சுயம்வரம்/சுய விளம்பரம்

‘சுயம்வர’த்துக்கு முன்னால்
கொஞ்சம் ‘சுய விளம்பரம்’

ந்த விளம்பரம் எனக்குப் பிடிக்காத ஒன்றுதான் ஆயினும் என்ன செய்வது? நீங்கள்தான் இப்போதெல்லாம் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே!

‘எழுத்தாளர்’ என்றால் முன்னெல்லாம் எழுதாவிட்டால்கூட ஒரு கதர் ஜிப்பாவைத் தைத்துப் போட்டுக் கொண்டு விட்டால் போதும்; உடனே நீங்கள் அவரை எழுத்தாளர் என்று ஒப்புக்கொண்டு விடுவீர்கள். இப்போது அப்படியில்லை; நீங்கள் ஒருவரை எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ள வேண்டுமானால் அந்த எழுத்தாளர் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது!

முதலில் அவர் ‘ஹிப்பி’களைப் பின்பற்றி முடி வளர்க்க வேண்டியிருக்கிறது; அப்படி வளர்த்த முடியை அவர் விதம் விதமாக அலங்கரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குப் பின் அவர் விதம் விதமாகச் சட்டை தைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது; அந்த விதம் விதமான சட்டைகளுடன் விதம் விதமான போஸ்களில் படம் எடுத்து, விதம் விதமான பத்திரிகைகளில் அவற்றை வெளியிடுவதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்யவேண்டியிருக்கிறது!

இவை மட்டுமா? விதம் விதமான பெண்களுடன் வேறு அவர் ‘உலா’ வர வேண்டியிருக்கிறது; தன்னால் முடியாவிட்டாலும் வேறு யாருடைய செலவிலாவது வீட்டுக்கு ஒரு டெலிபோனும், போக்குவரத்துக்கு ஒரு காரும் அவசியம் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

இத்தனையும் இல்லாத ஒருவன் என்னதான் எழுதிக் கிழித்தாலும் நீங்கள் எங்கே அவனை எழுத்தாளன் என்று மதிக்கிறீர்கள்? நீங்கள் எங்கே ‘எழுத்தாளன்’ என்று ஒப்புக் கொள்கிறீர்கள்?

இந்த லட்சணத்தில் இது ‘விளம்பர யுக’மாக மட்டுமல்ல, ‘கவர்ச்சி யுக’மாகவும் இருந்து தொலைகிறது.

இந்த யுகத்தில் ‘எழுத்துக் கவர்ச்சி’யைத் தவிர வேறு எந்தக் கவர்ச்சியும் இல்லாத நான், இருந்தாலும் அவற்றையெல்லாம் அன்றிருந்து இன்றுவரை அடியோடு வெறுத்து வந்திருக்கும் நான், இப்போதுதான் ‘எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம்?’ என்பதை உணர்கிறேன். உணர்ந்து, எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் வருந்துகிறேன்.

போகட்டும்; நடந்ததை மறந்து நிகழ்ந்ததைக் கொஞ்சம் கவனிப்போமா?...

என் வாழ்க்கையில் 1946-ம் ஆண்டை நான் சிறப்பான ஆண்டு என்று சொல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான் தமிழ்நாடு அரசினர் முதன்முதலாக அளிக்க முன்வந்த சிறுகதைகளுக்கான பரிசை நான் முதன் முதலாகப் பெற்றேன். அதைத் தொடர்ந்து வெளியான ‘பாலும், பாவையும்’ என்ற நாவல் மக்களின் பேராதரவைப் பெற்று, அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது.

அந்த நாவல் வெளியான காலம் ‘சாகித்திய அகாடமி’ என்ற ஓர் அமைப்பு தோன்றாத காலம். தோன்றியிருந்தால், ‘பாலும் பாவையும்’ கூட அந்த நாளிலேயே அது அளிக்கும் பரிசைப் பெறும் தகுதியை முதன்முதலாகப் பெற்றிருக்கலாம்.

‘மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லப் படுவது உண்மையானால், அதன் தீர்ப்பு மட்டும் வேறு விதமாகவா இருந்திருக்கப் போகிறது?

அது மட்டுமல்ல; ‘திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்று சொல்லிவிட்டுப் போனான் பாரதி. அந்தப் புலமையை என் கதைகளிலும் கண்டதால்தானோ என்னவோ, அவற்றில் பல இந்திய திராவிட மொழிகளில் மட்டுமல்ல; உலகமெங்கும் உள்ள பல முற்போக்கு நாடுகளில் பல அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ‘பாலும் பாவையும்’ என்ற நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள், பல சிறுகதைத் தொகுப்புகள், பல கட்டுரைத் திரட்டுகள் எல்லாம் வெளிவந்திருக்க வேண்டும்.

வரவில்லை - ஏன்?

காரணம் வேறு யாருமல்ல; நானே!

‘ஏதோ ஏதோ ஒரு மயக்கம்’ என்கிறார்களே, சினிமாவில் வரும் காதலர்கள் - அப்படி ஒரு மயக்கம் அடியேனையும் அந்நாளில் ஆட்கொண்டது. அதன்காரணமாகப் பல வகைகளில் எனக்குக் ‘கற்பகத் தரு’வாக இருந்து வந்த ‘கல்கி அலுவலக’த்தை விட்டு, கல்கி அவர்கள் எச்சரித்தும் கேளாமல் விலகினேன்.

நடக்கக்கூடாத இது நடந்தது 1951-ம் ஆண்டில்.

அப்போது ‘சுத்த சுயமரியாதை வீர’னாக இருந்து வந்த நான், இப்போது சில இடங்களில், சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு போவதுபோலப் போயிருந்தால் நானும் மற்றவர்களைப் போல சினிமா உலகிலும் பிரகாசித்திருக்கலாம். அந்த ‘புத்தி’ அப்போது இல்லாததால் அதிலிருந்தும் விலகி, சுதந்திர எழுத்தாளனாக இருந்து ‘சுடர்’ விடப் பார்த்தேன். நான் விட முயன்றாலும் என்னை விட விரும்பாத சுயமரியாதையோ அதற்கும் குறுக்கே நின்று தொலைந்தது.

‘இதெல்லாம் எதற்கு, சொந்தமாக ஒரு பத்திரிகையே நடத்திப் பார்த்துவிடுவோமே? என்று 1954-ம் ஆண்டில் ‘மனித’னை ஆரம்பித்தேன். மக்கள் ஆதரவு அதற்கு அமோகமாக இருந்தும், விற்பனையாளர்கள் செய்த ‘சத்திய சோதனை’யாலும், அந்தச் ‘சத்திய சோதனை’ யிலிருந்து அவ்வப்போது மீள்வதற்கு வேண்டிய பொருளாதார வசதியோ, மீட்பதற்கு வேண்டிய நண்பர்களோ இல்லாததாலும் அதுவும் பிறந்த ஓராண்டு காலத்துக்குள்ளேயே பிராணனை விட்டுவிட்டது.

இதனால் எனக்கு நேர்ந்த இழப்புகளிலெல்லாம் மிகப் பெரிய இழப்பு, என்னுடைய நீண்ட நாள் நண்பரும், ஸ்டார் பிரசுரத்தின் உரிமையாளருமான திரு. ராமநாதனின் நட்பை நான் இழந்ததாகும்.

அதற்குப் பின் எத்தனையோ பிரசுரகர்த்தர்கள், எத்தனையோ பிரசுரங்கள் - ஒன்றும் உருப்படியாக வரவில்லை. வந்தாலும் அவை புத்தக உலகில் நீடித்து நிற்க அந்தப் புண்ணியவான்கள் விடவில்லை.

இந்தக் ‘கசப்பான அனுபவங்க’ளுக்குப் பிறகு, நான் இப்போது மீண்டும் நண்பர் ராமநாதன் அவர்களுடனும், ஸ்டார் பிரசுரத்துடனும் தொடர்பு கொண்டுள்ளேன். அந்தத் தொடர்பின் முதல் நூலாக இந்த ‘சுயம்வரம்’ என்ற நாவல் வெளியாகியிருக்கிறது. இது ‘டீன் ஏஜர்’ஸுக்காக எழுதப்பட்ட நாவல்தான் என்றாலும், இதில் வரும் ‘ஆனந்த’னைப் போலவோ, ‘அருணா’வைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக் கூடாது என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.

பெண்களைப் பல வகைகளிலும் ‘தெய்வ’மாகப் போற்றி வந்தது இந்த நாடு; ‘மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று பாரதியைப் பொங்கியெழுந்து பாடச் செய்தது இந்த நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை வெறும் ‘போகப் பொருள்’களாகக் கருதி, அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், ஒளிந்து கொள்ளாமலும் சில ஆண்கள் கவர்ச்சிக்காக, வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் கதைகள். அவற்றை கூசாமல் வெளியிடும் ஏடுகள்...

கண்ணராவி, கண்ணராவி!

அதைவிடக் கொடுமை அம்மாதிரி கதைகளைத்தான் நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்கள் என்று அவர்கள் சொல்வது!

அந்த ரகத்தில் சேராத இந்த நாவலை அவர்கள் சொல்லும் ‘டீன் ஏஜர்’ஸாரும் படிக்கலாம், ‘டீன் ஏஜர்ஸ்’ அல்லாதவர்களும் படிக்கலாம். படித்துவிட்டுத் தங்கள் கருத்தை எனக்கு எழுதவும் எழுதலாம்.

இந்த நூலைத் தொடர்ந்து என்னால் எழுதப்பட்டுள்ள மற்ற நூல்களும் வெளியாவது நண்பர் ராமநாதனின் கையில் மட்டும் இல்லை; அது உங்கள் கையிலும் இருக்கிறது.

இப்போதைக்கு ‘இது போதும்’ என்று நினைக்கிறேன்; மற்றவை பின்னர்.

வணக்கம்,
விந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/சுய_விளம்பரம்&oldid=1673057" இலிருந்து மீள்விக்கப்பட்டது