செம்மொழிப் புதையல்/017-020
சோழன் கரிகாலன், சோழன் கரிகாற் பெருவளத்தான் கரிகால் வளவன் என்றும் கூறப்படுவன். இவனைப் பாடிய சான்றோர்கள். சங்க இலக்கிய முதல் தல புராணங்கள் வரையில் மிகப் பலர் உள்ளனர். கரிகாலன் சங்க இலக்கிய காலத்தவனாதலால், அக் காலத்துச் சான்றோர்களையே இங்கே வரைந்து கொள்வோம்.
சங்க இலக்கியங்களிற் காணப்படும் சான்றோர்களில் சோழன் கரிகாலனைப் பாடியவர் எண்மராவர். அவர்கள் முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணானார் வெண்ணிக் குயத்தியார், கழாத்தலையார், நக்கீரர், மாமூலனார், பரணர், கருங்குழ லாதனார் என்போராவர்.
ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பொருநராற்றுப்படை பாடிச் சிறப்பித்துள்ளார். பொருநன் ஒருவன் சோழன் கரிகாலனிடம் சென்று, அவன் தந்த பெருஞ் செல்வத்தைப் பெற்று வருபவன், வேறொரு பொருநன் தன் எதிர் வரக்காண்கின்றான்; அவன் வறுமை மிகுந்து வாடியிருக்கின்றான்; அவனுக்குத் தான் கரிகாலனைக் கண்ட திறமும், கரிகாலன் பிறப்பு வரலாறும், கொடை நலமும், பிறவும் எடுத்தோதி, அவனையும் கரிகாலனிடம் சென்று வேண்டுவன பெற்று வறுமைப் பிணி நீங்குமாறு ஆற்றுப்படுத்துகின்றான்.
இதன்கண் கரிகாலன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன் என்றும், இவன் பிறக்கும்போதே தந்தை இறந்ததனால் அரசுரிமையுடன் பிறந்தான் என்றும், இளமையிலே அரசு கட்டிலேறினானென்றும் ஆசிரியர் கூறுகின்றார்.
"இதனை. ... ... ... வென்வேல்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்,
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமால் கலிப்ப”
ஆட்சி செய்ய லுற்றான் என்றும், நாடாளுதற் குரிய நலம் பலவும் கரிகாலனுக்குக் கருவிலேயே திருவாய் வாய்த்திருந்தன; அதனால் காலை ஞாயிறுபோல் உலகு புகழும் காட்சியுடைய னானான என்பது தோன்ற,
"பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தான்
னாடு செகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப"
விளங்கினா னென்றும் வருவனவற்றாற் காணலாம்.
மேலும், கரிகாலன் அரசுகட்டி லேறிய சின்னாட்கெல்லாம் சேர பாண்டியர் இருவரும் துணைவர் பலருடன் கூடிக்கொண்டு, கரிகாலனை வீழ்த்தக் கருதிச், சோழ நாட்டு வெண்ணி யென்னுமிடத்தே போருடற்றினர். அப்போரில் மிக்க இளையனாயிருந்த கரிகாலன், துணை வந்தோர் படை துறந்தோட, பாண்டியன் பருவந்து பின்னிட, சேரன் மார்பில் தைத்த வேல் முதுகு புண் செய்ய, நாணி வாள்வடக்கிருந்து உயிர் துறக்கப், பெருவென்றி யெய்தினான். இது,
"ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளிமொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டம் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த
இருபெருவேந்தரும் ஒருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாள்.
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்."
என வருவது காண்க.
இனி, கரிகால் வளவனுடைய ஆட்சி நலத்தை முடத்தாமக் கண்ணியார் மிகச் சுருங்கிய சொற்களாற் காட்டுகின்றார்."மண்மருங்கினான் மறுவின்றி
ஒருகுடையான் ஒன்று கூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
அன்னோன் வாழி வென்வேற் குருசில்"
என்பது கரிகாலன் ஆட்சி நலம் காட்டும் குறிப் பாகும். கரிகாலன், தன்னைப் பாடிப் பாராட்டும் பரிசில ராகிய பாணர், கூத்தர், பொருநர், புலவர் முதலியோர்க்கு வேண்டும் பொன்னும், பொருளும், தேரும், களிறும், ஊரும், நாடும், நல்கி யூக்கினான். இதனைப் பெருவளம் பெற்றுவரும் பொருநன் கூற்றில் வைத்து,
"எரியகைந்த வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூலின் வலவா நுணங்களில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேர்யாழ் முறையுளிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல்
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே.
என்று விரியக் கூறியுள்ளார்.
முடிவில் கரிகாலனுடைய காவிரி நாட்டு விளை நலம் கூறி முடிக்கும் முடத்தாமக் கண்ணியார்,
"குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடு கோடகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே.”
என்று இயம்புகின்றார்.
இவ் வண்ணம் பொருந ராற்றுப்படையால் கரிகால் வளவனைச் சிறப்பிக்கும் முடத்தாமக் கண்ணியார் பெண்பால ரென்று கருதுவோரும் உண்டு, வெறி பாடிய காமக்கண்ணியார் போல, வளைந்து கிடக்கும் தாமத்தை முடத்தாமம் என்று பாடிய நலங்கண்டு சான்றோரால் முடத்தாமக் கண்ணியார் என வழங்கினர் போலும் என்றும் கூறுவர். இவர் பெயர் உறுப்பால் வந்த தென்றும், இவர் பெண்பாலா ரென்றும் கூறுவாரும் உளர். என்பர், திரு.உ.வே.சாமிநாதையர்.
இனி, ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலனைப் பட்டினப்பாலை யென்னும் பாட்டைப் பாடிச் சிறப்பித்தவர். இதன்கண், கரிகாலனுடைய மறம் வீங்கு பல் புகழும், அவனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பும் விரித்துப் பாராட்டிக் கூறப்படுகின்றன. கரிகாலனை ஒருகால் அவன் பகைவர் ஒரு சூழ்ச்சியாற் கைப்பற்றிச் சிறை செய்து திண்ணிய காப்பும் காவலும் அமைத்திருந்தனர். ஆயினும், அவன், அவர் செய்த சூழ்ச்சியினும் மிக நுண்ணிய சூழ்ச்சி செய்து சிறைக்கோட்டத்தினின்றும் தப்பிச் சென்று, தன்னகரை யடைந்து, அரசுரிமை யெய்தினான் என்பது வரலாறு. இதனை உருத்திரங் கண்ணனார்,
‘... ... ...•கூருகிர்க்
கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப், பிறர்,
பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழிகொண்று
பெருங்கை யானை பிடிபுக் கரங்கு
நுண்ணிதி னுணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான்.
உகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையோ டுழிஞை சூடிப்
பேய்க்கண் ணன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கி.”
அவருடைய ஆர்களைப் பெரும் பாழ் செய்தும் அமையானாய்,
‘மலையகழ்க் குவனே கடல்துர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற்றுவ னெனப்'
பெருமறஞ் செருக்கி மேம்பட்டான். அது கண்ட ஒளியர் பணிந்தொடுங்கினர்; அருவாளர் தொழில் புரிந்தொழுகும் தொழும்பராயினர்; வடவர் வாடினர்; குடவர் கூம்பினர்; தென்னவர் திறலழிந்தனர்.
இந் நிலையில் சோழ நாட்டின் இடையிலும் எல்லையிலும் வாழ்ந்த பொதுவரும் இருங்கோவேளிரும் குறும்பு செய்தொழுகினராக, அவர்களை யடக்கி, அவர்கள் இருந்துகொண்டு குறும்பு செய்த காடுகளை அழித்து நாடாக்கி, அந் நாடுகள் வளம் பெறக் குளந் தொட்டு, பகைவர்களால் உறையூர்க் குண்டான கேடுகளைப் போக்கித் திருத்திப், பண்டுபோல் கோயிலும் அரணும் ஏற்படுத்திப், பவைர்க் கஞ்சிச் சென்ற பழங்குடிப் பெருமக்களைக் குடிநிறுத்திப் போர் நேரில் பொருவே மல்லது, ஒருவேம்’ என்ற சிறப்புரை கிளந்து திகழ்ந்தான், கரிகாலனாகிய செங்கோல் வளவன் என்று இனிது மகிழ்ந்து பாடுவாராய், நம் கண்ணனார்.
“புன்பொதுவர் வழிபொன்ற
இருங்கோவேள் மருங்குசாயக்
கரடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநீறீஇப்
பொருவேமெனப் பெயர் கொடுத்து
ஒருவேமெனப் புறக்கொடாது
திருநிலைஇய பெருமன்னெயில்
மின்னொளி யெறிப்ப.'
வீறு பெற்று விளங்கினான் என்று பாடுகின்றார்.
இனி, கரிகாலனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைக் கூறுகின்ற கண்ணனார், காவிரி கடலொடு கூடும் கூடலாகிய துறைமுகத்தின்கண்,
'வைகல்தோறு மசைவின்றி
உல்குசெயக் குறைபடாது
வான்முகந்த நீர்மலைப் பொழியும்,
மலைப்பொழிந்த நீர்கடற் பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி’
வேந்தனுடைய புலிப்பொறி பொறிக்கப்பட்டு மலைபோலக் குவிந்து கிடக்கும் என்கின்றார். நகர்க்குள் நுழைவோமாயின், அங்கே,
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியுங் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி’
காணுங் கண்ணுக்கு இனிய காட்சி வழங்குகின்றன என்பர். அன்றியும், இந் நகர்க்கண்,
'வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கல்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்'
காட்சி மலிந்திருக்கிற தென்பர்.
இங்ஙனம் கரிகாலன் மாண்பும், அவனுடைய காவிரிப்பூம்பட்டினத்துச் சிறப்பும் கவினுற எடுத்தோதும் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குக் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் நல்கினான் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகிறது. கல் வெட்டொன்றும் அதனை வற்புறுத்துகிறது. கடியலு ரென்பது இவர தூர். உரத்திரன் என்பது இவர் தந்தை பெயர். கண்ணன் என்பது இவரது இயற் பெயர்.
இனி, சேரமான் பெருஞ்சேரலாதனும் பாண்டி வேந்தன் ஒருவனும் வேளிர் பதினொருவரோடு கூடிப் பெரும் படையொடு வந்து, வெண்ணியிடத்தே, பொருது கரிகாலனுக்கு ஆற்றாராய்க் கெட்டபோது, சேரமான் பெருஞ்சேரலாதன் பொருது, புண்பட்டு, மானம்பொறாது, அவ் வெண்ணியிடத்தே வாள் வடக்கிருந்து உயிர் துறந்துபோது, அந் நிகழ்ச்சியை நேரிற் கண்ட சான்றோர் வெண்ணிக் குயத்தியாராவர். அக் காலத்தே கடலில் அடிக்கும் காற்றைப் பயன்கொண்டு கலஞ் செலுத்தும் விரகினை முதற்கண் கண்டவர் சோழர் என்றும், அச் சோழர் வழிவந்தவன் கரிகாலன் என்றும் புக முண்டாகியிருந்தது, கரிகாலனொடு பொருது தோற்ற முடிவேந்தர் இருவருள் பாண்டியன், வெற்றியும் தோல்வியும் ஒருவர்க்கே புரியவல்ல; வென்றி யெய்தினோர் தோற்றலும், தோற்றோர் வெற்றி யெய்துதலும் மாறி வருவது இயல் பென்று தெளிந்து, தன்னாட்டிற்குச் சென்றது போலாது, மார்பிற் புற்ைத் துருவி முதுகிற் புண்ணுண்டானதற்கு நாணிச் சேரலாதன் தான் தோல்வி பெற்ற போர்க்களத்தின்கண்ணே வாள்வடக்கிருந்து உயிர் துறந்ததும், அது கேட்ட அவனுடைய தானைச் சான்றோர் சிலர் உயிர் துறந்ததும் சிறந்த மற நெறியாகத் தோன்றாமை கண்டார். மறத்தின் நீங்கா மானமாவது தன்னை வென்றோனைக் காலங் கருதியிருந்து, வாய்த்தவுடன் அவனை வென்று விளங்குதலாகும்; இதனை யுணரர்து வடக்கிருந்த சேரலாதன் கரிகாலனைவிடச் சிறந்தவனாதல் இல்லையென அவன் உள்ளந்தெளியுமாறு வற்புறுத்தினார், அதனை,
‘நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!
சென்றமர்க் கடந்த நின்னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே.'
என்று பாடியிருத்தல் காண்க.
வெண்ணிக் குயத்தியாருடைய இயற்பெயர் தெரிந்திலது. வெண்ணி யென்பது தஞ்சை மாநாட்டில் (ஜில்லாவில்) உள்ளதோர் ஊர்; இவ் வூரிற்றான் கரிகாலனது வெண்ணிப் போர் நிகழ்ந்தது; இங்கேதான் பெருஞ் சேரலாதன் வாள் வடக்கிருந்தது. பண்டை நாளில் கலஞ் செய்யும் வேட்கோவருட் சிறந்தார்க்கும் குயம் என்னும் சிறப்பினை வேந்தர் நல்கி விளக்கமுறு வித்தனர். அத்தகைய சிறப்புடையவர் இவர் என்பது விளங்கக் குயத்தியார் எனப்படுவா ராயினர். இச்சிறப்புப் பெயரால் இவரது இயற்பெயர் மறைந்து போயிற்று.
இனி, கழாத்தலையார் என்னும் சான்றோர் சேரமான் பெருஞ்சேரலாதன் வாள்வடக்கிருந்து உயிர் துறந்த தறிந்து பெருவருத்தத்தால் கையற்றுத் தன்னை யொத்த வேந்தன் தன் மார்பு குறித்து எறிந்த வேல் புறத்தே ஊடுருவிப் புண் செய்ததற்கு நாணி மறத்தகை மன்னனான பெருஞ்சேரலாதன் வாள் வடக்கிருந்து உயிர் துறந்தான். இனி, எங்கட்கு நாட்கள் அவன் இருந்த நாளிற்போல இனிது கழியா.' என்று புலம்பியுள்ளார். அதனை,
‘மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப
உவவுத் தலைவந்த பெருநா ளமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி ஒருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன் ஈங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே.'
என அவர் பாடியிருப்பது காண்க.
கழாத்தலையார் சேர மன்னர்களில் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும், பெருஞ்சேரலாதனையும் பாடியிருத்தலினாலும், ஏனை வேந்தர்களைப் பாடினா ரெனற்கு வேண்டும் இவர் பாட்டுக்கள் தொகை நூல்களுட் காணப் படாமையாலும், இவர் சேர நாட்டின ரெனக் கருதற்கு இடமுண்டாகிறது. கையெழுத்தப் பிரதியொன்றில் இவர் பெயர் கழார்த்தலை யெனக் காணப்படுகிறது. அதுவே உண்மைப் பாடமாயின், இவர் கழார் என்னும் ஊரினராக எண்ணலாம். அக் கழாரும் சேரநாட்டு ஊராதலும் கூடும். -
நக்கீரனார், பரணர், மாமூலனார் ஆகிய மூவரும் சோழன் கரிகாலனை நேர்முகமாக வைத்துப் பாடினாரில்லை. ஆயினும், அவர்கள் தாந் தாம் அவ்வப்போது பாடிய பாட்டுக்களில் ஒவ்வோரிடத்தில் கரிகாலனைக் குறித்துப் பாடியிருக்கின்றனர். தலைவன் தனக் குரிய வினை குறித்துப் பிரிந்து சென்றானாக, .” தலைவி அவன் பிரிவாற்றாது உடல் மெலிந்து வருந்துவளோ என அவள் தோழி நினைந்து கவலையுற்றாள்; அது கண்ட தலைவி, தோழி! 'செல்வம் கொணரச் சென்றுள்ள நம் காதலர் வினைகுறித்துப் பிரிவதற்கு யான் வருந்தவில்லை; கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் மறுகு விளக்குறுத்து மாலை நாற்றிச் செய்யும் விழாவுக்கு வந்துவிடுவாராயின் நன்று. என்று கூறுகின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் நக்கீரர் கரிகாலனைச் சிறப்பித்து, செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால், வெல்போர்ச் சோழன் இடையாற் றன்ன, நல்லிசை வெறுக்கை தருமார்' (அகம். 141) என்று பாடியுள்ளார்.
தலைவன் பரத்தையொடு கூடிப் புனலாடி வந்தானாக, அவனுக்குத் தோழி வாயில்மறுப்பவள், 'நீ பரத்தையொடு புனலாடினாயென்று சொல்லுகின்றனர்; அதனை நீ மறைத்தாலும் ஊரில் உண்டாகிய, அலர் பெரிது.' என்கின்றாள். அவள் கூற்றைப் பாடிக்காட்டும் பரணர், கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் சேர பாண்டிய இருவரும் வேளிர் பதினொருவரும் தொலைந்து கெட வென்றதனால், அவனுடைய அழுந்துரார் வெற்றி விழாக் கொண்டாடி யெடுத்த ஆரவாத்தினும் பெரிது அந்த அலர் (அகம். 246) என்று பாடியுள்ளார். மேலும், பரணர் கரிகாலனுடைய வெண்ணிப்போர் வென்றியோடு, வாகைப் பறந்தலை யென்னுமிடத்தேயும் கரிகாலன் ஒன்பது வேந்தரைவென்று மேம்பட்டான் என்பாராய்,
'விரியுளைப் பொலிந்த பளியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை யாடுபெற
ஒன்பது குடையும் நன்பக' லொழித்த
பீடில் மன்னர் (அகம். 125)
என்று குறித்துள்ளார். ஆகவே, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் வாகைப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் செய்து வெற்றி பெற்றுள்ளான் என்பது பெறப்படும். இதன் கண், 'வெருவரு தானையொடு வேண்டு’. புலத் திறுத்த, பெருவளக் கரிகால்’ என்றதனால், இந்த வாகைப் பறந்தலை பாண்டி நாட்டின் கண்ணதாம்.
பாண்டி நாட்டில் வாகைக் குளம் என்றோர் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உளது. வாகைக் குளமே வாகைப் பறந்தலையாயின், கரிகாலன் தென் பாண்டி நாட்டின் கிழக்கிலுள்ள வாகைப் பறந்தலையில் பாண்டியனையும் அவற்குத் துணைவந்த குறுநிலமன்னர் எண்மரையும் நண்பகற்போதில் தம்குடை யொழித் தோடுமாறு செய்தான் என்பது துணிபாம். பின்பு அங்கிருந்து மேற்கு நோக்கித் தாமிரபரணிக் கரை வழியே கரிகாலன் சென்றிருத்தல் வேண்டும். மாமூலனார் கரிகாலன் வெண்ணிப்போரில் எறிந்த வேல் சேரலாதன் மார்பிற் பட்டு உருவி முதுகிற் புண் செய்ததற்கு நாணி வடக்கிருந்துயிர்துறந்த போது, சான்றோர் பலர் மேலுலகிற்கு அவனொடு செல்ல விரும்பித் தாமும் உயிர் விட்டனர் என்கின்றார். இதனை,
“.................... ... ... ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண்ணாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா வின்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெற லுலகத் தவனொடு செவீஇயர்
பெரும்பிறி தாகி யாங்கு.” (அகம். 55)
இனி, இறுதியாகக் காணப்படுபவர் கருங்குழ லாதனார் என்பவராவர். இவர் கரிகாலன் பாண்டியனையும் சேரலாதனையும் குறு நிலத் தலைவரான வேளிர் பலரையும் வென்று சிறந்து விளங்குவதைப் பாராட்டிப் பாடியுள்ளார். ஆதனால் ஆதன் என்பன தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவாகப் பயில விளங்கும் பெயராயினும், சேர வேந்தர் பலர் சிறப்பாக அவற்றை மேற்கொண்டிருத்தலால், இவர் சேரர் குடியில் தொடர்பு உடையரெனக் கருதுதற்கும் இடமுண்டு.
கரிகாலன் வாகைப் பறந்தலையில் பாண்டியனையும் வேளிரையும் வென்று தென் பாண்டி நாட்டுள் மேற்றிசை நோக்கிச் செல்லலுற்றானாக, அங்கே அவனை எதிர்த்த பகைவர் ஊர்களெல்லாம் தீக் கிரை யாயின. சென்ற விடமெல்லாம் அழு விளிக்கம்பலை' (அழுகுரல்) மிகுவ தாயிற்று. நாட்டில் நற் பொருள் விளைதற்கும் இருத்தற்கும் இடமில்லையாமாறு அழிவுவினை நடைபெற்றது. இவற்றைக்கண்ட ஆதனார் கரிகாலனை யடைந்து அழிவு நிகழாவிடத்து இருக்கும் நாட்டு நிலையையும், நிகழ்வதனால் உண்டாகிய கேட்டையும் அவற்கு உரைத்து, அவன் உள்ளத்தில் அருள் நிலவச் செய்ய வேண்டுமெனக் கருதினார். சோழன் கரிகாலன் புலவர்களை வரவேற்று, அவர் புலமை நலத்தை யோர்ந்து வேண்டும் பரிசினல்கும் பான்மை யுடையவன். அதனால் அவர் அவனை எளிதிற் காணமுடிந்தது. சோழனைக் கண்டு, வளவ, களிறு ஊர்ந்து அவற்றைச் செலுத்துதற்கு ஏற்ப இயன்ற முழந் தாளும், கழலணிந்து உரிஞப்பட்ட அழகிய திருவடியும், அம்பு தொடுக்கும் திறனும், இரவலர்க்கு அள்ளி வழங்கும் வளவிய கையும், கண்ணாற் காண்பார்க்கு விளங்கத் தோன்றும் வில்லும், திருமகள் தனக்கேயுரிமை பூண்டு விளங்கும் மார்பும், பெருங்களிற்றையும் பொருது பெயர்க்கும் பெருவன்மையும் கொண்டு விளங்குகின்றாய். நின் உள்ளத்தே சினத்தை யெழுப்பிப் போரில் ஈடுபடச் செய்யும் பகை வேந்தருடைய நாடு நல்ல நீர் வளம் பொருந்தியது. தண்புனல் பரந்து வந்து வயலிடத்து மடையை உடைக்குமாயின், அந்த உடைப்பை மண்பெய்து அடைத்தால் . அடைபடாமை காணும் உழவர் நீரில் மேயும் மீன்களைப் பிடித்து உடைப்பி லிட்டு மண்ணிட்டு அடைப்பர். இத்துணைப் பெரும் பயன் விளைவிக்கும் நாடு, இர வென்றும் பக லென்றும் எண்ணாமல் ஊர்களைத் தீக் கிரையாக்கி ஊரவர் வாய்விட்டரற்றி யெழுப்பும் அழுவிளிக்கம்பலை மிக்கெழச் சூறையாடுதலை விரும்புகின்றாய்’ என்ற கருத்தமைய,
களிறுகடைஇயதாள்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையால்
கண்ணொளிர் வரூஉங் கவின் சாபத்து
மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய எறுழ்முன்பின்
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!
தண்புனல் பரந்த பூசல்மண் மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பிற் பிறர்அகன் றலைநாடே!
என்ற பாட்டைப் பாடினார். கரிகாலன் அவர்க்கு முற்றுட்டாகச் சில ஊர்களும் பொருளும் நல்கினான் என உணர வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஏனெனில், கரிகாலன் தன்னைப் பாடி வரும் புலவர், பாணர் பொருநர், முதலியோர்க்கு நல்ல பல ஆர்களையும் அவ் வூர்களையுடைய நாடுகளையும் தருபவன் என்பதை முடத்தாமக்கண்ணியார் கூறியிருப்பது காண்க.
பின்னர், சோழன் கரிகாலன் பாண்டி நாட்டினின்றும் நீங்கித், தன் சோழ நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் கழிந்த பின் விண்ணுலகம் சென்றான். இதற்கிடையே ஆதனார்க்கும் கரிகால் வளவனுக்கும் நட்பு மிகுந்தது. அவன் இறந்த செய்தி கேட்ட ஆதனார் சோழநாடு சென்றார். கரிகாலன் இல்லை. அவன் மகளிரும் தம் இழை முற்றும் களைந்து கூந்தல் களைந்த தலையராய் இருந்தனர். அக் காட்சி ஆதனார்க்கு மிக்க வருத்தத்தைச் செய்தது. அக்காலை அவர் பகைவேந்தர் மதில்களைப் பொருளா எண்ணாது எளிதிற் கடந்து செல்வதும், பாணர் முதலிய இரவலர்க்கு வேண்டுவ நல்கி ஆதரவு செய்வதும், தன் மகளிரொடு கூடி வேள்வி யந்தணர்களைக் கொண்டு வேள்வி பல செய்வதும், ஆகிய இவற்றால் விளையும் பயனை நன்கறிந்த அறிவுடையோன் சோழன் கரிகாலன்.
‘அறிந்தோன் மன்றஅறிவுடை யாளன்
இறந்தோன் தானே அளித்திவ் வுலகம்,
அருவி மாறியஞ் சுவரக் கடுகி
பெருவறங் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த வாயத்துப் பயனிரை தருமார்
பூவாட் கோவலர் பூவுட னுதிரக்
கொய்து கட்டழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந்தனரே.' (புறம். 224)
என்று பாடி வருந்தினார்.
இவ் வண்ணம் சோழன் கரிகாலன் இறந்த பின்பு அவன் பிரிவாற்றாது கையற்று வருந்திய சான்றோர் வேறு யாவரும் காணப்பட வில்லை. ஆதனார் ஒருவரே காணப்படுகின்றார். இந்த ஆதனார் சங்கத் தொகை நூலிற் காணப்படும் சான்றோருள் ஒருவரான கருங்குழலாதனார் என முன்பே கண்டோம். இவர் இயற்பெயர்க்குமுன் கருங்குழல் என்றொரு தொடர்மொழி நின்று சிறப்பிக்கின்றது. அதற்கும் ஆதனார்க்கும் உள்ள இயைபு ஒன்றும் விளங்கவில்லை.
இருபத்திரண்டு யாண்டுகட்குமுன் பள்ளியூரில் இளம் பூரணர் உரையுடன் புறநானூற்றுக் கையெழுத்துப்படி யொன்றும் என் நண்பர் ஒருவர்பால் இருக்கக்கண்டு அதனையும் புறநானூற்று அச்சுப் பிரதியையும் ஒப்புநோக்கி வேறுபட்ட பாடங்களை யான் குறித்துக் கொண்டது நண்பர் பலரும் அறிந்தது. அக் குறிப்புகளுள் கருங்ழலாதனார் என்பது கருங்குழலாதனார் என்று இருக்கிறது. எங்கேயோ மூலையில் கிடந்த இக் குறிப்பு ஒரு சில நாட்களுக்கு முன்பே கிடைத்தது. கருங்குழலாதனா ரென்பது கருங்குழலாதனார் என்ன எழுதப்படுதற்கியைபுண்டு, இதனை யாராய்தல் வேண்டுமென எண்ணி மேலும் முயலுமிடத்து, கருங்குளம் என்பதோர் ஊரென்பது தெரிந்தது. தென்பாண்டி நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில் கோட்டைக் கருங்குளம் என்றோர் ஊர் இருக்கிறது. அதனை அவ்வூர்க்கல் வெட்டுக்கள் 'கருங்குள - வளநாட்டுக் கருங்குளம்' என்று கூறுகின்றன. ஆகவே, கருங்குளம் என்ற ஊருண்மை தெள்ளிதாயிற்று.
இனிக், கருங்குளத்துக்கும் ஆதனாருக்கும் தொடர் பென்னையென்று காண்டல் வேண்டியதாயிற்று. அவ்வூர்க் கல்வெட்டொன்று அதனைக் 'கருங்குள வளநாட்டுக் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம் (A.R. No. 269 of 1927-28) என்று குறிக்கிறது. கரிகால் சோழனுக்கும் ஆதனார்க்கும் தொடர் புண்டென்பது அவர் அவனைப் பாடிய பாட்டுக்களால் தெளிவாகிறது. ஆகவே, கருங்குளத்துக்கும் கரிகாற் சோழனைப் பாடிய ஆதனாருக்கும் தொடர்பு உள தாதல் எளிதாம். ஆகவே, கருங்குளவாதனார் காலத்தே அக்கருங்குளம் அவன் பெயரால் கரிகாற் சோழநல்லூராகப் பெயரிடப் பெற்று ஆதனார்க்கு அவனால் முற்றூட்டாக வழங்கப்பட்டிருக்கு மென்பது பொருந்தாதொழியாது. கருங்குளத்துக்கு உரியவராகிய ஆதனார் தென் பாண்டி நாட்டுக் கருங்குளவாதனார் எனப்படுவது இயல்பாம்.
இதனை இறுதியிற் குறிப்பது குறித்தே கரிகாலனது தென் பாண்டி நாட்டு வரவும், ஆங்கு அவனைச் சிறப்பித்துப் பாடிய புலவர்க்கு ஊர் வழங்கியதும் இக் கட்டுரையிடையே வற்புறுத்தப்பட்டன. பாண்டி நாட்டில் கரிகாலனைப் பாடியவர் கருங்குளவாதனார்; அவர்க்கு அவன் அளித்தவூர் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம். ' இக் கருங்குளத்திலுள்ள இராச சிம்மேச்சுரத்திற்குத் திருவாங்கூர் மன்னரும் திருப்பணி செய்துள்ளனரென அவ்வூர்க் கல்வெட்டு (A.R. 287 of 1927-28) கூறுவது பற்றி அவ்வூர்க்குச் சேரர் தொடர்பும் உண்டென உணரலாம், என்பது முடிபாம்.