செயலும் செயல்திறனும்/முன்னுரை

செயலும் செயல்திறனும்
1. முன்னுரை


1. செயலே உயிர்வாழ்க்கை:

‘வினையே ஆடவர்க்குயிரே’ என்பது குறுந்தொகை (135). ஆடவர்கள் எல்லாரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட வேண்டும்; செயலையே உயிராகக் கருதுதல் வேண்டும் என்பது அதன் பொருள். இக்காலத்து ஆடவர்கள் மட்டுமின்றிப் பெண்டிரும் செயல்திறன் மிக்கவர்களாக இருத்தலைப் பார்க்கின்றோம். எனவே மாந்தர் அனைவர்க்கும் செயல் பொதுவாகிறது. செயலே உயிர் வாழ்க்கை செயல் இல்லாதவரை வாழ்கிறார் என்று சொல்லமுடியாது.

2. பெருமைக்கும், சிறுமைக்கும் செயல்களே அடிப்படை

வாழ்க்கை வெறும் இன்ப துன்பத்தைப் - பெறுவதற்காக மட்டும் என்றே கொள்வோமானாலும் கூட, அந்த இன்ப துன்பங்களுக்கும் அடிப்படையாக இருப்பது செயல்தான். செயல் என்பதும் வினை என்பதும் ஒரு பொருள் தரும் சொற்கள். ஒருவன் பெருமையான வாழ்வும் ஒருவன் சிறுமையான வாழ்வும் வாழ்கிறான் என்று கொண்டால், அஃது அவனவன் செய்த, செய்கின்ற வினை செயல்களால் ஏற்படுவதே என்பது திருவள்ளுவர் கருத்து. அவனவன் செயலே அவற்றுக்கு அளவுகோல் ஆகும் என்று அவர் கூறுகிறார்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)

3. நல்லவன் வறுமையும் பாராட்டுப்பெறும்

ஒருவன் செய்கின்ற வினை அல்லது செயல் அல்லது கருமம் எத்ததையாக இருக்கிறது என்பதையுணர்ந்தே உலகம் அவனை மதிப்பிடுகின்றது. திருடனையும் ஏமாற்றுக்காரனையும் பிற இழிவான செயல்களைச் செய்பவனையும் அவர்கள் எத்துணைதான் செல்வர்களாகவும் வளமுற்றவர்களாகவும் இருப்பினும் உலகம் அவர்களை மதிப்பதில்லை. ‘நல்லவன் வறுமை உடையவனாக இருப்பினும் உலகம் அவனைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும்’ என்பார் திருவள்ளுவர்.

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் (988)

4. தீயவன் பெருமை இகழப் பெறும்

ஒருவன் நல்ல செயலைச் செய்து வறுமைப்படுவது இழிவன்று என்பது போலவே, தீயவற்றைச் செய்து வறுமைப்பட்டுக் கிடப்பது, அவனைப் பெற்ற தாயாலும் வெறுக்கத்தக்கது; அவன் தாயும் அவனை வேறு யார் போலவோ கருதுவாள்; தன் மகனென்று பெருமை பெறக் கருதமாட்டாள் என்றும் திருக்குறள் கூறுகிறது.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும் (1047)

5. அறம் என்பது உயர்வான குறிக்கோளே

இனி, இக்காலத்தில் இந்நெறிமுறைகளெல்லாம் பிறழக் காணப்பெறுகின்றன. ஒருவன் எந்தச் செயலைச் செய்தாவது பொருளீட்டலாம் ஈட்டிய பொருளைக் கொண்டு எச்செயலையும் செய்து இன்பம் பெறலாம்; எப்படியும் வாழலாம் என்பது இக்காலத்து மக்களுடைய கடைப்பிடியாக இருக்கிறது. அவ்வாறு இருக்கிறது என்பதால் இக்கொள்கை உயர்ந்ததாகிவிடாது. உலகில் எந்தக் காலத்தும், எந்தவிடத்தும், எந்த மக்களினத்தும் தாழாத கொள்கைகளையே அறம் என்று தமிழ்நெறி நூல்கள் சாற்றுகின்றன.

6. அறம் என்றும் அழிவதில்லை

அவ்வறவுணர்வு என்றுமே அழிவதில்லை. ஒருகால் ஒரு தலைமுறை மக்கள் கூட்டத்து அஃது அழிவது போல் தோன்றினும், அஃது அடுத்த தலைமுறையினரிடம் தழைத்துச் செழித்தோங்கியே நிலைபெறுகிறது. இஃது அறவியல் வரலாறு. எனவே தீச்செயல்கள் என்றும் தீச்செயல்களே, நற்செயல்கள் என்றும் நற்செயல்களே! அவற்றுக்குள்ள பெருமை சிறுமைகளும் என்றும் மடிவதில்லை. இது நிற்க.

7. செயலில் ஈடுபடாமல் வாழக்கூடாது

நாம் இவ்வுலகத்துள்ளவரை ஏதேனும் நமக்குப் பொருந்திய தகுதியான, நம் அறிவுணர்வுக்கும் மனவுணர்வுக்கும் ஏற்ற, நல்ல் ஒரு செயலை, ஒரு நல்வினையை தாம் மேற்கொண்டுதான் வாழவேண்டும் செயல் இல்லாழல் வாழ முடியலாம்; ஆனால் வாழக்கூடாது. சிலர்க்கு முன்னோர் திரட்டிய செல்வம் அள்ள அள்ளக் குறையாதபடி கொண்டிருக்கலாம். ஆனால் அப்பொழுது கூட அவர்கள் ஏதாவது வினையில், செயலில் ஈடுபடாமல் வாழக் கூடாது. அவ்வாறு வாழ்வு தை வாழ்க்கை என்று சொல்ல முடியாது. இதனை இன்னும் சற்று விளக்கமாகக் கூறுவோம்.

8. உயிர் வாழ்க்கை என்பது என்ன ?

வாழ்க்கை என்பது, உயிர் ஒரு செயலில் தோய்ந்து அழுந்தியியங்கி, அதன் வழியாகப் பெறும் அறிவுநிலை, உளநிலை, இயக்கநிலை ஆகிய மூநிலை உணர்வு நிலைகளையும் எய்தி, அவற்றால் அதன் ஒளிக்கூறும் உணர்வுக் கூறும் மிக விரியப் பெற்று, அதனால் வாய்க்கப் பெறும் நிலையான இன்பத்தில் மூழ்கி நிற்க எடுத்துக் கொள்ளும் பயிற்சியே ஆகும். அப்பயிற்சிக்கு இவ்வுலகமும் இது போலும் வேறு உலகங்களும் பயிற்றகங்களாக பள்ளிக்கூடங்களாக - கல்லூரிகளாக விளங்குகின்றன. நாம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று, அங்கு எப்படிப் படிக்காமலும் பயிற்சி பெறாமலும் இருத்தல் கூடாதோ, அப்படியே ஒருயிர் தமக்குற்ற துய்ப்புக்கருவியாகிய இவ்வுடலுடன் இந்நிலவுலகத்திற்கு வந்து, பயிற்சி பெறாமல் இருத்தல் கூடாது. எனவே, இங்குப் பிறவியெடுத்த ஒவ்வோருயிரும் இங்கு வாழ்கின்ற வரையில் ஏதாவது தமக்குற்ற ஒரு செயல் வழி இயங்கிப் பயின்று, அதால் இன்பதுன்ப நுகர்ச்சி பெற்று, தம் அறிவுணர்வும் மனவுணர்வும் இயக்கவுணர்வும் மிகவும் விரிவும் விளக்கமும் பெறும்படி செய்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பிறவி பெற்று ஏதாமொரு செயலில் ஈடுபடாத உயிர் பள்ளிக்குச் சென்று படிக்காமல் காலத்தை வீணே கழிக்கும் மாணவனைப் போன்றதாகும். அஃது, அப்பள்ளித் தேர்வுகளில் தோல்வியுற்றுத் தோல்வியுற்று நெடுங்காலமும் கடைத்தேறாத மாணவனைப் போல் இவ்வுலகச் சுழற்சியில் சிக்கிச் சுழன்று திக்கித் திணறிக் கிடக்க வேண்டியதுதான். எனவேதான் வினையே மக்களுக்கு உயிர் வாழ்க்கை என்று குறிக்கப்பெற்றது.

9. செயலும் செயல் திறனும்

இனி, ஒரு செயல் எவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும். அதில் எவ்வகையில் கருத்துச் செலுத்துதல் வேண்டும். முறைப்படி நாம் ஒரு செயலில் ஈடுபடுமுன், எந்தெந்தத் துணைநிலைகளை ஆய்தல் வேண்டும் என்பன பற்றியெல்லாம் நம் செந்தமிழ் நூல்களில் குறிப்பாகத் திருக்குறளில் என்னென்ன சொல்லப் பெற்றிருக்கின்றன, என்பது பற்றி இக்கட்டுரைத் தொடரில் ஓரளவு ஆயலாம். இக்கட்டுரைத் தொடர் மிக இன்றியமையாத ஒரு கருத்துக் குவியலாகும். இக்காலத்து இளைஞர்கள் பலரும் பெரியவர்கள் சிலரும் வினை அல்லது செயல் என்பது பற்றியோ, வினைத்திறன் அல்லது செயல் திறன் என்பது பற்றியோ, ஆழமற்ற அறிவுடையவர்களாக உள்ளதைப் பலநிலைகளிலும் கண்டு மிகவும் வருந்தியிருக்கின்ற ஒரு நிலையே இக்கட்டுரைத் தொடரை எழுதத் துண்டுகோலாய் இருந்தது.

10. இக்கால் உள்ள நாட்டு நிலை

படித்த இளைஞர்கள் பலர் உடலை வளைத்து அல்லது வருத்திச் செய்யும் வினைகளை வெறுக்கின்ற மனப்பான்மை உடையவர்களாக வளர்ந்து வருகின்றார்கள். அறிவுநிலைகளைப் பற்றிய உடல் உழைப்பற்ற மேலோட்டமான வினைகளில் மட்டுமே அவர்கள் ஈடுபட விரும்புவதாகத் தெரிகிறது. இத்தகைய மனப்போக்கு நாகரிக ஆரவாரங்களிலும் மிகு சோம்பலிலுமே அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும். இந்த நிலை மேலும் வளர்ந்தால், நாட்டில் ஏமாற்று, பொய், வஞ்சகம், சூழ்ச்சி முதலிய மனவுணர்வுகளும், திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, தற்கொலை முதலிய வினையுணர்வுகளுமே மேம்பட்டு விஞ்சி வளர்ந்து, மாந்த இன மீமிசை அறிவு வளர்ச்சி நிலைகளையே பொருளற்ற கூறுகளாக ஆக்கிவிடும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. இப்பொழுதுள்ள நாட்டு நிலையும் இம்முடிவுக்கு ஒரு தொடக்கமாக உள்ள ஓர் ஏத நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு உள்ளது.

11. நம் கடமை

எனவே இளைஞர்களின் மனவுணர்வு அத்தகைய தீயவுணர்வுகளில் வேரூன்றா வண்ணம் கட்டிக்காப்பது நிறைமாந்த உணர்வுடைய ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. அக்கடமையுள் ஒரு சிறு முயற்சியாகவே இக்கட்டுரைக் கருத்துகள் வைக்கப் பெறுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுவதும் கொள்ளாததும் இளைய தலைமுறையினர் தம் மனவுணர்களின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தனவாகும். இனி, செய்திக்கு வருவோம்.