20. விஞ்ஞானமும் தத்துவஞானமும்


க்காலம் நுணுகிக் காணும் விஞ்ஞானத்துக்குச் சிறப்பளித்து அதனாற் பெறலாகும் அறிவியல் நலங்கட்கு முதன்மை தந்து நிலவும் காலமாகும். விஞ்ஞானத்தால் விளக்கப் படும் பொருள்களே உண்மை யெனவும், கொள்ளத்தகுவன எனவும் கருதுவது இக்காலத்தில் சிறப்பியல்பு. சிவமாகிய கடவுட் பொருள் விஞ்ஞான முறையில் காணப்பட்டாலொழியக் கொள்ளத்தகுவதன்றெனவும் இக்காலம் கருதுவதுண்டு. அறிவென்பதுகூட விஞ்ஞான முறையிற் பெறுவதுதான் சிறப்பு என்று இக்காலத்தவர் கருதுகின்றனர். இவர்கட்கு முன்னணியில் நிற்பவர் இமானுவேல் காண்டு (Immanuel Kant) என்பாரும், அகஸ்தே காந்தே (Augustine Conte) என்பவருமாவர். இவ்விருவரும் தத்தங்கொள்கை வகையில் பெரிதும் வேறுபாடு உடையவராயினும் "அறிவாவது விஞ்ஞான முறையிற் பெறப்படும் அறிவே” என்ற வகையில் ஒத்துள்ளனர். விஞ்ஞான முறை அறிவாவது நியூட்டன் (Newton) கண்ட அறிவியல் முறைப்படி அறியவேண்டியவற்றை அறிவதாகும். உலகியற் பொருளொன்றை விஞ்ஞான முறையில் அறிவதென்பது, குறித்த பொருளின்பால் பிற பொருட்குள்ள தொடர்புகளைக் கணக்கியல் வாய்பாட்டாற் கண்டறிவதென்பர். சிவமாகிய செம்பொருள் உலகியற் பொருள்களுள் ஒன்றாக வைத்து விஞ்ஞான முறையிற் காணக்கூடியது அன்மையின் அச்செம் பொருள் அறியக் கூடியதன்று; ஆகவே, அதனைப்பற்றிப் பேசுவது வீண் செயல் என்பது அவர் கொள்கை. ஆயினும், உலகியல் நிகழ்ச்சிக்கு அத்தகைய செம்பொருளொன்று உளதாக வைத்துச் செய்வன செய்யவேண்டியிருக்கிறது எனவும், எனவே, அது நம்மால்



The Unity of Philosophical Experience by E. Gilson, P.III. pp.223–95.

தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமையுரையின் ஒரு பகுதி. வகுத்துக்கொள்ளப்பட்ட தொன்றே தவிர, அறிவியல் ஆராய்ச்சியால் அறிந்துகொள்ளக்கூடிய ஒன்றன்று எனவும் காண்டு (Kant) என்பவர் கூறுகின்றார். காந்தே (Conte) என்பார் வேறு வகையில் தமது நாவன்மையைச் செலுத்தி இந்த முடிவுக்கே வந்துசேர்ந்தார்.

இவர்தம் கொள்கைகளுள் காண்டென்பாரைப் பின்பற்றி ஜெர்மனி நாட்டில் பால்சென் (Paulsen) வைசிங்கர் (Vaishinger) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில், ரினோவியர் (Removier) முதலியோரும், அமெரிக்காவில் லியோன் பிரன்சிக் (Prof Leon Brunschvieg) முதலியோரும், காந்தேயைப் பின்பற்றி இங்கிலாந்தில் ஜான் ஸ்டுவர்ட்மில் (John Stuart Mill) ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbart Spencer) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில் எமில் லித்ரே ("Emile Littre") எமில் டர்க்கீம் ("Emile Durkheim") முதலியோரும் நாட்டிற் பரப்பலுற்றனர்.

புதுமையில் மக்கட்கு விழைவும் வியப்பும் உண்டாதல் இயல்பு. விஞ்ஞானிகள் இங்ஙனம் புது முறையில் தமது பேச்சு வன்மையும் எழுத்து வன்மையும் கூட்டிக் கடவுட் கொள்கையைத் தாக்கத் தொடங்கியதும், விஞ்ஞானம் காட்டும் புதுமைகள் கண்டு வியப்பால் விழுங்கப்பட்டுக்கிடந்த மக்களது உள்ளம் நிலைகலங்கிற்று. விஞ்ஞானத் துறையின் நோக்கத்தை நுணுகிக் காணும் திறம் இழந்தவர். அவர் கொள்கைகட்கு இரையாயினர். உலகியற் பொருள்களின் ஆக்கக் கூறுகளும், அவை, தம்மில் இயைந்து அமைந்திருக்கும் அமைதியும், அவற்றின் ஊடே நிலவும் ஒழுங்கும் கண்டு எப்படி யமைந்துள்ளன என்று கண்டறிவதே விஞ்ஞானத்தின் முழுத்த நோக்கமாகும். பொருள்களின் தோற்றம், நிலை, கேடு ஆகியன உண்டாதல் எங்ஙனம் என்று கண்டு, அவை ஏன் அங்ஙனமாயின என்று காணாது போதலால், விஞ்ஞானத்தாற்பெறும் உலகியலறிவு முழுத்த அறிவாகாதென்பதை மக்கள் அறிந்திலர். பொருள்களின் ஆக்க அமைதிகளை ஆராயுங்கால் புதிய புதிய அறிவும் அவ்வழி அவற்றால் உண்டாகும் இன்பமும் அவரது ஆராய்ச்சியறிவை மழுப்பி விடுவதால், விஞ்ஞான அறிவு ஒருமருங்கு பற்றியதாக இருத்தலை விஞ்ஞானிகள் தாமும் அறியாதொழிகின்றனர். மேலும் அவர்கட்குக் கடவுளாகிய செம்பொருள் விஞ்ஞான நெறியில் ஆராயத்தக்க பொருளாக இல்லை. விஞ்ஞான நெறியிற் காணப்படும் பொருளின்கண் ஊடுருவி நிற்கும் இயற்கையே முழுமுதலாகிறது. அதனைக்காட்டும் பொருள்களின் ஆக்க அமைதிகட்கு உரிய காரணத்தை (ஆக்கமும் அமைதியும் ஏன் உண்டாயின எனக் காணும் காட்சியால் அறிதற்கெழும் உரிய காரணத்தை) நோக்கும் நிலையில் நாம் இருத்தலால் அவர் கருத்தை ஏற்கின்றோமில்லை. நீர் எப்படி யுண்டாகிறதென விஞ்ஞானத்தைக் கேட்பின், அஃது இரு கூறு நீர்க்காற்றும், ஒரு கூறு நெருப்புக்காற்றும் கூடி நீருண்டாகிறது என்றும்; இவ்வாறு ஏன் உண்டாக வேண்டும் என்றால், விஞ்ஞானம் விடை தராது.

பொருள்களின் ஆக்க அமைதிகண்டு ஏன் என்னாது எப்படியென வினாவிச் சேரல் விஞ்ஞானத்தின் குறிப்பு. எப்படி யென்னாது ஏன் என வினாவிச் செல்வது தத்துவ ஞானத்தின் குறிப்பாகும். இதனை மேனாட்டார் மெய்யியல் (Philosophy) என்பர். விஞ்ஞான தத்துவ ஞானமும் தத்தமக்குரிய எல்லைக் கண் நிற்குமாயின், உண்மை யறிவு விளக்கமுறும், இவ்விரு ஞானங்களும் தம்முள் மாறுகொண்டு ஒன்றனையொன்று கெடுத்தற்கே முயன்றுள்ளன. உலக வரலாறு காண்போர், தத்துவ ஞானத்தின் செல்வாக்கால் விஞ்ஞானிகள் பலர் பெருங்கேட்டுக் குள்ளாகியதைக் காண்பர். விஞ்ஞானிகள் பலர் நாடு கடத்தப்பட்டதும், உயிர்க்கொலை செய்யப்பட்டதும் வரலாற்று நூல் வாய்விட்டரற்றுகிறது. கால வேறுபாட்டால் தத்துவஞானம் செல்வாக்குக் குறையலுற்றதும், விஞ்ஞானம் செல்வாக்குற்றுத் தத்துவஞான எல்லைக்குள் புகுவதாயிற்று, தன்னெல்லைக்குட் படாத செம்பொருளை விஞ்ஞானம் தேடியாராய்ந்து “அற்புதமோ சிவனருளோ அறியேன்” என அலமருகிறது.

தத்துவ ஞானமும், விஞ்ஞானமும் வேறு வேறு குறிப்பின வாயினும், தத்துவ ஞானத்துக்கு விஞ்ஞானமும் இன்றி யமையாது வேண்டப்படும். உண்மை வழிநின்று கடவுளுண்மை காணும் நெறி, தத்துவ ஞான நெறியின் வயப்பட்டு இயலுவது. ஆதலால், தத்துவ ஞானியொருவர் ஒன்றனைப்பற்றிப் பேச வருமுன் அது பற்றி விஞ்ஞானி யாது கூறுகின்றார் என்பதை முதற்கண் காண்டல் வேண்டும் என்பர். ஒரு பொருளின் ஆக்கம் எங்ஙன மாயிற்றென்பது கண்டால் அஃது அங்ஙனம் ஏன் ஆயிற்றெனக் காணுமாற்றால் உண்மைத் தன்மை யுணால் கூடும் என்று சர். ஜேம்ஸ் ஜீன்ஸ் (Sir James Jeans) என்பார் கூறுகின்றார். விஞ்ஞானக் காட்சியிற் செல்லுமிடத்து மிக்க விழிப்போடு செல்லவேண்டும். சிறிது அயர்ந்தவிடத்து, விஞ்ஞானம் தத்துவஞான எல்லைக்குட் புகுந்து மயக்கத்திற்செலுத்திவிடும். பின்னர், தத்துவ ஞான நெறியிற் காணும் பொருள்கட்கு விஞ்ஞான நெறியில் விளக்கங் காணச் செலுத்தி உழல்விக்கும் விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் ஒருங்குடையராகிய சர். ஜேம்ஸ் ஜீன்ஸ் 1930-ஆம் ஆண்டில், தத்துவஞானப் பொருட்கு விஞ்ஞான விளக்கங் கூறத் தலைப்பட்டு முடிவில் “அற்புத பிரபஞ்சம்" (The Mysterious Universe) என்ற நூலை எழுதி முடித்தார்.

இப்பிரபஞ்சம் அற்புதமானது என்றதற்கு ஒரு விஞ்ஞானி வேண்டுமா? மக்கள் நாகரிகமின்றி விலங்கு போல் வாழ்ந்த காலத்தேயே இவ்வுலகம் அற்புதமானது என்பது அறியப்பட்டது. விஞ்ஞானத்தின் கருத்து பிரபஞ்சத்தின் அற்புதத் தன்மையை மாற்றி விளங்கவைப்பதாகும். அத்துறையில் முயன்று அஃது எவ்வளவோ விளக்கத்தைத் தந்திருக்கிறதன்றோ இந்நாளில் பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் தாமஸ் ஆக்வினாஸ், அரிஸ்தாத்தல், பிளேடோ முதலாயினோர் அறியாத உண்மை களை நன்கு அறிந்துள்ளான். அவர்கட்குப் பெருமயக்கத்தைத் தந்த உலக நிகழ்ச்சிகட்கு இக்கால விஞ்ஞானம் தெளிவுடைய விளக்கந் தந்துள்ளது. இங்ஙனமிருக்க, விஞ்ஞானிகள் இவ்வுலகம் அற்புதமான தென்பாராயின், அவர் கூற்று நன்கு சிந்திக்கத்தக்கதொன்றாம். சிந்தித்தவிடத்து உண்மை புலனாகிறது. தத்துவநெறியிற் காண்பனவற்றை விஞ்ஞானமாகக் கருதி அதற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் கூறப்புகுவதே அவர் செய்யும் தவறு. அதனால் அவர்கள் உலகம் அற்புதமானது என்று கூறவேண்டியவராயினர். தத்துவ ஞானக் காட்சிப் பொருள் விஞ்ஞானக் காட்சிக்கு அகப்படாமையின், விஞ்ஞானம் அதனைக் காண்டற்குத் துணை செய்யாதாயிற்று என்பதே அவர் கூறுவதன் கருத்தாகும். மேலும், விஞ்ஞான முறையிற் காணப்படும் கொள்கைகள் ஒரு நிலைமையனவல்ல. காலஞ்செல்லச் செல்லப் புதுக்காட்சிகளால் மாறுபடுவன. "குறைபாடு உள்ளதற்கன்றே வளர்ச்சியுண்டாவது" என்பர் திருக்கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியர். மேன்மேலும் வளர்ந்து சிறத்தலால் குறைபாடுடைய விஞ்ஞானம், ஒரு முடிவு கண்டு முற்றி நிற்கும் தத்துவஞானத்தோடு இயையாதாகலின் பிரபஞ்சத்தின் அற்புத நிலைமையை விளக்காதாயிற்று.

"வந்தவாறு எங்ஙனே போமாறேதோ, மாயமாம்பெரு வாழ்வு" என்றார் நம் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரைகூறுவோர்போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக் கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக்கூறி "இந்நிலவுலகிற்கு மக்களுயிர் வந்ததுதற்செயலாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது”.[1] என்று சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் உரைத்தார். தற்செயல் (Accident) விளக்கமில்லாத சொல்லாதலின், "வந்தவாறு" காண்டற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும்.

பின்பு அவர், ஐன்ஸ்டன் (Einstein) ஹிசன்பர்க் (Heisenberg) திரா அக் (Dirac) @av Guogi (Lematre) லூயி-தெ-புரேக்ளி (Louis-de-Broglie) முதலாயினர் கண்ட பெளதிக வுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவ ஞானமென்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண் பிரபஞ்சம் ‘கடசக்கரர் எந்திரெமனச் சுழல்வது’[2] எனக் காண்கின்றார். முடிவில், இது ‘படைக்கப்பட்டதே’ என்று தேறி, இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும் எனவும்[3] இதனைப் படைத்தோன், ஒவியம் வல்லானொருவன் தான் தீட்டும் ஓவியக்கிழிக்குப் புறம்பே நின்று ஒவியத்தை எழுதுவதுபோல, காலம், இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு வற்புறுத்துகிறது என்ற கருத்துப்படவும் கூறி முடிக்கின்றார்.

பிரபஞ்சவட்டமெனவும், சங்கற்பசிருட்டியெனவும் இவர் கூறுவன மேனாட்டுச் சாக்ரடீசு முதலிய தத்துவ ஞானிகட்கும்[4] நம் நாட்டுப் பெளக்கர மெழுதிய புட்கரர் முதலிய சிவஞானிகட்கும் முன்னிருந்த முன்னோர்கள் கண்டனவாகும். இவை பல நூற்றாண்டுக்கு முன்பே நம் முன்னோர் கண்டு உரைத்திருப்ப வும், சுற்றிப்போயும் சுங்கச்சாவடிக்கே வந்தது போல, புதிய புதியவாக விஞ்ஞான நெறியில் நுணுகிச் சென்று நுணுக்கரிய நுண்ணுணர்வு காணும் ஐன்ஸ்டன் முதலாயினோர் இந்த முடிவையே கண்டுரைக்கின்றார்கள் என்பது சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் கூறுவதனால் விளங்குகிறதன்றோ?

இனி, ஜூலியன் ஹக்ஸிலி (Julian Huxley) என்பார் உலகில் உயிர்களின் தோற்ற வரலாற்றை யாராய்ந்து கூறிச் செல்லும் கூற்றுக்களில் A.H. காம்ப்டன் (A.H. Compton) கூறுவனவற்றிலும், விஞ்ஞானமும், தத்துவஞானமும் தம்முள் மயங்கிப் பலதலையான முடிவுகண்டு அலமருவது நன்கு புலனாகும். அன்றியும், அணுவைப்பற்றிய ஆராய்ச்சி தோன்றி அவர்களது மயக்கத்தை மிகுதிப்படுத்துகிறது. பெளதிக ரசாயன அணுக்களின் கூட்டுறவால் உண்டாகும் பொருள்களினிடையே உயிரணுக்கள் நிலவுகின்றன. இந்த உயிரணுக்கள் எங்ஙன முண்டாயின எனக் காணும் விஞ்ஞானிகள் பெருமயக்கமுற்று நிற்கின்றனர். இதுகாறும் ஒரு விஞ்ஞானியும் உயிரணு வொன்றைப் படைத்தது கிடையாது. உயிரணுவென்பது பெளதிக அணுவோடு கூடியே யிருக்கிறது. அவ்வணுவின் பெளதிகப் பகுதிக்கு வேறாக யாதும் அதன்கண் இதுகாறும் காணப்பட வில்லை. பெளதிகப்பகுதியின் வேறாக உயிர்த் தன்மை, அதன்பால் எங்ஙன முண்டாயிற்றென ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு முடிவும் காணாது மயங்குகின்றனர். மேலும், அணுத் திரள்களின் இடையே, புரோடான்ஸ் (Protons), எலக்ட்ரான்ஸ் (Electrons), நீயூட்ரான்ஸ், (Newtrons), ஃபோட்டான்ஸ் (Photons) என்ற அணுக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் காண முடியவில்லை. இவ்வாறு விஞ்ஞானம் காட்டும் காட்சிகள் பல நமது உண்மைக்கே விளக்கம் புலப்படுத்தாமல் உள்ளன. இன்னோரன்னவற்றால் மயக்கமும், தத்துவஞானமும் பண்டை நாளில் செய்த தவறுபற்றி அதன்பால் காழ்ப்பும் கொண்டு, கடவுளாகிய செம்பொருளுண்மை கண்டு மேற்கொள்ளாது, Blind Evolution எனவும், Clear sighted Orthogenesis எனவும் பிறவும் சில விஞ்ஞானிகள் கூறுவது பற்றி கூறுவதுபற்றி, கற்ற அறிஞர்கள் மயங்கி யொழிதல் கூடாது.


உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள்
வழங்கிய நூல்கள் பட்டியல்

       1. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
       2. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை
       3. ஐங்குறுநூறு உரை
       4. புறநானூறு உரை
       5. பதிற்றுப்பத்து உரை
       6. நற்றிணை உரை
       7. ஞானாமிர்தம் உரை
       8. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்பதிப்பு
       9. சிலப்பதிகாரம் - சுருக்கம்
      10. மணிமேகலை - சுருக்கம்
      11. சீவகசிந்தாமணி - சுருக்கம்
      12. சூளாமணி
      13. சிலப்பதிகார ஆராய்ச்சி
      14. மணிமேகலை ஆராய்ச்சி
      15. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி
      16. யசோதர காவியம் — மூலமும் உரையும்
      17. தமிழ் நாவலர் சரிதை — மூலமும் உரையும்
      18. சைவ இலக்கிய வரலாறு
      19. நந்தா விளக்கு
      20. ஒளவைத்தமிழ்
      21. தமிழ்த்தாமரை
      22. பெருந்தகைப் பெண்டிர்
      23. மதுரைக்குமரனார்
      24. வரலாற்றுக் காட்சிகள்
      25. சேர மன்னர் வரலாறு
      26. சிவஞானபோதச் செம்பொருள்
      27. ஞானவுரை
      28. திருவருட்பா — உரை
      29. பரணர் - (கரந்தை)
      30. தெய்வப்புலவர் திருவள்ளுவர் — (கழகம்)
      31. Introduction to the story of Thiruvalluvar
      32. தமிழ்ச் செல்வம்



அதியன் இன்றில்லை!


பேராசிரியர் கவியரசர் மீ. இராசேந்திரன் (மீரா)

பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
பரணர்தான் பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
தாங்கள் அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!

அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை இங்கே
புதியதொரு ஆண்ஒளவை எனவி யப்பான்
பூரிப்பான் மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர்
அதிமதுரக் கருநெல்லிக் கனிகொ ணர்ந்தே
அளித்துங்கள் மேனியி னைக்காத லிக்கும்
முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி
மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்!

  1. * The Mystrious Universe p. 11-22.
  2. + காஞ்சிபுராணம் - காப்பு.
  3. * Ibid p. 182.
  4. + பெளஷ் 1:43,
"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/020-020&oldid=1625114" இலிருந்து மீள்விக்கப்பட்டது