி' கொடுத்து விட்டு அங்கே வந்து....
ஓ! ஆண் வாடையே வீசக் கூடாதா அங்கே? அதனாலென்ன, அங்கிருந்து நீ அப்படியே ஆபீசுக்கு வந்துவிடேன்!...அது எப்படி முடியும்? ஆபீசுக்கும் ஒரு வாரம் லீவு அல்லவா போட்டுத் தொலைத்திருக்கிறோம், 'தேன் நிலவு'க்காக? அதுதான் இப்போது 'தேள் நில'வாகப் போய் விட்டதே, என்ன செய்யலாம்?...
எதற்கும் நாளை மாலை வரை நீ அந்த விடுதியிலேயே இரு; நான் ஐந்து மணி வாக்கில் அந்தப் பக்கம் வந்து உனக்காக 'டா'வடித்துக் கொண்டு நிற்கிறேன். இருவரும் கடற்கரைக்கோ , அல்லது ஏதாவது ஒரு 'தலைவலிப் பட'த்துக்கோ போவோம். அங்கு மேலே என்ன செய்வது என்பது பற்றி நாம் ஒரு முடிவுக்கு வருவோம். என்ன, சரிதானே?...
இடையில் வெளியே வரவேண்டுமென்றால் நீ இருக்கும் அறைக்கு நடைப் பக்கம் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியே பதுங்கிப் பதுங்கி நீ வெளியே வந்து போகலாம். அதற்காகவே நான் அந்தக் கதவுக்கு மட்டும் பூட்டுப் போடாமல் விட்டு வைத்திருக்கிறேன்.
மற்றவை நாளை மாலை நேரில்...
இங்ஙனம்,
கழுத்துக்கு எட்டியும்
கைக்கு எட்டாத உன் கணவன்,
மாதவன்
‘ஏன்தான் டிசம்பர் சீசன் என்று ஒன்று இங்கே வருகிறதோ, எதற்குத்தான் அந்த சீசனுக்கு இந்த மாமா வந்து தொலைந்திருக்கிறாரோ?’ என்று அவள் ஜன்னலுக்கு வெளியே தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபோது, அதன் வழியாக ஒரு புத்தகம் வந்து கீழே ‘பொத்’தென்று விழுந்தது. ‘சரிதான், அவளுக்குத் தூக்கம் எங்கே வரப் போகிறது என்று அவர் நினைத்திருப்பார்; அதற்காக எதையாவது படித்துப் பொழுதைப் போக்கட்டுமே என்று இதை விட்டெறிந்திருப்பார்!’ என்று முனகிக்கொண்டே சென்று, அந்தப் புத்தகத்தை எடுத்தாள் அவள். அதன் தலைப்பு வேறு எந்தத் தலைப்பாகவாவது இருந்திருக்கக் கூடாதா? ‘காதலில் ஏமாறாமல் இருப்பது எப்படி?’ என்று இருந்து தொலைத்தது!
‘இந்த எழுத்தாளர்களுக்கு வேறு வேலை இல்லை; எடுத்ததற்கெல்லாம் ‘அது எப்படி, இது எப்படி?’ என்று கேட்டுப் புத்தகம் எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மாதிரி புத்தகங்களைப் பிரசுரித்து ஊரை ஏமாற்றிப் பிழைப்பதற்கென்றே சில பிரசுரகர்த்தர்கள்; அவற்றை வாங்கிப் படிப்பதற்கென்றே இவரைப் போன்ற சில இளிச்ச வாயர்கள்’ என்று பொரிந்து கொண்டே புத்தகத்தைப் பிரித்தாள் அவள். ‘என் ஆருயிர்த் தோழி மதனாவுக்கு, ஆழ்ந்த அனுதாபத்துடன், அன்புள்ள அருணா’ என்று அதன் முதல் பக்கத்தில் கொட்டை கொட்டையாக எழுதப்பட்டிருந்தது!