செயலும் செயல்திறனும்/எண்ணமும், விழைவும்
1. எண்ணும் திறன்
முதற்கண் விலங்குக்கும் நமக்குமுள்ள வேற்றுமைகளில் தலையாய வேற்றுமை எண்ணுதிறன் ஆகும். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அறவே எண்ணுதிறன் இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆனால் அவற்றின் எண்ணுதிறன் ஓரளவுக்கு உட்பட்டதாகவும், அதற்குமேல் வளர்ச்சியற்றதாகவும், உள்ளது. மாந்தனின் எண்ணுதிறன் அவ்வாறில்லை. பறவை, விலங்குகளைக் காட்டிலும் பன்னூறு மடங்கு எண்ணுதிறன் உடையவர்கள் மாந்தர்கள். இன்னுஞ் சொன்னால், நம் எண்ணுதிறன் பயன்படுத்தப் பயன்படுத்த ஆழமாகவும் அகலமாகவும் விரிந்து வளரும் ஆற்றலுடையது. ஆனால், சோம்பல் கரணியமாகவும், அமைந்துவிடும் சூழ்நிலை அடிப்படையிலும் நம்முள் சிலர் தங்களின் எண்ணுகின்ற ஆற்றலை மேன்மேலும் விரிவடையச் செய்து கொள்ளாதவர்களாகவும், இன்னும் சொல்வதானால் அதை மழுங்கடித்துக் கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். எண்ணுதிறனை மிகுத்துக் கொள்ளாதவர்களை நாம் உயர்நிலையுற்ற பெருமைக்குரிய மாந்தர்கள் என்று கூறிவிட முடியாது.
இனி, எண்ணுதிறன் என்றால் என்ன? மனம் பற்றிக் கொள்ளுகின்ற ஒரு பொருளைப்(Subject) பற்றி அறிவுணர்வால், அதனுடை விரிவான தன்மைகளையும் குணநலன்களையும்; தன்மை தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கின்ற தன்மையே எண்ணுதிறன் ஆகும். இந்த எண்ணுதிறன்தான் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் வேண்டுவதாகும். எந்த ஒரு செயலும் தொடங்கப்படுவதற்கு முன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணப்படுதல் வேண்டும். எண்ணிய பின்தான் ஒரு செயலில் நாம் ஈடுபடுதல் வேண்டும். எண்ணாமல் தொடங்குவது தவறு மட்டுமன்று பின்னர் நமக்கு இழுக்கையும் உண்டாக்கிவிடும். இதைத்தான்.
எண்ணித்துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (467).
என்னும் குறளில் நமக்கு அறிவுறுத்துகிறார் திருவள்ளுவப் பேராசான்.
2. எண்ணித் தொடங்குதல்
எனவே, ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் நாம் அதைப் பற்றி நன்கு எண்ணி முடிவு செய்தல் வேண்டும். நாம் இந்த வினையைச் செய்ய இவ்விவ் வகையில் தகுதியுடையவர்; அல்லது இன்னின்ன அடிப்படையில் இந்த வினை நமக்குத் தகுதியுடையது; இதனை மேற்கொண்டால் நாம் இன்ன வகையில் அதனை வெற்றியுடன் நடத்துவோம்; நம் வாழ்க்கையும் இன்ன வகையில் பயனுடையதாகும் என்றெல்லாம் ஒரு வினையைப் பற்றி நாம் தீர எண்ணி அதனை மேற்கொள்ளுதல் வேண்டும். இவ்வகையிலன்றி நாம் ஏதோ ஒரு வினையில் ஈடுபடுதல் வேண்டும் என்றபடி, நமக்குப் பொருந்தாத வினைகளில் போய் ஈடுபட்டுத் தோல்வியையும் இழுக்கையும் தேடிக் கொள்ளுதல் கூடாது.
இனி, எண்ணத்தால் நாம் ஒரு வினையைத் தேர்ந்து அதில் ஈடுபடுவதென்றாலும், அவ்வினையை முழுமையாக நாம் செய்யத் தொடங்கும் பொழுதும், அதைச் செய்து கொண்டிருக்கும்பொழுதும், நமக்கும் அந்த வினைக்கும் பல வகையான பொருத்தமின்மைகள் தோன்றும் ஒரு செயலை எண்ண அளவில் நாம் விரும்பினாலும், அதில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தாலும், செயலளவில் நமக்கு அது விருப்பத்தையோ ஆர்வத்தையோ குறைப்பதாக இருக்கலாம். அப்பொழுது, இதில் நாம் ஏன் இவ்வளவு விரைவுப்பட்டு ஈடுபட்டு விட்டோம் என்று வருந்த வேண்டி வரும் அப்பொழுது நாம் ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவ்வேலையைக் கைவிட்டு விலக வேண்டியிருக்கும். இதைத்தான் திருக்குறள்,
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (514)
என்று குறிப்பிடுகின்றது. "எத்தனை வகையாக எண்ணிப் பார்த்து. ஒரு வினையை நமக்குப் பொருத்தமுடையது என்று தேர்ந்து அதிலே சிலர் ஈடுபட்டாலும், வினை செய்யத் தொடங்கிய பின்போ, செய்து கொண்டிருக்கும் பொழுதோ, அத்தேர்வு நிலைக்கு மாறாகப் போய், அந்த வினை நிலைகளில் நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுபவர்களும், அதைக் கைவிட்டு விலகி விடுபவர்களும் இவ்வுலகில் பலராவர்” என்பது இதன் கருத்து. எனவே, வினை தொடங்கியபின், அல்லது ஈடுபட்ட பின் மனவேறுபாடோ, வினைவேறு பாடோ அடைவது உலக வழக்கமாகலின், அதற்கு முன்பே நன்கு ஆராய்ந்து எண்ணி ஒரு வினையில் ஈடுபடுவது மிகவும் இன்றியமையாததாம் என்க.
இனி இவ்வாறு ஒரு வினையைப் பலவாறானும் எண்ணி, இவ்வினையை நாம் கட்டாயம் செய்யலாம். இது தான் நமக்குத் தக்கது. இதில்தான் நம் வாழ்க்கை முழுமைபெறும், உயிர் நிறைவு பெறும், என்று தேர்ந்து கொண்ட பின், அதில் முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும். ஏதோ தேர்ந்தோம், ஈடுபட்டோம் என்று ஏனோ தானோ போக்காக ஒரு வினையை நாம் மேற்கொள்ளக் கூடாது. நமக்குள்ள ஆர்வம், தகுதி, காலநிலை, இடம் இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே நாம் ஒரு வினையைத் தேர்வு செய்வதோ, ஈடுபாடு கொள்வதோ வேண்டும். இவ்வாறு ஒருவகையாக, ஒரு வினையை நாம் தேர்ந்துகொண்ட பின், நாம் செய்ய வேண்டிய அடுத்த படிநிலை என்ன என்பது பற்றி இனி எண்ணிப் பார்ப்போம்.
வினை விழைவு
1. வினையை விரும்புதல் வேண்டும்
நாம் செய்ய வேண்டிய வினை இதுதான். இதுதான் நமக்குப் பொருத்தமுடையது என்று தெளிவாக நாம் தேர்ந்து கொண்டபின், அந்த வினையை நாம் முழுவதுமாக விரும்புதல் வேண்டும். வினையை முழுவதுமாக விரும்புதல் என்பது, நம் சிந்தனையையும்.ஆர்வத்தையும் அறிவையும் அதிலேயே ஈடுபடுத்துதல். அதைச் செய்கின்ற பொழுதும், செய்யாத பொழுதும் அது பற்றியே எண்ணிக் கொண்டிருத்தல், அதைப் பற்றிய எண்ணுதல் என்பது, அதன் பயன் பற்றியோ, விளைவு பற்றியோ, ஊதியம், அதால் கிடைக்கும் இன்பம் என்பன பற்றியோ எண்ணிக் கொண்டு இருப்பது அன்று. முற்றிலும் அதன் பயனைப்பற்றி எண்ணாமல், அதை எப்படிச் செய்வது, இன்னும் எவ்வெவ் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் இன்னும் அதனைச் சிறப்பாகச் செய்ய முடியும். அதனைத் திருத்தமுற எப்படிச் செய்வது, அழகுற எப்படிச் செய்வது, செப்பமாகவும், நுட்பமாகவும், ஒட்பமாகவும் எப்படிச் செய்வது என்பது பற்றி யெல்லாம் எண்ணுதல்.
2. செப்பம், நுட்பம், ஒட்பம்
செப்பம் என்பது செவ்வையாக திருத்தமாக, அழகாக, தவறில்லாதபடி என்க. நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து என்க. ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.
ஒரு சிலையைச் செதுக்குவதாக வைத்துக் கொள்வோம். அதன் உருவம் சரியாக அமையும்படி, தலைக்குத் தக்கபடி உடல், உடலுக்குத் தக்கபடி கை, கால்கள், அவற்றிற்குத் தக்கபடி உயரம், இப்படி அளவுகள் பொருத்தமாய், நாம் அதற்கெனத் தேர்ந்த வடிவப் பொருத்தமாய் அதைச் செய்வதற்கென்று தேர்ந்தெடுத்த கல்லோ, மரமோ, பொருத்தமாய் அமைவது என்பது செப்பம் என்பதற்குள் அடங்கும்.
அச்சிலையினது கண், இமை, காது, மூக்கு வாய், உதடுகள், தாடை, தோள், கை, விரல்கள் முதலியன எல்லாம் இயற்கையாகவும் தவறின்றியும் செதுக்கப்பட வேண்டுமென்பது நுட்பம் ஆகும். இனி, அவற்றை அடுத்து, அச்சிலையினது சாயல், முகக்குறிப்பு, பொதுவான வடிவ அமைப்பு, அதனைச் செதுக்கிய முறை, உணர்வு வெளிப்பாடு, தோற்றம் முதலியன பற்றியெல்லாம் கருத்துச் செலுத்திச் செயல் ஒட்டம் ஆகும். மொத்தத்தில் செப்பம் என்பது உடலைப் போன்றதும், துட்பம் என்பது அதன் உறுப்புகளைப் போன்றதும், ஒட்பம் என்பது அதன் உயிர்த் தன்மை போன்றதும் ஆகும் என்க.
இவ்வாறு மூவகையாகவும் செய்வதில் நாம் எப்படி எப்படியெல்லாம் கருத்தாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என்று, அவ்வினை முடிவில் அடையும் பயனை, ஊதியத்தை, இன்பத்தைப் பற்றி நினைவு கொள்ளாமல், வினையை விரும்புவது இரண்டாம் படிநிலையாகும்.
3. இன்பம் விரும்பாமை
‘இன்பம் விழையாது, வினை விழைதல்’ என்று திருக்குறள் (எண் 615) இதனைக் கூறும். ஏன் இன்பத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது விரும்பக்கூடாது என்று கூறப்பெறுகிறது என்றால், இன்பம் விழைபவன், இடையில் எதிர்பாராத வகையில் வினைக்கு இடையூறு தேர்ந்தால், துன்பம் வந்தால், ஊக்கம் குன்றிப்போவான், வினைச் சோர்வு கொள்வான் ஆகையால், இன்டவிழைவு இருத்தல் கூடாது எனப் பெற்றது. அஃதாவது இன்பமே ஒரு வினையின் நோக்கமாக இருத்தல் கூடாது. இன்பம், துன்பம் இரண்டு உணர்வுகளையும் ஓர் உயிர் நுகரப் பெறுதல் வேண்டும். அவை இரண்டையும் சமமாகக் கருதுதல் வேண்டும் என்பது உயிரியல் கோட்பாடு. இவ்வுணர்வைப் பெறுதற்கு வினையிடுபாடுதான் நமக்கு வழி வினையின் முடிவில் நாம் காண்பன, ஒன்று வினைமுடிபால் வரும் இன்பம்; இரண்டு அதன் பயனால் அஃதாவது அதற்குரிய விலையாக வரும் பொருளால் நாம் பெறும் இன்பம். இவ்விரண்டனுள் வினையின்பமே உயர்ந்ததாகும்; பொருளின்பம் சிறியதாகும்.ஒரு வினையை நாம் முழுமையாகச் செய்து முடித்தோம் என்னும் இன்பம் அதனால் வரும் பொருளால் நமக்குக் கிடைப்பதில்லை. வினையின்பம் உயிரை மகிழ்விக்கும் இன்பம், பொருளின்பம் உடலை மகிழ்விக்கும் இன்பம். எனவே, உடல் அழிந்து பேர்வது போல், அப்பொருளும் அதால் வரும் இன்பமும் விரைவில் அழிந்து போய் விடுவனவாகும். ஆகவே தான் வினைவிழைவான் இன்பம் விழயக்கூடாது எனப் பெற்றது. அவன் தான், வினைக்கிடையில் வரும் எத்தகைய துன்பத்தாலும் மனநெகிழ்ச்சியும், அதனால் வினை நெகிழ்ச்சியும், அதன் வழி ஊக்கக் குலைவும் கொள்ளான் என்றனர்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப உறுதல் இலன்
(628)
என்றார் திருவள்ளுவர்.