19. இந்திய நாட்டில் இசுலாம் செய்த இனிய தொண்டு

நாம் வாழும் இவ்வினியநாடு இந்திய நாடு என்பதில் நமக்கு இன்பம் எழுகின்றது. இதன்கண் வாழும் நாம் அனைவரும் இந்தியர் என்று எண்ணும்போது, நம் உள்ளத்தில் இன்பக் கிளர்ச்சி எழும்பியரும்புகிறது. நமது சமயம், வாழ்க்கை முறை, ஒழுக்கம் என்பனவற்றை நினைந்து எழுதும்போது நம்மையறியாத உவகை கனிந்து ஊறுகிறது. இத்துணைச் சிறப்புக்கு முதலிடமாய், நாம் இருந்து வாழ்தற்குத் தாயகமாய் விளங்கும் நம் இந்திய நாடு ஒருவகையில் வருத்தத்தையும் நல்குகின்றது, நம் கூட்டத்தில் சமயக் காய்ச்சல், வகுப்புப் பூசல், உயர்வு தாழ்வு, தீண்டுதல் தீண்டாமை முதலிய தீக்கோள்கள் நின்று நாம் பெறும் வாழ்க்கை யின்பத்தைச் சிதைக்கின்றன. பிற சமயங்களும், பிறசமயத்தவர்களும் செய்துள்ள நன்மை களைக் காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையில்நின்று காண வொட்டாது, இவைகள் மறைக்கின்றன; மறைத்தனவர் என்பதைப் பற்றி இனி நினைப்பது பயனில் செய்கையாகும், மறைக்காதிருக்குமாறு செய்தலே செய்யற்பாலதாகும்.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் காண்பதே நம் அறிவின் கடமையாகும். உயரிய பொன் மிகத்தாழ்ந்த மண்ணொடு கலந்து காணபபடுகிறதன்றோ? மிகவுயர்ந்த பாலும் ஒரோ வழித் தீமைபயக்கக் காண்கின்றோமல்லமோ? நன்பொருள் இழிந்தோரிடத்தும், இழிபொருள் உயர்ந்தோரிடத்தும் பெறுகின்றோம்; கெடுபொருள் நண்பர் வாயிலும், நன் பொருள் பகைவர்பாலும் கிடைக்கின்றனவே! இவற்றையுட்கொண்டு, நம் திருவள்ளுவப் பெருந்தகை, "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என மொழிந்தது பொய்யா மொழியன்றோ! இவ்வுண்மையைக் கற்பதும், பிறர்க்குக் கற்பிப்பதும் செய்யும் நாம், பிற சமயத்தவர் செய்த நலங்களையறிந்து பாராட்டுவது நமக்குக் கடமையாகும். நம்மிலும், ‘'சீறாப்புராணம்" என்னும் தீவிய செந்தமிழ்க் காவியமும், "நாகூர்ப்புராணம்" என்னும் நலஞ் செறி புராணமும் பெற்ற தமிழறிஞர், இசுலாம் சமயத்தவர் நம் தமிழ்க்காற்றிய பெருந்தொண்டினை யறிந்து மகிழும் பெருந்தகைகளாதலின், அவர்கள், இச்சமயத்தவர் நம் இந்திய நாட்டிற்கே செய்துள்ள பெரும் பணிகளைத் தெரிந்து போற்றும் சிறப்புடையவர் எனக் கருதுகின்றேன்.

இசுலாம் சமயத்தவர் முசல்மான்கள் எனவும், மகமதியர் எனவும் நம் நாட்டில் வழங்கப்பெறுவர். அவர்கள் மேற் கொண்டிருக்கும் இசுலாம் சமயமும் முகமதியமதம் என்றும் கூறுப்படும். இச்சமயம், புத்தசமயம், சமணசமயம்போல, இந்து சமயத்தினின்று முளைத்த கிளைச்சமயமன்று; இது, சிறிது காலத்துக்கு முன்பு நம் நாட்டிற்குப் போந்து பரவிருக்கும் கிறித்தவ சமயத்துக்கும் முன்னர் நம் நாட்டிற்குப் போந்து சிறப்பெய்திய சமயமாகும். நம் நாட்டுச் சமய நூல்களுட் கூறப்படும் அறுவகைப்பட்ட அகச்சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், புறப்புறச்சமயம் என்ற சமயத் தொகைவகை விரிகளில், இஃது இடம்பெறாமைக்கும் இதுவே காரணமாகும். இதற்கும் கிறித்தவ சமயத்துக்கும் முதற்சமயம் யூதசமயம் என்று கூறுப. அவ்யூதசமயம், இந்தியநாட்டிற் பிறந்து தழைத்த சமயமன்று; அதனால், அதனைப்பற்றி நம் நாட்டுச் சமயக் க்ணக்கர்கள் ஆராய்ச்சி செய்திலர். பிற்காலத்துப் போந்த சமயப் புலவர்களும் அவ்வராய்ச்சியினைச் செய்யாதொழிந்தனர், செய்திருப்பாராயின், நம் சமூகத்தில் பிரிப்பின்றி வாழும் சைனர், புத்தர் முதலியவர்களைப்போல, இச்சமயத்தவர்களும் நம்மொடு பிரிப்பறக் கலந்துகொண்டிருப்பர். ஆனால், இதற்கு வேறு காரணம் கூறுபவரும் உண்டு. ஆயினும் அஃது அத்துணைச் சிறப்பாக இல்லை. அதனையும் பின்னர்க் கூறுவோம்.

இசுலாம் என்பது ஒருதெய்வக் கோட்பாட்டைக் கடைப் பிடியாகவுடைய பெருஞ் சமயமாகும். புறச்சமயங்களையும் பலதெய்வக் கோட்பாடுகளையும் எவ்வகையிலும் ஏலாதது; பரம் பொருள் ஒன்றைத் தவிரப் பிற எவற்றையும் வணங்குதற்கு மக்களைப் பணியாத பண்பு மேம்பட்டது; கிறித்தவ சமயமும் இந்நிலையில் இதனோடு ஒத்த இயல்புடையது. இவையிரண்டற்கும் தாய்ச்சமயமாக இருந்த யூதசமயம்போல, இவையுணர்த்தும் இயவுள், ஏனைத் தெய்வங்கள் உளவெனும் எண்ணுதற்கும் இடந்தராத உயர்கடவுள் என்னின் அது மிகையாகாது. "பல்லோரும் பரம்பொருள் ஒன்றே உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசிவாழ்தல் எல்லோரும் செய் கடனாம்” என்றே மெய்ம்மைநெறியை உலகில் வற்புறுத்திய பெருநெறி இதற்கே உண்டு. எத்திறத்துமக்களையும் உயர்வு, தாழ்வு இன்றி ஒப்ப எண்ணியொழுக வேண்டும் என்ற உயர்நெறியில் ஒப்பற்ற சமயம் இசுலாம் சமயமே. கடவுளின் அருட்கண்ணின்முன் மக்கள் வேற்றுமையில்லை என்ற செந்நெறியை உலகில் நிறுவி, யாவரும் அதனைக் கடைப்பிடித் தொழுகச் செய்த முதற்பெருமை இதற்கே உண்டு.

இச்சமயம், பண்டைக் காலத்தில், கிறித்து பிறந்த சுமார் அறுநூறு யாண்டுகட்குப்பின், அரபிய நாட்டிற் பிறந்த மகமது என்ற பெருமகனாரால் முதன்முதலாகக் காணப்பெற்றது. அக்காலத்து, அவ்வரபிய நாட்டுமக்களிடையே பொருந்தாச் செய்கைகளும், திருத்தாக் கொள்கைகளும் பலவாய் மலிந்து, உருவ வழிபாட்டின் பெயரால், அந்நாட்டிற்குப் பேரிழிவினைச் செய்து வந்தன. அருள் வள்ளலாகிய இப்பெரியார் அவற்றைக் கண்டு உளம்பொறாது இச்சமயவுண்மையினைக் கண்டு, அம் மக்களை நல்வழியில் தெருட்டித் திருப்பவெண்ணினார். அவர் முயற்சி தொடக்கத்தில் அவரது அருமையுயிர்க்கே இன்னலை விளைவிக்கத் தொடங்கிற்று. அவர்கள் விளைத்த தீமையினைப் பொறாத அவர், முடிவில், அந்நாட்டின் சீரிய நகரங்களுள் ஒன்றாகிய மெக்கா நகரைவிட்டு நீங்கி மெதினா என்னும் நகருக்குச் சென்றார். அதற்குள் அந்நாட்டவருட்பலர், அவர் தெருட்டியசமயக் கொள்கையை மேற்கொண்டு, அவர் காட்டிய நெறியில் ஒழுகத்தலைப்பட்டனர். அவர்கட்குமகமதியர் என்றும், அப்புதிய சமயத்திற்கு மகமதிய சமயம் என்றும் பெயர்கள் முறையே வழங்கலாயின. மெக்காவை நீங்கி, அவர், மெதினாவுக்குச் சென்ற நிகழ்ச்சி, இன்னும். இஜிரா என்று வழங்குகிறது. அவர் வழங்கிய அருமை மொழிகள், “குர்ஆன்” என்னும் பெயருடைய அருமறையில் பொறிக்கப்பட்டிருக் கின்றன. மகமதியர்கள், அம்மொழிகள் பரம்பொருள், மகமது நபியின் வாய்வழியாக வழங்கியவை என்று கருதுகின்றனர். இந்துக்கள், தங்கள் நான்மறைகளை ஆண்டவனே அருளினான் என்றும், அதனால் அவனுக்கு "வேதங்கள் மொழிந்தபிரான்" எனப்பெயரும் கூறுபவராகலின், அவர்கட்கு இதன்கண் புதுமையொன்றும் தோன்றாது. "அருள்நெறி" யாகிய அச்சமயமும், அருள் நெறியை உணர்த்தும் இயல்பு பற்றி "இசுலாம்" சமயம் என்றே வழங்கப்பெற்றது. இச் சமயம் வளர வளர, அரபியர் இடையில் இருந்த தீநெறிகளும் தீயொழுக்கங்களும் நீங்கின; அவர்கள் அனைவரும் உடன் பிறந்தாரெனவுணர்ந்து தம்முள் ஒற்றுமையுண்டு பண்ணிக் கொண்டனர். தங்கட்குப் பெருநலம் செய்த இச்சமயவுணர்வை நிலவுலகில் யாண்டும் பரப்ப வேண்டுமென்ற வேட்கைமிக்கு, ஒரு நூறு யாண்டுகளுக்குள், பாரசீகம், துருக்கித்தானம், ஆப்கனித்தானம் என்ற இன்னோரன்ன நாட்டுமக்கள் அனைவரையும் மகமதி சமயத்தவராக்கிக் கொண்டனர். பாரசீகரும், நம் இந்திய நாட்டின் வடபகுதியில் அக்காலத்து மல்கியிருந்த ஆரியர்களைப் போல, தீயினைக் கடவுளாகக் கருதி வழிபடும் வழக்குடையராயிருந்தவர்கள். அவர்களுட் சிலர், இம்மகமதிய சமயத்தைமேற் கொள்ளாதவராய், இந்தியநாட்டுட் புகுந்து குடியேறினர். மகமதியரும் நெடுங்காலம் வரையில், இப் பாரசீகருடனும், தார்த்தருடனும், ஏனைய வடபுலத்தவருடனும் போர் நிகழ்த்திய வண்ணமேயிருந்தமையின், நம் இந்திய நாட்டில், இப்பொழுதைக்குச் சுமார் தொள்ளாயிரமாண்டு கட்குமுன் வரமாட்டாது நின்றனர்; பின்னரே, அவர்கள் நம் இந்திய நாட்டிற்கு வரலாயினர்.

இவர்கள், இந்நாட்டிற்கு வருதற்கு முன்பே பாரசீகருட் சிலர் போந்து குடியேறி விட்டனர் என்று முன்பு கூறியுள்ளோம். அவர்கட்கு முன் வேறுபல நாட்டினரும் வந்து இங்கே குடிபுகுந்திருந்தனர். அவர்கட்கும், மகமதியர்கட்கும் பெரியதொரு வேறுபாடு உண்டு. முன்னே வந்தவர்கள் தம் சமய வுணர்வை நாட்டிற் பரப்பவேண்டுமென்ற நோக்கமுடைய வரல்லர்; இவர்கட்குப் பின்னர்ப் போந்த ஐரோப்பியரும் அவ்வாறு வந்தவரல்லர்; இவர்கள் மட்டில் சமயத் தொண்டினைக் குறிக்கோளாகக் கொண்டு வந்தனர் என்பது பல சான்றுகளால் விளங்குகின்றது. மேலும் இவர்கட்கு முன்னே போந்தவர், நம் நாட்டிற் குடி புகுந்து வாழ்ந்திருந்த ஏனை மக்களோடு கூடி, ஒருமையுற்று, அவர்கட்குரிய ஒழுக்கம், வழிபாடு முதலிய நெறிகளைத் தாமும் ஏற்று, இந்தியரோடு இந்தியராய் இயைந்திருந்தனர். அவர்கள் யவனர், ஸ்கிதியர், மங்கோலியர், பார்த்தியர் முதலிய பலராவர். அவர்கள் நாட்செல்லச் செல்ல, இந்துக்களுள் இந்துக்களாய், தம் பெயர், மொழி, சமயம், ஒழுக்கம், உடை, மனப்பான்மை என்ற பலவற்றினும் ஒன்றிவிட்டனர். கிறித்து பிறப்பதற்கு இரு நூறுயாண்டுகட்கு முன் இந்நாட்டிற்குப் போந்த கிரேக்க தூதர் ஒருவர், இந்நாட்டிற் பலவிடங்களுக்குச் சென்றார். அவர் தந்தை 3 à N c N G2 (Dion) என்றும், அவர் பெயர் ஹீலியோ டோரஸ் (Helio dorus) என்றும் கூறுகின்றனர். அவர் ஒரு சமயம் வடநாட்டிலுள்ள திருமால் கோயில் ஒன்றிற்குச் சென்று, அவரை வழிபட்டு, அம்மட்டில் நில்லாது, ஒரு "கோபுரமும்" எடுப்பித்தார். பின்னர், அவர் ஒரு வைணவ பாகவதராய், திருமாலை வழிபட்டு வந்தார். இவரைப் பின்பற்றிப் போந்தவர் பலரும், இவ்வண்ணமே வழிபாடு செய்வது வேற்றுநாட்டு மக்கட்கும் இயைந்ததாகும் என்று கருதினர். இச்செய்தி பேஸ் நகரி (Bas nagar) லுள்ள துணிற் செதுக்கப் பெற்றிருக்கும் கல் வெட்டினால் நமக்குத் தெரிகின்றது.

மகமதிய, சமயத்தினர், நம் நாட்டிற் புகுந்தபோது, இக்கருத்து நம் நாட்டில நிலவியிருந்ததாயினும், இவர்கள் அதனை மேற்கொள்ளவில்லை. இசுலாம் சமயம் கூறும் "அல்லா" திருமாலின் பல்வேறு பிறப்புக்களுள் ஒன்றாம் என்றும், இச் சமய வுண்மைகளை யுலகிற்கு வழங்கியருளிய மகமது பெருமானைத் திருமாலடியாருள் ஒருவரென்றும் கூறி, இந்துக்கள் இவர்களைத் தம்முள் ஒருவராக இயைத்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். வடமொழியுள் வல்லுநர், “அல்லோப நிஷத்" என்றொரு நூலை யெழுதி, மகமதிய வேந்தருட் சிறந்தவரான அக்பர் என்ற பெயர் கொண்ட அரசர் பெருமானை, “அவதார மூர்த்தி" என்றும் சொல்லத் தொடங்கினர். ஆயினும், மகமதியர், இவை, தம் சமயக் கருத்துகட்கு முரணாதல் கண்டு, இவற்றை அறவே ஏலாராயினர். அவர்கள், இந்துக்களாற் செய்யப்படும் “சடங்கு"களையும் உடன் பட்டிலர். “பல தெய்வ வழிபாடு செய்பவர் தூயரல்லர்; தூயதல்லாத யாதும் காபாவில் புகுவதும் தீது" என்று குர்ஆன் மொழிவதை அவர் விடாது போற்றினர்.

இவ்வாறு, திண்ணிய சமயவுணர்வினைக் கொண்டிருந்ததனால், இவர்கள், நம் நாட்டிற் புகுந்து குடியேறிய பின்பும், தமது வழக்கம், ஒழுக்கம், பெயர், மொழி என்ற பலவகையிலும் இந்துக்களிற் பிரிந்தே யிருந்து வரலாயினர். ஒரே நாட்டிற் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வந்த போதும், அவர் இந்நாட்டவரோடு கலப்பின்றியே இருந்தனர். இவ் வேறுபாட்டை நீக்கிக் கலப்பையுண்டு பண்ணும் துறையில் எம்முயற்சியும் பயன்படாது போயிற்று. இந்திய நாட்டிற்புகுந்து குடியேறி

வாழ்ந்துவரும் இந்திய மகமதியர் அனைவரும், தம் சமயவுணர்வு நெகிழாது போற்றி வந்தனர். அதனால், அவர் தம் உள்ளம், அவரது சமயம் பிறந்த நாட்டையே நாடி நிற்பதாயிற்று, நாடோறும், அவர்கள் செய்யும் கடவுள் வழிபாட்டிலும், தொழுகையிலும் அவர்தம் முகம் அரபியநாட்டு மெக்காவையே நோக்கி நிற்கிறது; அவர்தம் மனப்பான்மை, ஒழுக்கமுறை, ஆட்சிமுறை, சமயக் கல்வி ஆகியயாவும் அரேபியா, சிரியா, பாரசீகம், எகிப்து என்ற இந்நாட்டு இயல்பினவாகவே இருக்கின்றன. இவர்களுடைய சமய மொழி, சமய சகாப்தம், இலக்கியம், ஆசிரியன்மார், அடிகண்மார், கோயில்கள் என்ற யாவும் ஒரே வகையாகவே இருக்கக் காண்கின்றோம். இவர்கள், இந்நிலவுலகில் எப்புறத்தில் வாழினும், இவையெல்லாம் ஒரு பெற்றியவாய் இருப்பது காணப்படுமே தவிர அவ்வந்நாட்டு எல்லைக்கு அகப்பட்டு, ஆங்கே அடங்கி ஒடுங்கியிருத்தலைக் காண்டல் அரிது.

இவர்தம் வருகைக்கும், இவர்கட்கு முன்போந்த ஏனையோர் வருகைக்கும் இருந்த வேறுபாடுகளுள் மேலே காட்டியது தலைசிறந்ததாகும். இதனோடு ஒப்பப் பிறிதொரு வேறுபாடும் உண்டு. நம் நாட்டிற்கு வந்த மகமதியர்கள், ஆயிரத்து இருநூறு முதல் ஆயிரத்து அறுநூறாம் ஆண்டுவரையில், அரசியல், சமூகவியல் என்ற எல்லாவற்றிலும், போர்த்திறமும் நாடோடிகளாய் நிலையின்றித் திரியும் திறமுமே நிரம்பக் கொண்டிருந்தனர். பாசறையிற் றங்கும் அரசர் தானைபோலவே, மகமதிய அரசியற் றலைவர்களும் ஆங்காங்கு இருந்துவந்தனர். ஒரு நிலையாய்த்தங்கி, நாடு நகரங்களைச் சீர்செய்து, அரசியலின் நிலைமையை நிறுவி, நாடுகாத்தல், தீயரை யொறுத்தல் ஆகிய செயல்களோடு சமூகத்துறையிலும் நலம் பல செய்யத் தொடங்கியது பிற்காலத்தில்தான் நிகழ்வதாயிற்று. கலப்பு மணம், சமயக்காய்ச்சலின்மை, ஒத்தவுரிமை முதலிய பல நன்மைகளும் பின்னரே உண்டாயின.

உயர்ந்தோர்களிடத்தில் ஒருகுறை உண்டாகுமாயின், அது விரைவில் உலகறியப் பரந்துவிடும். அவ்வண்ணமே, ஒருவன் செய்த குற்றம் உலகறியத் தோன்றி நிலைபெறுமாயின், அவன் பால் ஒருவகைச் சிறப்புண்டென்பது துணிந்துகொள்ளலாம். அம்முறையே, மகமதிய மன்னர்கள் காலத்துச் சிறுசெயல்கள் சில, இந்திய நாட்டு வரலாற்றுச் சிறு நூல்களுட் காணப் படுமாயின், அவற்றைக் கொண்டே, அவர்பால் அமைந்திருந்த

பெருமை இனிது உணரப்படுகின்றது. தன் உயிரைக் கொல்லுதற்குப் போந்த அரசபுத்திரன் ஒருவனைப் பொறுத்து வீரனாக்கிச் சிறப்பித்த ஆண்டகை பாபர் வேந்தரை அறியாதார் யாவர்? இந்து சமயத்தவரையும் மகமதிய சமயத்தவரையும் ஒப்பமதித்து உயர்நலம் புரிந்த அரசர் பெருந்தகையான அக்பரை அறியாதவர் அறிவு பெறாதவர் அல்லரோ? அப்பெருந்தகைகள் ஆற்றியுள்ள நலம் பலவும் எழுதப்புகின், இக்கட்டுரை வரம்பின்றி விரிவதல்லது அவர்தம் புகழ்நலம் அடங்கிவிடும் என எண்ணுவது சிறுமையன்றோ? இந்நலமனைத்திற்கும் அடிப்படையாகவுள்ளது இசுலாம் சமயத்தின் இயல்பே என்பதை மறத்தல் ஆகாது.

- -

இந்தியநாட்டின் தென்பகுதியாகிய நம் தமிழ்நாட்டை ஆண்ட முடியுடைவேந்தர் மூவருள் சோழர்கள் காலத்தில், நிலப்படையுடன் கடற்படையும் இருந்து நாடுகாத்துவந்த செய்தி நாம் அனைவரும் அறிந்ததாகும். ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய’ இராசராசன் முதலிய சோழமன்னர்கள், கடற்படை கொண்டு சென்று பகைப்புலங்களை வென்றனர். அவர்கட்குப் பின் வந்த சோழமன்னர்கள் வீழ்ச்சியடையவே, கடற்படையும் கெட்டழிந்தது. பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் அவர்கள் காலத்திற்குப்பின் கிடைப்பது அரிதாகியது. ஆயினும் இக்கடற்படையும், பிறநாட்டு மக்களுடைய கூட்டுறவும் இம் மகமதிய மன்னர் பெருமக்களால் மறுவலும் உண்டாயின.

-

நம் இந்தியநாட்டின் வடபகுதியில் வாழ்ந்த மக்கள், புத்த சமய காலத்தில் ஏனை நாடுகளிற் பரவி அவற்றோடு சீரிய தொடர்பு பெற்றிருந்தனர். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தொடர்பை நெகிழ்த்து, தம் நாட்டெல்லைக்குள்ளேயே அடங்கியமைந்து விட்டனர். அதனால், இந்நாடு தன்னிலையில் அடங்கி, பிறவற்றோடு தொடர்பின்றித் தனிப்பதாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில், இசுலாம் சமயத்தவரின் பெருந்துணையால், அத்த்ொடர்பினை மீட்டும் நம் நாடு பெற்றது; ஆயினும் அத்தொடர்பு பண்டே யிருந்தது போன்றில்லை. புத்த சமய, காலத்தில் நம் நாட்டவர் வேறு நாடுகட்குச் சென்றதுபோல, இக்காலத்தில் செல்வது ஒழிந்தனர். பல ஆயிரக்கணக்கினரான வேற்று நாட்டுமக்கள் நம் நாட்டிற்கு வரத்தொடங்கினர். மகமதிய சமயத்தவர் மாத்திரம் வேறு

நாடுகட்குச் சென்று வருவவதை மேற்கொண்டிருந்தனர். இவர் தம் அரசியல், பதினெட்டாம் நூற்றாண்டில் தளர்ச்சியடைந்து வீழ்வுற்றது நாம் அறிவோமன்றோ? அதுவரையில், வட மேற்குக் கணவாய்களின் வழியாகப் பொகாரா, சாமல்கண்டு, பால்கு, குராசான், கிவாரிசும், பாரசீகம் என்ற நாடுகளிலிருந்து மக்கட் கூட்டம் நம் நாட்டிற்கு வந்து கொண்டிருந்தது. அந்நாளில் ஆப்கானித்தானமும் டில்லி வேந்தரின் ஆட்சியில்தான் அடங்கியிருந்தது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜஹாங்கீர் என்னும் மன்னரது ஆட்சிக்காலத்தில், நம் இந்திய நாட்டிலிருந்து போலன் கணவாய் வழியாக ஆண்டுதோறும் 14000 ஒட்டகச் சுமையளவினவாய பொருள், கந்தகார், பாரசீகம் என்ற நாடுகட்குச் சென்றன. “மேலைக்கடற் கரையில் இருந்த பட்டினங்கள் (Sea ports) வெளிநாட்டுக் கடற் போக்கு வரவுக்கு வாயில் திறந்திருந்தன. கீழைக்கடற்கரைப் பட்டினங்களுள், மசூலிப்பட்டினம் ஆயிரத்து அறுநூற்றேழாம் ஆண்டுவரைக் கோலகொண்டாவை யாண்ட சுல்தான்களுக்கு உரியதாயிருந்தது. அதற்குப் பின்பே அது முகலாய வேந்தர்கட்கு உரியதாயிற்று. அப்பட்டினத்திலிருந்து, இலங்கை, சுமித்திரை, சாவகம், சீயம், சீனம் என்ற நாடுகட்கு வாணிபம் பேணி, வங்கங்கள் பல சென்ற வண்ணமிருந்தன என முகலாயராட்சி (Moghul administration) என்ற நூல் கூறுகின்றது.

.

வட நாட்டில் முகலாய முடிமன்னர்களின் ஆட்சி நிலவிய காலம் இருநூறுயாண்டுகளேயாகும்; ஆயினும், அக்காலத்தில் நம் நாட்டிற்கு உண்டாகிய நலங்கள் பலவாகும். பல வேறு வகை மொழி வழங்கும் நாட்டிற்கு அரசியல் மொழி யொன்று பொதுவாக வேண்டப்படுவதாயிற்று. அஃது அந்நாட்டு மொழிகளுள் ஒன்றாயின், பிறமொழி பேசுவோர் கூட்டத்து அமைதி உண்டாகாது எனவுணர்ந்து, இம்மன்னர்கள் தமது பாரசீக மொழியினையே அரசியல் மொழியாக வகுத்தனர். பின்னர் அது பலர்க்கும் தாய்மொழியாம் நிலைமையினையும் அடைவதாயிற்று. அதனால் ஆட்சிமுறையும் நாணயச் செலாவணியும் ஒரு முறையாய் நடைபெறலாயின. இன்றும், கச்சேரி, ஜில்லா, தாலுகா, பிர்க்கா, தாசில்தார், உசூர் என வழங்கும் சொற்கள் பலவும் அவர்தம் ஆட்சிநெறியின் ஒருமை முறையினை விளக்கும் அடையாளங்களாகும். நாட்டு மக்களிடை ரெக்டா எனப்படும் இந்துத்தானிமொழி வழங்கி வந்தது.

இவர்கள் காலத்தில், விந்தவரைக்கு வடக்கிலுள்ளநாடு, பல சிற்றரசர்க் குரிமையுற்று, பல சிறு நாடுகளாகப் பிரிந்து, எப்பொழுதும் போரும் பூசலும் நிகழும் அமர்க்களமாயிருந்தது, அவர்களையடக்கி, அரசிற்குரிய அமைதி பெறுவித்ததோடு. அவர் தம் நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவுவித்தனர். தம் சமயத்தை நாட்டில் பரப்புதல் வேண்டும் என்ற கருத்து இவர்தம் மனத்தில் மிக்கிருப்பினும், அரசு கட்டில் ஏறி மக்கட்கு நலம் செய்வதும் சிறப்புடைப்பணியாகலின், இவர்கள் அத்துறையினும் சீரிய அறமே புரிந்து போந்தனர். அந்நாட்டில், பெரும்பாலும் ஒரு நெறிப்பட்ட ஆட்சிமுறையும், பொது மொழியும் நிலவச்செய்த இப்பெருமக்களின் திருப்பணியால், இடந்தோறும் மொழி, உடை முதலியவற்றில் வேறுபட்டுக் கிடந்த இந்திய மக்கள், தவ சமூகவொழுக்கம், உடை முதலிய அவற்றுள்ளும் ஒருமை நெறியை மேற்கொண்டனர். நாட்டில் அமைதியும் இன்பமும் நிலவவே, மக்கள் தம் தாய்மொழியிலும் மிக்க பயிற்சிகொண்டு சிறந்த இலக்கியங்கள் செய்தனர். இன்பமும், அமைதியும் உரிமையும் நிலவும் நாட்டில்தான் உயர்ந்த இலக்கியங்களும், அரிய கருத்துக்களும் பிறக்கும் என அறிஞர் கூறுவர். இவர்கள் காலத்தில் இவை மிகப் பெருகி நாட்டிற்குச் சிறப்பு நல்கின. தான் அடைந்த முதுமையினைத் தான்பெற்ற மகனுக்கு நல்கி, அவனது கட்டிளமையைத் தான் பெற்று மகிழ்ந்த அரசர்கள் இந்துக்களில் இருந்தனர். தம் வரலாற்றினைத் தாமே வரைந்த அரசர் பாபர் பெருமான். நாட்டில் வழங்கிய நாணயங்கள், சகடக்கால் போல் மக்கள் கையகத்து நில்லாது பெயரும் நீர்மையவாயினும், அவர்களால் காதலித்துப் போற்றப்படும் இயல்பறிந்து அவற்றின் வழியாக அறத்தைப் பரப்பி நிறுவிய அறிவுநலம் இவர்கள்பால் இயல்பாகவே அமைந்து கிடந்தது. ‘நல்லது செய்வது ஆண்டவனுக்கு அளவிறந்த உவப்பைத் தருவது; நடுநிலை திறம்பாது நன்னெறியிற் சென்றோர் கெடுவதிலர்; கெட்டார் என யாம் கேட்டதுமில்லை” எனப் பொறித்த நாணயங்கள் இவர்கள் காலத்தில் அறநெறி வழங்கி மக்களை அறிவுடையராக்கின. “அயின் அக்பரி” என்ற அரசியல் நூல் அக்பர் என்னும் அரசர் பெருந்தகை காலத்தில் பிறந்ததென்பது சிறுமகாரும் அறிந்த செய்தி யாகும்.

போர்த்துறையில் பலதிறமானபயிற்சிகளும், நாகரிகத்தில் சிறப்பும், கல்வியில் பெருமாண்பும் நல்கிய இவர்தம் காலத்தில்,

கைத்தொழிலும், சிற்பமும் பிறவும் உலகு புகழ் உயர்வு பெற்றன. இந்திய சீனக்கைவேலை யமைப்புக்கலந்த இந்துசாரசன் கைத் திறங்கள் நாட்டில் வளம் பெற்றன. புதிய புதிய சிற்பத் தொழில்கள் அரசர் ஆதரவு பெற்றன. "புகை முகந்தன்ன மாசில் தூவுடை" எனவும், "நோக்கு நுழைகல்லா நுண்மையபூக் கனிந்து, அரவுரியன்ன அறுவை எனவும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் செய்துதவியது போன்ற நுண் வினையுடைகளும், மெல்லிய பட்டாடைகளும் இவர்கள் காலத்தே வளம்பெற்று உலகு புகழும் ஒண்பொருளாய்ச் சிறந்தன. கம்பளிகளும், பின்னல்களும், கின்காப் (Kin Khab) என்பனவும், “நுரைகவர்ந்தன்ன மென்பூங்கம்பல"ங்களும் புகழ்வோர் புலவரையிறந்து விளங்கின. இந்த இசுலாம் சமயப் பெருமக்களால் நம் நாட்டில் விளைந்த நலங்கள் பலவும் எளிதில் கண்டு கோடற்கென ஒருவாறு திரட்டித் தந்து இக்கட்டுரையினை முடித்துக் கொள்ளுகின்றாம். 1. சோழ வேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பின் கெட்டழிந்திருந்த கடற்படையும் பிறநாட்டுக் கூட்டுறவும் பண்டேபோல் மீட்டும் தோற்றம் பெற்றுச் சிறந்தன. 2. விந்தியவரைக்கு வடக்கில் உள்ள நாட்டில், இவர்தம் வினைத்திட்பம், ஆட்சி நெறி, நன்மனப் பண்பு என்பவற்றால் அமைதியும் இன்பமும் நிலவுவவாயின. 3. தாம் வென்று அடிப்படுத்தி நாடெங்கும் ஒரு தன்மையும், ஒருநெறியும் பொருந்திய ஆட்சிமுறை இவர்கள் காலத்தே நாட்டில் நடைபெறுவதாயிற்று. 5. உயர் வகுப்பினருள் சமய வேற்றுமையிருந்ததெனினும், சமூகவொழுக்கம், உடைமுதலியவற்றில் மக்கட்கிடையே ஒற்றுமை யெய்தி யிருந்தது. சமய வேற்றுமையும் காய்ச்சலும் பூசலுமாய் மாறியது பேரரசப் பெருந்தகைகள், காலத்தில் இல்லை, 5. இந்துத்தானியென்றும், ரெக்டா என்றும் கூறப்படும் மொழி பொதுமொழியாயிற்று; அரசியற் பொதுமொழி பாரசிக மொழி. 6. அவ்வந்நாட்டுத் தாய்மொழிகள், அமைதியும் இன்பமும் நிலவியதன் பயனாய் வளம்பெற்றன. வரலாறு கூறும் நூல்களும், அரசியல் நூல்களும் நல்லிடம் பெற்றுத் திகழ்ந்தன. 7. பல தெய்வக் கொள்கையும் வழிபாடும் கூறும் சமய நெறிகட்கிடையே ஒரு தெய்வக் கொள்கையும் வழிபாடும் அறிஞர் மனத்துள் வேரூன்றி விளங்கின. அதனால், சில சமயங்கள் சீரிய திருத்தம் அடைந்தன. 8. போர்முறையிலும், நாகரிக வளர்ச்சியிலும் பல்வகை நலங்கள் இவர்களால் நம் நாடு பெற்றுச் சிறப்படைந்தது. 9. இந்துசாரசன் கைத்திறங்களும், சிற்பத் திறங்களும் பெருமக்களின் ஆதரவு பெற்றன. பொன்னும் மணியும் செறிந்த நுண்மாண்கைவினைகள், இவர்கள் காலத்திற் பெற்றது போல் பிற எக்காலத்தும் மேம்பாடு பெறவில்லையெனின், அஃது இறப்பப் புகழும் புகழ்ச்சியாகாது. 10. பட்டினும் பருத்தியினும் ஆய உடைவகைகள் நெய்தலும், கம்பல நெசவும் பிறவும் இந்த இஸ்லாம் சமயத்தவர் நம் இந்திய நாட்டில் செய்த இனிய தொண்டினால் மேன்மையடைந்தன. இக்கூறிய நலங்கள் அனைத்திற்கும் உரியராய் விளங்கும் இப்பெருமக்களின் நற்புகழ் இந்நிலவுலகில் என்றும் நின்று நிலவுக என வாழ்த்தி இக்கட்டுரையை இவ்வளவில் நிறுத்துகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=செம்மொழிப்_புதையல்/019-020&oldid=1625142" இலிருந்து மீள்விக்கப்பட்டது