செயலும் செயல்திறனும்/பொருள் தேடல்

11. பொருள் தேடல்

1. வினைக்கு முதல் தேவை பொருளே

வினை செய்யப் புகுந்தவன், அதற்குரிய துணை ஒன்றைத் தேர்ந்தபின், வினைக்குத் தேவையான பொருளைத் திரட்டுவதில் தன் கருத்தைச் செலுத்துதல் வேணடும். வினைக்குப் பொருள்தான் முதல் தேவையாகக் கருதுவார் திருவள்ளுவர்.

பொருள், கருவி, காலம், வினை, இடனோடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்

(675)

என்பது குறள் பொருளில்லாமல் வினை செய்ய முடியாது. நிலமிருந்தால்தான் வேளாண்மை செய்ய முடிவதைப் போல், பொருள் இருந்தால்தான் வினையைச் செய்ய முடியும் பொருளை வைத்துத்தான் பொருளை ஈட்ட முடியும், சிறிது பொருளை வைத்துப் பெரும் பொருளை ஈட்டவல்ல ஒன்றே வினைத்திறன் என்று சொல்லப் பெறும். வினைக்குப் பொருள் கட்டாயம் தேவையென்பதால், பெரும் பொருள் தான் வேண்டும் என்பதில்லை. எந்த அளவினதாக இருந்தாலும், பொருள் வினைக்கு முதற்கருவி என்றே கருதல் வேண்டும். ஐந்து உருபாவைக் கொண்டு ஏழு உருபா ஈட்டலாம். ஏழு உருபாவை வினையினால் பத்து உருபாவாகப் பெருக்கலாம். பத்து பதினைந்தாகலாம். பதினைந்து இருபத்தைந்தாகப் பெருகலாம். இருபத்தைந்து நாற்பதாகலாம். இப்படிச் சிறு பொருளும் பெரும் பொருளுக்கு ஆக்கமாகும் அளவுக்கு நம் வினையும் வலியதாக உழைப்புடையதாக இருத்தல் வேண்டும். பெரும் பொருள் தேவை என்பதற்காகத் தொடக்கத்திலேயே கடன் பெறுதல் கூடாது. தன் கையிலுள்ள பொருள் சிறிய அளவாக இருப்பினும், அதுவே வினைக்குத் தக்கது. அயலான் கையிலுள்ள பொருளை நம்பி வினையில் ஈடுபடுவது, அக்கரையில் உள்ள படகை நம்பி ஆற்றில் இறங்குவதைப் போன்றது.

2. யானைப் போர்

வினை என்பது யானைப் போரைப் போன்றது என்பார் திருவள்ளுவப் பெருந்தகை. யானைகளுக்குள் நிகழும் போர் அண்டையில் நிற்கும் ஆளையும் அழித்து விடும் தன்மையது. வினைக்கிடையில் நிகழும் போராட்டம், அவ்வினை செய்வானையே

அழிக்கும் தன்மையுடையது. அக்கால், அவன் அவ்வினைப் போராட்டத்தில் சிக்கி அழியாமல் இருக்க வேண்டுமானால், அடுத்தவன் கைப்பொருளை நம்பி இருத்தல் கூடாது. வினைக்கிடையில் எழும் போராட்டம், வினைத் தடை, கருவித்தடை, வினைஞர் தடை, காலத்தடை, இடத்தடை என்னும் ஐந்து கரணியங்களால் தோன்றும். இவ்வனைத்துத் தடைகளையும் பொருளால் நீக்கவியலும்.

யானைகளுக்கிடையில் நடக்கும் போரை அருகில் நின்று வேடிக்கைப் பார்ப்பவனுக்கு வரும் இடையூறுகளும் பலவாகும். போரிடும் யானைகளுக்குள் ஒன்று, அருகில் நிற்பவனை நோக்கித் தாக்க வருவது; இரண்டு, அவை ஒன்றின் மேல் ஒன்று தாக்குவதற்கு எடுத்து வீசும் அல்லது முரித்து வீசும் கற்கள், அல்லது மரக்கிளைகள் நம்மேல் வந்துபடுவது; மூன்று போரிடும் யானைகளின் பிளிறல்களைக் கேட்டு, அக்கம் பக்கத்திலுள்ள யானைகள் அவற்றின் உதவிக்கு வரும்பொழுது, வழியில் வேடிக்கை பார்ப்பவருக்குத் தீங்கு தருவது முதலியன. இத்தகைய கேடுகளினின்று நீங்கியும், தீமை வருமோ என்று அச்சம் இல்லாமலும், நாம் யானைகளின் போரைப் பார்த்து மகிழ வேண்டுமானால், அருகில் உள்ள உயரமான ஒரு குன்றின் மேல் ஏறி நின்று பார்த்தல் வேண்டும் என்றும், அப்பொழுதுதான் போரிடும் யானைகளாலோ, பிறவகையிலோ நமக்குத் தொல்லை வராது என்றும், அதுபோல், வினை செய்பவன் வினைக்கிடையில் வரும் முன் கூறப்பெற்ற வினைத்தடை முதலிய துன்பங்களால் தான் தொல்லையுறாது தப்ப வேண்டுமானால், தன்கையில் உள்ள பொருளையே நம்ப வேண்டும். துணையாகக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவர் திருவாய்மொழி. அயலான் கையிலுள்ள பொருள், அத்துன்பங்களை உடனுக்குடன் நீக்கப் பயன்படாது என்பது அவர் குறிப்பு. இன்னும், அவர், யானைப் போரைக் கண்டு களிக்க விரும்புவான், ஒரு மலையின் மேல் ஏறிப் பார்ப்பதுபோல் என்று கூறுவதால், தன் கையில் உள்ள செல்வம் பெரிய அளவினதாக இருத்தல் வேண்டும் என்பதில்லை. சிறிய அளவினதாக இருப்பினும் தன் ஆளுகைக்கு உரிய உடைமையாக இருக்க வேண்டும் என்ற நுட்பமும் புலப்படுகின்றது. நாளை இன்னொருவனிடம் கேட்டுப் பெறும் கடனைக் கொண்டு இன்று நேர்ந்த வினைக் கேட்டை நீக்க எண்ணினோமாயின், இன்று நடக்க வேண்டிய வினை கெட்டுப் போகும். அதனால் இழப்பு நேரும் என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அதனால் வினையே அழிய நேரினும் நேரலாம் என்பன போன்ற, இத்துணைக் கருத்துகளையும் கொண்ட குறள் இது.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

(758)

தன் கைத்து (கையில்) ஒன்று (ஓரளவேனும்) உண்டு ஆகச் செய்வான் வினை - என்று அவர் கூறும் சொல்லடுக்குகளைக் கவனித்தல் வேண்டும்.

வினைக்குப் பொருள் மிகவும் தேவையான ஒன்று என்பதை எல்லாரும் அறிந்திருப்பர். ஆனால் அப்பொருள், எவ்வெவ்வகையில், எஃது எதற்காக, எவ்வளவில் தேவை என்பதைப் பலர் சரியாக உணர்ந்திருக்க இயலாது. பொருளால் இவ்வுலகத்து எல்லாவகையான வினைகளையும் செய்து கொள்ளவியலும் என்பதை எல்லாரும் முழுமையாக உணர்ந்திருப்பர் என்று கூறிவிட முடியாது. "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை", என்பது திருக்குறள். அஃது இவ்வுலகம் பொருள் அடிப்படையான பொருள் உலகம் . பொருள் என்பது பணம் மட்டுமே என்று பொருள் படாது. பொருள் மதிப்புடைய அனைத்து உடைமைகளும் பொருளே. இருப்பினும் பொருள் என்னுஞ் சொல் பேரளவில் பணத்தைத் தான் குறிக்கும்.

3. பொருளென்னும் பொய்யா விளக்கு

பொருள் இருந்தால் இடம், காலம், பகை, பொய் முதலிய அனைத்தையும் வெல்லலாம் என்பார் திருவள்ளுவர்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.

(753)

இப்படிக் கூறுகையில் திருவள்ளுவர் கூறும் அற நுட்பத்தை நாம் நன்கு உணர்தல் வேண்டும். பொருளைக் கொண்டு தீமையான பண்புகளைத் தான் ஒழிக்க வேண்டுமே தவிர, நன்மைப் பண்புகளை ஒழிக்க பொருளைப் பயன்படுத்தக் கூடாது என்னும் குறிப்பை இக்குறள் தெரிவிக்கிறது. பொருளைப் பொய்யா விளக்கம் அஃதாவது பொய்யாதது, மெய்ம்மையானது என்றும், ஒளி பொருந்தியது என்றும் அதன் தன்மையை அவர் கூறுவதும், இருளறுக்கும் அஃதாவது இருளை விரட்டும் என்று அதன் பயனைக் கூறுவதும் நோக்கத்தக்கன. எண்ணிய தேயத்துட் சென்று, என்பதால், விரைவும், அதன் ஆளுமைக்குத் தொலைவு ஒரு தடையில்லை என்பதும் விளங்கும். எனவே, பொருள் நல்லவினைக்காகவே, நல்ல நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப் பெறுதல் வேண்டும் என்பதும், அவ்வகையில் அதற்கீடானது அதுவே என்பதும் திருக்குறள் கருத்தாகும். பொருள் - அதுவும் அளவு சிறியதாயினும் நம் கையிலுள்ள பொருள் - வினைக்கு முதல் இன்றியமையாதது. என்பதை உணர்ந்து கொள்க. அடுத்து, வினைக்குத் தேவையாகும் என்று அவர் கூறும் கருவியைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்.