செயலும் செயல்திறனும்/கருவி தேடல்



12. கருவி தேடல்

1. இரண்டாவது பொருள் கருவி

எந்தவொரு செயலுக்கும் அதற்குரிய கருவி இன்றியமையாதது. கருவியின்றி எந்தச் செயலும் நிறைவேறாது. கருவி நம் கையாகவும் இருக்கலாம். வேறு பொருளாகவும் இருக்கலாம். ஆனால் கையே ஒரு செயலுக்கு முதல் கருவியாக இருக்கிறது. கை என்னும் சொல்லுக்கே செயல் என்னும் பொருளுண்டு "கைஇ" என்றால் செய்து என்று பொருள். கை செய்தல்' என்றால் வினை செய்தல் என்று பொருள். கையறுதல் என்னும் சொல் செயலறுதல் செயலற்று போதல் என்னும் பொருளைத் தரும். கைதுவல் என்பதற்கு வினையைத் தவிர்த்தல் - செயலை நீக்குதல் என்று பொருளுண்டு இனி, திருக்குறளில் கை என்னும் சொல்லுக்கு ஒழுங்கு (832), கைத்திறன் அல்லது செயல் திறன் (935) என்னும் பொருள் கொள்ளப் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. எனவே, எந்தச் செயலுக்கும் கையே முதல் கருவியாகிறது. கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கருவியிருந்தாலும் அதைக் கைக் கொண்டு தான் செயலில் ஈடுபடுத்த முடியும்.

திருக்குறளில் பொருள், கருவி, காலம், வினை, இடனோடு ஐந்தும், இருள் தீர எண்ணிச் செயல் (675) என்னும் குறளில் குறிக்கப்பெறும் கருவி என்னும் சொல் தொழில் கருவியையே குறிக்கும். கருவியும் காலமும் (631) என்னும் குறளிலும் அச்சொல் அதனையே குறிக்கும். எனவே, ஒரு செயலுக்கு முதலாவதாக வேண்டிய பொருள் முதலுக்கு அடுத்தபடி கருவி முதல் மிகவும் தேவையான ஒன்றாகும். கருவியிருந்தால் ஒரு செயலை நாமே செய்யலாம் அல்லது இன்னொருவரைச் செய்விக்கலாம். ஆனால் செயலுக்குக் கருவி மிக மிகத் தேவை.

2. சுவரில் ஆணி அடிப்பது

கருவி செயலுக்கு அடிப்படை என்று தெரிந்தவுடன், அந்தக் கருவியைக் கொண்டு நாம் செய்யவிருக்கும் செயலும் நமக்குத் தெரிந்ததாக இருத்தல் வேண்டும். வெறும் கருவியை வைத்துக் கொண்டால் மட்டும் செயல் நிறைவேறி விடாது. அந்தக் கருவியை நாம் விரும்பும் செயலில் எப்படிப் பயன்படுத்துவது என்றும் தெரிந்திருத்தல் வேண்டும். ஒரு சுத்தியலையும் ஆணியையும் வைத்துக்

கொண்டு, அதைச் சுவரில் அல்லது மரப்பலகையில் அடிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர்கள் உளர். சுவரில் ஆணியை அடிக்கப் புகுமுன் (1). அந்த ஆணி வளையாமல் நேராக துருப்பிடிக்காததாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். (2). அதன் கொண்டை சரியானபடி தட்டையாக அமைந்துள்ளதா (3). அதன் முனை மழுங்காமல் கூராக உள்ளதா என்று பார்த்தல் வேண்டும் (4). பிறகு அந்த ஆணி நாம் அதில் மாட்டவிருக்கும் படத்தின் கனத்தைத் தாங்கும் அளவு கனமும் வலிவும் உள்ளதா என்று கணித்தல் வேண்டும். (5). அதன்பின் அந்த ஆணி அடிக்கும் அளவு சுவர் மென்மையாக உள்ளதா என்பதை ஆய்தல் வேண்டும். (6), அந்தப் படம் மாட்ட வேண்டிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்விடம் அந்த ஆணி அறையும் அளவிற்கு மென்மையாக உள்ளதா, கல்லோ காறையோ உள்ள பகுதியா என்று நோக்க வேண்டும் (7), பின்னர் ஆணியை அடித்திறக்க நம் கையிலுள்ள சுத்தியல் போதுமான கனமுள்ளதாக உள்ளதா என்றும் (8), அதன் அடிப்பகுதி மொழுக்கையாக இல்லாமல் ஆணியின் கொண்டை மேல் அடிக்கப்படும் வகையில் தட்டையாக உள்ளதா என்றும் கவனித்தல் வேண்டும். (9). சுத்தியலின் பிடி நாம் ஆணியை ஓங்கி அறையும் பொழுது சுழன்று வராதபடி அதன் பூணுடன் நன்றாக இணைந்து இறுகியுள்ளதா என்று பார்த்தல் வேண்டும். (10), நாம் அடிக்கப் போகும் ஆணியை நாம் நின்றுகொண்டே அடிக்கும் அளவு உயரம் எட்டுமா, இல்லையானால் உயரமான வலிவுள்ள முக்காலியோ மொட்டானோ போட்டு அதன் மேல் நின்று அடிக்க வேண்டுமா என்றெல்லாம் பார்த்தல் வேண்டும். (11). இனி, நாம் அடிக்கவிருக்கும் படம், அதன் கொக்கியின் வலிவு (12) அது சுவரில் இருக்க வேண்டிய இடம் அமைப்பு அழகு இவற்றைத் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். இறுதியில் அந்த ஆணியை நேராக வைத்து இடக்கையால் பிடித்துக் கொண்டு வலக்கையில் உள்ள சுத்தியலால் முதலில் மெதுவாகத் தட்டி ஆணியின் முனையை மெதுவாக, சுவரின் சுண்ணாம்புக் காறையின் உட்புகுந்து நிற்குமாறு இறக்கி, அதன்மேல் பிறகு சிறிது சிறிதாக வலுவேற்றி, ஆணியின் கொண்டையின் மேல் அடித்து அடித்து, ஆணியை இறக்க வேண்டும். இடையில் வளைந்தால் அதைச் சுத்தியால் தட்டிச் சரி செய்துகொண்டு மேலும் அடி சமநிலையாக விழுமாறு அடித்து இறக்குதல் வேண்டும். ஆணி இறங்கிய பின்னும், அதை எந்த அளவில் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும்படி நிறுத்த வேண்டுமோ அந்த அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி, சுவரில் ஓர் ஆணியை அறைவதற்கே இவ்வளவு கவனம் செயலளவில் நமக்குத் தேவையானால், ஒரு நாற்காலி செய்ய, ஒரு விசி

(Bench) யைச் செய்ய, ஒரு மிசை (Table)யைச் செய்ய, ஒரு பேழையைச் செய்ய, ஒரு வீட்டைக் கட்ட, ஒரு கப்பலைக் கட்ட ஒர் அணைக்கட்டைக் கட்ட நமக்கு எவ்வளவு அறிவும், கவனமும், தொழில்நுட்பமும், கருவித் தேவையும், ஆளுமைத் திறனும், பொறுமையும், ஈடுபாடும், ஊக்கமும் இன்னும் பலப் பல ஆற்றலும் தேவையாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தல் வேண்டும். அப்படி எண்ணிப் பார்ப்பதற்கும் நமக்கு ஒர் அடிப்படை அறிவு தேவையன்றோ?

3. சொல்லுதல் எளிது செய்தல் கடினம்

செயல் என்பது கடினமானது மிகவும் கடினமானது. அதுவும் அந்தச் செயலைச் செப்பமாகவும், நுட்பமாகவும், திறம்படவும், அழகாகவும், உறுதியாகவும், தொடர்ந்து, நிலைப்பாடுறும்படியும் செய்வதானால், எவ்வளவு அறிவும் முயற்சியும் கடின உழைப்பும் தேவையாக விருக்கும். சொல்லுவது எளிது; மிகமிக எளிது. இவ்வுண்மை எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெரிய வேண்டிய உண்மைகளுள் இதனையும் ஒன்றாக எடுத்துச் சொன்ன திருவள்ளுவர் அறிவை நாம் பாராட்ட வேண்டும் இல்லையா? பாராட்டுகிறோமோ இல்லையோ, அதை உணரவாவது செய்கிறோமோ? அவர் கூறிய உண்மை இது:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)

ஆம் சொல்லுதல் எளிது. யார்க்கும் எளிது. எல்லாரும் சொல்லலாம். அறிவுள்ளவனும் சொல்லலாம். அறிவு இல்லாதவனும் சொல்லலாம். தெரிந்தவனும் சொல்லலாம். தெரியாதவனும் சொல்லலாம். பார்த்தவனும் சொல்லலாம். கேட்டவனும் சொல்லலாம். நம்மேல் அன்புள்ளவனும் சொல்லலாம். அன்பு இல்லாதவனும் சொல்லலாம். எவரும் சொல்லலாம். ஆனால் செய்வதுதான் கடினம். அதுவும் தான் சொல்லியபடியே தானே செய்து காட்டுவதுதான் கடினம். கட்டிய வீட்டிற்குப் பழுதுரைப்பார் பலர் உழுத நிலத்தில் புரைசல் சொல்வார் பலர். ஆனால், வீடு கட்டுவதும், நிலம் உழுவதும் சொல்வது போல எளியன அல்ல. அவை செயல்கள், கடினமானவை. அதுவும் மேற்கண்ட குறளில் சொல்லியவண்ணம் செயல் அரியவாம் என்று திருவள்ளுவப் பெரியார் கூறியதில் தான் சொல்லியபடி தானே செய்தல் அரிது என்னும் குறிப்பையும் வைத்துள்ளது கவனிக்கத் தக்கது. சீர்திருத்தம் பேசுகிறவர்கள் அனைவரும் அவர்கள் சொல்கிற சீர்திருத்தத்தை அவர்களே சொல்லியபடி செய்வதானால் உலகம் எவ்வளவு விரைவில் செப்பமடையும். இந்த நிலையில் செயற்கரிய செய்பவர் பெரியார்தாமே! (26) பெருமையுடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமையுடைய செயல் (975) என்று திருவள்ளுவப் பேராசான் கூறியது சரிதானே!

4. அவரவர்க்கு ஏற்ற செயல்

எனவே, செயல் அருமைப்பாடுடையது என்று கருதி, எவரும் செயல்களைச் செய்யாமல் இருந்து விடுதல் கூடாது இன்னுஞ் சொல்வதானால், செயல்களிலும் செய்வதற்கு எளிமையுடைய செயல்களையே செய்ய முனைதல் கூடாது. அவரவர் அறிவுக்கும் திறனுக்கும், இயல்கின்ற தன்மைக்கும், தம்மிடமுள்ள பொருள் வலிவுக்கும், அதால் கிடைக்கும் கருவி வலிவுக்கும் தக்கபடி, பிறர் செய்வதற்கு அரியவான செயல்களையே செய்தல் வேண்டும்.(26) ஒருவன் ஒரு மூட்டையைத் தூக்கும் வலிவுடையவனாக இருப்பின், அவன் ஒரு பையை மட்டும் தூக்கிக் கொள்ள விரும்புவது பெருமையாகாது. இழுக்காகும். ஒரு யானை செய்யும் வேலையைச் செய்ய முடிந்தவன். ஒரு மாடு செய்யும் வேலையைச் செய்வது எளிதுதான். ஆனால் இஃது இகழ்ச்சியானது. அவரவரின் தகுதிக்கேற்ற, வலிவிற்கேற்ற பெருமைக்குரிய செயல்களையே எவரும் செய்ய விரும்புதல் வேண்டும். எனவேதான் பெருமையை விரும்புகிறவர்கள் அல்லது பெருமைக்குரியவர்கள் எப்பொழுதும் பிறர் செய்வதற்கு அருமையுடைய செயல்களை, அவர்கள் செய்யத் தயங்குகின்ற செயல்களை, எல்லாரும் செய்வதற்கு அஞ்சி ஒதுங்குகின்ற செயல்களை, தங்கள் நிலைக்கு ஏற்பதான செயல்களையே தேடிச் செய்வர். அவை செய்வதற்கு அருமையாக இருந்தாலும், அவ்வினை செய்வதற்குப் போதிய வழி வகைகள் தமக்குக் கிடைக்காமல் இருப்பினும், அவற்றையே தேடி அமைத்துக் கொண்டு, அவ்வருமையான செயல்களையே செய்வர். அப்படிப்பட்டவர்கள்தாம் பெருமையைப் பெற முடியும். அவர்களே பெரியவர்கள். இக்கருத்தையே "பெருமையுடைய ஆற்றுவர்" (975) என்றும் திருக்குறள் நமக்கு உணர்த்துகின்றது.

5. கருமமே கட்டளைக் கல்

இனி, இதே பொருளுடைய இன்னொரு திருக்குறளும் உண்டு. ஒருவன் பெருமையை நாம் எப்படி உணர்வது? அதற்கு என்ன அளவு கோல்? அவன் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு அவனை மதிப்பிடுவதா அல்லது அவன் கற்ற கல்வியைக் கொண்டு அவனைத் தக்கவன் என்று கருதுவதா? அல்லது அவனைச் சேர்ந்த ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்து, இவன் மிகப் பெரியவன் என்று கூறுவதா? அல்லது அவன் உடல் அழகை, உயரத்தை, வாழ்க்கை நலன்களைக் கண்டு, இவன் சிறந்தவன் என்று சொல்வதா? எதைக் கொண்டு சொல்வது? என்ன அடையாளம்? என்று திருவள்ளுவப் பேராசானைக் கேட்கும் பொழுது, அவர் சொல்வார், அவன் செய்கின்ற செயலை வைத்து அவனை மதிப்பிடு என்று. அவன் பெரிய செல்வனாக இருப்பான். ஆனால் கள்ளக் கடத்தல் தொழிலையோ, கள்ள நாணயம் அடிப்பதையோ

செய்து கொண்டிருப்பான். அவனைப் பெரியவன் என்று மதிக்கலாமா? கூடாது என்பார் திருவள்ளுவர். ஒருவன் உயர்ந்த கல்வி கற்றிருப்பான். ஆனால் எல்லாரையும் ஏமாற்றிப் பணம் பறித்துக் கொண்டிருப்பான். அவனை உயர்ந்தவன், பெருமைக்குரியவன் என்று மதிக்கமுடியுமா? ஒருவன் பெரிய வளமனையில் குடியிருப்பான். அவனிடம் எடுபிடி ஆட்கள் நிறைய பேர் இருப்பார்கள். உயர்ந்த, சாரமுள்ள உணவு உண்டான். சிறந்த, விலையுயர்ந்த உடைகளையே உடுப்பான். போகவும் வரவும் சொகுசான ஊர்திகள் இருக்கும். இப்படிப்பட்டவன் பெருமைப்படுத்துவதற்குரியவன் ஆகிவிடுவானா? ஆகிவிடமாட்டான். அவன், இப்படியெல்லாம் இருப்பதால் மட்டும் பெருமைக்குரியவன் ஆக மாட்டான். அவன் அப்படி இருந்து கொண்டு, அல்லது இருப்பதற்கு என்ன செயல் செய்கின்றான் என்று பார்க்க வேண்டும். அவன் பெரிய சூதாட்டத் தொழிலை அல்லது ஆணும் பெண்ணும் குடித்துக் கும்மாளமடிக்கும் களியாட்டரங்கை நடத்தி, அவற்றால் பெரிய அளவு வருவாயை உடையவனாக இருப்பான். அப்படிப்பட்டவன் பெருமைக்குரியவனாவானா? ஒரு போதும் ஆகமாட்டான். இப்படிப்பட்டவர்கள். எப்பொழுதும், எவ்விடத்தும் இருக்கவே செய்வார்கள். இவர்கள் செய்யும் தொழில் பெருமைக்குரிய செயலும் அன்று. செய்வதற்கு அருமையானதும் அன்று! எளிமையுடையதும் இழிவானதுமாகும்! எனவே, அப்படிப்பட்ட செயலால் இவன் எவ்வாறு பெருமையுடையவனாக முடியும்? எனவேதான் திருவள்ளுவர் சொல்வார். ஒருவன் பெருமைக்குரியவன் என்பதும் சிறுமைக்குரியவன் என்பதும் அவன் செய்கின்ற தொழிலைப் பார்த்தால் தெரிந்துவிடும். அவன் தொழிலே அவன் தகுதிக்கு உரிய அளவுகோல் ஆகும் என்பது அவர் வாய்மொழி!

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல். (505)

6. வல்லவனுக்குப் புல்லும் வல்கருவி

இனி, தொழிலுக்குக் கை முதற்கருவியாக இருந்தாலும் வெறுங்கையைக் கொண்டே அனைத்துத் தொழிலையும் செய்துவிட முடியாது. கைக்கும் ஒரு கருவி தேவை. வீரனுக்கு வாளும், வில்லும் வேலும் தேவை. சில இடங்களில் இரண்டு கருவிகள் தேவைப்படும். ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் கேடயமும் தேவை. அதுபோல் ஒரு கை வில்லைப் பிடித்திருக்கும் பொழுது, பிறிதொரு கை அம்பை வைத்து நாணேற்றுதற்கு வேண்டும். இப்படியே, எழுதுதற்கு எழுதுகோலும், உழுவதற்கு ஏரும், மரம் வெட்டுதற்குக் கோடரியும், இன்னும் பல தொழில்களுக்கும் பல்வேறு கருவிகளும் தேவை என்பது நம் அனைவர்க்கும் தெரியும். வல்லவனுக்கு புல்லும் வல்கருவி

(ஆயுதம்) என்பது ஒரு பழமொழி இல்லையா? இது வல்லவனுக்குக் கூட ஒரு கருவி தேவையே என்பதையும் சுட்டுகிறது.

அடுத்து, தம் கையிலுள் கருவிகளைப் பற்றிச் சிலர் கவலைப்படுவதே இல்லை. மாணவர்களின் கைகளில் உள்ள கரிக்கோல்கள் (Pencil) பெரும்பாலும் மொக்கையாகவே இருக்கும். ஆசிரியர் ஏதாவது எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் பொழுதுதான், சிலர் கரிக்கோலைச் சீவுதற்கு மழிதகடு (Blade) எடுப்பார்கள். அல்லது பக்கத்து மாணவர்களிடம் கேட்பார்கள். அல்லது தங்களிடம் தூவலில் (Pen) உள்ள முள்ளின் முனை சரியாயிருக்காது. சில கிறுக்கும், சில பட்டையடிக்கும். சில தூவல்களில் உள்ள நாக்குகள் சரியாய் இரா. அதனால் மை கொட்டும். சிலவற்றில் கழுத்து மறைகள் சுழன்று கொண்டே இருக்கும். அதனால் மை கசிந்து, கையெல்லாம், சட்டைப் பையெல்லாம், அல்லது பொத்தகப் பையெல்லாம், இன்னுஞ் சொன்னால் பொத்தகம், எழுது சுவடிகளிலெல்லாம் மைக் கறையிருக்கும். சிலரிடம் நல்ல தூவலாய் இருந்தாலும் உள்ளே மை இருக்காது, சிலரிடம் மை இருந்தாலும் அது தண்ணிர் மையாக இருக்கும். எழுதினால் எழுத்துச் சரியாய்த் தெளிவாய்த் தெரியாது. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன: நாம் நமக்குத் தேவையான கருவிகளைப் பற்றிச் சரிவர கவனம் செலுத்தாததைத்தான்!

இனி, மாணவர்களின் நிலைதான் இப்படி என்று நினைக்க வேண்டா. தொழிலாளர்கள், குடும்பத்தவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் முதலிய அனைவருடைய நிலையினும் இக்குறைபாடுகள் உண்டு. அவற்றை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

7. கருவியை கையாளச் செய்தல்

அம்மா அடுப்பு ஊதும் ஊதாங்குழல் நெளிந்து, நசுங்கியிருப்பதால் சரியாகக் காற்று வராது. அடுப்பின் குமிழ்கள் தேய்ந்து போய், அதன் மேல் வைக்கின்ற ஏனங்கள் சரிவரப் படியாமல் ஆடிக்கொண்டு இருக்கும். அகப்பை தேய்ந்திருக்கும். அல்லது அது கைப்பிடிக் கம்பிலிருந்து எளிதே கழன்று கொள்ளும்படி தளர்ந்து இருக்கும். குழம்பை மொள்ளும் பொழுது அகப்பை அதிலேயே விழுந்துவிடும் கம்பு மட்டும் கையில் வரும். வீட்டில் உள்ள மின்சாரச் சொடுக்கி (Switch) தொள தொளவென்று இருக்கும். மின் விசிறி முடுக்கப் பெற்ற ஆணிகள் தளர்ந்து அது சுழலும் பொழுது தடதடவென்று ஒலி வரும். நாம் ஒட்டும் மிதிவண்டியில் உள்ள பல வகைக் கோளாறுகளை நாம் முன்னெச்சரிக்கையாகக் கவனிக்காமல் இருப்போம்.

உந்து வண்டி ஒட்டுநர் உந்துவண்டிகளைச் சரியாகக் கண்காணிக்காமையால்தானே, பல சமயங்களில் பல வண்டிகள்

கவிழுகின்றன! அவற்றால் பலர் உயிர்களை இழக்க நேரிடுகின்றது. தொழிலாளர்கள் சிலர் தாங்கள் புழங்கும் கைக்கருவிகளைச் சரியாகவே வைத்திருப்பதில்லை. சரியாகச் சாணை பிடிக்காத கத்தரிக்கோல்களை வைத்துக் கொண்டு முடிவெட்டுகிறவர் நம் முடியை வெட்டும் பொழுது எத்தனை முறை முடி சுள் சுள் என்று இழுக்கப்படுவதை உணர்ந்திருக்கிறோம். தெருவில் வைக்கப்பெறும் ஒலி பெருக்கிகள் அவற்றின் இயக்கக் கருவிகள் சரிவர இல்லாமையால், அவற்றினின்று ஒலிப்பரப்பப் பெறும் பாடல்கள் நாம் கேட்க எத்துணை கொடுமையாக இருக்கின்றன. தாம் ஒட்டிச் செல்லும் வண்டிகளைப் பெரும்பாலார் சரிவர ஒட்டாமல் கவனக்குறைவாக இருப்பதால் சாலைகளில் எத்தனை மோதல்கள் ஏற்படுகின்றன!

அதிகாரிகள் கட்டிய அணைக்கட்டுகள் உடைவதும், வீடுகளின் கூரைகள் சரிவதும் எதனால்? கருவிகளைச் சரியாகக் கவனம் செலுத்திக் கையாளாமையால்தானே அமைச்சர்கள் அரசுக் கருவிகளாகிய அதிகாரிகளைச் சரிவரக் கவனிக்காமல் போவதால்தானே, அரசுக்குப் பல கோடி உருபாக்கள் இழப்பேற்படுகின்றன! கருவிகள் சரிவரப் பேணப்படாமையால் தொழிற்சாலைகளில் ஏற்படும் கோளாறுகள் கொஞ்சமா?

8. அறிவுக் கருவி

இனி, கருவிகளைப் பற்றி எண்ணுகையில், முதல் கருவியாகிய கைகளை விட, அக்கைகளில் உள்ள துணைக் கருவிகளை விட, மூலக்கருவியாகிய அறிவுக் கருவியே முதலில் வேண்டப்படுவது என்பதைத் தெளிதல் வேண்டும். அறிவு என்னும் கருவியே அனைத்து வினைகளுக்கும் அடிப்படையாகிய மூலக் கருவி அறிவு அற்றம் (இறுதி) வராமல் காக்கும் கருவி (421) என்பார் பேராசான். "அறிவுடையார் எல்லாம் உடையார்” (430) என்பதும் அவரின் வாய்மொழி. அறிவுத் தெளிவில்லாத ஒருவனிடம் பொருள்கருவி இருந்து என்ன பயன்? ஒருவனுக்குக் கைகளோ கால்களோ வேறு பொறிகளோ இருந்தும், அவற்றைச் சரியான வழியில் பயன்படுத்தத் தெரியும் அறிவில்லாமல் இருப்பானாயின் அக்கருவிகள் பயன்படுவது எங்ங்ன்? மூலக் கருவியாகிய அறிவு ஒருவனிடம் இயல்பாக அமைந்துவிடின், அவன் தன் வினைக்கான கருவிகளைத் தானே தேடித் தேர்ந்து கொள்ள முடியும் அன்றோ? எனவே, கருவிகள் இல்லாமற் போயினும் ஒருவனுக்கு அறிவும் அதன் உந்துதலாகிய ஊக்கமும் இருப்பின் அன்றோ அவன் வினைகளுக்குப் பயனுடையவனாக இருத்தல் இயலும்.

9. உடல்குறை குறையன்று ஊக்கம் தேவை

இயற்கையிலேயே சிலர்க்கு முதல் கருவிகளாகிய ஐம்பொறிகளுள்

ஒன்றோ சிலவோ பழுதுபட்டிருக்கலாம். அதனால் அவர் முடங்கிக் கிடக்கத் தேவையில்லை. அப்பொறிகளின்மையையே ஒரு குறையாக, இயற்கைமேல் போடும் பழியாகக் கொண்டிருத்தல் வேண்டுவதில்லை. இதனைப் 'பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவறிந்து, ஆள்வினையின்மை பழி'(618), என்னும் திருக்குறள் வழி, தனக்கு முதற்கருவியாகிய பொறி - கை, கால், கண், காது முதலிய பொறிகளும், கைக்கருவிகளாகிய வினைத்துணைக் கருவிகளும் இல்லையே என்று, இயற்கையின் மேலோ அன்றிப் பிறர்மேலோ, சூழ்நிலைகளின் மேலோ, ஒருவன் பழி கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. தன் அறிவுக் கருவியை மூலக் கருவியாகக் கொண்டு, அதன் வழி தான் ஈடுபட இயலும் வினைக்குரிய ஊக்க உணர்வை ஒருவன் பெறாமல் போவானாயின், அதுதான் அவன் குற்றம்; அவனுக்குரிய பழி - என்று திருவள்ளுவப் பெருமான் காட்டுவார். இக்குறளுள் வரும் பொறி என்னும் சொல்லுக்கு விதி (ஊழ்) என்று பொருள் தருவார் உரையாசிரியர் பரிமேலழகர். அஃது அத்துணை நேரிடையாகப் பொருந்தும் பொருளன்று. அவர் கருத்து, ஒருவனுக்கு ஊழின் வயத்தால்தான் பொறி குறைவு ஏற்படுகிறது என்பது. அப்பொருள் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வியல் பொருளாக இருக்கலாம். அதனை நாம் ஆராய்ந்து கொண்டோ எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டோ இருக்கத் தேவையில்லை. உலகில் வாழ்கின்றவர்க்குச் சொன்ன அறிவுரைகளே திருக்குறளாதலின் உலகியற் பொருளையே நாம் கொள்ளுதல் வேண்டும். முயற்சி திருவினைக்கும் (616), ஊழையும் உப்பக்கம் காண்பர் (620), உள்ளம் (ஊக்கம்) உடைமை உடைமை (592) முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் (619), அருமை உடைத்தென்று அசாவாமை (தளராமை) வேண்டும் (611) அற்றே மென்று அல்லற் படுபவோ (626) உரம் (அறிவு) ஒருவற்கு உள்ள (ஊக்க) வெறுக்கை (மிகுதி) (600), அசைவிலா ஊக்கம் (தளராத முயற்சி) (594) உள்ளத்து (ஊக்கத்தின்) அனையது (அளவினது) உயர்வு (595), சிதைவிடத்து (அழிவு வந்த விடத்து) ஒல்கார் (தளர்ந்து விடமாட்டார்கள்) உரவோர் (அறிவுள்ளவர்கள்) (597), உடையர் எனப்படுவது ஊக்கம் (591), 'வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்டம்' (661), 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப்பெறின்' (666), 'துன்பம் உறவரினும் செய்கதுணைவாற்றி' (669). 'ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை (ஊக்கமிகுதி) (971) கருமம் செய ஒருவன் கைதுவேன், என்னும் பெருமை' (1021) என்றெல்லாம் ஒருவன் எந்நிலையில் பழுதுபட்டிருந்தாலும் குறைவுபட்டிருந்தாலும், தாழ்ந்திருந்தாலும் , போதிய கருவிகள் இல்லாதவனாக இருந்தாலும், அவனுக்கு ஊக்கவுரைகள் கூறி எழுச்சியூட்டுவர் திருவள்ளுவப் பெருந்தகை.

10. கருவியும் காலமும்

இனி அறிவும் ஊக்கமும் உற்ற ஒருவனுக்கு மட்டுந்தான் தேவையான கருவிகள் கிடைப்பின் அவை பயனுடையவையாக இருக்கமுடியும். அவ்வறிவும் ஊக்கமும் அற்றவனிடம் அக்கருவிகள் இருந்து பயன் என்ன? இனி, அறிவும் ஊக்கமும் உடையவனும், அக்கருவியைக் காலம் அறிந்து செய்தல் வேண்டும்.

கலப்பையை உடைய உழவன், விதைப்புக் காலம் அறிந்து உழுதல் வேண்டும். இல்லாவிடில் அக்கலப்பையால் அவன் பெறும் பயன் இல்லையாகிவிடும். பனிக்கட்டிகளைத் தேக்கிச் சாறுபிழிந்து விற்கும் பொறியை வைத்திருக்கும் ஒருவர் நல்ல கோடை காலத்திலேயே அவ்வாணிகம் செய்ய முடியும். இதுபோல் கருவிக்குரிய காலமும், காலத்துக்குரிய கருவியும் தேர்ந்து கொண்டுதான் வினையில் ஒருவன் ஈடுபட வேண்டும். அக்கால் அவன் எத்தகைய அரிய வினைகளையும் செய்து விட முடியும்.

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483)

என்பது திருமறை. இவ்வினை பழுதுபடாமல் செய்ய வல்லதே ஆட்சி என்பார் பேரறிஞர்.

கருவியும் காலமும் செய்கையும் செயும்
அருவினையும் மாண்டது அமைச்சு. (631)

என்னும் மெய்யுரையால், தனியொருவன் அவ்வாறு கருவியும் காலமும் அறியாமல் செய்யினும் அஃது அத் தனியொருவனுக்கு மட்டுந்தான் பெருங் கேடாக முடியும். ஆனால் அரசு அவ்வாறு செய்ய முற்படின் அது நாட்டினர் அனைவர்க்குமே ப்ெருங்கேடாக முடியுமன்றோ! இக்கால், அரசால் ஏற்படும் அனைத்துக் கேடுகளுக்கும் இத்திருக்குறளின் பொய்யா மொழியைப் பற்றாமையன்றோ கரணியம்!

இனி, திருவள்ளுவர் வினை செய்வார்க்கு இன்னோர் உணர்வையும் கருவியாகக் கூறுவார். அது மறதியின்மை. ஆம் மறதியின்மையும் ஓர் இன்றியமையாத கருவியே ஆகும். பொறியை இயக்கும் தொழிலாளி ஒருவர், தாம் தம் பொறியை இயக்கத் தொடங்குவதற்குமுன், அதை முழுவதும் ஒரு முறை நோட்டம் விடுதல் வேண்டும். முன் நாள் செய்த வினைகளின் பின், அதன் உறுப்புகள் யாவும் சரியாகப் பொருத்தப் பெற்று உள்ளனவா, இல்லை; திருகுகளும் பொருத்துகளும் இயக்க அசைவால் கழன்றும் தளர்ந்தும் உள்ளனவா என்று பார்த்துக் கண்காணித்த பின்னரே, பொறியை இயக்குதல் வேண்டும். இல்லெனில் எங்கோ ஒரு திருகாணி தளர்ந்து போவதால், பொறி பெரும் பழுதுக்கு உள்ளாகலாம். இதை மறவாமல், நாளும் செய்தல் வேண்டும். என்றாவது

ஒரு நாள் மறந்து விடின் முடிவு பெரும் இழப்புக்குள்ளாகு மன்றோ? அதே போல் வாணிகத்தில் கொடுக்கல் வாங்கலில் மறவர்மை, எழுத்தாளர் தாம் கற்றறிந்தவற்றை மறவாமை, உந்து ஒட்டுநர் போதிய நெய் உள்ளதா என்று பார்ப்பதிலிருந்து, தக்க நேரத்தில் தக்க கருவிகளை இயக்குவதில் மறவாமை, குடும்பத் தலைவி தன் சமையல் வேலையில் தக்க பொருள்களைத் தக்க நேரத்தில் பயன்படுத்துவதில் மறவாமை இப்படி அனைத்து வினைகளிலும் மறவாமையை ஒரு கருவியாகவே கருத வேண்டும் என்பது பொய்யாமொழிப் புலவரின் மெய்யுரை. இவ்வாறு ஒருவன் மிகுகவனமாக இருப்பின் அரிய செயல்களையும் செய்துவிட முடியும் தொழில் நிலைக்கு இம் மறவாமை மிக மிக இன்றியமையாத ஒன்றாகக் கருதுவதால்தான் இதை ஒரு கருவி என்றே குறள் பெருமான் குறிப்பார்.

அரியனன்று ஆகாத தில்லையோச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின் (537)

என்பது பொய்யாமறை.

எனவே, கருவி தேடல் என்னுந் தலைப்பில், நாம் தெரிந்து கையாளப்பட வேண்டிய கருவிகளை நன்றாக உணர்ந்து, அவற்றை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுதலே வினையைச் செப்பமாகவும், நுட்பமாகவும், திட்பமாகவும் செய்வதற்குரியதாகும் என்பதறிந்தோம்.

'பொறிக் குறைவு யாவும் புலக் குறைவே' என்பது 'உலகியல் நூறு'[1] வரி, பொறி அஃதாவது கருவிமேல் குறையில்லை. அதைச் சரிவரத் தேர்ந்து கொள்ளாத நம் அறிவின் மேல்தான் குறை என்பது அவ்வடியின் பொருள். கருவிகளைச் சரிவரக் கையாள்வதற்கு அறிவுத் தெளிவு வேண்டும். ஒரு வினைக்குரிய கருவியைக் கொண்டுதான் அவ்வினை செய்யப் பெறல் வேண்டும் கொடுவாளைக் கொண்டு மரத்தைச் செதுக்க இயலாது. கத்தி முனையால் திருகாணியைத் திருக முற்படுவது தவறு. அவ்வவ் வினைக்குரிய கருவிகளாலேயே அவ்வவ் வினை செய்யப் பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான் அவ்வினை சரிவரச் செய்யப்பெறும் இல்லெனில் வினைத் தொய்வும் வினைக்குறைவும் ஏற்படும். அடுத்து ஒரு வினையைத் திறம்படச் செய்ய வேண்டுவதற்கு, அவ்வினையை, ஏற்கனவே தெரிந்த ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் மிகவும் பயனுடையதாகும். அது பற்றி அடுத்த இயலுள் பேசுவோம்.

  1. உலகியல் நூறு: உலக இயல்புகளை எடுத்துக் காட்டும் நூ. வெண்பாக்கள் அடங்கிய நூல். பாவலரேறு எழுதியது.