6. மையீரோதி மடநல்லீரே

“மையிரோதி மடநல்லிரே, மையிரோதி மடநல்லீரே” என்று மொழிந்து வாய்வெருவும் இம்மட நல்லாள் யாவள்? இவளது மலர்முகம் வாடியுளது; மழைக்கண் நீர் துளிக்கின்றது; வாயிதழ் மெல்ல அசைகின்றது; மெய்யிலும் சிறிது தளர்ச்சி புலனாகின்றது. இவளை உற்று நோக்குவோம். இவளது மனத்தே பெருந்துயர் நின்று அலைக்கின்றது; இவள் அடிக்கடி மருண்டு நோக்குகின்றாள்; ஆம், அவளது உள்ளத்தே அச்சம் பிறந்திருக் கிறது; என்னோ காரணம்?”

இவ்வாறு தம்மனத்தோடு சொல்லாடி வரும் இப்பெரியார் உடையாலும் நடையாலும் சிறந்த சான்றோர் போலத் தோன்றுகிறார். இவர் பின்னே செல்வோம். அதோ தென் மலையின் அடியில் நிற்கும் பாறைமீது ஏறி நிற்கிறார். பகலவனும் உச்சிகடந்து மேலைத்திசையை நோக்குகின்றான். வெயிலின் வெப்பமும் மிகுதியாக இல்லை. காடும் பசுந்தலை பரப்பி வெண் பூ விரிந்து நறுமணம் கமழ்கின்றது. மானினம் புல்மேய்ந்து மகிழ்ச்சி மிகுகின்றன. கிள்ளையும் புறாவும் கூட்டங் கூட்டமாய்ப் பறந்து திரிகின்றன. தினைப்புனங்களிலும் கதிர்கள் பால்கட்டிச் சின்னாளில் முற்றும்பக்குவத்தேயுள்ளன. இதோ, இச்சான்றோர் மலையடியின் மேற்றிசையில் உள்ள தினைப்புனத்தே தம்கட் பார்வையைச் செலுத்தி ஊன்றி நோக்குகின்றார்; ஏன்? நன்று, நன்று. அப்புனத்தருகே நிற்கும் வேங்கை மரத்தின் அடியில் வீற்றிருக்கும் உருவம் யாது? தெய்வமோ? பெண்ணோ? தெரிந்திலதே! ஆம், பெண்ணே: அவள் என்ன செய்கின்றாள்?

இதோ இச்சான்றோரும் அவளிருக்கும் திக்கு நோக்கியே செல்கிறார், இவர் ஏன் அவள் அறியாவண்ணம் புதர்களிடையே பதுங்கிப்பதுங்கிப் போகின்றார். அம்மங்கை யருகே செல்கிறார் போலும். அவளோடு ஏதேனும் சொல்லாட விரும்புகின்றனரோ? அற்றன்று; அவள் பேச்சொலியைக் கேட்கும் அளவிலிருக்க வேண்டுமென்று கருதுகின்றார் போலும். இன்றேல், இவர் அப்புதரடியில் அமர மாட்டாரன்றோ? என்ன நடக்கின்றது, காண்போம், நெஞ்சே, நீ ஒன்றும் வேறாக நினையாதே; சால்பு குன்றத் தகுவனவற்றைச் சான்றோர் செய்யார்.

“மையிரோதி, மடநல்லீரே” என்று மொழிந்த அம்மன்னவன் இதனையறிந்தால் என்ன நினைவான்? 'மையிரோதி' என்று அழைத்த அம் மணிமொழி இன்னும் என் செவியகம் நிறைய ஒலிக்கின்றதே! மட நல்லீரே என்ற அவரது மாண்பு என் மனத்தே அவரை உருப்படுத்தி விட்டதே! அவரது வாய்மை காணமாட்டாத என் தாயது தாய்மை என்ன பயனுடையதாம். மேனி மெலிகின்றேன்; வேறொன்றும் நினை வில்லேன். ஏதுக்கு என் தாய் இவ்வாறு அவ்வேலனை வேண்டுகின்றாள்.'

"வினவின் என்னையோ அவனை?" என்றொரு சொல்லெழுகின்றது. மேலே கூறியவாறு தானே பேசிப்புலம்பிய மங்கை சுற்று முற்றும் நோக்குகின்றாள், வாடிய முகம் மலர்கின்றது; பணித்த கண் அருள் வழிகின்றது; விளர்த்தவாய் நாவால் நீர் சுலவப் பெறுகின்றது. திணைப்புனத்தின் உள்ளிருந்த பெண்ணொருத்தி, தினைத்தாளை விலக்கிக் கொண்டு வேங்கையடிக்கு வருகின்றாள். இவள் யார்? பொறுப்போம்; இவர்கள் பேச்சிலிருந்துதான் இவளை இன்னாளென அறிதல் வேண்டும்.

“தோழி, முடிந்து போயிற்றோ? என் தாய் இனி என்ன செய்யப் போகிறாளாம்? உள்ளதன் உண்மையை உள்ளவாறு காணும் அறிவுபெற்றும், மக்கள் அதனைச் செவ்வே பயன் கொள்ள அறியாது அலமரு கின்றனரே!இவர்கட்கு அறிவுச்சுடர் உண்டாகுமோ? அஃது உண்டாகு நாள் என்றோ தெரிய வில்லையே" என்கின்றாள். வேங்கையடியில் வீற்றிருக்கும் மெல்லியல்.

தோழி :- அம்மா, நாமே அவனை வினவினால் என்?

மெல்லி :-(அச்சத்தோடு) அவனையா? அந்த வேலனையா?அவனை என்னென்று வினவுவது? -

தோழி :- முருகனது வேல் அவன் கையிலுள்ள வேல். அவன் ஆடும் வெறியாட்டு அம் முருகன் பொருட்டு. அவ்வேல் அறிவின் வடிவம், ஆகவே, அவனுக்கு நல்லறிவும் உளதாயிருக்கும். அதனால், அவனது அறிவு வெளியாகுமாறு நாமே அதனை வினவுவோமே?

மெல்லி :-எப்படி வினவுவது?

தோழி :- எப்படியா? அப்படித்தான்?

மெல்லி :- எனக்கு விளங்கவில்லையே?

தோழி :- ஏன் விளங்கவில்லை? அன்று நடந்ததை நினைவில் கொண்டு மறைந்த சொற்களால் அவனை வினவுவது.

மெல்லி :-(மயங்கிய பார்வையுடன்) என்று நடந்ததை?அதனை நன்றாகத் தான் சொல்.

தோழி :-அன்று நாம் தட்டை கொண்டு குருவியோட்டி விளையாடி யிருந்தோமன்றோ?

மெல்லி :-ஏன், நாம் இன்றும்தான் அவ்வாறே செய்கின்றோம்.

தோழி :- அன்று நம் தட்டை முறிந்து போகவே, இதோ இம்மூங்கிற் புதரிலிருந்து மூங்கிலொன்றை யறுத்துத் தட்டையொன்று செய்தோமே, அஃதேனும் நினைவிலிருக்கிறதோ?

மெல்லி :-(புன்முறுவலுடன்). ஆம். பெரு முழக்கம் செய்து கொடிய ஓசையை உண்டுபண்ணிற்றே, அந்தத் தட்டை செய்தோமே, அன்றா? தோழி :-அதனால் தானே நாம் அதை “வெவ்வாய்த் தட்டை”என்றோம்.

மெல்லி :-அதனாலா, அன்றன்று; அதனைச் சுழற்றிய மாத்திரையே, தினைப் புனத்தில் படிந்த பறவைகள் அனைத்தும் பறந்து ஓடிவிட்ட தோடு, தினைமணிகள் பலவும் சிதறிவிட்டன.

தோழி :-எதனாலோ ஒன்று. அப்போது நாம் அந்த வேங்கை மரத்தின் கவட்டில் கட்டின பரண் மீது இருந்தபோது என்ன நடந்தது?

மெல்லி :- வண்டினம் வந்து பொன்னிறம் கொண்ட பூவில் தேன் உண்டு இன்பமாக முரன்றது. நாம் அதன் இன்பவோசையைக் கேட்டு அதன் மீது கருத்தைச் செலுத்தி நின்றோம்.

தோழி :-அப்போது நாம் திடுக்கிட்டுச் சட்டெனப் பின்புறம் . திரும்பினோமே, ஏன்?

மெல்லி :-(நாணித் தலை கவிழ்கின்றாள்)

தோழி :-"மையிரோதி,மடநல்லீரே"என்றொரு காளை நம்மை அழைத்தானன்றோ? அவன் ஏன் நம்மை "மையிரோதி மடநல்லிரே" என்றான். அதனை யறிவாயோ?

மெல்லி :-நம் பின்நின்ற அவர் கண்ணிற் பட்டது நம் கூந்தல். அதனால் அவ்வாறு அழைத்தார்? இது தானே காரணம்?

தோழி :- இதனை துணுக்கமாக அறிந்து கொள்ளும் உனக்கு இன்னும் நான் என்ன சொல்வது?

மெல்லி :- இல்லை யில்லை. இது தான் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. அது கிடக்கட்டும் நீ சொல்.

தோழி :-அப்போது அவன் நம்மை என்ன கேட்டான்?

மெல்லி :-கெடுதி வினவினார்.

தோழி :- அது தெரியாதா? என்ன சொல்லித் தம் கெடுதி வினவினான்?

மெல்லி :-யான் எய்த அம்புபட்டுப் புண் மிகுந்து பெருந் துயர் கொண்டு யானை யொன்று தன் உயர்ந்த மருப்பு விளங்க இப்புனத் தருகே வந்த துண்டோ? என்றார்.

தோழி :- அவனுடன் வந்த நாய்கள் குரைத்துக் குதித்து நாற்புறமும் ஓடிவர, அவன் சிறிது நேரம் கழிந்தபின் சென்றானன்றோ?

மெல்லி :-தோழி, அவரது சாந்தணிந்த மார்பும், வில் சுமந்த தோளும், தனித்திருந்த நம்மிடத்தே அவர் சொல்லாடிய தகைமையும் என் நெஞ்சைக் கவர்ந்து கொண்டன. அவர் சொல்லிய சொற்கள் இன்னும் என் செவியில் ஒலிக்கின்றன. அவர் பொருட்டு நாம் வருந்தும் இவ்வருத்தத்தை அன்னை இன்னும் அறியவில்லையே. இதற்கொரு வழியுமில்லையா?

தோழி :-அதற்குத்தான் தக்க வழிதேடப்படுகிறதே? அதற்குள் நீ ஏன் துயர்கின்றாய்?

மெல்லி :- வேலனைக்கொண்டு வெறி யயர்கின்றனளே அன்னை; இதுவோ வழி.

தோழி :- அதுதான் என்று நம் தாயும் நினைக்கின்றாள். அவ்வேலனும் அவட்குத் தக்கவாறு தான் கூறியுள்ளான்.

மெல்லி:- என்ன அது?

தோழி :- என்னவா? "எம் இறை அணங்கலின் வந்தன்று இந்நோய், தணி மருந்து அறிவல்" என்று கூறியுள்ளான்.

மெல்லி :- (திடுக்கிட்டு) உண்மையாகவா? வேலனும் இவ்வாறு பொய் கூறுவானா? வேலனது இறைவன் முருகனன்றோ; அவன் நம்மை அணங்கினவன் இல்லையே; பொய்மொழிந்து ஒழுகும் வேலன் பொய்ம்மையை நம் தாய் அறிந்திலளே, இதற்கு என் செய்வது? தோழி :- இப்படித்தான் வேலன் கூறுவான். அறியா மாக்கள் அதனை உண்மை யென்று கருதுவர், இன்றும் அதைத் தான் நம் தாயும் கேட்கப் போகின்றாள்.

மெல்லி :- இன்றும் அதைத்தானே சொல்லப் போகின்றான்?

தோழி :-ஆமாம். ஆனால், இன்று யானும் வேலனைக் கண்டு ஒன்று கேட்கப் போகிறேன். என் கேள்வியால் வேலன் பொய்ம்மையும், நம் ஒழுக்கத்தின் மெய்ம்மையும் விளக்கமடையப் போகின்றன.

மெல்லி :-எப்படி? எனக்கு அதை விளங்கச்சொல்.

தோழி :- வேலன் இன்று நம் தாயிடம் முருகன் நம்மை அணங்கினன்; என்பானாயின், வெறி கொள்வேல'உனது இறைவன், மத மிக்க வேழத்தின் மெய்யில் ஊடுருவத் தன் அம்பைச் செலுத்தி, பின் அதன் அடிச் சுவடுபற்றி வேட்டம் செல்லுமோ? என வினவக்கருதுகின்றேன். வினவின் என்?

மெல்லி :-(முறுவலித்து) வினவின் என்னாம்? யானை வேட்டம் புரிந்து வந்த வீரன் ஒருவனை நாம் நமக்கு இறைவனாகக் கொண்டுள்ளோம் என் தெரிந்து கொள்வான்.

தோழி ஏன் சிறைப்புறத்தை நோக்குகின்றாள். அங்கே ஏன் வேலிக்கண் படர்ந்துள்ள தழைகள் அசைகின்றன. நல்லது. அங்கிருந் தொரு வல்விற் காளை என் மேற்குத் திசை நோக்கிச் செல்கின்றான். அவன் ஏதோ தனக்குள் சொல்லிக் கொள்கின்றான்; அவன் பின்சென்று கேட்போம்.

காளை:- இனி, நமக்கும் இம் மெல்லியல் நல்லாளுக்கும் உண்டாகிய ஒழுக்கம் அவள் தாய்க்கும் தமர்க்கும் புலனாகி விடும். ஆகவே, இவளை இனி இங்கே தலைக்கூடல் அரிது. ஆகவே, இனிச் சான்றோரைச் செலுத்தி வரைந்து கொள்வதே கடன்.


ஆ, இதோ இச்சான்றோரும் நம்முடன் வந்து அவன் சொல்லிக் கொள்வதைக் கேட்டு மகிழ்கின்றார். இவர் என்ன சொல்லுகின்றார் பார்ப்போம்.

சான்றோர்:- இவ்வில்வீரன் செய்த முடிவே சிறந்தது. இவன் இம் முடிவிற்கு வரக் காரணம் யாது? இத் தோழியின் நல்லுரையன்றோ? இவளது அறிவுடைமையை என்னென்பேன், இத்தலை மகன் சிறைப்புறம் நிற்பதை யுணர்ந்து அவன் இம் முடிபு செய்யுமாறு பேசிவிட்டாள். அதுமட்டோ, தலைமகட்கும் ஓராற்றால் தேறுதல் கூறிவிட்டாள். கற்புடை மகளிர் கணவனையல்லது பிற தெய்வங்களையும் மனத்தாலும் நினையார். வேலன் முருகன் அணங்கினான் என்றவழி, தலை மகள் அம் முருகனை வணங்கல் வேண்டிவரும். அஃது அவள் கற்பு நெறிக்கு மாறாகும். அதனின்றும் இவள் அவளைத் தப்புவித்துவிட்டாள். வெறியும் விலக்கியாகி விடுகிறது. நல்லது, நாம் இன்று இங்கே வந்ததும் நன்றே யாயிற்று. இவளது செய்கை ஏனைமகளிர்க்கு நன்னெறி காட்டும் நயமுடையது. ஆகவே, இதனைப் பாட்டிடை வைத்துத் தமிழுலகில் நிறுவுவேன்.”

சான்றோர், தம் உடைமடிப்பில் இருந்து ஓர் ஓலை நறுக்கும் எழுத்தாணியும் எடுக்கின்றார், மரத்தடியில் அமர்ந்து. தாம் கருதியதனை எழுதுகின்றார். இவர் எழுதிக் கொண்டிருக்கட்டும். நாம் அம்மகளிர் இருக்குமிடம் செல்வோம்.

தோழி :- அதுமட்டுமா, நம் தாயும் நமக்கும் தலைமகனுக்கும் உண்டாகிய தொடர்பை யறிந்து கொள்வாள். பின்பு, நம் கற்பு நெறிக்கும் இழுக்கு உண்டாகாதே.

மெல்லி :- தோழி, நீ செய்வது நன்றே. இப்போதே விரைந்து சென்று அதனைச் செய்.

தோழி :-நன்று. அவ்வாறே செய்கின்றேன். (போதல்)

மெல்லியலும் தன் நல்லகம் புகுகின்றாள்; தோழியும் கண்மறைவில் சென்றுவிட்டாள். இச்சான்றோர் தாம் எழுதியதை முடித்துக் கொண்டு படிக்கின்றார்; அதனைக் கேட்போம்;

"அம்ம வாழி தோழி நம்மலை
அமையறுத் தியற்றிய வெவ்வாய்த்தட்டையின்
நறுவிரை யார மறவெறிந் துழுத
உளைக்குரற் சிறுதினை கவர்தலிற் கிளையமல்
பெருவரை யடுக்கத்துக் குரீஇ யோப்பி
ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவீ
வேங்கையங் கவட்டிடை நிவந்த விதணத்துப்
பொன்மரு ணறுந்தா தூதுந் தும்பி
இன்னிசை யோரா விருந்தன மாக;
மையீ ரோதி மடநல் லிரே
நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
எவ்வமொடு வந்த வுயர்மருப் பொருத்தல்நும்
புனத்துழிப் போக லுறுமோ மற்றெனச்
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப்புடை யாடச்
சொல்லிக் கழிந்த வல்விற் காளை
சாந்தா ரகலமுந் தகையும் மிகநயந்
தீங்குநாம் உழக்கும் எவ்வ முனராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
அன்னை தந்த முதுவாய் வேலன்
எம்மிறை யணங்கலின் வந்தன் றிந்நோய்
தணிமருந் தறிவல் என்னு மாயின்,
வினவி னெவனோ மற்றே, கனல்சின
மையல் வேழ மெய்யுளம் போக
ஊட்டி யன்ன வூன்புர ளம்பொடு
காட்டுமான் அடிவழி யொற்றி
வேட்டஞ் செல்லுமோ நும்மிறை யெனவே.”

- (அகம், 388)


பாட்டின் நலம் காண்டல்

இதன்கண் "அம்மவாழி" யென்பது தொடங்கி, "இருந்தனமாக" (9) என்பது வரை, மெல்லியல் நல்லாள் வல்விற்காளையாகிய தலைமகன் கெடுதிவினவி வருங்கால் இருந்தநிலை விளக்கப்படுகின்றது. இங்கே அவர்கள் மூங்கில் அறுத்து 'வெவ்வாய்த் தட்டை" செய்து. அதனால் புனத்திற் படிந்த குருவிகளை ஒப்பின செய்தி, "அமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்," (2) "பெருவரையடுக்கத்துக் குருவியோப்பி" (5) என்ற அடிகளால் குறிக்கப் படுகிறது. அக்குருவிகளை ஒப்பியதற்குக் காரணம் கூறுவதற்காக, “உளைக் குரல் சிறுதினை கவர்தலின்" (4) என்கின்றார். அத்தினையின் அருமையை உணர்த்தும் பொருட்டு, அத்தினைப்புனம் ஆங்கிருந்து சந்தன மரங்களை முற்ற எறிந்து, அவ்விடத்தையும் அரிதின் உழுது பயிர் செய்யப்பட்டதென்கின்றார். இதனை “நறுவிரை யாரம் அற எறிந்து உழுத உளைக் குரல் சிறுதினை" என்று பாடியுள்ளார். வந்து படிந்த குருவிகளும் ஒன்றிரண்டல்ல. பல என்றற்கு “கிளையமல் குரீஇ" என்கின்றார்.

இனி, இத்தினைப் புனமிருந்த இடம் தென்மலையின் சரிவு; தினைமுற்றும் காலம் வேங்கை மலரும் காலமாகும். அப்போது தான் அப்புனம் காக்கப் படுதல் வேண்டும். தினைப்பயிரும் மிக வுயரமாக வளர்ந்திருந்தது. ஆகவே, புனங்காத்தற்கு அமைக்கும் பரண் மிக வுயர்ந்திருக்க வேண்டியதாயிற்று. இக் கருத்தெல்லாம் தோன்றவே, இச் சான்றோர், “ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளினர் நறுவி, வேங்கையங் கவட்டிடை நிவந்த இதணத்து’ என்று குறிக்கின்றார்.

இனி, பரண்மீதிருந்த நங்கையர், குருவியோப்பி, பரணருகே மலர்ந்து மணக்கும் வேங்கை மலரிற் படிந்து தாதுதும் தும்பியின் இன்னிசையில் கருத்தைச் செலுத்தி யிருந்தனரன்றோ? இன்றேல், அங்கே வல்விற் காளையைக் கண்டிருப்பர். அதனால்தான் தோழி, "தும்பி இன்னிசை ஒரா இருந்தனமாக” என்கின்றாள்.

இனி, "மையிரோதி" என்பதுமுதல், "போகலுறுமோ மற்று" என்பதுவரை வல்விற்காளை வழங்கிய சொற்களாகும். புனம் நோக்கி வந்தவன் எதிரே தம் கரிய குளிர்ந்த குழலைக் காட்டித் தம் இளமை நலம் இலக நின்றனர் இம்மகளிர். கெடுதி வினவிவருவோன்,அவர் முன்வந்து நின்று செவ்வியறிந்து கேட்கும் அத்துணை மனவமைதியிலனாவான். வேறு ஒசை செய்யின், அவர் அஞ்சுவர். அவன் கண்ணெதிரே தோன்றுவது அவர்தம் கரிய குழலே. அதனால், "மையிரோதி மடநல்லீரே" என்கின்றான். அது கேட்ட அம்மடவார் திடுக்கிட்டு அவன் முகநோக்கினர். அவருள் தலைவியின் கூரிய பார்வை அவனுக்கு வருத்தத்தைச் செய்தது. அதனை ஓராற்றால் மறைத்துக் கொண்டு, "யான் எய்த பகழியால் புண் மிகுந்து எழுந்த துயரத்தோடு வந்த யானை யொன்றைக் கண்டீரோ” என்று கேட்கலுற்று, "நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து, எவ்வமொடு வந்த உயர் மருப் பொருத்தல் நும் புனத்துழிப் போக லுறுமோ” என்கின்றான், தன் அம்பினை "நொவ்வியற் பகழி"என்றதனால், தன் அம்பின் வன்மையும், அவளது பார்வையின் கடுமையும் சுட்டினான், “பாய்ந்தெனப் புண் கூர்ந்து"என்றதனால், அம்பு குறிவர்ய்த்து நோய் செய்ததும், தான் வேட்கையுற்று வேதனை யுற்றதும் கூறினான். "எவ்வமொடுவந்த உயர்மருப் பொருத்தல்" என்று கூறவே, சினம் மிகுந்து வாராது, புண்ணுற்றெய்திய ஆறாத்துன்பத்தால் வந்தது யானை என்றும், ஆயினும் அஃது உயர் மருப்புடைய பேர் யானையென்றும், தான் தலைவியைத் தலைக்கூட வேண்டுமென்னும் வேட்கை நோயால் வெய்துற்று வந்த செய்தியும் சுட்டியிருக்கின்றான். தான் வந்தது போல, யானையும் வந்ததுண்டோ என்றற்கு, "நும்புனத்துழிப் போகலுறுமோ” என்று வினவினான்.

இவ்வாறு கேட்டவன் நெடிது நில்லாது சிறிது நேரத்திற்குள் கழிந்தான்; அவனோடு வந்த வேட்டை நாய்கள் விலங்குகளின் நடமாட்டமறிந்து சினங்கொண்டு குரைத்துக் குதித்து ஓடத்தலைப்பட்டன. அதனால் அவனும் அவற்றின் பின்னே விரைந்தேக வேண்டியவனானான்; இன்றேல், சிறிது நெடித்தே சென்றிருப்பன். இக்கருத்தை, “சினவுக்கொள்ளுமலி செயிர்த்துப் புடையாடச் சொல்லிக்கழிந்த வல்விற்காளை” என்று குறிக்கின்றார்.

இதுகாறும் பண்டு நிகழ்ந்தது கூறிய தோழி, இனி, நிகழ்வது கூறத்தொடங்கி, தங்கள் நிலையும், தாயது நிலையும் கூறலுறுகின்றாள்:

“வல்விற்காளை, சாந்தார் அகலமும் தகையும் மிக நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென அன்னை.”

தாய் தன் மகளது எவ்வம் உணராளாயினள்; அதனால் அன்புடைய அவளது நல்ல நெஞ்சம் மயங்குவதாயிற்று; வேலனைக் கொண்டு வெறியெடுக்க நினைக்கின்றாள் என்பது இதனால் தெரிகிறது.

இனி வெறியாடும் வேலன் கூறுவதை முன்னறிந்து,

"அன்னை தந்த முதுவாய் வேலன் எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் தணி மருந்து அறிவல்" என்பன, அவ்வாறு கூறுவானாயின், நாம் தலைவன் கெடுதி வினாவி வந்து தலைப் பெய்ததைக் கூறி "வினவின் எவனோமற்றே? கனல் சின மையல் வேழமெய்யுளம் போக ஊட்டி அன்ன ஊன்புரள் அம்பொடு காட்டுமான் அடிவழி ஒற்றி வேட்டம் செல்லுமோதும் இறை எனவே” என்று மொழிகின்றாள்.

"நும்மிறை வேட்டம் செல்லுமோ?" என்றால், அவன் "அவ்வாறு செல்வோன் நம் இறை" என்று உணர்வான்.

ஊன் படிந்து உதிரம் வாரச் செக்கர்ச் செவேலெனச் சிவந்து தோன்றும் அம்பினை "ஊட்டியன்ன ஊன்புரள் அம்பு" என்று பாடியுள்ளாரே, இப்புலவர் யாராக இருக்கலாம்? ஊன்மிகப் பற்றிப் புரளும் அம்பினை, ஊன் ஊட்டியது போன்ற அம்பு என்கின்ற இவர் "ஊட்டியன்ன ஒண்தளிர்ச் செயலை" (அகம் 68) எனப்பாடிய புலவரான அவரோ என்னும் நினைவு பிறக்கிறதன்றோ? அவரே தான் இதனைப் பாடியவரும். அவர் பெயர் ஊட்டியார் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/006-020&oldid=1625129" இலிருந்து மீள்விக்கப்பட்டது