18. சமண முனிவர் தமிழ்த் தொண்டு

ம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய நெறியின் வளர்ச்சியினை வரலாற்று முறையால் ஆராய்கின்றவர், இவ்வளர்ச்சி குறித்துச் சமண முனிவர் செய்துள்ள தொண்டுகளைக் காணாதுபோக முடியாது. தமிழ் வளர்ச்சிக்கெனச் சிறந்த தொண்டு புரிந்து தமிழ் மக்களைவிடச் சமண முனிவரே தலை சிறந்து நிற்கின்றனர் என்று பலரும் கூறுகின்றனர். அவர் செய்த தொண்டினை ஒரு சிறிது ஆராயின், அவர் தொண்டு முற்றும் தம் சமய நெறியினைத் தமிழ்நாட்டில் நிலைபெறுவித்தற்குச் செய்த சமயத் தொண்டாகவே தோன்றுகின்றமையின், அதனைப் புலப்படுக்கும் குறிப்பால் இக்கட்டுரை எழுதப்பெறுகின்றது.

க. சமண முனிவர் வரலாறு

மண முனிவர் என்பவர் சைன சமய வொழுக்கத்தை மேற்கொண்டு, துறவிகளாய், நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் சிறந்து, வினைத்தொடர்பு கெடுமாறு முயலும் சான்றோராவர். இது பண்டைக் காலத்தில் வடநாட்டில் தோன்றிய புதுச் சமயம் என்று சிலர் கூறுவர். சமயக் கலையில் வல்லுனராகிய இராதாகிருட்டினன் என்னும் பேராசிரியர், “இஃது இந்திய நாட்டிற்கே உரித்தாகிய வைதிக சமயத்திலிருந்து புதிதாய்க் கிளைத்த சமயம்" என்கின்றார். இச் சமயம் வடநாட்டில் சைன சமயம் என்றும், தென்னாட்டில் சமண சமயம் எனவும் வழங்கப்பட்டது. சைனருள், இல்லறத்தோர் சிராவகர் என்றும், துறவு பூண்டு இன்பத்து விருப்பும், துன்பத்து வெறுப்பும் இலராய் இரண்டனையும் ஒப்ப மதித்தொழுகும் சான்றோர் சமணர் எனவும் கூறப்பவர். இவர்கள், புத்த சமயத்தை நாடெங்கும் பரப்புதற்குரிய பெரு முயற்சியினைச் செய்த பேரரசப் பெருந்தகையாகிய அசோக மன்னராலும் நன்கு மதிக்கப் பெற்றவர்கள். இச்சமணர்கள் நம் தமிழ்நாட்டிற் புகுந்து தம் சமயநெறியினைப் பரப்பியதனால், இவர்களது சமயமாகிய சைன சமயம் இவர்கள் பெயரால் சமண சமயம் என வழங்கப்படுவதாயிற்று.

உ. சமண முனிவர் வரவின்கண் தமிழ் இருந்த நிலைமை

மிழ்நாட்டில், ஆதியில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர்; அவர்கள்பால் தனித் தமிழே நிலவியிருந்தது. பின்னர், வட நாட்டு மக்கள் தமிழ்நாட்டிற் குடி புகுந்தனர். அவர் வழங்கிய வடமொழியும் அவரோடு போந்து தமிழ்நாட்டில் இடம் பெற்றது. வடவரும் தமிழரும் வாழ்க்கையில் ஒருங்கு இயைந்து உலவத் தொடங்கியதும், வடமொழியும் தமிழிடைக் கலந்து வழங்கப்பெறுவதாயிற்று. சமணர் தமிழ்நாட்டிற் புகுந்த காலத்துத் தமிழரிடை வடவர் வழக்கும், வடமொழி வழக்கும் நிலவியிருந்தன. தமிழ் மக்களின் மனப்பான்மையும், வடவர் வழக்கினையும், வடமொழி வழக்கினையும் மேற்கொண் டொழுகுதற்கண் பேரார்வமும், பேரூக்கமும் கொண்டு இருந்தது.

நம் நாட்டிற்குப் புதியராய், புது வழக்கும், புது வொழுக்கும், புது மொழியும் உடையராய்ப் போந்த மேனாட்டு மக்களின் கூட்டுறவால், நம் நாட்டவர்க்கு அவர் மொழி வழக்கினும், நடையொழுக்கினும் வேட்கையும் விழைவும் பெருக, அதனால் நம் நாட்டு மொழி நிலை தாழ்வுற்றதன்றோ? அங்ஙனமே, வடவர் கொணர்ந்த மொழி வழக்கினையும், நடையொழுக்கினையும் கண்ட தமிழர் அவற்றின்பால் எழுந்த வேட்கையால், தமிழ் வளர்ச்சியிற் கருத்தூன்றாது தாழ்ந்தனர். வடவரது வைதிக சமயக் கோட்பாடுகளை மேற்கொண்டனர். வடவரது வடமொழி உயர்ந்தோர்க்கல்லது உணர்த்தப்படா தென்னும் வடவர் வகுத்த முறையால், இக்காலத்து ஆங்கிலம் போலத் தமிழரிடம் முதலிடம் பெறாதாயிற்று. ஆனால், வடமொழியைத் தமிழொடு விரவிப் பேசும் நெறியினை மட்டும் கைவிடாது பேணிவந்தனர். அதனால், வடசொல் விரவாத தனித் தமிழ் நூல்கள் அருகின; வடசொல் விரவிய நூல்கள் கூடிய அளவிற் பெருகின. இலக்கணங்களும் வட சொற்கள் தமிழொடு நடைபெற்று இயலுதற்கு இடம் வகுத்து அமைப்பவாயின. “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று தொல்காப்பியம் கூறுவதாயிற்று.

இவ்வறு வடவர் கூட்டுறவால், தமிழர் தம் தாய்மொழி வளர்ச்சிக்கண் ஊக்கம் குறைந்திருப்பதையும், வடமொழிக்கண் விருப்பும், வைதிக சமயக் கதைகளில் வேட்கையும் மிக்குற்றிருப்பதையும், சமண முனிவர் தெளிய வுணர்ந்தனர். தமிழர், வைதிக சமயப்பற்று மிகுந்து அதுபற்றிய கதைகளைக் கேட்டு, அவற்றிற்கு வேறாக வரும் சமண சமயக் கருத்துக்களையும் கதைகளையும் மேற்கொள்ளுதற்குத் தாழ்த்தனர். இவ்வாறு தம்பால் வேறுபட்டு நிற்கும் தமிழர் கூட்டுறவைப் பெறுதற்குரிய நெறியில் சமண முனிவர் முயல்வாராயினர். தமிழர்க்கு வடநூற் கதைகளில் விருப்பு மிக்கிருந்தமையின், தாமும் வடநூற்களையும், வடநூல் மரபுகளையும் தமிழின்கட் கொணருமுகத்தால் தமிழர் ஆதரவைப் பெறலாயினர். இந் நெறிக்குப் பெருங் கருவியாக விளங்குவது இளஞ் சிறார்க்குக் கல்வி பயிற்றுவிக்கும் பெருந் தொண்டேயாகும் என்று உணர்ந்தனர். அதனால் தாம் தங்கியிருந்த பள்ளிகளில் கூடங்கள் அமைத்து, அவற்றுள் இருந்து சிறுவர்க்குக் கல்விக் கொடை புரியலாயினர். அந்நாள் தொட்டே கல்வி பயிலும் இடங்கள் பள்ளிக்கூடங்கள் என வழங்கப்படுவவாயின.

ந. . தமிழ்த்தொண்டு

மண முனிவர்களின் தொண்டு தேவார காலத்துக்கு முன்னையதும், பின்னையதும் என இருவகைப்படும். தேவார காலத்தும், அதற்கு முன்னரும் இருந்த சமண முனிவர் பெருங் கல்வியும், அறம் உரைக்கும் அமைதியும் நிரம்பித் துறவறமே சீரிதாக மேற்கொண்டு இருந்தனர். இவர்கள் நெறியினைத் கடிந்து வாதுபுரிந்த சைவப் பெரியோர்களான ஞானசம்பந்தர் முதலியோர் இவர்களின் பெருங் கல்வியினையும், அறவுரை களையும் சுட்டி இருக்கின்றனர். "அமணரும் குண்டரும் சாக்கியரும் நயமுக உரையினர்", “ஒதியும் கேட்டும் உணர் வினையிலாதார் உள்கலாகாததோர் இயல்பினையுடையார்" என்றும், இவர்கள், அறம் உரைத்த பெருமையினை, “பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் அறவுரை", “அறங்காட்டும் அமணரும் சாக்கியரும்", "கடுமலி உடலுடை அமணரும் கஞ்சியுண் சாக்கியரும், இடும் அறவுரை" என ஞானசம்பந்தப் பெருமான் கூறியருளியிருக்கின்றார். இவற்றால், தேவார காலத்திற்கு முன்னர் இருந்த சமண முனிவர் தம் சமய அறங்களை மக்களுக்கு உணர்த்துவதே தமது கடனாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிய விளங்குகிறது. அக்காலத்திற்கு முன்னர் இருந்த தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுட் சமண முனிவர் செய்தனவாகக் காணப்படுவன யாவும் அறநூல்களேயாக இருக்கின்றன. நாலடியார், அறநெறிச்சாரம், சிறுபஞ்சமூலம் முதலிய பலவும் அறம் கூறுவனவேயாகும்.

அக்காலத்தே அவர்கள், வரலாறு கூறும் தமிழ் இலக்கியங்கள் மிகச் செய்திலர் ஒன்றிரண்டு செய்தாராயினும் அவை தமிழ் வளங் கெழுமியவாய்த் தமிழர் மனத்தைக் கவ்வுவனவாய் இல்லை. அவர்கள் உலக வாழ்க்கையில் வெறுப்பும், துறவு நெறியில் விருப்பும் மிக்கு இருந்தமையின் தமிழர் வாழ்க்கையில் நிலவிய அகப்பொருள் நலங்களும், புறப்பொருள் துறைகளும் நெடுநாள்காறும் அவர்கள் மனத்தில் இடம்பெற்று, அவர்கள் அறிவை ஏவல்கொள்ளவில்லை. அதனால், அவர்கள் தமிழ் மொழியின் இலக்கணத் துறையிற் புகுந்து, அதன் பகுதிகளுள் ஒன்றாகிய செய்யுளியலில் பெருந்தொண்டு புரிவாராயினர்.

கற்றவர் கல்லாதவர் என்ற இருதிறத்தார்க்கும் அறவுரை வழங்குமிடத்தும் உரையும் பாட்டுமே மிக வேண்டற்பாலன. இவற்றுள் முன்னதைவிடப் பின்னையதே கல்லாதவரையும் எளிதிற் பிணிக்கும் வாய்ப்புடையதாகும். ஆகவே, அதற்குரிய செய்யுளியலில் பெரும்பாடுபட்டுப் பல புதுநெறிகளையும் இயல்களையும் காண்பாராயினர். யாப்பருங்கல விருத்தியுரையிற் காட்டப்பெற்றுள்ள செய்யுளியல் நூல்களுட் பல, சமண முனிவராற் செய்யப் பெற்றிருப்பதற்கு இதுவே காரணமாகும். இசை நூலும் நாடக நூலும் காமம் பயக்கும் சிறுமையுடையவை என்பது அம்முனிவர்களின் கருத்து, அதனால் அத்துறையை நெகிழ்ப்பதோடு அவ்விசை நாடகங்களில் பற்றுண்டாகாமையும் வளர்த்து வந்தனர். தமிழர் தாமும், தம் தமிழையே மறந்து, வடநூற் கதைகளிலும், வடவர் வழக்க வொழுக்கங்களிலும் வேட்கை மீதூர்ந்து நின்றமையின், அவை பேணற்பாடின்றி இறந்தன.

தொல்காப்பிய நூலுட் காணப்படாத பாட்டினங்கள் இவர்கள் செய்த செய்யுளியல்களிற் காணப்படுகின்றன. இவ்வாறு பழைய தமிழ் நெறிகளைப் புதுநெறியிற் கொணர்தற்கு முயன்று பெருந்தொண்டு புரிந்த இப் பெரியோர்கள் இசை, நாடகங்களிலும் தம் கருத்தைச் செலுத்தியிருப்பின் நம் தமிழ் மொழியில் எத்துணையோ இசை நூல்களும் நாடக நூல்களும் தோன்றியிருக்குமே இசை நூல்களுட் சில இவர்களால் இயற்றப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அதனை உண்மையெனத் துணிதற்குரிய சான்றுகள் கிடைத்தில்.

தொடக்கத்தில் தம் சமய நெறிகளை மக்கட்கு உரைப்பதே பொருளர்க்கிக் கொண்டு தமிழ்நாடெங்கும் திரிந்து சமண் பள்ளிகளையும், சமண் பாழிகளையும் இவர்கள் நிறுவி வந்தனர். அவை யாவும் அறநிலையங்களாக இருந்தனவேயன்றி, அறிவுச் சுடர் வழங்கும் தமிழ் நூல் நிலையங்களாக இல்லாமையால், தேவாரப் பெரியோர்கள் காலத்தில், இவரது தொண்டு இவர்கட்குப் போதிய அரண் செய்யாதாயிற்று. சமயப்போர் நிகழ்ச்சிகளில், இவர்கட்குப் போதிய படையாகக் கூடிய தமிழ் நூல்கள் இல்லை. அதனால் இவர்கள் எளிதில் வெல்லப் பெற்றனர். தமிழிலக்கணங்களாக, இவர்கள் செய்த அவிநயம், இந்திரகாளியம், பரிமாணம் முதலியவை சமய நூல்களாகவோ &B அறநூல்களாகவோ பயன்படவில்லை.

தேவார காலத்தில் இச் சமண முனிவர்களுக் குண்டாகிய தோல்வி இவர்கட்குப் பிற்காலத்தில் அழியாப் புகழைப் பயப்பதாயிற்று. இவர்கட்குத் தம் தொண்டில் இருந்த குறைபாடுகள் நன்கு புலனாயின. தமிழர் கூட்டத்தில் நிலவிய சமய நூல்களைப் பயின்று, அவற்றைப்போல இலக்கியங் களையும், சிறு நூல்களையும் செய்யத் தொடங்கினர். இளஞ் சிறார் முதல் பெரியோர் ஈறாகப் பலர்க்கும் பயன்படத்தக்க தமிழ் நூல்களை இயற்றத் தலைப்பட்டனர். தமிழ்த் தொண்டினைத் தம் சமயத் தொண்டிற்குக் கருவியாகக் கொள்ளும் கருத்தினராகலின், இளைஞர்க்கென இயற்றிய சின்னூல்களிலுந் தம் சமயக் கருத்துகளைப் புகுத்து மிடமறிந்து புகுத்தித் தம் கருத்து முற்ற நினைந்தனர்.

சிறுவர் கற்கும் கணக்கியல் வாய்பாடுகளில், தம் சமயக் கருத்தை நுழைத்தற்கு இடமில்லாமையால், அவற்றிற்குக் காப்புச் செய்யுள் யாத்து, அதன்கண் சமயவுணர்வைப் புகட்டினர். "வன்மதிமுக்குடையான்மலரடிதொழ, நெல்லணி லக்கம் நெஞ்சினில் வருமே" என்பது நெல்லிலக்கவாய்பாடு. "அருகனை அமலனை அசலனையடிதொழ, சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” என்பது சிறுகுழி வாய்பாடு. இவ்வாறு கல்வி பயின்று வரும் சிறுவர்கட்குத் தமிழ் நூல்களைக் கற்பித்தற்குத் தோற்றுவாயாக நிகண்டுகள் செய்யத் தொடங்கினர். இவர் காலத்துக்கு முன்பிருந்தவை நூற்பா வடிவில் பெருநூல்களாக இருந்தன. அவை, இசையொடு விரவி, புதுப்பாவினத்திற் செய்யப்படின் கற்பார்க்கு ஊக்கம் மிகும் என்று கருதினர். அதனால் அவர்கள் சூடாமணி நிகண்டு முதலிய நூல்களைச் செய்தனர். இதன்கண்ணும் தம் சமயக் கருத்துக்களை வேண்டுமிடங்களிற் காட்டியிருக்கின்றனர். காப்புச் செய்யுள், "முடிவில் இன்பத்து மூவா முதல்வனைப் போற்றி"ச் செய்தது உலகறிந்தது. பகவன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுமிடத்து, "பகவனே ஈசன்மாயோன் பங்கயன் சினனே புத்தன்” எனத் தொகுத்துரைத்தனர். பன்னிரண்டாவது தொகுதிக் கண், "சொல்வகை எழுத்தெண்ணெல்லாம் தொல்லைநாள் எல்லையாக, நல்வகையாக்கும் பிண்டி நான்முகன் நாளும் தீமை, வெல்வினை தொடங்கச்செய்து வீடருள்வோன் தாள் போற்றி” செய்கின்றார். பின்னர், நானிலங்கள், நால்வகையங்கங்களை விரித்துக் கூறலுறுவார், இடையே, சமண் சமயக் கருத்தாகிய நாற்கதி வகையினை நுழைத்து, "நாற்கதி உம்பர் மக்கள் சொல்லிய விலங்கினோடு நரகர்" எனக் கூறினர். இவ்வாறே சைவர்கள் கூறும், சிவனுக்குரிய எண்வகைக் குணங்களைக் கூறுமிடத்து, அருகனுக்குரிய எண்வகைக் குணமும், இறைவனுக்கு ஆகாவெனத் தம் சமய நூல்கள் விலக்கிய எண்வகைக் குற்றங்களையும் கூறியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நிலவிய தொல்காப்பியம் மிக விரிந்து பரந்த நூலாய்க் கிடந்தமையின், அதனைச் சிறுவர்கள் எளிதில் கற்றற்குரிய நிலையில் சின்னூலும் நன்னூலும் இயற்றியிருக்கின்றன. சின்னூல் செய்த குணவீரபண்டிதர் என்னும் பெரியார் வடநூன் மரபுகளை ஒரு சிறிதே தழுவி, தம் சமயப் பொருட்குரிய வணக்கங் கூறிச் செல்லுகின்றார். நன்னூல் செய்த பவணந்தி முனிவர் சுருங்கிய சிலவாய சொற்களால் மிக அழகியதாக இதனைச் செய்துள்ளார். இதன்கண், இவர்தம் சமயக் கருத்தைக் காப்புச் செய்யுளிற் காட்டியதோடு நில்லாது, எழுத்தின் இலக்கணத்திலும் புகுத்தியிருக்கின்றார். ஆசிரியர் தொல்காப்பியனார் “எழுத்தெனப்படுப அகரமுதல் னகர விறுவாய் முப்பஃதென்ப" எனத் தொடங்கினரேயன்றி, எழுத்தாவது இஃது என இலக்கணங் கூறிற்றிலர். அவ்விலக்கணங் கூறப்புகுந்த பவணந்தியார், "மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து" என்று மொழிகின்றார். இதன்கண் "அணுத்திரள் ஒலி" என்றது சமண் சமயக் கருத்து. இதனையே எழுத்துக்களின் பிறப்புக் கூறுமிடத்தும், ‘'நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும் அணுத்திரள்" எனச் சிறுவர் மனத்தில் நன்குபதியக் கூறியிருக்கின்றார். இத்துறைக் கண் ஆசிரியர் தொல்காப்பியனார், “அகத்தெழு வளியிசை அரில்தப நாடி, அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே; அஃதிவண்துவலாது எழுந்து புறத்திசைக்கும், மெய்தெரி வளியிசை அளவு நுவன்றி.சினே" என்றே கூறினர். தொல்காப்பியர் கூறியதனையே அவிநயனாரும், குண வீரபண்டிதரும், புத்தமித்திரனாரும் கூறினர். இதனாலும் பிற்காலச் சமண முனிவர்களின் கருத்துத் தம் தமிழ்த் தொண்டு சமயத் தொண்டிற்குக் கருவியாதல் வேண்டும் என்பது தெளிவாகும். இதனையறிந்தே இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத தேசிகர், "மொழிக் காரணமாம் நாதகாரியவொலி எழுத்து" எனக் கூறினாராதல் வேண்டும்.

இனி, இவர்கள் செய்தருளிய இலக்கியங்கள் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் என இருவகைப்படும். இவற்றுள், சிற்றிலக்கியங்கள் பலவும் அந்தாதி, கலம்பகம் முதலாகப் பலதிறப்படும். அவை யாவும் சமயப் பொருள்களையும், சமண் சமயச் சான்றோர்களையும் புகழ்ந்து பாடும் சின்னூல்களாகும். திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி முதலியவை சமண் சமயத்தினர் பெரிதும் போற்றிப் படிக்கும் தீவிய செந்தமிழ் நூல்கள். நரிவிருத்தம் போலும் கதைச் செய்யுள் நூல்களும், மேருமந்தர புராணம், யசோதர காவியம் போல்வனவும் சமண் சமயப் பொருள்களையும் வரலாறுகளையும் விளக்கும் நற்றமிழ் நூல்கள்.

சிந்தாமணி முதலாகக் கூறப்படும் பெருங்காப்பியங்களும், சூளாமணி முதலாகக் கூறப்படும் சிறுகாப்பியங்களும் தமிழ் மொழிக்குப் பொதுவாக வைத்துக் கூறப்படுவன. சிறு காப்பியமைந்தனுள், மேலே காட்டிய யசோதர காவியமும் ஒன்றெனக் கூறப்படும்.

சிறுகாப்பியமைந்தும் தமிழ்மொழிக்குரிய பொதுக் காப்பியங்களாகக் கருதப்படும் செந்தமிழ் நலம் சிறந்தவையா இவை யாவும் சமண் சமயக் கருத்துக்களையே முற்றும் கூறிச் செல்கின்றன. இவற்றுள் சூளாமணி என்பது தலையாயது. இதனை இயற்றிய பெரியார் தோலாமொழித்தேவர். இவர் பெயரும், சீவக சிந்தாமணி செய்த திருத்தக்கதேவர் பெயரும் இயற்பெயரல்ல என்று கருதுகிறேன். இவர்களைப்போலத் தமிழ்த் தொண்டு புரிந்த சமண முனிவர் பெயரெல்லாம் வட மொழிப் பெயராகவே இருக்கின்றன. குணவீரபண்டிதர், அமுதசாகரர், மண்டலபுருடர், வாமதேவர் என்பன பலவும் வடமொழிப் பெயர்களே. ஆகவே, இவர்கள் தமிழ் நூல் பயின்று, தமிழ் வேட்கை மிகுந்து, தமிழர்போலத் தாமும் தமிழராகவே இயைந்து நிற்கும் தமிழ் நல மிகுதியால், தம்மைத் தமிழ்ப் பெயரால் திருத்தக்கதேவர், தோலாமொழித்தேவர். என்பவராகக் கூறினாராதல் வேண்டும். இவர்கட்குப் பலவாண்டுகட்குப் பிற்போந்த கான்ஸ்டான்டினஸ் பெஸ்ச்சி என்பாரும், தமிழ்த் தொண்டுபுரியும் சால்பு எய்திய வழித் தம்மை வீரமாமுனிவர் எனக் கூறிக்கொண்டது, என் கருத்திற்கு ஆதரவு தருகின்றது. இவ் வீரமாமுனிவரும் தேம்பாவணி என்னும் காவியமும், தொன்னூல் என்னும் இலக்கணமும் பிறவும் செய்து தமிழ்த் தொண்டு புரிந்திருக்கின்றார். சீவகசிந்தாமணி யென்பது பெருங்காப்பிய மைந்தனுள் தலையாயது. ஏனை நான்கனுள் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் என்னும் சைவரும், மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் என்னும் தமிழரும் எழுதினர். ஏனை இரண்டும் இறந்துவிட்டன. இவற்றுள் மணிமேகலை புத்த சமயக் கருத்துக்களைத் தன்பாற் கொண்டது. சிலப்பதிகாரத்தும் சமண் சமயக் கருத்துக்கள் காணப்படும். ஆயினும் சமயத் தொண்டிற்கும் தமிழ்த் தொண்டிற்கும் ஒத்த இலக்கியமாய் விளங்குவது சீவகசிந்தாமணியே யாகும்.

சூளாமணி, சமண் சமயத்தவ்ரும் ஏனைச் சமயத்தவரும் ஒப்பப்போற்றும் தகுதியுடையதாய் இருக்கிறது. இதனை எழுதிய ஆசிரியர், தமிழ்நாட்டில் நிலவிய புறச்சமயப் பெர்ருள்களையும் சமயப் பொருளையும் கற்று, தம் சமய நூல்க்ளிலும், புறச்சமய நூல்களிலும் ஒத்தவாய் உள்ள கதைப் பகுதிகளைக் கண்டு, அவற்றைத் தமிழ் மக்கட்கு உணர்த்தி அவர் தம் ஆதரவு பெறுவதை நாடிய நல்லறிஞராவர். இதனால், இவர் எழுதிய இந்நூல் இன்றுகாறும் நன்கு போற்றப் பெற்று வருகிறது. சீவகசிந்தாமணியும் இப்பெற்றித்தாய்ச் சைவர் ஒருவரால் உரைகாணவும் பெற்றிருக்கிறது. . தோலாமொழித் தேவர் எழுதிய சூளாமணியின்கண், திவிட்டன், விசயன் என்ற இரண்டு அரச குமாரர்கள் வரலாறு கூறப்படுகிறது. இவர்கள் வரலாறு வைதிக சமயநூற் கதைகளுள் வரும் வரலாற்றைப் பெரிதும் ஒத்திருக்கிறது. இடையிடையே சமண் சமயக் கருத்து விரவி நிற்கிறது. எனினும், சிந்தாமணி போல, வைதிக சமயநெறி நிற்பவரும் விரும்பத்தக்க அத்துணை உவமநலம் உடையதன்று என்றே கூற வேண்டும்.

கண்ணன் கடல்வண்ணன் என்றும், பலராமன் வளை வண்ணன் என்றும் தமிழ் நூல்கள் கூறும். ‘பால்நிற உருவிற் பனைக் கொடியோனும், நீல்நிற உருவின் நேமியோனும் என்றிரு பெருந்தெய்வமும் உடனின்றாங்கு (புறம் ௫௰௮) என வரும் திவிட்டனைக் கண்ட மகளிர், "கடலொளி மணிவணன் கனவினில் வந்தெமது, உடலகம் வெறுவிதாய் உள்ளம் வவ்வினான்" (குமார ௰௨) என்றும், விசயனைக் கண்டவர் "வார்வளை வண்ணன் எம் மனத்துளான் பிறர், ஏர்வளர் நெடுங் கணுக்கு இலக்கமல்லனால்" (௰௬) என்றும் கூறினார் என்பர். இதனால் நிறமொத்தல் கூறியவாறாம்.

கண்ணன் கஞ்சன் விடுத்த குவலயா பீடத்தை அடர்த்தான்; திவிட்டன் அச்சுவகண்டன் விடுத்த சிங்கத்தை வாய்பிளந்தான். கண்ணன் பெருகி வந்த மழையைத் தடுப்பது குறித்துக் குன்றினை யெடுத்துக் குடையாகப் பிடித்தான்; திவிட்டனும் புலவர் ஒதிய வரலாற்றிற்கேற்பக் கொடிமாசிலை என்னும் குன்றத்தை யெடுத்துப் புகழ் நிறுவினான்.

“எரிமணி கடகக்கை இரண்டு மூன்றியப்
பெருமணி நிலம்பில மாகக் கீழ்நுழைத்
தருமணி நெடுவரை யதனை ஏந்தினான்
திருமணி நெடுமுடிச் செல்வன் என்பவே”

(அரசு ௲௮௰௨) எனச் சூளாமணி கூறுகிறது.

கண்ணன் பின்னைப் பிராட்டியை மணந்தான்; திவிட்டன் சுயம்பிரபை என்னும் வித்தியாதர மகளை மணந்தான். கண்ணன் சிசுபாலனை ஆழி யெறிந்து வென்றான்; திவிட்டன் அயக்கிரீவனை ஆழி யெறிந்து வென்றான். இவ்வாறு திவிட்டன் செயல் பலவும் கண்ணன் செயல்களோடு ஒத்திருத்தலை,

“கோடிசிலை யெடுத்தான் கோளிமாவாய் போழ்ந்தான்
ஆடியல் யானை அயக்கிரீவனை அடித்தான்

வீடின் மணியருவி வெண்மலையும்
கைப்பிடித்தான் வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே.”

“வலம்புரிவாய் வைத்தான் வார்சிலைகைக் கொண்டான்,
சலம்புரி சண்டை தலைபணிப்புக் கண்டான்,
பொலம்புரி தாமரையாள் பொன்னாகம் தோய்ந்தான்,
கலம்புரிவண்டடக்கைக் கார்மேக வண்ணனே" (சுயம் ௱௱௮)

என்ற பாட்டுக்களால் இனிது காணலாம்.

இனி, இப்பெரியோர்களுள் திருத்தக்கதேவர் ஏனையோரைக் காட்டிலும் உலகியலில் மிக்க தேர்ச்சி யுடையவராக விளங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் தாம் பரப்பக் கருதும் சமயப் பொருள் குறித்த இந்த நூல், தமிழ்நாட்டில் பரவியிருக்கும் சமயப் பொருளைப் புறங்கூறுவதாயிருப்பினும், தம் சமயப் பொருளையே நிரல்படக் கூறுவதாயிருப்பினும், தமிழர்களால் ஆதரிக்கப்படுவது இல்லையாம் என்பதை நன்கு உணர்ந் திருந்தனர். அம் மதிநுட்பத்தால், தமிழ்நாட்டிற் பயின்றிருந்த வைதிக சமயக் கதை நிகழ்ச்சிகளை இந்நூற்கண் உவமமுகத்தாற் பயில வழங்கியுள்ளார். அதனால் இந்நூல் சமயக் கொள்கையால் வேறுபட்ட தமிழர் பலராலும் ஆதரிக்கப்பெற்ற தென்பது நாட்டில் வழங்கும் கதைகளால் நாம் அறிகின்றோம். இவ்வியல்பினைக் கடைப்பிடியாமையாற்றான், தேம்பாவணி, சீறாப்புராணம் முதலியன தமிழரிடையே நன்கு வழங்காதிருக் கின்றன போலும். இவ்வியல்பினை மூன்று இயல்களாற் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.

தேவர் காலத்தே, தமிழர் தேவர்கள் இமையா நாட்டம் உடையரென்றும், அவர்கட்கும் அசுரர்கட்கும் பகைமையிருந்து வந்ததென்றும், அதனால் தேவர்கள் அடிக்கடி துன்புற்றன ரென்றும், தேவர்கள் திருமாலின் உதவியால் கடல் கடைந்து இனிய அமுதம் பெற்று மகிழ்ந்தனரென்றும் கேட்டிருந்தனர். அந் நிகழ்ச்சிகளைத் திருத்தக்கதேவர் தாம் சமயத் தொண்டு குறித்துப் - சீவி.க.சிந்தாமணியின்கண் குறித்திருக்கின்றார். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொல்லக் கருதி அமைச்சரோடு சூழ்ந்த காலத்தில் அமைச்சருள் தருமதத்த்ன் என்பான் கூற்றில் வைத்து, "இறங்கு கண்ணிமையார் விழித்தேயிருந்து, அற்ங்கள் வவ்வ அதன்புறம் காக்கலார்" (௨௱௪௰௮) என்றும், தேவர்கள் கடல் கடைந்து அமுது பெற்ற செய்தியை, பதுமுகன்

கோவிந்தையை மணந்து கூடிக் கூறும் நயப்புரையில், "தீம்பாற் கடலைத் திரைபொங்கக் கடைந்து தேவர், தாம்பாற் படுத்த அமுதோ" என்றும், அக்கடல் நாகம் கயிறாகக் கொண்டு கடையப்பட்டதென்பதை சீவகன் காந்தருவதத்தையை மணந்த காலையில், கட்டியங்காரனது ஏவலால், அச்சீவகனை எதிர்த்த வேந்தர் அவனால் அலைப்புண்ட செய்தியை விளக்குதற்கு உவமையாக நிறுத்தி, “அருவரை நாகஞ்சுற்றி ஆழியான் கடையவன்று, கருவரை குடையப்பட்ட கடலெனக் கலங்கி வேந்தர்... உடையலுற்றார்" (௮௱௰௨) என்று கூறுகின்றார்.

இரண்டாவதாக, முருகன் தாமரைப்பூவில் தோன்றியவன் என்றும், அவன் மலைநாட்டுக்குரிய கடவுள் என்றும், அவன் ஏந்திய வேல் வலி சிறந்தது என்றும், அவன் ஆடவரிற் பேராற்றலிலும் பேரழகிலும் மேம்பட்டவன் என்றும் தமிழர் சமயவுலகு கூறிப் பாராட்டி வந்தது. இச் செயல்களைத் திருத்தக்க தேவர், “பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்” (௩௱௰௬) என்றும், “தாமரை அமரர் மேவரத் தோன்றிய அண்ணல்” (௬௱௯௰௪) என்றும், "மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ" (௲௬௱௰௧) என்றும், "அமருள் ஆனாது, ஒக்கிய முருகன் எஃகம் ஓரிரண்டனைய கண்ணாள்" (௲௨௱௬௰௧) என்றும், “செம்பொற் கடம்பன் செவ்வேலும்” (௲௬௭௯௰௪) என்றும், "கதம்பனே முருகன் வேற்போர்" (௲௬௱௮௰௧) என்றும், "திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன்தான்" (௮௱௰௨) என்றும், “வள்ளல் மாத் தடிந்தான் அன்ன மாண்பினான்" (௲௨௰௬) என்றும், "முந்து சூர்தடிந்த முருகன் நம்பி என்பார்" (௨௲௫௱௪௰௮) என்றும், இவை போலப் பிறவாறும் கூறிச் சிறப்பித்திருக்கின்றார். இவற்றை இடங்கூறி விளக்கலுறின் கட்டுரை விரியும்.

இனி, சிவபெருமானைக் கூறுமிடத்துப் "போகமீன்ற புண்ணியன்" (௩௱௬௨) என்றும், "காரியுண்டிக் கடவுள்" (௬௱௭௰) என்றும், “அறவாழி யண்ணல்” என்றும், பிறவும் கூறியும் பாராட்டுவர். பரமன் கண்ணுதலால் காமனைக் காய்ந்த செய்தி "கண்ணுதற் கடவுள் சீறக் கனலெரிப்பட்ட காமன்" (௲௩௱௰௧) என்பதனாலும், புரமெரித்த வரலாற்றினை, “கடிமதில் மூன்றுமெய்த கடவுள்" (௲௮௭) என்பதனாலும், "கணையெரி யழலம் பெய்த கண்ணுதல் மூர்த்தி யொத்தான்" (௨௲௨௱௪௬) என்பதனாலும், மங்கை பங்கினனாய் நிற்கும் நிலையினை, "பிறையணி யண்ணல் கொண்ட பெண்ணொர்பால் கொண்ட தொத்தார்" (உதடுளகள்) என்பதனா லும் பிறவாற்றாலும் புகழ்ந்துள்ளார்.

இனி, திருமால், பரமன் புரமெரித்த காலத்தில் அம்பாயின செய்தியை, “போகமீன்ற புண்ணிய னெய்த கணையேபோல், மாகமீன்ற மாமதியன்னான் வளர்கின்றான்“ (காசு) என்றம், அவற்குக் கருடப்புள் ஊர்தியென்பதை, ”ஆழியான் ஊர்திப்புள்“ (சாசசு) என்றும், அவன் சக்கரப்படையுடையன் என்பதனை இதனாலும் பெறவைத்தும், திருமால் கண்ணனாய்த் தோன்றிய காலத்து, பாரதப் போரில் சங்கோசை எழுப்பிய செய்தியை, ”செங்கண்மால் தெழிக்கப்பட்ட வலம்புரித் துருவங் கொண்ட, சங்கு“ (அாமக) என்றும், கண்ணனைக் கோறற்குப் போந்த குவலயாபீடமென்ற யானையை அவன் அடர்த்த நிகழ்ச்சியினை, ”மல்லல் நீர்மணி வண்ணனைப் பண்டொர்நாள், கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதச், செல்வன் போன்றனன் சீவகன்“(கூாஅசை) என்றும், திருமால் இராமனாகிய காலத்து, அவன் மராமரமேழும் எய்த வில் வன்மையை, ”மராமர மேழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில், இராமனை வல்லன் என்பது இசையலாற் கண்டதில்லை" (தசுாசகை) என உவமித்தும் மகிழ்கின்றார்.

மேலும், ஈண்டுக் கூறிய சிவபெருமானும், திருமாலும், தாம் பரவும் அருகமூர்த்தியே எனவும், அவ்விருவரையும் பரவுவோர், அருகனைப் பரவுதல் வேண்டும் என்பார்,

"ம்லரேந்து சேவடிய மாலென்ப மாலால்

அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுவார்
அலரேந்தி அஞ்சலி செய்தஞ்சப் படுமேல்
இலரே மலரெனினும் ஏத்தாவா றென்னே

"களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த அளிசேர் அறவாழி அண்ணல் இவனென்ப,
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்,
விளியாக் குணத்துதி நாம் வித்தாலாறென்னே"(துசுனசி.கெ)

என்று மொழிந்திருக்கின்றார்.

இனி, இவர் காட்டி மகிழ்விக்கும் தமிழ் நூற் சொல்லாட்சிகளும், தமிழர் வழக்கவொழுக்கங்களும் ஈண்டு எடுத்துக் காட்டலுறின், இஃதோர் பெரும் பரப்பினதாகும். இவ்வாறு, தம் சமயப் பொருளை முற்ற விரித்துரைக்கும் பெருங்காப்பியம் பாடத் தொடங்கியவர், அதனைத் தமிழ் நாட்டவர் பெரிதும் விரும்பியேற்றுப் பேணத்தக்க விரகு அறிந்து அமைத்த அமைதி, அவரது தமிழ் மாண்புலமையினை நன்கு விளக்குகின்றது. மேலும், இவர் காட்டிய நெறியினை இவர்க்குப் பின் வந்தோர் கடைப்பிடித்திருப்பரேல், சமயப் பூசல்களும், பிற தீமைகளும் உளவாதற் கேதுவில்லையாகியிருக்கும்.

இதுகாறும் கூறியவாற்றால், சமணமுனிவர் சைன சமயத்துச் சான்றோர் என்பதும், அவர்கள் நம் தமிழ்நாட்டில் தம் சமய நெறியை உணர்த்தப் புகுந்தபோது, தமிழர், இப்பெரியார்கட்குப் பல ஆண்டுகள் முன்பே வந்த வடவர் கூட்டுறவால் தம் தமிழ்ச்சமய நெறி மறந்து, வடவர் சமயக் கொள்கையிலும், வடநூன் மரபுகளிலும் வேட்கையுற்றுத் தம் தமிழ் வளர்ச்சியைக் கருதாது நின்றனர் என்பதும், ஆயினும் சமண முனிவர்கள் தேவார காலம் வரையில் தமிழ்த் தொண்டு புரிதற்கண் ஊக்கங் கொள்ளாதிருந்தனர் என்பதும், பின்பு அக்காலத்து வாதங்களில் தோல்வியுற்றதன் பயனால், தமிழ்த் தொண்டு புரியது தொடங்கி, சின்னூல்களும் பெருநூல்களும் செய்தனர் என்பதும், இலக்கணங்களின் சில புதுநெறிக் கருத்துக்களைப் புகுத்தியும், தாம் செய்த நூல்களுள் வேண்டுமிடங்களில் தம் சமயக் கருத்துக்கள் நுழைத்தும் சமயத் தொண்டு விரித்தனர் என்பதும், அதுவே நம் தமிழுக்குப் பெருந் தொண்டாயிற்றென்பது பிறவுமாகும். இந்நெறியைக் கைப்பற்றிய பின் வந்த கிறிஸ்தவப் பெரியார்களும் தமிழ்த் தொண்டு புரிந்தனர். இக்காலத்து ஏனைச் சமயத்தவர்களும் இம்முறையை மேற்கொள்வார்களாயின், தங்கள் சமயநெறி வளம் பெறுவதோடு நம் தமிழ் மொழியும் சிறப்பெய்தும் என்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/018-020&oldid=1625141" இலிருந்து மீள்விக்கப்பட்டது