சுயம்வரம்/அத்தியாயம் 1

சுயம்வரம்


எங்களுக்கு நாங்களே நிச்சயித்த
வண்ணம் நடந்த திருமணத்திற்கு...

 1 


காலைச் சாப்பாடு முடிந்து, சிற்றுண்டி வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதன் அறிகுறியாகவோ என்னவோ, சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, அன்றைய நாளிதழைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் சம்பந்தம்.

கீழே உட்கார்ந்து ஏதோ ஒரு வாரப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த அவருடைய ‘பட்ட மகிஷி’ சாரதாம்பாள், இருந்தாற்போல் இருந்து ‘குபீ’ரென்று சிரித்தாள்.

‘என்ன விஷயம்?’ என்றார் சம்பந்தம். தம் கையிலிருந்த நாளிதழை மடித்துக் கீழே வைத்துவிட்டு.

“இந்த ‘ஜோக்’கைப் பார்த்தீர்களா? யாரோ ஒருத்தி கையில் ஸ்வீட்டுடன் திடீரென்று உள்ளே நுழைந்து பிள்ளையைப் பெற்ற ஒருவரை நெருங்கி, வாயைத் திறங்க; ஸ்வீட் போடறேன் என்றாளாம்; ‘யாரம்மா, நீ? எதற்காக என் வாயில் ஸ்வீட் போடப் போகிறாய்?’ என்று அவர் ஒன்றும் புரியாமல் கேட்டாராம்; நான்தான் உங்கள் மருமகள்; எனக்கும் உங்கள் பிள்ளைக்கும் நேற்றுத்தான் ரிஜிஸ்தர் ஆபீசில் கலியாணம் நடந்தது. அவர் வெட்கப் பட்டுக்கொண்டு வெளியே நிற்கிறார் என்றாளாம் அவள்” என்று, தான் படித்துச் சிரித்த ஜோக்கை அவருக்குச் சுட்டிக் காட்டினாள் அவள்.

“நடக்கும், நடக்கும்; இந்தக் காலத்தில் எதுதான் நடக்காது? எல்லாம் நடக்கும்” என்று சொல்லி அவர் வாயை மூடுவதற்குள், அவருடைய ஒரே மகனான மாதவன் யாரோ ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக வந்து அவர் காலடியில் விழுந்து, “இன்று காலையில்தான் நாங்கள் திருநீர்மலையில் கலியாணம் செய்துகொண்டோம், அப்பா எங்களை ஆசீர்வதியுங்கள்!” என்றான் சிரம் தாழ்த்தி.

அவரோ ஆசீர்வதிப்பதற்குப் பதிலாகச் சாபம் கொடுப்பவர்போல் துள்ளி எழுந்து, “என்ன துணிச்சலடா, உனக்கு? யார் இவள்?” என்று கத்தினார்.

“ஏற்கெனவே நான் சொன்ன அதே மதனாதான் அப்பா, இவள்! ‘டெலிபோன் ஆபரேட்ட’ராக வேலை பார்க்கிறாள்!” என்றான் மாதவன்.

“ஒகோ இனி உனக்கு அப்பாவும் வேண்டாம், அம்மாவும் வேண்டாம் - மதனா இருந்தால் போதும்; அப்படித்தானே?”

“போதாது, அப்பா கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் ஒரு குடும்பத்தில் உங்களைப்போல் ஒரு வேலையும் இல்லாத பெரியவர்களும் உடன் இருப்பதுதான் நல்லது!”

“ஏன், வீட்டைக் காக்கும் நாயாக இருக்கவா? இல்லை, கூர்க்காவாக இருக்கவா?”

“இரண்டில் எதுவாகவும் இருக்க வேண்டாம், நீங்கள் ஏற்கெனவே இருந்ததுபோல் எனக்கு அப்பா - அம்மாவாகவும், என்னைக் காதலித்து, கலியாணமும் செய்து கொண்டு, எனக்கு இல்லத்தரசியாகவும், உங்களுக்கு ‘இனிய மருமக’ளாகவும் வந்திருக்கும் இவளுக்கு நீங்கள் மாமனார் - மாமியாராகவும் இருந்தால் போதும்!” என்றான் பையன் படுசமர்த்துடன்.

இதைக் கேட்டதுதான் தாமதம்; “இருப்பேன்டா, இருப்பேன் இன்றைக்கு அடுப்படி ஆளாயிருந்து, நாளைக்கு அழுகிற பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொள்ளும் ‘ஆயா’வாக என்னை இருக்கச் சொல்கிறாயா, நீ அதெல்லாம் என்னிடம் நடக்காது!” என்றாள் சாரதாம்பாள் குறுக்கே பாய்ந்து.

“நீங்கள் சொன்ன நீலாவை நான் மணந்து கொண்டிருந்தால் நீ அடுப்படிக்கு அதிகாரி, அழுகிற பிள்ளைக்குப் பாட்டி. இல்லையென்றால் அடுப்படி ஆள்; அழுகிற பிள்ளைக்கு ஆயா! அநியாயம் அம்மா, அநியாயம்!” என்றான் அந்த ‘ஹீரோ’, அம்மாவின் பக்கம் திரும்பி.

“இனி அவனுடன் என்னடி, பேச்சு? நீ வா, இந்தப் பட்டணத்துக்கே ஒரு முழுக்கைப் போட்டுவிட்டு நம்முடைய கிராமத்துக்கு நாம் போய்விடுவோம்!” என்று அன்றே மூட்டையைக் கட்டிவிட்டார் சம்பந்தம்.

மாதவன் என்னும் அந்த ‘மாபெரும் லட்சியவாதி’ அவரைத் தடுக்கவில்லை. தடுக்காததோடு மட்டுமல்ல; “காலையில் நடந்த கலியாணத்தைத்தான் கூட இருந்து நடத்தி வைக்கவில்லையென்றால், இரவு நடக்கப்போகும் ‘சாந்திக் கலியாண’த்தையாவது உடனிருந்து நடத்தி வைக்கக் கொடுத்து வைத்திருக்கக் கூடாதா, அவர்கள்? பாவம்! ஐயோ, பாவம்!” என்று அவன் அவர்களுக்காக இரங்கிக் கொண்டே, மதனாவின் தலையிலிருந்த மல்லிகை மொட்டுக்களில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தான்.

‘சாந்திக் கல்யாணம்’ என்றதும் முகம் சிவந்த மதனா, “ஐயே! மூஞ்சைப் பாரு மூஞ்சை!” என்றாள் பட்டிக்காட்டுப் பெண்ணைப் போல ஒரு முறுக்கு முறுக்கி நின்று.

“இன்னுமா உன் மூஞ்சியையே பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறாய் என்னை? இப்படி வா!” என்று கதாநாயகியின் கையைப் பற்றினான் கதாநாயகன்.

“ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது, கையை விடுங்கள்!” என்று அவன் பற்ற வந்த கையை உதறியெறிந்தாள் அவள்.

“என்னடியம்மா, உனக்கு ‘காதல் இல்லாமல் கலியாணமா?’ என்றாய். காதலித்தோம்; கலியாணமும் செய்து கொண்டோம். இப்போது ‘ஊடல் இல்லாமல் கூடலா?’ என்கிறாயா? இல்லை, பால், பழம், பட்சணம், பட்டு மெத்தை, பூச்சரம், தொங்கும் கட்டில், புகையும் நறுமணம், புகையாத அத்தர், புனுகு - இதெல்லாம் இல்லாமல் ‘சாந்திக் கலியாண’மா என்கிறாயா? அப்படியென்றால் இரு; இதோ, நானே போய் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்துவிட்டு வருகிறேன்!” என்று அவன் சிட்டாய்ப் பறந்தபோது, ‘களுக்’கென்ற சிரிப்பொலி அவனுடைய காதில் விழுந்தது.

திரும்பிப் பார்த்தான்; உதட்டைக் கடித்த மதனா கடித்த சுவடு தெரியாமல், “வவ்வவ்வவ்வே!” என்று அவனுக்கு ‘அழகு’ காட்டினாள்!

அன்றிரவு; ‘சாந்திக் கலியாண’த்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு, ‘அப்பாடா!’ என்று பட்டு மெத்தையின்மேல் சாய்ந்தான் மாதவன்.

அப்போது ‘கும்’மென்ற மல்லிகை மணத்துடன் சர்வாலங்காரதாரியாக அங்கே வந்து நின்ற மதனா, “கொஞ்சம் பொறுங்கள்; பாலைச் சுண்டக் காய்ச்சி, பாதாம் பருப்பை அதில் அரைத்துக் கலக்கி எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்!” என்று திரும்பினாள்.

“நீயாகவே வந்துவிடு; உன்னைப் பிடித்து உள்ளே தள்ளி வெளியே தாழ் போட இங்கே எந்தத் தோழியும் இல்லை!” என்றான் ஹீரோ சிரித்துக்கொண்டே.

“உக்கும்” என்று “ஹீரோயின்” தன் அழகான வதனத்தை இன்னும் அழகாக ஒரு வெட்டு வெட்டித் திருப்பிக்கொண்டு, அடுப்படியை நோக்கி “அழகு நடை” நடந்தாள்.

இன்பம் உச்ச கட்டத்தை எட்ட இருந்த இந்தச் சமயத்தில், வெளிக் கதவை யாரோ ‘தடதட’வென்று தட்டும் சத்தம் கேட்டது. “இது என்ன கரடி, பூஜை வேளையில்?” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்று கதவைத் திறந்தான் கதாநாயகன்.

“என்ன மாப்பிள்ளை, அப்படிப் பார்க்கிறீங்க? என்னைத் தெரியவில்லை, உங்களுக்கு? ‘டிசம்பர் சீசனு’க்காக வந்திருக்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே அவன் மாமா மகாலிங்கம் குடும்ப சமேதராக உள்ளே நுழைந்தார்.

இந்த எதிர்பாராத அதிர்ச்சியால் தாக்குண்ட கதாநாயகி, பாலை அடுப்பிலேயே விட்டுவிட்டுப் பறந்து போய்ப் படுக்கையறைக்குள் நுழைந்து, கதவைப் ‘படா’ரென்று சாத்தி உள்ளே தாழிட்டுக் கொண்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=சுயம்வரம்/அத்தியாயம்_1&oldid=1673058" இலிருந்து மீள்விக்கப்பட்டது