சுயம்வரம்/அத்தியாயம் 2

காதலாம் காதல், ஒருவனை ஒருத்தி
காதலிப்பது என்ன காதல்?...

 2 

டிசம்பர் சீசன் ஜிந்தாபாத்”!

“மாமா மகாலிங்கம் ஜிந்தாபாத்”

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு மாதவன் வயிற்றெரிச்சலோடு வந்து கதவைத் திறந்து மூடியதுதான் தாமதம், அதுவரை இருட்டில் தலை மறைவாக நின்று, அங்கே நிகழ்ந்தனவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆனந்தன், தன்னை மீறிய உற்சாகத்தில் டிசம்பர் சீசனுக்கும், அந்த சீசனுக்குக் குடும்ப சமேதராக வருகை தந்திருந்ததோடு, தக்க சமயத்தில் மாதவன் வீட்டுக்கு வந்து தன் வயிற்றில் பாலையும் வார்த்த அவன் மாமா மகாலிங்கத்துக்கும் இந்தியில் வாழ்த்துக் கூறிக்கொண்டே திரும்பினான்.

அப்போது யாரோ ஒருவர் இரு கைகளை மட்டும் ‘பட், பட்’ என்று தட்டி, தன் வாழ்த்தொலிக்கு வரவேற்பு கொடுக்கும் கையொலி அவன் காதில் விழவே, “யார் அது, இருட்டிலிருந்து கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்தால் தேவலை!” என்றான், தன்னைச் சுற்றியிருந்த இருட்டினை ஊடுருவிப் பார்த்துக்கொண்டே.

அந்த மர்ம உருவமோ, அவன் சொன்னபடி வெளிச்சத்துக்கு வராமல், “நான்தான்!” என்றது இருட்டிலேயே நின்றது நின்றபடி.

“நான்தான் என்றால்...?” என்றான் அவன், ஒன்றும் புரியாமல்.

“குரலிலிருந்து கூடவா என்னைத் தெரியவில்லை, உங்களுக்கு? நான்தான் அருணா!” என்றது அந்த உருவம் சற்றே வெட்கத்துடன்.

“ஒ, அருணாவா! கையைத் தட்டியதற்குப் பதிலாக என் முதுகைத் தட்டியிருக்கலாமே, நீங்கள்?”

“ஊஹூம், நான் மாட்டேன்”

“ஏன், ஷாக் அடிக்குமா?”

அவள் ஒரு “மினிமம் சிரிப்பு”ச் சிரித்தாள்; அவனும் ஒரு ‘மினிமம் சிரிப்பு’ச் சிரித்தான்.

‘யார் இந்த அருணாவும் ஆனந்தனும்?’ என்கிறீர்களா? வேறு யாருமில்லை; நேற்று வரை மதனாவுக்கும் மாதவனுக்கும் ‘நண்பி - நண்ப’னாயிருந்து, இன்று ‘வில்லி - வில்ல’னாகி விட்டவர்கள்தான் இவர்கள்

காரணம்?...

எல்லாரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களாதலால் மாதவனுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆனந்தனும் மதனாவின் மேல் ‘ஒரு கண்’ வைத்திருந்தான்; அதே மாதிரி, மதனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு அருணாவும் மாதவனின்மேல் ‘ஒரு கண்’ வைத்திருந்தாள்.

இவர்கள் இருவரும் ‘இரு கண்களை’யும் வைக்காததால் தானோ என்னவோ, காதலில் வெற்றி பெறவில்லை. அதற்காக, ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!” என்று சொல்லித் தன்னைச் சமாளித்துக் கொண்ட நரியைப் பின்பற்றவும் இவர்கள் விரும்பவில்லை. மாறாக, ‘கலியாணமானாலும், காதலிக்காமல் விடமாட்டேன்!’ என்று அருணா ஒற்றைக் காலில் நின்றாள்; அதே மாதிரி ஆனந்தனும் நின்றான். இருவரும் ஒருவரையொருவர் அறியாமல் இப்படி நின்றதன் பலன்தான், இருட்டிலே ஒருவரையொருவர் இனம் கண்டுகொண்டு இளித்தது!

இளித்து முடிந்ததும், “நான்தான் பழிக்குப் பழி வாங்குவதற்காக இங்கே பழியாய்க் கிடக்கிறேன். நீங்கள்...” என்று ஆரம்பித்தான் ஆனந்தன்.

“நானும் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான் இங்கே பழியாய்க் கிடக்கிறேன்!” என்றாள் அருணா.

“அப்படியானால்...”

“நானும் மாதவனால் காதலிக்கப்பட்டுக் கைவிடப் பட்டவர்களிலே ஒருத்தி.”

“அப்படி எத்தனை பேரைக் காதலித்திருப்பான் அவன்?”

“யாருக்குத் தெரியும், இந்தக் கால்த்து ஆண்கள்தான் இருப்பது இரண்டே கண்களாயிருந்தாலும் அவற்றை இருபதாயிரம் பெண்கள்மீது வைக்கிறார்களே!”

“அப்கோர்ஸ், அது உண்மையாயிருக்கலாம். ஆனால் அதற்கு நான் விதி விலக்கு. மதனாவைத் தவிர இதுவரை நான் வேறு யாரையும் மனத்தால்கூட நினைத்ததில்லை!”

“நானும் அப்படித்தான்; மாதவனைத் தவிர இதுவரை வேறு யாரையும் மனத்தால்கூட நினைத்ததில்லை!”

இதைச் சொல்லும்போது அவள் ‘விசுக்’கென்று விம்மவே, “டோன்ட் வொர்ரி, நீங்கள் யாரைக் காதலித்தாலும் கலியாணத்திற்கு முன்னால் உங்கள் கண்ணீர் எந்தக் காரியத்தையும் சாதிக்கப் போவதில்லை. ஏன் அனாவசியமாக அதை வீணாக்குகிறீர்கள்? ஒரு சொட்டைக்கூட வெளியே விடாமல் அப்படியே சேமித்து வையுங்கள்; கலியாணத்துக்குப் பின் பல காரியங்களைச் சாதித்துக் கொள்ள அது உங்களுக்கு உதவும். இந்தாருங்கள் கைக் குட்டை, துடைத்துக் கொள்ளுங்கள்!” என்று தன் கால் சட்டைப் பையில் இருந்த கைக் குட்டையை உருவி அவளிடம் கொடுக்கப் போனான் ஆனந்தன்.

“வேண்டாம்; என்னிடம் கைக் குட்டை இல்லா விட்டாலும் முன்றானை இருக்கிறதே, துடைத்துக் கொள்ள” என்றாள் அவள்.

“அப்கோர்ஸ், இருக்கலாம். ஆனால் அது ‘மினி முன்றானை’யா யிருக்கிறதே!” என்று ஒரு ‘மாக்ஸிமம் சிரிப்பு’ச் சிரித்தான் அவன்.

“பரவாயில்லை; இருட்டில்தானே எடுத்துத் துடைத்துக் கொள்ளப் போகிறேன!” என்றாள் அவளும் ஒரு ‘மாக்ஸிமம் சிரிப்பு’ச் சிரித்து.

“பகலாயிருந்தாலும் எனக்கு முன்னால் நீங்கள் அதைத் தைரியமாக எடுத்துத் துடைக்கலாம்; அதுவரை நீ வேண்டாமென்றாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு விடுவேன்!”

“அவரும் ஒரு சமயம் அப்படித்தான் கண்ணை மூடிக் கொண்டார்.”

“யார், மாதவனா? கிடக்கிறான், அயோக்கியன்! யோக்கியனாக நடிக்க அதைவிட வேறு ஒன்றும் தோன்றவில்லையாக்கும், அவனுக்கு? நான் வேண்டுமானால் அந்த விஷயத்தில்கூட அவனைப் பின்பற்றாமல் கொஞ்சம் திரும்பி நின்றுகொண்டு விடுகிறேன்!” என்றான் அவன், அவளுக்குத் தன் முதுகைக் காட்டி நின்று.

அவள் தன் ‘மினி முன்றானை’யை எடுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “என்ன ஆனாலும் சரி, அவரை நான் காதலிக்காமல் விடுவதில்லை என்று சபதம் ஏற்றிருக்கிறேன்!” என்றாள் உறுதி வாய்ந்த குரலில்.

“இனிமேல் என்ன ஆகப்போகிறது? அடுத்த வருஷம் இந்த நாளில் அவர்கள் கையில் ஒரு ‘குவா, குவா’ இருக்கப் போகிறது!”

“அதற்குத்தான் இடம் கொடுக்கக்கூடாது என்கிறேன் நான்”

“அது எப்படி முடியும்? இடம் கொடுக்காமல் இருக்க வேண்டியவள் மதனா அல்லவா?”

“அவளைத்தான் இடம் கொடுக்க விடக்கூடாது என்கிறேன் நான்!”

“ஓ! அதற்காகத்தான் காலையில் நடந்த கலியாணத்தின் போது கூட, நீங்கள் அவளுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு லூப்பை அன்பளிப்பாகக் கொடுத்தீர்களா? அதை ஏதோ வேடிக்கைக்காகக் கொடுத்தீர்களாக்கும் என்றல்லவா நான் நினைத்தேன்?”

“இல்லை; அதில் என் வேதனையும் கலந்திருக்கிறது!”

“வேதனைக்கு அதில் என்ன இருக்கிறது? கற்பை ஆதரிக்கிறார்களோ இல்லையோ, கர்ப்பத் தடையைத்தான் இந்தக் காலத்தில் எல்லாரும் ஆதரிக்கிறார்களே!”

“இருந்தாலும் அந்த ‘லூப்’புடன் அவர்களை விட்டு விடுவதாக இல்லை நான்!”

“விடாமல்...?” “பகையாளி குடியை உறவாடிக் கெடு என்பார்களே, அது மாதிரி நானும் அவர்களை உறவாடிக் கெடுக்கப் போகிறேன்.”

“அதற்குத்தான் நீங்கள் இங்கே வந்தீர்களா?”

“ஆமாம்.”

“அட, கடவுளே! நானும் அதற்குத்தான் வந்திருக்கிறேன்!”

“மகிழ்ச்சி, இந்த முயற்சியில் நீங்கள் எனக்குத் துணையாக வந்து சேர்ந்ததற்காக!”

“எனக்கும் மகிழ்ச்சிதான், இந்த முயற்சியில் நீங்கள் எனக்குத் துணையாக வந்து சேர்ந்ததில்!” என்று தன்னை மறந்து அவள் கையைப் பிடித்துக் குலுக்கப் போனான் அவன்.

அவள் கொஞ்சம் பின்வாங்கி நின்று, “மகிழ்ச்சி மனசோடு நிற்கட்டும்; அதற்குள் கைக்கு வந்துவிட வேண்டாம்” என்றாள்.

“வொய், வொய்?” என்றான் அவன் பதட்டத்துடன்.

“அவருடைய கையைத் தவிர வேறு யாருடைய கையும் என் மேல் படுவதை நான் விரும்பவில்லை” என்றாள் அவள்.

“அப்கோர்ஸ், அது இப்போதுதான் எனக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. நானும் அவளுடைய கையைத் தவிர வேறு யாருடைய கையும் என் மேல் படுவதை விரும்பவில்லை!” என்றான் அவனும் தன்னைச் சமாளித்துக்கொண்டு.

“ஆமாம், அவள் அந்த விரதத்தை மேற்கொள்ளாதபோது நீங்கள் மட்டும் மேற்கொண்டு என்ன பிரயோசனம்?” என்று அவள் கேட்டாள்.

“ஆமாம், அவன் அந்த விரதத்தை மேற்கொள்ளாதபோது நீங்கள் மட்டும் மேற்கொண்டு என்ன பிரயோசனம்?” என்று அவன் அவளைத் திருப்பிக் கேட்டான்.

இதைக் கேட்டதும் அவள் ஒரு ‘புல் லெங்த் சிரிப்பு’ச் சிரித்தாள்; அவனும் ஒரு ‘புல் லெங்த் சிரிப்பு’ச் சிரித்தான்.

இந்தச் சிரிப்பொலிகளை கேட்டோ என்னவோ, “யார் அது?” என்று குரல் கொடுத்தபடி மாதவன் தெருக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, அவனைக் கண்டதும் பெண் புலியான அருணா பதுங்க, ஆண் சிங்கமான ஆனந்தன் மார்பை முன்னால் தள்ளிக்கொண்டு வந்து நின்று, “ஏன், நான்தான் என்ன வேண்டும், உனக்கு?” என்றான், ‘எம்.ஜி.எம். சிங்கம்’ போல.

மாதவன் வராந்தா விளக்கைப் போட்டு அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, “அட, அப்கோர்ஸ் ஆனந்தனா? வாப்பா வா, நல்ல சமயத்தில்தான் வந்திருக்கிறாய்! உன்னால் ஒரு உதவி செய்ய முடியுமா?” என்றான் கெஞ்சும் குரலில்.

“என்ன உதவி?”

“ஊரிலிருந்து என் மாமா வந்திருக்கிறார்...”

“தெரியும்...”

“தெரியுமா அது எப்படி?”

“ரொம்ப நாட்களுக்கு முன்னால் வந்தது, வீடு தெரியவில்லை என்று அவர் வீதிவீதியாக அலைந்து கொண்டிருந்தார்; நான்தான் ‘இதோ இருக்கிறது’ என்று அவரைக் கொண்டு வந்து இங்கே சேர்த்தேன்!”

“அட, பாவி! நீ நாசமாய்ப் போக!”

“ஏண்டா, நான் செய்த உதவிக்கு நன்றியா இது? ”

“போனால் போகிறது, ஒரு டஜன் நன்றி வேண்டுமானாலும் சொல்கிறேன், இன்னும் ஒரே ஒரு உதவி செய்யடா மாமாவுக்குத் தூக்கம் வரவில்லையாம்; சீட்டாட இன்னொரு கை இருந்தால் தேவலை என்கிறார்; நீ வாயேண்டா ப்ளீஸ்!”

“ஏன், நீ ஆடினால் என்னவாம்?”

“காலையில் கலியாணம் செய்துகொண்டவன் ராத்திரி மாமாவுடன் தான் சீட்டாடிக்கொண்டிருப்பானாக்கும்?”

“அந்த விஷயம் தெரியுமா, அவருக்கு?”

“எந்த விஷயம்?”

“நீ மதனாவைக் கலியாணம் செய்துகொண்ட விஷயம்தான்!”

“தெரியாது.”

“அப்படியானால் அதை முதலில் அவரிடம் சொல்லி விட்டு...” என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றான் ஆனந்தன்.

“ஐயோ, வேண்டாண்டா; நீலாவும் வந்திருக்காடா! ப்ளீஸ், ப்ளீஸ்!” என்று அவனைக் கெஞ்சு, கெஞ்சு என்று கெஞ்சினான் மாதவன்.

“சரி, ஒரு நிபந்தனை நீயும் எங்களோடு சேர்ந்து விடிய விடியச் சீட்டாட வேண்டும்; ஆடுகிறாயா?”

“ஆடித் தொலைக்கிறேன்!”

“அப்படியானால் இன்னொரு கை வேண்டுமே? இங்கேயே இரு; இதோ போய் அழைத்துக்கொண்டு வந்து விடுகிறேன்!” என்று ‘ஜெட்’டாய்ப் பறந்தான் ஆனந்தன்.

மாதவன் மூக்கால் அழுதுகொண்டே ஒரு கடிதம் எழுதி ஜன்னல் வழியாக மதனா ‘சிறை இருந்த அறை’க்குள் போட்டுவிட்டு, ஆனந்தன் என்னும் அந்த ‘மாபாவி’யை எதிர்பார்த்து நின்றான். 

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_2&oldid=1673059" இலிருந்து மீள்விக்கப்பட்டது